ஈரம்

அன்றைய காலையும் வழக்கம் போல பாதி கண் விழித்தும் விழிக்காமலுமேயே எழுந்து நடந்து சமையலறைக்குச் சென்று, ‘அம்மா,, எனக்கு… எனக்கு…’ என்றுஆரம்பித்தேன். எனக்கு ஏதாவது, சாப்பிடக் கொடு என்பதன் துவக்கம்தான், அந்த எனக்கு… எனக்கு… என்ற வார்த்தைகள். அடுத்த வார்த்தை தொடங்கும் முன், ஏதாவது வர்க்கியோ பிஸ்கட்டோ கொஞ்சம் பால்கோவாவோ, அல்லது மைசூர்ப் பாக்குக் கட்டியோகூட கிடைத்துவிடும். ‘ப்ளஸ் ஒன் வந்தும் இந்தப் பழக்கத்த மட்டும் விடாம வெச்சிக்கோ,’ என்ற செல்லத் திட்டுடன் ஒரு தட்டில் வந்துவிடும். ஆனால், அன்று அது அப்படி நடக்கவில்லை. அம்மா உள்ளே இல்லாததுடன் புழக்கடைப் பக்கம் பரபரப்பான பேச்சுக் குரல்களும் கேட்டது. யோசனையோடு வெளியே போனதில், அம்மா, அப்பா, அண்ணன் எல்லோரும் தரையைப் பார்த்து ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. மூவர் முகத்திலும் தெரிந்த கலக்கம், எனக்கும் வயிற்றில் சங்கடம் ஏற்படுத்தியது. கூடவே, சமையல் ரூமிலும் ஏதோ ஒரு வித்தியாசமான வாசனை அடித்தது நினைவுக்கு வர உள்ளே எட்டிப் பார்த்தேன். ஆமாம், இது வேறு ஏதோ வாசனை, எங்கோ பூர்வ ஜென்மத்தில், முகர்ந்து, கலக்கம் ஏற்படுத்திய வாசனை… .ஆம், எறும்புப் பொடியின் அந்த மணம்.
அந்த வாசத்தை முற்றிலும் நான் வெறுத்தேனா என்று தெரியவில்லை. பல சமயங்களில், அதிகாலையிலும் அந்தியிலும், புல் தரை மீது பனி விழும் போதும், அந்த வாசத்தை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதைத் தாண்டி, எங்கள் வீட்டில் அந்த வாசனைக்கு ஒரு மனக் கலக்கத்தை ஏற்படுத்தும் தன்மை உண்டு. யோசித்தபடியே அவர்களை நோக்கி நடந்தேன்.
“எப்ப பார்த்த?” என்று அப்பா கேட்டார்.
”காத்தால சமையல் உள்ள போய் லைட்டப் போடும் போதே, கால்ல ஏதோ விறுவிறுன்னு ஊறின மாதிரி இருந்தது. பாத்தா, மேடையில, தண்ணிப் பாத்திரத்தை சுத்தி, பழைய சாதம் வெச்ச பாத்திரத்தை சுத்தின்னு, ஏகப்பட்ட எறும்புக மொச்சுண்டு இருந்தது, பகீல்னுது. இருந்த எறும்புப் பொடியத் தூவிட்டு, எங்கிருந்து வந்துருக்குன்னு பாக்கப் போனா, இதோ இங்கேருந்துதான்,” என்று புழக்கடையில் கிணறு இருந்த இடத்தைக் காட்டினார். அங்கேதான், அந்த இடத்துக்கு அருகில்தான், அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மெதுவாக நானும் சேர்ந்து கொண்டு குனிந்து பார்த்தேன். அந்த இடத்தில், கிணற்றை மூடிய இடத்தில், ஒரு சின்ன பிளவு இருந்தது. அதன் வழியாக, வரிசையாக கட்டெறும்புகள் நாங்கள் இருந்ததையும் மதிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக, வெகு அவசரமாக ஏறி வந்து இடமும் வலமும் பார்த்து, ஒய்யாரமாகத் தூக்கிய பின் பக்கத்துடன், ஒரே வரிசையில், சாரி சாரியாக எங்கள் சமையலறை பக்கம் நகர்ந்தன. அங்கே இருந்த எறும்புப் பொடியின் கோட்டுக்கு முன்னால் தயங்கி சற்று பரவி தீவிரமாக ஆலோசிக்கும் பாவனையில் நின்றன. “இதோட இது மூணாவது தடவங்க…”, அம்மாவின் குரல் என் கவனத்தைக் கலைத்தது. “மொதல் தடவ,”என்று சொல்லும்போதே அவர் குரல் கம்மியது. அப்பாவின் முகத்தில் படிந்த நிழல், என் நினைவுகளையும் கிளறியது. அது எனக்கு அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லாத ஒன்றுதான். அதனாலேயே சொல்ல முடியாத ஒரு பயத்தையும் மனதில் தோற்றுவிக்கும் ஒன்று.
அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். சில காட்சிகளாகவே அந்த சம்பவம் என் மனதில் இருந்தது. வீடு முழுக்க கட்டெறும்புகள் புழக்கடையிலிருந்து வந்து கொண்டேயிருந்தன. எப்படி எத்தனை முறை விரட்டினாலும், குறையவேயில்லை. தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த தம்பிப் பாப்பா சோர்ந்து சோர்ந்து விழுந்து கொண்டிருந்தான். வாந்தியும், வயிற்றுப் போக்கும் இருந்த வண்ணம், அம்மாஅப்பாவின் வாடிய முகங்கள். ஒரு நாள் மாலை, உடம்பு முடியாத தம்பிக்காக எங்கோ சென்று தாயத்து வாங்கி வர ஊரிலிருந்து வந்திருந்த மாமா என்னையும் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துப் போனார். .திரும்பி வருகையில், வீட்டு வாசலில் மிகப் பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தம்பிப் பாப்பா, என்னவோ மாதிரி படுத்துக் கொண்டிருக்க அவன் வாயில் அம்மா எதையோ புகட்டிக் கொண்டிருந்தார். =”நன்னா தேனை வைங்கோ,” என்று அப்பாவின் சினேகிதரான ஒரு மாமா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், உதட்டில் வைத்த தேனைச் சுவைக்க அவன் நாக்கு நீளவேயில்லை. இன்னொரு மாமா,பாப்பாவின், நிலைத்த விழிகளை இமைகளை இறக்கி மூடினார்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், அப்படி நெனெக்கத் தொடங்கினா நெனைச்சிண்டே இருக்க வேண்டியதான்”. இந்த முறை அப்பாவின் குரல் என்னைக் கலைத்தது. ஆனால் அவர் குரலிலும் ஒரு உறுதி இல்லையோ… “இல்லல்ல, இரண்டாந்தடவ, இத மாதிரி வந்தப்போதான் பாழாப்போன அந்த சண்டை வந்து தொலஞ்சுது… அம்மாவின் குரலில் இருந்த அச்சம், சிலீரென்று எனக்குள் இறங்கியது. ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது நடந்தது. முதல் தடவை மாதிரியே அந்த ஆண்டும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம், எங்கள் கிணறு முழுமையாக வற்றிப் போனது.. அந்த ஆண்டுதான் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த விவசாயக் கல்லூரி, பல்கலைக் கழகமாக மாறியது. அதன் நிலங்களில் நிறைய போர்வெல் போட்டு தண்ணீர் எடுப்பதனால் அதனைச் சுற்றியிருந்த கிணறுகள் எல்லாம் வற்றத் தொடங்கின என்று பேசிக் கொண்டார்கள். எது எப்படியோ, எங்கள் கிணறு முழுமையாக வற்றி போனது. தொண்ணூறு அடி ஆழம் இருந்த கிணற்றில் மேலும் முப்பது அடிகள் ஆழப்படுத்தியும் பலனில்லை. “அவ்வளவுதான் இதோட விட்ருவோம்” என்று நிராசையுடன் சொன்ன அப்பாவின் முகம் நினைவில் எழுந்தது. அந்தக் கிணற்றடியும், பம்ப் செட்டிலிருந்து சிறிய தொட்டியில் வந்து விழும் நீரில் குதியாட்டம் போடும் விளையாட்டுகளும்கூட வறண்டு போயின. ஆனால், அதுவும் போதாதென்று சில நாட்களில் வேறொன்றும் சேர்ந்து கொண்டது. வறண்ட கிணற்றின் உள்ளிருந்து சாரி சாரியாக நல்ல கொழுத்த கட்டெறும்புகள் கிணற்றினுள் இருந்த குழாய்கள் வழியாக மேலே வந்து வீட்டுக்குள் வரத் தொடங்கின. அவைகளோடு ஒரு பெரிய போராட்டம் தொடங்கியது. அந்த ஆண்டின் முழுப்பரீட்சைகளுக்கு சற்று முன்னால் தொடங்கிய இந்தப் போராட்டம், பரீட்சை முடிந்து லீவு விட்டு, மீண்டும் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறக்கும்வரையேகூட நீடித்தது. கோடை மழை பெய்த சில நாட்கள் மட்டும், எறும்புகள் தலைமறைவாயிருக்கும். பின் மீண்டும் வந்துவிடும்.
போராட்டம் என்றால் முழுவதுமாக போராட்டம் என்று சொல்ல முடியாது. முதலில் இருந்த அச்சம் விலகி எறும்புகளைப் பொடி போட்டும் அதன் வரிசை உருவாகி வரும் இடங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி, சுற்றிய துணி உருண்டைகளைக் கொளுத்திப் போடுவதிலும் ஒரு உற்சாகம், விளையாட்டு, ஏன் ஒரு வெறியேகூட உருவாகத் தொடங்கியது. தினமும் காலை எந்த இடத்திலிருந்து எறும்பு வரிசை தொடங்குகிறது என்று பார்த்து, அழிக்கத் துவங்கினோம். வீட்டின் பெரியவர்கள் இதிலிருந்து மெல்ல விலகிக் கொள்ள, சிறுவர்களுக்கான முழு நேர விளையாட்டு என ஆயிற்று. கேரம் போர்டு, செஸ், கிரிக்கெட், எல்லாவற்றையும்விட இந்த ஆட்டம் மிகுந்த உற்சாகத்தைத் தர தொடங்கியது. எறும்புகளை விரட்டுவதற்காக முதலில் காய்ந்து கிடந்த கிணற்றை மூடினோம். அதன் உள்ளிருந்த பைப்புகளை எல்லாம் கயிற்றில் கட்டி, புழக்கடை வாசல் மேலே இருக்கும் ஓட்டின் இறக்கத்தில் நீளமாகக் கட்டி ஒரு தூளி போல தொங்க விட்டோம். மூடிய கிணற்றின் உள்ளிருந்து ஏதாவது ஒரு இடத்தின் பிளவு வழியாக வந்த எறும்பின் வரிசையை ஒரு இடத்தில் நடுவில் கோடு கிழித்து இரண்டாக்குவது, வேறு ஒரு கோடு கிழித்து அதன் வரிசையை மாற்றுவது, இந்தச் செயல்களால் திணறும் எறும்புகளின் தவிப்பை வேடிக்கை பார்ப்பது, வரிசையின் மையத்தில் எறும்புப் போடி தூவுவது, கிணறு மூடிய இடத்தின் பிளவுகள் தெரியும் இடங்களில் மண்ணெண்ணெய் ஊற்றுவது, இவை எல்லாம் சலிக்கும்போது, விளக்குமாறு கொண்டு எறும்புகளை அடித்துக் கொல்வது என விதவிதமான விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தோம். கூடவே எங்கெங்கோ அலைந்து திரிந்து தண்ணீர் எடுத்து வருவதும் செல்வதும் ஒரு உற்சாக விளையாட்டு. சைக்கிள் காரியரில் சாக்கு போட்டு, ரப்பர் ட்யூபினால் இரண்டு குடங்களைக் கட்டி சக்கரத்தின் இருபுறமும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டு, சைக்கிள் மிதித்து பொதுத் தண்ணீர் குழாய்க்கு சென்று தண்ணி பிடித்துக் கொண்டு வருவது அப்போது எங்களுக்கு ஒரு சாகச விளையாட்டு. ஆனால் சிறுவாணி குடிநீர், ஒருநாள் விட்டு ஒரு நாள் விடிகாலை, இரண்டு நடைகள், சுமார் 5, 6 கிலோ மீட்டர் போய் பிடித்துக் கொண்டு வருவது மட்டும் அப்பாவின் டூட்டி. அதை ஒருபோதும் எங்களுக்குத் தர மாட்டார்.
அப்படிப்பட்ட போராட்ட நாட்களின் நடுவே ஒருநாள், புழக்கடையில் எறும்புப் போர் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது ஈரோட்டிலிருந்து சித்தப்பாவும் சித்தியும் வந்திருந்தது தெரிந்தது. அவர்களின் முகத்தில் இருந்த தீவிர பாவம் எங்கள் உற்சாகத்தைக் குறைத்தது. கொஞ்ச நாட்களாகவே அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இடையே இருந்த சகஜ பாவம் குறைந்து உறவு சற்று முறுக்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு முறை வரும்போதும் இந்த வீட்டை விற்பதற்கான நடைமுறையை பார்க்குமாறு அவர் அப்பாவிடம் லேசாகத் தொடங்குவதும் அப்பா அதை மறுப்பதும்ஒரு இறுக்கத்தை வளர்த்துக் கொண்டே வந்தது. சிக்கல் என்னவென்றால், வீடு சித்தப்பா பெயரில் இருந்தது. வீட்டு வரி கட்ட பஞ்சாயத்து ஆபிஸ் போகும்போது நான் அப்பாவிடம், ‘ஏம்ப்பா வீடு சித்தப்பா பேரில் இருக்கு,’ என்று கேட்பதுண்டு. அப்பா அம்மா இரண்டு பேருமே மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களாக இருந்தாலும் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தும் சித்தப்பாதான் வீட்டைக் கட்டியிருந்தார் என்பதை சந்தேகப்படும் அளவுக்கு எனக்கு கொஞ்சம் உலகம் தெரியத் தொடங்கிய நாட்கள் அவை. அப்பா விளக்கமாக சொல்லாவிட்டாலும், வியாபாரி என்பதால் கடன் அவருக்குக் கொஞ்சம் எளிதாகக் கிடைத்தது, அதனால் அவர் பேரில் வீடு இருப்பது அவசியமாயிற்று. மற்றபடி, மூவரும் சேர்ந்து கட்டியதுதான் என்று சொல்வார் (அரசு ஊழியர்களுக்கு அரசு கடன்கள் எல்லாம் அதிகம் தராத காலம் அது).
படுத்த படுக்கையாய் சில ஆண்டுகள் இருந்து மறைந்த தாத்தாவின் மருத்துவச் செலவு கடன், அத்தையின் கல்யாணம் என்று கூடுதல் செலவுகள் எல்லாம் அப்பாவின் பொறுப்பு, வீட்டுக் கடன் தவணை கட்டுவது சித்தப்பாவின் பொறுப்பு, கூட்டுக் குடும்பத்தின் மாதாந்திர செலவுகள் அம்மாவின் பொறுப்பு என்று ஒரு புரிதலில் ஓடிக் கொண்டிருந்தது. சித்தப்பாவுக்கு கல்யாணம் ஆகி, அவரது கோவை கடை ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு போனதில் இது சற்று ஆட்டம் கண்டது. சுயமாக கடை வைத்து நடத்த முதல் வேண்டுமென்றால், இந்த வீட்டை விற்பதுதான் வழி என்று அவர் நினைத்தார். ஆனால், அப்பா சில செண்டிமெண்ட் காரணங்களுக்காக அதைத் தவிர்க்க விரும்பினார். தண்ணீர்க் கஷ்டம், எறும்புகளின் தொல்லை எல்லாவற்றையும் மீறி இதிலேயே தொடரத்தான் அவரது விருப்பம் இருந்தது. மேலும் அம்மாவின் பள்ளிக்கூடத்துக்கும் மிக அருகில் இருந்த வீடு. அதனால் விற்கும் விஷயம் ஒரு முடிவுக்கு வராமல் இரு பக்கத்திலும் இறுக்கங்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
ஆனால், அன்று சித்தப்பா- முக்கியமாக சித்தி-, ஒரு முடிவோடுதான் வந்திருந்த மாதிரி இருந்தது. சித்தப்பாவின் தயங்கிய குரலிலும் சித்தியின் முணுமுணுப்பிலும் தொடங்கிய பேச்சு வார்த்தை, ஒரு முழுச் சண்டையாக மாறிவிட்டது. அப்பாவும் சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் வசை பாட, சித்தியும் ஓங்கி குரலெழுப்ப, அம்மாவின் அழுகுரல் ஒலிக்கத் தொடங்கிற்று. வீடு கட்டும்போது கலியாணமாகியிருக்காத, இந்த வீட்டுக்கே வந்திராத, சித்தியின் உரிமைக் குரல், அப்பாவை நிதானமிழக்க வைத்தது போல. சண்டையின் வீரியமும் சத்தமும் அதிகமாக அதிகமாக, அக்கம் பக்க வீட்டார் வந்து அமைதிப்படுத்தினர். நானும் அண்ணாவும் புழக்கடைக்கு ஓடி பைப்புகளுக்கு அடியில் நின்று கொண்டு அலைந்து திரியும் எறும்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டுக்குள்ளே இருந்து வரும் சத்தம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த எறும்புகளின் அலைச்சல் வேகமும் அதிகரித்த மாதிரி தெரிந்தது. ஒரு வழியாக சித்தியும் சித்தப்பாவும் சாபமிட்டுக் கொண்டே போனார்கள். ‘இந்த அளவுக்கு வந்தப்பறம் இனிமே கோர்ட்டுதான் வழி,’ என்று சித்தி கூவியதும், ‘இந்த வீடு என் கைக்கு வந்தப்பறம் வச்சுக்கறேன்,’ என்று சித்தப்பா கத்தியதும் புழக்கடையில் இருந்த எங்களுக்கே கேட்டது. அந்தக் கோடையின் மிகப் பெரிய மழை அன்று இரவு பெய்த மழையாகத்தான் இருக்கும். நடந்த விஷயங்களின், பாரமும்,இன்னும் ஒரு வாரத்தில், பள்ளி திறக்கவிருப்பதின் சோகமும் சேர்ந்து கொள்ள, அந்த விடுமுறையின் கடைசி நாட்கள் உற்சாகமின்றி கழிந்தன.
ஜூன் முதல் வாரம் அந்த ஆண்டின் பருவ மழையும், இரண்டாம் வாரம் சித்தப்பாவிடமிருந்து வக்கீல் நோட்டிஸ்சும் வந்தது. இந்த எறும்புகளை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தோம். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபின் பெய்த மழையில் வெளியில் விளையாட முடியாமல் போனபோதுதான் எறும்பு வேட்டையென்னும் எங்கள் முக்கிய விளையாட்டு நின்று போய் விட்டிருந்ததை உணர்ந்தேன். அதன்பின் வக்கீல், கோர்ட்டு, அதைப் பற்றிய பேச்சு என்றே ஆண்டுகள் போய்க்கொண்டிருந்தது. அப்பாவுக்கு மீண்டும் மாற்றல்கள் வந்து வேறு வேறு ஊர்களிலிருந்து வார இறுதியிலும், மற்ற சமயம் கோர்ட்டில் வழக்கு நடந்த அன்று மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர்களே எங்கள் வக்கீல்கள்.அவர்கள் எவ்வளவோ ஆறுதலாகச் சொன்னாலும், சொத்து சித்தப்பாவின் பெயரில் இருப்பதால் எங்கள் தரப்பு பலவீனம் என்பது அம்மாவின் பேச்சில் தெரிந்தது. ஆனால், அப்பாவின் பிடிவாதம் ஒரு குருட்டு நம்பிக்கையை அவருள் தோற்றுவித்திருந்தது. அவரது வக்கீல் நண்பர்களில் ஒருவரது மழுங்கின மூக்கும்மடங்கிய கைவிரல்களும், ரத்தச்சிவப்பில் பெரிய பொட்டு கொண்டு அருள்வாக்கு சொல்லும் இன்னொருவரது மனைவியும் என்னில் உண்டாக்கிய கலவரம் வேறு ஒரு கதை.
மூன்றாம் முறை மீண்டும் எறும்புகள் வரத் தொடங்கிய அந்த நாள் வழக்கின் முக்கியமான தினம். எங்கள் பக்கம் சாட்சி சொல்ல என் அப்பாவின் மாமா சம்மதித்திருந்தார். அன்றுதான் அவர்சாட்சி சொல்ல வேண்டிய நாள். அன்று பார்த்து மீண்டும் தொடங்கிய அந்த எறும்புகளின் படையெடுப்பை அம்மா அஞ்சியது நியாயமாகவே எனக்குப் பட்டது. பல்வேறு யோசனைகளுடன் பள்ளிக்க கிளம்பினேன். மாலை வீட்டுக்குள் நுழையும்போதே கண்ணில் பட்டவை, எறும்புப் படையெடுப்பை சமாளிக்க தயாராக இருந்த சமையலறையும், மற்ற அறைகளின் மாற்றமும்தான். அப்பா இன்னமும் கோர்ட்டில் இருந்து வீடு திரும்பவில்லை. கிரிக்கெட் விளையாடப் போகவும் மனதில்லை. அப்பாவின் வேஷ்டி சைக்கிளின் இருபுறமும் அன்னப் பறவையின் சிறகுகள் போல படபடக்க அவர் திரும்பி வரும் காட்சிக்காகக் காத்திருந்தோம். ஆனால், நான் ஒரு சிறு கணம் எதற்கோ வீட்டின் உள்ளே போய்த் திரும்பும் இடைவெளியில் அப்பா வந்து விட்டிருந்தார். வழக்கமான அவரது வயர் சேரில் உட்கார்ந்திருந்தவரின் முகம் சோபையிழந்திருந்தது. மாமாவின் சாட்சியத்தின் உறுதியைப் பற்றிய அம்மாவின் சந்தேகம் மெய்யாகிவிட்டிருந்தது. அவர் உறுதியாக எதையும் சொல்லாமல் வழவழா கொழகொழாவென்று சொதப்பியது மட்டுமே அப்பாவின் அயர்ச்சிக்கு காரணமில்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்தது. நாங்கள் எது நடக்காது, அல்லது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தோமோ, அது அன்று நடந்திருந்தது.
அந்தச் சண்டை நடந்தபோது சித்தப்பாவின் வீட்டில் இருந்த எங்கள் பாட்டி மீண்டும் எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை. அவரால் தன் விருப்பம் போல் கிளம்பி வர முடியாது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். சித்தப்பாவின் வீட்டுக்குப் போய் அவரை அழைத்துக் கொண்டு வர அப்பாவின் சுய கௌரவம் இடம் தரவில்லை. ஆகவே இந்தச் சொத்துத் தகராறில் அவரது நிலை என்ன என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், தனது மூத்த மகனான என் அப்பாவை விட்டுக் கொடுத்துவிட மாட்டார் என்று நினைத்திருந்தோம். ஆனால், அன்று கோர்ட்டில் அவர் சாட்சிக் கூண்டேறி, அந்த வீட்டைக் கட்டியது தன் இளையமகன்தான் என்று உறுதியாகச் சொல்லிவிட்டிருந்தார். அப்பாவின் முகத்தை மேலும் பார்க்க அஞ்சி நாங்கள் பதுங்கினோம். தீர்ப்பு எப்போது என்றுகூட கேட்கும் துணிச்சல் இல்லை. அது கோர்ட் வருடாந்திர விடுமுறைக்காக மூடப்படும் சமயம். ஆகவே தீர்ப்பு வர ஓரிரெண்டு மாதங்கள் ஆகும்.
அடுத்த நாள் அப்பா அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த ஊட்டிக்கு கிளம்பிப் போனார். அம்மாவும் எறும்பு வேட்டையில் இறங்க நாங்கள் முழுப் பரிட்சையை எதிர்கொண்டோம். அந்த வார வெள்ளிக் கிழமை அப்பா திரும்பி வரும்போது, அவரது இடது கண் மட்டும் மூடியிருந்தது. என்ன முயன்றும் அதைத் திறக்க முடியவில்லை. அடுத்த நாளிலிருந்து எங்கள் அன்றாடம், ஆஸ்பத்திரி, எறும்பு வேட்டை என்று மாறியது. இடையே முழுப் பரீட்சையும் வந்தது. கடைசி பரீட்சை நடந்த நாள் அன்று காலை, ஆஸ்பத்திரி போய்விட்டு மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தெருவின் துவக்கத்திலேயே வீட்டு நிலைமை மாறியிருப்பது தெரிந்துவிட்டது. அழுகையும் ஓலமும் வீட்டை நெருங்க நெருங்க உரக்கக் கேட்டது. அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து அப்பாவின் உடல் வந்திருந்தது.
அடுத்த நாள் மதியம் வரை வைத்திருந்தோம். சித்தப்பாவோ பாட்டியோ வரவேயில்லை. பதின்மூன்று நாள் காரியங்களில் ஒன்பதாம் நாளிலிருந்து காரியம் செய்யும் இடத்துக்கு அருகில் இருந்த அம்மாவின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம்.பதின்மூன்று காரியம் முடிந்து வீடு திரும்பிஅயர்ந்து சாய்ந்த அன்று தொடங்கி மூன்று நாட்கள் அந்த ஆண்டின் கோடை மழை விடாது அடித்துப் பெய்ந்தது. வீடு ஒரு புதிய இயல்பு நிலைக்குத் திரும்பியபோது நாங்கள் உணர்ந்தது அப்பா இல்லாத வெறுமையை மட்டுமல்ல, துடைத்துப் போட்டது போல் வீட்டில் ஒரு எறும்பு கூட இல்லை என்பதையும்தான்.

2 Replies to “ஈரம்”

  1. மிகவும் பாதித்த கதை! ஆனால் பலரும் இப்படித் தான் கூட்டாகச் சேர்ந்து வீட்டைக் கட்டிவிட்டுப் பின்னால் பிரிக்க முடியாமல் சண்டை, சச்சரவு என்றாகிறது. எங்களுக்கும் இப்படி ஓர் அனுபவம் உண்டு.

  2. வித்யாசமான ஒரு களனை எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போதைய கதை உலகில் இப்படி சாதாரணங்களில் கிடைக்கும் அசாதாரணங்களில் இழை நார் கிழித்து பதம் பண்ணி பூச்சரடு தொடுக்க வேண்டியது வித்யாசமான தேவையாக இருக்கிறது. நிறைய வாசிப்பு அனுபவமும், இலக்கியத்தில் ஆரோக்கியமான பார்வையும் கொண்ட வாசகனாக சுரேஷிடம் இருந்து வந்திருக்கும் நல்ல கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.