ஆழத்தில் மிதப்பது

1
ஈரத்துண்டின் நுனிநூற்கற்றைகளில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ அந்த நுனி தான் நீரினை உற்பத்தி செய்வதுபோல. யாருக்கும் தெரியாமல் எட்டிப் பார்த்து பிறர் கண்படும் முன்னே சட்டென கடந்து மற்றோர் இடம் மறையும் சிறுவன் போல நீர்த்துளிகள் துண்டின் நுனியில் இருந்து எட்டிப்பார்த்த மறுகணமே மண்ணுக்கு வந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நீர் சொட்டியதால் மண் தரையில் சிறு சிறு குழிகள் விழுந்திருந்தன. அந்த துண்டு போலவே மேலும் சில உடைகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் இருந்து அதிகமாக நீர் சொட்டவில்லை. கூரிய முனைகள் இல்லாதது காரணமாக இருக்கலாம். இன்னும் பனி விலகியிருக்கவில்லை. ஹோண்டா ஆக்டிவா முற்றத்தில் இல்லை. விடியலிலேயே அம்மா வெளிச்சென்றுவிட்டாள் போல. நான் தளர்வாக உணர்ந்தேன். இன்னும் துப்பாத வாய்நீர் கசந்தது. குமட்டலுடன் துப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தபோது ரம்யா குளிக்கப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தாள்.
“என்னடா அம்மா கோவிலுக்கு போயிட்டு போல. நீ பாத்தியா அது போனப்ப”
“இல்லக்கா”
“அப்படியென்ன வீட்ல ஆள் எந்திரிச்சு போறது கூட தெரியாம தூக்கம் உனக்கு” என்றாள் சற்று எரிச்சலுடன். அவள் பணி முடிந்து வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளை பார்த்து வைத்துவிட்டு படுக்க பன்னிரெண்டாகிவிடும். நான் ஒன்றும் சொல்லவில்லை. நினைத்தது போலவே வாசலுக்குப் போனவள் முகத்தில் கோபத்துடன் திரும்பி வந்தாள்.
“ஒங்கம்மாவுக்கு இந்த வேலையெல்லாம் பாக்காம போவத்தெரியாதா? நான் எதுக்கு இருக்கிறனாம். நான் பாத்து வெச்சுட்டு கெளம்ப மாட்டனா? பைப்படில லைட்ட கூட போட்டுக்க தோணாது உங்கம்மாவுக்கு. பூச்சி பொட்டு எதாவது கடிச்சு மண்ட பூச்சி மாண்டு போச்சுன்னா மாத்தாந்தாய் மொவ கொன்னுபுட்டான்னு ஊர்ல பேசுறதுக்கு இந்த கெழவி இதெல்லாம் பண்ணுதா” என்றாள்.
நான் பேசாமல் நின்றேன். அக்கா என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறாள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆண் என்பதால் நான் சீண்டப்பட வேண்டும் என்றும் அச்சீண்டலின் வழியாக நான் புண்பட்டு அவளை திட்ட வேண்டுமென்றும் அதன் வழியாக உருவாகும் விரிசலின் வழியாக என்னுள் மெல்ல நுழைந்து தன் கஷ்டங்களைச் சொல்லி என்னிடம் அழ வேண்டும் என்றும் தான் அவள் விழைகிறாள். ஆனால் அது இந்த வரிசையில் தான் நடக்க வேண்டும் என்று அவள் நினைப்பது தான் பிரச்சினை. என்னால் அவள் மீது கோபப்பட முடியாது.
சில நிமிடங்கள் முறைத்துக் கொண்டு நின்றவள் “பால் வந்துச்சா” என்றாள்.
“ஃப்ரிட்ஜ்ல இருக்கு. எனக்கு டீ வேண்டாம்” என அம்மாவிடம் சொல்வதையே பழக்கத்தால் சொல்லிவிட்டேன்.
“ஏன் உங்கம்மா போட்டு கொடுத்தாதான் உனக்கு உள்ள எறங்குமா” எனக்கேட்பாள் என்று நினைத்தேன்.
“சரி காஃபி போடவா?” என சிறுவனிடம் கேட்பதைப் போல அவள் கேட்டபோது “ம்” என்பதைத்தவிர வேறேதும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டேன். நிச்சயம் மிக அழகான புன்னகையொன்று என்னை நோக்கி வீசப்பட்டிருப்பதை நான் நிமிர்ந்திருந்தால் கண்டிருக்க முடியும். அந்த புன்னகையின் சுவை காஃபியில் இருந்தது.
“லீவ் என்னிக்கிடா முடியுது” என ஈரக்கூந்தலை முடிபோட்டுக் கொண்டு கேட்டாள்.
“பதினேழாம் தேதிக்கா. இந்த வருஷம் ஸ்காலர்ஷிப் வந்திடும்” என்றேன். இரண்டாவது தகவல் அவளுக்குள் மீண்டும் கோபத்தை நிரப்புவது தெரிந்தது.
“அத வாங்கி உங்கம்மாகிட்ட கொடு. என்ட்ட ஏன் சொல்ற” என்றாள்.
அக்கா நீ என்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என் மீது உனக்கிருப்பது அன்பா வெறுப்பா? நீ அம்மாவை துளியும் வெறுப்பதில்லை. நம் அப்பாவை மயக்கி திருமணம் செய்து கொண்டவள் என்று அவளை நீ திட்டியபோது கயிற்றை எடுத்துக் கொண்டு தூக்குமாட்டிக்கொள்ள சென்றவளை பிடரி முடியைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருக்கிறாய். அன்றிரவே உண்ணாமல் படுத்திருந்தவளை உதைத்து எழுப்பி மிரட்டி சாப்பிட வைத்திருக்கிறாய். நான் உறங்கிவிட்டேன் என்ற நம்பிக்கையில் அன்றிரவு அம்மாவைக் கட்டிக்கொண்டு சத்தமாக ஏங்கி ஏங்கி அழுதாய். பின்னர் அவள் மடியிலேயே விம்மி விம்மி அழுதுகொண்டு உறங்கிப்போனாய். எனக்குத் தெரியும் அவள் மீது உனக்கிருப்பது என்னவென்று? ஆனால் என் மீது உனக்கிருப்பது என்ன? என்னை நீ தொட்டுப் பேசியதில்லை. தம்பி என்று அழைத்ததில்லை. அப்பாவின் முகம் எனக்கு இருப்பது உன்னை சங்கடப்படுத்துகிறதா? பெரியம்மா கூட அம்மாவை ஏற்றுக் கொள்ளத்தானே செய்தார். பிறகு ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறாய்? வெறுக்கிறாயா? அதையாவது நான் உறுதியாக சொல்லும் வாய்ப்பை எனக்கு நீ அளித்திருக்கிறாயா? இந்த முகத்தை நோக்கி ஏன் உன்னால் முழுதாகக் கனிய முடியவில்லை?
“என்னடா பாத்துட்டே நிக்கிற. வெளில போறதுன்னா போயிட்டு வந்துடு. நான் ஒன்பது மணிக்கு கெளம்பணும். உங்கம்மா சாய்ங்காலந்தான் வரும். மதியண்ணன் கடைல மீன் வாங்கிட்டு மாங்காயும் தனிமிளகாத்தூளும் வாங்கிட்டு வந்துடு. சமைச்சி வெச்சிட்டு போயிடறேன்” என்றாள்.
நான் வேண்டாம் என்றேன்.  முறைத்தாள். நான் கடைக்கு கிளம்பினேன்.
2
 
“சந்தானம் உன்னோட பயலாஜிகல் ஃபாதர் இல்லையா ரமி?”
சந்தோஷ் இக்கேள்வியை என்னிடம் கேட்டபோது கடுமையான கோபத்துக்கு ஆளானேன். சில நாட்களில் நானே சொல்ல நினைத்திருந்தது தான். ஆனால் என்னைப் பற்றி யாரிடம் பேசியிருப்பான் என மனம் பரபரத்தது. அவனிடம் ஒரு இனிய ரகசியமாக இருப்பதையே நான் எப்போதும் விரும்பி வந்திருக்கிறேன். அலுவலகத்தில் என்னைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை மிக எளிதாக என்னால் கணிக்க முடியும். அது சந்தோஷுக்கு மட்டும் நன்றாகத் தெரியும். அங்கு நான் தான் பேசுபொருள் என்று எனக்குத் தெரிந்த பிறகு அவனைப் பார்க்கும் போதெல்லாம் சங்கடமாக நெளிபவனைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கும். ஆனால் என்னைப் பற்றி சந்தோஷ் யாரிடமும் பேசியதில்லை. அவன் என்னை எவ்விதத்திலும் காட்சிப் பொருளாக்க விரும்பியதில்லை. அவனுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட மிக அணுக்கமான பாவனைகள் வழியாக கேட்டுப் பார்த்திருக்கிறேன்.
மகேந்திரன் அப்படிப்பட்டவன். துளியும் தன் மீது நம்பிக்கை இல்லாதவன். அவனை நோக்கி பெரும்பாலும் எந்த பெண் விழிகளும் திரும்பாது. சந்தோஷுடைய ஒவ்வொரு அசைவும் என்னுடம் வேலை செய்கிறவள்களை அதிர்வடையச் செய்யும் என்று எனக்குத் தெரியும். அவன் சிரிக்கும் போது யாருக்கேனும் உதவும் போது நிம்மதியிழந்து நிற்கிறவள்களை மனதில் ஒரு வக்கிரமான நிறைவுடன் கடந்து செல்வேன். அவனுக்கு மகேந்திரன் எப்படி இவ்வளவு அணுக்கமான நண்பனாக இருக்கிறான் என நான் பலமுறை குழம்பியிருக்கிறேன்.
சந்தோஷிடம் கேட்டபோது “அவன் மட்டுந்தாப்பா என் கேரக்டருக்கு சூட் ஆவான்” என்று சொன்னான்.
“ஏன் நீ இவளுங்க முன்னாடி சீன் போட அந்த டம்மி தான் சூட் ஆகுதா” என்றேன்.
அவன் குழம்பி அதிர்ந்தது எனக்கு வித்தியாசமாக இருந்தது. உள் உதட்டின் சிவப்பு தெரிவது போல அவன் வாய் மெல்லப் பிரிந்தது. குழந்தையைப் போன்ற தோற்றம். உணவறையில் யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு அச்சிறிய உதடுகளில் என் உதடுகளை ஒற்றி எடுத்தேன். என் முத்தங்களை அவன் எப்போதும் பொருட்படுத்துகிறவன் கிடையாது. அவன் முகத்தில் குழப்பத்தின் கோடுகள் மறைந்திருந்தன. ஆனால் நான் அப்படி கேட்டதை அவன் இன்னமும் நம்பவில்லை.
“அவனப்பத்தி உனக்கு தெரியாது ரம்யா” என்றான் விருப்பமில்லாத தொனியில்.
“எனக்கெதும் தெரிய வேணாம்” என்றேன்.
அவ்வளவு தான் மகேந்திரனைப் பற்றி எனக்குத் தெரிந்தது. ஒருநாள் அவர்கள் இருவரும் காலையில் அலுவலகத்தில் ஒன்றாக நுழைந்த போது சந்தோஷின் முகம் சற்று முன் அழுதிருப்பதை தெளிவாகவே காட்டிக்கொடுத்தது. பற்களை இறுக்கிக் கொள்ளுமளவு கோபம் தலைக்கேறியது. அவன் என்னிடம் அழுததேயில்லை என்றெண்ணி எனக்கு அழுகை வந்தது.
சற்றும் தாமதிக்காமல் சி.பி.யூவிற்கு உயிர்கொடுக்க குனிந்தவனிடம் நெருங்கிச் சென்று பேனாவை கீழே போட்டுவிட்டு குனிந்து எடுக்கும் போது “நீங்க ரெண்டு பேரும் ஹோமோசெக்ஷுவல்ஸா” என்று கேட்டுவிட்டு நகர்ந்து விட்டேன். அவன் தடுமாறிய கை மேஜையைப் பற்றுவதை பார்த்தேன். சில நாட்கள் சந்தோஷ் என்னுடன் பேசவில்லை. மகேந்திரனிடமும். அந்த நாட்களில் ஒருமுறை தான் மகேந்திரனை நெருங்கிச் சென்று பேசினேன். நான் பேசுவதே அவனுக்கு பெருமையை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவனது கோமாளித்தனமான உடல்மொழி காட்டிக்கொடுத்தது. அவன் அதை கம்பீரம் என எண்ணியது எனக்கு எரிச்சலூட்டியது.
இவ்வகை ஆண்களிடம் பேச சில எளிய வழிமுறைகள் உண்டு. முதலில் அவர்களிடம் ஏகோபித்த உரிமையை எடுத்துக் கொள்வதைப் போல நடந்து கொண்டாலே விழுந்து விடுவார்கள். அப்படி விழாமல் இருப்பவர்களே சீண்டுகிறார்கள். சந்தோஷ் என்னை உச்சமாக சீண்டியவன். மகேந்திரனிடம் “சந்தோஷ் உங்களுக்கு ரொம்ப க்ளோஸ் போல” என்றபோது இவ்வகை ஆண்களிடம் உருவாகும் அதே “நம்மை வைத்து அவனை வளைக்க நினைக்கிறாளோ” என்ற சந்தேகம் அந்த உயிரினத்திடம் தோன்றியது.
“ம் க்ளோஸ் தான். ஆனா அந்த வேர்ட யூஸ் பண்ண எனக்கு சம் ஹெசிடேஷன்ஸ் இருக்கு”.
அற்புதமான ஒன்றை முடிச்சுமிக்க ஒன்றை சொல்லிவிட்டோம் என்று அந்த உயிரி மகிழ்வடைந்தது. அதை அப்படியே ஆமோதித்து வியப்பவள் போல “ஏன்?” என விழி விரித்தேன்.
“என்னால யார்கூடவும் க்ளோஸா இருக்க முடியும்னு தோணல. சந்தோஷ் அவனப்பத்தி எங்கிட்ட எல்லாத்தையும் சொல்வான். நான் அவனோட காதுகள்னு வேணா சொல்லலாம். எனக்கு அவன் க்ளோஸ் தான். நான் அவனுக்கு இல்லை”.
என் எதிரே நிற்பதை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. சந்தோஷ் என்னிடம் சொல்லாத பல சிக்கல்களை அதனுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான். வீட்டினருடன் இருக்கும் ஒவ்வாமை தனியாகப் பிரிந்து வரவேண்டிய கட்டாயம் அடிக்கடி நோயில் விழும் அம்மா என பலவற்றை சொல்லியிருக்கிறான். ஆனால் என்னிடம் இதையெல்லாம் அவன் சொல்லி இருந்தாலும் நான் இவற்றை கண்டு கொண்டிருக்கப் போவதில்லை. ஒரு வழியாக உயிரியிடமிருந்து சந்தோஷ் என்னைப் பற்றி ஏதும் சொன்னதில்லை எனத்தெரிந்து கொள்ள முடிந்தது. அவ்வுயிர் என்னை கவர்ந்து விட முழு முயற்சியுடன் முயன்று கொண்டிருந்தது எனக்கும் பாவமாகவே இருந்தது.
அவன் மீண்டும் பேசத்தொடங்கிய சில நாட்களிலேயே இந்த கேள்வியை கேட்டு விட்டான்.
“ஆமா ஐ வாஸ் அடாப்டட் பை தெம்” என்றேன். என் குரல் லேசாக நடுங்கியது. தம்பியின் நினைவு வந்தது. சமைத்து வைத்த பின் போய் வருகிறேன் என்றுகூட அவனிடம் நான் சொல்லவில்லை என்பது மனதைக் குத்தியது.
3
உறங்கிக் கொண்டிருக்கிறவளை பார்த்தபோது ஆற்றாமையாகத் தான் இருந்தது. இருபத்தேழு வயதாகப் போகிறது. ஆனால் திருமணம் குறித்து அவள் யோசித்துப் பார்த்ததாகவே தெரியவில்லை. எனக்கு சந்தானத்தை மணம் முடித்து வைத்தது ரம்யா மேல் அவருக்கு ஏற்படத் தொடங்கிய மெல்லிய மனவிலக்கத்தால் தான் என்று ராஜாத்தி அக்கா சொல்லி இருக்கிறாள்.எங்கள் திருமணத்தின் போதே எட்டு வயதுப் பெண்ணான ரம்யாவுக்கு  அவள் தத்தெடுக்கப்பட்டவள் என்பது தெரிந்திருந்தது. இருந்தும் ராஜாத்தி அக்காவிடம் அவளுக்கிருந்தது முழுமையான அன்புதான். முழுமையான அன்பென்பது ஒருவகையான பதற்றமின்மை என எனக்குத் தோன்றியிருக்கிறது. எடுத்துக் கையாளக்கூடிய பொருள் போலவே அது இருக்க முடியும் என நான் நம்பினேன்.   அர்ஜுன்  பிறந்த பிறகு என்னிடமும் அவனிடமும் கூட இவருக்கு அந்த மனவிலக்கம் உருவாகத் தொடங்கிவிட்டது. அக்கா என்னைப் போல அல்ல. ரொம்பவும் அழகு. அர்ஜுன் பிறந்த பிறகு அவர் என்னுடன் இருந்த நாட்கள் சொற்பம். அதிலும் ஏதோ கழிவறைக்குள் வந்துபோய் கால் கழுவிச்செல்லும் அவசரம் கொள்வார் என்னிடம். ஆனால் அக்காவுடன் அவர் அப்படி இருக்கவில்லை. அக்கா மாலைகளில் குளித்துவிட்டு அலங்கரித்துக் கொள்ளும் போது மட்டும் அவளை தீவிரமாக வெறுப்பேன். ஆனால் எல்லாம் புரிந்தவள் அந்த என் வெறுப்பை மட்டும் புரிந்து கொள்ளாதது போல நடிப்பது எனக்குள் மேலும் துவேஷத்தை நிறைக்கும். அக்கா நோயுற்று படுத்தபோது ரம்யாவுக்கு பதினான்கு வயது. வயதுக்கு வந்துவிட்டிருந்தாள். இவனுக்கு ஆறு வயது. அவளுடன் படுத்துக் கொள்ள முடியாமல் ஆனபோது என்னை அதிகமாக காயப்படுத்த தொடங்கினார். கழிவறை அவசரம் என்பதையும் தாண்டி எச்சில் துப்பி நகர்வது போல அந்த நாட்கள் கடந்தன. அக்கா இறந்தபோது அதிகமாக அழுதேன். ஆனால் அதன்பிறகு இவரை பொருட்படுத்தாமல் இருக்க கற்றுக் கொண்டேன். கொஞ்ச நாளில் இவரும் மார்புச்சளி முற்றி படுக்கையில் விழுந்தார். எந்நேரமும் காய்ச்சலில் அணத்திக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்கவும் அந்த நாட்களில் அவருக்கு பணிவிடைகள் செய்திருக்கிறேன். எச்சில் பாத்திரத்தை கழுவி வைப்பது போல கழிப்பறையில் அமிலம் ஊற்றுவது போல அவருக்கான பராமரிப்பு ஒரு செயலாகிப் போனது. ரம்யாவும் வீட்டு வேலைகளை செய்து கொண்டே படிக்க பழகிக் கொண்டாலும் ஓயாமல் வேலை இருந்து கொண்டே இருந்தது. இவரும் விழுந்துவிட்டதால் பணத்திற்கென கிடைத்த வேலையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது. கட்டிட வேலைகளுக்கு சித்தாளாக சில நாட்கள் சென்றேன். என்னிடம் மூன்றாக மடிந்து காபி வாங்கிக்குடித்தவனெல்லாம் கையைத் தடவினான். நிரந்தர வருமானம் தரக்கூடிய அத்தகைய வேலைகளை விட்டு சொற்ப வருமானத்தில் நாட்களைக் கடத்த முடியாமலான போது அவர் பெயரில் இருந்த கொஞ்ச நிலத்தை விற்கும் நிலை வந்தது. கையெழுத்து போட முடியாதென அழுதுகொண்டே என்னை திட்டினார்.
“தேவிடியா முண்ட.உன்னெக் கெட்டினதுதாண்டி நான் பண்ணின பாவம்” என தலையில் அடித்துக் கொண்டார். நான் அக்கைகளை விலக்கிவிட்டு அவரை எழுந்தமர வைத்து ஓங்கி அறைந்தேன். முதல் அறையிலேயே அவன் இப்படி நடுங்குவான் என்று நான் நினைக்கவில்லை. பள்ளிச்சிறுவன் போல இரண்டாவது அறைக்கு வாயில் கைவைத்துக் கொண்டான். அதன்பிறகு எனக்கு கோபம் வரும் போதெல்லாம் அவனை வந்து அடிக்கத் தொடங்கினேன். ஆனால் அச்செயல் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. நாள் முழுக்க வேலை செய்து ஓய்ந்த உடம்பு பத்து மணிக்கெல்லாம் முறுக்கவிழ்ந்து உறக்கத்திற்குள் சென்றுவிடும். ஒரு அடி வயிற்று நடுக்கத்துடன் ஒரு மணிக்கு மேல் விழிப்பு வரும். பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எவ்வளவு கட்டுப்படுத்த நினைத்தும் அவன் உறங்கிக் கொண்டிருக்கும் கட்டில் அருகே செல்வேன். அவன் அசைவற்று உறங்கினால் மனம் துயர்கொள்ளும். கொள்ளைப்புறம் சென்றமர்ந்து தன்னிரக்கத்தில் அழுவேன். ஆனால் பெரும்பாலும் அவன் அதற்கு என்னை அனுமதிப்பதில்லை. முனகிக்கொண்டு உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பான். எழுந்து அமர்வான். பின்னர் தலையில் கைவைத்துக் கொண்டு அழுவான். எச்சிலை கூட்டிவிழுங்கி ஒரு நீண்ட சுவாசத்துடன் மனம் முழுக்க நிறைவுடன் மீண்டும் வந்து படுப்பேன்.
அர்ஜுனின் அப்பா இறந்த பிறகு தான் வீட்டின் நிலை எவ்வளவு கீழே சென்றிருக்கிறது எனப்புரிந்தது. ரம்யா தான் அவ்வளவையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என எனக்குப் புரியத் தொடங்கிய போது என்னையும் முதுமை கவ்வத் தொடங்கி இருந்தது. அவர் உயிரோடு இருந்தவரை எந்நேரமும் நுனிக்காலில் முழு விசையுடனும் கவனத்துடனும் நின்றிருந்த மனம் அவர் இறந்தபிறகு அனைத்திலும் ஆர்வம் இழந்தது. ரம்யா இருபது வயதில் ஒரு இளங்கலை பட்டம் பெற்றதும் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். ஏழு வருடங்களில் இக்குடும்பத்தை எப்படியோ நிமிர்த்தி வைத்திருப்பவளும் அவள் தான். அவளுக்கு வரன் தேடத்தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. அவள் எங்கள் இருவரில் யாருடைய பெண்ணும் இல்லையென்பதால் கூடி வரும் சம்மந்தங்கள் கூட தட்டிவிடுகின்றன.
கோவில் கோவிலாக நான் மட்டுமே அலைகிறேன். எப்படியோ அவளுக்கு ஜாதிக்குள் ஒரு மாப்பிள்ளை அமைந்துவிட்டால் போதும். அது அவள் அப்பா சந்தானம் என்னிடம் காலில் விழுந்து கேட்டுக்கொண்ட அவரது கடைசி விருப்பம்.
4
பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து பழுத்த இலைகள் தொடர்ச்சியாக உதிர்ந்து கொண்டிருந்தன. சாலையில் திரண்டிருந்த புழுதிமண் ஒவ்வொரு பேருந்தும் கடக்கும் போது எழும்பி அமிழ்ந்து கொண்டிருந்தது. நான் சாலையோரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தேன். அதென்னவோ ஏதோவொன்றில் சாய்த்துக் கொள்வதைத்தான் மனம் தொடர்ச்சியாக விரும்பி வந்திருக்கிறது. அக்காவின் அலுவலகத்துக்கு நான் சென்றதேயில்லை.
அம்மா கடைசியாக ஒரு தோஷ நிவர்த்திக்காக விடிகாலையில் குளித்து முடித்து ஒரு அய்யானார் கோவிலுக்கு சென்று வந்த இரவுதான் அக்கா சந்தோஷை காதலிப்பதை மிக எதார்த்தமாக தலைகோதியபடியே அம்மாவிடம் சொன்னாள். அம்மா அவளை அப்படி ஓங்கி அறைவாள் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அக்கா மீண்டும் மீண்டும் பிச்சைக்காரியாகிய அவள் சம்பாத்தியத்தில் உயிர் வளர்ப்பவளாகிய அம்மா வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென சொல்லிக் கொண்டே இருந்தாள். இம்மியும் அசையாத துணுக்குறாத குன்றாத அம்மாவை வெறுப்பும் பயமுமாக பார்த்தபடி  நான் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். அன்று அக்காதான் பலம் குன்றியவளாகத் தெரிந்தாள்.
கலைந்த கூந்தலும் அழுத விழிகளுமாக “இங்க வாடா” என அதட்டலாக என்னை கூப்பிட்டாள். நான் தயங்கித் தயங்கி அவளை நெருங்கினேன்.  அவள் என்னை அணைத்துக் கொண்டபோது தான் அவள் உயரத்துக்கு நான் வளர்ந்திருப்பது தெரிந்தது. அவ்வுணர்வு சட்டென ஒரு விடுபடல் போலிருந்தது. இத்தனைநாள் அவளிடம் தயங்கிதற்கு காரணம் உயரம் மட்டும் தானோ என்று கூட ஒரு கணம் எண்ணினேன். உடலே உடைந்து விடுவது போல “அப்பா” என ஏங்கிக் கேவியவாறு என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள். அம்மா எங்களை ஏளனமாகக் கடந்து சென்றாள்.
இது நடந்து ஒருவாரமாயிற்று. மறுநாள்  முதல் அக்கா வீட்டில் தங்கவில்லை. மகேந்திரன் மாமாவிடமிருந்து நாற்பது கிலோமீட்டர் பயணிப்பது சிரமம் தருவதால் விடுதியில் தங்கியிருப்பதாக சொல்லி இருக்கிறாள் எனத்தெரிந்தது. மகேந்திரன் மாமாவும் அவளுடன் தான் அலுவலகத்தில் வேலைபார்க்கிறார். அக்காவை விட இரண்டு வயது அதிகம். ஆனால் என்னிடம் பேசும் போது அம்மாவைவிட இரண்டு வயது பெரியவரைப் போலத்தான் பேசுவார். மனதில் எரிச்சலை கிளறும் முகமும் பேச்சும். அம்மா இவரை அக்காவுக்கு மணமுடித்து வைத்துவிட வேண்டும் என ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என எனக்குப் புரியவில்லை.
“உங்க அப்பாவோட ஆசைடா அது” என அவள் கண்ணீர் வழிய என்னிடம் சொன்ன காரணம் எனக்குப் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் மகேந்திரனைத் தவிர வேறு யாரை மணம் புரிந்தாலும் தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என அம்மா சொல்லிவிட்டாள். அவளின் உறுதியை இருவருமே அறிவோம்.
நான் அலுவலகத்துக்கு வெளியே இருந்து அவளை அலைபேசியில் அழைத்தேன். சிரித்துக் கொண்டே ஓடிவந்து கையைப் பிடித்துக் கொண்டாள். காபி குடித்துக் கொண்டிருந்த போது அம்மாவின் முடிவினை அக்காவிடம் சொன்னேன். அவள் பேசவேயில்லை. முகம் கறுத்துவிட்டது. பின்னர் எதையோ ஏற்றுக் கொள்ளும் முகபாவம். அந்த கணத்தில் ஒரு தீவிரமான வெறுப்பு அவள் மேல் எழுந்தது.
“நீ என்ன நினைக்கிறியோ அதையே சொல்லிடு” என சட்டென்று எழுந்து கொண்டவள் திரும்பி நடந்தபோது மனம் அதிர ஒன்றை உணர்ந்தேன். அக்கா பெரியம்மாவைப் போலவே நடந்தாள். அதன்பிறகு தான் அவள் பெரியம்மாவை எப்படியோ ஒத்திருக்கிறாள் என்பது புரிந்தது.
அம்மா அப்பா மகேந்திரன் மாமா என ஒரு கணத்தில் என் மனம் அந்த இருளில் ஆழமாக மூழ்கி எழுந்தது.
நீ இறப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை என்று திரும்பிவந்து அம்மாவிடம் சொன்னேன். அவளும் நான் சொன்னதை புரிந்து கொண்டாள். அதுபோல அக்காவின் திருமணம் முடிந்த சில நாட்களில் இறந்தும் போனாள் இயல்பாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.