விடை

வெயிலின் அனல் ஓயத் துவங்கியிருந்த ஒரு மாலைப் பொழுதில் நான் மேலே செல்லலாம் என முடிவு செய்து அந்த மலையின் மீது ஏறத் துவங்கினேன்.  மேற்புற பளபளப்பு விண்மீன்களின் மினுக்கத்தை நினைவுறுத்திய சிறு கூழாங்கற்கள் பாறைகளுக்கு இடையே இருக்கும் மண் பரப்பில் விரவிக் கிடந்தன. பார்வைக்கு எட்டும் தூரத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பார்க்க வேண்டும்; எங்கே கால் வைப்பது என தேர்ந்தெடுத்து அங்கே பாதத்தை வைக்க வேண்டும். உச்சியைப் பார்க்கக் கூடாது; கடந்து வந்த பாதையையும் பார்க்கக் கூடாது. கண் பார்க்க வேண்டும்; கால் கண் காட்டிய வழியில் மேலேற வேண்டும். மனத்தை பார்வைக்கும் நகர்வுக்கும் இடைப்பட்ட இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல நகர்வதாக ஓர் எண்ணம் உருவானது. மேலே பார்க்க வேண்டும் என்ற தூண்டல் உண்டானது. சமவெளியில் நடப்பதும் மேலே ஏறுவதும் ஒன்றுதான் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். உடல் அவ்வெண்ணம் ஏற்பட்ட உடன் ஒத்துழைப்பைக் குறைத்தது. அதனை உணர்ந்த கணமே வேகமாக முன்னேறினேன். பலமுறை ஏறியாகி விட்டது. இருப்பினும் மீண்டும் ஏறும் போது ஆரம்பச் சிக்கல்கள். இடையர்கள் ஆடுகளைத் தேடுவதற்காக நடந்த தடம் கற்களின்றி இருந்தது. அதில் லகுவாக கொஞ்ச தூரம் ஏறினேன். காலடி எடுத்து வைக்கப் போகும் இடத்தில் மட்டும் பார்வையையும் மனத்தையும் பொருத்த வேண்டும். முன்செல்வதற்கான பாதை இருக்கும் போது முன்னேற வேண்டும். மேலே செல்ல செல்ல மூச்சிறைக்க ஆரம்பித்தது. மூச்சு வழமையான இயங்குமுறையைத் தாண்டி துரிதமாக இயங்கியது. ஒரு பள்ளி விட்டு குழந்தைகள் சடுதியில் வெளியேறுவது போல; நதி பாய்ந்து செல்வதைப் போல. சுற்றிச் சென்றாலும் பாறைகளைத் தவிர்த்து மண் பாதையையே தேர்ந்தெடுத்தேன். சில முள்மரங்கள் ஆங்காங்கே சட்டையைப் பிடித்து இழுத்தன. சிறுமுட்கள் என்பதால் எனது இழுப்புக்கு ஆட்பட்டு சட்டை கிழியாமல் இருந்தது. சற்று அமரலாமா என்ற எண்ணம் உருவானதும் அதனை கட்டாயமாக விலக்கினேன். தண்ணீர் கொண்டு வந்திருக்கலாமா என்று தோன்றியது. கொண்டு வந்திருந்தால் அவ்வப்போது குடித்து தாகமே எல்லாமாக ஆகியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மலையுச்சிக்கு செல்வதற்கு முன்னால் ஒரு பெரிய சமதளப்பரப்பு அங்கே விரிந்து கிடந்தது. அதன் நுனியில் இருந்த பெரிய பாறையில் அப்படியே படுத்து விட்டேன். படுத்தவாறே செருப்பை கழட்டி விட்டேன். கண்களை ஆகாயத்தில் நிறுத்தினேன். வான நீலம் பளீரென இருக்க ஆங்காங்கே வெண்ணிற மேகங்கள் திட்டாயிருந்தன. மூச்சுக்கு ஏற்றவாறு தோள் ஏறி இறங்கியது. ஏன் ஏறினோம்? எதை அடைய விரும்புகிறோம்? உடல் வியர்க்கத் துவங்கியது. வியர்வையின் ஈரம் உடலெங்கும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டு வந்தது. மூச்சு சீரானதும் மனம் காற்றின் சீர் இயக்கத்தை மட்டுமே கவனித்தது. பின்னர் எழுந்து அமர்ந்தேன். ஓர் இடைச் சிறுவன் ஆடுகளை கீழே விரட்டிக் கொண்டிருந்தான். ஆடுகள் சுவாரசியமான ஜீவிகள். உண்பது கூட இரண்டாம்பட்சம் தான். எங்காவது பச்சையைப் பார்த்தால் எத்தனை உயரமாக இருந்தாலும் ஏறி விடும்.
’’என்னன்ணன்! இப்படி மூச்சு வாங்குது’’
‘’மலைல ரொம்ப ஏறி பழக்கம் இல்லப்பா. பத்து தடவை ஏறியிருப்பன். அதனால எப்பவும் சின்னதா ஒரு மலையோ குன்றோ பார்த்தா ஏறுவன். உனக்கு மூச்சு வாங்காதா?’’
’’அண்ணன்! பொறந்ததிலேந்து இங்க அடிவாரத்தில தான் இருக்கன். கூட்டாளிகளோட ஒளிஞ்சு புடிச்சு விளையாடினதே இந்த பாறைகள்ல மறைஞ்சு தான். சாதாரணமா ஏறுவன் இறங்குவன்.’’
கையில் கடிகாரம் இல்லை. நேரம் நான்கு முப்பது இருக்கும். உச்சிக்குச் செல்ல பத்து நிமிடம் ஆகும். மலையிலிருந்து இறங்க அரைமணி ஆகும். தாகத்திற்கு தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
’’தம்பி! குடிக்க தண்ணீர் கிடைக்குமா?’’
‘’அண்ணன்! நீங்க இங்க ஒரு மணி நேரம் இருப்பிங்களா? இன்னும் சில ஆடு மேயுது. அதைத் தேடி வர்ரவங்க கிட்ட குடுத்து விடறன்’’. அவன் ஆடுகள் விரைந்து கீழிறங்கின. அவற்றின் பின்னால் சென்றான் அந்த தம்பி. நான் கண்ட சமதளப் பரப்பின் நடுவே பத்து அடி உயரமான ஒரு பாறை இருந்தது. அதனை சுற்றிக் கொண்டு பின்னால் சென்றேன். அங்கும் ஒரு சமதளம் இருந்தது. அங்கே விட்டமும் உயரமும் குறைவான ஒரு அரச மரம் இருந்தது. அதனடியில் ஒரு வெள்ளையர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார். புன்னகையுடன் ஹாய் என்றார். நானும் ஹாய் என்று சொல்லி விட்டு அவர் எதிரில் இருந்த சிறு கல்லில் அமர்ந்து கொண்டேன். அங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்குகள் போல பார்வைக்கு எட்டிய தூரம் வரை சிறிதும் பெரிதுமாய் பாறைகள் குவிந்து கிடப்பது போல் கிடந்தன. அப்போது வீசிய காற்றை உள்ளிழுத்து நுரையீரல்களை நிரப்பிக் கொண்டேன். கலனில் நீர் நிறைவது போல காற்று என்னுள் நிரம்பியது. சூரியன் எங்கோ தொலைதூரத்தில் இருந்தது. அதன் கதிர்கள் உருவாக்கிய நிழல்களால் உருவாக்கப்பட்டிருந்தது என் கண்ணெதிர்க் காட்சி.
‘’நீங்கள் டிரெக்கிங்-கில் ஆர்வம் உள்ளவரா? பொதுவாக அவர்கள் குழுவாகவே வருவார்கள். டிரக்கிங் பேக் அவர்களிடம் இருக்கும்’’
’’எனக்கு டிரெக்கிங்கில் விருப்பம் உண்டு. உலகின் பெரிய மலைகள் அனைத்திலும் ஏறியிருக்கிறேன். ஆனால் நான் இங்கே டிரெக்கிங்-க்காக வரவில்லை’’. அவரது ஆங்கிலம் ஒலித்த விதம் என்னுடைய இந்தியக் காதுக்கு ஏற்றதாகவே இருந்தது.
’’நீங்கள் எவரெஸ்டில் ஏறியிருக்கிறீர்களா?’’
சின் முத்திரையைக் காண்பித்தார்.
‘’மூன்று முறையா?’’
அவர் புன்னகைத்தார்.
’’என்னுடைய பெயர் சித்தார்த். நான் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை கணிதத்தில் ஆய்வு செய்து பேராசிரியராகச் சொல்கிறார்கள். எனக்கு விருப்பமில்லை. வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். ஒரு வாரம் ஆகிறது.’’
‘’உனக்கு எதில் ஆர்வம்?’’
‘’எனக்கு விவசாயமும் அரசியலும்.’’
‘’அபூர்வமான ஜோடி.’’
‘’ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’
’’பலர் அப்படி அபிப்ராயம் சொன்னார்களா?’’
’’கிட்டத்தட்ட எல்லாருமே.’’
‘’நீ ஆர்வமிக்க இளைஞன் என்பதால் அப்படி சொல்லியிருப்பார்கள்.’’
‘’இரண்டுக்குமே நீ லாயக்கு இல்லை என்றார்கள். அதிலும் குறிப்பாக விவசாயத்துக்கு. அரசியல் திறன்கள் தான் எனக்குக் குறைவு என நான் மதிப்பிட்டிருந்தேன்.’’
அவர் வெடித்துச் சிரித்தார்.
‘’இந்தியாவின் தேசத் தந்தை இரண்டையுமே செய்தவர் தானே! எளிய இந்திய விவசாயியின் உடையை அணிந்தார். அவரது சின்னம் போல் விளங்கிய ராட்டை விவசாயியையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலம் போல் செயல்பட்டது. உனக்கு காந்தி மேல் ஆர்வம் உண்டா?’’
சற்று தயங்கி, “ஓரளவு’’ என்றேன்.
’’உன் தந்தை என்ன செய்கிறார்?’’
’’விவசாயம்.’’
’’உனக்குத் தந்தையுடனும் முரண்பாடு. தேசத் தந்தையுடனும் முரண்பாடு. தனயர்கள் ஒரு பிராயத்தில் தந்தையரை அஞ்சி ஓடுகின்றனர். பின்னர் வேறொரு பிராயத்தில் தந்தையைப் போலவே ஆகின்றனர். உலகெங்கும் அப்படித்தான்.’’
‘’அப்பாவின் சில முடிவுகள் பிடிக்கவில்லை.’’
’’அரசியலில் எப்படி ஆர்வம்?’’
’’கல்லூரி மாணவர் தேர்தலில் பங்கேற்றிருக்கிறேன். வென்றிருக்கிறேன்’’
’’காந்தியை வாசித்திருக்கிறாயா?’’
’’சத்திய சோதனை.’’
‘’அவருடைய தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் முப்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் ‘’சத்திய சோதனை’’ மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறார்கள் அல்லது வாசித்ததாக கூறுகிறார்கள்.’’
’’நீங்கள் படித்திருக்கிறீர்களா?’’
’’எனக்குச் சிறு வயதிலிருந்தே காந்தி மீது ஆர்வம் உண்டு. நான் சிறுவனாயிருக்கும் போதே அவருடைய ‘’தென்னாப்ரிக்க சத்யாகிரகம்’’ வாசித்திருக்கிறேன். ஆஸ்டினில் என்னுடைய நண்பர்களும் அவர்கள் குடும்பத்தினரும் மூன்று ஆண்டுகளுக்கு ஃபீனிக்ஸ் பண்ணையில் காந்தி பின்பற்றிய வாழ்க்கை முறையில் சில தளர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தோம். அதில் பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். விதவிதமான வாழ்க்கை முறையில் வாழ அவை உதவிகரமாய் உள்ளன.’’
என் எதிரில் இருப்பவர் மீது எனது ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமாகிக் கொண்டே போனது. யார் இவர்? என்ன செய்கிறார் இங்கு? எப்படி இவருக்கு முக்கியத்துவம் தரத் துவங்கினோம் என்று யோசித்தேன். இருப்பினும் இவர் நான் சந்தித்தவர்களிலேயே மிக முக்கியமானவர் என்று ஒரு உள்ளுணர்வு கூறியது. ஓர் இடைச்சிறுவன் கலனில் நீர் கொண்டு வந்தான். அவனிடம் அமெரிக்கர் ஹாய் என்றார். அவன் ஹாய் வில்லியம் என்றான். நான் பாதிக் கலனை காலி செய்தேன். வில்லியம் மூன்று மிடறு அருந்தி விட்டு அச்சிறுவனிடம் நன்றி தெரிவித்து கலனை திருப்பித் தந்தார்.
‘’எப்போது வீடு திரும்புவதாய் உத்தேசம்? கையில் உள்ள பணம் தீர்ந்த பின்பா?
அக்கேள்வியின் நேரடித் தன்மை என்னைச் சீண்டியது. இவர் தன் எல்லையைத் தாண்டுகிறார்.
‘’உங்கள் கணிப்பு என்ன? நான் வீட்டாரை பயமுறுத்தவே வெளியேறியிருக்கிறேன் என்றா? நான் வீடு திரும்ப மாட்டேன்.’’
‘’சித்தார்த்! நீ புத்திசாலி. என் கணிப்பு நிறைவேறினால் மகிழ்வேன். நிறைவேறவில்லை எனில் பெரிதும் மகிழ்வேன்’’
அவர் எழுந்தார். ‘’வா! நாம் மேலே செல்வோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சூரிய அஸ்தமனம் நிகழும். இன்று நாம் அதனை சேர்ந்து பார்ப்போம்.’’
மலையின் உச்சிக்கு வந்ததும் சூரியன் இன்னும் செந்நிறம் கொள்ளாமல் இருந்தது. வானம் ஒரு கூடாரம் போல பூமியை மூடி இருப்பதாய் எண்ணினேன்.  வலசைப் பறவைகளின் நிரை ஒன்று தொலைவில் ஒரு ஏரியைக் கடந்து சென்றது. வெகு தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த கிராமத்தின் தண்ணீர் டேங்க் பளிச்சென கண்ணில் பட்டது. ஒரு டூ-வீலரை துரத்திக் கொண்டு ஒரு நாய் ஓடிக் கொண்டிருந்தது.
‘’நான் என் தந்தையுடன் முரண்பட்டு மூன்று முறை வீட்டை விட்டு வெளியேறினேன். ஒருமுறை நான் ஒரு ரெஸ்டாரண்டில் பணி புரிந்த போது என்னுடைய தந்தையின் நண்பர் அங்கே வந்திருக்கிறார். அவரை நான் கவனிக்கவில்லை. அவர் என் வீட்டில் தகவல் சொல்லி விட்டார். இன்னொரு முறை நான் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தேன். அதன் நிர்வாகத்தில் எனது நண்பனின் தந்தை இருந்திருக்கிறார். எனது கோப்பில் இருந்த புகைப்படம் மூலம் உறுதி செய்து கொண்டு வீட்டுக்கு சொல்லி விட்டார். மூன்றாவது முறை வெளியேறிப் பிடிபட்டது சுவாரசியமானது. நான் ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் பணி புரிந்தேன். எனது தந்தையின் காருக்கு பெட்ரோல் போட வேண்டியதாயிற்று. என் பணி நேரம் முடியும் வரை காத்திருந்து தந்தை என்னை அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் ஒரு தந்தை இவ்வளவு பொறுத்துக் கொள்வது அபூர்வம்.’’
‘’நீங்கள் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’
‘’கார் உதிரிபாகங்கள் உற்பத்தி, கொய்மலர் வணிகம் மேலும் ஒரு விவசாயப் பண்ணை வைத்திருந்தேன். என்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள் இருந்தன.’’
அமெரிக்காவில் மிகப் பெரிய நிலப்பரப்பையே பண்ணை என்று சொல்வார்கள் என கேள்விப்பட்டிருந்தேன்.
‘’பண்ணை எத்தனை ஏக்கர்.’’
’’ம்… நாலாயிரம் ஏக்கர்.’’
பின்னர் நான் எதுவும் பேசவில்லை. நாங்கள் சூரியனை கவனிக்க ஆரம்பித்தோம். சிவப்பு சூரியன் அசையாமல் உலகைப் பார்த்தது. எங்கள் கண்கள் சூரியன் மேல் நிலைபெற்றன.
லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ வாசித்துப் பார். மிகவும் முக்கியமான நூல் என்றார். ஃபிஷர் அமெரிக்கர் என்று கூறி விட்டு சிரித்தார். தொடுவானத்திலிருந்த மலைக்கு அப்பால் சூரியன் ஈர மணற்பரப்பில் லேசாக லேசாக அழுத்தப்படும் ஒரு ரப்பர் பந்தினைப் போல மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு ஊறுகாய்த் துண்டைப் போல சூரியன் எஞ்சியிருந்து பின்னர் பார்வையில் இல்லாமல் ஆனான்.
பகல் வெளிச்சம் சூரியன் இல்லாமல் ஆன பின்னும் நீடித்திருந்தது. வில்லியம்ஸ் இறங்குவோம் என்றார். உள்ளூர்வாசிகள் பயன்படுத்தும் சற்று இலகுவான பாதை வழியே கூட்டிச் சென்றார்.
‘’உங்கள் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருக்கிறார்களா?’’
‘’இரண்டு ஹெலிகாப்டர்கள் இருந்தன என்று சொன்னேன் அல்லவா! அதில் ஒன்றில் நானும் என் மனைவி குழந்தைகளும் பயணித்தோம். தொழில்நுட்பக் கோளாறால் ஒரு விபத்து. நான் மட்டும் உயிர் பிழைத்தேன்.’’
என்னால் சீராக இறங்க முடியவில்லை. தடுமாறினேன். உளத் தடுமாற்றம். வில்லியம் இறங்க உதவி செய்தார்.
வில்லியம் சொன்னார்:  “ஒரு ஜென் வாசகம் உண்டு. மலையேறும் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை ஏறி இறங்கியவனிடம் கேட்க வேண்டும் என்று.’’
தொடர்ந்து சொன்னார்: ‘’இனிமேல் என்ன என்ற கேள்வி எழுந்தது. என் எல்லா சொத்துக்களையும் விற்று உலகெங்கும் பல அற நிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தேன். கையில் எதுவும் இல்லை. எல்லா செல்வங்களும் துறந்தாயிற்று. இந்தியா துறவிகளின் நாடு என்பதால் இங்கு வந்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவும் இல்லை. இன்பமும் துன்பமும்.’’
நான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
‘’எங்கு செல்வதாக உத்தேசம்?’’
‘’வீட்டுக்கு.’’
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.