துவக்கம்

 
னைக்காரன் சத்திரத்துக்கு மேற்கே மூன்று கிலோமீட்டர் தள்ளி கொள்ளிடக் கரையில் இருக்கும் காட்டுச்சேரி கோதண்டராமர் கோவிலின் அதிகாலை ஆலயமணி ஒலிப்பது, திடல் ராமலிங்க சாமி மடத்தில் ஜோதி முன்னால் அமர்ந்திருந்த கோவிந்தசாமித் தேவருக்குக் கேட்டது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எனத் திரும்பத் திரும்ப முணுமுணுத்தார். மடத்தில் பரதேசி சாமி இருந்த போதிலிருந்து சொல்லத் தொடங்கியது. ஒரு நாளில் இதனை எத்தனை முறை சொல்கிறோம் என எண்ணிப் பார்த்தார். காலை விழித்தவுடன் சட்டெனச் சூழும் இருளில் தனிமையில் சொல்வார். வீட்டை விட்டு வீதியில் வந்து நிற்கும் போது. தொழுவத்து மாடுகளின் கழுத்து மணியோசை கேட்கும் போது. பள்ளிக்கூடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் தண்டவாள இரும்புத் துண்டு ஒலி எழுப்பும் போது. எப்போதாவது கொள்ளிடம் பாலத்திலிருந்து ரயில் எழுப்பும் ஹாரன் கேட்கும் போது. கொள்ளிடக் கரையில் நின்று ஆற்றைத் தினமும் பார்ப்பார். ஆற்றோட்டம் பெரும்பாலும் வடக்குப் பக்கமாக இருக்கும். கருநிலவு, முழுநிலவு தினங்களிலும், அதையொட்டிய தினங்களிலும், கடல் பொங்கி தண்ணீர் ஆற்றின் ஓட்டத்துக்கு எதிர் திசையில் மேலேறும். தினமும் நதியை வணங்குகிறார். எழுபத்து ஐந்து வயதாகிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக வணங்குகிறார். அதாவது மழபாடியிலிருந்து காட்டுச்சேரி வந்த தினத்திலிருந்து.
வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டார். தவிட்டுக் குருவிகளும், அணிலும், காகங்களும், சிட்டுக்குருவிகளும் அவர் வரும் நேரம் அறிந்து திண்ணையிலும், ஓட்டிலும், வீதியிலும் குழுமியிருந்தன. அவரது பேத்தி ரொட்டி டப்பாவை எடுத்து வந்து தந்தாள். ஒரு கை நிறைய ரொட்டிகளை எடுத்து நுணுக்கி அவற்றை நோக்கி வீசினார். அவை மகிழ்ந்து ஒலி எழுப்பின. அவ்வொலி அவர் வீடெங்கும் நிறைந்தது.
அவரது அண்ணன் பேரனான சுரேஷ் வந்து திண்ணையில் அவருக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்தான். தேனீர் அருந்துகிறானா என்று கேட்டார். அவன் மறுத்தான்.
‘’எலெக்‌ஷன் வருது. எல்லா கட்சிக்காரங்களும் ஓட்டு கேட்டு வரணும்னு சொல்றாங்க. அதோட இங்க கட்சி கிளை ஆரம்பிக்கணும்னு துடியா இருக்காங்க. காலம் மாறுதுல்ல.’’
’’பஞ்சாயத்து என்னைக்கு முடிவாயிருக்கு?’’
’’இன்னும் ரெண்டு நாள்ல. ராமலிங்க சுவாமி மடத்துல.’’
’’சரி! அங்க வச்சு பேசிப்போம்.’’
தேவருக்கு கொள்ளிடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மெல்ல நடக்கத் துவங்கினார். பேத்தி அவசரமான குரலில் சாப்பிட சீக்கிரம் வரச் சொல்வது கேட்டது. தழைய கட்டப்படாத வேட்டி பாதங்களுக்கு மேலே ஏற்ற இறக்கமாயிருந்தது. ஆற்றங்கரையின் ஆலமர நிழலில் வந்து நின்றார். வழக்கமாக அமரும் தடிமனான வேரின் மேல் அமர்ந்து கொண்டார். கொள்ளிடத்தின் மணல் பரப்பு காலை வெயிலில் கண்ணைக் கூசுமாறு வெளிறிக் கிடந்தது.
 
‘’கோவிந்தா! இப்பவே மலைச்சா எப்படி! குடியானவன் பலம் கையிலயும் மனசுலயும். நாம மண்ணோட இருக்கோம். மண்ணோட சேந்து வேலை செய்யறோம். நம்ம உழைப்பு, மண்ணோட தன்மை, வானத்தோட கருணை மூணும் சேந்துதான் நமக்கான பலனைத் தரும். நம்ம உழைப்புல குறை இல்லாம இருந்தா மண்ணையும் வானத்தையும் கூட நாம நினைக்கறத செய்ய வைக்கலாம்,’’ ஐயாவின் சொற்கள் நேற்று கேட்டது போல் இருக்கிறது. மழபாடியிலிருந்து புறப்பட்டு வந்து அறுபது ஆண்டுகள் ஆகி விட்டது. பரதேசி சாமி சொல்படி கேட்டு நூறு குடும்பங்கள் கிளம்பி வந்தன. அங்கே மூன்று ஆண்டுகளாக கடுமையான பஞ்சம். பல வருடமாக அணையாமல் இருந்த வள்ளலார் ஜோதியை எப்படி விட்டு விட்டு வர முடியும் என விசனப்பட்டனர். பரதேசி சாமி சொன்னார்:
‘’ஏன் விட்டுட்டு வர்ரதா நினைக்கறீங்க. நெருப்பு எல்லா இடத்திலயும் இருக்கு. அது இல்லாத இடம் இல்ல. மனுஷன் வயத்தில அது பசியா எரியுது. பசிச்ச மனுஷனுக்குச் சோறு கிடைக்க ஏற்பாடு செய்யறதுதான் பெரிய கருணைண்னு ராமலிங்க சாமி சொல்றாரு. மனுஷன் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்கு போய்ட்டுதான் இருக்கான். தண்ணி குட்டையாத் தேங்கியும் இருக்கும். ஆறா பல ஊருக்கும் ஓடவும் செய்யும். மனசும் அந்த மாதிரிதான். நாம குட்டையாத் தேங்கப் போறமா ஆறா ஓடப் போறமான்னு நாம தான் முடிவு பண்ணனும்.’’
மாடு மேயக்கூட புல் தலை காட்டாத பஞ்சம். ஊர்க் கோவிலில் சுந்தர காண்டம் வாசித்தார்கள். மகாபாரதத்தின் விராட பர்வம் வாசித்தார்கள். இயற்கை கருணை காட்டுவதாகத் தெரியவில்லை. பண்ணையார்களே கையைப் பிசைந்து கொண்டிருந்த போது மேலாண்மை பார்ப்பவர்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இக்கட்டான ஒரு நாளில் பரதேசி சாமி வந்தார். ஊருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். தைப்பூசம் அன்னதானத்துக்கு நெல் வாங்கிப் போக வருவார். காவி கட்டவில்லை. வள்ளலாரைப் போல வெள்ளாடை உடுத்தியிருப்பார். எங்குமே நடந்தே போவார், வருவார். வடலூர், சிதம்பரம், பழனி, மதுரை, திருவண்ணாமலை என நடந்தே சுற்றுவார். அவருக்கென எந்த பணியும் கிடையாது. செல்லும் ஊர்களில் சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்வார்.
‘’சிதம்பரத்துக்கு தெக்க காட்டுச்சேரின்னு ஒரு ஊரு. அங்க ஒரு வைஷ்ணவ மடத்தோட எழுபத்து அஞ்சு வேலி நிலம் இருக்கு. கரம்பா கிடக்கு. ஊர்ல அவங்க கோயில் ஒன்ணு இருக்கு. மடம் இருக்கறது கும்பகோணத்துல. அங்க உள்ள காரியஸ்தர்லாம் எனக்கு வேண்டியவங்க. நீங்க அந்த ஊருக்குப் போங்க. நான் உங்களுக்குத் தேவையான ஏற்பாடு பண்ணித் தரேன்.’’
பண்ணையார்களிடம் சொல்லி விட்டு ஒரு அதிகாலையில் புறப்பட்டார்கள். நடக்கத் துவங்கியதிலிருந்தே யாரும் எந்த வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. மாடு கன்றுகளின் கழுத்து மணி ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கொள்ளிடக் கரையோரத்தின் ஆலமரப் பறவைகள் திரளான மனிதர்களைப் பார்த்ததும் கிளைகளிலிருந்து எழுந்து கிரீச்சிட்டு வானில் பறந்து மீண்டும் கிளையில் வந்து அமர்ந்தன. சிறுவர் சிறுமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அடிக்கடி இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே கைக்குழந்தைகள் அழுவது பெரிதாகக் கேட்டது. ஒரு குழந்தை அழுது முடித்ததும் அடுத்த குழந்தை அழுதது. மூத்தவர்கள் அவ்வப்போது நாராயணா நாராயணா என்றனர். ஒவ்வொருவரும் சுமை சுமந்து சென்றனர். தனித்தனியாக ஒவ்வொரும் அடைந்த துக்கம் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாக வெளியேறிச் செல்வதால் வெளிப்படாமல் அமுங்கிக் கொண்டது. ஓயாமல் வாய் பேசும் பெண்கள் கூட ஒரு சொல்லும் உதிர்க்காமல் இருந்தனர். கொள்ளிடக் கரை ஒரு பகுதியில் சீராகவும் சில பகுதிகளில் முள் மண்டியும் இருந்தது. முள்ளை அரிவாள் கொண்டு அகற்றி ஓரமாகப் போட்டபடி வயதில் இளையவர்கள் முன்னால் சென்றார்கள்.  இரண்டு நாள் இராத்தங்கல். கரையோரத்தில் இருக்கும் ஐயனார் கோவில்களில் தங்கிக் கொண்டனர்.  வேலும் சூலமும் நடப்பட்டிருந்த சிறிய ஆலயங்களில் ஐயனார் விழியுருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவலும் பொறியும் தான் உணவு. நெருப்பு தேடத் தேவையில்லை என்பதால் மூட்டையாக கட்டி எடுத்து வந்திருந்தனர். குழந்தைகளுக்கு முழு வயிறு கொடுத்தார்கள். பெண்கள் முக்கால் வயிற்றுக்கு உண்டார்கள். ஆண்கள் வழக்கமாக உண்பதில் பாதி உண்டனர். மூன்றாம் நாள் அந்திப் பொழுதில் காட்டுச்சேரி வந்து சேர்ந்தனர்.
பரதேசி சாமி கோயிலில் காத்துக் கொண்டிருந்தார். பெரிய கோவில் ஆங்காங்கே இடிந்து கிடந்தது. பூவேலைகள் செய்யப்பட்ட உயரமான மரக்கதவு தள்ளும் போது பெரிதாக சத்தம் போட்டது. சுற்றியிருந்த பிரகாரத்தில் புதர்ச்செடிகள் மண்டிக் கிடந்தன. வயதான பட்டர் ஒருவர் சன்னிதியில் விளக்கேற்றி வைத்திருந்தார். மழபாடி மக்களைப் பார்த்ததும் உலை கொதிக்க ஆரம்பித்தது. மூன்று நாள் நடந்ததன் களைப்பு மக்கள் உண்பதில் தெரிந்தது. மக்கள் உணவை நம்பிக்கையாய்ப் பார்த்தனர். படுத்து உறங்க வாய்ப்பு இருந்த இடங்களிலெல்லாம் உறங்கினர். பெண்களும் குழந்தைகளும் ஆலயத்திலும் மரத்தடியிலும். ஆண்கள் வெட்டவெளியில். சிலர் கொள்ளிடம் மணற்பரப்புக்குச் சென்றனர். மறுநாள் ஊர்க்கூட்டம் கூடியது. பரதேசி சாமி பேசினார்.
‘’இந்த இடம் கோயில் சொத்து. யாரோ தர்மவான் கோயிலுக்காக மடத்துக்கு கொடுத்தது. பொது சொத்து எல்லாருக்கும் பயன்படனும். இந்த வருஷம் பூசத்துக்காக வசூல் செஞ்ச நெல் முழுசையும் நான் உங்களுக்குத் தரேன். பத்தாததுக்கு கும்பகோணம் மடத்துலேந்தும் அனுப்பறதா சொல்லியிருக்காங்க. வழக்கமா குத்தகை ஆறுல ஒரு பாகம். ஆனா உங்களை மடம் பத்துல ஒரு பாகம் தரச் சொல்லிக் கேட்டிருக்கு. முதல் வருஷம் குத்தகையைத் தள்ளுபடி செய்யறதா சொல்லியிருக்காங்க.’’
மண் வெட்டிகளும் அரிவாள்களும் கரம்புக் காட்டில் வேலை செய்யும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. தலைக்கட்டு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்; வேலையை மட்டும் செய்வோம் என்றார். அணி அணியாகப் பிரிந்து வேலை செய்தனர். வாரம் ஒரு முறை அணி கலந்து போடப்பட்டது. முள் மண்டிய நிலத்தைச் சீர் செய்யும் பணி. கிணறு தோண்டும் பணி. கொள்ளிடக் கரையின் பனை மரங்களின் ஓலையை எடுத்து வந்து குவிக்கும் பணி. வேலை நடக்க நடக்க ஊரின் தோற்றம் மாறிக் கொண்டேயிருந்தது. வானம் கைவிடாது என்ற நம்பிக்கை எல்லாருக்கும் வந்தது. வானத்தையும் மண்ணையும் நம்பி எவரும் கைவிடப்பட்டதில்லை என மனதில் உறுதி செய்து கொண்டனர். பரதேசி சாமி அவ்வப்போது வந்து சில நாட்கள் தங்கினார்.
‘’உழைக்கறவனுக்கான இடத்தைக் கொடுக்கற பொறுப்பை தெய்வங்கள் எடுத்துக்கும் பாத்துக்கங்க,’’ என்றார்.
காட்டுச்சேரியில் நடக்கும் வேலையைக் கேள்விப்பட்டு மடத்து நலம்விரும்பிகள் சிலர் சேர்ந்து ஜோடிக் காளைகளையும் ஏர்களையும் வாங்கி அனுப்பி வைத்தனர். ஓரிரு மாதங்களில் வானில் கருமேகம் திரண்ட போது சீர் செய்யப்பட்டிருந்த நிலத்தில் பெண்கள் காய்கறி விதைகளைத் தூவி அதனைப் பாதுகாத்தனர். ஆண்கள் மழையிலும் தங்கள் பணியை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தனர். அந்த ஆண்டு கொள்ளிடத்தில் நீர் நிரம்பப் பாய்ந்தது. இவர்கள் வெட்டிய கிணறுகளிலெல்லாம் நீர் சுரந்து பொங்கியது.
பரதேசி சாமியும் மடத்து சிப்பந்திகளும் வந்து நிலத்தை மழபாடிக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பகிர்ந்து கொடுத்துக் கணக்கு எழுதிக் கொண்டனர். மேய்ச்சலுக்கென நிலம் ஒதுக்கித் தந்தனர். மேடான ஒரு பகுதி குடியிருப்புக்கென ஒதுக்கப்பட்டு அதற்கான வாடகையும் அறிவிக்கப்பட்டது. எல்லா வரி வாடகையும் இரண்டாண்டுகளுக்கு விலக்கு தரப்பட்டது. மாடு பூட்டிக் கமலை இழுத்து தண்ணீர் பாய்ச்சினர். கிணறு கொள்ளிடம் நீரை சுரந்து கொண்டேயிருந்தது. அந்த ஆண்டு விளைச்சலே அமோகமாக இருந்தது.

 
ராமலிங்க சாமி மடத்தில் பஞ்சாயத்து கூடியது. சுரேஷ் ஏற்பாடுகளை ஆர்வமாகச் செய்து கொண்டிருந்தான். எல்லாரும் வந்து விட்டார்களா என்று பார்த்தான். நடுத்தர வயதுக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். சற்று திகைத்த கிழவர்களை அவர்கள் ஊக்கி முன்னால் அமர வைத்தனர். இளைஞர்கள் சற்று தள்ளி குழுவாக நின்று கொண்டு அசட்டையாக பேசிக் கொண்டிருந்தனர். கோவிந்தசாமித் தேவர் வந்ததும் எல்லாரும் எழுந்து நின்றனர். சுரேஷ் இளைஞர்களை கூட்டத்தில் வந்து சீக்கிரம் சேருமாறு சைகை செய்தான். கூட்டம் எச்சொல்லும் பேசாமல் இருந்ததால் அங்கு நிகழும் சிறு செய்கை கூட அடர்த்தி மிகுந்ததாக இருந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் சீராக சுடர் விட்டுக் கொண்டிருந்த ஜோதியை அனைவரும் வணங்கினர்.
சுரேஷ் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான்.
‘’காட்டுச்சேரி வந்து மூணு தலைமுறை தாண்டி போச்சு. அப்ப பல விஷயங்களுக்குக் கட்டுப்பாடு இருந்துச்சு. அது நமக்கு பிரயோஜனமாவும் இருந்துச்சு. இப்ப காலம் மாறியிருக்கு. மாறின காலத்துக்கு ஏத்தாப்போல நாம நடக்கணும். இப்பவும் பஞ்சாயத்து கட்டுப்பாடுன்னு கட்டுப்பெட்டியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறோம்.’’
அனைவரும் தேவரைப் பார்த்தனர். அவர் கனைத்துக் கொண்டார். எங்கிருந்தோ பேசத் துவங்க முற்பட்டு பின்னர் அதனைக் கைவிட்டு வேறு இடத்திலிருந்து துவங்குகிறார் என்பது அவரது முகத்தின் குறிப்புகளிலிருந்து தெரிந்தது.
’’மழபாடி ஞாபகம் இங்க இருக்கற சில பேருக்குத்தான் இருக்கும். ரெண்டு வருஷம் பஞ்சம் நம்மல இங்க இழுத்துட்டு வந்தது. இன்னைக்கு வரைக்கும் சோத்துக்கு கஷ்டம் இல்ல. சோத்துக் கஷ்டம் இல்லாததால நம்ம குடி-ல எல்லாரையும் படிக்க வச்சோம். வேலைக்குப் போனாங்க. இன்னைக்கு வரைக்கும் ஒரு வருஷம் கூட மடத்துக்கு குத்தகை தராம இருந்தது இல்ல. நாங்கதான் பாடுபட்டோம், நிலம் எங்களுதுன்னு சொல்லல. திடல் உருவாச்சு. ராமலிங்க சாமி மடத்தை எடுத்துக் கட்டினோம். கோயிலை செப்பனிட்டோம். வருஷா வருஷம் திருவிழா நடத்தறோம். காட்டுச்சேரி வயல்ல இன்னைக்கு வரைக்கும் நாமதான் இறங்கி விவசாயம் செய்யறோம்.’’
சுரேஷ் குறுக்கிட்டான். ‘’கட்சிக்காரங்க மடத்து நிலத்த நமக்கு கிடைக்கற மாதிரி ஏற்பாடு செய்து தரோம்னு சொல்றாங்க. இது நல்ல நேரம்.”
‘’ஆள்றவன் நினைச்சா சட்டம் அப்படியே மாறி நிக்கும் தம்பி. ஆனா மனுஷனுக்கு மனுஷன் பேசின பேச்சுக்கும் கொடுத்த வாக்குக்கும் அர்த்தம் இல்லன்னா நம்ம வாழ்க்கை மனுஷ வாழ்க்கையாவே இருக்காது. தேர்தல் வரும் போது ரெண்டு கிலோமீட்டர் போய் ஓட்டுப் போடறோம். கொள்ளிடக் கரையில நடந்து தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போவுது. ஆனா இந்த பிரதேசத்துல நம்ம வாழ்க்கைதான் நல்லா இருக்கு. பட்டா நிலத்துல பண்ணையம் பாக்கறவங்களை விட நாமதான் நல்லா இருக்கோம். நமக்குள்ள ஒற்றுமை இருக்கு. அதுதான் நம்மளோட பலம். அதை எக்காரணம் கொண்டும் இழந்திரக் கூடாது.’’
ஊராட்சி கவுன்சிலர் ஒருவர் எழுந்து, ‘’பஞ்சாயத்து தேர்தல்ல நம்ம வார்டுல இருந்து நம்மள்ல ஒருத்தர் போறார். பிரசிடெண்ட் ஜெயிக்கறது நம்ம ஓட்டாலங்கறதாலே நமக்கு ஒரு மரியாதை இருக்கு. அத அரசியல்ல போய் கெடுத்துக்கக் கூடாது,’’ என்றார்.
’’அரசாங்கம் இத்தனை வருஷத்தில என்ன செஞ்சுருக்கு. கொள்ளிடக் கரையில ரோடு போட்டிருக்காங்க. ஆனா அறுபது வருஷத்தில நமக்கு நாமே செஞ்சுகிட்டது அதிகம். பரதேசி சாமி சர்க்கார் உத்யோகமா பாத்தாரு? மடம் தாசில் பண்ணுச்சா? உதவி செய்றவங்க சர்க்காருக்கு வெளியதான் நிறைய பேரு இருக்காங்க. நாம சர்க்காருக்கு எல்லா விதத்திலயும் ஒத்தாசை பண்ணுவோம். விருப்பப்படறவங்க எந்த கட்சியிலயும் இருங்க. உங்க ஊருக்கோ அடுத்த ஊருக்கோ சகாயம் பண்ணுங்க. ஆனா இந்த ஊர்ல பறந்தா தேசியக் கொடி மட்டும் தான் பறக்கணும். கட்சிக் கொடி பல வண்ணத்தில பறக்க வேண்டிய அவசியம் இல்ல. அதனால் ஊர் ஒத்துமைக்கு பாதிப்பு வர வேண்டிய அவசியமும் இல்லை.’’
கோவிந்தசாமித் தேவர் பேசி முடித்ததும் கூட்டம் அமைதியாக இருந்தது. ‘’இந்த வருஷத்துக்கு வசூலான ஊர் குத்தகையை எடுத்துட்டு காலைல ரயில்ல கும்பகோணம் போலாம்னு இருந்தன். பஞ்சாயத்துங்கறதால முடியல. சாயந்திரம் ரயிலுக்குப் போய்ட்டு ராத்திரி மடத்தில தங்கிட்டு நாளைக்கு ஊர் திரும்பிடறன்’’ எனக் கூறி எழுந்தார் தேவர்.
‘’நாம எப்படி இருந்தோம் யாருக்கு எப்படி நடந்துகிட்டோங்கிறதை ரொம்ப கவனமா நம்ம தலைமுறை பாக்கும்பா. அவங்க பெருமைப்படற அளவு இல்லன்னாலும் தலைகுனிய வச்சுறக் கூடாது,’’ என்று பொதுவாகச் சொல்லி விட்டு தன் பயணத்தைத் துவங்கினார் தேவர்.
ஊரார் கலைந்து பலவிதமான துவக்கங்களை மனதுக்குள் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டனர்.
***

One Reply to “துவக்கம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.