குளக்கரை


[stextbox id=”info” caption=”சௌகரியம்”]

பறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு எனப் பார்த்துப் படமெடுக்கவும், கவிதை பாடவும், உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைத் தமக்குப் பயன்படும் பொருள் என்றே பார்த்துப் பழகி இருக்கிறார்கள். அவை தமக்கென இருப்புள்ளவை, தம் வாழ்வை வாழ்பவை, இயற்கையின் உறுப்பினர்கள், மனிதருக்குப் பயன்படவென அவை வாழவில்லை என்ற கருத்து அனேகருக்கு தன்னிச்சையாக எழுவதில்லை.

மனித வரலாறு நெடுக பறவைகள் தென்படுகின்றன.  நாம் தோன்றுவதற்கு முன்னரும் அவை இருந்திருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் சொல்லத் துவங்கி இருக்கிறார்கள். இன்னமும் அவற்றை வெறும் பயன்பாட்டுக்கான பொருள் என்றே பார்த்து வருவது நம் அறியாமையின் வீச்சைத்தான் காட்டும். அவை சூழலின் இயக்கச் சுழலுக்கு அவசியமானவை, சூழலின் ஆரோக்கியத்துக்கு மானிகள், வழி வகுப்பவை போன்ற அறிவு சார் புரிதல் எல்லாமும் கூட அவற்றுக்கு நியாயம் கற்பித்தல் முயற்சிகளே அன்றி அவற்றின் இருப்பை அதனளவில் நாம் ஏற்பதன் அளவு நியாயமானவை அல்ல. உயிரினங்களின் மையம் மனிதன் என்ற வக்கிர சிந்தனை நம்மிடையே வளர்ந்திருக்கக் காரணம் நாம் நம் இனமையமாகவே சிந்தித்துப் பழகி இருப்பதுதான். நம் இருப்பை நாம் காபந்து செய்வது அவசியம், அதற்கு தன் மையச் சிந்தனை ஒரு அளவு தேவை. ஆனால் அஃதன்றி வேறெப்படியும் நாம் யோசிக்காமல் இருப்பது வெறும் சுயநலமே அன்றி நன்னலம் இல்லை. அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுதல் தேவை என்று சொல்லும் மதச் சம்பிரதாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கிறோம், ஆனால் அதைக் கடைப்பிடிக்க மட்டும் நாம் ஒத்துக் கொள்வதில்லை.

20 ஆம் நூற்றாண்டில் ஓரளவு பல்லுயிர் மையச் சிந்தனை வளரத் துவங்கினாலும், பண்டை மக்களுக்குச் சூழலுடன் இசைந்த வாழ்வு அமைந்த அளவு இந்த நூறாண்டு மக்களுக்கு அமையாத நிலையில் இந்த அறிவு சார் புரிதல் சமூகங்களின் பற்பல தளங்களுக்கு ஊடுருவவில்லை. உணர்வுத் தளங்களிலும் பறவைகள் பற்றிய புரிதல் அகன்று விட்டிருக்கையில், அறிவு சார் புரிதலும் போய்ச் சேராத நிலை நமக்கும் உலகப் பறவைகளுக்கும் பெரும் துன்பமானதோர் உலகு அமையவே வழி செய்கிறது.

மானுட விடுதலைக்கான பேரொளி என்று கொண்டாடப்பட்ட சில பெருந்தலைவர்கள் தாம் எப்படிப்பட்ட பெரும் முட்டாள்கள் என்பதைப் பறவைகளுக்கெதிரான தம் அழிப்பு இயக்கங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படிச் சாதாரண மக்களின் வாழ்வில் என்று மட்டுமில்லை, அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருப்பாரிடையேயும் விலங்குகள், பட்சிகள், பூச்சிகள் ஆகிய மனிதரல்லாத உயிரினங்களைப் பற்றிய பெரும் அறிவீனம் நிலவுவது உலகச் சுற்றுச் சூழல் என்னவொரு அபாயகரமான நிலைக்குப் படிப்படியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும்.

இவை தவிர வேறு சில ஆபத்துகளும் பறவைகளின் வாழ்வில் இப்போது தலையிடுகின்றன. சமீபத்தில் உலகெங்கும் மிக வேகமாகப் பரவியுள்ள பன்னாட்டு மக்கள் சமூகப் பரிமாற்றங்கள், ஏராளமான மக்கள் பல நாடுகளிடையே பயணிப்பதைச் சகஜமாக்கி இருக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஆகாய விமானங்கள் உலகம் பூராவும் வானில் இப்போது சஞ்சரிக்கத் துவங்கி உள்ளன. இவை வானில் எங்கும் பரவ விடும் கழிவு வாயுக்களால் காற்று வெளி எத்தனை மாசுபடுகிறது என்பதை இன்னும் நாம் தெளிவாக அறிந்தோமில்லை. இந்தக் காற்று வெளியிலேயே உலவித் திரியும் பறவைகளை இந்த மாசு எப்படி அழிக்கிறது என்பதையும் நாம் ஆராய்ந்தறியவில்லை.

இது தவிர இந்த விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் தாண்டி, விமானக் கூடங்களைச் சுற்றிப் பல நூறு மைல்களுக்குப் பறவைகள் பறப்பது கூட இனிமேல் முடியாமல் போகலாம் என்று இந்தச் செய்தி சுட்டுகிறது.

விமானங்கள் பெரியதாகவும், தொழில் நுட்பம் மிக்க கூண்டுகளாகவும் ஆக ஆக, அவை எளிய தடைகளால் கூட வீழ்த்தப்படக் கூடியவையாகவும் மாறி விடுகின்றன. பறவைகள் விமானங்களின் மீது மோத நேர்ந்தால், எஞ்சின் பகுதிகளில் அவை சிக்க நேர்ந்தால் ஏற்படும் சேதம் ஏராளம் என்பதோடு, விமானங்கள் கீழே வீழ்ந்து நொறுங்கவும் வாய்ப்பு பெருகுகிறது. இதைக் கருதி நியுயார்க் மாநகரத்தில் சமீபத்தில் விமான நிலையங்கள் அருகே சுமார் 70,000 பறவைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் கொலைகளால் விமானங்கள் கூடங்களிலிருந்து மேலெழுவதும், அவற்றில் கீழிறங்குவதும் ஆபத்தின்றி இருக்கும் என்பது நடத்திய அதிகாரிகளின் கருத்து. ஆனால் அறிவியல் ஆய்வாளர்கள், இத்தகைய கொலைகள் சமீபத்து ஆண்டுகளில் அதிகரித்து வந்த போதும், விமானங்கள் ஆபத்தின்றி இயங்குவது ஒன்றும் கூடி விடவில்லை, மாறாகப் பறவைகளோடு விமானங்கள் மோதுவது அதிகரித்தே உள்ளது என்று சுட்டுகிறார்களாம்.
இந்தச் செய்தி ஒரு நாட்டில் ஒரு சில விமான நிலையங்களைப் பற்றியது. உலகெங்கும் உள்ள விமானக் கூடங்களில் எல்லாம் எத்தனை பறவைகள் கொல்லப்படுகின்றன என்பதைப் பற்றிய செய்தி திரட்டப்பட்டு அளிக்கப்பட்டால்தான் நமக்கு உலக உயிரினங்களை மனிதர்கள் எத்தனை சுலபமாக அழித்து வருகிறார்கள் என்பதற்கான இன்னுமொரு சான்று கிட்டும்.

https://www.theguardian.com/world/2017/jan/14/new-york-birds-killed-airport-miracle-on-hudson-sully
[/stextbox]


[stextbox id=”info” caption=”நிபா தொற்றுநோய்”]

இது 1998 இல் துவங்கிய கதை. சமீபத்தில் நாம் பல உலகம் தழுவிய பெரும் தொற்று நோய்களின் எழுச்சி பற்றிய பல கதைகளைப் படித்திருக்கிறோம். எபோலா என்ற நோய் பற்றிப் பரபரப்பாகப் படித்து இரண்டு வருடங்கள் போல ஆகி இருக்கிறது. சியாரா லியோன் என்கிற நாட்டில் பரவிப் பெரும் உயிர்ச்சேதமும், நிறைய குடும்பங்களில் மன நோய்களையும் ஏற்படுத்திய நோய் இது. 1976 இல் காங்கோவில் துவங்கி அழிப்பைக் கொணர்ந்து மறைந்திருந்த இந்நோய் திடீரென்று 2014 இல் மறுபடி எழுந்து ஒரே வருடத்தில் பெரும் பீதியைக் கிளப்பியதற்கு ஒரு காரணம் விமானப் பயணிகளால் இது பல நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகுந்து இருப்பதை உலக நல அமைப்புகள் உணர்ந்ததுதான். அவை இந்த அபாயம் குறித்து உலக ஊடகங்களில் நிறைய விளம்பரப்படுத்தியதாலோ என்னவோ பல நாடுகளும் விமானப் பயணிகளைக் கண்காணித்து, நோய் பரவாமல் தடுப்பு முறைகளை அமல்படுத்தி இந்த நோய் ஏராளமானோரைக் கொல்லாமல் தடுத்திருந்தனர். சமீபத்தில் எபோலாவுக்கு அனேகமாக மாற்று சிகிச்சை கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. தடுப்பூசிகள் இரண்டு அமெரிக்க அரசின் மருந்துக் கண்காணிப்பு அமைப்பால் சோதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனுமதி பெற வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த எபோலாவும் கீழே உள்ள செய்தியில் பேசப்படும் நிப்பா என்கிற தொற்று நோயும் பழந்தின்னி வௌவால்களால் பரவும் கடும் தொற்று நோய்கள். நிப்பா என்கிற நோய் 1998 இல் மலேசியாவில் சில நூறு பேர்களைத் திடீரென்று தாக்கிக் கடும் வேகத்தில் கொன்றது. இதை உடனடித் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துத் தனிமைப்படுத்தியதில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பல லட்சம் பேர்களைத் தாக்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நோய் பன்றிகளின் மூலம் பரவினாலும், மூல காரணம் பழந்தின்னி வௌவால்கள் என்று சொல்லப்பட்டது. பன்றிகள் மூலம் பரவுவதால் பன்றிகளை நிர்வகிப்பதில் நாம் கட்டுப்பாடு கொணர முடியும். ஆனால் பழந்தின்னி வௌவால்கள் ஏற்கனவே அடர் காடுகள் அழிக்கப்பட்டதால்தான் இடம் பெயர்ந்து மலேசியாவுக்கு வந்துள்ள ஜீவன்கள். இவற்றைத் துரத்துவதோ, அழிப்பதோ அத்தனை பயனுள்ள செயலாக இருந்திராது. எளிதாகவும் இராது.

மலேசியாவில் இந்த நோய்க்குக் காரணமாகக் காணப்பட்ட பன்றிகள் ஏராளமாகக் கொல்லப்பட்டதில் பன்றி மாமிசத் தொழில் துறைக்கு ஒரு பிலியன் (1000 மிலியன்) டாலருக்கு மேல் நஷ்டமாம். ஆனால் நிப்பா அதோடு அடங்கி அழிந்ததா என்றால், இல்லை. தொடர்ந்து பல முறைகள் பங்களாதேஷில் இந்த நோய் தோன்றி எழுந்து மறைந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால் இப்போது அது பழந்தின்னி வௌவால்கள் மூலம்தான் பரவுவதாகக் கண்டிருக்கிறார்கள். பனங்கள்ளை அருந்துவது பங்களாதேஷில் மக்களின் பழக்கம். பழந்தின்னி வௌவால்கள் பனைமரங்களில் தலைகீழாகத் தொங்குவது சகஜம். அவை சிந்தும் எச்சில், சிறுநீர் மற்றும் கழிவுகளோடு எந்தத் தொடர்பு நேர்ந்தாலும், வெறும் தொடுகை கூட இந்த நோய் தொற்றுவதற்கு இட்டுச் செல்லும். பனங்கள் இறக்க மனிதர் அம்மரங்களின் அருகில் செல்ல நேர்கையில் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. பனைமரங்களுக்குப் பழந்தின்னி வௌவால்கள் வருவதைத் தடுக்க ஏதும் செய்யலாம். ஆனால் பிறகு அவை வேறெங்கோதான் செல்ல நேரும். அங்கிருந்து என்ன செய்து அவற்றைத் துரத்துவது? அவை வேறெங்குதான் வாழும்?

இந்த நோய் பல நாடுகளுக்குப் பரவுவதும் மனிதர் பன்னாடுகளுக்கிடையே நிறைய பயணிப்பதால் நேர்கிறது. வருங்காலத்தில் இத்தகைய வனவிலங்குகள், பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவும் பெரும் தொற்று நோய்கள் அதிகரிக்கும் என்று உலக உடல் நலத்தைக் கண்காணிக்கும் நிறுவனங்களில் பணி புரியும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக இந்தச் செய்தி சொல்கிறது.

https://www.theguardian.com/world/2017/jan/18/nipah-fearsome-virus-that-caught-the-medical-and-scientific-world-off-guard
[/stextbox]


[stextbox id=”info” caption=”உயர்விலங்கு (மனித குரங்கினம்)”]

வனவிலங்குகளின் இருப்பிடங்கள் அழிவதாலும், மனிதர் மேன்மேலும் வனப்பிரதேசங்களிலும், வாழத் துன்பமான இடங்களிலும் கூட தம் குடியிருப்புகளை உருவாக்கிக் கொள்ளத் துணிவதாலும் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த இடைவெளி மறுபடி குறைக்கப்பட்டு நீக்கப்பட்டும் வருகிறது. இதன் ஒரு பலனாக தொற்று நோய்கள் அதிகரிக்கின்றன என்று மேலே இரு செய்திகளில் படித்தோம். இங்கு வனவிலங்குகள் எப்படி அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றன என்பதைப் பார்ப்போம்.

மனிதர் தம் சூழலில் தம் தாக்கம் என்ன என்பதே இன்னமும் தெளிவாகத் தெரியாத மிருக ஜீவன்கள். ஆனால் பற்பல ஆயிரம் இதர மிருகங்களுக்கும் சூழலின் பேரியக்கத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி நமக்கு ஏராளமான அறியாமை இருப்பதோடு, அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் மனிதரும் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். மிருகங்கள் இருப்பதே மனிதருக்குத் தேவையற்றது என்று நினைக்கும் மனிதரே ஏராளமாக எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.

உலக வன விலங்குகளில் சுமார் 60% போன்றவை அழிவைச் சந்திக்கவிருக்கின்றன என்று ஒரு கணிப்பு சொல்கிறது. குறிப்பாகப் பாலூட்டி மிருகங்கள் இத்தகைய அழிவை முதலில் சந்திக்கவிருப்பதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. மனிதக்குரங்குகள் (கொரில்லா, சிம்பன்ஸீ போன்றவை), இதர குரங்குவகைகள், லீமர்கள், லோரிஸ்கள் ஆகியன முழு அழிவை எதிர் நோக்குகின்றனவாம்.

1990 இலிருந்து சுமார் 20 வருடங்களில் 2010 வாக்கில், 1.5 மிலியன் சதுர கிலோமீட்டர்கள் உள்ள காட்டுப் பகுதிகளை மனிதர் கைப்பற்றி விவசாய நிலங்களாக ஆக்கி இருக்கின்றனராம். இவை சுமார் 90 நாடுகளில் உள்ள பாலூட்டி விலங்குகளை அழிவுக்குத் தள்ளி இருக்கின்றன என்று அறிக்கை சொல்கிறது. மேலும் படித்தால் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிட்டும். நாம் எத்தனை தகவல் கிட்டினாலும் ஏதும் திருந்தி வாழ்வோமா என்பது வேறொரு கேள்வி.

https://www.theguardian.com/environment/2017/jan/18/over-half-of-worlds-wild-primate-species-face-extinction-report-reveals
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.