கடினமான நாவல்களைப் புகழ்ந்து – வில் செல்ஃப்

இங்கு கடினமான எழுத்தைப் புகழ்ந்து எழுதப் போகிறேன். அதிலும் குறிப்பாய், கடினமான நாவல்கள் குறித்து. ஏன்? ஏழாண்டுகளுக்கு முன் நான் என் அம்ப்ரெல்லா ட்ரிலஜி எழுதத் துவங்கினேன். அதன் பின் என் புனைவின் வடிவம் நவீனத்துவத்தை நோக்கிய திசையில் திரும்பியிருக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல காரணம். இன்று டிஜிட்டல் பிரதிகளும் கவனத்தை வசீகரிக்கும் பிற கதையாடல் வடிவங்களும் நாவல் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. நம் நவீன உலகின் புறப்பரப்பை விவரித்து, வாசகனை அதனுள் இழுத்துக் கொள்ளும் தனியாற்றல் நாவலுக்கே உண்டு. அந்த ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள நாவலுக்கு, soi-disant ‘கடினம்’ தேவைப்படுகிறது என்று நம்புகிறேன்.

என் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.

இப்படிச் சொல்வது, இந்த விமரிசகர்கள் ஓர் உயரத்தில் நின்று கொண்டு தம் வாசகர்களுடன் உரையாடுவது போல் இருக்கிறது. அது போக, சமூகவியலாளர்கள், “பிரஃபஷனல் க்ளோஷர்”, என்று அழைப்பதன் ஊன வடிவமாகவும் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களுக்கு மட்டுமே கருத்து சொல்லும் உரிமை வழங்கப்படும் என்பது போல், தங்கள் எல்லைகளைச் சுற்றி அணி வகுத்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனால் நம் கலாசார முதலீடு முக்கியத்துவம் இழப்பது போன்ற ஓருணர்வு நாவலாசிரியர்களுக்கு எழுவது உறுதி- ஆனால் விமரிசகர்களுக்கு இது மிக  தீர்மானமாகவே தெரியும் என்று நம்புகிறேன். தங்கள் வாடிக்கையாளர்கள் (மன்னிக்கவும், ‘மாணவர்கள்’) சொல்வது எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதால் கல்வித்துறையில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் அளித்து சலுகை காட்டுவது போல், சமகால பிரதிகளின் ‘கடின’ அளவுகளை உயர்த்திக் காட்ட வேண்டிய கட்டாயம் இலக்கிய உலகைச் சேர்ந்த விமரிசகர்களுக்கும் இருக்கிறது. நாளுக்கு நாள் லட்சியம் குறைந்து வரும் வாசகர்களை இவர்கள் இப்படித்தான் புகழ்ந்தாக வேண்டும்.

இதுவும் உண்மைதான், இன்று பண்பாட்டு பெருக்கம் அபரித விரிவடைந்திருக்கிறது. கணினி பலகையின் ஒரு சில பொத்தான்களை தட்டினால் போதும்- நீங்களும் ஒரு கலாசார மைடாஸ்தானோ என்பது போல்-, பரந்துபட்ட இவ்வுலகம் உங்களுக்கு அளிக்கக்கூடிய இலக்கிய, திரைப்பட, தொலைக்காட்சிச் செல்வங்கள் அத்தனையும் உங்களை வந்தடையும். இப்படிப்பட்ட ஒரு சூழலில் ‘கடின’ நாவல் என்ற நினைப்பு செல்லுபடியாவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.  ஆனால் இப்படி விவரிப்பதும் நம் போங்காட்டத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறது: கடின நாவல்கள் ஒருபோதும் சிரமப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டிய கலாசார வஸ்துக்களாய் இருந்தது கிடையாது. கலாசார முதலீட்டுக்கும் வணிக முதலீட்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அடிப்படையில்தான் கடின நாவல்களின் இருப்பே சாத்தியமாகிறது. இன்றைய நியோலிபரல் காலகட்டத்தில் இந்த வேறுபாடும் எதிர்ப்பாரின்றி நிர்மூலமாகி வருகிறது.

இல்லை, கடின நாவல் என்பது எப்போதும் வாசக லட்சியமாக இருந்திருக்கிறது. இந்த லட்சியம் புக் ஆஃப் தி மன்த் கிளப் பரிந்துரையில் லெதர் பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு அலமாரியில் தூசு சேர்ப்பதில் மட்டும் முடிந்தாலும் சரி, அது உயர்ந்த ஒன்றுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, மேற்கு கலாசாரத்தின் மையத்திலிருந்து நாவல்  விளிம்புகளை நோக்கி விலகிச் செல்கையில், இந்த லட்சியமும் ஒரு முற்றழிப்பாய் நலிவடைகிறது என்று நினைக்கிறேன். ஒரு சிலர் இப்படி மறுக்கக்கூடும்: “ஜாய்ஸின் வாழ்நாளில் அவரது யூலிசஸ் மிகக் குறைவான எழுத்தாளர்களை மட்டுமே ஈர்த்தது. அவர் இறந்தபின் அந்த அளவுகூட இல்லை –இத்தனைக்கும் அது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நாவல் என்று பல விமரிசகர்களும் சொல்வதைப் பார்க்க வேண்டும்…” ஆனால் அந்தக் காலம் முற்றிலும் மாறுபட்டது- 1920களில் கல்வியறிவும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் அவ்வளவு குறைவாக இருந்தபோதும் யூலிசஸ் ஆபாசமான நாவல் என்று தடை செய்யப்பட்டதை இங்கு நினைத்துப் பார்க்கலாம்.

இன்று பல பத்து லட்சம் மக்கள்- காகிதக் கணக்கிலாவது- இளங்கலை பட்டக்கல்வி படித்திருக்கிறார்கள். தங்களுக்கு சவால் விடும் உரைநடையை வாசிக்கும் ஆர்வத்தை இந்தக் கல்வி அளித்திருக்கும் என்று எதிர்பார்ப்போம்- ஆனால் அப்படியில்லை போலிருக்கிறது. இதைச் சொன்னால் என் பதினாறு வயது மகன், “போதும், அப்பா, உண்மையை ஒப்புக்கொள். நீ வானத்தைப் பார்த்து முஷ்டி உயர்த்தும் கிழவன், அவ்வளவுதான்,” என்கிறான்.

ஆனால் புதிய ஊடக தொழில்நுட்பங்களுக்கு எவ்வகையிலும் நான் எதிரானவன் அல்ல. அவற்றை நான் கலாசார விஷக்கிருமிகள் என்று நினைப்பது இருக்கட்டும், அவை ‘மோசமானவை’ என்றுகூட நான் நினைப்பதில்லை. இதுவரை இருந்தது போலவே இனியும் மானுட அறிவு இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் புத்தகம் வாசிப்பது, அது தொடர்பான விஷயங்கள், என்ற வகையிலான குறிப்பிட்ட ஒரு மானுட அறிவு குறைந்து வருகிறது என்பது நிச்சயம். நம் நினைவுகளின் இடத்தை ஸ்மார்ட்போனின் ‘நீள் மனம்’ நாளுக்கு நாள் பிடித்து வருகிறது. ஆதார நூல்தொகைக்கு உரியவை என்று என்று நாம் எதையெல்லாம் நினைக்கிறோமோ அதையெல்லாம் இணையத்தின் கூட்டுமனம் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகம் பேசப் போவதில்லை- ஆனால் சமகால சினிமாவின் மீது திரைப்படச் சுருள் செலுத்தும் எதேச்சாதிகாரத்தின் தாக்கத்தை நினைத்துப் பார்ப்பது நல்லது: ஷாட்களின் நீளம் நாட்பட நாட்பட குறைந்திருக்கிறது. ஷாட்களுக்கு இடையே குறுக்கில் வெட்டி பார்வையாளர்களின் கவனத்தைக் கைப்பற்றும் எடிட்டிங் உத்தி இல்லாத இடமே இல்லை. நம்மால் ‘தொடர்புபடுத்தி’ கொள்ளக்கூடிய பாத்திரங்கள் கொண்ட ‘பரபரப்பாய் பக்கம் திருப்பும்’ புத்தகங்கள் மீது இலக்கிய உலகம் கவனம் செலுத்துவது இதனுடன் ஒப்பிடத்தக்கது. இந்த இரு கதையாடல் ஊடகங்களும் வாசக அனுபவத்தை இன்னும் எளிதாய் மாற்றும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

நவீனத்துவப் பாணி எழுத்துமுறை- ஏதோ ஒரு வகை நனவோடை வடிவம், அல்லது தொடர் அல்லது நிகழ் காலவரிசையில் அமைந்த ஒற்றைப் பார்வை கதைகூறல், ஆகியவற்றின் சேர்க்கையால் அமைந்தது என்று வைத்துக் கொண்டால், அது- “திரைச்சுருள் எதேச்சாதிகாரத்தின்” எதிரிடை.  எனினும் நான் நவீனத்துவ அனுபவத்தைத் துல்லியமாய் வெளிப்படுத்தும் நோக்கத்துக்கு ஏற்ற பாணி என்று இதையே முன்வைப்பேன். திகட்டத் திகட்ட மிகும் ஊடக நுகர்வும் அதற்கான கட்டாய தேவையும் நவீனத்துவ அனுபவத்தின் தனித்தன்மைகள். என்ன சொன்னாலும், சமகால உலகில் மேலோங்கி நிற்கும் இயல்புகள் அதன் அறுபடா தொடர்ச்சியும் காலமற்ற தன்மையும்தான்- இணையம் அனைத்தையும் சுருட்டி நிரந்தர தற்போதில் தருகிறது.

ஆக, ஜாய்ஸ், வுல்ஃப் மற்றும் ஏனைய பிறரை இப்பாணியை நோக்கிச் செலுத்தியது இயல்புவாதம்தான்: மானுட புலனனுபவம் மற்றும் அறிதிறன் மீது நவீனத்துவம் செலுத்திய தாக்கத்தை மொழிக்குட்படுத்தும் நோக்கம். மொழியும் மானுட அனுபவமும் ஒருபோதும் இணைதன்மை கொண்டிருக்க முடியாது என்பதால் நவீனத்துவ திருப்பம்- இது மொழியை நோக்கித் இருபதாம் நூற்றாண்டு தத்துவத்துறை திரும்புவதை பிரதிபலிக்கிறது-, வெறும் கடினத்தன்மையில் முடிந்து விட முடியாது. பல்பொருள்தன்மை மற்றும் பன்மொழித்திறன் கொண்ட ஃபின்னகன்ஸ் வேக்கின் முட்டுச்சந்தில்: “Fools top! Singty, sangty, meekly loose, defendy nous from prowlabouts. Make shine on the curst. Emen.” அல்லது, இதற்கு மாற்றாய், பிற்கால பெக்கட்டில் நாம் காண்பது போல் மொழியின் பொருள் தளங்களைக் கொத்தியும் ஒடித்தும் சிதைத்தழிப்பது.

ஒப்பீட்டளவில் என் எழுத்து சாதாரணமானது, நேரடியானது. ‘ஃபோன்’ என்ற என் நாவலிலிருந்து முன்திட்டம் ஏதுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியம் இது:

“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்று அவன் ஃபியோனாவிடம் ஒரு முறை கேட்டிருக்கிறான், அவள் அவன் மீது ஒரு பார்வை வீசினாள்… சொற்களைவிட செயல்கள் உரக்கப் பேசுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் பரேடில் அவர்கள் இருந்தபோது, சனாதன ஆராதனையின் மென்னலைகளில் நனைந்திருக்கையில்,  ஒரு முறை மட்டுமே அவளது அபச்சார கணவனுக்கு அந்தக் கேள்வி எழுந்திருக்கிறது… இந்நாள் தாரும் எங்கள் அன்றாட அடக்கம்”

இங்கு வாசகர்களுக்கு கடினமாக இருக்கக்கூடிய விஷயங்களில் சாய்வெழுத்துக்கள் ஒன்று என்று நினைக்கிறேன். உருவமற்ற எண்ணங்கள் சொற்களாய் திரளும் கணத்தைக் குறிக்க நான் அதைப் பயன்படுத்துகிறேன். அன்பு வாசகரே, நீங்கள் இதை சீக்கிரமே உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்- முதல் முறை சாய்வெழுத்துகளில் குறிப்பிடப்படும் சொற்றொடர் இந்தக் கருத்தை நிகழ்த்திக் காட்டுகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் ஒரு சில வாசகர்கள், இந்தக் குறுகிய மேற்கோளில்கூட, விவரிக்கப்படும் சூழலை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று நம்புகிறேன்- இங்கிலாந்தில் மட்டுமாவது, சர்ச் பரேட் என்பது ராணுவத்தால் நிகழ்த்தப்படுவது.

அடுத்து ஜாய்ஸின் யூலிசஸ் நாவலில் வரும் இரு வரிகள், தன்னிச்சையாய்த் தேர்ந்தவை: “முன்னது (நாம் அக்கறையின்மையை கருத்தில் கொள்கிறோம்) மிக உண்மைதான் என்றாலும், வயிற்றறை உறைச்சவ்விலிருந்த கடற்பாசிகளை எண்ண மறந்த செவிலிகளை அவன் மேற்கோள் காட்டும் சம்பவம் வழமையானது என்று சொல்வதற்கில்லாத வகையில் அபூர்வமானது”. இதன் வாக்கிய அமைப்பு சிறிது விநோதமாக இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் இந்த வாக்கியம் – திசையிழந்து முடிவடையும் வாக்கிய அமைப்பின் முத்திரைகள் அத்தனையும் கொண்ட ஒன்றாயிருக்கும்போதே- புரிந்து கொள்ளப்படக்கூடியது: இயேசுவின் பிறப்புக் காட்சியைப் பகடி செய்யும் ஹெர்பர்ட் ஸ்பென்சரை இங்கு ஜாய்ஸ் பகடி செய்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் (இது ‘சூரிய எருதுகள்’ என்ற பகுதியில் வருவது).

யூலிசஸ் நாவலின் கதை கூறும் குரல் இது போல் காலத்தில் பின்சென்று ஒலிப்பதால் சில விமரிசகர்கள், ஆசிரியன் என்று ஒருவன் கொண்டதாய் பிரதியைக் கொள்ள முடியாது, “அமைப்பாளன்” மட்டுமே உள்ளான், என்ற பின்நவீனத்துவ தரிசனத்தை ஏற்க வேண்டியதாகிறது. என் எளிய முன்னூலில் பொருட்களின் தொடக்கம் பற்றிய ஆய்வு என்று இது போன்ற மந்திர தந்திரம் எதுவும் கிடையாது: பிரதி எந்த மனதின் வழி குவிகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்- இந்த மனங்களுக்கு இடையிலான இடமாற்றம் சீஸ்-சாண்ட்விச்-வாயில் வழியே நிகழ்கிறது என்றாலும்கூட. உயர் நவீனத்துவர்களுடன் என் பிரதி எங்கு ஒன்றுபடுகிறது என்றால், பாத்திரத்தைக் கொண்டு உரைப்பதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்கும் இடையிலுள்ள மரபார்ந்த வேறுபாடு கைவிடப்படுகிறது- அனைத்தும் காட்டப்படுகின்றன, ஆளுமையற்ற படர்க்கைக் குரலில் கதைசொல்லி எதுவும் கூறுவதில்லை. புற உரையாடலையும் அக உரையையும் இணைக்கவும் செய்கிறேன்,  இவற்றினூடே விவரணைகள் கொண்ட பத்திகள் அடுத்தடுத்து அடுக்கப்படுகின்றன- இத்தனையும் தொடரும் நிகழ்கால அணிமையுள் அடக்கம். ஆனால், ஒரு தேர்ந்த ட்ரோம்போன் வாத்தியக்காரனின் சரளமான நீர்மையுடன், ஓர்மையின் உள் புகுந்தும் வெளியேறியும் ஒரே வாக்கியத்தில் நோக்கு குவியத்தை மாற்றும் மேதைமை ஜாய்ஸ்சுக்கு இருந்தது, அவர் போலல்லாமல் என்னால் ஒரு சமயத்தில் ஒரு மனதில்தான் இருக்க முடிகிறது- வாக்கிய அளவிலேனும்.

இதுபோக வாசகனுக்கு அறிமுகமில்லாத சுட்டுதல்கள், உணர்த்துதல்கள் என்ற பிரச்சினை- இதனாலும் அவனுக்கு கடினமாக இருக்கலாம். 1904ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினாறாம் தேதியன்று நேர்ந்த உண்மை நிகழ்ச்சிகள் குறித்த ஏராளமான சுட்டுதல்கள் (அவற்றோடு டப்ளின் நகரின் பருண்ம யதார்த்தம்), நாவல் முதல் முறை அச்சிடப்பட்டபோது அதைப் படித்த வாசகர்களால் உடனே புரிந்து கொள்ளப்பட்டிருக்க  வாய்ப்பில்லை- இப்போது முடியுமா என்பதை விட்டுவிடுவோம்! யூலிசஸ் படிக்கும் என் மாணவர்களிடம் அதை முழுமையாய் மும்முறை வாசிக்கச் சொல்கிறேன்:  முதலில் உள்ளது உள்ளபடியே, இன்னொரு முறை நாவலைவிட நீண்ட சுட்டுதற் குறிப்புகள் கொண்ட கையேட்டின் துணையுடன் ஒவ்வொரு வாக்கியமாக, மூன்றாம் முறை, சுட்டுதல்கள் அனைத்தையும் அறிந்தபின், ஜாய்ஸின் உரைநடையின் முழுவீச்சையும் உணர்ந்து இன்னுமொரு வாசிப்பு.

யூலிசஸ் நாவலில் யாரும் அறிவதற்கில்லாத சுட்டுதல்களை ஜாய்ஸ் சேர்த்திருப்பது, அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஊடக முற்றுகையின் உலகை நோக்கி, ஒரு நவீனத்துவராய் அவர் அமைத்த மகத்தான கைகாட்டிகளில் ஒன்று என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் சுவடிகளின் எல்லையைக் கடந்து பிரதி தாவிச் செல்லும் என்பதை ஜாய்ஸ் உள்ளூர உணர்ந்திருந்தார்- இது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது: இன்று நீங்கள் டிஜிட்டலாக வாசிக்கிறீர்கள் என்றால், ஒரு சுட்டுதல் பிடிபடாதபோது, உங்கள் மைடாஸிய (அல்லது டிரேஸியாஸிய) பொத்தான் அழுத்தல்களில் சில, புதிருக்கு விடையளிக்கும். ஆனால் முன்னர் குறிப்பிட்டபடி, ஜாஸ்ஸ்சும்கூட இயல்புவாதத்தின் வடிவமொன்றை முழுமையாய்க் கைப்பற்றவே முயற்சி செய்து கொண்டிருந்தார்.    

1904 அல்லது 1858ஐ விடுவோம், 1958 என்று வைத்துக் கொண்டால், அந்த ஆண்டு மானுட மனதின் உள்ளடக்கம் எவ்வாறிருந்தது என்பதை உணர்வது குறித்து நீங்கள் கடுமையாய்ச் சிந்தனை செய்வீர்கள் என்றால்,தெருப் பெயர்கள் முதல் வளர்ப்புப் பிராணிகளின் பெயர்கள், விளம்பரப் பாடல்கள் என்று அதில் ஏராளமான அளவில் இடம் பெற்றிருக்கும் கணப்போதைய தகவல்கள் உங்களுக்கு ஒரு சிறிதும் அறியப்படுவதற்கில்லாது போய் விடும் என்பது வெகு சீக்கிரம் தெளிவாகும்- அதிலும் குறிப்பாய் “எண்ணம்” என்ற சுட்டுதல் வேடம் தரித்துத் தோன்றுபவை. இது ஒரு பழம்பொய்- 1970களில் படமாக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் கதை எப்போதும்… எழுபதுகளை நினைவுபடுத்துகிறது. அதே போல், கடந்த கால காட்சிகளைக் களமாய்க் கொண்டு கதை எழுதும் நாவலாசிரியர்கள் கடந்த காலம் குறித்து தங்கள் வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த (அல்லது அவர்கள் அரைகுறையாய் அறிந்த) கூறுகளையே சுட்டுகிறார்கள்.

என் முன்னூலில் சில, சிறிது தொலைவு கூடுதலாய் உள்ள கடந்த காலத்தைக் களமாய்க் கொண்டிருக்கின்றன- யாரும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாத சுட்டுதல்கள் உள்ளன- ஆனால் தோராயமாய்ச் சொன்னால், அவற்றில் பலவும் சமகால கட்டத்தில் இடம் பெறுகின்றன- எனவே ஒரு பொது வாசகன் இணைய தேடல்களுக்கான தேவைகள் இன்றி அவற்றைப் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறேன். எனினும், எனக்கு இணைய தேடல்களில் ஒவ்வாமையில்லை: ஜாய்ஸ்சின் தலைமையை ஏற்று, நான் என் முன்னூல் வடிவத்திலும்கூட, ஏட்டின் எல்லைகளை உடைத்துக் கொண்டு நம் வாசிப்பு எப்படி மீறிச் செல்கின்றது என்பதை நிகழ்த்திக் காட்ட விரும்பினேன். நவீனத்துவ பரிசோதனை முயற்சிகளைத் தொடர்வதற்கான பொருத்தமான முறை இது என்று தோன்றியது. ஆனால் இதன் வாசிப்பு வாசகர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் கடினமாக இருக்குமென்றால் அதற்கு ஒரு காரணம்தான் உண்டு: எந்த இலட்சியம் இதைவிட கடினமான பிரதியான யூலிசஸ் நாவலை முதிர்ந்த வாசகன் ஒவ்வொருவனும் அடைய விழைந்த உச்சமாக்கியதோ, அந்த இலட்சியத்தை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்பது மட்டுமே காரணம்.

புத்தகம் வாசிப்பவர்கள் மூளையை நவீன நரம்பியல் ஆய்வாளர்கள் ஸ்கான் செய்கிறார்கள். அதன் பின் நம்மைப் போலவே அவர்களும் புத்தகப் பக்கத்தின் புதிரான கரும்புள்ளிகளை நம் கற்பனை மற்றும் அனுபவத்தின் சாரமாய் மாற்றுவதில் பங்கேற்கும் கார்டெக்ஸ் பகுதிகள் எவ்வளவு இருக்கின்றன என்று அதிசயிக்கிறார்கள். ஆனால் பலவற்றைவிட ஒரு சில பிரதிகள் மூளைக்கான சிறந்த வனப்பயிற்சியகமாக இருக்கப் போகின்றன என்பது தெளிவு. தொய்வடைந்த மணிக்கட்டுகளுடன் எளிய உடற்பயிற்சி செய்தவர்கள் யாரும் அதிகம் தசை கூட்டியதில்லை என்பது போலவே யாரும் எளிய வாசிப்பால் அறிவாளியானதில்லை… டான் பிரௌனைச் சொல்கிறேன்.

நன்றி : லிட்ஹப் http://lithub.com/will-self-in-praise-of-difficult-novels/

1826

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.