யுடோபியா

வாசலிலேயே மெர்சி மிஸ் காத்திருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து கேட்டைத் திறக்கும் வரை அவர் முகம் பார்க்காமல் தவிர்த்தேன். நல்ல மாதிரி தான். இருந்தாலும் இதோடு எத்தனை முறைகள்.

வழக்கமான சங்கடப் பார்வையோடு வழக்கமாய்ச் சொல்வது போல் “சாரி மிஸ் “ என்றேன். “இட்ஸ் ஓகே. ஆப்டர் ஆல் என் பொண்ணு மாதிரி தானே” என்றார். இன்றைக்கு இதைச் சொல்கிறார். பெரும்பாலான நாட்களில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டுக் கிளம்பி விடுவார். அவர் கண்களை சிரமப்பட்டு நேராய்ப் பார்த்தேன். நிச்சயம் அதில் ஒரு சோர்வும் சலிப்பும் இருந்ததாய்த் தோன்றியது.

இருந்தும் வேறு வழியில்லை. மெர்சி மிஸ்ஸின் துணை தவிர வேறு பற்றுக் கோல் இல்லை. முதலில் அவரை நான் மெர்சி மிஸ் என்று அழைப்பதே சரியில்லை. அவர் அனுவுக்கு தான் மிஸ். அதுவும் ஓய்வு நேரத்தில் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கிற மிஸ்.

நானும் எப்படியோ மாற்றிக் கொண்டவனாய் அவரை எப்போது பார்த்தாலும் மிஸ் மிஸ் என்று அழைக்கத் துவங்கி விட்டிருக்கிறேன். அவரும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது அதை விடப் பெரிய ஆச்சரியம் . மிஸ் என்ற எத்தனையோ விளிப்புகளின் இடையே நான் அழைப்பது பெரிய வித்தியாசங்கள் எதையும் அவர் மனதில் தோற்றுவிக்காமல் இருந்திருக்கக் கூடும்.

வெறுமனே சாத்தி வைத்திருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து ஷூக்களைக் கழற்றும் போதே திறந்து கிடந்த அறைக் கதவின் வழியே கட்டிலில் படுத்திருந்த அவளைப் பார்த்தேன். மார்பு வழக்கத்தை விட சற்றே வேகமாய் ஏறியிறங்கிக் கொண்டிருந்தது. இந்த மாதிரி சமயங்களில் இது சகஜம் தான்.

ஷூக்களைக் கழற்றி முடிக்கவும் அவள் திடுக்கென்று விழிக்கவும் சரியாயிருந்தது. தானாக விழிக்கவில்லை. அது அவளை விழிக்கச் செய்திருந்தது. வேகமாக உள்ளே ஓடினேன். தலை ஒரு பக்கமாய்த் திரும்பிக் கொண்டது. கண்கள் நான் வந்ததை உணர்ந்து விட்டது போல் என் மேல் நிலை குத்தி நின்று கொண்டன. வாய் கோணிக் கொண்டது. இடக்கை முறுக்கிக் கொண்டு ராட்டினம் போல் சுற்றத் துவங்கியது. ங்க்ம்ம்ம்ம்…. ங்க்ம்ம்ம்ம் என்று வினோதமான ஒலி அவளிடமிருந்து வெளிப்பட்டபடி இருந்தது. கால்கள் விறைத்துக் கொண்டு அந்தரத்தில் நின்று கொண்டன.

சுற்றிக் கொண்டிருந்த அவள் இடக்கையை அழுந்தப் பிடித்துக் கொள்வது மிகுந்த சிரமமாய் இருந்தது. வலக்கை தட் தட் என்று மெத்தையை அடித்துக் கொண்டிருந்தது. அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்ததால் ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்த என் கையில் கடிகாரம் கண்ணில் பட்டது. அனு வருவதற்கு இன்னும் நேரமிருந்தது.அதற்குள் இது அடங்கி விட்டால் பரவாயில்லையென்றிருந்தது.

முழுதாய் இரண்டு நிமிடங்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மெல்ல அவள் படபடப்பு குறைந்து மெல்லிய முனகல் வெளிப்பட்ட படியிருந்தது. நடு நடுவே புஸ் புஸ் என்று பெரும் மூச்சுக்களை விடுத்தபடியிருந்தாள். பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து வியர்த்திருந்த அவள் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டேன். அவ்வளவு அழுந்தத் துடைத்தும் அவளுக்கு அது குறித்த பிரக்ஞை இல்லை. மின் விசிறியைப் பார்த்தேன். முழு வேகத்தில் சுற்றுவதன் அறிகுறியாய்க் கணிசமான ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது.

அவள் கை என் கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. மீண்டும் அவள் நெஞ்சுக் குழியைப் பார்த்தேன். மூச்சு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. முன்பெல்லாம் இது போன்ற நிகழ்வுகளுக்குப் பின் இது மாதிரி நெஞ்சுக் குழி சீராய் ஏறி இறங்கத் துவங்கி விட்டால் அப்போதைக்கு அந்தப் பிரச்னை இல்லை, உடனே திரும்ப வராது போன்ற முடிவுகள் செய்து வைத்திருந்தேன்.

சமீபமாய் என்னுடைய எந்தக் கணக்குகளிலும் அனுமானங்களிலும் அகப்படாமல் நினைத்த போதெல்லாம் வந்து ஆட்டி வைத்தபடி இருக்கிறது. நெஞ்சுக் குழியின் சீர் மூச்சைப் பார்த்து ஓரளவு ஆசுவாசமாய் இருந்தாலும் மனதின் ஓரத்தில் பயம் ஓடிக் கொண்டிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

பத்துப் பதினைந்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் சற்றே அயர்ந்தாள். இனி வராது என்று ஏதோ தீர்மானமாய்த் தோன்றியது. மனமில்லாமல் அறை வாசலில் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்து விட்டு அப்போது தான் உடை கூட மாற்றாததை உணர்ந்தவனாய் அவசரமாய் உடைகளைக் களைந்து முகம் கழுவிக் கொண்டு பாலை அடுப்பிலேற்றிக் காய்ச்சத் துவங்கினேன். வாசலில் அனு வரும் சத்தம் கேட்டது.

உள்ளே வந்தால் அவளாகவே உடை மாற்றிக் கொண்டு நான் பால் கொண்டு தரும் வரை அமைதியாக சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கக் கற்றுக் கொண்டு விட்டாள். பால் காயும் சில நிமிட இடைவெளியில் ஏதோ ஞாபகத்தில் அமிழ்ந்தவன், ஸ்ஸ் என்று பொங்கும் ஓசை கேட்டுச் சட்டென்று நிகழுக்கு வந்து அடுப்பை அணைத்தேன். அடுப்பின் சத்தம் அடங்கியதும் பேச்சுக் குரல் கேட்டது.

சட்டென்று திடுக்கிட்டேன். அதற்குள் எழுந்து விட்டாளா என்ன? பாலை அப்படியே வைத்து விட்டு விரைந்தேன். எழுந்து விட்டிருந்தாள். படுக்கையில் அமர்ந்து கொண்டு சோர்வான சிறு புன்னகையுடன் அனுவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அனு அவள் நெற்றியையும் முகத்தையும் புறங்கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு சில நொடிகள் அந்தக் காட்சியில் லயித்தவன், பாதுகாப்புக் கருதி சட்டென்று அவர்கள் அருகில் சென்றேன். கண்களாலேயே “ரொம்ப படுத்திட்டேனா?” என்பது போல் கேட்டாள் அவள். கண்ணசைவிலேயே அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அனுவிடம் தாவினேன்.

“அனுக்குட்டி வாடா. போய் முகம் கழுவிட்டு வா. அப்பா பால் குடுக்கறேன் என்று அவளை மெல்ல நகர்த்தினேன். அனுவின் அம்மாவிடம் மெல்ல “நீ ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. நான் பாத்துக்கறேன்” என்றேன். அதைச் சொல்லும் போதும் யோசனையோடே தான் சொன்னேன். இப்போதெல்லாம் இந்த உடல் உபாதை காரணமாய் எவ்வெப்பொழுதெல்லாம் அவளுக்குக் கோபம் வருகிறதென்றே கணிக்க முடிவதில்லை.

ஏதேனும் லவலேசம் கூட முக்கியமில்லாத வார்த்தையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சண்டையை ஆரம்பிப்பாள். அவள் சண்டை போடுகிறாளென்பதை விடவும் அந்தச் சமயங்களில் அவள் வெளிப்படுத்தும் மூர்க்கம் தான் சற்றே அச்சமும் கவலையும் கொள்ளச் செய்வதாயிருந்தது.

அதனாலேயே அனுவை அவளருகில் விடுவதற்கு ஆயிரம் யோசனைகள். அம்மாவிடம் குழந்தையை விடுவதற்கு யோசனை. இது போல யோசிக்க ஆரம்பித்தால் கார் சக்கரத்தில் மாட்டிய சாலைக் கயிற்றுக் குப்பையாய் நினைவுகள் மனசை எங்கோ இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.

எப்போதிலிருந்து இந்தப் பிரச்னை துவங்கியிருக்கக் கூடும் என்று திட்டவட்டமாய்ச் சொல்ல முடியாது, எப்போது இது சரியாகுமென்றும் சொல்ல முடியாது, அறுவை சிகிச்சை முழுப் பலனளிக்குமா என்று தெரியாது, என்று முதல்முறை அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு டாக்டர் முன் அமர்ந்திருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் மனசில் நிழலாடின.

அவர் சொன்ன அறிவியல் விளக்கங்களெல்லாம் வடிகட்டப்பட்டு இறுதியாக மனதில் எஞ்சிய குறிப்புகள் அவளுக்கு மூளையின் இடப்பகுதியில் ஒரு சிறு கீறல் இருக்கிறதென்பதும், அதனால் இது போல் வலிப்பு வரக்கூடுமென்பதும், இது எப்போது வரும் என்று முன் கூட்டியே கணிக்கக் கூடியதல்ல என்பதும் , முடிந்தவரை டென்ஷன் ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பது வராமல் தடுக்க மிகவும் உதவும் என்பதும் தான்.

அறுவை சிகிச்சை செய்தால் சரியாவதற்கும், அதே சமயம், உணர்ச்சிகளில்லாமல் காலம் முழுவதும் கட்டிலிலேயே கிடந்து விடுவதற்குமாய் இரண்டு விதமான முடிவுகளுக்குமே 50-50 சாத்தியங்களிருப்பதாய்ச் சொன்னார். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், மனதளவில் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் தீராத அன்பொன்றே அதைத் தடுக்கக் கூடியது என்றும் அவர் கூறி விடை கொடுத்த போது, எதிர்காலத்தின் மீது மாபெரும் இருள் போர்வையொன்று போர்த்தி விட்டாற் போல் தோன்றினாலும், அன்பின் மீது அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தன்னைத் தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டதும், எப்போதும் இதைப் பற்றியே யோசிக்கத் துவங்கி அதீதக் கற்பனைகளில் ஆழ்ந்து போகத் துவங்கியதும், துணைக்கு யாரும் இருக்க முடியாமல் போன தவிர்க்க முடியாத தனிமைப் பொழுதுகளும் என எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, அவள் குணம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டிருந்திருக்கிறது.

அதை நான் கண்டுணர்ந்து கொள்ள அவள் கோபத்தில் என்ன செய்கிறோமென்றே தெரியாமல் குழந்தையைக் கீழே தள்ளி எட்டி உதைக்கும் காட்சியைக் காண வேண்டியிருந்தது. நிலமை கை மீறிப் போய் விட்டிருந்ததை உணர்ந்தேன். மிகக் கவனமாய் இருவரையும் முடிந்த வரை விலக்கி வைத்தாலும், எப்போதும் அடி வயிற்றில் ஒரு பயம் சுழன்று கொண்டே இருந்ததைத் தவிர்க்கவே முடியவில்லை.

பெயருக்கு எதையோ செய்து சாப்பிட்டேன் என்று பேர் பண்ணினேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் இப்படித் தான். அவளுக்கும் சாப்பிடக் கொடுத்து, அவளைத் தூங்க வைத்தேன். மாத்திரைகளின் உதவியில்லாமல் இப்போதெல்லாம் அவள் தூங்குவது என்பது கிட்டத்தட்ட நடவாத காரியமாகி விட்டிருந்தது.

படுக்கையறைக்கு வந்தேன். குழந்தை தூங்காமல் எனக்காக விழித்திருந்தாள்.

“என்னடா தூங்கலியா?”

“அப்பா ஒரு கத சொல்லுப்பா”

“இப்பவே லேட்டாயிடுச்சேடா. கத கேட்டு தூங்கினா இன்னும் லேட்டாயிடுமே…””

“நாளைக்கி ஸ்கூல் ஹாலிடே தானப்பா. பரவால்ல சொல்லு”

எப்போதும் தூங்கக் கதை கேட்பவளல்ல. எப்போதேனும் இப்படிக் கேட்பதுண்டு. பறக்கும் யானைகள் பேசும் முதலைகள், பாடும் மான் குட்டிகள் என்று ஏதேனும் கதைகளை உருவாக்கிக் கொண்டிருப்பேன் அவள் தூக்கத்தில் விழும் வரை.

“அப்பா வாப்பா கத சொல்லு” என்ற அவளின் குரல் என்னை நிகழுக்கு இழுத்தது. கதை பற்றீ யோசிக்க முடியாமல் செய்திருந்தது நாளைக்குக் குழந்தைக்குப் பள்ளி விடுமுறை என்ற விஷயம். அடுத்த இரண்டு வாரயிறுதி விடுமுறை நாட்களை இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு சமாளித்துக் கடத்த வேண்டுமென்பதே ஆகப் பெரும் அயர்ச்சியைக் கொடுப்பதாயிருந்தது.

மிகுந்த பிரயாசைப் பட்டு நினைவுகளை ஒதுக்கி வைத்துக் கொண்டு குழந்தையின் அருகில் படுத்துக் கொண்டு அவள் தலையைக் கோதினேன்.

“என்ன கதை வேணும்டா”

“நீயே எதாச்சும் புதுசா சொல்லுப்பா”

“சரி. ஓகே. ஒரு காலத்துல யுடோபியான்னு ஒரு உலகம் இருந்துச்சாம்”

“யுடோபியான்னா என்னப்பா?”

‘’அங்க யாருக்குமே எந்தக் குறையுமே இருக்காதாம். எல்லாருமே எப்பவுமே சந்தோஷமாவே இருப்பாங்களாம்”

“அப்ப அங்க ஸ்கூல், டெஸ்ட்லாம் இருக்காதாப்பா?”

“மெலிதாய்ச் சிரித்தேன்.

“இருக்கும்டா. ஆனா படிக்கிற பிள்ளைகளுக்குப் புடிச்ச மாதிரி இருக்கும். ஈஸியா.. ஜாலியா” என்றேன்.

“ம்” என்றாள். அவள் ம் கொட்டினால் மேலும் அப்போதைக்குக் கேள்விகள் ஏதுமில்லை தொடரலாம் என்று அர்த்தம்.தொடர்ந்தேன்.

“அந்த உலகத்துல ஒரு அப்பா, அம்மா அவங்களோட குட்டிப்பொண்ணுன்னு மூணு பேர் இருந்தாங்களாம். ரொம்ப சந்தோஷமா ஜாலியா இருந்தாங்களாம்.”

“ம்”

அவங்களுக்கு சில ஸ்பெஷல் பவர்ஸ்லாம் இருந்துச்சாம். குறிப்பா அந்த அம்மாவுக்கு”

“ம்”

அதன் பின் அங்கிருக்கும் சக மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றுக்குச் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், யுடோபியா என்ற பெயரை நிலைநாட்ட அந்தக் குடும்பமே அந்த உலகத்திலிருந்த எல்லாருடைய பிரச்னைகளுக்கும் தங்களிடமிருந்த சின்னச் சின்ன சக்திகளின் எளிய தீர்வுகளைக் கண்டதாகவும், அதன் பிறகு எல்லாரும் யுடோபியாவில் மகிழ்ச்சியாக வாழத் துவங்கியதாகவும் கதையை முடித்தேன்.

அனு தூங்கி விட்டிருந்தாள். முகத்தில் நிம்மதி படர்ந்திருந்தது. எவ்வளவு நேரம் குழந்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியாமலே தூங்கிப் போனேன்.

~oOo~

அன்று காலையில் அலுவலகம் கிளம்பும் போதே வானம் கருத்து உறுமிக் கொண்டிருந்தது. அனுவைக் கையோடு கிளப்பி ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு, நானும் அலுவலகம் கிளம்பி விட்டேன். அலுவலகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்து வேலைகளைக் கவனிக்கத் துவங்கிய பின்னும் முதல் நாளிரவு எனக்கும் அவளுக்கும் நடந்த சம்பாஷணைகள் நினைவில் ஓடியபடியே இருந்தது.

வெகு நாட்களுக்குப் பின் அவளிடமிருந்து தெளிவான, பரிவான, ஆதுரமான , அமைதியான பேச்சு.

“ஏம்ப்பா?

“சொல்லும்மா”

“என்னால உனக்கு ரொம்ப பிரச்னை இல்ல?”

“டோண்ட் பி சில்லி. அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“நீ நிஜமாவே என்னை இன்னும் லவ் பண்றியா?”

புன்னகைத்தேன். “என்னடா கேள்வி இது?”

சற்றே மௌனமாய்த் தலை குனிந்திருந்தாள்.

“அனு எங்கிட்ட வரதுக்கே பயப்படறாள்ல?”

சட்டென்று என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

மெல்ல அவள் தலையைக் கோதி “ அப்படிலாம் இல்ல. யு கெட் வெல் ஸூன். கொஞ்ச நாள் தான். அப்புறம் ஜாலியா ரெண்டு பேரும் விளையாடலாம். என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்குவீங்கள்ல?” என்று கேட்டுச் சிரித்தேன்.

சோகையாய் அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.

“உன் மடியில கொஞ்சம் படுத்துக்கட்டுமாப்பா? ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு” என்றாள்.

எதுவும் பேசாமல் அவளை இழுத்து மடி மேல் படுக்க வைத்துக் கொண்டேன். குனிந்து அவள் தலையைக் கோதிக் கொண்டிருந்த என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தலையை உயர்த்தி உதட்டில் முத்தமிட்டாள்.

தலையை உலுக்கி நிகழுக்கு வந்தவன், உதட்டை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டு தானாய்ச் சிரித்துக் கொண்டேன். எத்தனையோ நாட்களுக்குப் பின் சிரித்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும் என்று என்னவோ ஒரு அசட்டு நம்பிக்கை உருவானது. மீண்டும் கம்பியூட்டரை கவனிக்க ஆரம்பித்த போது மொபைல் ஏதோ குறுஞ்செய்தி வந்திருப்பதன் அடையாளமாய் லேசாய் உறுமி அடங்கியது.

எடுத்துப் பார்த்தேன். அனுவின் பள்ளியிலிருந்து தான் செய்தி. கடும் மழை எதிர்பார்க்கப் படுவதால் முன்னெச்சரிக்கையாய்  பள்ளியில் விடுமுறை அறிவித்து விட்டதாகவும் குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லலாமென்றும் வேனில் வரும் குழந்தைகள் வேனிலேயே மீண்டும் வீட்டில் இறக்கி விடப் படுவார்கள் என்றும் குறுஞ்செய்தி கூறியது.

அனுவை வேனில் வரட்டும் என்று விடுவதை விட நாமே போய்க் கூட்டி வந்து விடலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அலுவலகத் தொலைபேசி அலறியது. அடுத்த ஒரு மணி நேரம் வெவ்வேறு போன் கால்களில் கழிந்தது.

ஒரு வழியாய் எல்லாம் முடிந்து சோர்வாக இருக்கைக்குத் திரும்பினேன். அனு இந்நேரம் அவளே வீட்டுக்கு வந்திருப்பாள். மனம் லேசாய்த் துணுக்குற்றது. அனுவையும் அவளையும் தனியே விட முடியாது. போய் விட்டு வந்து விடுவோம் என்று கிளம்பினேன்.

மழை எப்போது வேண்டுமானாலும் வரும் போல இன்னமும் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. காலையிலிருந்ததை விட இப்போது இன்னும் வானம் கருத்திருந்தது.  மெர்சி மிஸ் ஊரில் இல்லை  இரண்டு நாட்களாக. குழந்தையை அலுவலத்துக்கே அழைத்துப் போய் விடலாமா அல்லது அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு விடலாமா என்று பல மாதிரியாக யோசித்தபடியே பைக்கச் செலுத்தியதில் வீட்டை அடைந்து விட்டிருந்தேன்.

பைக்கை விட்டு இறங்கவும் மழை பெய்யத் துவங்கவும் சரியாயிருந்தது.சில அடிகள் எடுத்து வைத்து கேட்டைத் திறக்கும் போதே மழை வலுக்கொண்டு பெரிதாகியிருந்தது. மழையின் பேரோசையை மிஞ்சி வீட்டுக்குள்ளிருந்து ச்சிலீர் என்ற சத்தம் திடுக்கிடச் செய்தது. வேகமாய்ப் பதறிப் படியேறி சாத்தியிருந்த வீட்டுக் கதவைத் திறந்தவன் அதிர்ந்தேன்.

ஹாலின் வாசற்கதவை ஒட்டிய முனையில் குழந்தை அனு பயந்து நடுங்கி கண்களில் நீர் கோர்த்து நின்று கொண்டிருந்தாள். ஹாலின் மற்றொரு முனையில் அவளின் அறை வாசலில் தலைவிரிகோலமாய் மூக்கிலும் வாயிலும் கண்களிலும் நீர் வழிய மூச்சு வாங்கியபடி அவள் நின்றிருந்தாள். மூர்க்கம் அவளிடம் கொதித்துக் கொண்டிருந்தது.

இருவருக்கும் இடையே ஹால் முழுவதும் ஒரு கண்ணாடிக் கோப்பை சிதறிக் கிடந்தது. “அனு என்று அழைத்தேன். குழந்தை திரும்பினாள். அப்போது தான் அவள் கன்னத்தைப் பார்த்தேன். ஒரு கண்ணாடிச் சில்லு லேசாய்ப் பட்டு ரத்தம் பூத்திருந்தது. என்னைப் பார்த்ததும் குழந்தை பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். என்னிடம் ஓடி வர எத்தனித்தவளை, “ அனு ஒரு நிமிஷம்… வராதடா.. அங்கேயே இரு “ என்று கூறி விட்டு,போட்டிருந்த ஷூவைக் கழற்றாமல், ஹாலின் மறு மூலையிலிருந்த துடைப்பத்தையும் முறத்தையும் எடுத்தேன்.

~oOo~

முழுதாய் இரண்டு மணி நேரமாகியிருந்தது. ஹாலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசிக் கண்ணாடித் துகள்கள் ஏதுமில்லை என்று உறுதி செய்து கொள்ளவும், அதன் பின் அவளுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துத் தூங்கச் செய்யவும்.

குழந்தை சாக்லேட்டுகளாலும் பொம்மைகளாலும் கன்னத்துக் காயத்தை தற்காலிகமாய் மறந்திருந்தாள். உள்ளே போனேன். “ அனு… கொஞ்ச நேரம் தூங்கறியாடா” என்றேன்.

“தூக்கம் வருது” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்த இடத்திலிருந்து தவழ்ந்து வந்து என் மடியில் படுத்துக் கொண்டாள். அறையில் தரையிலமர்ந்தபடியே ஹால் தரையை இன்னமும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன் கண்ணாடித் துண்டுகளுக்காக.

மழை விட்டு விட்டதன் அறிகுறியாய் எங்கோ மேலிருந்து கீழே நீர் சொட்டும் சத்தம் கேட்கத் துவங்கியிருந்தது. மழைக்குப் பின்னான பின் பக்கத்துத் தோட்டத்தில் மரக்கூட்டினின்று வெளியே வந்து ஏதோ ஒரு பெயரறியாப் பறவை ஓசையெழுப்பத் துவங்கியிருந்தது.

“அம்மா ஏம்ப்பா இப்படி பண்றா”  என்றாள்.

“அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைடா. அதான். நீ ஒண்ணும் பயந்துக்காத.”

“பர்ஸ்ட் எனக்கு பயமாருந்துச்சுப்பா… அப்புறம் அம்மாக்கு சளி வந்தப்போ வாயிலருந்து தண்ணியா வந்துச்சா, அம்மா அழுதாங்களா,, எனக்கும் அழற மாதிரி இருந்துச்சுப்பா. அம்மாக்கு எப்பப்பா சரியாவும்”

“சரியாயிடும்மா.. சீக்கிரம்”

“ம்ம்.. அப்பா கதை சொல்லுப்பா”

“நைட் தானேடா கதை கேப்ப?”

“இப்ப சொல்லுப்பா”

“என்ன கதை வேணும்டா”

யோசித்தாள்.

“யுடோபியா கதை சொல்லுப்பா. அதான் அப்பா அம்மா அந்த பொண்ணு எல்லாரும் எப்பவுமே ஹேப்பியா இருப்பாங்களே அது” என்றாள்.

“ம்ம்ம்..” என்று யோசித்தவன் கதையைக் கோர்த்துச் சொல்லத் துவங்கினேன்.

பின்புறத்து மெஸ்ஸில் இருந்து ஸ்பீக்கரில் மென்மையாய் “கோடைக்காலக் காற்றே” என்று ராஜாவின் பாடல் கசியத் துவங்கியிருந்தது. கண்ணோரம் துளிர்க்கத் தயாராய் நின்றிருந்த ஒரே ஒரு நீர்த்துளியைக் கண்களாலேயே அவளறியாமல் விழுங்கிக் கொண்டு, “அப்புறம் அந்தப் பொண்ணு என்ன பண்ணிச்சாம் “ என்று கதையைத் தொடரத் துவங்கினேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.