அந்த நகரப் பேருந்து மெல்ல ஊர்ந்து பள்ளங்களில் ஏறி இறங்கி இரண்டு கிலோமீட்டருக்கு ஒருமுறை ஆட்களை இறக்கி ஏற்றி நன்னிலம் பக்கத்தில் பட்டூர் சென்ற போது நேரம் மாலை ஐந்து மணியாயிருந்தது. சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தோம். ராமநாதன் மதியம் பன்னிரண்டு மணிக்குச் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்றார். அவர்கள் வீட்டில் அது ஒரு பெரும் நிகழ்வு. இரண்டு பேர் இருந்தாலும் பத்து இருபது பேர் இருந்தாலும் பொழுது விடிந்ததிலிருந்து அவ்வப்போது காஃபி குடித்துக் கொண்டிருப்பார்கள். காலைப்பொழுதில் அடிக்கடி பால் கொதிக்கும். காலை ஐந்து மணியிலிருந்து டிக்காக்ஷன் தயாராக இருக்கும். கூடத்தில் அனைவரும் கூடுவார்கள். ராமநாதன் அம்மா சமையல்கட்டுக்கும் கூடத்துக்கும் போய்வந்து கொண்டு காஃபி கொடுப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் காலையின் துவக்க உரையாடலே காஃபி குறித்து இருக்கும். காஃபி போட்டவருக்கு ஒரு பாராட்டு. அவர்கள் அருந்திய சிறந்த காஃபிகள் பற்றிய சித்தரிப்பு. காஃபி கடைகளைப் பற்றி பேச ஆரம்பித்து அவை இருக்கும் ஊர்களுக்கு செல்ல நேர்ந்ததன் அவசியத்தைச் சொல்லி நாற்பது ஐம்பது ஆண்டுகள் கதையை சொல்லிக் கொண்டிருப்பார்கள். எங்கள் பல வருட நட்பில் ராமநாதனின் உறவினர்கள் எப்படித் துவங்கினால் என்ன கதை சொல்லப் போகிறார்கள் என்பது எனக்கு மனப்பாடமாக இருந்தது. நான் எப்போது போனாலும் என்னிடம் ஒரு டம்ளர் காஃபி வந்து விடும். எனக்கு காஃபி குடித்தால் தலை சுற்றும். மயக்கம் வரும். வயிறு பிரட்டும். பிரியமாகக் கொடுக்கிறார்கள் என்பதால் தவிர்க்க முடியாது. ஆனால் நான் ஒன்று செய்வேன். அவருடைய மளிகைக்கடைக்கு சென்று விடுவேன். காலை ஏழு மணிக்குத் திறப்பார். ஃபிளாஸ்கில் காஃபி கொண்டு வருவார். ஒருநாளும் தவறாமல் நான் சென்றவுடன் ஃபிளாஸ்கைத் திறப்பார். நான் வேண்டாம் என்று விடுவேன். பத்தரை மணி வாக்கில் அவருடைய அப்பா கடைக்கு வருவார். இவர் கிளம்பி வீட்டுக்குச் செல்வார். அந்நேரத்தில் அவர் அம்மாவும் மனைவியும் சமையல் செய்து கொண்டிருப்பார்கள். கூட்டு, கறி, துவையல், மசியல், பொறியல் என சகலமும் இருக்கும். ஊறுகாய் என்றால் மா, இஞ்சி, நாரத்தை, எலுமிச்சை என நான்கு வகை இருக்கும். சமையலின் மணம் வீடு முழுதும் நிரம்பியிருக்கும். சாப்பிட்டு விட்டு அங்கே சென்றால் கூட வாசனை மீண்டும் பசியைத் தூண்டும். பின்னர் நைவேத்தியம் ஆகும். முதலில் ராமநாதனின் மனைவி வந்து ஏதேனும் சுலோகங்களைச் சொல்வார்கள். பின்னர் அவரது அம்மா. சாம்பிராணி போடுவார்கள். மணி அடிப்பார்கள். மணியோசை நின்றதும் மனைப்பலகையை கொண்டு வந்து போடுவார்கள். பின்னர் தட்டு அல்லது இலை. ராமநாதன் சாப்பிடுவார். அதன் பின்னர் அவரது அம்மாவும் மனைவியும் சாப்பிடுவார்கள். அநேகமாக அவர்கள் உணவு அருந்தி முடிக்கும் நேரத்தில் அவர் அப்பா வருவார். அவர் சாப்பிடுவார். என்னுடைய பல வருட பழக்கத்தில் பலமுறை பல நேரங்களில் அவ்வப்போது இந்த நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். உளவுத்துறையில் எனக்கு மேலதிகாரியாயிருந்த சுப்ரமணிய ஐயர் என்னிடம் சொன்னார்:
‘’சுபாஷ்! லோகத்துல மனுஷாள் என்ன பழகியிருக்காளோ அதத்தான் திரும்ப திரும்பத் திரும்ப செய்யறாள். சமூகமும் அப்படித்தான் பழகியிருக்கு. ஆனா லௌகிகத்துல எந்த விஷயமும் மாறாம இருக்க முடியாது. அது எப்படி மாறுதுங்கறத்த கவனிக்கறது அரசாங்கத்தோட வேலைல ஒண்ணு. நீ சின்னப் பையன். இப்பதான் வேலைக்குச் சேந்திருக்க. எல்லாத்தயும் வெறுமனே பாரு. வெறுமனே பாக்க மட்டும் செய். உன் அபிப்ராயம் சேர்த்துக்காம பாரு. பார்த்துப் பார்த்து நீ நிறைய விஷயம் தெரிஞ்சுப்ப.’’
மாலையே அவர்கள் வீடு வேறொரு கோலம் கொள்ளும். ராமநாதனின் அம்மா வீணை வாசிப்பார்கள். கூடத்தின் சுவரில் இருக்கும் சுவாமி படங்களின் முன்னால் அமர்ந்து அவர்கள் வீணை வாசிக்கும் போது அத்தந்திகளின் அதிர்வு ஒரு குழைவான மழலைக் குரல் போல் நம் செவிகளில் ஒலித்து இதயத்தில் நெகிழும். முற்றத்தின் ஊஞ்சலில் அமர்ந்து அந்த இசையைப் பலநாள் கேட்டிருக்கிறேன். அவருடைய மருமகளும் பாடுவதுண்டு. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் வாசிப்பார்கள். கடையிலிருந்து வந்து ராமநாதனின் அப்பா ஊஞ்சலில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் கர்நாடக அல்லது ஹிந்துஸ்தானி குரலிசை டேப்ரிக்காடரில் ஒலிக்கும்.
நான் அவர்கள் வீட்டில் இருக்கும் போது ‘’இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை,’’ என நினைத்துக் கொள்வேன். அங்கு என்றல்ல எங்குமே எனது நினைப்பு அப்படித்தான் இருக்கும். சமயத்தில் அவர்களிடம் சொல்வேன்.
‘’நீங்க இன்னைக்கு ரொம்ப நல்லா வீணை வாசிச்சீங்க’’
’’அப்படியா’’
’’உங்களோட கர்நாடிக் கேஸட் கலெக்ஷன் எக்ஸ்ட்ரார்டினரியா இருக்கு’’
அதற்கும் அப்படியா தான்.
இராமநாதனுக்கு இசை இலக்கியம் மீது ஆர்வம் உண்டு. அவர் வீட்டில் இருந்த புத்தகங்களை வாசிக்கத் துவங்கித்தான் நான் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். தி. ஜானகிராமன் எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர். அவருக்கும் தி.ஜா ஆதர்சம். எங்களுக்குள் பெரும்பாலான விஷயங்கள் ஒத்துப் போகும். அதன் துவக்கம் ஜானகிராமன். சிதம்பரத்தில் இலக்கிய வாசகர்கள் குறைவு. ஆனால் எங்கும் தமிழ் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாலைகட்டித் தெரு, வாணியத் தெரு, கமலீஸ்வரன் கோவில் தெரு என ஏதாவது ஒரு தெருவில் ஒரு மடத்தில் ஓதுவார்கள் தேவாரம் பாடிக் கொண்டேயிருப்பார்கள். இலக்கிய வாசகன் தேவாரப் பிரதிகளிலிருந்து செல்லச் சாத்தியமாகக் கூடிய தூரம் அதிகம். உணர்வின் பொன் ஒளிர் தருணங்கள் சொல்லாகும் இடங்களை சர்வசாதாரணமாய் தேவாரம் காட்டிச் செல்லும்.
“சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப…
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை”
– தில்லையில் எங்காவது கேட்கும் திருவாசகம் நாம் அறிந்திராத பிராந்தியங்களுக்கு இட்டுச் செல்லும்.
அப்பா காவல்துறையில் ஆய்வாளராக வேலை பார்த்தார். தாத்தா கண்ணன்குடியில் நிலபுலன்களுடன் வாழ்ந்தவர். தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ ஒரு முரண்பாடு இருந்து கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து காவல்துறை உத்யோகத்துக்குப் போனார் அப்பா. அம்மா எஸ்.எஸ்.எல்.சி படித்து விட்டு ஊரில் ரிசல்டுக்காகக் காத்துக் கொண்டிருந்த போது தாத்தா அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். அம்மா அன்று வாசலில் ஒரு பெரிய மாக்கோலத்தைப் போட்டிருந்திருக்கிறார். அவர் வீட்டிற்கு வந்த நேரம் கோலத்தின் அரிசிமாவை சில அணில்கள் கொறித்துக் கொண்டிருந்திருக்கின்றன. மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் கொத்திக் கொண்டிருந்தன. எறும்பு நிரை மாவை எடுத்துச் சென்றிருக்கிறது. தாத்தா சிறிது நேரம் நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அம்மா தான் வீட்டின் மருமகளாக வர வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டதாக பின்னாட்களில் கூறியிருக்கிறார். அம்மாவுக்கு எப்போதுமே இருப்பதைக் கொடுப்பது என்பது இயல்பாக வந்திருக்கிறது.
‘’ஏம்மா! பெரிய வீட்டு நிர்வாகம் பாக்கும் போது இப்படி வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டே இருந்தா ஒண்ணும் இல்லாமதான் நிக்கணும். நீங்க விவசாயம் தான் செய்யறீங்க, வியாபாரம் செய்யல பாத்துக்க. வானத்தை நம்பி பொழைக்கற பொழப்பு. ரெண்டு வருஷம் மழை இல்லண்ணா நம்ம பொழைப்பு சிருப்பா சிருச்சிடும்’’. சொந்தக்காரர்கள் சொல்வார்கள்.
எதற்குமே ஒரு புன்னகை. கஷ்டம் வந்தால் சற்று மெல்லிய புன்னகை. அம்மா வருத்தப்பட்டதுண்டா? கண்ணீர் சிந்தியதுண்டா? அம்மாவுக்கு சிறு கஷ்டம் என்றால் கூட எனக்கு அழுகை வந்து விடும். அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பேச்சுவார்த்தை முற்றி கடுமையாகும் போது, வீட்டைத் தாண்டி இருவரும் பேசும் பேச்சு தெருவில் கேட்கும் போது அப்பா எப்போதாவது சாராயம் குடித்து விட்டு தள்ளாடி நடந்து வரும் போது நான் பொங்கி பொங்கி அழுவேன். அப்பாவை அம்மா ஓடிச் சென்று தன் தோளில் தாங்கிக் கொள்வாள். நான் அப்போது அவர்கள் பக்கத்திலேயே போக மாட்டேன். ஆஜானுபாகுவான அவர் உருவத்தை தாங்கி நடத்திச் செல்லும் அம்மாவின் சித்திரம் ஒரு துயரமாக மனதில் இருக்கிறது.
தாத்தா சிதம்பரத்தில் வீடு பார்த்து வைத்தார். அப்பாவுக்கு உத்யோகம் சீர்காழியில். அழகர்சாமி என்ற பெயருடன் அவரது முறுக்கு மீசையும் என்ஃபீல்டு பைக்கின் தடதடப்பும் மறவர் ஜாதியின் பொதுத்தன்மைகளும் சேர்ந்தே அனைவருக்கும் நினைவில் இருக்கும். நேரடியான நேர்மையான மனிதர். சினம் கொண்டு பொங்கி எழக் கூடியவர். சினம் ஆறிய பின் அனைத்தையும் மறந்து விடுவார். பாட்டி அப்பா கைக்குழந்தையாக இருக்கும் போதே காசநோயால் இறந்து விட்டார். நான் அம்மாவிடம் கேட்பேன்:
‘’அம்மா! ரேடியோ விளம்பரத்தில கூட சொல்றாங்களே ஆறு மாசம் மாத்திரை சாப்டா காசநோயை குணப்படுத்தலாம்னு. அப்புறம் எப்படி பாட்டி இறந்து போனாங்க’’
‘’அப்பல்லாம் இன்ன நோய் இருக்குன்னு தெரியாமலே பல வருஷம் இருந்துடுவாங்க. நோய் முத்தி டாக்டர்ட போனா எதுவும் செய்ய முடியாம போயிடும்.’’
தாத்தாவைப் பார்க்க யாராவது வந்து கொண்டேயிருப்பார்கள். எப்போதுமே பத்து இருபது பேருக்கு மத்தியில்தான் வாழ்க்கை. ஒரு வயதான உறவினர் ஒருவர் அவருக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டு இருந்தார். வீட்டில் எப்போதுமே சோறு பொங்கிக் கொண்டு இருப்பார்கள். ஆட்டுக்கறி கொதிக்கும் மணம் அந்த தெரு முழுக்க பரவும். அம்மா வீட்டில் அனைவருமே வள்ளலார் பக்தர்கள். மூன்று தலைமுறையாக புலால் விட்டவர்கள். தாத்தா அம்மாவிடம் கேட்டிருக்கிறார்:
‘’நாங்க மாமிசம் சாப்பிடறது சமைக்கிறது உனக்கு கஷ்டமா இருக்காம்மா?’’
‘’மனுஷங்க சுபாவம்தான் மாமா முக்கியம். அவங்க என்ன சாப்பிடறாங்கங்கறது அவங்க வீட்டு பழக்கம் தானே மாமா’’
தாத்தாவுக்கு அப்பா ஒரே மகன். பெண் குழந்தை இல்லை என்ற குறையை அம்மா மூலம் போக்கிக் கொண்டாரோ என்று தோன்றும். எதிலுமே தான் நினைத்ததை மட்டுமே செய்யக் கூடிய அவர் யார் சொல்வதையாவது முழுக்கக் கேட்பார் என்றால் அது அம்மா சொல்வதைத்தான். ஆனால் எப்போதும் அவரிடம் அம்மா எதையுமே சொல்லி நாங்கள் யாரும் கேட்டதில்லை.
வீட்டுக்கு வரும் அம்மாவின் அத்தை சொல்வார்கள்: ‘’பெரிய வீட்டு மருமகளா அம்மாதான் வரணும்னு உங்க அம்மா முகத்தைக் கூடப் பார்க்காம உங்க தாத்தா முடிவு பண்ணாருல்ல. அதுக்கான மரியாதை கொடுக்குதுடா உங்க அம்மா’’
தாத்தா பாதிநாள் சிதம்பரத்தில் இருப்பார். அவரிடம் சொல்வேன்:
‘’தாத்தா! கண்ணன்குடி ஆடு கோழியெல்லாம் நீங்க ஊர்ல இல்லன்னு சந்தோஷமா இருக்கும் தாத்தா’’
‘’அதுங்களும் அப்பப்ப ஒரு சந்தோஷத்தைப் படட்டுமே’’
தாத்தா என்னிடம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எப்படி பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என எனது பள்ளிப்பருவத்தில் நான் அவரை ஆச்சர்யமாகப் பார்ப்பேன். எனக்கு ஸ்கூலிலும் தெருவிலும் சேர்த்தே அப்போது ஏழு பேர் தான் நண்பர்கள்; இவர் எப்படி பல ஊரில் பலருக்கு நண்பராயிருக்கிறார் என்பது எனக்கு புதிராக இருக்கும். பலரும் பார்க்க வருவார்கள். தாத்தா கூட இரண்டு மூன்று நாள் தங்குவார்கள். அவ்வாறு வருபவர்களை நான்தான் சிதம்பரம் கோவிலுக்கு அழைத்துச் செல்வேன். வீட்டில் எனக்குத் தெரிந்த திருவாசகம் பாடிக் காட்டுவேன். திருக்கோத்தும்பி பாடலைக் கேட்ட பின்னர் எப்படி உணர்கிறார்கள் என்று கவனிப்பேன். திருக்கோத்தும்பி எல்லார் மனதையும் இளக்கி விடும். திருவாசகம் கேட்கும் போது எங்கோ அன்னை மடியில் இருப்பதைப் போல ஒரு உணர்வும் நம்மைச் சுற்றி ஒரு பெருந்தாய்மையின் கரத்தின் அரவணைப்பும் இருப்பது போன்ற ஓர் உணர்வும் ஏற்படும். கடவுள் ஒரு பேரன்னைதானா?
தாத்தா இறந்தவுடன் அப்பா நிலங்களை குத்தகைக்குக் கொடுத்தார். அப்போது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் நான் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். தாத்தா இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். அப்பாவுக்கு கிராமமும் விவசாயமும் விருப்பத்துக்குரியதாய் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து வேலி நிலம். ஒரே நபரிடம் குத்தகைக்கு தந்தார். தாத்தாவின் நண்பர்கள் வந்து குத்தகையை நான்கு ஐந்து பேருக்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். தாத்தா என்ன செய்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதையெல்லாம் தானே செய்து பார்க்க துணிந்தார் அப்பா. பல ஆண்டுகளாக அவர் மனதில் ஒத்திகை பார்த்திருப்பார் போல! சீர்காழியிலிருந்து சிதம்பரம் வந்து கொண்டிருந்த போது பிரேக் கட்டாகி கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக ஓடிய கார் மோதி அப்பாவை தூக்கி எறிந்தது. அவரது முடிவு சில நிமிடங்களில் நிகழ்ந்தது.
சிதம்பரத்தில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர் ராமநாதனின் தகப்பனார். அவர்கள் குடும்பத்தினர்தான் எனக்கும் அம்மாவுக்கும் பலவிதங்களில் உதவியாய் இருந்தனர். ராமநாதனின் அப்பா கிருஷ்ணசாமி ஐயர் என்னை அப்பா இலாகாவில் உத்யோகத்துக்குப் போகச் சொன்னார். குத்தகைதாரருடன் வழக்கை நடத்த அது உதவிகரமாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. அம்மாவுக்கு நான் கல்லூரிப் படிப்பு படிக்க முடியாமல் போய்விட்டதே என்பது தாங்க முடியாததாக இருந்தது. ஆறு வருடம் வழக்கு நடந்தது. மாவட்ட கோர்ட் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னது. குத்தகைதாரருக்கு ஹைகோர்ட்டில் வழக்கை நடத்த வசதியில்லை என்பதால் மிக அரிதான நிகழ்வாக நிலம் கைக்கு வந்தது. அந்த ஆறு வருடமும் போலீஸில் பார்த்த வேலை என்பது வாழ்வின் வேறொரு பக்கத்தைக் காண்பதற்கு வாய்ப்பாக இருந்தது.
‘’என்ன தம்பி! இன்ஸ்பெக்டர் பையன்னு சொல்றீங்க. மனுஷ முகத்தைப் பார்த்தாலே நீங்க அழுதிடுவீங்க போலருக்க. நம்மள பாத்து மத்தவன் நடுங்கணும் தம்பி. நீங்க செய்யறது சரியா தப்பாங்கறது இங்க கேள்வி இல்ல. உங்களைப் பார்த்து எத்தனை பேர் பயப்படறான்ங்க, நீங்க நினைக்கறது எவ்வளவு தூரம் நடக்குதுங்கறதுதான் கணக்கு.’’
எனக்கு இந்த தர்க்கங்கள் புரிவதில்லை. கிருஷ்ணசாமி ஐயர் சுருக்கெழுத்து கற்றுக் கொள்ள சொன்னார். ஒரு ஆண்டில் கற்றுக் கொண்டேன். அது எனக்கு உபயோகமாக இருந்தது. சில மாதங்களில் உளவுத்துறையில் அரசியல் கூட்டங்கள் அரசியல் தலைவர்கள் உரையை குறிப்பு எடுத்து அனுப்பி வைக்கும் பணிக்கு வந்தேன். தட்டச்சு இன்ஸ்டிடியூட் வைத்திருந்த தனது நண்பர் ஒருவரிடம் உபரியாக இருந்த மிஷினை எனக்கு அனுப்பி வைத்தார் ஐயர். அரசியல் கூட்டங்கள் முடிய இரவு பதினோரு மணியாகும். அறைக்கு வந்து உறங்கி விடுவேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து என்னுடைய மெஷினில் டைப் அடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ஆஃபிஸில் கொடுப்பேன். அந்த பணிக்கு நான் இயல்பாகப் பொருந்திக் கொண்டேன். ராஜினாமா செய்யும் வரை அதிலேயே நீடித்தேன். ராஜினாமா கொடுத்த பின்னர் சுப்ரமணிய ஐயர் என்னிடம் சொன்னார்.
‘’என்ன பண்ணையார்! எ குட் சர்வீஸ் பட் எ பேட் இன்னிங்க்ஸ். இஸ்ண்ட் இட்?”
நான் புன்னகைத்தேன்.
’’ஸோ! இங்க இருந்த நாள்ல நீ என்ன கத்துகிட்ட?’’
‘’உலகத்துல எல்லா மனுஷனுக்குமே அவனுக்கான இடம் என்னங்கறது தான் எல்லாத்தையுமே தீர்மானிக்குது. நல்லவங்க கெட்டவங்க எல்லாருமே இந்த ஸ்கேலை வச்சுதான் உலகத்தை புரிஞ்சுகிறாங்க.’’
சுப்ரமணிய ஐயர் ஒரு கதை சொன்னார். ‘’ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்றார். ஒரு வழிப்போக்கன் காட்டுல நடந்து போறான். அவனை மூணு திருடங்க சூழ்ந்துகிறாங்க. ஒருத்தன் வழிப்போக்கனை கொன்னுட்டு அவன் பொருளை திருடுவோம்னு சொல்றான். ரெண்டாவது திருடன் அவனை கட்டிப் போட்டுட்டு திருடுவோம்னு சொல்லி மரத்துல கட்டறான். மூணாவது ஆள் அமைதியா இருக்கான். கொள்ளையடிச்சுட்டு மூணு பேரும் போயிடறாங்க. ரொம்ப நேரம் கழிச்சு மூணாவது திருடன் மட்டும் வரான். வழிப்போக்கனோட கட்டை அவிழ்த்து விட்டு அவனை ஊருக்குப் போக சொல்றான். கூட கொஞ்ச தூரம் வர்ரான். வழிப்போக்கன் நீ எனக்கு சகாயம் செஞ்ச என் கூட ஊருக்கு வா–ன்னு பிரியமா கூப்பிடறான். எனக்கு எல்லை இருக்கு அதை நான் தாண்டினா என்னை காவல்காரன் புடிச்சுப்பான். நான் சிக்காம இருக்கணும்னா எல்லை தாண்டாமா இருக்கணும். நீ போன்னு அனுப்பிடறான். பரமஹம்சர் இந்த மூணு திருடங்களை மூணு குணங்கள்னு சொல்றாரு. சத்வ ரஜோ தமோ குணம். வழிப்போக்கனை ஜீவன்னு சொல்றாரு. தமோ குணம் ஒருத்தனை அழிக்கப் பாக்குது. ரஜோ குணம் அவனை கட்டிப் போடுது. சத்வ குணம் ஒரு அளவு வரைக்கும் கூட வருது. மூணையும் தாண்டிப் போறவன் தான் உண்மையை புரிஞ்சுக்கிறான்’’
கண்ணன்குடி வீடு நிலம் டிராக்டர் அனைத்தையும் சென்னையில் இருந்த சினிமா புரொடியூசர் ஒருவரிடம் விற்றேன். கிருஷ்ணசாமி ஐயர்தான் முடித்துக் கொடுத்தார். அந்த பணத்தை வைத்து சாலியந்தோப்பில் நிலம் வாங்கினேன். நேரடியாக நானே விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வது போல இருந்தது. சிதம்பரம் வீட்டை அன்றைய மார்க்கெட் விலைக்கு கிருஷ்ணசாமி ஐயர் கிரயம் செய்து கொடுத்தார். விவசாயம், கோவில், இலக்கிய வாசிப்பு என திருப்தியாக வாழ்க்கை போகிறது. கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் ஒரு டிகிரி முடித்தேன். அம்மா இப்போது எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பட்டூரில் பிரகலாதன் கதை நாடகமாக ஒவ்வொரு வருஷமும் நடக்கிறது என்று ராமநாதன் கூறினார். பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம். பஸ் ஸ்டாப்பிலிருந்து டீக்கடைகளைத் தாண்டி அக்கிரகாரம் சென்ற போது அதன் ஒரு முனையில் இருந்த சிவன் கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. ராமநாதனும் நானும் அங்கு சென்றோம். சிலர் அவரை அடையாளம் கண்டு புன்னகைத்தனர். வீதியில் நடந்து கொண்டிருந்த போது சைக்கிளில் எங்களை நோக்கி வந்த வயதானவர் ஒருத்தர்,
‘’நீங்க சாமி கும்பிட்டிட்டு இருக்கீங்க, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு குழந்தை அனுப்புச்சு’’ என்றார்.
மகாதேவ ஐயர் வீட்டு வாசலில் செருப்புகள் குவிந்து கிடந்தன. நாங்கள் திண்ணையில் அமர்ந்து கொண்டோம். ஐயர் வந்தார்.
’’உள்ள வாங்க! என்ன இங்கயே ஒக்காந்திட்டீங்க’’
இராமநாதன், “பரவால்லை. உள்ள நிறைய மனுஷாள் இருக்கா போலருக்கே. நீங்க அவாளை கவனிங்கோ. நாங்க காத்தாட இங்க இருக்கோம்.’’
’’இவர் பேரு சுபாஷ். சாலியந்தோப்புல பெரிய பண்ணை. என்னோட சிநேகிதர். கொஞ்ச நாள் போலீஸ்ல உத்யோகம் பார்த்தார். இப்ப விவசாயம் பாக்கறார்.’’
மகாதேவன்,’’பெரிய பண்ணை வயசுல சின்னவரா இருப்பார் போலருக்கே,’’ என்றார். நான் அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தேன்.
அவர் உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டிலிருந்து ஒரு பெண் வந்தாள். சரசரக்கும் ஒரு அரக்கு நிற பட்டுப் புடவையை மிகவும் நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். புடவையின் பார்டர் போட்ட அதன் நிறத்துக்கு மிகச் சரியாகப் பொருந்தும் பிளவுஸ். மஞ்சள் பூசியிருந்த கைகளின் பொன்வளையல்களின் மஞ்சள் நிறம் மேலும் கீழும் ஏறி இறங்கியது. மருதாணிச் சிவப்பு உள்ளங்கையில் இருந்தது. ஒரு சிறுவன் அவள் ஒக்கலில் அமர்ந்து கொண்டு எங்களைப் பார்க்காமல் முகத்தை அவன் அம்மாவின் முதுகுப் பக்கமாக வைத்துக் கொண்டான். குங்குமம் அவள் நெற்றியில் சிறிதாகவும் வகிடில் பெரிதாகவும் இருந்தது. கால் நகங்களுக்கு நெயில் பாலிஷ் இட்டிருந்தாள். கால் விரல்களை மருதாணி பார்டர் இணைத்தது. வெள்ளி மெட்டி புத்தம் புதிதாக இருந்தது. மெல்லிய ஓசை எழுப்பும் சிறுமணிகள் கொண்ட கொலுசு காலில் தவழ்ந்திருந்தது.
‘’நமஸ்காரம்! காஃபி சாப்பிடறேளா,’’ என்றாள்.
‘’உன்னண்ட இந்த கேள்விக்கு யாராவது நோ–ன்னு பதில் சொல்லியிருக்காளா?’’ என்றார் ராமநாதன்.
அவள் சிரித்தாள்.
’’எனக்கு காஃபி பழக்கமில்லை.’’
’’பரவாயில்ல. நான் மோர் தரேன்,’’ அவள் உள்ளே சென்றாள்.
நான் அங்கிருந்த குவியலான செருப்புகளை திண்ணையின் ஓரத்தில் வரிசையாக அடுக்கினேன். அந்த குவியல் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவலட்சணம் நீங்கி அந்த இடம் பார்வைக்கு அசௌகர்யம் இன்றி இருந்தது. ராமநாதன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தார். கொஞ்ச நேரத்தில் காஃபியும் மோரும் வந்தது.
‘’உனக்கு சொந்த ஊர் இந்தூர்தானா’’ என்று ராமநாதன் கேட்டார்.
‘’இது ஆத்துக்காரரோட ஊர். என் பொறந்தாம் நாகப்பட்ணம். அவர் கஸ்டம்ஸ்ல வேலை பாக்கறார்.’’
’’குழந்தை பேர் என்ன?’’
’’முராரி. முராரி மாமாக்கு நமஸ்காரம் சொல்லு.’’
அவன் எங்கள் முகத்தைப் பார்க்காமல் அவன் அம்மாவை இறுக்கிக் கொண்டான். அவன் ஒரு சின்ன அரைக்கை சட்டையும் குட்டி டிராயர் ஒன்றும் அணிந்திருந்தான். ராமநாதன் அவளிடம் அவளது சொந்தக்காரர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். தன் குடும்பத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உறவு என்பது புலனாகும் வரை விசாரிப்பார் என நினைத்துக் கொண்டேன். அவருக்கு ஏதும் பிடி கிடைக்கவில்லை.
‘’நீங்க தான் அடுக்கினீங்களா? திருவிழா இல்லயா. எப்பவும் யாராவது வந்துட்டு போய்ட்டு எங்களுக்கு வேலை சரியா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ்.’’ டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குழந்தைப் பட்டாளம் அந்த வீட்டுக்குள் ஓடியது. பின்னர் திரும்ப பக்கத்து வீட்டுக்கு ஓடியது. திரும்ப ஓடிய கூட்டத்தில் முராரி இருந்தான். அவனை நான் அள்ளித் தூக்கினேன். அவன் தெருவுக்கே கேட்பது போல் காட்டுக் கத்தலாகக் கத்தினான். அவன் சத்தம் கேட்டு அவன் அம்மா எட்டிப் பார்த்தாள். நான் வைத்திருப்பதைப் பார்த்து சிரித்தாள். அவன் அம்மாவைப் பார்த்ததும் மீண்டும் பலமாக வீறிட்டான். நான் கீழே விட்டேன். அவன் அவளிடம் ஓடிச் சென்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் எனக்கு எதிர்பக்கமாக சென்று அடுத்த வீட்டுக்கு ஓடினான். நானும் ராமநாதனும் ஒரு சின்ன வாக்கிங் சென்று வந்தோம். தி.ஜா வின் பாயசம் கதை பற்றி பேச்சு வந்தது. அப்படியே சிலிர்ப்பு கதை பற்றி பேசினோம். அக்பர் சாஸ்திரி கதையின் உரையாடல்களும் சித்தரிப்புகளும் பற்றி பேசினோம். அக்ரஹாரத்தின் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம்.
வீட்டுக்கு வந்ததும் சாப்பிடக் கூப்பிட்டனர். கூடத்தில் இருபது பேர் சாப்பிட உட்கார்ந்தோம். நாலைந்து பேர் உணவு பரிமாறினர். முராரி அம்மாவும் அதில் இருந்தாள். உணவுண்ட பின் மகாதேவ ஐயரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்று படுத்து உறங்கினோம்.
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் நாட்டிய நாடக ஒத்திகை நடந்தது. அதற்கு எங்களை மகாதேவன் அழைத்துச் சென்றார். ஸ்ருதிப் பெட்டி சீராக ரீங்கரித்துக் கொண்டிருந்தது. பாடகர்கள் இரண்டு பேர் சமஸ்கிருத பாடல்களை மெல்ல முயன்று பாடிக் கொண்டிருந்தனர். அன்று இரவு நிகழப் போகும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை என நம்ப முடியவில்லை. ஒரு ஒழுங்கு இன்னும் எட்டப்படவில்லை என்பது போல அவர்களுடைய ஒருங்கிணைப்பு இருந்தது. ராமநாதன் என்ன நினைக்கிறார் என என்னால் யூகிக்க முடியவில்லை. ’’வெறுமனே பார்,’’ என்பது என்னுடைய பழக்கம். பல வருட நட்பின் விளைவாக நாங்கள் எந்த விஷயத்தையும் பற்றி அவ்விஷயம் நடக்கும் இடத்தில் பேசிக் கொள்ள மாட்டோம். அது நிகழ்ந்த உடனேவும் பேச மாட்டோம். பத்து நாள் கழித்து பேசுவோம். ஒரு அபிப்ராயம் உருவாகும் போது அது சின்ன விஷயங்களை மறைக்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் நுணுக்கமான நுட்பமான ஒரு தருணம் எதிலும் வெளிப்படலாம். ஒரு புதிய இடத்தை உள்வாங்க ஒரு புதிய விஷயங்களை உளவாங்க அதைப் பற்றி உடனே பேசிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இலாகாவில் எனக்கு அதற்கான பழக்கம் உண்டு. வியாபாரத்தில் இருப்பதால் அவருக்கும் அவதானிப்பின் அடிப்படைகள் தெரியும்.
பத்து பேர் அதில் பிரதான நடிகர்கள். அனைவருமே ஆண்கள். பெண் கதாபாத்திரத்தையும் ஆண்களே நடித்தனர். கஸ்டம்ஸ் அதிகாரியாயிருந்தார் ஒருவர். இன்னொருவர் சி.பி.டபுள்யூ.டி–ல் இருந்தார். இன்னொருத்தர் காலேஜ் புரொஃபஸர். மூன்று பேர் டெல்லியிலிருந்து வந்திருந்தார்கள். மாநில சர்க்கார் உத்யோகத்தில் மீதமிருந்தவர்கள் இருந்தார்கள். எல்லாருக்குமே சொந்த ஊர் பட்டூர். இந்த நாடகத்தை இவர்கள் குடும்பத்தினரே நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடத்தித் தலைமுறை தலைமுறையாக நடித்து வருகின்றனர் என்று ராமநாதன் சொன்னார். அவர்களுக்குள் கிண்டல் ஓயாமல் இருந்தது. ஒருவரை ஒருவர் சீண்டினர். மட்டம் தட்டினர். முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தை சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தனர். ஒரு வருடம் பெய்த மழையின் போது நாடகம் பார்க்க வந்த அனைவரும் மழையில் நனைந்து கொண்டே நாடகம் பார்த்ததைக் கூறினர். சங்கீத கோஷ்டி அவ்வப்போது வெற்றிலைப் பெட்டியை எடுத்து விரிவாக தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்தது. காலை ஒத்திகை அவர்களுக்கு எந்த விதத்தில் பயன் தந்தது என்று சொல்ல முடியவில்லை.
மகாதேவ ஐயர் வீட்டில் மறுநாளும் காலை உணவருந்தப் போனோம். நான் வாசலில் இருந்த காலணிகளை அடுக்கி வைத்தேன். அவர் வீட்டின் சமையலறை ஓட்டுக்கு மேலே பத்தடி உயரத்துக்கு அடுப்புப் புகை யோசித்து தயங்கி நின்று கொண்டிருந்தது. இந்த முறை முராரி என்னிடம் வந்தான். அவனை என் மடியில் உட்கார வைத்துக் கொண்டேன். அவன் குரலின் இனிமையான மழலை மனதை உருக வைத்தது. ஓடி விட்டு வந்து உட்கார்ந்து கொள்ளும் போது அவன் தோளில் கை வைத்தால் கூட இதயம் துடிப்பதன் தாளம் உணரமுடிந்தது. மற்ற குழந்தைகளை அறிமுகம் செய்து கொண்டேன். உணவருந்தினோம். ஒரு மணிக்கு ஒரு முறை காஃபி சுழன்று கொண்டிருந்தது. எனக்கு மோர் வந்து கொண்டிருந்தது. அவர்கள் ஊர் கடைகளிலிருந்து சில பொருட்கள் வந்தன. கார் எடுத்துக் கொண்டு நன்னிலம் சென்று சில பொருட்கள் வாங்கி வந்தார்கள். முதல்நாள் வந்திருந்தவர்களைப் போல இரு மடங்கு எண்ணிக்கையில் மறுநாள் வந்திருந்தார்கள். ஆள் வைத்து சமைக்கிறார்களா என்று பார்த்தேன். வீட்டுப் பெண்கள் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். சிதம்பரத்தில் மடங்களிலும் விழாக்கள் நடக்கும். சமையலுக்குப் பரிமாற என மடத்துச் சிப்பந்திகளின் ஒரு அணி எப்போதும் தயாராக இருக்கும். எத்தனை பேர் கூடுதலாக வந்தாலும் பதினைந்து நிமிடத்தில் சமாளிப்பார்கள். நான் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவ விரும்பினேன். அந்த கூட்டத்தில் ஒருவனாக இருப்பதே நல்ல பங்கேற்பு என்று தோன்றியது. நானும் ராமநாதனும் குளக்கரைக்குச் சென்று இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.
பின் மதியத்திலிருந்து நாடக நடிகர்கள் அணி பூண ஒரு தனியான வீட்டுக்குச் சென்றனர். ஒப்பனையாளர்கள் சிலர் மட்டும் அங்கு உடனிருந்தனர். அதிகம் பயன்பாட்டில் இல்லாத அந்த வீட்டின் திண்ணையில் வேடம் புனைந்து கொண்டிருந்தனர். முகத்தில் பல வண்ணப் பூச்சுகள் பூசிக் கொண்டனர். பழைய ஆடைகளை எடுத்து சீரமைத்தனர். அவர்களுக்குள் ஒரு அமைதி பரவிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு சொல் கூட பேசப்படாமல் உச்சரிக்கப்படாமல் அவர்களுக்குள் வேலை நடந்து கொண்டிருந்தது. பாதி இவ்வுலகிலும் பாதி அவ்வுலகிலும் அவர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இரவு நாடகத்துக்கு விழிக்க வேண்டும் என்பதால் மதியம் உணவருந்தி விட்டு நன்றாகத் தூங்கி எழுந்தோம். ராமநாதன் இப்போது ஒரு முறை குளித்து விடுவோம் என்றார். குளித்து விட்டு அக்கிரகாரத்தின் சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபட்டு விட்டு அங்கிருந்து அரை கிலோமீட்டர் தள்ளியிருந்த ஊர்த் திடலில் நாடக அரங்கின் முன்னால் இருந்த நாற்காலிகளில் முன்வரிசை நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். நாடகம் துவங்க நேரமாகும், யாரிடமாவது வண்டி வாங்கிக் கொண்டு போய் நன்னிலத்தில் சாப்பிட்டு விட்டு வருவோமா என்று ராமநாதன் கேட்டார். நான் அவசியமில்லை என்றேன். ஊரே திரண்டிருந்தது. முழுக்க சமஸ்கிருதத்தில் நடக்கும் நாடகத்துக்கு ஊரின் எல்லா ஜனங்களும் ஆர்வமாக வந்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது. கூட்டம் கூடிய பின் நான் அக்கிரகாரம் வரை சென்று பார்த்து விட்டு வந்தேன். தீபங்கள் எரிந்து கொண்டிருந்த ஆலயங்களின் கிரில் கேட்டை பூட்டியிருந்தனர். வீடுகள் அனைத்திலும் திண்ணை மாடத்தில் விளக்கு ஏற்றியிருந்தனர். அனைத்து வீடுகளும் பூட்டியிருந்தது. நாடகத்திற்காக திரள்வது இவர்களுக்கு பல ஆண்டு பழக்கம் என நினைத்துக் கொண்டேன். மீண்டும் ராமநாதன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்.
மேடையில் நடித்தவர்கள் எவரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் யுகங்களுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல அவர்களுடைய கண்கள் இருந்தன. ஹிரண்யகசிபுவின் பார்வை ஒரு யுத்த வீரனைப் போல இருந்தது. அவனது கண்கள் சுழன்று யாரையோ தேடிக் கொண்டிருந்தன. விதூஷகன் நாரதரிடம் சில்மிஷம் செய்தான். காவல் வீரர்களிடம் போய் ஏதோ விபரம் கேட்டான். காலையில் ஒத்திகை அறையில் சிறுவனாக இருந்த பையன் பிரகலாதனாக வேடமிட்டிருந்தான். அவனது நடையும் பேச்சும் மிக நளினமானதாக இருந்தது. அவன் ஒரே உறுதியுடன் ஹரி ஹரி என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். பல காட்சிகள் நாடக மேடையில் நடந்து கொண்டும் மாறிக் கொண்டும் இருந்தன. அவர்கள் அனைவருமே தங்களைச் சுற்றியிருந்த சூழலை மறந்து விட்டனர் என்பது அவர்கள் உடல்மொழியில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் மிகக் கவனத்துடன் நாடகம் பார்த்தனர். ஒரு அபூர்வமான தருணத்தில் ’ஆ’ என கூட்டத்திலிருந்து ஒரு உணர்ச்சி ஒலி எழும். திடீரென கூட்டத்தில் ஒரு பெண் அலறுவாள். காலையில் ஒத்திகையின் போது தனித்தனியாக இருந்தவர்கள்தான் இப்படி தங்கள் கலையால் கூட்டத்தின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்களா என்று தோன்றியது. நடிகர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி ஒரு ஒளிக் கோலம் இருப்பது போல் தோன்றியது எனது பிரமை என்றுதான் நினைத்தேன். பல நாட்கள் கழித்து ராமநாதன் என்னிடம் தனக்கும் அப்படி தோன்றியதாகச் சொன்னார்.
அந்நாடகத்தில் நாட்டியம் இருந்தது. உரையாடல் இருந்தது. சமயத்தில் நடிகர்களே பாடவும் செய்தனர். அவர்கள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது போலவும் பார்வையாளர்கள் மெல்ல அதற்குள் சென்று கொண்டிருப்பதாகவும் தோன்றியது. உணர்வுகளை கட்டுப்படுத்த நான் சுற்றி நடப்பவற்றைத் தொகுத்துக் கொள்ள முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. தெரிந்த கதைதான். ஹிரண்யகசிபுவின் மனைவிக்கு நாரதர் அவரது ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். நாராயண மந்திரம் பிரகலாதன் மனதில் அவன் லீலாவதி கருவில் இருக்கும்போதே சென்றடைகிறது. எண்ணிப் பார்க்க முடியாத அளப்பரிய கடுந்தவத்தை ஆற்றலைப் பெற ஹிரண்யகசிபு மேற்கொள்கிறான். இந்திரனை வெல்கிறான். பேராற்றலாக உருவாகிறான். மகன் மீது பேரன்பு கொள்கிறான். மகன் ஹரி பக்தனாக இருப்பது அவனை வேதனை அடையச் செய்கிறது. ஒரு தந்தையாக அவன் அடையும் துயரங்கள் ஒவ்வொரு கணமும் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. பிறர் தன் மீது சுமத்திய எல்லைகளை தன் ஆற்றலால் அறுத்தெரிந்தவனுக்கு மகன் சொல்லும் சொற்கள் துயராய் அழுத்துகின்றன. பிரகலாதன் அமைதியின் உலகில் இருக்கிறான். ஆற்றல் கொண்டவனால் அமைதியை புரிந்து கொள்ள முடிவதில்லை. நெருப்பில் போடுகிறான். சமுத்திரத்தில் அழுத்துகிறான். விஷம் கொடுக்கிறான். நாகங்களை ஏவுகிறான். பிரகலாதனின் உறுதி முன் அவை தோற்கின்றன. அந்நாடகம் ஒரு சந்திப் பொழுதை எட்டுவதாக என் உள்ளுணர்வு சொன்னது. அச்சந்திப் பொழுது எல்லார் மனதிலும் உணரப்பட்டிருந்த வேளையில் மேடையில் பிரகலாதனும் ஹிரண்யகசிபுவும் பேசிக் கொண்டிருந்த போதே நரசிம்மம் தோன்றியது. ஹிரண்யகசிபுவின் கவனம் பிரகலாதன் மேலே இருக்கிறது. ஹரி ஹரி என திரும்ப திரும்ப சொல்கிறான் பிரகலாதன். “உச்ச சினத்துடன் எங்கேடா இருக்கிறான், ஸ்ரீஹரி?” என ஹிரண்யகசிபு ,கேட்ட போது ஆழ்மனதின் பாதாளங்களிலிருந்து ஒலித்த எங்கள் குரலாகவே நரசிம்மத்தின் கர்ஜனையை பார்வையாளர்களாகிய நாங்கள் கேட்டோம். நரசிம்மம் சீறி எழுந்து ஹிரண்யகசிபுவை வேட்டையாடியது. பெண்கள் பெருங்குரலெடுத்து அலறினர். சில பெண்கள் கண்ணீருடன் கதறினர். வயதான ஆண்கள் சிலர் ஒரு சீரான தாளத்துடன் தொடர்பற்ற சொற்களை உளறிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தனர். எல்லாருமே கண்ணீர் விட்டனர். ராமநாதன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மிருதங்கம் வாசித்தவர் தன் தாளத்தை அடக்கும் போது நரசிம்மம் பெருங்கர்ஜனை புரிந்தது. அவர் மெல்ல நடையை குறைத்துக் கொண்டிருந்தார். நடிகர்களிளேயே சிலருக்கு சாமி வந்தது. வாட்டசாட்டமான ஊர் இளைஞர்கள் சிலர் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு கயிறுகளுடன் வந்தனர். ஆனால் நாடக மேடைக்குள் நுழைய அவர்கள் தயங்குவது தெரிந்தது. சிலர் பின்னால் இருந்த ஒப்பனை அறை வழியாக உள்ளே வந்து சாமி வந்த நடிகர்களை கட்டுப்படுத்தி அழைத்துச் சென்றனர். பிரகலாதன் எள்ளளவும் கலக்கமின்றி நரசிம்மத்தின் அருகில் சுலோகம் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது எனக்கு தலை சுற்றி வந்தது. ஒரு துணிச்சலான இளைஞன் நரசிம்மத்தின் பின்பக்கமாக வந்து ஒரு ஆசனத்தை இட்டான். பிரகலாதன் நரசிம்மத்தை கை பிடித்து அழைத்துச் சென்று அதில் அமர வைத்தான். கீழே கிடந்த ஹிரண்யகசிபுவை தூக்கிய போது நரசிம்மம் மீண்டும் கர்ஜித்தது. அதன் பார்வையிலிருந்து ஹிரண்யகசிபுவை வெளியேற்றினார்கள். நான் அந்த இடத்திலிருந்து நீங்க விரும்பினேன். ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த நான் மேடையின் பின்புறம் சென்றேன். அங்கே ஒக்கலில் முராரியை வைத்துக் கொண்டு முராரியின் அம்மா மெல்ல விசும்பிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். தன் பாரத்தைத் தாங்க முடியாமல் நடந்து வந்த ஹிரண்யகசிபுவை அவள் தன் தோள் கொடுத்து தாங்கினாள். அவள் ஒக்கலில் அமர்ந்திருந்த குழந்தையையும் தோள் கொடுத்து சுமந்த கணவனையும் சமாளித்து நடக்க முற்பட்டாள். முராரியின் அப்பாதான் ஹிரண்யகசிபு வேடம் போட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். அவளது மென்மையான உடல் ஒரு பெரும் பாரத்தைச் சுமப்பது போல் எனக்குத் தோன்றியது. நான் அவளிடம் ஓடிச் சென்று முராரியை என் கையில் வாங்கிக் கொண்டேன். ஹிரண்யகசிபுவிடமிருந்து ஒரு உறுமல் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் தன் கணவனின் பாரத்தை முழுக்க தன் தோளில் சுமந்து தனது வீட்டினை நோக்கி மெல்ல உறுதியாக நடந்து கொண்டிருந்தாள். ஹிரண்யகசிபு நல்ல கணவன் தான். பிரகலாதனும் நல்ல மகன் தான். கணவனுக்கும் மகனுக்கும் இடையில் உணர்ச்சிகரமான ஒரு இடத்தில் இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். அக்கிரகாரத்தில் நாங்கள் நடந்து கொண்டிருந்த போது நாடகத்தில் மங்களம் பாடுவது கேட்டது. அன்று நள்ளிரவே நானும் ராமநாதனும் ஊருக்குக் கிளம்பி விட்டோம். எனக்கு அந்த பெண்ணின் பெயர் இன்று வரை தெரியாது. உங்களுக்கு நான் என் அம்மாவின் பெயரைச் சொல்லவில்லையே? லீலாவதி.
Wonderful! Excellent narration all through; especially, made me feel like I was in the audience. Superb finish as well.
ஜெயமோகனின் லங்கா தகனம் நினைவுக்கு வந்தது.
excellent. really filling. though it was little narrative in between…
அற்புதமான கதை நிறைய முறை படித்து விட்டேன்