உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?

தமிழில்: சுசீலா ராமச்சந்திரன்

எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் உற்பத்தி துறையில் (தயாரிப்பு சந்தை) உலகமயமாக்கல் பெருமளவில் ஏற்பட்டது ; பல மேலாண்மை வகுப்பறைகளில் பகிரப்பட்ட நிகழ்வு – “ஃபோர்ட் கார்களின் கதவுகள் பார்சிலோனாவிலும், குஷன்கள் புடாபெஸ்டிலும்,கியர்பாக்ஸ் பாரீஸின் புறநகரிலும்,ம்யூசிக் சிஸ்டம் ஒசாகாவிலும் தயாரிக்கப்பட்டு, ஷாங்காயில் ஒருங்கிணைக்கப்பட்டு தாய்லாந்தில் காராக விற்கப்பட்டது. இதில் அமெரிக்க பங்கு என்பது எங்கே?

இது நாடு கடந்தது – புவியியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது; எனவே உலகளவில் சிந்தியுங்கள் – உள்ளூரளவில் செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். ’Glocal-க்ளோகல்’ என்ற வார்த்தை உருவானது. தயாரிப்பு சந்தைகளின் ஒருங்கிணைப்பால் பெரிதும் குறைந்த உற்பத்தி செலவு மற்றும் வளரும் நாடுகளில் மிகுந்திருந்த திறன்தொழிலாளர்களின் வேலைத்திறம் இவற்றால் பொருளாதார செயல்பாடுகளின் உலகளவிலான ஒருங்கிணைப்பு உச்சத்தை எட்டியது. இவற்றோடு சேர்ந்து வந்ததுதான் மக்கள் வாழ்க்கைமுறைகளின் தர மேம்பாடு – பெரும்பாலும் அமெரிக்க தரத்தில் –அதாவது ஜீன்ஸ்,பதவுணவுகள்,கோலா பானம்  போன்றன.

தொண்ணூறுகளில் நிதி சார்ந்த சந்தையில் உலகமயமாக்கல் ஏற்பட்டது.. சென்னையில் ஒரு லாபகரமான தொழில் தொடங்க நியூயார்க் பங்கு சந்தையிலிருந்தோ, ஐரோப்பிய வங்கியிலிருந்தோ கூட நிதி திரட்ட முடியும் என்ற நிலை வந்தது.  முதலீட்டு நிதி சந்தைகளைத் தேடியது; எல்லை கடந்த பன்முகத்தன்மை என்பது தாரக மந்திரமானது. இவற்றுள், 18 ட்ரில்லியன்  டாலர்கள் அளவிலான முதலீட்டுடன் பென்ஷன் நிதி மிக முக்கியமான முதலீட்டளராக உருவெடுத்த்து;இதில் 15-20% உள்நாடல்லாத சந்தைகளில் முதலீடானது.சந்தைகள் முதலீட்டு நிதி தேடிய காலம் மாறி நிதி சந்தைகளை தேட ஆரம்பித்தது. ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிக்க ஆரம்பித்து,பென்ஷன் தரவேண்டிய காலமும் நீள ஆரம்பித்ததால், இந்நிதியானது அதிக வருவாய் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதற்காக வந்த் உபாயங்கள்தான் நுகர்வு சார்ந்த வளர்ச்சியும், பேராசை நல்லதுதான் என்ற இயல்பும்.

1986,மே மாதம் 18ந்தேதி ஐவான் போய்ஸ்கி என்பவர் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் பெர்க்லீ கல்லூரியில் பேசும்போது “பேராசை ஆரோக்கியமானது என்று நான் நினைக்கிறேன்;நீங்கள் பேராசைப்படும் வேளையிலும் உயர்வாகவே உணரலாம்” என்று பேசியதற்கு சபையில் பலத்த வரவேற்பு இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் நிதி மோசடிக்குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு, தெற்கு கலிபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டார்.

2008ல் ஏற்பட்ட பொருளாதார சரிவின் தாக்கம் உலகமயமாக்கலின் மீதும் ஏற்பட்டது.உலகப்பொது சந்தையில் சேராமலிருந்த நாடுகள் புத்திசாலிகளாக பார்க்கப்பட்டன. அது மட்டுமல்ல- அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்த 787 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவிகளில் ’அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்’ என்ற விதி சேர்க்கப்பட்டதும் பாதுகாப்பு பொருளியல் உலகமயமாக்கலை பின்தள்ளிவிட்டது தெளிவாகத் தெரிந்த்து.இதற்கு பதிலடியாக சீனாவும் தனது நிதிஉதவிகளில் இதே விதியை சேர்த்த்து. ஆக உலக மேடையில் விளையாட்டு ஆரம்பித்த்து.

இதில் சுவாரஸ்யமான ஒன்று-சில அமெரிக்க நிபுணர்கள் அமெரிக்கா,சீனா இணைந்து G-2 என்ற  அமைப்பை உருவாக்கி உலகநாடுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். சீனா பில்லியன் கணக்கில் நச்சுப்பூச்சுடைய பொம்மைகளை அமெரிக்காவுக்கு விற்றது; பதிலுக்கு அமெரிக்கா சீனாவுக்கு பில்லியன் டாலர் கணக்கில் கருவூல மசோதாக்களை(Treasury Bills) விற்றுள்ளது. ஆக உலகமய அரங்கில் இரு நாடுகளும் எதிரெதிரே;

சுவாரஸ்யமான மற்றொன்று- இந்தியாவைத்தவிர நிதி மற்றும் பொருட்சந்தைகளில் யாரும் இதைப்பற்றி பேசுவதில்லை. இப்போது ட்ரம்ப் வெற்றிக்குப்பின் டாவோஸ் நிபுணர்கள் உலகமய அரங்கை சீனா முன்நடத்த வேண்டுமென்று கேட்கிறார்கள்; என்ன ஒரு நகைச்சுவை?

மூன்றவதும், மிக முக்கியமானதுமான பரிமாணம்
தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட உலகமயம் – ப்ரௌன் காலர் வேலைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு தேவைப்பட்ட மனிதசக்தியை  வழங்க ஏற்பட்டது.

மேற்கு நாடுகளை ஒரு கற்பனைகாட்சி பயமுறுத்துகிறது – அகற்றப்படாத குப்பை, அடைபட்ட சாக்கடைகள், நிரம்பி வழியும் கழிவுக்குழாய்கள்.இவை சார்ந்த வேலைகளை ஒய்ட் காலர் வேலைகளைப்போல அவ்வளவு சுலபமாக அவுட்சோர்ஸ் செய்ய முடியாது-பின்னது பெரும்பாலும் மென்பொருள் சார்ந்தது;முன்னதற்கோ அந்தந்த இடங்களில் வேலை செய்ய மனிதர்கள் தேவை.

1950 மற்றும் 60களில், ஜெர்மனியின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் லட்சக்கணக்கான துருக்கியர்கள்,குர்து இனத்தவர் மற்றும் இராக்கியர்கள் ’விருந்தாளி வேலையாட்களாக’ சென்றனர்; அப்போது பிரான்ஸிற்கு சென்ற அல்ஜீரியர்களும்,மொராக்கோவினரும் இன்றும் கணிசமான அளவிலான சிறுபான்மையினராக உள்ளனர்;அந்நாட்டின் கால்பந்து அணிகளில் வெகுவாக உள்ளனர்.வட அமெரிக்காவிலுள்ள
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மெக்ஸிகோ நாட்டினர்
’பதிவு செய்யப்படாதவர்கள் – அதாவது சட்டத்திற்கு புறம்பானவர்கள்.

ஜெர்மனி,பிரான்ஸ்,அமெரிக்கா மற்ற மேற்கு நாடுகளில் இத்தகைய தொழிலாளர்கள் துப்புரவுப்பணிகள்/ இறைச்சிவெட்டுதல/ திராட்சை தோட்டவேலை/ வீட்டுவேலை/ சாலைப்பணிகள்/ குப்பை தரம்பிரித்தல்/ பிளம்பிங்/எடுபிடிவேலை/தாதி வேலை போன்ற ப்ளூ மற்றும் ப்ரௌன் காலர் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஐரோப்பாவில் மக்கள்தொகை குறைவால் வேலைக்கு வெளியாட்கள் தேவை இருந்த்து. 2000 ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட ஆரம்பித்த பொருளாதார சரிவுக்குப் பின் இந்நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்க ஆரம்பித்தனர்.உள்நாட்டுப் போரின் காரணமாக யேமன், சிரியா நாடுகளிலிருந்து வரும் பெரும் அளவிலான அகதிகளால் இந்த பிரச்னை பெரிதாகியுள்ளது.

நிதி சார்ந்த சந்தைகளுக்கு எல்லைக்கோடுகளில்லாத உலகம் வேண்டுமெனில் தொழிலாளர் சந்தைக்கும் அவை இருக்கட்டுமே-ஆனால் மேற்கு நாடுகளுக்கு இதில் ஒப்புதலில்லை;உலகமயாக்கல் அவர்களுக்கு ஒருவழிப்பாதைதான-அரிசோனாவில் அனுமதியின்றி வரும் அகதிகளை கண்டவுடன் சுடும் குண்டர்கள், பெங்களுரு வேலைகளை எடுத்துக்கொண்டுவிட்டதாக ஒபாமா சொன்னது,சுவர் எழுப்புவேன் என்று ட்ரம்ப் சொல்வது, ஐரோப்பிய யூனியனை உடைக்கும் ப்ரெக்ஸிட் எல்லாம் இதனால்தான்.

உண்மையான உலகநாடுகளுக்கான ’பொதுநெறிமுறை’ என்றுமே இருந்ததில்லை;இன்று நடைமுறையில் இருக்கும் நெறிமுறை நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் 1648ல் ஜெர்மனியின் வெஸ்ட்ஃபாலியாவில் நடந்த ஒரு அமைதி மாநாட்டில் வடிவமைக்கப்பட்டது.மத்திய ஐரோப்பாவின் கால்பங்கு ஜனத்தொகை போர்,பெருநோய்,பட்டினியால் மடிந்தனர். முப்பது வருடங்களாக நடந்த போர்களுக்குப்பின் அமைதியின்மையால் சலித்துப்போன தலைவர்கள் ஒன்று கூடி நாடுகளின் தன்னாட்சி,ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலைய்டாமை  என்பன போன்ற கொள்கைகள் உள்ளடக்கி உலகநாடூகளுக்கான ஒரு நெறிமுறையை வகுத்தனர்.

தற்போடு, சமகால மேற்கத்திய மற்றும் தீவிர இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இவற்றை விமர்சிப்பது கவனிக்கத்தக்கது.1999ல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளேர் சிகாகோவில் நிகழ்த்திய பிரபலமான உரையில் – “வெளியுறவுக் கொள்கையில் நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை எதுவென்றால் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் நாம் எந்த அளவு தலையிடலாம் என்பதே”’’” என்றார். தலையிடக்கூடாது என்பதுதான் ஒத்துக்கொள்ளப்பட்ட உலகப்பொது நெறிமுறை. ’ தலையிடாமை என்பது முக்கியமான பல சோதனைகளுக்கு உட்பட்டது” என்றும் பேசினார். வெஸ்ட்ஃபாலியா கொள்கை மேற்கு நாடுகளுக்கு தற்போது ஏற்புடையதாக இல்லை என்பதற்கு கொசொவோ மற்றும் ஆப்கானிஸ்தானில் நேடொவின் தலையீடு, இராக்கில் அமெரிக்க தலையீடு போன்றவை உதாரணங்கள்.

வெஸ்ட்ஃபாலியா கொள்கை சார்ந்த உலகப்பொது நெறிமுறை உடையும் என்று தீவிர இஸ்லாமிய நடுகளும் கருதுவது கவனிக்கத்தக்கது. மார்ச் 11,2004ல் மேட்ரிட் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின், அல்கொய்தாவின் பிரதிநிதி என கூறிக்கொள்ளும் லூயிஸ் அயதுல்லா அறிவித்தது – :”வெஸ்ட்ஃபாலியா ஒப்பந்த்தத்துக்குப்பின் மேற்கு நாடுகள் ஏற்படுத்திய உலக அமைப்பு நொறுங்கும்;வலிமை வாய்ந்த இஸ்லாமிய ஸ்டேட்டின் தலைமையில் புது உலக அமைப்பு ஏற்படும்”.

ISISன் நாடு கடந்த வளர்ச்சியும்,கென்யா, சாத் நாடுகளில் போகோ ஹராம் அமைப்பின் நடவடிக்கைகளும் இதை வலியுறுத்துகின்றன.
தீவிர இஸ்லாம் உலக உம்மாவின் கீழுள்ள உலக ஆட்சிக்கு உட்பட்டது என்பதால் நாடுகளின் எல்லைகளை ஒத்துக்கொள்வதில்லை.கலிபா ஆட்சி என்று பேசுவது அவை எல்லை தாண்டி செயல்படும் அமைப்புகள் என்பதை காட்டுகிறது.

மற்றொரு தரப்பில், பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் லாபங்களைத் தேடி, நாடுகளின் அரசுரிமையைத் தாண்டுகின்றன. இதற்காக அவை வரியில்லா நாடுகளை புகலிடங்களாக உபயோகப்படுத்துகின்றன.
700க்கும் மேற்பட்ட இத்தகைய புகலிடங்கள் – பூஜ்ய வரி விதிப்பு, பெயர்களை வெளியிடாமை,பினாமி பெயரில் கணக்கு அனுமதித்தல் போன்ற பல வசதிகளை அளிக்கின்றன.பஹாமா தீவில், ஒரே முகவரியில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்புக்காக அமேஸான்,கூகுள்,மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களோடு அந்நாட்டு அரசு கிட்டத்தட்ட போரில் ஈடுபட்டுள்ளது.பல நிறுவனங்கள் வரியில்லா புகலிடங்களில் லாபங்களை முதலீடு செய்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப்பதிவில் செய்யும்  ஒரு சிறிய அளவிலான முறைகேட்டால் வளரும் நாடுகளுக்கு 2012ல் 730 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக க்ளோபல் ஃபைனான்சியல் இன்டெக்ரிடி அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த புகலிடங்களை மூட பலமான கோரிக்கைகள் அமெரிக்கா,ஐரோப்பாவில் அதிகரித்துள்ளன.

எனவே, உலகமயமாக்கல் என்பது தொழிலாளர் சந்தை, வரிஏய்ப்பு புகலிடங்கள் மற்றும் தீவிரவாதத்திற்கிடையே சிக்கியுள்ளது. ஐரோப்பியயூனியனின் எல்லைக்கோடு கடந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரிட்டனின் மத்திய வர்க்கம் கிளர்ந்தெழுந்த்தும்,அமெரிக்காவில் ட்ரம்ப் வெற்றியும் உலகமய ஆதரவாளர்களுக்கு விழுந்த பெரிய அடி. ட்ரம்ப் டாவோஸ் தீர்மானம் பற்றி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பிரான்ஸில் லே பென், ஹாலந்தில் கீர்ட் வில்டெர்ஸ் இவர்களின் வளர்ச்சியும் நாடுகளின் சுயாட்சி கொள்கை வலுப்பெறுவதை காட்டுகிறது.

இவற்றுக்கு இடையில், வலதுசாரி, இடதுசாரி என்ற பழமையான குழுப்பிரிவுகள் அர்த்தமிழந்துவிட்டன. ப்ரெக்ஸிட் விஷயத்தில் இடது சாரிகள் யூனியனை ஆதரித்ததும்,வலது சாரியில் ஒரு பகுதியினர் எதிர்த்த்தையும் கண்டோம்.

இப்போது, வலதுசாரி, இடதுசாரி இரண்டு தரப்பிலும் புதிய் குழுப்பிரிவுகள் உலகமய ஆதரவு மற்றும் தன்னாட்சி நாடுகளுக்கு ஆதரவு என்பதுதான்.

One Reply to “உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?”

  1. உலகமயத்தின் இன்றைய நிலையைப் பற்றிய ஒரு பருந்துப்பார்வை. நன்றி.

    ஒரு தகவல் பிழை. போகோ ஹராம் என்பது நைஜீரியாவில் இயங்குவது. கென்யா அல்ல.

    ஆஃப்ரிக்க நாடுகளில் இன்னுமொரு பிரச்சினை – இயற்கை வளம். ஓரளவு அமைதியாக இருந்த நைஜீரியாவைச் சீரழித்தது அங்கு கிடைத்த எண்ணெய் வளம். காங்கோவும் பித்தளை,தங்கம், வைராம், கோபால்ட் போன்ற தனிம வளங்கள் காரணமாகச் சூறையாடப்படுகின்றன. இன்று, ஓரளவு அமைதியான கிழக்கு ஆஃப்ரிக்கா நாடுகளின் சமூக நிலைக்குக் காரணம் – மக்களாட்சியும், பெரிதாக வளங்கள் இல்லாமையும் எனக் கூடச் சொல்லலாம். மிகத் துரதிருஷ்டவசமாக, ஆஃப்ரிக்க நாடுகள், கல்வி, தொழில் நுட்பம் இரண்டிலும் மிகப் பின் தங்கியுள்ளன – இங்கேயுள்ள கட்டமைப்பைப் பார்க்கையில், இன்னும் 50 ஆண்டுகளுக்கு இங்கே ஒன்றும் நிகழப்போவதில்லை என்பதுதான் நிஜம். இங்கே சீனம் மிகப் பெரிதாக விளையாடப் போகிறது வரும் காலத்தில் – அது அதற்கு மேலும் பலத்தைக் கொடுக்கும்.

    நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.