ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பாகம் II)

அல்லது இது சற்றே வேறு விதமாகவும், இந்த நார்வீஜியன் ஈகொர்னெஸ் ஸ்ட்ரெஸ்லெஸ் ரிக்லைனரில்டிசைன், பங்க்சன் மற்றும் கம்ஃபர்ட்டின் கலவையிலும் துவங்கியிருக்கலாம். ஐகானிக் என்று பாராட்டப்படும் அதன் ஹவர்கிளாஸ் பேஸ், பிக்மெண்ட்  கொண்டு மேம்படுத்தப்பட்டதால் சற்றே திருத்தப்பட்டு , கிரெயின் எம்பாஸ்மெண்ட் செய்யப்பட்ட டோன் ஆன் டோன் எஃபக்ட் கொண்ட அப்ஹோல்ஸ்ட்ரி லெதரின் நளினமான மேற்பரப்பினுள் மறைந்திருக்கும் தொழில்நுட்பத்தை மிக புத்திசாலித்தனமாக போர்த்திருக்கிறதுஉங்கள் உடலின் மிக மெல்லிய அசைவுகளுக்கும் பொருத்தமாய் அந்த ரிக்லைனர் இசைகிறது, முதுகெலும்புக்கு முழுமையான  பாதுகாப்பு அளிக்கிறதுஆம், இங்கும்கூட துவங்கியிருக்கலாம், தனக்கு உரிமையான, தனக்கு மகிழ்ச்சியளிக்கும் பொருட்களின் வசதியில், அவன் களிப்புடன் தூங்கப் போகக்கூடியவற்றில். தூக்கக் கலக்கம் ஆக்கிரமிப்பதற்கு முன் அவன் பல பத்தாண்டுகளுக்கு முன் தனக்கு பரிசாய் அளிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை நினைவு கூரலாம், அவனது தகுதிக்கு மீறிய நேசத்தை அவன்பால் வைத்திருந்த பெண் அதில் எழுதித் தந்திருக்கிறாள். அந்த தொலைகால நினைவு அவனது உட்பரப்புகளில் ஒருவெறுமையைவிட்டுச் செல்கிறது, ஒரு வகை இல்லாமை, இழந்த வாய்ப்பு, செல்லாத பாதை.  தன்னைச் சுற்றியுள்ள அடுக்குகளில் உள்ள பல நூறு புத்தகங்களில் அதைத் தேடுகிறான்அது கிடைக்காது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், அது அவனது தாயகத்தில், சென்னையின் சுட்டெரிக்கும் வெப்பத்திலும் புழுதியிலும் பத்திரமாகப் புதைந்திருக்கிறது. இப்போது அவன் அந்த நினைவுகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், தொலை நினைவுஆனால் பொசுக்குவது, ‘ரமற்றது. அதற்கு பதிலாக தன் ஆன்ரீ கார்டியர் பிரெஸ்ஸோன் புகைப்படத்துடன் அவனை அழைக்கும் இந்தப் புத்தகத்தை அவன் வாசிக்கலாம்இது இருப்பதோ பிரிமோ லேவியின்இஃப் நாட் நவ், வென்நூலின் மலிவு விலை பதிப்புக்கு அருகில்.

*   *   *

‘W, ஆர் தி மெமோரி ஆஃப் சைல்ட்ஹூட்’ (‘W அல்லது பால்யத்தைப் பற்றிய நினைவு’) நாவலில் மாறி மாறி இடம் பெறும் இரு பிரதிகள் இருக்கின்றன; அவற்றுக்கிடையே பொதுவான எதுவும் இல்லை என்றும்கூட நீங்கள் நம்பிவிடக்கூடும், ஆனால் அவை பிரிக்க முடியாதபடி ஒன்றுடனொன்று பிணைந்திருக்கின்றன, ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது என்பது போல், அவை ஒன்று கூடி ஒன்றன்மீதொன்று அளிக்கும் தொலைதூர வெளிச்சம் மட்டுமே, ஒன்றினை மட்டும் கொண்டு சொல்லிவிட முடியாதவற்றை, மிக மென்மையான இணைவில் மட்டுமே சொல்லப்படக்கூடியவற்றை, வெளிப்படுத்த முடியும் என்பது போல். இந்த இரண்டு பிரதிகளில் ஒன்று முழுக்க முழுக்க கற்பனையானது, முன் நோக்கமற்றதுஒலிம்பிக் ஆதர்சத்தின் மயக்கத்தில் உள்ள ஒரு மண்ணைப் பற்றிய குழந்தைப்பருவ மிகை கற்பனையின் கவனமான மீளுருவாக்கம். மற்றொன்று சுயசரிதை: சாகசங்களும் நினைவுகளும் இல்லாத போர்க்கால குழந்தைப் பருவத்தின் துண்டிக்கப்பட்ட கதை, சிதறுண்ட வினோத நினைவுகள், இடைவெளிகள், நினைவிழப்புகள், ஐயங்கள், ஊகங்கள் மற்றும் சொற்ப நிகழ்வுகளைக் கொண்டது.

நாவலின் முதல் பிரிவில்  உள்ள கற்பனை பகுதிகள் கெஸ்பார் வின்க்லரைத் தொடர்கின்றன (பெரெக்கின்வாழ்க்கை, ஒரு பயனர் ஏடுஎன்ற பெரும்படைப்பில் மிகச் சிறந்த பாத்திரம் பின்னர் இவனுக்கு கிடைக்கும்). போட்டி மனப்பான்மை மற்றும் விளையாட்டில் பெருவிருப்பம் கொண்ட ஒரு வகை ஸ்பார்ட்டாவான (Sparta) டியரா டேல் ஃபுகோவின் மீது அவனுக்கு உள்ள வசீகரமும் நாவலின் பேசுபொருளாகிறது. ஓட்டோ ஆப்ஃபெல்ஸ்டாஹ்ல் என்பவனை கெஸ்பார் வின்க்லர் சந்திக்கிறான், அவனோ மற்றொரு கெஸ்பார் வின்க்லரைச் சந்திக்கத் தேடிச் செல்லச் சொல்லி இறைஞ்சுகிறான்அந்த வின்க்லர் கடலில் உடைந்த யாட் வகை படகில் இருந்த சவலைக் குழந்தை, அவனது பாஸ்போர்ட் நம் நாயகன் ராணுவத்தைவிட்டு ஓடி வரும்போது அமைதி இயக்கத்தினரால் புது அடையாளத்தை மேற்கொள்வதற்காக அளிக்கப்பட்டது.

மேலே உள்ள கற்பனைக் கதை மிக யதார்த்தமான வகையில் சொல்லப்படுகிறது என்றால் கதைசொல்லி, “குழந்தைப் பருவ நினைவுகள் எதுவும் இல்லை,” என்று சொல்லும்போது சுயசரிதைப் பிரிவுகளின் கதைகூறல் யதார்த்தம் மிகத் தீவிரமாக அடியறுக்கப்பட்டு விடுகின்றது. அதிக நினைவாற்றல் இல்லாத கதைசொல்லி, புகைப்படங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அவ்வப்போது நிகழும் உரையாடல்களைக் கொண்டு ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறான். அவனது அப்பா போரில் இறக்கிறார், அம்மா அவுஷ்விட்ஸில் மரிக்கிறாள், அவன் படிக்கிறான், என்றெல்லாம் ஒரு உடைந்த சித்திரத்தைப் பெறுகிறோம். நினைவுகள் இல்லை என்று அவன் சொன்னாலும் பிறரின் நினைவுகளுக்கு முரண்பாடான நினைவுகளைத் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கிறான்.

கவனமாய் வாசிக்கும் வாசகரொருவர் இந்த இரு கதையாடல்களுக்கும் இடையிலுள்ள ஒப்புமைகளை அதற்குள் கண்டுகொண்டிருக்கக்கூடும். வார்த்தைக்கு வார்த்தை பிரதிபிம்பம் என்று சொல்ல முடியாது, ஆனால் ஒரு சாயல், ஒரு மெல்லிய எதிரொலி, உதாரணத்துக்கு, அவர்கள் இருவரும் பிறந்த ஆண்டு குறித்த தகவலை அளிக்கும் வாக்கியம். ‘W’ எழுதி பதிப்பிப்பது என்று இரு கதைசொல்லிகளும் தீர்மானிக்கின்றனர். சுயசரிதையின் கதைசொல்லி பாரிசை விட்டு வெளியேறுகிறார், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அவர் கத்தோலிக்க பள்ளி ஒன்றிற்கு செல்கிறார், அங்கு அவருக்கு ஒரு புதிய அடையாளம் அளிக்கப்படுகிறது (அவரது யூதத்தன்மைக்கு மாறானது). வின்க்லர் ராணுவத்தை விட்டு ஓடுவது, போலி அடையாளம் தரித்துக் கொள்வது, இந்த இணை வெளிப்படையானது.

புத்தகத்தின் இரண்டாம் பாதியில் ஒப்புமைகள் குறைகின்றன. பக்கம் 61, ‘(…)‘ என்ற குறி மட்டும் கொண்ட வெற்றுத்தாள், மாற்றத்தை உணர்த்துகிறது. கெஸ்பார் வின்க்லரின் கதைசொல்லல், இனவரைவியல்அறிவியல் மொழிக்கு மாறுகிறது, விளையாட்டு விதிகள், பயிற்சிகள், போட்டிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அடுக்குகள் போன்றவற்றை அவன் விரிவாக, நுண்விபரங்களுடன் விவரிக்கிறான்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வில்சன் என்பவன் மனிதர்களை குடியமர்த்திய வில்சன் தீவுவில்சன் யார் என்பது குறித்து முரண்படும் கதைகள் நிலவுகின்றனநாவலில் ‘W’ என்று சுட்டப்படுவது, விளையாட்டையும் மானுட உடலையும் வழிபடுகிறது. விளையாட்டு நிர்வாகத்தின் பின்னணியில் நிலவும் குழப்பமான நகர்வுகளை அவற்றுக்கு சற்றே சாதகமான வகையில் துவக்க அத்தியாயங்கள் சித்தரிக்கின்றன, ஏதோவொன்று சரியாக இல்லை என்ற எண்ணம் எழுகிறது என்றாலும். நாவல் செல்லச் செல்ல, ‘W’வின் கட்டமைப்பு குலைகிறது, அதன் காட்டுமிராண்டிச் சர்வாதிகார முகம் வெளிப்படுகிறது. நவீன முதலிய பொருளாதாரங்களின் நாயை நாய் தின்னும் போட்டி மனப்பான்மையை பூதாகரமாக பெரிதாக்கிக் காட்டும் ‘W’ அதை இன்னும் சில கட்டங்கள் முன்னெடுத்துச் சென்று, தோற்றுப் போனவர்களுக்கு உணவு மறுக்கப்படுவது, சில சமயம் கற்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்படுவது என்று எல்லை மீறுகிறது. அதே ஆட்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்கச் சில கூடுதல் நுட்பங்கள் விளையாட்டு விதிகளில் புகுத்தப்படுகின்றனநீதிபதிகள் தன்னிச்சையாய் தடைகளை எழுப்புகின்றனர், யார் வெற்றி பெற்றவர்கள், யார் தோற்றுப் போனவர்கள் என்பதை எப்படி வேண்டுமானாலும் தீர்மானிக்கும் உரிமை பெறுகின்றனர். குழந்தைகள் பயிற்சி காலத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்படுகிறார்கள், வாய் பொத்தி வளர்க்கப்படுகிறார்கள், முதுமையடைந்த விளையாட்டு வீரர்கள் குப்பைத் தொட்டி உணவு உண்கின்றனர், தோற்றுப் போய் கொல்லப்பட்டவர்களின் அழுகிக் கொண்டிருக்கும் உடல்களைக்கூட சாப்பிடுகின்றனர். இந்த சீர்குலைவுகளின் உச்சம் ஒவ்வொரு ஆண்டும் பாலுணர்வு வெறியூட்டப்பட்ட ஆண் வீரர்கள் பார்வையாளர்கள் கரகோஷிக்க நிர்வாணமாய் ஓடும் அந்தத் தீவின் பெண்களை விரட்டும் வருடாந்திர போட்டியில் அடையப்படுகிறது. ஆனால் விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வாழ்வா சாவா என்ற போட்டிக்கு தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டாலும், ‘W’வின் விளையாட்டு வீரர்கள் சென்ற நூற்றாண்டு வீரர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளின் கேலிச் சித்திரங்களாகவே இருக்கின்றனர் (நூறு மீட்டர் ஓட்டப்பந்தய சாதனை 23.4 நொடிகள்!) .

வின்க்லர் சொல்லும் கதையின் கடைசி பத்தி கோட்டைக்குச் செல்லும் எதிர்கால பயணி எதைக் காணக்கூடும் என்ற விவரணையுடன் முடிகிறது: ஒளியற்ற, நீண்ட, காலியறைகளின் தொடர்ச்சி. தான் காணப்போவதை மறந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டு பயங்கரமான பாதாள உலகினுள் அவன் இறங்கும்போது, அவனுக்கு காணக் கிடைப்பதோ: குவியல்களாய் தங்கம், பற்கள், மோதிரங்கள், கண்ணாடிகள், ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் துணிமணிகள், புழுதி தோய்ந்த கார்ட் இன்டெக்ஸ்கள், தரமற்ற சோப்புகள், அடுக்கடுக்காய்… ‘W’வின் மனதை உறுத்தச் செய்யும் கதையை இவ்வளவு தூரம் கடந்த வாசகர், இப்போது நாஜி ஜெர்மனியின் யதார்த்தத்தைப் பார்வையிட வருகை தந்திருப்பவரோடு இணைகிறார்.

நாவலின் ‘W’ பிரெஞ்சு மொழியில் உள்ள இரட்டை ‘vé’, டபுள்– vié என்று உச்சரிக்கப்படுவது, இரட்டை வாழ்க்கை என்று பொருள் தருவது (சுயசரிதை பிரிவில், ‘W’ என்ற எழுத்து அனாமதேய ‘X’ என்று துவங்கி ஜெர்மன் ஸ்வஸ்திகா, எஸ்எஸ் லோகோ, ஸ்டார் ஆஃப் டேவிட் என்று பல்வேறு குறிகளாய் மாறும் சாத்தியம் விரிவாக விவாதிக்கப்படுகிறது). இறந்து கிடக்கும் பாத்திரமொன்று, தான் கிட்டத்தட்ட முடித்துவிட்ட ஜிக்ஸா புதிர் இடைவெளியின் வெற்றிடத்தை வெறித்தபடி, பின்னொரு புத்தகத்தில் தன் விரல்களிடையே வைத்திருக்கும் கடைசி வில்லையின் வடிவமும் ‘W’தான். ‘X’ என்பது அறியப்படாதது என்றால், தன் இழந்த அடையாளத்தை புனைவைக் கொண்டு மீட்டெடுக்க பெரெக் செய்யும் முயற்சியே ‘W’. ஆனால் வாசகர்களாகிய நாம் நம்பிக்கை வைக்க முடியாத சாட்சியின் நினைவுத் துண்டங்கள், வாதைக்குள்ளான பிரக்ஞையின் அகவயப் பார்வை, திசை திரும்புதல்கள், அரைகுறை உண்மைகளுடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதாகிறது. தன் சிதைவுகளுக்கு முட்டுக் கொடுக்க ஆசிரியர் பயன்படுத்தும் இந்த எச்சங்களைக் கொண்டு நாம், ஒருங்கிணைய மறுக்கும் ஒரு அடையாளத்தின் நிழலை உருவாக்க முயற்சிக்கிறோம். சபிக்கப்பட்ட புதிர் விளையாட்டுக்காரர்கள் நாம், ‘X’-னுள் ‘W’வைப் பொருத்த எப்போதும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

                                                                          *   *   *

ஆனால் இது வெகு தொலைவில் வேறோரிடத்திலும் துவங்கியிருக்கலாம்: ஆம், தென்னிந்திய நகரொன்றின் வெப்பமும் புழுதியும் நிறைந்த தெருக்களில், ‘கலாசாரபாவனைகள் கொண்ட ஒரு பதின்பருவ மாணவனின் வீட்டுவசதி வாரிய மனையொன்றில், மிகப்பெரிய பிரஞ்சு புத்தகம் ஒன்றை அவன் வாசிக்க முயற்சி செய்து கொண்டிருக்கையிலும்  இது துவங்கியிருக்கலாம். அந்தப் புத்தகம் முதலில் அதன் அட்டையாலும், அடுத்து, “இது வரையிலான நாவல் வரலாற்றின் கடைசி உண்மைச் சம்பவம்,” என்ற  பின்னட்டை வாசகத்தாலும் அவனைக் கவர்ந்திருந்தது. ஆம், இது முப்பது ஆண்டுகளுக்குப் பின், ஒருவன் தன் நினைவுகளை அகழ்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முன் தான் வாசித்தவற்றின் நாஸ்டால்ஜியா உணர்வின் வெளிப்பாடாகவும் துவங்கியிருக்கலாம். அந்தப் புத்தகம் ஒரு காலின்ஸ் ஹார்வில் பதிப்பு என்பதை அவன் நினைவு வைத்திருக்கிறான். பாரிசின் பதினேழாவது நிர்வாக மாவட்டத்தில், 11, ரூ சிமோன்க்ரூபெல்லியேரில்  உள்ள ஒரு புனையப்பட்ட முகவரியில் உள்ள அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்சின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அதன் முன்னட்டை சித்தரிக்கிறது, அதுதான் அந்த நாவலின் கதைக்களம். அட்டையின் நிறம் மஞ்சள் நிறம்தானா என்பது அவனுக்கு சந்தேகமாக இருக்கிறது, ஆனால் பின்னட்டை வாசகத்தை எழுதியது திரு. இடாலோ கால்வினோ என்பவர் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. இதற்கு முன் அவன் அவரது பிற படைப்புகளில் சிலவற்றை வாசித்திருக்கிறான். தான் கையிலெடுத்திருக்கும் வேலை அவ்வளவு சுலபமாக முடியப் போவதில்லை என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான். பதின்பருவ வாசிப்பு அனுபவத்தின் மையத்தைத் தொடுவதென்றால் அவன் இன்னும் அதிகம் முயற்சி செய்தாக வேண்டும்தன் காம்ப்ளெக்ஸ்ஸின் அமைப்பை விவரித்தாக வேண்டும், வருவாய்க்கேற்ப பிரிக்கப்பட்ட அதன் பகுப்புகளைக் குறிப்பிட வேண்டும், அதில் உள்ளவர்களின் சாதிகள் மற்றும் உட்சாதிகள் குறித்த நுண்விபரங்களை அளிக்க வேண்டும், அதன் பிரதான விளையாட்டு மைதானம், அதன் இடப்புறம் சற்றே சிறியதாய் உள்ள வட்ட வடிவ மற்றொரு மைதானம்அல்லது அவன் தன் வீட்டுக்கு அருகிலேயே ஆரம்பிக்கலாம், கண் கூச வைக்கும் சிவப்பு வண்ண கேட் கொண்ட அபார்ட்மெண்ட் Mன், 11/1ஆம் எண் இல்லம், அதன் இரட்டைக் கதவு திறந்ததும் பிளாட் நெடுக நீளும் குறுகிய ஹால்வே, இடதுபுறம் உள்ள இரட்டை படுக்கையறைகள், அவற்றுக்கு அடுத்து சமையலறை, வலப்புறம் குளியலறை மற்றும் கழிப்பறைகள். சுகமான நூலகத்தின் சௌகரியமான வாசிப்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்தப் புத்தகம் ஒரே மூச்சில் படித்து முடிக்கப்படவில்லை. பழங்கால க்வீன் பெட் கொண்ட வெளிச்சமற்ற படுக்கையறையில் அப்புத்தகத்தின் சில பகுதிகள் வாசிக்கப்பட்டன, அந்தப் படுக்கை ஒருவேளை அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்தபோது ஆர்டர் செய்து தருவிக்கப்பட்ட குடும்பச் சொத்தாக இருக்கலாம். அம்மாவின் பட்டுப் புடவைகளுக்கும் நகைகளுக்கும் என்று அவலட்சணமான ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பீரோ இருக்கிறது, அதை அடுத்துள்ள மற்றொரு படுக்கையறையில் அதையொத்த, ஆனால் சிறிய மற்றுமொரு பீரோ அவனது அப்பாவின் சான்றிதழ்களை?
?ும் ஆவணங்களையும் பாதுகாத்துக் கொண்டு, எப்போதும் தன் மரக்கட்டிலில் படுத்துக்கொண்டே இருக்கும் அவனது தாத்தாவின் கட்டிலுக்கு அருகே இருக்கிறதுஉடம்பு சரியில்லை, அவரை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது அல்ல நிலைமை, அவருக்குப் பொதுவாகவே எப்போதும் சும்மா கிடப்பது பிடிக்கும். அந்தப் புத்தகத்தை வாசிப்பது பற்றி எழுதும்போது அதன் வினோதமான பக்கங்களை விட்டு அகலும் அவன் கண்கள், அவனது அப்பா அலுவல் பயணங்களில் பாரிஸ் சென்றபோது லூவ்ரிலிருந்து வாங்கி வந்த பிகாசோவின் நீல காலத்தின்மேன் வித் தி கிடார்அல்லது சுராவின் (Seurat) பாயிண்ட்டில்லிஸ்ட் ஓவியம் ஒன்றின் பிரதியின் சட்டம் போட்டு மாட்டப்பட்ட படத்தின் மீது விழுவதை எழுதலாம். தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதானால், அவன் விரும்பி வாசித்த வெளிநாட்டு நாவல்களின் பாத்திரங்களுக்குக் கிடைப்பது போன்ற ஒரே மூச்சில் புத்தகங்களை வாசித்து முடிக்கும் வசதி அவனுக்கு இருந்ததே இல்லை, அவன் எதிர்கொண்ட குறுக்கீடுகளையும் விவரித்தாக வேண்டியிருக்கும். “புத்தகப்புழுவாய்இருப்பதன் பாதகங்களைச் சொல்லி அவனது பாட்டி அவனைத் திட்டியதை அவன் விவரிக்க வேண்டும், வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்த நண்பர்களைப் பற்றி எழுத வேண்டும், அவர்கள் வாழ்வின் சம்பவங்கள், இரண்டு அபார்ட்மெண்ட் கட்டிடங்களுக்கு இடையில் இருந்த நீண்ட குறுகிய சந்தில் தினமும் ஆடிய கிரிக்கெட் ஆட்டங்கள், வேலைக்காரிகள், தன் நாசிகள் சந்திக்கும் இடத்தில் அலைமோதிய சாலையின் கார நெடிகளும் சமையலறையிலிருந்து கமழ்ந்த தென்னிந்திய சமையல் மணங்களும் குறிப்பிடப்பட வேண்டும், மரணங்கள், தொலைக்காட்சி ஓசைகள், வானொலியில் ஒலித்த பாடல்கள், தென்னிந்தியாவில் மக்கள் தொகை நிறைந்த நகரமொன்றின் மத்திய வர்க்க குடியிருப்பு ஒன்றைச் சுற்றி நிகழும் சந்தடிகளின் நுண்விபரங்கள், எல்லாவற்றுக்கும் இடம் வேண்டும்.

ஏனெனில், வாசிப்பைச் சொல்வதானால், எந்த வாழ்வின் உறுப்புகளில் ஒன்றாய் வாசிப்பும் இருக்கிறதோ, அந்த வாழ்தலையும் விவரித்தாக வேண்டும். வாழ்தலோ ஒழுங்கற்றது, சத்தமானது, நூற்றுக்கணக்கான அத்தைகள், மாமாக்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், நண்பர்கள், பழக்கமானவர்கள் நெருக்கிக் குறுக்குவதுஅவர்கள் ஒவ்வொருவரும் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம், அவனது வாசிப்பைப் பாதிக்கலாம், வாசிப்பு முப்பட்டகத்தின் ஊடே அவர்கள் பிம்பங்களும் சிதறுண்டு போவதைச் சகித்துக் கொள்ள நேரலாம்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை எழுதுவது என்பது அடுத்தடுத்து அவசியமாகவும், அலைபாய்வதாகவும், ராட்சதமாகவும், அலுப்பூட்டுவதாகவும், சீரற்றதாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும், ஏன் ஒருகால் சிலிர்க்கக்கூடியதாகவும் இருக்கலாம்அனைத்துக்கும் மேல், அந்த மற்றொரு புத்தகத்தின் எழுத்தாளர் மீது அவன் தீர்த்துக் கொள்ளும் பூரண பழி வாங்குதலாகவும் இருக்கும். அடுத்தவரது ‘W’வுக்கு அவனது’ X’, அதற்கு துணையானது, அதன் பிரதிபிம்பமானது, இறுதியில் அதற்குச் செலுத்தும் அஞ்சலியானது அது. ஆனால் அதைச் செய்ய அவன் அத்தனை கருத்தோட்டச் சட்டகங்கள் , முறைப்படுத்தப்பட்ட க்ளைனாமென்கள் (Clinamens), கிரேக்கஇலத்தீன் பைஸ்குவயர் அமைப்பு, எல்லைகள், மீவெல்லைகள், ஃபேகோசைட்டேஷன்கள், விதிகள், முறைப்படுத்தப்பட்ட மீறல்கள் என்று அத்தனைக்கும் விடை கண்டாக வேண்டும்வஞ்சகமாக மறைக்கப்பட்டவற்றை வெளிப்படுத்துவதால் மட்டுமே அவன் அந்தப் புத்தகத்தை தோற்கடித்து, ஆச்சரியங்கள் எதையும் இனி எப்போதும் தன்னகத்தே கொண்டிராதமூடியபுத்தகமாய் அதை முடித்து வைக்க முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவனது மூதாதையர்கள் தொகுத்த வேறு சில விதிகள் பற்றியும் அவன் பேச வேண்டியிருக்கும், மலர்கள், சூழ்நிலங்கள், காலம், பருவம், பறவைகள், விலங்குகள், மரங்கள், நீர் நிலைகள், தொழில்கள், தெய்வங்கள், குலங்கள், இசைக் கருவிகள், உணவு வகைகள், சந்தம், அடி, என்ற வகையில் பல இலக்கண விதிகள். உணர்வுகளின் நுட்பமான வேற்றுமைகளையும், போரிலும் காதலிலும் மானுட நடத்தையை மிகைகளின்றி உரைப்பதற்கான விதிகளும், அவற்றை யாப்பதற்கான முறைகளும். பொருள், பாடுபொருள்கள், கதையாடல்கள் என்று கொண்டு செல்லும் செய்யுள்கள் மற்றும் சொற்றொடர்கள். முன்வரைவு அளிக்கப்பட்ட கூறுகள் கொண்ட சில கலவைகள், ‘சிறுபசுங்கால் குருகுபோன்ற குறியீடுகள், மானுட நிலை குறித்து, உணர்ச்சி நிலைகளை உணர்த்துதல் குறித்து, தளைகளற்ற பாவனைகள் கொண்ட எந்த ஒரு நவீன கவிதைக்கும் இணையான நவீனத் தன்மை கொண்ட பாத்திர விவரணைகள் குறித்து, ஆச்சரியப்படுத்தும் உளவியல் தரிசனங்களை அளிப்பது எவ்வாறு என்பது குறித்து,  எழுத வேண்டியிருக்கும். எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் (ரோலாண்ட் பார்த்துக்கு பதினொன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்) ஒரு பக்திக் கவிஞர், சங்க காதல் கவிதையின் ஆளுமை, சூழ்நிலம், மற்றும் கதைக்களத்தை மட்டுமல்ல, தமிழின் காமக் கவிதை மரபு முழுமையையும் பக்தி என்ற வேறொரு குறிப்புக்கான குறியீடாக எந்த சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தியதை எழுத வேண்டியிருக்கும். இது நன்றாக இருக்கும், ஆனால் அதிலும் அவனது போட்டியாளரின் கலைக்களஞ்சிய அறிவுடனும் அறிவுத் தேட்டத்துடனும் மோதும் ஆபத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆனால் இப்படியெல்லாம் பழி வாங்குவது சுலபமல்ல. புறப்பார்வைக்கு எப்படி தெரிந்தாலும் இது ஒருவன் ஆடும் விளையாட்டல்ல. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பிழையும், ஒவ்வொரு தரிசனமும், ஒவ்வொரு நம்பிக்கையும், ஒவ்வொரு நம்பிக்கையிழப்பும் சதிகார எழுத்தாளனாலும் அவனது துரோகத்தின் பங்காளி எதிர்கால வாசகனாலும் கணிக்கப்பட்டவை, கட்டமைக்கப்பட்டவை, தீர்மானிக்கப்பட்டவை.

அவனால் இதுவெல்லாம் முடியுமா என்று தெரியவில்லை. அவனது குறைந்த ஆற்றலுக்கும் ஆயுளுக்கும் அப்பாற்பட்ட ராட்சத திட்டமாய் இது முடியலாம், ஆனால் அந்தச் சனியன் எப்படி துவங்கும் என்பதை மட்டும் அவன் அறிவான்: “கோடை நாளொன்றில் ஒரு வாசகன்…” (If on a summer’s day a reader…)

*   *   *

முதலில், ‘வாழ்வுஎனும் நூற்றுக்கணக்கான கதைகளின் வேராய் இருக்கும் பிரதான கதையை சொல்லி விடலாம். முதல் அத்தியாயம், உண்மையான தெருக்களுக்கு மத்தியில் 11, ரூ சிமோன்க்ரூபெல்லியேரில் என்ற புனையப்பட்ட தெருவொன்றை புத்தகத்தின் கதைக்களனாய் நிறுவியபின் ஒரு பெண், இரண்டாண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டதாய் கருதப்படும் புதிர் படைப்பாளர் திரு கெஸ்பார் வின்க்லருக்கு உரிய (இவரை நாம் ‘W’ என்ற முந்தைய நாவலில் பார்த்திருக்கிறோம்) அபார்ட்மெண்டின் மீது ஒரு கண் வைத்திருக்கும் கட்டிட நிர்வாக இயக்குனரின் உதவியாளர், அவரது வருகையைக் குறிப்பிடுகிறது. அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் முடிவின்றி தொடர்ந்து மீண்டும் மீன்றும் நிகழவிருப்பதன் முன்னோட்டமாக நாவலின் துவக்கப் பகுதிகள் கெஸ்பார் வின்க்லர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வசித்த, பணியாற்றிய மூன்று அறைகளில் உள்ளவற்றை சுருக்கமாகப் பட்டியலிடுகிறது…. ஜிக்ஸா புதிர்களின் ஜெஸ்டால்ட் (Gestalt) என்றழைக்கப்படும் முழுநிலைக் கோட்பாடு குறித்த வினோதமான ஒரு முன்னுரை போக இதுவரை ஒரு சாதாரண துவக்கமாகத்தான் இருக்கிறது,  கெஸ்பார் வின்க்லர் இறந்து விட்டான், ஆனால் அவனது நீண்ட, கவனமான, பொறுமையாய் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் இன்னும் முடிவடையவில்லை,” என்ற அந்த அத்தியாயத்தின் மர்மமான கடைசி வாக்கியம்தான் போகிற போக்கில் நம்மைக் கொக்கி போட்டு உள்ளிழுத்துக் கொள்கிறது.

தொண்ணூற்று ஒன்பது அத்தியாயங்கள் மற்றும் நானூற்று தொண்ணூறு பக்கங்களுக்குப் பின்னர் அவன் பழி தீர்க்க யாரைக் குறி வைத்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்கிறோம். ‘X’ போல் திறந்திருக்கும் ஜிக்ஸா புதிர் ஒன்றின் வெற்றிடத்தில் ‘W’ போன்ற ஒரு பகுதியைப் பொருத்த முயற்சி செய்து கொண்டிருக்கும்போதுகெஸ்பார் வின்க்லர் அவருக்காக வடிவமைத்த புதிர்களில் நானூற்று முப்பத்து ஒன்பதாவது புதிர்அவர் இறந்திருப்பார் போலிருக்கிறது.

இளைஞனாக இருந்தபோது பார்ட்டில்பூத் தீர்மானித்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஐநூறு புதிர்களில் அதுவும் ஒன்று. தன்னிடம் இருந்த செல்வத்தின் அளவுக்கே அது ஈட்டக்கூடிய லாபங்கள் மீதான அசிரத்தையும் கொண்ட பார்ட்டில்பூத்தின் ஆணவம் இவ்வுலகு அத்தனையையும் சரி செய்யவோ விவரிக்கவோ விரும்புவதல்ல, மாறாய் திருத்திக் கட்டமைக்கப்பட்ட ஒரு துண்டத்தை மட்டுமே தன் கவனத்திற்கு உட்படுத்துகிறது. பெயரும் அதனுடன் தொடர்புடைய ஆளுமையும் மெல்வில்லின் பார்டில்பீ மற்றும் வலேரி லார்போவின் பார்னபூத் ஆகிய இரு பெயர்களின் கலவைச் சொல். இவ்வுலகின் தப்பவியலாத சீரின்மைக்கு எதிராய் பார்ட்டில்பூத் தன் வாழ்வு முழுமையையும், அதன் நிறைவுக்கு அப்பால் நோக்கம் எதுவும் இல்லாத, முன்யோசனையின்றி தீர்மானிக்கப்பட்ட விதிகளின் செயல்வரைவைச் சுற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறான். இந்தத் திட்டத்துக்கு ஒழுக்க, தர்க்க, அழகியல் விதிகளை வகுத்துக் கொண்டபின் பார்ட்டில்பூத் ஒரு செயல்வரைவை உருவாக்குகிறான்.

) 1925 முதல் 1935 வரையிலான பத்தாண்டுகள் அவன் வாட்டர் கலர் ஓவியங்கள் தீட்டும் கலை கற்றுக் கொள்வான்.

) 1935 முதல் 1955 வரை அவன் உலகெங்கும் பயணம் மேற்கொள்வான், பதினைந்து நாட்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வாட்டர்கலர் ஓவியம் தீட்டுவான். ஒரே மாதிரியான ஐநூறு கடற்காட்சிகள். ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்தபின் கெஸ்பார் வின்க்லருக்கு அனுப்புவான், அவற்றை அவர் ஒரு சன்னமான மரப் பலகையில் ஒட்டியபின் அதை 750 துண்டங்கள் கொண்ட ஜிக்ஸா புதிராக வெட்டுவார்.

) 1955 முதல் 1975 வரை, பிரான்ஸ் திரும்பியபின், அவன் மேற்கூறிய ஜிக்ஸா புதிர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் விடை காண்பான். ஒவ்வொரு புதிரும் முடிந்தபின் அந்த கடற்காட்சி ரீடெக்ஸ்ச்சர் (re-texture) செய்யப்படும், அதன் பின்னால் இருக்கும் சன்னமான மரப்பலகையிலிருந்து பிரித்து எடுக்கப்படும், எங்கே இருபது ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதோ, அங்கே டிடர்ஜெண்ட் கலந்த தண்ணீரில் கழுவப்பட்டு, சுத்தமான, கறையற்ற வாட்மன் பேப்பராக வெளியே எடுக்கப்படும்.

ஆக, ஐம்பது ஆண்டு காலமாய், அதுவொன்றே செயலாகவும் வாழ்வின் விசையாகவும் இருந்த ஒருவரால் நிகழ்த்தப்பட்ட செயல்திட்டம் எந்தச் சுவடும் இல்லாமல் மறையும். ‘வாழ்வின் நூற்றுக்கணக்கான கதைகளில் ஒரு சில இந்தக் கதையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டவர்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றன. கதைப்போக்கில், சுவடின்றி மறையும் பசைக்கான தேடல் பார்ட்டில்பூத்தை ஸ்மாட்ஃப் மற்றும் மொரல்லெட்டிடம் இட்டுச் செல்வது இதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் எந்த ஒரு பாத்திரத்திடமிருந்தும் அதன் மூதாதையர்களுக்கோ சந்ததியினருக்கோ அல்லது பழக்கப்பட்டவர்களுக்கோ (எடுத்துக்காட்டுக்கு, மொரல்லேட்டில் தொடங்கி, விஞ்ஞானி குஸ்ஸருக்கும் அவரிடமிருந்து ஜெர்மனிய இசையமைப்பாளர் குஸ்ஸருக்கும்), ‘வாழ்வுஅதற்கே உரிய பாண்டியாட்ட விதிகளின்படி தாவிச் செல்கிறது.  அது போதாதென்று, பார்ட்டில்பூத்துடன் நேரடி தொடர்பு கொள்ளாத கிராடியோலெட் போன்ற பாத்திரங்களுக்கும் (கிராடியோலெட்கள் அந்த இடத்தின் பெரும்பான்மை பங்கு  கொண்ட உரிமையாளர்கள்) ஏன் அவர்களின் வம்சாவளிக்குக்கூட (அதன் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கதையுண்டு) கிளைத்துவாழ்வுதன்னை நிரந்தரப்படுத்திக் கொள்கிறது. பெருந்தீனிக்காரனின் ஆனந்தத்தோடு அது அபார்ட்மெண்ட் அமைப்பை, மரச் சாமான்களை, வால்பேப்பர்களை, லினன் உறைகளை, உடுப்புகளை, ஓவியங்களை, புத்தகங்களை, பழைய பொருட்களை, ப்ரோஷர்களை, குறுக்கெழுத்துப் புதிர்களை, இருபதாம் நூற்றாண்டு அடுக்ககத்தில் காணக் கிடைப்பவற்றில் ஆர்வம் உள்ளதையெல்லாம் அட்டவணைப்படுத்துகிறது.

எல்லாவற்றையும்விட ஒரே பெரிய காரியமாக இருக்கும் பார்ட்டில்பூத், தன் பேரார்வத்தில், பயணத் திட்டங்களை மிகக் கவனமாக வடிவமைக்கிறான், ஐம்பது ஆண்டு கால செயல்திட்டத்தின் மிகச் சிறு விபரங்களைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்கிறான். ஆனால் எல்லாவற்றையும் அவனால் திட்டமிட முடிவதில்லை. அவனது பாதுகாப்புக் கவசத்தில் சில குறைகள் இருக்கின்றன, அவற்றை அகழ்ந்தெடுப்பதில் இந்த நாவல் கொள்ளும் உற்சாகம் வெளிப்படையான ஒன்று. மாதத்துக்கு இரண்டு என்ற கணக்கில் நானூற்று எண்பது ஓவியங்கள், அல்லது, இரண்டு வாரங்களுக்கு ஒரு ஓவியம் என்ற கணக்கில் ஐநூற்று இருபது என்று கொள்வது சுலபமாக இருக்கும், ஆனால் குத்துமதிப்பாக ஐநூறு வாட்டர் கலர் ஓவியங்கள் என்ற இலக்கு வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு ஓவியத்தை வரையவும் எடுத்துக் கொள்ளும் நேரம் வேறுபடுகிறது. அது போலவே வாழ்வின் விபத்துகள், பயணம் மற்றும் சுமைவழியின் அசம்பாவிதங்கள் வேறு சில ஒழுங்கின்மைகளுக்கு காரணமாகின்றனகடிகாரத்தின் உள்ளே உள்ள தூசுத் துகள்கள் அதைச் சிறிய அளவில் பாதிக்கின்றன (எல்லாவற்றையும் மீறி, ஐநூறு புதிர்களில் நானூற்று முப்பத்து எட்டு புதிர்களை பார்ட்டில்பூத் விடுவித்து விடுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்). அனைத்திற்கும் அப்பால், பார்வையிழப்பது, மரணமெய்துவது போன்ற விதியின் கூக்லிக்களை அவனால் முன்னனுமானம் செய்ய முடிவதில்லை. அதே போல் அவன் கெஸ்பார் வின்க்லர் என்ற கலைஞன்/ புதிராக்குபவனது திறமையையும் குறைத்து மதிப்பிடுகிறான்பார்ட்டில்பூத்தின் சுகவீனம் மற்றும் ஆயுளின் உதவியோடும், தேர்ந்த கலை, உத்தி, புத்திசாலித்தனம் மற்றும் சிறுபிள்ளைத்தனத்துடனும் அவனது புதிர் விடுவிக்கும் திறன்களைத் தோற்கடித்து விடுகிறான். ஒரு வகையில் இது, பயனின்மை மீது கலை கொண்ட வெற்றி. தன் நண்பனும் போஷகனுமான பார்ட்டில்பூத்தின் அர்த்தமற்ற திட்டத்தை தீய நோக்கத்துடன் மோசம் செய்ய கெஸ்பார்டைத் தூண்டியது எது எனபதை நாவல் வாசகரிடம் சொல்வதேயில்லை, இது கலையின் நதிமூலம் அடிப்படையில் அறியப்பட முடியாதது என்று எண்ண வைக்கிறது. பிறர் அனைவருக்கும் அற்பமாகவும் பயனற்றதாகவும் இருக்கக்கூடிய ஒற்றை இலக்கை நோக்கி கணிசமான காலத்தையும் நேரத்தையும் அர்த்தமற்ற ஆர்வங்கள் போல் தோன்றும் உணர்வுகளால் செலவு செய்யும் பாத்திரங்களைப் போன்றவர்களைவாழ்வில்நிறைய பார்க்கிறோம். எலிசபெத் பியூமோண்ட்டைக் கண்டுபிடிக்க தன் வாழ்நாள், செல்வம் மற்றும் அறிவு அத்தனையும் அர்ப்பணித்த ஸ்வீடிஷ் தூதர், தன் மகனை தானறியாமல் குளியல் தொட்டியில் மூழ்க விட்டவர், அதனால் தன்னை மாய்த்துக் கொண்ட மனைவியையும் இழந்தவர் நினைவுக்கு வருகிறார். அல்லது, கணப்பித்து நிலையில் வெற்றிகரமாய் நடந்து கொண்டிருந்த உணவகத்தை விட்டு வெளியேறி, நடிகனாகும் ஆசையில் கைக்கும் வாய்க்குமாக வாழ்ந்து உலகெங்கும் பயணம் செய்து முடிவில் மீண்டும் சமையல்காரன் ஆகும் ஷெஃப் ஹென்றி ஃபிரெஸ்னல். அல்லது

பேச வேண்டியதையெல்லாம் பேசியாயிற்று, இனி நாம் கதைக்குப் பின்னுள்ள கதையைப் பற்றி பேசலாம்அது நாவலின் கட்டமைப்பைப் பற்றி பேசுவதாகும், அது முதலிலேயே பெரெக் தனக்கு வைத்துக் கொண்ட கட்டுப்பாடுகள் திட்டமிட்ட வகையில் எப்படி வளர்ந்தன என்பதைப் பேசுவதாகும். ஒரு நாவலை அணுகச் சிறந்த வழி அதை ஒரு புதிர் போல் எடுத்துக் கொண்டு அதனுடன் விளையாடுவதாகும் என்று பெரெக் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இந்தக் கதை ஜிக்ஸா புதிரால் கட்டமைக்கப்பட்டது என்றாலும் நாம் குறுக்கெழுத்துப் புதிரை மறக்க முடியாது. ‘வாழ்க்கைசொற்களாலான புதிர் என்பதால் மட்டுமல்ல, அதன் அத்தியாயங்களும் கட்டங்களாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டமும் ரூ சிமோன்க்ரூபெல்லியேர் என்ற புனை கட்டிடத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் ஓர் அறைக்கு இணையாகும். ஒவ்வொரு அத்தியாயமும் அந்த அறையில் உள்ளவற்றை விவரிக்கின்றது, அது மனிதர்களாகவும் இருக்கலாம், பொருட்களாகவும் இருக்கலாம். உயிரற்ற இந்தப் பொருட்கள், அவை பெறப்பட்ட வரலாறு, அவற்றுக்கும் அவற்றின் உடமையாளர்களுக்கும் உள்ள உறவு முதலியவை விவரிக்கப்படும் ஒழுங்கிசைவில் விருப்பு வெறுப்பின்மையின் ஒரு வகை கவித்துவம் தொனிக்கிறது. (நாம் நம் குளியலறைக்குச் சென்று அந்த அறையின் அமைப்பு, அதில் உள்ள பொருட்களைக் கண்ணாடி முன் நின்று கொண்டு விவரித்துப் பார்த்தால் இந்த பிரமிப்பூட்டும் செயல் எவ்வளவு கடினமானது என்பது புரியும்). குறுக்கு வெட்டுத் தோற்றம் பத்துக்கு பத்து என்ற அளவில் உள்ள ஒரு செஸ்போர்ட் என்று வைத்துக் கொண்டால், ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் செல்வது (அல்லது ஓர் அத்தியாயத்தில் இருந்து மற்றொன்றுக்குச் செல்வது), செஸ் ஆட்டக் குதிரை நகர்வது போலிருக்க வேண்டும் என்ற விதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு வகையில்வாழ்க்கையே மகத்தான ஒரு பச்சைக்குதிரை விளையாட்டுதான்.  இந்த விதி போக, ஒவ்வொரு அத்தியாயமும் நாற்பத்து இரண்டு விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது, இந்த நாற்பத்து இரண்டும் ஒரு பட்டியலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டவை. எண், வயது, பாலினம், செயல், அறை அலங்காரம் போக, அத்தியாயத்தின் நீளம், சுட்டுதல்கள், மேற்கோள்கள் போன்ற இலக்கண கூறுகளும் இந்த விதிகளில் அடக்கம். இந்த நாற்பத்து இரண்டு கூறுகளும்கூட பத்து மாற்றுத் தேர்வுகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விரிவான இந்தக் கட்டுப்பாடுகளையும் அதையொட்டி இந்தப் பிரதி வளர்ந்த விதத்தையும் கல்விப்புல ஆய்வு வெகுவாக ஆராய்ந்திருக்கிறது. பெரெக்கும்கூட இதற்கு துணை நின்று உதவியிருக்கிறார். இந்தக் கட்டுப்பாடுகளின் அனைத்து கூறுகளையும் பேசுவதற்கான இடம் இதுவல்ல, ஆனால் இவற்றோடுகூட அறிந்தும் அறியாமலும் நிகழும் விதிவிலக்குகள் பற்றி அடிக்கோடிட்டுக் கூற வேண்டும். பெரெக்கே இதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்– “நீ சில கட்டுப்பாடுகள் விதிக்கும்போது எதிர்க்கட்டுப்பாடுகளுக்கும் அதில் இடம் தந்தாக வேண்டும்அது இறுக்கமாக இருக்கக்கூடாது, விளையாட்டுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், அது சிறிது கிறீச்சிட்டே நகர வேண்டும்?
??.
இந்த அமைப்பு முழுப்பொருள் தருவதாக இருக்கக்கூடாது: எபிக்யூரஸின் அணுக் கோட்பாட்டில்  வரும் க்ளைனாமேனைப் போல்  (அனுமானிக்க முடியாத வகையில் அணுக்கள் திடீரென்று திரும்புவதைக் குறிக்கும் பதம்) துவக்கத்திலேயே சமகுலைவு இருப்பதாலேயே உலகம் இயங்குகிறது. ‘வாழ்வின் சீரான இயந்திரத்தில் அப்படிப்பட்ட ஒரு கிறீச்சிடல் அதன் தொலைந்த அத்தியாயம்நூறு அபார்ட்மெண்ட்கள் இருந்தாலும் தொண்ணூற்று ஒன்பது அத்தியாயங்களே உள்ளன.  அறுபத்து ஐந்தாம் அத்தியாயத்தில் வரும்சின்னப் பெண்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் பெரெக். அறுபத்து ஐந்தாம் அத்தியாயம் தகரத்தால் செய்யப்பட்ட ஒரு பிஸ்கட் பெட்டியில் முடிகிறது, சதுர வடிவான அதன் மூடியில் ஒரு சிறு பெண் பெட்டிபெர் (petit-buerre) என்றழைக்கப்படும் பிஸ்கோட்டின்  ஓரத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாள். வாழ்வின் கட்டம் கட்டப்பட்ட களங்கள் அல்லது பெட்டிபெரின் இடது பக்க கீழ் மூலை அறுபத்து ஐந்தாம் அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மோரூவின் அறைக்குக் கீழிருக்கும் பாதாள அறை. புத்தகத்தில் விவரிக்கப்படாத அந்த அறையை இந்தப் பெண் நிஜமாகவே மென்று தின்று விட்டாள்.

இது எல்லாம் அருமையான விளையாட்டாக இருந்தாலும் நீங்கள் மற்ற எந்த நாவலையும் போலவேவாழ்க்கையை துவக்கம் முதல் முடிவு வரை வாசிக்கலாம். அல்லது அதன் மாபெரும் அட்டவணையைப் பயன்படுத்தி உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு பாத்திரத்தின் கதையை வெவ்வேறு வரிசையில் வரும் அத்தியாயங்களை அடுத்தடுத்து வாசித்து அறியலாம். அதே சமயம், எந்த ஒரு பகுதிக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தர வேண்டாம் என்ற முன்னுரையின் எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொள்வதும் நல்லது: “பகுதிகள் வடிவத்தைத் தீர்மானிப்பதில்லை, வடிவமே பகுதிகளைத் தீர்மானிக்கிறது”.  இதே அடிப்படையில் நாம் முன்னுரையையும் நாவலின் மற்ற எந்த ஒரு அத்தியாயத்தையும் போலவே கருத வேண்டும், பிற அத்தியாயங்களை விட அதற்கு கூடுதல் மதிப்பு அளிக்கக்கூடாது (நாவலில் அது இரு முறை வருகிறது, ஒரு முறை முன்னுரையாகவும் மறு முறை நாவலின் ஒரு பகுதியாகவும்). சூழலிலிருந்து வாழ்வும் கலாசாரமும் தோன்றுவது போல் தடைகளை நாவலும் அதன் இழைவமைதியும் தோன்றும்நடப்புநிலவரமாய் எடுத்துக் கொள்ளலாம்.  விதிகள் நடப்பு நிலவரம் என்றால் எதிர்விதிகளும் அப்படியே. பார்ட்டில்பூத்தின் சிறந்த திட்டம் வீணாகிறது, ஆனால் அதுவும்கூட அவனது திட்டத்தை உள்ளடக்கிய பெரெக்கின் மாபெரும் திட்டத்தின் அங்கமே. வேறொரு பிரதியில் இதை, வாழ்வுக்கும் பயணர் கையேட்டுக்கும் இடையிலுள்ள, நீ உருவாக்கிக் கொண்ட ஆட்ட விதிகளுக்கும், நல்ல வேளை, உன் ஒழுங்குபடுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து சீரழித்து, குடிமுழுகச் செய்யும் வாழ்வின் வலிப்புக்கும் இடையிலுள்ள, தவிர்க்க முடியாத முரண், என்று பெரெக் தெளிவுபடுத்துகிறார்

                                                                           *   *   *

எப்படி துவங்கியிருந்தாலும் இப்படிதான் முடிந்திருக்கும். இதுவாவது விதிக்கப்பட்ட முடிவாக இருக்கும். ஆம், இது விளையாட்டாய் முடிய வேண்டும், புதிராய், முட்டாள்தனமாய், விரும்பிய பக்கமெல்லாம் திரும்பிப் பறக்கும் தாத்தாப் பூச்சி போல் மெலிதாய். ஆம், இந்தக் கட்டுரை போல் கனமானதாய் இல்லாமல், மெலிதாய், பெரெக்கை மகிழ்விக்கக்கூடிய அஞ்சலி போல்: ஆம், இது இப்படியும் முடியலாம்:

டப்யா (Dubya) என்ற பெயர் கொண்ட ஒருவன் பயனர் கையேட்டைப் படிக்கும்போது அறுபதுகளில் தன் குழந்தைப் பருவத்தில் பயன்படுத்திய பொருட்களைப் பற்றிய நினைவுகளைக் குறித்த கதையாய் தன் வாழ்வைக் கனவுற்றவாறே தூங்குகிறான்”.

இதில் சிறிது ஏமாற்று வேலை இருக்கிறது, நான் எனக்கு விதித்துக் கொண்ட விதிகளை மீறும் தேவையற்ற சொற்கள் நிறைய இருக்கின்றன. இதைவிடச் சிறந்த முடிவு சாத்தியமென்றால் சொல்லுங்கள்.

அதற்கு முன் இந்த நாவல்களைப் படித்து விடுங்கள்.

—————————

Sources / Phagocitations/ Further Reading:

Things A Story of the Sixties with A Man Asleep, Georges Perec, Harvill, 1999
W or The Memory of Childhood, Georges Perec, David R Godine 1988
Life A User’s Manual, Georges Perec, David R Godine 1987
Review of Contemporary Fiction, Dalkey Archive, Spring 2009
Georges Perec, Traces of his Passage, Paul Schwartz, Summa Publications, 1988
Poems of Love and War, A.K. Ramanujan, Oxford University Press, 1985
Mythologies, Roland Barthes, Hill and Wang, 2013

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.