பெண் தெய்வம்

சுலோச்சனாவை காணாமல் நடேச ஐயரும், அவரது மனைவியும் ஊர் முழுக்க தேடத்தொடங்கினர்.

ஊரில் இருந்தது ஒரே ஐயர் குடும்பம் என்பதால் இருந்த இரு நூறு முன்னூறு குடும்பங்களுக்கும் நடேச ஐயரைப் பற்றியும் அவரது மனைவியைப் பற்றியும் புத்தி சுவாதீனம் அற்ற அவரது ஒரே மகளைப் பற்றியும் நன்றாகவே தெரியும். நடேச ஐயர்தான் சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பூஜைகள் செய்துவந்தார். அப்படி ஒன்றும் நிறைய கிராமங்கள் இருக்கவில்லை. பத்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தவை மொத்தம் மூன்றுதான் . ஆனால் கோவில்களின் எண்ணிக்கையோ அதைவிட பத்துமடங்கு. ஐம்பது வயது வரை எல்லா கோவில்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, அவர் வசதிக்கு ஏற்றார்போல் சென்று வந்தார். ஐம்பதாவது வயதில் தன் ஊரோடு போதும் முடியவில்லை என்று அவ்வூர்க்கார அமைச்சரிடம் சொல்லிவிட்டார்.

நடேச ஐயரின் வீட்டில்தான் ஊர்ப் பெரியவர்களின் சந்திப்பு நடக்கும். தினமும். தாயம் விளையாடுவது அவர்களின் சந்திப்பின் முக்கிய நோக்கம். நடேச ஐயர் வீட்டில் இருந்தால் அவரும் கலந்துகொள்வார். ஊரின் முக்கிய முடிவுகள் அனைத்தும் அவ்விளையாட்டினூடேதான் எடுக்கப்படும்.

சுலோச்சனாவை பலகாலம் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமலேயே வைத்திருந்தார் நடேச ஐயர். அதிகபட்சமாக அவளுக்கு தாயம் விளையாடி முடித்ததும் பெரியவர்களிடமிருந்து தாயக் கட்டைகளை வாங்கி வீட்டிற்குள் கொண்டுபோய் வைப்பதற்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டிற்கு வரும் பெரியவர்கள்தான், “இப்படி வீட்லயே புள்ளய வச்சுர்ந்தா எப்படி சாமி.. நீங்க போற கோவில்களுக்காச்சும் கூட்டிட்டு போய் கூட்டிடு வாங்க.. ஏதாவது ஒரு சாமியாச்சும் புள்ளைய தெளிய வச்சுப்புடாதா” என்று சொல்லவும் தன்னோடு சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் கூட்டிச் சென்று வந்துகொண்டிருந்தார். இரண்டு கோவில்களிலும் இருக்கும் கிணருகளிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொடுப்பதுதான் சுலோச்சனாவிற்கு நடேச ஐயர் கற்றுக்கொடுத்த இறைப்பணி.

அன்று நடேச ஐயர் காலையில் எழும்போது சுலோச்சனா வழக்கத்திற்கு மாறாக தூங்கி எழுந்திருக்கவில்லையென்பதால் அவர் மட்டும் பூஜைக்கு கிளம்பி போனார். வீடு திரும்பியபோது, “குழந்தைய காணோங்க” என்று வீட்டு வாசலில் நின்று கொண்டு அழுதுகொண்டே அவர் மனைவிசொன்னபோது, வழக்கமாக வரும் பெரியவர்களும் தங்கள் வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததைக் கண்டபோது ” ஈஸ்வரா.. ” என்று கத்திக்கொண்டே, சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு, வீட்டின் வலதுபுறம் உள்ள சாலையில் இறங்கி வேகவேகமாக நடக்கத் தொடங்கினார்.

முதலில் வீட்டிலிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பார்த்தார். அவர் மனைவியும், மற்றும் சில பெரியவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். கோவில் பூட்டியிருந்தது. காலையில் பூஜையை முடித்துவிட்டு பூட்டிச் சென்றது நினைவுக்கு வந்தது. அங்கிருந்து, அவர் வயலருகே இருக்கும் பெருமாள் கோவிலுக்கு ஓடினார். “சுலோச்சனா அங்கதான் இருக்கணும்” என்று மனைவியிடமும், மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டேயிருந்தார். பெருமாள் கோவில் அவ்வூரின் ஒரு மூலையில் இருந்தது. கோவிலுக்கு முன்னே பெரிய ஆலமரமொன்று உண்டு. அதற்குப் பின்னாலிருக்கும் கோவிலையே மறைத்து நிற்கும் எண்ணற்ற விழுதுகள் தொங்கும் மரம். திருவிழாக்காலங்களில் கூட ஊரில் இருக்கும் மற்ற கோவில்களில் கூட்டம் இருக்கும், ஆனால் அந்த கோவிலுக்கு அவ்வபோது கருடனும், தினமும் நடேச ஐயரும் வருவதுபோக வேறு யாரும் அவ்வளவாக வர மாட்டார்கள். அவர் யூகம் சரியாக இருந்தது. சுலோச்சனா அங்குதான் இருந்தாள். மரத்தடியில் படுத்துக்கொண்டு விழுதுகளை எண்ணுவது போல் கைகளை காற்றில் அசைத்துக்கொண்டு படுத்துக்கிடந்தாள். தாயும், தந்தையும் ஓடிச்சென்று மகளைத் தூக்கினர். கணுக்கால் வரை ஏறியிருந்த புடவையை இறக்கிவிட்டு, அவள் மேலெல்லாம் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டனர்.

வீட்டிற்கு அழைத்துவந்து குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்தபின் அவளைத் படுக்கச் சொல்லி அவள் தூங்கியபிந்தான் நடேச ஐயருக்கு போன உயிர் திரும்பி வந்தது. சுலோச்சனா எப்போது வீட்டை விட்டுப் போனாள், யாருடன் போனாள் என எதுவும் தெரியவில்லை. நடேச ஐயரின் மனைவிக்கு காது கேட்க்காது. அவள் அடுப்பங்களையில் இருக்கும் சமயம் சுலோச்சனா வெளியே போயிருக்க வேண்டும். ஆனால் அவள் தானாக போனாளா, அல்லது…. நினைக்கும்போதே நடேச ஐயரின் இருதயம் வேக வேகமாக அடித்துக்கொண்டது.

அன்று முதல் சுலோச்சனாவிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவ்வப்போது படுத்துக்கொண்டு புடவையை கால் முட்டி வரை ஏற்றிவிட்டுக்கொண்டு சிரித்தாள். நடேச ஐயருக்கு பயம் ஆட்டிப்படைத்தது. மேலும் இரண்டு முறை வீட்டை விட்டுப் போவதும், ஆலமரத்தடிக்குப் போய் அழைத்து வருவதும் நடந்தேறியது.

சுலோச்சனாவிற்கு முப்பது வயதாகி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அவள் பிறந்ததிலிருந்து பேசிய வார்த்தைகளை இருவர் விரல் விட்டு எண்ணிவிடலாம். “எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணனோ.. எங் கொழந்த‌ இப்படி பொறந்துட்டாளே.. ஈஸ்வரா.. உன் கோவில் மண்ணக் கூட நான் எடுத்துண்டு வந்ததில்லையே.. எங் கொலத்த இப்படி நாசம் பண்ணிட்டியே” என்று நடேச ஐயர் புலம்பாத வருடங்கள் இல்லை.

நடேச ஐயருக்கு ஒரு அக்கா இருந்தாள். அவள் பெயரைத்தான் தன் பெண்ணிற்கு வைத்திருந்தார். அப்போதெல்லாம் வீட்டிற்கு தூரமான பெண்களை ஊரில் இருந்த பள்ளிக்கூடத்தில் போய் தங்க வைத்துவிடுவார்கள். சமையலுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மூன்று நாட்களும் அங்குதான் சாப்பாடு, தூக்கம் எல்லாம். மூன்றாம் நாள் முடிவில் அங்கேயே குளிக்க வைத்து வீட்டிற்கு கூட்டி வருவார்கள். அப்படி ஒரு மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்த நடேச ஐயரின் அக்கா தூக்கு மாட்டி இறந்துபோனாள். ஊரில் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். அதில் பெரும்பாலானவர்களால் சொல்லப்பட்டது அவள் கெட்டுப்போனாள், தீட்டு என வீட்டிலிருந்து ஒதுங்கி இருந்தவளை யாரோ கறை படுத்திவிட்டார்கள் என்று. அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அந்தப் பள்ளியை இழுத்து மூடினார்கள்.மாதம் மூன்று நாட்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு வீட்டிலேயே ஒரு இடம் கொடுத்து தூரமாய் வைத்தார்கள்.

சுலோச்சனா பிறந்ததிலிருந்து சிரித்ததோ, அழுததோ மிகக் குறைவான தருணங்களில்தான். சொல்லப்போனால் அவள் கடைசியாய் எப்போது சிரித்தாள் என்பதே ஐயருக்கு நினைவிலில்லை. எப்போதும் அமைதியாய், தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பவள் சிரிக்கத்தொடங்கியது அவருக்கு மட்டுமின்றி ஊரில் உள்ள எல்லோருக்குள்ளும் பயத்தை ஏற்படுத்தியது. வீட்டின் மூலை முடுக்குகளில் வாழும் பல்லிகள் அடிக்கடி கத்தத் தொடங்கின. குடுகுடுப்பைக்காரர்கள் ராத்திரியில் ஊருக்குள் வரத்தொடங்கினர். ஒரு நாள் காலை ஊர்ப்பெரியவர்கள் நடேச ஐயரின் வீட்டில் கூடினார்கள். “ஊருக்கு பெண் தெய்வம் விட்ட சாபம்தான் இதுன்னு நேத்து ஒரு குடுகுடுப்பக்காரன் சொன்னான். ஐயர் வீட்ல ஆரம்பிச்சிருக்கப் பிரச்சன நாளைக்கு ஒவ்வொரு வீட்லயும் ஆரம்பிக்கும்ன்னு சொல்றான். நாம இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் பண்ணிப்புடனும்” என்றார். ஐயரின் அக்காதான் அந்தக் தெய்வம் என்றும் அவளின் சாபம் என்பதால்தான் அவரின் வீட்டில் முதலில் ஆரம்பித்திருக்கிறது என்றும் முடிவு செய்தார்கள். நடேச ஐயருக்கோ வேறு பயம் வாட்டி வதைத்தது.

அவர் பயந்தது போலவே சுலோச்சனாவின் மாத விலக்குத் தள்ளிப்போனது. யாரிடம் சொல்லி அழுவது என்னவென்று சொல்லி அழுவதென்று தெரியாமல் நடேச ஐயரும் அவர் மனைவியும் வீட்டிற்குள்ளேயே சத்தம் வராமல் அழுது புலம்பினர். “இப்போ என்னண்ணா பண்றது?” என்று கேட்டுக்கொண்டே இருக்கும் காது கேட்க்காத தன் மனைவியிடம் சத்தமாகச் சொன்னால் யாரும் கேட்டுவிடப்போகிறார்கள் என்று பயந்து எதுவுமே சொல்லாமல் கண் கலங்கிக்கொண்டேயிருந்தார் ஐயர்.

அவள் முதன் முதலாய் காணாமல் போன நாளிலிருந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. சுலோச்சனாவின் வயிறு மேடு தட்ட ஆரம்பித்துவிட்டதைப் பார்த்து ஐயரின் சித்தம் கலங்கத் தொடங்கியது. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாமா என்று பேசிக்கொண்டார்கள் கணவனும் மனைவியும். “எப்பயோ செத்துப்போனவள் வந்து சாபம் விட்டு ஊரை அழிக்கப்பார்க்கிறாள் என்று பேசியவர்கள் நாளை நம்மைப் பற்றி என்ன பேசுவார்களோ.. வேண்டாம்” என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டனர். யாரைப் போய்க் கேட்பது, யாரை சந்தேகப்படுவது என்றும் தெரியவில்லை. ஒருவேளை இதைச் செய்தவனைக் கண்டுபிடித்தாலும் அதற்குப் பிறகு என்ன செய்வது? புத்தி சுவாதீனமற்ற பெண்ணுக்கு நடந்த இக்கொடுமைக்கு என்ன நியாயம் வாங்கித் தந்துவிட முடியும் என்று மனம் வெதும்பினார் நடேச ஐயர். அவருக்கு ஒரே தீர்வாய் தோன்றியது ஊரை விட்டு சென்றுவிடுவது. விவரம் தெரிந்த குழந்தைகள் முதல், பழுத்த கிழவர்கள் வரை ஊரில் எல்லோருக்கும் தெரிந்தவர்களாய் வாழ்ந்த குடும்பத்திற்கு வேறு வழியில்லை என்று எண்ணினார்.

எங்கு போவது என்பதை விட ஊரில் யாருக்கும் தெரியாமல் எப்படிப் போவது என்பதே ஐயரின் பெரிய கவலையாய் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது என்று நினைத்திருந்தவர் வேறு வழியின்றி பட்டணத்திற்கு படிக்கச் சென்று அங்கேயே தங்கிவிட்ட தன் அக்காவின் மகனை கடிதம் போட்டு வரவழைத்தார். அவன் ஒரு குதிரை வண்டி கொண்டு வந்திருந்தான். அவன் வந்த இரவு நால்வரும் கிளம்ப திட்டமிட்டனர்.

குதிரை வண்டியை ஐயரின் அக்கா மகனே ஓட்டினான். சுலோச்சனாவை அவனுக்குப்பின்னால் உட்கார வைத்துவிட்டு ஐயரும், அவர் மனைவியும் அவளுக்குப் பின்னால் அவளை மறைத்த வண்ணம் உட்கார்ந்துகொண்டனர். வண்டி வீட்டை விட்டு வலது புறம் பாதையில் செல்லத்தொடங்கியது.

ஊரைவிட்டு வெளியேறும் பாதையில்தான் பெருமாள் கோவிலும் அந்த ஆலமரமும் இருந்தன. கிளம்பியது முதல் அமைதியாகவே வந்த சுலோச்சனா ஆலமரம் நெருங்கியதும் சிரிக்கத் தொடங்கினாள். அம்மரம் நெருங்க நெருங்க அவள் சிரிப்பின் சத்தம் அதிகரித்தது. பயந்துபோன ஐயரும் அவர் மனைவியும் அவள் வாயைப் பொத்தினர். அவள் திமிறத் தொடங்கினாள். திமிறள் அதிகரிக்கவே வண்டியை நிறுத்தி அவளை இறக்கினர். கண்ணீர் தழும்பிய அவள் கண்களில் மீண்டும் சிரிப்பு. வண்டியில் இருந்து இறங்கியதுமே   ஆல மரத்தை நோக்கி ஓடினாள். பின்னால் மூவரும் ஓடினர்.

ஐயர் முதன் முதலாய் அவளைப் பார்த்த அதே இடத்தில் போய்ப் படுத்தாள் சுலோச்சனா. சேலையை முழங்கால் வரைத் தூக்கிவிட்டாள். சிரிக்கத் தொடங்கினாள். சத்தமாய். பல பிறவிகளாக சிரிக்காத சிரிப்பையெல்லாம் சிரிப்பவள்போல் சிரிக்கத் தொடங்கினாள். காலங்காலமாக கன்னிகள் தெய்வங்களாகும்போது சிரிக்க மறந்த சிரிப்பையெல்லாம் சேர்த்து சிரிப்பதுபோல் சிரித்தாள். விழுதுகள் வழி விழுந்த பெளர்ணமியின் வெளிச்சத்தைக் கைகளால் பிடித்து இழுப்பவள்போல் சைகைகள் செய்தாள். நடேச ஐயரும், அவரது மனைவியும், அவரது மருமகனும் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றிருந்தனர். சுலோச்சனா சிரித்துக்கொண்டே இருந்தாள். அவள் தெய்வமாகிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.