கவிதைகள்

மழையில் குளிக்கும் மலை

அதைச்
சுற்றி சுற்றி வந்து பார்ப்பேன்.

அது
சிறிதும் நகராமலேயே எங்கிருந்தும் எப்படியும்
என்னைப் பார்க்கும்.

கீழிருந்து அதை நிமிர்ந்து பார்த்தால்
மலைப்பாய் இருக்கும்.

மெல்ல ஏறத் தொடங்கி விட்டால் என் தகப்பன் தோளின் மேல் ஏறி சித்திரைத் திருவிழாவிற்குப் போனது ஞாபகமாகும்.

இரவில் அது வேடிக்கை காட்டும்
நிலவே
தனி.

உயர
உயரப் போகலாம் தான்.

உச்சி சேர்ந்தால் தூக்கி வைத்து கொண்டாடுந் தான்.

அவ்வளவு எளிதில்லை
அதன் உயரத்தைத் தொடுவது போல் அதன் உன்னதத்தைத் தொட என்று தோன்றும்.

நெடுங்காலம்
எத்தனை பேரைப் பார்த்திருக்கும் என்னைப் பார்ப்பது போல்
அது?

யாரை
அது நினைவு வைத்திருக்கும்?

யாரிருப்பார்
இறுதி வரை அதை நினைவு வைத்திருக்க?

இனியும்
நெடுங்காலம் எத்தனை எத்தனையோ பேரைப் பார்க்கும்.

அவர்களுக்கு
இப்போதிருந்தே காத்திருப்பது போல் காத்திருக்கிறதே?

தன்னலமற்ற முடிவில்லாத அதன் காத்திருப்பில் தான் அதன் கவினும் குளிர்ச்சியும் கூடிப் போகும்.

அதிலும்
நிலா இல்லாத இரவில்
ஒரு சொக்கு சொக்க வைக்கும்.

ஒரு மாமத யானையாய் இருளில் ஒளிந்து மாயம் செய்யும்
அது.

’மழையோ மழை’யென்று மழை பெய்யும் போது பார்க்க வேண்டும்
மழையில் குளிக்கும் மலையை.

இழையும்
மழையில்
குழையும்
மலை.

எது தான் அறுதியாய் ‘இது’ என்று யோசிப்பேன்.

~oOo~

நடை

ஒரு நிழற் சாலையில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் நடப்பர்.
ஒருவர் வேகமாய்
ஒருவர் மெதுவாய்
ஒருவர் செல்பேசியில் பேசிக் கொண்டே
ஒருவர் பேசாமலே
ஒருவர் பதுங்கிப் பூனை போல்
ஒருவர் யானை போல் அதிர்ந்து
ஒருவர் பார்வை நிலம் தாழ்த்தி
ஒருவர் பார்வை நேர் கொண்டு படை மேற் செல்வது போல்
ஒருவர் இன்னொருவரை முந்தும் போது பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே
ஒருவர் ’எனக்கேனெ’ன்று திரும்பிப் பாராமல் இன்னும் வேகம் கூட்டி
ஒருவர் அலுங்காமல் குலுங்காமல்
ஒருவர் ‘நடை’க்கென்றே தனி நடை போல் நடை பயின்று
ஒருவர் வெகு தூரம் வரை மூச்சிறைக்க
ஒருவர் கொஞ்ச தூரத்தில் திருப்தி கொண்டு திரும்பி-
இப்படித் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகமாய்
வெவ்வேறு விதமாய் நடக்கும் அனைவரையும் ஒரே சமயத்தில் அனுசரித்து நடத்திச் செல்லும் சாலைக்குத் தான் தெரியும் சிரமம்.
சிரமம் தாராதவை மரங்கள் தாம்.
அவை
நடப்பதில்லை என்பதாலல்ல.
யாரும் நடக்காத வேளையில் தான் மட்டும் சாலை தனிமையில் ஏகுங் கால்
இடைஞ்சலில்லாமல்
அதன் இரு புறமும் அதற்கு வழி விட்டு நிற்பவை
மரங்கள்
தாம்.

கு.அழகர்சாமி

கடல் எனும் பெரும்பாம்பு

பலவகை மீன்களையும்
உடைந்த கப்பல்களையும்
அறுந்த வலைகளையும்
சன்னமாய் விளைந்த முத்துக்களையும்
குவிந்து கிடக்கும் சங்குகளையும்
உறங்கும் எரிமலைகளையும்
மினுங்கும் பாறைகளையும்
பசேல் பாசிகளையும்
கசை உரு தழைகளையும்
இறந்த பறவைகளையும்
கவிழ்க்கப்பட்ட கழிவுகளையும்
பெயர் தெரியாத பலவுயிர்களையும்
இன்னும் இன்னவெனத் தெரியாத பலவற்றையும்
விழுங்கிய கடல் எனும் பெரும்பாம்பு
செரிக்கத் திராணியற்று அறுபொழுதும்
ஏப்பம் விட்டுத் தவிக்கிறது -அதன்முன்
ஆயிரம் நாக்குகள் கொண்டு
தன்னோடு பேசுவதான நினைப்பில்
முட்டாள் கவிஞன் ஒருவன் மோனத்தில்.

ம.கிருஷ்ண குமார்

மனக்கவசம்

நீங்கள் நல்லதையே
யோசித்துச் செய்கிறீர்கள்
ஆனால் அது
பிறருக்குக் கெடுதலாகிறது

இனி நல்லவற்றைச்
செய்ய வேண்டாமென்று
முடிவு செய்த பின்னும்
நல்லதையே செய்கிறீர்கள்

அவர்களெல்லாம் தம்
காலடித்தடங்களை
உங்கள் தடத்தின்மேல் வைத்துப்
பொருத்தம் பார்க்கிறார்கள்

உங்கள் மனக்கவசம்
கிழித்து அதன் வழியாய்
உள்ளே நுழையப் பார்க்கிறார்கள்

அவர்கள்
ரோஜாத் தோட்டத்தில்
வேப்பம்பூ தேடுபவர்கள்

வளவ. துரையன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.