பயணங்களின் தொலைவு

தனிமையின் வழி நூல் மதிப்புரை

“கருப்பையின் பாதுகாப்புக்கும் வெட்டவெளியின் தடையின்மைக்கும் இடையில் பதற்றமும்
குதூகலமுமாக ஆடிய ஊஞ்சலாட்டம் அந்த சஞ்சாரம்”
– சுகுமாரன்

தனிமையின் வழி கட்டுரைத் தொகுப்பு முழுவதும் சுகுமாரனின் வெவ்வேறு முகங்கள் மாறி மாறி வெளிப்படுகின்றன. வாசிப்பில் ஆழமான ஈடுபாடும் பித்தும் கொண்ட இளவயது சுகுமாரனுக்கு குடும்பம் இறுக்கி அழுத்தும் தடையாக இருக்கிறது. குடும்பத்தின் தியாகம் சுயநலம் இரண்டுமே அவரை பாதிக்கிறது. குடும்பத்திலிருந்து விடுபடத் துடிக்கிறார். இன்னொரு சுகுமாரன் வெகுஜன பத்திரிக்கையில் வேலை செய்பவர். அதன் விளைவாக விபச்சாரம் நடக்கிற பகுதியையும் ஜாதிக் கலவரத்தில் சிதைந்த கிராமத்தையும் நேரில் சென்று பார்க்கிற, அவலங்களையும் குரூரங்களையும் அண்மையில் எதிர்கொள்கிற வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. திரையுலகின் பகட்டையும் பகட்டுக்கு பின்னிருக்கும் வெறுமையையும்கூட அவர் நெருக்கத்தில் காண்கிறார். சத்யஜித் ராய் மீது பெரும் பிரியமுள்ள, உலகத் திரைப்படங்களை விரும்பி நேசிக்கிற மற்றொரு சுகுமாரனையும் கட்டுரைகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்த காலத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் ஒரு இரவையேனும் கழித்திருக்கிற சுகுமாரனும் இடையில் அவ்வப்போது வந்துச் செல்கிறார். அந்த வகையில் தனிமையின் வழி – சுகுமாரன் பயணித்த பாதையும் அதில் எதிர்பட்ட மனிதர்களும்தான்.

இக்கட்டுரைகளில் சுகுமாரன் விவரிக்கிற அனுபவங்கள் எளிமையானவையோ அன்றாடத்தில் காணக் கிடைப்பவையோ அல்ல. வாழ்க்கையின் உச்சத்தருணங்களில் நிகழ்கிற ஒவ்வொரு அனுபவமும் பிரத்யேகமானது. மகத்தான புனைக்கதைகளுக்கு நிகரான நாடகீயம் உடையது.

சுகுமாரன் ஒரு இடத்திலும் மிகையாகவோ போலியாகவோ எதையுமே எழுதவில்லை. நிஜ வாழ்க்கையில் உருவாகிற கையாலாகாத் தருணங்களை பாசாங்கின்றி அவர் பதிவு செய்கிறார். சில்க் ஸ்மிதாவின் மரணத்தை பத்திரிக்கை அட்டைப் படத்திற்கான பரபரப்புச் செய்தியாக மட்டுமே பார்த்த தன் பத்திரிக்கையாளர் குணத்தை அவர் குறிப்பிடத் தயங்குவதில்லை. சில்க் ஸ்மிதாவை பேட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் தன் அகங்காரத்தை நொறுக்கிய அவரது ஆளுமையையும் நேர்மையோடு சுட்டிக்காட்டுகிறார்.

தொகுப்பின் மிகச் சிறந்தக் கட்டுரைகளில் ஒன்று – சுந்தர ராமசாமிக் குறித்த “பின்னும் உயிர் வாழும் கானல்” கட்டுரை. சுராவின் ஆத்மராம் சோயித்ராம் சிறுகதையில் தன்னையே அடையாளம் காண்கிறார் சுகுமாரன். “வாழ்க்கையே நீ என்னை தோற்கடி. நான் உனக்கு என் கவிதைகளில் பதில் சொல்கிறேன்” என்று அறைக்கூவல் விடுகிற கவிஞனோடு எல்லா படைப்பாளிகளுமே தங்களை பொருத்திப் பார்க்க முடியும்தான். எனினும் சோயித்ராமோடு சுகுமாரன் அந்தரங்கமான ஒரு பிணைப்பைக் கொண்டிருக்கிறார். அச்சிறுகதையை வாசித்துவிட்டு கலங்கி நிற்கும் சுகுமாரனை சுந்தர ராமசாமி அணுக்கமாக தொடுகிற இடம் உணர்ச்சிகரமானது. ஆதுரத்தின் நிழல் பரவிய அந்த மனநிலையை எழுத்தில் அப்படியே கடத்தியிருக்கிறார் சுகுமாரன்.

சுகுமாரனின் உரைநடை மொழி செறிவானது. பிசிரற்ற கச்சிதத்துடன் இருக்கும்போதும் அது அலைக்கழிப்புகளையும் தடுமாற்றங்களையும் தீவிரமாக வெளிப்படுத்துகிறது. அத்துடன் சுகுமாரன் கட்டுரை எழுதுகிறபோதும் புனைவெழுத்துக்களுக்கு நிகராக, மொழியில் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறார். அதை நேர்த்தியாக கையாளவும் செய்கிறார். “தனிமையின் வழி” கட்டுரையில் வெல்லிங்டன் ஆற்றங்கரை பற்றிய விவரணை கிட்டத்தட்ட முக்கால் பக்கத்திற்கு நீள்கிறது. புனைவுகளில் வருவது போன்ற கவித்துவமும் துல்லியமும் கூடிய புறச்சூழல் விவரிப்பு. அதே போல் எமெர்ஜென்சி காலத்தில் அதிகாரத்தின் கொடூரப் பிடியில் சிக்கி மரணமுற்ற ராஜனின் கதையையும் தன் “இருண்ட காலத்தின் சாட்சி” கட்டுரையில் புனைவின் மொழியிலேயே எழுதியிருக்கிறார் அவர். அதனாலேயே அது அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகிறது. இறந்துபோன தன் ஒரே மகனுக்காக நீதியை மட்டும் நம்பி அரசுக்கு எதிராக முப்பது வருடங்கள் போராடிய ஈச்சர வாரியார் பற்றி வாசிக்கும்போது அற்புதம்மாளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தொகுப்பிலிருக்கும் அனேகக் கட்டுரைகள் இலக்கியத்தோடு தொடர்புடையவை. எழுத்தாளர் ஆர்.ஷண்முக சுந்தரம் பற்றி ஒரு கட்டுரை – “மாயத்தாகம்”.  ஷண்முக சுந்தரம் வறுமையான சூழலில் வாழ்கிறார். வாழ்க்கை அவரை தோற்கடித்து நோய்மையில் தள்ளியிருக்கிறது. அவரது கதைகளால் ஈர்க்கப்பட்டு சுகுமாரன் அவரை சந்திக்கச் செல்கிறார். மாணவராக இருக்கும் சுகுமாரனிடம் எழுத்தின் மீதிருக்கும் மயக்கத்தால் படிப்பை விட்டுவிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லியனுப்பி வைக்கிறார் ஷண்முக சுந்தரம். பு.வ.மணிக்கண்ணனின் வாழ்க்கையையும் இலக்கியம்தான் காவு வாங்குகிறது. அவரிடமிருந்து செல்வத்தையும் சந்தோஷத்தையும் பறித்துக்கொண்டு பதிலுக்கு குடியையும் மரணத்தையும் விட்டுச் செல்கிறது. இப்படி கனவுகள் நிறைவேறாத நம்பிக்கைகள் பொய்த்துப் போன வீழ்ச்சியுற்ற மனிதர்களே சுகுமாரனின் கட்டுரைகள்தோறும் வருகிறார்கள்.

புத்தகத்தில் என்னை அதிகம் பாதித்த கட்டுரை – “சாவதும் ஒரு கலை”. தற்கொலை பற்றியது. மரணத்தை அதன் வாசனை ஒட்டுகிற தூரம் வரைச் சென்று தொட்டுத் திரும்புகிறவர்கள் இந்த உலகத்திற்கு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கேனும் குறைந்தபட்சமாக ஒரு கைப் பிடி அளவுக்காவது வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். இதை ஒரு நிரந்தர விதி போல் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி வந்தபோது இயற்கையின் பேரற்புதத்தை உணர்ந்தவராக திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைகிறார். ஆனால் சுகுமாரனின் உலகத்தில் தற்கொலைக்கு முன்பும் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. தவிப்பும் கொந்தளிப்பும் மிக்கதாகவே அது தொடர்கிறது. தற்கொலையிலிருந்து அவரை காப்பாற்றிய மருத்துவர் அக்கறையாக நம்பிக்கை வார்த்தைகள் பேசுகிறபோது அவற்றை கேலி செய்கிறவராகவே சுகுமாரன் இருக்கிறார். தான் தற்கொலையை நேர்த்தியில்லாமல் செய்ததாக அவர் எழுதுகிறார்.

இந்த வருட புத்தக கண்காட்சியில் சுகுமாரனை நேரில் சந்தித்தேன். அப்போது தனிமையின் வழி நூலை நான் வாசித்து முடித்திருக்கவில்லை. பாதி போல்தான் படித்திருந்தேன். ஆனால் “சாவதும் ஒரு கலை” கட்டுரை முதல் பாதியிலேயே வந்துவிட்டது. காலச்சுவடு அரங்கத்தின் வாசலில் நின்றிருந்த அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அவருக்கே என்னை தெரிந்திருந்தது. கை குலுக்கிய பின்பு தனிமையின் வழி வாசித்துக் கொண்டிருப்பதாக கூற, தோளை மெலிதாக அசைத்து உதட்டு முனைகளை ஆகச் சிறிய அளவில் மடித்து புன்னகைத்தார். அதை இரண்டு விதங்களில் புரிந்துக் கொள்ளலாம். “நல்லது, சந்தோஷம்” அல்லது“இப்ப உன்னை யார் கேட்டா இதை?”.

என் வசதிக்காக நான் முதல் அர்த்தத்தை எடுத்து கொண்டேன். கட்டுரையில் வருகிற அந்த தற்கொலை பற்றிக் கேட்க வேண்டும் என்று மனம் ஒரு பக்கம் துடித்துக் கொண்டேயிருந்தது. சுகுமாரன் சினேகமாகவே தெரிந்தார். ஆனாலும் உடனடியாக கேட்க தொண்டையைத் தாண்டி குரல் மேலே வரவில்லை. பின்னர் அங்கிருந்து கிளம்பி என் நண்பரோடு புத்தக கண்காட்சியை சுற்றி வரத் தொடங்கினேன். காலச்சுவடு அரங்குக்கு மறு எல்லை வரை சென்றதும் மனதில் திரும்பவும் உறுத்தல், சுகுமாரனை பார்த்து பேசுகிற வாய்ப்பு அமைந்தும் அக்கட்டுரைப் பற்றி கேட்காமல் திரும்புவது பிழை என. அந்த நினைப்பு மனதில் இடறிக் கொண்டே இருக்க, நண்பரிடம் சொல்லிவிட்டு சுகுமாரனை பார்க்க வேகமாக நடந்தேன். அவர் காலச்சுவடு அரங்கத்தினுள்ளே உட்கார்ந்திருந்தார். தூரத்தில் இருந்தபோது எழுந்த வேகம் அருகில் வந்ததும் சுத்தமாக வடிந்து தயக்கமாக மட்டும் மீந்தது. இறுதியில் அவரை அணுகாமல் மௌனமாக எதிர் திசையில் நடந்து அங்கிருந்து விலகி வந்தேன்.

இப்போது இதை எழுத ஆரம்பித்த நேரத்திலும் எனக்குள் அந்தக் கேள்விதான் பொங்கி பொங்கி எழுந்துக் கொண்டிருந்தது. “மரணத்திடமிருந்து வாழ்க்கைக்கு திரும்புவதும் வாழ்க்கையிடமிருந்து மரணத்திற்கு செல்வதுப் போல் துயரமும் சோர்வும் மிக்கதுதானா?”சுகுமாரன் ஏற்கனவே அதற்கு பதில் சொல்லியிருக்கிறார் என்பது தாமதமாகவே நினைவுக்கு வருகிறது.

சாகத் தவறிய மறுநாள்

கடைசி மாத்திரை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது

இனி
விழிப்பின் அவலங்கள் இல்லை
கண்ணீரோ
ஓயாமல் கசியும் காயங்களோ
அலைக்கழிதலோ இல்லை
பொய்யின் கசப்போ
அழுகிய புன்னகையின் துர்நாற்றமோ
நொந்துகொள்வதோ இல்லை
பயமோ
நிரந்தரமாய் கவிந்த வெறுமையோ
நேசமற்ற கணங்களோ இல்லை
காலம் வெளி பெயர்கள் இல்லை
மேலாக
வாழ்வின் குமட்டல் இல்லை
மனம் அலைகளடங்கி அமைதியானது
நினைவில் புதைந்த இசை
வெளிப்பட்டுத் ததும்பியது
மனம் அலைகளடங்கி அமைதியானது

காலையில்
ஒளி வந்து அழைக்க எழுந்து
என் கிளிக்குப்
பழங்கள் பொறுக்கப் போனேன் வழக்கம் போல
சந்தோஷம்
துக்கம் என்னும் சலனங்களற்று
சிறுநீர் அடக்கிய அடிவயிறாய்க்
கனத்தது மனம்

சுகுமாரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.