“அதைத் தொடாதே” என்றாள் அவள்.
“என்னது அது” என்றேன்.
“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”
“எதற்காக வாங்கினாய் அதை”
“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”
“இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத் தேவையில்லை. இதையெல்லாம் எந்த காரணத்துக்காக அனாவசியமாக வாங்குகிறாய் என்று தெரியவில்லை”
“உன்னை கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காகத்தான்….நேரம் கழிப்பதற்க்கு”
அவளுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை. அமைதியாய் இருந்தேன். அவளும் அமைதியாய் இருந்தாள்.
“இது என்ன அவ்வளவு நல்ல பசையா?” என்றேன். பசை டப்பாவின் மேல் ஒட்டப்பட்டிருந்த படத்தைக் காட்டினாள். உட்கூறையிலிருந்து ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தான்.
“எந்த பசையாலும் ஒருவனை அப்படி கூரையில் ஒட்ட வைக்க முடியாது. படத்தை தலைகீழாக எடுத்திருப்பார்கள். விளக்கை தரையில் வைத்து கூரையிலிருந்து தொங்குவதுபோல் காட்டியிருப்பார்கள்” என்று அவள் கையிலிருந்து பசை டப்பாவை வாங்கி உற்று நோக்கினேன். “இங்கே பார் இந்த ஜன்னலை. அதன் படுதாக்கள் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் தொங்குவது போல் கூட காட்டத் தெரியவில்லை இவர்களுக்கு.” அவள் பார்க்கவில்லை.
“அட எட்டு மணி ஆகிவிட்டதே ! நான் வேலைக்கு கிளம்பவேண்டும்” என்று கூறி என் பெட்டியை கையிலெடுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். “நான் வர சற்று நேரமாகும் … நான் …”
“ஓவர்டைம். எனக்குத் தெரியும்.”
~oOo~
அலுவலகத்திலிருந்து அபிக்கு போன் செய்தேன் “இன்றைக்கு வர முடியாது. வீட்டிற்கு சீக்கிரம் போக வேண்டும்”
“ஏன் ஏதாவது நடந்ததா” என்றாள் அபி.
“இல்லை….அவள் சந்தேகப் படுகிறாள் என்று தோன்றுகிறது”
நீண்ட மொளனம். மறுமுனையில் அபியின் பெருமூச்சு கேட்டது.
“ஏன் அவளுடன் இருக்கிறாய் என்று எனக்கு புரியவில்லை,” என்றாள் மெல்லிய குரலில். “நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டைகூட போடுவதில்லை”. சிறு இடைவெளிக்கு பின், “புரியவில்லை..” என்று மீண்டும் இழுத்தாள்.
“அபி கொஞ்சம் இரு…யாரோ உள்ளே வருவது போல் தெரிகிறது” என்று பொய் சொன்னேன். “சரி போனை வைக்கிறேன். சத்தியமாக நாளைக்கு வருகிறேன். எல்லாவற்றையும் பற்றி அப்போது பேசலாம்”.
~oOo~
சீக்கிரமாக வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்தவாரே “ஹலோ” என்றேன். பதில் வரவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினேன். எந்த அறையிலும் அவள் இல்லை. சமையல் மேடையில் பசை ட்யூபைப் பார்த்தேன். காலியாய் இருந்தது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்தினேன். அது நகரவில்லை. மீண்டும் முயற்ச்சித்தேன். அசைவதாய் தெரியவில்லை. தரையுடன் சேர்ந்து ஒட்டியிருக்கிறாள். ப்ரிட்ஜை திறக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். என்ன நடக்கிறதென்று எனக்கு புரியவில்லை. இப்படிச் செய்ய அவளைத் தூண்டியது எது. அவள் அம்மாவிற்கு போன் செய்வதற்காக கூடத்திற்குச் சென்றேன். போனின் பேசு முனையை தூக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். அருகிலிருந்த மேஜையை ஒரு எட்டு விட்டேன். அது துளியும் அசையவில்லை. என் கால் கிட்டத்தட்ட உடைந்ததுதான் மிச்சம்.
அப்போது அவளின் சிரிப்பைக் கேட்டேன். எனக்கு மேலிருந்து வந்தது சிரிப்பொலி. அன்னாந்து பார்த்தேன். அங்கே அவள். மேற்கூறையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். செருப்பில்லா அவளது கால்கள் மேற்கூரையில் ஒட்டியிருந்தன.
வாய் பிளந்து பேசாது நின்றேன். “என்ன…பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா” என்று மட்டுமே கேட்க முடிந்தது.
அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். புவியீர்ப்பினால் பிளந்த அவள் உதடுகளிலிருந்து வந்த புன்னகை இயற்கையாய் தோற்றமளித்தது.
“கவலைப் படாதே உன்னை கீழே இறக்கி விடுகிறேன்” என்று சொல்லியவாறே அலமாரியிலிருந்து தடிமனான புத்தகங்களை அவசரமாக எடுத்தேன். என்சைக்ளோபிடியா தொகுதிகளைப் கொண்டு ஒரு கோபுரம் அமைத்து அதன் மீது தட்டுத் தடுமாறி ஏறினேன்.
விழாமல் சுதாரித்த படியே “கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ” என்றேன். அவள் புன்னகைத்தபடி இருந்தாள். பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்தேன். ஏதும் நடக்கவில்லை. மெதுவாக கீழே இறங்கினேன்.
“கவலைப்படாதே…பக்கத்து வீட்டுக்காரர்களை கூட்டி வர முடியுமா என்று பார்க்கிறேன்” என்றேன்.
“சரி…எனக்கு எங்கும் போக உத்தேசமில்லை” என்று கேலியாகச் சிரித்தாள்.
நானும் சிரித்தேன். பொருத்தமற்று தலைகீழாக தொங்கியதில் அவள் மிக அழகாகத் தோன்றினால். அவளது நீண்ட கூந்தல் தலைகீழாக ஊஞ்சல் ஆடியது. வெள்ளை நிற மேலாடையின் உள்ளே திறம்பட வார்க்கப்பட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் தோன்றின அவளது மார்பகங்கள். அழகோ அழகு. மீண்டும் புத்தகக் குவியல் மேல் ஏறி அவளை முத்தமிட்டேன். அவளது நாக்கை என் நாக்கில் உணர்ந்தேன். என் காலின் கீழ் புத்தகங்கள் சிதறின. அந்தரத்தில் அவள் உதட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தேன்.
——
எட்கார் கெரட் (Etgar Keret, August 20, 1967) ஒரு இஸ்ரேலிய சிறுகதை ஆசிரியர். டெல் அவீவில் வசிக்கும் அவர் ப்ரென்ச் அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான செவாலியே விருதைப் பெற்றவர். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கார்டியன், ந்யூயார்க் டைம்ஸ், ந்யூயார்க்கர், பாரிஸ் ரெவ்யு போன்ற பத்திரிக்கைகளில் அவரது படைப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. அன்றாட வழக்கில் உள்ள வார்த்தைகளால் பேசு மொழியில் எளிமையாக புனையப்பட்டவை அவரது சிறுகதைகள். அவரது படைப்புக்கள் நம்பகமில்லா கனவுத்தன்மை கொண்டவை போல் இருந்தாலும் கொண்டிருந்தாலும் அவை வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களது நிரந்தரமற்று மாறும் எல்லைகளை உணர்த்த வைக்கின்றன. அவரது பேட்டி ஒன்றில் “கதை வாழ்க்கையை விட்டு விலகி இருக்கிறது. அதிலுள்ள எதுவுமே நிஜமல்ல. கதாபாத்திரங்கள் இறக்கலாம் அல்லது அவைகளுக்கு இறக்கை முளைக்கலாம். (கதை) எனக்கு மிகப் பெரும் விடுவிப்பு.ஒரு ஆசிரியனுக்கு அவனது சிறுகதையினால் ஏற்படும் அனுபவம் வாசகனுக்கு அச்சிறுகதையினால் ஏற்படும் அனுபவத்திருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கலாம். உதாரணத்திற்கு எனது Crazy Glue சிறுகதையை ஒன்பது பேர், வெவ்வேறு பொருள் பட, குறும் படமாக ஆக்கியிருக்கிறார்கள்”
எட்கார் கெரட்டின் மூலக் கதையான Crazy Glueவைத் தழுவி எடுக்கப் பட்ட இரு குறும்படங்களின் சுட்டிகள் இங்கே: