மகரந்தம்


[stextbox id=”info” caption=”ரயில் பயணங்களில்”]

2000 ஆவது ஆண்டு துவங்குகையில் உலக ஊடகங்களில் சீனாவையும், இந்தியாவையும் பெரும் வளர்ச்சிப் பாதையில் உள்ள நாடுகள் என்றும் இரண்டுக்கும் இடையே போட்டி ஒன்று எழப்போகிறது என்றும் கட்டுரை/ உரையாடல் எல்லாம் எழுதி/ காட்டிக் களித்துக் கொண்டிருந்தார்கள். தாம் எழுதியவற்றை, பேசியவற்றை அவர்களே நம்பினார்களா என்பதை இப்போதைக்குத் தள்ளி வைப்போம்.
மேற்கும் அப்போது ஏதோ கொஞ்சம் வளர்ந்து கொண்டிருந்தது. அல்லது பெரும் சிக்கலில் இல்லை. ஆனால் பத்தாண்டுகள் கழித்து நோக்கினால், மேற்கு பெரும் சிக்கலில் இருந்தது. குறிப்பாக அமெரிக்கப் பண முதலைகள் (நிதிக்கிழார்கள்) தம் மக்களையே ஓட்டாண்டிகளாக்கித் தம் செல்வக் குவியலை உலகெங்கும் பதுக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். கிளை நுனியில் அமர்ந்து கிளையின் அடியை வெட்டும் அதி புத்திசாலிகள்.

2017 இல் அதே முதலைகளை நம்பி அரசு மொத்தத்தையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர் அமெரிக்க வெள்ளையர் கூட்டங்கள். குறிப்பாக விவசாயிகளும், தொழிலாளர்களும், ஓரளவு வெள்ளைப் பெண்களும் இப்படித் தற்கொலை செய்து கொள்வதை ஏனோ விரும்பி ஏற்றிருக்கின்றனர் என்று சொல்லலாம். அந்த வருடங்களின் யூரோப்பைப் பற்றி எழுதப் போனால் நிறையவே இருக்கும். இங்கு சுருக்கமாகக் கவனிக்கத் தேவை இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் யூரோப்பின் மமதை ஒடுங்கி வருகிறது என்று மட்டும் நாம் சொல்லலாம். ஜெர்மனியையும், ஓரளவு போலந்தையும், இன்னும் சில சிறு ஸ்காண்டிநேவிய நாடுகளையும் தவிர மற்ற ஓரளவு பெரிய நாடுகள் எல்லாம் கடும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளன.

உதாரணமாக, முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளான போர்ச்சுகல், ஸ்பெயின், கிரீஸ், இத்தலி ஆகியன கடும் சிக்கலில் உள்ள நாடுகள். ’00 களில் ஓரளவு ஸ்திரமாக இருந்த ஃப்ரான்ஸும் சமீபத்தில் பொருளாதார, அரசியல் சிக்கலுக்குள் அமிழத் துவங்கி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மேற்படி நாடுகளில் அரசியல் இழுபறி இன்னமும் பழைய மோஸ்தர் ‘சோசலிசத்துக்கும்’ புது மோஸ்தர் ‘முதலியத்துக்கும்’ ஒரு புறமும், இன்னொரு புறம் (கஞ்சாப் புகையில் மயங்கிய புத்தியோடு எப்போதும் உலகைப் பார்க்கும்) பல பண்பாட்டிய ஆரவார அரசியலுக்கும், கடும் கசப்பில் தம் இனத்தவரைத் தவிர மற்றெல்லாரையும் மனிதர்களாகக் கூடப் பார்க்க மறுக்கும் வெள்ளை இன மைய அரசியலுக்கும் இடையே நடப்பதால் இந்த நாடுகள் என்ன திக்கில் எப்படிச் செல்வது என்பது குறித்து கடும் குழப்பத்தில் உள்ளன. படிப்படியாக பழங்கஞ்சி சோசலிசமும், கஞ்சா பலபண்பாட்டியமும் வீழ்ந்து, கொள்ளைக்கார முதலியமும், இனவெறியும் வெற்றி பெறத் துவங்கி உள்ளன. இது உலகின் இதர நாடுகளுக்குச் சிறிதும் மகிழ்வு தராத முடிவு. யூரோப்பிய மமதை மட்டும் சரிந்திருந்தால் போதும் என்றுதான் ஆஃப்ரிக்க, ஆசிய நாடுகளில் மக்கள் கருதி இருப்பார்கள்.

மேற்கு இப்படிச் சுயமயக்கத்தில் இருக்கையில் உலகின் மீதுள்ள தன் கோரப்பிடியைத் தளர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறது. கிட்டிய வெற்றிடத்தில் ரஷ்யாவின் புது ஏகாதிபத்திய விழைவும், பெரும் போர் டாங்கியாக வளர்ந்து விட்ட சீனப் பொருளாதார கம்யூனிசப் பாசிஸமும் இறங்கி அகப்பட்டதைச் சுருட்ட முயன்று கொண்டிருக்கின்றன. தன்னை 21 ஆம் நூற்றாண்டின் உலக எஜமானனாக ஏற்கனவே பாவித்துக் கொண்டிருக்கும் சீனா, அதற்கேற்ற நடை உடை பாவனைகளை மேற்கொண்டாயிற்று. அப்படி மேற்கொள்ளத் துவங்கி சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது.
சீனா ஆசியாவில் ஊடுருவி இதர ஆசிய நாடுகளைத் தன் கைப்பாவையாக நடத்தும் முயற்சியில் அத்தனை வெற்றி பெறவில்லை. பாகிஸ்தானையும், நேபாலையும் ஓரளவு பாங்ளா தேஷையும் தவிர இதர ஆசிய நாடுகள் சீனாவின் பாதுகை தாங்கிகளாக மாறத் தயங்குகின்றன. ஆனால் சீனா ஆஃப்ரிக்காவிலும், லத்தின் அமெரிக்காவிலும் சந்தையிலும், தொழில் துறையிலும், விவசாயத்திலும், கட்டுமானங்களை எழுப்பும் நடவடிக்கைகளிலும் ஊடுருவி இப்போது 2017 இல் அந்நாடுகளின் எதிர்காலத்தில் பாதிப்புள்ள கணிசமான பங்குதாரராக மாறி விட்டிருக்கிறது.

மேற்கு நாடுகள் சுமார் 200 ஆண்டுகளாக ஆஃப்ரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சி அம்மக்களின் வாழ்வை இருட்டில் ஆழ்த்தி இருந்தன. அந்த மொத்த கண்டத்தையே ‘இருண்ட கண்டம்’ என்று பெயர் சூட்டி இறுமாந்து இருந்தனர் மேலை நாட்டினர். தமது காலனிய மமதையால் ஆஃப்ரிக்காவில் எழுந்து வரும் புது மத்திய வர்க்கத்தினரையும், அவர்களிடையே படித்த, நன்கு சிந்திக்கக் கூடிய மக்களையும் பொருட்படுத்தாத மேட்டிமைப் பார்வை மேற்குடைய நிறுவனங்களிடமும், ‘மேதாவிகளிடமும்’ இருந்தது. மேலை அரசுகள் தமது நீண்ட பாரம்பரியத்தை எளிதாகவே 21 ஆம் நூற்றாண்டின் புத்தி முதலீடாக மாற்றிக் கொண்டு ஆஃப்ரிக்காவின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகவும், அதிலிருந்து தம் பொருளாதார வளங்களை மேலெடுக்கக் கூடியவராகவும் ஆகி இருக்கலாம். மாறாக அவை ஆஃப்ரிக்காவை ஊழல், வன்முறை, கடும் நோய்கள், பஞ்சங்கள் ஆகிய நிரம்பிய பகுதியாகவே இன்னமும் பார்த்து வருவதால் அங்கு முதலீடு செய்யவோ, ஆஃப்ரிக்காவின் உள் கட்டுமானங்களை மேம்படுத்தும் பிரும்மாண்டச் செயல் திட்டத்தில் பங்கெடுக்கவோ விருப்பமில்லாமல் ஒதுங்கி இருந்தன. சீனாவுக்குப் பொருத்தமான திறப்பு கிட்டியது.

பிரமாதமாக உலக அரசியலில் சதுரங்கக் காய்களை நகர்த்தி வரும் சீனா ஆஃப்ரிக்காவில் நிறைய முதலீடு செய்திருக்கிறது. ஆனால் இந்த முதலீடு அனேகமாக மொத்தமும் சீனாவின் பைகளுக்கே திரும்பி விடும். ஆஃப்ரிக்க நாடுகள் சில பல கட்டுமானங்களைப் பெறும். ஆழ்கடல் துறைமுகங்கள், கரி எரித்து மின் சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள், இந்தியக் கடலிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை போகும் ஒரு ரயில் பாதை இப்படிச் சில. இவற்றைக் கட்ட கடன் கொடுப்பது சீன வங்கிகள். கட்டுமானப் பணிகளைத் திட்டமிடுவதிலிருந்து இறுதியில் கட்டி முடித்துக் கை மாற்றிக் கொடுப்பது வரை எல்லாம் சீன நிறுவனங்கள், பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள்? அனேகமாக எல்லாரும் சீனர்கள். ஆக மொத்தச் செலவில் பெரும் பகுதி சீனாவுக்கே திரும்பும். ஆனால் வங்கிகள் யாருக்குக் கடன் கொடுத்திருக்கின்றன? ஆஃப்ரிக்க நாடுகளுக்கு. சுமை அவர்களிடம் தங்கும். இந்தக் கட்டுமானங்களைப் பயன்படுத்தி ஆஃப்ரிக்க நாடுகள் தம் பொருளாதாரங்களை வளர்த்து உலகரங்கில் தம் பொருட்களை விற்று வருமானம் ஈட்டிக் கடனைத் திருப்ப வேண்டும்.

ஒரு வேளை சீனா ஆஃப்ரிக்காவிலிருந்து கனிமங்கள், தானியங்கள் போன்றனவற்றைப் பொருட்களாகப் பெற்று அந்தக் கடனைக் கழிக்க ஒத்துக் கொள்ளலாம். இந்த முயற்சிகளைக் குறை சொல்பவர்கள் அனேகமாக மேலையர், அல்லது அவர்களோடு அதிகம் ஒத்துழைத்து வளம் கண்ட ஆஃப்ரிக்கர். மற்றவர்களோ அமெரிக்கரும், யூரோப்பியரும் தொடர்ந்து ஆஃப்ரிக்காவை பஞ்சம் பிணி பீடித்த கண்டம் என்றே பார்த்து வந்தனர், இங்கு முதலீடு செய்ய அவர்கள் தயாராகவும் இல்லை, பெரும் திட்டங்களைச் செயல்படுத்துமளவு அவர்களுக்குத் தொலை நோக்கும் இல்லை என்று விமர்சிக்கின்றனர். மாறாக சீனாவுக்கு தொழில் உற்பத்தி, நிர்மாணத் திட்டங்களில் அனுபவம், ஏராளமான தொழில் நுட்பவியலாளர்கள், பாட்டாளிகள் என்று எல்லா வசதிகளும் இருப்பதால் அது துணிந்து முதலீடு செய்து தான் 21 ஆம் நூற்றாண்டின் ஏக போக உலக எஜமானாக இருப்பதாகக் காட்டத் தயங்கவில்லை.

இது ஆஃப்ரிக்கர்களுக்கு நல்லதா, இல்லையா? அடுத்த பத்தாண்டுகளில் நமக்கு இதற்கு விடை தெரியும்.

https://www.nytimes.com/2017/02/07/world/africa/africa-china-train.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சட்டம் என் கையில்”]

சில இந்தியக் குடியேறிகள் அமெரிக்காவை சுவர்க்க பூமி என்று நினைக்கிறவர்கள். ஜனநாயகத் தாரகை என்று கூட அந்நாட்டைக் கருதுகிறார்கள். இந்தியாவை பயங்கர பூமி என்று வருணிக்கவும் இவர்கள் தவறுவதில்லை. மத நோக்கங்கள் இப்படிப் பார்வையை வக்கிரமாக்குகின்றனவா என்பது நாம் கேட்கக் கூடிய கேள்வி. ஏனெனில் இந்தியா இவர்களுக்கு வருத்தம் தரக்கூடிய வகையில் இன்னும் இந்துக்களின் நாடாக இருக்கிறது. இந்துக்களே இல்லாத உலகம்தான் இவர்களுக்கு மனநிம்மதியைத் தரும் என்று நம்புவோர் இவர்கள் என்று ஓர் ஐயம் நமக்கு எழலாம். அல்லது தினசரி ஆயுதமேதும் ஏந்தாத மனிதர்களை அலட்சியமாகக் கொல்லும் போலிஸ் நடவடிக்கைகள் பற்றி வருடா வருடம் செய்திகள் வந்த போதும் அரசுகள் அனேகமாக எந்த போலிஸ் அதிகாரியையும் தண்டிப்பதில்லை. (அனேகமாக என்ற சொல் முக்கியம் இங்கு). கார்டியன் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் அமெரிக்கப் போலிஸால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கணக்குக் காட்டி வந்தது 2016 ஆம் வருடம் பூராவும்.

இங்கே நியுயார்க் டைம்ஸ் அப்படி ஒரு கொலையைப் பற்றிய விரிவான அறிக்கை ஒன்றைத் தன் வாராந்திர இணைப்பிதழில் பிரசுரித்திருக்கிறது. படித்து இந்த நாடா நமக்கு மனித உரிமைகளைப் பற்றி போதனை செய்கிறது என்று யோசித்தீர்களே ஆயின், அது சற்றும் பிழையில்லாத மறுவினையாகத்தான் இருக்கும்.

https://www.nytimes.com/2017/02/08/magazine/the-preacher-and-the-sheriff.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”அக்னி நட்சத்திரம்”]

2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்?

ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும் என்று இந்தச் செய்தி அச்சுறுத்துகிறது.
இந்த வெப்பத்தை எப்படித் தடுப்பது, பெரு நகரமான லாஸ் ஏஞ்சலீஸில் வெப்பத்தை எப்படிக் குறைப்பது என்று அந்த நகரத்து மேயர் யோசிக்கிறாராம். சராசரி வெப்பத்தை அந்த நகரில் அடுத்த 20 வருடங்களுக்குள் 3 டிகிரி (ஃபாரன்ஹைட்) குறைக்க வேண்டுமெனவும் அதற்கு என்னென்ன செய்யலாம் என்றும் யோசிக்கிறாராம். (சென்னை, தில்லி போன்ற இந்திய மாநகரங்களின் மேயர்கள் இதைக் கேட்டால் புன்னகைப்பார்களோ என்னவோ.)

அவர் இப்படி யோசிக்கக் காரணம் உண்டு. அடுத்த 20-30 ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் சராசரி வெப்பம் 95 டிகிரி எஃப் ஐத் தாண்டும் நாட்கள் நான்கு மடங்காக உயரும் என்பது எதிர்பார்ப்பு. நகர்களில் மக்கள் மேற்படி தட்ப வெப்ப நிலையால் கிட்டும் வெப்பத்தைப் போல நகரத்தால் கிட்டும் வெப்பத்தாலும் துன்பப்படுவார்கள், தார்ச் சாலைகள், கரும் நிறக் கூரைகள், அதிகம் மரங்களோ, புதர்/ புல்லோ இல்லாத வெளி, எல்லாவற்றுக்கும் மேலாக ஏராள ஏராளமான கார்கள்.

ஒரு மாநாட்டில் பேசியவர்கள் வந்த முடிவுகள்: நகரச் சாலைகளும், நடைபாதைகளும், வீட்டுக் கூரைகளும் முதல் குற்றவாளிகள். தார்ச்சாலைகள் பகலில் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு இரவில் அதை வெளி விடுகின்றன. எனவே ஒரு விடை : மேற்படி பரப்புகளை நிர்மாணிக்க உயர்தொழில் நுட்பப் பொருட்களைப் பயன்படுத்தி, பகலில் வெப்பம் தரையால் உறிஞ்சப்படுவது மிகவும் குறைக்கப்பட வேண்டும்.
ஒரு பரிசோதனை செய்ததில் புது பரப்பு 11 டிகிரிக்கள் குளிர்ச்சியாக இருந்ததாகத் தெரிந்தது. அதே போல வீட்டுக் கூரைகளை வெய்யிலைப் பிரதிபலிக்கும் பொருட்களை வைத்துக் கட்டினால் நகர உஷ்ணம் சுமார் 2 டிகிரிக்கள் குறையும் என்று ஆய்வுகள் சுட்டுகின்றனவாம்.

மேலும் இந்த முறைகள் எல்லா இடங்களிலும் ஒரே போலச் செயல்படாதவை என்றும் சொல்கிறார்கள். எங்கு எப்படி நன்கு செயல்படும் என்பதைக் கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

http://www.latimes.com/projects/la-sci-cooling-los-angeles/
[/stextbox]


[stextbox id=”info” caption=”அக்கரைச் சீமை”]

சில பத்தாண்டுகள் முன்பு வரை உலக அரங்கில் புதுக் கருத்தாக்க்ங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த பெருமை ஃப்ரான்ஸுக்குச் சேரும். இரண்டாம் உலகப்போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து (சுமாராக 1940 இலிருந்து) அதற்கப்புறமும் ஒரு 40 ஆண்டுகள் போல உலகரங்கில் தத்துவம், சமூகவியல், வரலாற்றியல், இலக்கிய விமர்சனம், மானுடவியல், உளவியல் என்று பற்பல துறைகளில் அந்நாட்டுச் சிந்தனையாளர்களின் புதுத் திறப்புகளான கருத்தாக்கங்கள் மூலம் உலகின் கல்வித் துறை, சமூக ஆய்வுத் துறைகள், தவிர கலை/ பண்பாட்டு அலசல்களைப் பாதித்திருந்தனர். கலைப்படைப்புகள் மூலம் பாதித்தது அத்தனை இராது. விமர்சனம் மூலம் பாதித்தது நிறைய இருந்தது.

90களுக்கு அப்புறம் ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களின் மவுசு மங்கி விட்டது. ஃப்ரான்ஸின் பொருளாதாரம், சமூக அமைப்பு எல்லாமும் தொடர்ந்து குழப்பங்களில் சிக்கத் தொடங்கின. இருப்பினும் ஒரு இருபதாண்டுகள் அந்நாடு தட்டுத்தடுமாறி நவீன உலகின் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆசிய நாடுகளின் எழுச்சி பல யூரோப்பிய நாடுகளைப் பின் தள்ளி உள்ளது என்றாலும், அவை இன்னும் பொருட்படுத்தத் தக்கவையாக உள்ளன. அதாவது மூன்றாம் உலக நாடுகளாக மாறி விடவில்லை.

2010களிலிருந்து ஃப்ரான்ஸ் மேன்மேலும் இடறல்களில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. கீழே கொடுக்கப்படுவது ஃப்ரெஞ்சு சமூகவியலாளர் மிஷெல் விவியோர்கா சமீபத்தில் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கருத்துக் கட்டுரைக்கான சுட்டி.

சுருக்கமாகச் சொன்னால், விவியோர்கா ஃப்ரெஞ்சு மக்கள் இப்போது திக்குத் தெரியாத மயங்கலில் இருக்கிறார்கள் என்கிறார். என்ன மயக்கமது? ஒழுக்கம், செயல் திறன் ஆகிய இரண்டு தளங்களிலும் அனைத்து ஃப்ரெஞ்சுக் கட்சித் தலைவர்களும் சொத்தைகள் என்று மக்கள் கருதுகிறார்கள் என்றும் நடக்கவிருக்கும் ஃப்ரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் உட்கட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு பிரதானக் கட்சியும் இதுகாறும் கட்சியின் முதன்மை வேட்பாளர் என்று கருதப்பட்டவர்களைத் தோற்கடித்துள்ளனர் என்றும் சுட்டுகிறார். இது இடது, மத்தியம், வலது என்ற மூன்று பிரிவுகளிலும் ஒருப்போலக் காணப்பட்ட காட்சி என்பதால் கட்சிகளும் எங்கே எப்படிச் செல்வது என்பது தெரியாத மயக்க நிலையிலேயே இருப்பதாகச் சொல்கிறார்.

இரண்டாவது கட்டுரை அவர் தன் தளத்திலேயே எழுதியது. இது சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியது. அக்கட்டுரையிலும் விவியோர்க்கா சொல்வது இன்னும் சற்று ஆழமான கருத்துக் கட்டு. மேற்கு உலகெங்கும் பலபண்பாட்டியம் என்ற பெயரில் யூரோமையச் சிந்தனைகளையே பரப்பி வந்திருக்கிறது. அதிலும் பரப்பப்பட்ட கருத்துகள் மேற்கு யூரோப்பில், இங்கிலிஷ் பேசும் நாடுகளின் விருப்பங்களே. ஒன்றிரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகள் மேற்கு யூரோப்பிய இங்கிலிஷ் பண்பாட்டுக் கருத்துகளுக்குத் திறப்பு கொடுப்பதால் அவையும் இந்தக் கூட்டணியில் கலந்துள்ளன. இவை உலகுக்குப் போதித்த பலபண்பாட்டியம் என்பது என்னென்ன குறைகள் நிறைந்தது என்று சுட்டுகிறார். குறிப்பாக மதங்களையும் அவை சமூகத்தில் கொணரும் தாக்கங்களையும் ஒதுக்கியதாகப் பாவலா செய்த இந்த நாடுகள் இஸ்லாமும் இஸ்லாமியரும் தம் நடுவே வந்து குடியேறியதைக் கையாளத் தவறியதோடு அம்மக்களை எதிரிகளாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்கிறார். குறிப்பாக இந்தியாவைப் போன்ற பெரும் ஜனத்தொகை இங்கிலிஷ் பேசக் கூடிய ஒரு நாட்டை அலட்சியம் செய்தது எத்தனை தவறு என்றும் ஒரு வாக்கியத்தில் சொல்கிறார். இந்தப் பலபண்பாட்டியம் மேற்கில் தோற்றுப் போய் விட்டது. இன்று அது இன்னும் ஜீவனோடு இருப்பது இந்தியா, மற்றும் சில லத்தின் அமெரிக்க நாடுகளில்தான் என்றும் சுட்டுகிறார்.

முதல் கட்டுரையில் அவர் சொல்வதில் ஃப்ரெஞ்சுக் குழப்பங்களுக்கு விடையேதும் உண்டா என்றால், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஃப்ரெஞ்சு சமூகம் இரண்டு பெரும் மோதல்களால் வழி நடத்தப்பட்டது. ஒன்று யூரோப்பிய மையத்தில் நடந்த பனிப்போர். ரஷ்யாவும், முதலிய நாடுகளும் உலகெங்கும் நடத்திய பனிப்போரில் ஃப்ரான்ஸ் பங்கெடுத்து அவ்வப்போது தன் கட்சியிலேயே கோல் போட்டுக் குழப்படிகள் செய்தபடி ஆனால் ஒரு முதலிய நாடாகச் செயல்பட்டது. அமெரிக்க/ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபடி முதலிய நாடாக இருப்பது ஒரு கழைக்கூத்தாடிச் செயல். அது ஃப்ரெஞ்சு சமூகத்துக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நிறைய அவசரச் சுதாரிப்புகளோடு இருப்பு நியாயத்தையும் கற்றுக் கொடுத்து வந்தது. அதே போல பொருளாதார நீதி கேட்கும் தொழிலாளர்களோடு மல்லுக் கட்டிய முதலியர்களின் போராட்டங்களில் ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர்களும் மத்திய வர்க்கமும் பல நிலைகளில் மாறி மாறி இயங்கி சமூகம் உயிரோட்டத்தோடு இயங்கியது.

அடுத்தடுத்த ஃப்ரெஞ்சு அதிபர்கள் தம் பதவியின் அமைப்பாலும், தம் குணத்தாலும் அதை கிட்டத்தட்ட அரச பதவி போலப் பாவித்து நடந்து சமூகத்தின் மதிப்பைத் தாம் இழந்ததோடு, தம் பதவியின் மீதும் அவநம்பிக்கையை வளர்த்திருக்கின்றனர்.

இன்று ஃப்ரான்ஸ் எந்த உருப்படியான மோதல்களின் உருவும் கண்ணில் தென்படாமலும், புதுக் கருத்தாக்கங்கள் வெளிப்படாமலும், எதிர்காலத்தில் பிரகாசமான சமுதாயம்/ வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கை மீது நம்பிக்கை இல்லாமலும், ஆனால் நிகழ்காலத்தின் இருட்டைத் தாங்கமுடியாமலும் இருக்கிறதால் இது நல்ல பாதையை அடைவது கடினம் என்கிறார். இதிலிருந்து ஃப்ரான்ஸ் விடுபடத் தேவையான கருத்து மோதல்களாக அவர் தேர்வு செய்வன இவை: சர்ச்சும் அரசும் ஒன்றிணையாது விலக்கி வைத்தல், சட்டத்தின் கை வீச்சின் எல்லையும் தனிமனிதரின் உரிமைகளின் களமும் பற்றிய சர்ச்சை, ஒன்றுபட்ட சமூக உணர்வைப் பெறுதல், தேசியமும் தனிமனித அடையாளமும் பற்றிய இழுபறிகள், யூரோப்பில் சிறுபான்மையினரின், குறிப்பாக மத ரீதியாகச் சிறுபான்மையினரின், இருப்பும், பங்கும் என்ன என்பது பற்றிய சர்ச்சைகள், ஆகியன மிக்க சக்தியோடு பேசப்பட்டு சில முடிவுகள் எழுந்தால், அதிலிருந்து ஃப்ரான்ஸின் மந்த நிலை மாறும் என்று நம்புகிறார்.

நமக்கு இதெல்லாமே பழங்கஞ்சி என்று தோன்றினால் அது அத்தனை தவறான கருத்தாக இராது.

ஃப்ரான்ஸின் சமீபத்திய தேர்தலில் குழப்பங்கள் பற்றிய கட்டுரை கீழே

https://www.nytimes.com/2017/02/10/opinion/france-without-a-struggle-is-at-a-loss.html

வீவியோர்க்காவின் தளக் கட்டுரை கீழே:

https://wieviorka.hypotheses.org/321

இரு வருடங்கள் முந்தைய செய்தி இது

http://www.voanews.com/a/paris-attacks-franch-muslims/3062252.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.