இந்தக் கட்டுரையின் சற்றே மாறுபட்ட வடிவம் நியூ யார்க் பொது நூலகத்தில்டிசம்பர் 18, 2017 அன்று ராபர்ட் பி. சில்வர்ஸ் உரையாய் வழங்கப்பட்டது.
1.கரு
என் உரையின் கருப்பொருள் இன்றைய தேதியால் தீர்மானிக்கப்பட்டது. முப்பத்து-ஒன்பது ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் மாஸ்கோவில் உள்ள ஓர் அலுவலகத்துக்கு ஆவணக் கட்டு ஒன்றை எடுத்துச் சென்றனர். சோவியத் யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான கடவுச் சீட்டு கோரி நாங்கள் அளித்த விண்ணப்பம் அது. கடவுச் சீட்டு வழங்கப்பட அதன்பின் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகும். ஆனால் அந்த நாள் முதல் நான் எங்கு இருந்தாலும் அங்கு என் இடம் நிலையானது அல்ல என்ற உணர்வுடன் எனக்கு புதிய வாய்ப்பு கிட்டப்போகிறது என்ற உணர்வும் இருந்திருக்கிறது. இவ்விரண்டும் ஓர் இணை.
நான் முதிர்ச்சி அடைந்தபின் மீண்டும் புலம் பெயர்ந்திருக்கிறேன். 2016ஆம் ஆண்டு, “மிகச் சிறந்த குடியேறி”, என்று நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். பயிற்சியால் நான் வளர்த்தெடுத்துக் கொண்ட திறமையை ஆமோதிப்பதாக அதை எடுத்துக் கொண்டேன்- அவ்வாறு கௌரவப்படுத்தியதன் நோக்கம் அதுவல்ல எனினும். நான் குழந்தைகளைப் பெற்று வளர்த்திருக்கிறேன். நான் புதிதாய் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும், ஒவ்வொரு முறையும், பாதாளத்தினுள் பாதம் பதிக்க என் பெற்றோருக்கு தேவைப்பட்டிருக்கக்கூடிய வீரத்தை எண்ணி வியந்திருக்கிறேன். சமையலறையில் அவர்கள் உலக அட்லாஸ் ஒன்றின் பிரதியை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தது நினைவிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா காகிதப் பக்கத்தில் வரையப்பட்ட கோட்டுருவம். சன்னமான கருநீல வண்ணக் கோடுகளின் பின்னல். சில அமெரிக்க புத்தகங்களை வாசித்திருந்தார்கள். ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்திருந்தார்கள். மேற்கு என்று ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பது நிச்சயமாய் தெரியுமா என்று விளையாட்டாய் ஒரு நண்பர் அவர்களிடம் கேட்பதுண்டு.
உண்மையைச் சொன்னால், அவர்களுக்கு அது தெரிந்திருக்க வழியில்லை. சோவியத் யூனியனை விட்டு வெளியேறினால் மீண்டும் திரும்பி வர முடியாது என்பதை மட்டும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (அபூர்வமான உறுதிப்பாடுகள் என்று நாம் ஏற்றுக் கொள்ளும் பல விஷயங்களைப் போலவே இந்த ஒன்றும் தவறான அனுமானமானது). அவர்கள் வேறொரு இடத்தில் இல்லம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று நினைக்கிறேன்: யூதர்களான அவர்களுக்கு சோவியத் யூனியன் தாயக உணர்வை அளித்ததே இல்லை- நீ பிறந்த இடம் உன் தாயகம் இல்லையெனில், தீர்மானிக்கப்பட்டது என்று எதுவுமில்லை. எதுவும் சாத்தியம். எனவே, அறியப்படாத ஒன்றை நோக்கிய பாய்ச்சலை ஒரு சாகசமாய்க் கருதியதாகவே என் பெற்றோர் எப்போதும் சொன்னார்கள்.
எனக்கு அதில் சந்தேகம் இருந்தது. என்ன இருந்தாலும், என்னிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல அது.
‘ மாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:
“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் அது உருவமளித்து, திரிக்கிறது– திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அத்தனையையும். எனக்கு அது, பதினான்கு வயதில் நான் அமெரிக்கா சென்று வாழத் துவங்கியது. தேசங்கள் மாறுவதற்கு கடினமான பருவம் அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலோடு முழுமையாய் பொருந்தியிருக்க எப்போதும் முடியாது“.
மேத்தா என்னைக் கைவிடவில்லை:அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். எல்லாரைப் பற்றியும் அவர் சொல்வது தவறு என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் இந்த இடைவெளி வேறொரு வண்ணம் பூசுகிறது.
ஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு அவன் விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடரும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தார். தன் வாழ்வின் இறுதிக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தது. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றிருக்கிறேன். எப்படியிருந்தாலும், தனியொரு வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் பல இருக்கின்றன.
2
பாதுகாப்பின்மை
பதின்மூன்று வயதில் நான் ஒருநாள் மாஸ்கோவுக்கு வெளியே ஒரு சிறு காட்டில், மரங்கள் அகற்றப்பட்ட ஓர் இடத்தில் இருந்தேன். அந்த இடம் வெட்டவெளியில் இருந்தது என்றாலும் அதை யூத கலாசார களப்பணியாளர்களின் தலைமறைவு, அல்லது ரகசிய கூடுகை என்று சொல்லலாம். ஒவ்வொருவராய், இருவராய், அல்லது சில சமயம் சிறு குழுவாய் கூட்டத்தின் முன் கிடாருடன் அல்லது கிடார் இல்லாமல் வந்து நின்று, மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட ஹீப்ரூ மற்றும் யிட்டிஷ் மொழி பாடல்களிலிருந்து ஒன்றிரண்டைப் பாடினார்கள். அதாவது, அவர்கள் அதே மூன்று நான்கு பாடல்களை மீண்டும் மீண்டும் பாடினார்கள். அந்தப் பாடல் மெட்டுகள் என்னுள் ஏதோ ஒரு தந்தியை மீட்டின. மார்பெலும்புக்கு சற்று மேலே இருந்த அந்த அங்கம், அதுவரை நான் அறியாதது, உறுப்பின உணர்வில் சிலிர்த்துக் கொண்டது. புல் தரையில் மீது பரவியிருந்த, வெட்டப்பட்ட மரத்துண்டங்களின் மீது முன் பின் அறியாதவர்கள் சூழ அமர்ந்திருந்தேன். அவர்கள் முகங்களை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது. அவர்களைப் பார்த்து, இதுதான் நான், என்று நினைத்துக் கொண்டேன். இதிலுள்ள, “இது” என்பது “யூதத்தன்மை”. முப்பத்து ஏழு ஆண்டுகள் சென்றபின் இந்த மேடையின் உயரத்தில் நான், “சமயசார்பற்ற கலாசாரச் சமூகத்தில்,” என்பதையும் “சோவியத் யூனியனில்” என்பதையும் சேர்த்துக் கொள்வேன். ஆனால் அப்போது, விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லாத குறுகிய இடமே இருந்தது. அது குறித்த எல்லாமே தெள்ளத் தெளிவாய்த் தோன்றின- நான் யார் என்பதை அறிந்து கொண்டபின், அப்படிதான் இருப்பேன். உண்மையில், எனக்கு முன் இருந்தவர்கள், அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர்கள், யூதத்தன்மையை அழித்துவிட்ட தேசத்தில் தாம் எவ்வாறு யூதர்களாய் வாழ்வது என்ற கேள்விக்கு விடை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஓர் அடையாளத்தை சுவீகரிக்கக் கற்றுக் கொள்ளும் மக்களைக் காண்பதுதான் என்னைச் சிலிர்க்கச் செய்தது என்று இப்போது நினைக்க விரும்புகிறேன்.
சில மாதங்களுக்குப் பின் நாங்கள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறினோம்.
புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில், குடியேற்ற கணம் முதல் சில பக்கங்களில் எதிர்கொள்ளப்பட்டு விடுகிறது- அது எழுத்தாளர் வாழ்வில் எப்போது நிகழ்ந்திருந்தாலும். இது தொடர்பாய் நான் அறிந்திருந்த இடத்தில் உள்ள மேற்கோளைப் பார்க்க விளாதிமிர் நபகோவின் ‘ஸ்பீக், மெமரி‘ புத்தகத்தை எடுத்தேன். ஆனால் அந்த இடத்துக்கு வர சிறிது காலம் பிடித்தது. காரணம், 310 பக்க புத்தகத்தில் 250ஆம் பக்கத்தில்தான் அந்தச் சொற்றொடர் உள்ளது. இதுதான் அது: “பின்னோக்கி பார்க்கையில், எத்தனை உலகங்களைக் கொடுத்தாலும் இழக்க விரும்பாத ஒரு சின்கோபல் கிறக்கமொன்றை என் விதியில் ஏற்பட்ட இடைவெளி எனக்கு அளிக்கின்றது”.
மேற்கோள் காட்டத்தக்க வாக்கியங்கள் நிறைந்த புத்தகத்தில் இது அடிக்கடி சுட்டப்படும் சொற்றொடர். ‘சின்கோப்‘ என்ற சொல்லை நபகோவ் பயன்படுத்தும் பொருள் குறித்து கலாசார விமரிசகரும் மறைந்த என் நண்பருமான ஸ்வெட்லானா பொய்ம் பகுப்பாய்வு செய்தார். அது மூன்று தனித்தனி அர்த்தங்களுடன் பயன்படுத்தப்படுகிறது: மொழியியலில், ஒரு சொல்லின் மத்தியில் உள்ள ஒலி அல்லது அசை நீக்கப்பட்டு அந்தச் சொல் குறுகுவதை குறிக்கிறது; இசையில், பொதுவாய் வலுவின்றி ஒலிக்கும் பீட் ஒன்று அழுத்தம் பெறும்போது ஏற்படும் ரிதம் மாற்றம் மற்றும் கவனப் பெயர்வை குறிக்கிறது; மருத்துவத்தில், ஒரு குறுகிய கால நினைவிழப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. “சின்கோப் என்பது குறியீடு மற்றும் சேர்க்கையின் எதிர்ப்பதம்,” என்று எழுதினார் ஸ்வெட்லானா.
மாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:
“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் அது உருவமளித்து, திரிக்கிறது- அது போக, திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அனைத்தையும். எனக்கு அது, பதினான்கு வயதில் நான் அமெரிக்கா சென்று வசிக்கத் துவங்கிய நிகழ்வு. தேசங்கள் மாறுவதற்குத் தகுந்த பருவமல்ல அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலில் முழுமையாய் பொருந்தியிருப்பது போல் ஒரு போதும் இருக்காது”.
மேத்தா என்னைக் கைவிடவில்லை: அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். அவர் யாரையும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: இந்த இடைவெளி முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் வேறொரு வண்ணம் பூசுகிறது.
ஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடர்ந்து வாழும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்ய முயற்சி செய்தார். தன் வாழ்வின் அந்திமக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தன. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றிருக்கிறேன். எப்படியிருந்தாலும், ஒற்றை வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் ஏராளம் இருக்கின்றன.
3 பன்முகத்தன்மை
1982ஆம் ஆண்டு வாலண்டைன் தினமன்று- அப்போது என் வயது பதினைந்து- நான் யேல் பல்கலையில் ஒரு கே நடனம் சென்றிருந்தேன். அப்போது கே நடன நிகழ்வுகள் உற்சாகமாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. கல்லூரி வளாகத்தில் தற்பாலின விழைவு கொண்டிருப்பது அச்சுறுத்தலாக இருந்த சூழல் மாறியிருந்தது. ஆனாலும், கே வாழ்க்கை என்பது அரைகுறை வெளிச்சத்தில் இருந்தது என்பது ஒரு வகையில் சாகச உணர்வு அளித்தது. உண்மையில் எனக்கு நடனமாடிய நினைவு இல்லை. யாருடைய கவனத்தையும் கவர்ந்ததுகூட நினைவில்லை. வேறு சொற்களில் சொன்னால், யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு உறுதியாய் தெரியும். ஆனால் ஒரு வினோதம், இது என் தன்னம்பிக்கையைக் குலைக்கவில்லை. ஏனென்றால், இருண்ட ஏதோ ஓரிடத்தில், ஏதோ ஒன்று என்னைத் தாங்கி நிற்பதும், என்னைச் சுற்றி சக உணர்வு கொண்ட ஒரு சமூகம் இருப்பது போன்ற உணர்வும்தான் என் நினைவில் இருக்கின்றன. நான் இப்படி இருக்க முடியும், என்று நினைத்துக் கொண்டதும் நினைவில் இருக்கிறது.
புலம்பெயர்தலின் சின்கோப் எனக்கு இவ்வாறு பொருள்படுகிறது- நான் யார் என்பதைக் கண்டறிவது- மாஸ்கோவில் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் என் அனுபவம்-, நான் யாராக இருக்க முடியும் என்று கண்டறிவது- என் நடன அனுபவம், இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் அது. தேர்வொன்றை மேற்கொண்ட கணம், அதற்கு நான் “என் விதியின் இடைவெளி”க்குதான் நன்றி கூற வேண்டும். அதை நான் உணர்ந்திருந்தேன்.
4 உரிமையுணர்வு
இந்த வகையில் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பாதை அமெரிக்க கே மற்றும் லெஸ்பிய இயக்கத்திலிருந்து பிரிந்து விலகுகிறது. பின்னது தேர்வின்மையை அடிப்படையாய்க் கொண்டது. நீ இப்படித்தான் பிறந்தாய் என்ற வாதத்தை முன்வைப்பது மனிதர்களின் கருணையுணர்வை, அல்லது, அவர்களின் நாகரிக உணர்வையாவது நோக்கி உரையாடுகிறது என்றாலும்கூட அதைச் செய்யும்போதே நீ உன் தேர்வைப் பாதுகாத்துக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கலாம். நிச்சயம், நாம் நம் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடத் தயாராகவே இருக்க வேண்டும். இது நம் சந்தேகங்களையும் அடக்குகிறது, எதிர்கால சாத்தியங்களை முடிவுக்கு கொண்டு வரவும் உதவுகிறது. நாமெல்லாம், பெரும்பாலும், குறைவான தேர்வுகள் இருந்தால் சௌகரியமாக இருப்பவர்கள்- என் பெற்றோர் தங்கள் மாபெரும் புலம்பெயர் சாகசத்தைத் துவங்கியிருக்காவிட்டால், நானும்கூட இன்னும் பாதுகாப்பான வாழ்வை உணர்ந்திருப்பேன்.
நான் மாஸ்கோவைவிட்டு வெளியேறியபின் என் பாட்டிகளில் ஒருவர் நாங்கள் புலம்பெயர்ந்தது குறித்த தகவலை மறைக்க வேண்டியிருந்தது- நாங்கள் தேசத்துரோகம் செய்திருந்தோம், அது நாங்கள் விட்டுச் சென்றவர்களுக்கு ஆபத்து விளைவித்திருக்கும். எனவே அவள் வாழ்ந்த, நான் குழந்தையாய் எங்கள் கோடைப் பருவத்தைக் கழித்த, சிற்றூரில் நான் வாழ்ந்திராத ஒரு வாழ்வு குறித்த நிலைத்தகவல்களை தொடர்ந்து தன் நண்பர்களுக்கு அளித்து வந்தாள். அந்த சோவியத் வாழ்வில் நான் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டேன். முடிவில், சராசரியாய் ஒலிக்கும் ஒரு தொழில்நுட்ப பாதையை ஏற்றுக் கொண்டேன்.
எனக்காக என் பாட்டி தேர்ந்தெடுத்திருந்த கதை எவ்வளவு அனுமானிக்கத்தக்கதாய் இருந்தது என்பது என்னைக் காயப்படுத்தியது. யுனைட்டட் ஸ்டேட்ஸில், நான் கற்பனைகளை வளப்படுத்தும் ஆபத்தான வாழ்வு வாழ்ந்தேன்- உயர்நிலைப் பள்ளிக்கல்வியை கைவிட்டேன், வீட்டை விட்டு ஓடிப் போனேன், ஈஸ்ட் வில்லேஜில் வசித்தேன், பைசைக்கிள் மெசெஞ்சராக வேலை செய்தேன், கல்லூரி படிப்பைக் கைவிட்டேன், கே அச்சுக் இயக்கத்தில் வேலை செய்தேன், இருபத்து ஒரு வயதில் ஒரு பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆனேன், ‘ஆக்ட் அப்‘ போராட்டத்தில் கைது செய்யப்பட்டேன், பாலுணர்வு சார்ந்தும் நேசவுணர்வுகள் சார்ந்தும் சோதனை முயற்சிகள் மேற்கொண்டேன், மிக மோசமாக நடந்து கொண்டேன், நல்ல நண்பியாக இருந்தேன், அல்லது இருக்க முயன்றேன்- ஆனால் என் பாட்டி என் முன் உயர்த்திய கண்ணாடியில், மாறுபட்டு இருந்தது என் வசிப்பிடம் மட்டுமல்ல: என் வாழ்வில் தேர்வு இருக்கிறது என்பதும்.
இந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் உள்ளூர என் பாட்டியின் எண்ணம் சரிதான் என்று நம்பினேன்: எனக்கு இணையான இன்னொரு நான் இருக்கிறேன், முட்டுச் சந்தில் வந்து நின்ற ஏதோ ஒரு பொறியியல் பணியில் துயரத்துடன் உழைக்கும் ஒரு நான் இருக்கலாம். இந்த எண்ணம் நான் வாழும் வாழ்வில் என்னை இரட்டிப்பு வேடதாரியாக்கியது.
ருஷ்யாவில் இருப்பது என்ற முடிவுக்கு நான் எப்போது வந்தேன் என்பது எனக்குத் தீர்மானமாய் தெரியவில்லை, ஆனால் அப்படியொரு அறிவிப்பு என் வாயிலிருந்து வெளிப்பட்டது நினைவில் இருக்கிறது. சில சமயம் ஒரு முடிவு தன்னை நமக்கு தெரியப்படுத்தும்போது நேர்வது போல் அது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. நான் அங்கு ஒரு வருடமாய் வாழ்ந்து கொண்டிருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பேசினேன், அவர் ஒரு அமெரிக்க பட்டதாரி மாணவர், அவரும் ருஷ்யாவில் ஓராண்டு வாழ்ந்தவர், திரும்பிச் செல்வது என்று முடிவு செய்திருந்தார். “நான் இங்குதான் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்றேன். “அதிலென்ன சந்தேகம்,” என்று அவர் பதில் சொன்னார், அதில் தேர்ந்தெடுக்க எதுவுமில்லை என்பது போல்.
அதே சமயத்தில், இளம் ருஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் என்னை நேர்முகம் கண்டார்: ருஷ்யா திரும்பி வருவது என்ற தேர்வே எனக்கு ஒரு அயல்தன்மை அளித்து, என்னைப் பற்றி பிறர் எழுதச் செய்தது. அமெரிக்காவில் ஒரு ருஷ்யராக இருப்பதா, அல்லது ருஷ்யாவில் ஓர் அமெரிக்கராக இருப்பதா, இரண்டில் எதை நான் விரும்பினேன் என்று அவர் கேட்டார். எனக்கு ஆத்திரமாக இருந்தது- நான் ருஷ்யாவில் ஒரு ருஷ்யப் பெண், அமெரிக்காவில் ஒரு அமெரிக்கப் பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கு சென்றாலும் அங்கு நான் அந்நியமாக இருப்பேன் என்பதை ஏற்றுக் கொள்ள பல ஆண்டு காலம் பிடித்தது.
நான் என் இரண்டு பாட்டிகளையும் மீண்டும் சந்தித்து, பேட்டி எடுக்கத் துவங்கினேன். என் பதின்பருவத்துக்குப்பின் அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அது அவர்கள் மேற்கொண்ட தேர்வுகள் பற்றிய புத்தகமாய் மாறியது. எங்கள் புலம் பெயர்தலைக் கண்டித்தவர் ஒரு தணிக்கை அதிகாரியாக மாறியிருந்தார். அது ஒரு அறத் தேர்வு என்று அவர் என்னிடம் சொன்னார். ஒரு வரலாற்று ஆசிரியையாய் பணியாற்ற கல்வி பயின்றார். ஆனால் அவர் படித்து முடிக்கும்போது சோவியத் யூனியனில் வரலாற்று ஆசிரியராய் இருப்பதானால் ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தீர்மானமாய் தெரிந்து விட்டது. மாறாய், தணிக்கை செய்வது என்பது, ஒரு இயந்திரம்கூட செய்துவிடக் கூடிய வேலை என்று அவருக்குத் தோன்றியிருந்தது: வேறு எந்த ஒருவரும் அதே வாக்கியங்களை இருட்டடிப்பு செய்திருப்பார், அதே அஞ்சலைப் பறிமுதல் செய்திருப்பார் (வெளிநாட்டிலிருந்து வரும் அச்சுப் பிரதிகளை தணிக்கை செய்வதுதான் அவர் முதலில் ஏற்றிருந்த பணி). மாறாய், வரலாற்று ஆசிரியர் வேறு வகை வசீகரத்தையும் வலியுறுத்தலையும் பயன்படுத்தி, கடந்த காலம் குறித்த குழந்தைகளின் புரிதலைத் திரிக்கிறார்.
என் மற்றொரு பாட்டி எதிர் அரசியல் செய்பவள் என்பதும் போராட்டக்காரி என்பதும், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவள் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவரைப் பேட்டி எடுக்கும்போது ரகசிய காவல் அமைப்பில் அவருக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டபோது (மொழிபெயர்ப்பாளராக), அவர் அதை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை அறிந்தேன். ஸ்டாலின் எதிர்-காஸ்மோபாலிடன் போராட்டம் என்று அழைத்த காலகட்டத்தில் நடந்தது இது. அப்போது அத்தனை வகைப்பட்ட சோவியத் நிறுவனங்களில் இருந்தும் யூதர்கள் நீக்கப்பட்டார்கள். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை, துல்லியமாய்ச் சொன்னால், அவரது கைக்குழந்தையின் உயிரை. அந்த நிலையில் அவருக்கு தேர்ந்தெடுக்க எதுவும் இல்லை, என்று அவர் சொன்னார்: தன் குழந்தைக்கு அவர் உணவு அளித்தாக வேண்டும். ஆனால் மருத்துவத் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் அவரால் பணியில் இணைய முடியவில்லை.
என்றாலும், புத்தகத்தின் மைய பாத்திரம், majdanekகில் கொல்லப்பட்ட அவரது தந்தை Bialystok Ghettoவின் நிகழ்ந்த கலவரத்தில் பங்கேற்றிருந்தார் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன். ஆனால், போராட்டக்காரர்களுக்கு உதவி செய்ய தீர்மானிப்பதற்கு முன் Judenrat (Jewish council)ல் அவர் பணியாற்றியிருந்தார் என்பதையும் அப்போதுதான் அறிந்தேன்.
ஆவணங்களை தொடர்ந்து வாசிக்கும்போது – Bialystok Ghettoவில் இருந்த ஆவணங்களில் கணிசமானவை குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாக்கப்பட்டிருந்தன-, என் தாத்தாவின் அப்பா Judenratன் de facto தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ghettoவின் உணவு விநியோகம் மற்றும் குப்பை அப்புறப்படுத்துதல் அவரது பொறுப்பில் இருந்திருக்கிறது. கொலை செய்யப்படுவதற்கான பெயர்ப் பட்டியல் தயாரிப்பதில் அவரும் பங்கேற்றிருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்களையும் பார்த்தேன். போராட்டக்காரர்களில் ஒரு உறுப்பினரின் நினைவுக் குறிப்பையும் வாசித்தேன். அதில் அந்தப் பெண், என் தாத்தாவின் அப்பா போராட்டத்தைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்திருந்தார். பின்னர் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவர் ghettoவினுள் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வர போராட்டக்காரர்களுக்கு உதவி செய்யத் துவங்கினார். போருக்கு முன், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாகவும், நகரசபை மற்றும் யூத சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். எனவே,அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குரிய கடமைகளின் நீட்சி என்று judenratல் தன் கடமைகளை கண்டார் என்பது தெளிவாய்ப் புரிந்தது. என் தாத்தாவின் அப்பாவுடைய தேர்வுகளின் ஆரத்தை என்னால் காண முடிந்தது.
judenrat பற்றிய பகுதியை நான் பதிப்பிப்பதை என் பாட்டி விரும்பவில்லை. அவரது கதை யாருக்குரியது- அவளா அல்லது நானா, அல்லது எங்கள் இருவருக்கும் உரியதா என்பது குறித்து நீண்ட காலம் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இறுதியில் அவள் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்: Hannah Arendtன் Eichmann in Jerusalem நூலில் இருந்து கையாண்டிருந்த ஒரு மேற்கோளை நான் நீக்க வேண்டும். யூதச்சபையினரின் உதவி இல்லாமல் ஹோலோகாஸ்ட் சாத்தியப்பட்டிருக்காது என்று arendt கூறும், வெகுவாய்க் கண்டிக்கப்பட்ட, மேற்கோள்தான் அது.
என் தாத்தாவின் கதை, அசாத்திய, வேதனைப்படுத்தும் தேர்வுகளின் கதை, ஆனால் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்த கதை அது என்று நான் நினைத்தேன். தேர்வு அசாத்தியமானது என்ற நிலைக்குக் கொண்டு செல்வதை சர்வாதிகார ஆட்சிகள் நோக்கமாய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்போது இதுதான் என் ஆர்வத்தைத் தூண்டியது- நியாயம் வழங்குவதற்கான என் வசதிக்கும் என் தாத்தா பாட்டிகள் எதிர்கொண்ட, தாளமுடியாத குறைவளவு முடிவுகளுக்கும் இருந்த இடைவெளி என்னை பிரமிக்கச் செய்தது. “அசாத்திய தேர்வு,”, “தேர்ந்தெடுக்க முடியாத நிலை”, போன்ற எண்ணங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எது எனக்குச் சுவாரசியமாக இருக்கிறது என்றால், ஏற்றுக் கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோதும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தை வலியுறுத்தும் வடிவமாய் போராட்டம் அமையலாம் என்பதுதான்.
5 அறிவியல் – அடிப்படை
நாங்கள் அமெரிக்கா வந்து பதினொன்று ஆண்டுகள் சென்றபின் என் பெற்றோரின் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. 1992ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் என் அம்மா புற்றுநோயால் இறந்தார். இன்னொரு பதினொரு ஆண்டுகளுக்குப்பின் நான் ஓராண்டுகால ஆதரவூதிய பட்டக்கல்வி திட்டத்தில் அமெரிக்கா வாழ் ருஷ்யராய் திரும்பினேன். அந்த ஆண்டு ஒரு மரபணுச் சோதனை செய்து கொண்டேன். என் அம்மாவையும் அதற்கு முன் என் அத்தையையும் கொன்ற மரபணு மாற்றம் என்னிலும் இருப்பதை அது வெளிப்படுத்தியது. நான் ‘இப்படித்தான் பிறந்திருக்கிறேன்”- மார்பகங்கள் அல்லது சினைப்பைகளில், அல்லது இரண்டிலும் புற்றுநோய் வளரும் வகையில். மரபணு ஆலோசகர்களும் மருத்துவர்களும் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அது ஒரு தேர்வு, நிச்சயம் வரப்போகிறது என்று மருத்துவர்கள் உறுதியாய் இருந்த புற்றுநோயின் முதல் அறிகுறிகளுக்கான “தீவிர கண்காணிப்பு”க்கும் தற்காப்பு அறுவை சிகிச்சைக்கும் இடையிலான ஒன்று என்ற வடிவம் கொண்டது.
இதன் முடிவில் மரபணுச் சோதனை காலத்தில் தேர்வுகள் மேற்கொள்வது குறித்து எழுதினேன், முதலில் ஒரு கட்டுரைத் தொடர், அதன்பின் ஒரு புத்தகம். என் முன் இருந்ததைவிட மிகவும் மோசமான தேர்வுகளை எதிர்கொண்டவர்களுடன் உரையாடினேன். இரைப்பை, கணையம், முதலான அடிப்படை உறுப்புகளே இல்லாமல் வாழத் தீர்மானித்திருந்தார்கள் இவர்கள். ஆனால் என் மருத்துவர்களோ மார்பகங்களையும் சினைப்பைகளையும் மட்டும்தான் அகற்ற பரிந்துரைத்தார்கள். நான் என் மார்பகங்களை நீக்கி மறுவடிவமைப்பு செய்யத் தீர்மானித்தேன். என் மார்பகங்களின் அளவையும் என் விதியையும் இப்போது நான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன்!
ஆனால் மருத்துவர்கள் அது சரியான தேர்வு இல்லை என்று நினைத்தார்கள். மார்பகங்களைவிட சினைப்பைகளை அகற்றுவதுதான் முக்கியம் என்று அவர்கள் வாதிட்டார்கள். சிறிது காலம் சினைப்பைகளைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையளிக்கும் தகவல் ஆதாரங்கள் இருப்பதைக் கண்டேன், ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவற்றையும் அகற்றி விட்டேன். அந்த சமயத்தில், என் மருத்துவர் இனி எனக்கு வேறு வழியில்லை என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்.
6. அப்பாலினம் (transgender/ திருநங்கை)
ருஷ்யா திரும்பிய இருபது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நான் வெளியேறினேன். தேர்வு போல் இல்லாத அசாதாரண தேர்வுகளில் அதுவுமொன்று: 2011-12 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரசு நடவடிக்கைகள் காரணமாய் தேசத்தை விட்டு வெளியேறிய பலரில் நானும் ஒருவர். புலம் பெயர்தல் அல்லது சிறைப்படுதல் என்ற தேர்வு சிலருக்கு அளிக்கப்பட்டது. என் தேர்வு புலம் பெயர்தல் அல்லது நான் தற்பாலினர் என்பதால் என் குழந்தைகளை சமூக நல அமைப்புகள் எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது.
நான் ருஷ்யாவில் இருந்த காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த என் பிளவுபட்ட அகத்தின் வாழ்வில் என்ன நடந்தது? என் எழுத்து வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது- ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த என் படைப்புகள் அமெரிக்காவில் வெளியாகின. ஆனால் சமூக வெளியில், நான் யார்? என் மக்கள் எவர்? எனக்கு உரிய இடம் எது? நான் சில நண்பர்களை இழந்திருந்தேன், சிலரைப் பெற்றிருந்தேன். சில நண்பர்கள் திருமணம் புரிந்து கொண்டிருந்தார்கள், சிலர் பிரிந்து, மீண்டும் இணைந்து, குழந்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். நான் இணைந்திருந்தேன், பிரிந்திருந்தேன், மீண்டும் இணைந்திருந்தேன், எனக்கும் குழந்தைகள் பிறந்திருந்தன.
அது போக, நான் அறிந்திருந்த பெண்களில் சிலர் ஆண்களாகி இருந்தனர். அப்பாலினத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படிச் சொல்வதில்லை; அவர்களுக்கு அளிக்கப்பட்ட மொழி தேர்வற்றது: எப்போதும் நாங்கள் ஆண்களாகவோ பெண்களாகவோ இருந்து கொண்டிருந்தோம், இப்போது எங்கள் உண்மையான அகங்கள் வெளிப்படுகின்றன என்று சொல்கிறார்கள். நான் அமெரிக்காவில் இல்லாத காலத்தில் ஆண் மற்றும் பெண் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் வெற்றிகரமாக அரசியலில் பயன்படுத்தியிருந்த ‘பிறந்ததே இப்படிதான்‘ என்ற அணுகுமுறைதான் இது: இதன் பலனாய் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் ராணுவம், திருமணம் போன்ற அமைப்புகளில் புக முடிந்தது.
வழக்கமான கதை இது போல் இருக்கும்: குழந்தையாய் இருக்கும்போதே நான் ஒரு பையன் போல் இருப்பேன், அல்லது, ஒரு பெண் போல் உணர்ந்ததே இல்லை, அதன் பின் தற்பாலினச் சேர்க்கை முயன்றேன், ஆனால் பால் விழைவு அல்ல பிரச்னை- பாலினம்தான் பிரச்சினை, அதிலும் குறிப்பாக, ‘மெய்யான பாலினம்‘, அறுவை சிகிச்சைகள் மூலம் இதை இனி அடைய இயலும். இந்தக் கதைகளைக் கேட்கும்போது எனக்கு அநியாயமாய் நடத்தப்பட்டது போன்ற கோபம் வந்தது. நானும் எப்போதும் ஒரு பையனாய்த்தான் உணர்ந்திருக்கிறேன்! ஒரு பெண்ணாய் இருப்பதில் மகிழ்ச்சியடைய (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) சிறிது பாடுபட வேண்டியிருந்தது- அதில் நான் வெற்றி கண்டிருந்தேன், ஒரு பெண்ணாய் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டிருந்தேன். ஆனாலும்கூட: இதோ இங்கே, நான் ருஷ்யா திரும்பியபோது அமெரிக்காவில் விட்டுச் சென்ற என் அகத்தின் இணை வாழ்க்கை சாத்தியத்தை எதிர்கொள்ளும்போது, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு என் பாலினம் சேர்ந்திருப்பேன் என்பதை உணர்ந்தேன். அதற்கும் மெய்யான பாலினத்துக்கும் (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) தொடர்பில்லை, ஆனால் தேர்வுச் சுதந்திரத்துக்கு தொடர்பிருந்தது. எப்படியோ நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டிருந்தேன்.
என்னைப் பெண்ணாக்கிய உடல் உறுப்புகளை அகற்றுவது தொடர்பான தேர்வுகளை மேற்கொள்வது பற்றி ஒரு முழு புத்தகமே எழுதியிருந்தேன்: மார்பகங்கள், சினைப்பைகள், கருப்பை. மார்பகங்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் அதை மீண்டும் வடிவமைத்துக் கொள்வதில், கருப்பையை முழுமையாய் அகற்றியபின் ஈஸ்ட்ரோஜன் வடிவில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வதில், ஒருவர் மேற்கொள்ளும் தேர்வுகளின் பின்னணியில் இருக்கும் முன் அனுமானங்களை நான் கேள்விக்குட்படுத்தி இருக்கவில்லை. உண்மையில் நான் மார்பகத்தை மறு வடிவமைப்பு செய்து கொண்டிருந்தேன், ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொண்டிருந்தேன். கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல் நான் எடுத்த தேர்வுகளை ஒரு சாகச வாய்ப்பாய் அறிந்து கொள்வதில் நான் கேவலமாகத் தோற்றுப் போயிருந்தேன். வேறொரு தேசத்தில் வாழ்வது போல் வேறொரு உடலில் வாழ்வதை நினைத்துப் பார்க்கத் தவறியிருந்தேன். நான் இப்போது யாரோ, அதை எப்படி கண்டுபிடிப்பது?
ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்ளத் துவங்கினேன். இதன் அறிவியல் ஆதாரங்கள் குறித்து எனக்குச் சில பிரச்சனைகள் இருந்தன. ஏனெனில், பெண்ணாய்ப் பிறந்தவர்கள் டெஸ்டோஸ்டிரோன் பயன்படுத்துவது குறித்து பதிப்பிக்கப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இரு வகைப்பட்டவையாய் இருந்தன: டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்பவர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் வகையிலான ஆண்மையளிக்கும் மாற்றங்களுக்கு உட்படுவார்கள் என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள், பெண்கள் அஞ்சும் வகையிலான ஆண் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள். நான் இப்பொது குறைந்த அளவு எடுத்துக் கொள்கிறேன், இது என்னை எப்படி பாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை. என் குரல் அடிக்குரலில் ஒலிக்கிறது. என் உடல் மாறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உடல்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. தி ஆர்கனாட்ஸ் என்ற புத்தகத்தில் மாகி நெல்சன் தன் துணையான கலைஞர் ஹாரி டாட்ஜ், தான் எங்கும் போகவில்லை- அப்பாலினம் செல்வதில்லை, தானாய்த்தான் இருக்கிறேன், என்று கூறுவதை மேற்கோள் காட்டுகிறார். இந்த உணர்வு எனக்குப் புரிகிறது, ஆனால் நான் இதற்கு எதிர்மாறாய்ச் சொல்லுவேன்: முப்பத்து ஒன்பது ஆண்டுகளாக, என் பெற்றோர் அந்த ஆவணங்களை விசா அலுவலகம் கொண்டு சென்ற நாள் முதல், என் இருப்பு மிகவும் நிலையற்றதாய் இருந்திருக்கிறது, “உண்மையில் இதுதான் நான்” என்று யாரையும் என்னால் உரிமை கோர முடியாது. அந்த நான் தேர்வுகளின் வரிசை. இதில் என் கேள்வி: எனது அடுத்த தேர்வு அறிந்தே மேற்கொண்டதாய் இருக்குமா, தேர்வெடுக்கும் என் ஆற்றல் தளையற்றதாய் இருக்குமா?
7 ஆதார அடிப்படை
இந்த உரைக்கான என் குறிப்புகளை ஏழு சொற்களையொட்டி அமைத்துக் கொள்வது கடினமாக இருக்கவில்லை- நோய்க் கட்டுபாட்டு மையம் பயன்படுத்தக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாய் சொல்லப்படும் ஏழு சொற்கள். ‘கருப்பை‘ முதல் ‘ஆதார அடிப்படை‘ வரை இந்த ஏழு வார்த்தைகள் அனைத்தும் தேர்வு குறித்த நம் புரிதலைப் பிரதிபலிப்பவை.
தேர்வு செய்வது என்பது ஒரு பெருஞ்சுமை. ஒருவனின் வாழ்வைக் கண்டறிவது, அதைத் தொடர்ந்து கண்டறிவது, தாளவொண்ணாததாய் தோன்றலாம். சர்வாதிகார அரசுகள் தேர்வின் சாத்தியத்தை முடக்குவதைக் குறிக்கோளாய் கொண்டிருக்கின்றன, ஆனால் சர்வாதிகாரப் பாதையில் செல்லத் துவங்கியிருப்பவர்கள், தேர்ந்தெடுக்கும் தேவையிலிருந்து விடுதலை அளிப்பதாய் உறுதி கூறுகிறார்கள். இதுதான், “மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாய்ச் செய்”, என்பதன் உறுதிமொழி- தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான சுதந்திரம் இருந்த ஒரு கற்பனைக் கடந்த காலத்தை அது கட்டியெழுப்புகிறது.
சென்ற ஆண்டு சர்வாதிகாரம் குறித்த கிளாசிக் புத்தகங்கள் மீது மீண்டும் ஆர்வம் தோன்றியபோது எரிக் ஃப்ராம்மின் அற்புதமான புத்தகம், “எஸ்கேப் ஃப்ரம் ஃப்ரீடம்” மறுபடியும் பிரபலமாகாதது வியப்பாக இருந்தது (‘சுயமோக நோய்மை‘ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய காரணத்தால் மனநலத் துறையினரில் பலர் உளப்பகுப்பாய்வாளராகவும் சமூக உளவியலாளராகவும் இருந்த ஃப்ராம்மை மீண்டும் கண்டறிந்திருந்தனர் என்பது உண்மைதான்). அசிரத்தை என்று அவர் கருதிய விஷயம் குறித்து ஃப்ராம் புத்தகத்தின் முன்னுரையில் மன்னிப்பு கேட்கிறார்- அவசரமாய் புத்தகம் எழுத வேண்டிய தேவையே அதற்கான காரணம்: உலகம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் அவர் கருதினார். இதை அவர் எழுதியது 1940ஆம் ஆண்டில்.
தன் புத்தகத்தில் ஃப்ராம் இரு வகை சுதந்திரங்கள் இருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறார்: “விட்டு விடுதலையாகி”, இது நாம் அனைவரும் விரும்புவது- நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை நம் பெற்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்”, “வினையாற்றும் சுதந்திரம்”, கடினமானதாக இருக்கலாம், அல்லது தாள முடியாததாய் இருக்கலாம். இந்தச் சுதந்திரம் ஒருவன் தன் எதிர்காலத்தை இயற்றிக் கொள்ளச் செய்கிறது, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. ஃப்ராம் மானுட வரலாற்றில் குறிப்பிட்ட சில தருணங்களில் “வினையாற்றும் சுதந்திரம்” ஒரு சுமையாய் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மக்களால் உணரப்படுகிறது என்று கூறுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம் கர்த்துருத்துவத்தை அவர்கள் விட்டுக் கொடுத்து விடுகின்றனர்- அது மார்டின் லூதருக்கு, அல்லது அடால்ஃப் ஹிட்லருக்கு, அல்லது டொனால்ட் ட்ரம்ப்புக்காக இருந்தாலும் சரி, யாரோ ஒருவரிடம்.
தேர்வின் உருவகங்களாக இருக்கக்கூடியவர்களைப் பற்றி ட்ரம்ப்பால் நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவரது கற்பனை எதிரிகளில் மிகவும் அச்சுறுத்துபவர்கள் குடியேறிகளாகவே இருக்கின்றனர், அவர்களைத்தான் “மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்”, சுவர் எழுப்பி மறைக்க வேண்டும், அவர்களின் குற்றங்களை மட்டுமே தனி எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களின் குடும்பங்களே இந்த தேசத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இது நிச்சயம் வரப் போகிற புற்றுநோய் குறித்து “தீவிர கண்காணிப்பு” செய்வதை நினைக்க வைக்கிறது. ட்ரம்ப் தன்னிச்சையாகத் தாக்குவது போல் இருப்பதில் அப்பாலினத்தவர்கள் மற்றுமொரு இலக்காய் இருக்கின்றனர்- அப்பாலினத்தவர்களுக்கு எதிரான ராணுவ ஆணை ஒரு சான்று, அப்பாலின மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது, இப்போது, “அப்பாலினத்தவர்” என்ற சொல்லே தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் குடியேறிகள் பற்றி பேசும்போது, தற்பாலினத்தவர்கள் அல்லது அப்பாலினத்தவர்கள் பற்றி பேசும் அளவுக்கே நாம் தேர்வின்மைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அகதிகள், “பொருளாதார புலம் பெயர்ந்தோர்கள்” என்று பிரித்துப் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்- சிறைப்படுத்தப்படுதல், துப்பாக்கிச் சூட்டில் மரணமடைதல்- அதிலும் குறிப்பாய் அரசியல் அல்லது மதம் சார்த்த காரணங்களுக்காக ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு- குறித்த அச்சத்தை விட பசி, ஏழ்மை குறித்த அச்சங்கள் ஏன் புலம் பெயர்வதற்கான காரணங்களில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்று நாம் கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் அதைவிட, ஏன் ஒருவனின் தேர்வுகள் எந்த அளவுக்கு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவன் தனிநபர் சுதந்திரத்தை தன் ஆதர்சங்களில் ஒன்றாய்க் கொண்டதாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் தேசத்துக்கு வரும் தகுதி அதிகம் கொண்டவன் ஆகிறான் என்று நினைக்கிறோம்?
குடியேறிகள் ஒரு தேர்வு மேற்கொள்கின்றனர். துப்பாக்கி குண்டு பாயும் ஆபத்தை எதிர்கொள்ளக் காத்திருப்பதில் அல்ல, அதைத் தவிர்க்கும் தேர்வை மேற்கொள்வதுதான் அவர்களின் வீரம். சோவியத் யூனியனில் சிறை செல்வது அல்லது தேசத்தை விட்டு வெளியேறுவது என்ற அசாதாரண தேர்வு முன்னிருக்கும் நிலை எழும்போது தூரதேசம் செல்வதே சரியாக இருக்கும் என்று பல எதிர்ப்பாளர்களும் நம்பினார்கள். அதைவிட நாடகீயத்தன்மை குறைந்தது இது- உன் செயலை தப்பித்தலாக நினைக்காமல் சாகச அனுபவமாய்க் கொள்ள முடிவதுதான் வீரம். வாழ்வின் தேர்வுகள் நிறைந்த நிலையின் வாழும் நினைவூட்டல்களாக இருப்பது- குடியேறிகளும் அப்பாலினத்தவர்களும் இதையே நிகழ்த்திக் காட்டுகின்றனர், அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் கதை தேர்வுகள் கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.
ஒரு நம்பிக்கையுடன் இந்த உரையை முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும், இப்படி ஏதாவது சொல்லலாம்: தேர்வுகள் மேற்கொள்ளும் உரிமையை நாம் மட்டும் வலியுறுத்தினால், இருள் கவிவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் தேர்வுகள் மேற்கொள்வது, அதைவிட முக்கியமாய், பிற, இன்னும் சிறந்த தேர்வுகளை நினைத்துப் பார்ப்பது, இருள் புகுந்தபோது இருந்ததை விட அதை விட்டு வெளியே வரும் வாய்ப்பின் சிறந்த சாத்தியம் அளிக்கும் என்று நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் இதுவும் குடியேறுவது போன்றதுதான்: வெளியேறுவது என்ற முடிவு ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல்தான் பெரும்பாலும் இருக்கிறது, ஆனால் புதிய சூழ்நிலங்களில் (அல்லது மாறிய உடலங்களில்) வசிப்பது குறித்து நாம் மேற்கொள்ளும் தேர்வுகள் கற்பனையை கோருகின்றன.
http://www.nybooks.com/articles/2018/02/08/to-be-or-not-to-be/