கூடிவரும் வேளை

இடம்பெயர்தலைப் பற்றி எழுதிவரும் ஆப்பிரிக்க நாவலாசிரியர்களின் புதிய அலை ஒன்று புறப்பட்டிருக்கிறது. இதற்கு உலகளாவிய அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. ஃபியாமெட்டா ரொக்கோ இவர்களின் எழுச்சியைப் பற்றி கூறுகிறார்.

ஒரு நாவலுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சன்மானம் புருவங்களை உயர்த்தக்கூடியது. அதிலும் அந்தப் புத்தகம் காமரூனில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு இளம் எழுத்தாளரால் எழுதப்பட்டு, முற்றுப்பெறாத நிலையில் இருக்கும் அவருடைய முதல் நாவல் என்று அறியும்போது இது அசாதாரணமானது என்று அறியலாம். அண்மையில் வெளிவந்த “பிஹோல்ட் தி ட்ரீமர்ஸ்” என்ற புத்தகத்தை எழுதிய இம்போலோ முபுவே (மேலேயுள்ள படத்தில் இருப்பவர்)  புதிதாக அமெரிக்காவிற்குக் குடிபுகுந்தவர்களால் படைக்கப்படும், ஆப்பிரிக்காவை அடித்தளமாகக் கொண்ட, புதிய இலக்கிய அலையைச் சேர்ந்தவர்களில் ஒருவர். “பணியாளர்களின் வாழ்க்கை எத்தன்மையுள்ளது என்பதைப் பற்றி எழுதுவது என் விருப்பம்” என்கிறார் அவர். நிதிநிறுவனங்கள் வீழ்ச்சியடையும் வரையில் அவர் ந்யூயார்க் நகரிலுள்ள சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தார். மேலும் “ஏழ்மையுடன் போராடுவது, அமெரிக்காவில் தத்தளித்தபடி வாழ முயல்வது, ஒரு குடிபெயர்ந்தவராக இருப்பது இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நான் எழுத விரும்பினேன். என்னைப் பற்றி எழுத விரும்பினேன்” என்று கூறுகிறார்.

பெரிய ஆப்பிரிக்க இலக்கியங்கள் அலைகளைப் போல வந்தவை. முதலாவது 1950ல் எழுதப்பட்டு 1958ல் பதிப்பிக்கப்பட்ட சின்னுவா அசேபேயின் “திங்ஸ் ஃபால் அபார்ட்” என்ற, கிட்டத்தட்ட 12மில்லியன் பிரதிகள் விற்று இன்றும் பதிப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, நூலால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. காலனியாட்சியின் அனுபவங்கள் சில அசாதாரணமான இலக்கியங்களைத் தோற்றுவித்தன. காலனியாட்சியின் குற்றவுணர்ச்சி உலகெங்கும் நிலவியதால், அதற்கு செல்வம் மிக்க நாடுகளில் பரவலான வாசகர்கள் இருந்தனர். பனிப்போருக்குப் பின்னால் இரண்டாவது அலை தோன்றியது. மேற்கு நாடுகள் மறைமுகப் போர்களிலிருந்தும் அரசியல் அறபோதனைகளிலிருந்தும் தங்கள் பார்வையைத் திருப்பிய நேரம் அது. தனிப்பட்ட நாடுகளையும் அதன் மக்களையும் நோக்கிய நேரடி ஈடுபாடு தொடங்கியிருந்தது. சிமுமண்டா எங்கோஸி அடிசே என்ற நைஜீரிய எழுத்தாளர் இந்தத் தலைமுறையில் அதிகமாக கொண்டாடப்பட்டவர்; அவர் எழுதிய “பர்ப்பிள் ஹைபிஸ்கஸ்” 2003ல் வெளிவந்து அவரைப் பிரபலப்படுத்தியது. காப்ரியேல் கார்ஸியா மார்கேஸ் 1970ல் லத்தீன் அமெரிக்கப் புனைவுகளைப் பிரபலப்படுத்தியது போல, சிமுமண்டாவும் அவரோடு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்ற எழுத்தாளர்களும் இப்போது இந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

உலகமயமாதல், கல்வி, எளிதாகப் பயணம் செய்யக்கூடிய வசதிகள் மற்றும் புதிய இலக்கியப் பரிசுகள் இந்த எழுத்தாளர்களின் படைப்புகளை உலக அளவில் எடுத்துச்செல்ல உதவியிருக்கின்றன. பல்வேறு இலக்கிய விழாக்களும் புத்தகக் கண்காட்சிகளும் ஜெய்ப்பூர், கார்டஜீனா, தென்னமெரிக்காவிலுள்ள மது தயாரிப்புக்குப் பிரசித்தமான ஃப்ரான்சொக், ஏன் சோமாலியாவிலுள்ள மொகாதிசு, சோமாலிலாந்தில் உள்ள ஹர்கேய்ஸா ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.   மற்ற நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய படைப்புகளின் மேலான வாசகர்களின் விருப்பத்தை இவை விரிவாகவும் ஆழமாகவும் ஆக்கின. ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உலக இலக்கியப் பரப்பில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆப்பிரிக்காவைப் பொருத்தவரை இதே நிலைமையைத்தான் நாம் காண்கிறோம்.

வளர்ந்துவரும் வசதி வாய்ப்புகள் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்குக் கல்வியளித்து வெளிநாடுகளில் அவர்கள் குடியேற வழிசெய்கிறது. அவர்களில் பலருக்கு குழந்தைகள் பிறந்து, வளர்ந்து அவர்களும் ஒரு கண்டத்திற்கு மேல் கால்பதித்துள்ளனர். “பை பை பாபர்” என்ற புகழ்பெற்ற கட்டுரையில் தையீ செலாஸி “அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர், ஆனால் பல நிலப்பரப்புகளை வீடாக எண்ணுகின்றனர்” என்று வாதிடுகிறார். அவர்களை “ஆஃப்ரோபோலிடன்ஸ், அதாவது உலகளாவிய ஆப்பிரிக்கர்கள், (குறிப்பிட்ட நாட்டின்) குடிமகன்கள் அல்ல” என்று குறிப்பிடுகிறார் அவர். வெளிநாட்டில் குடியேறிய முதல் தலைமுறை ஆப்பிரிக்கர்கள் மருத்துவ அல்லது பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தனர், இளம் ஆப்பிரிக்கர்கள் இசை ஸ்டூடியோக்களிலோ ஊடகத்துறையிலோ காணப்படுகின்றனர். அமெரிக்காவில் படிக்கச்சென்றவர்கள் படைப்பூக்கத் துறையில், குறிப்பாக நுண்கலைகளுக்கான முதுகலைப் படிப்பில் (எம்எஃப்ஏ), ஈடுபடுகின்றனர். சிமுமண்டாவும் யா க்யாஸியும் எம் எஃப் ஏ பட்டதாரிகள்; யூனிக்வேயும் ஃபோர்னாவும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக உள்ளனர்.

ஆனால் இந்த இலக்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய நாடுகளில் கிடைத்த பரிச்சயத்தால் மட்டும் உருவானதல்ல, இது ஒரு விதமான, கதைசொல்லுதலால் பிணைக்கப்பட்ட, ஆப்பிரிக்க அடையாளத்தாலும் வெளிப்பட்டிருக்கிறது. செலாஸியின் சில ஆஃப்ரோபொலிடன்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பல மொழிகளைப் பேசக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் ஆப்பிரிக்காவோடு பிணைக்கக்கூடிய ஏதோ ஒன்று இருக்கிறது. “ஒரு தேசமாகவோ”, “ஒரு நகரமாகவோ அல்லது அத்தையின் சமையலறையாகவோ” அது இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் செலாஸி. இந்தச் சுய அடையாளம் அவர்களின் பெற்றோர், பாட்டன்/பாட்டி சொன்ன கதைகளினாலும், நீதிக்கதைகளாலும், தேவதைக்கதைகளாலும், உவமைகளாலும், நினைவுகளாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே ஆப்பிரிக்க இலக்கிய இயக்கத்தின் அடித்தளம். அதன் உள்வயச்சூழலே அந்தக் கண்டத்திலிருந்து பல பெண் எழுத்தாளர்கள் வெளிப்பட்டு வருவதின் காரணம்.

கதைசொல்லுவதில் முபுவே கொண்டுள்ள வியத்தகு திறன் அவருடைய புதினத்தை உந்திச்செலுத்துகிறது. அவருடைய கதை கனவுகாணும் மென்மையான இருவரைப் பற்றியது. ஜெண்டே ஜெங்கா, அவர் மனைவி நெனி ஆகிய இருவர்தான் அவர்கள். லெமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மூத்த வங்கியாளர் ஒருவருக்கு ஜெண்டே கார் ஓட்டுநராக நியமிக்கப்பட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள் அவர்களிருவரும். ஆனால் நிதிநிறுவனங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அவர்களின் உலகம் சின்னாபின்னமாகின்றது. இந்தக் கதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைச் சொல்லிச்செல்கிறது.

“பிஹோல்ட் தி ட்ரீமர்ஸ்” ஆப்பிரிக்காவைப் பற்றி புதிய செய்திகளைச் சொல்வதால் மட்டுமல்லாமல், அமெரிக்கர்களுக்கும் அவர்கள் நாட்டைப் பற்றிய பல தெரியாத தகவல்களைத் தெரிவிப்பதால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டேவிட் எபர்ஷாஃப் என்ற ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் செயல் ஆசிரியர் ஒரே நாளில் அந்தப் புதினத்தைப் படித்து, இந்த நாவலை மேற்குறிப்பிட்ட விலைக்கு வாங்கினார். முபுவேயைப் பற்றியும் அவரது சக ஆப்பிரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் கடந்த இரண்டு வருடங்களாக அறிந்து வைத்திருக்கும் அவர் “ஆப்பிரிக்காவிலிருந்தும், கடல் கடந்து வாழும் ஆப்பிரிக்கர்களிடமிருந்தும் இதுவரை வந்த, வரப்போகின்ற குரல்களுக்கும் கதைகளுக்கும் எல்லையே இல்லை” என்று கூறுகிறார்.