ஈரிதழ் வால்வுகள்

365050.TIF

லேசான முக மலர்ச்சி. சிறு மந்தகாசப் புன்னகைஇறந்து கிடந்தார். இறக்கும் அந்த தக்கணத்து இம்சை, வலியின் முறுக்கம் அதில் இல்லை. உடலம் இப்போது சடலம். உடம்பில் திருகுதல், முகச் சுருக்கம், படுக்கைக் கசங்கல்எதுவும் இல்லை. சிறகு விரிக்க பறவை முனகுவது இல்லை. உயிர் எங்கே? காக்கா ஓஷ்!

வயது 63. சூப்பர்அன்னுவேஷன். அரசு ஓய்வூதியம் (கடைசி மாதம் வாங்கிய சம்பளத்தின் பேசிக் பிளஸ் டி ஏ) வருகிறது. இந்த மருத்துவச் செலவுகள் (இன்டோர் அவுட்டோர்) கூட அரசே ஏற்றுக் கொள்ளும். உசிரோட பென்ஷன் வாங்குவதை விட, இது ஒன்டைம் பேமென்ட்மாதவன் கடைசி வரை கல்யாணமே செய்துகொள்ளவில்லை. பின்ன என்ன செலவு? தனியாய் சொந்த வீட்டில் இருந்தார். பணிஓய்வு பெறும் போது, ஜி.பி.எஃப், டி.சி.ஆர்.ஜி என ஒருலம்ப்சம் அமவுண்ட்வந்தது. அதில் வீடு வாங்கிக் கொண்டார். அண்ணா சொற்படி பக்கத்துத் தெருவில் வாங்கினார். சமையல் கிமையல் எல்லாம் தானே பார்த்துக் கொள்வார். ஏற்கனவே அப்படித்தான். நன்றாகவும் சமைப்பார்.

சாய்ந்தரமானால் ஒரு சிறு உலாவல். மேல் ஜிப்பா. வேஷ்டியை மடித்துக் கட்டாமல் கால் மறைத்தே விஷ்க் விஷ்க் என நடந்து வருவார். காற்றில் கால்களின் நீச்சல். அரைமணி நீள நடை. அப்படியே திரும்புவசத்தில் அண்ணாவீடு வரை வருவார். அண்ணி கோவில் கீவில் என்று கிளம்பாதிருந்தால் ஒரு டீ கிடைக்கும். காப்பி பிடிக்காது. டீக்கு கணக்கே இல்லை. சாப்பிடச் சொன்னால்... மாட்டார். “வீட்ல இருக்கு. அதை என்ன பண்ண?” சின்னதாய்ப் புன்னகைப்பார். வேடிக்கையாய்ப் பேச எல்லாம் தெரியாது. ஒண்ணு ரெண்டு என்று வார்த்தைகள், தேவைப்படி. எண்ணித் துணிக கருமம். வாழ்க்கை ரசனை உள்ளவர் தான். அதை விளக்கத் தெரியாது. புன்னகைப்பார் என்றாலும் அதில் ஒரு வறட்சி தெரியும். சீக்குக்கோழி கழுத்துமயிர் உதிரத் திரிகிறாப் போல. மாதவன் இறந்து விட்டார்.

திடீரென்று உடம்பு முடியவில்லை. தலையே, தரையே 360 டிகிரி வட்டமடிக்கிறது. நிற்கவே முடியாமல் உடல் சரிகிறது. வீட்டில் தொலைபேசி இருக்கிறது. அலைபேசி வைத்துக் கொள்ளவில்லை. தொலைபேசியை நோக்கி ஒரு சரிந்த கோணத்தில் சருகு போல் வந்தார். முகத்தின் கிட்டே இதோ பெரிதாகிக் கொண்டே வருகிறது தொலைபேசி. ஐயோ! எனக்கு என்னவோ ஆகிறது. சுனாமியில் மிதந்து அவரை நோக்கி வந்தது தொலைபேசி. தலை சுற்நெஞ்சு எகிறுகிறதோ? கண் மயங்கியது.

அண்ணாவீட்டில் தொலைபேசி ஒலித்தது. பெரும்பாலும் அது ஒலிப்பதே இல்லை. ஒலிக்காத வீட்டில், அந்த அமைதியில், திடீரென்று இப்படி ட்ரிங் ட்ரிங், ஒரு மகா பயப்புயலை அப்பும். ஐயோ என்று பதறி ஓடினார் அண்ணா தொலைபேசியை நோக்கி. அதற்குள் அதற்கு அவசரம் போல இன்னும் ரெண்டு ட்ரிங் ட்ரிங். யாராவது எடுக்கும் வரை அது ஓயாது. இரு வரேன்என நினைத்தபடி போய் அதை எடுத்தார் லெட்சுமணன். “என்னது? யாரு? மாது நீயா?” என்றார் அண்ணா. “ஹ்ரும்…” என்று தொலைபேசி கீழே விழுந்திருக்க வேண்டும். அதுவரை பிரக்ஞையைத் தக்கவைத்துக் கொள்ள மாதவன் போராடி யிருக்க வேண்டும்.

ஐயோ தம்பிக்கு என்னாச்சு? அவருக்குப் பதறியது. வயசு அப்படி. அவருக்கு, மாதவனுக்கு 63. இவருக்கு, அண்ணாவுக்கு 67. வீட்டிற்குக் கடிதம் வருவது இல்லை. தந்தி வராது. தொலைபேசி அழைப்புகளும் இல்லை. தானறியாமல் மனது துடித்தபடி கெட்ட சேதிக்குக் காத்திருக்கிறது. வயசு அப்படி. ஒரு காலத்தில் பேப்பரைப் பிரித்தால் ஸ்போர்ட்ஸ் பார்த்த மனுசன். இப்போது ஓபிச்சுவரி  பார்க்க ஆரம்பித்து விட்டார்….

ஆனால் தம்பி?. உடல்நலம் பற்றி மாதவன் அலட்டிக்கொண்டது இல்லை. வைரம் பாய்ந்த உடல். ஜலதோஷம் தும்மல் என்றெல்லாம் சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளாமல் அவரைப் பார்க்கவே முடியாது. வியாதி என்று படுத்ததே கிடையாது. மெலிந்த உடல். கொடிக்கம்பம். வேஷ்டி கட்டினாலே மேலே ஏற்றக் காத்திருக்கும் கொடி போல் காணும். நல்லா ஆறரை அடி உயரம். ஒரு பல், வரிசை பிசகவில்லை. உதிரவில்லை. கன்னத்தில் கிள்ளிப் பார்த்தாலும் சதையே கிடையாது. தொண்டையில் கோலிசோடாவாய் ஒரு எலும்புத் துருத்தல். வேகு வேகென்று கையை வீசிய நடை. கூட வர்றாட்கள் ஓட்ட நடையாய்ப் பின்வர வேண்டும். பார்க்கிறாட்களுக்கு, அவர் கோபித்துக்கொண்டு போகிறாப் போல இருக்கும். வாஸ்தவத்தில் அவருக்குக் கோபமே வராது.

தொலைபேசி அருகிலேயே அப்படியே கிடந்தார் மாதவன். கண்மூடி அயர்ந்து கிடந்தார். நெஞ்சு மாத்திரம் நடுக்கடல் அலை என பொங்கித் தணிகிறது. விளக்கில் முட்டிய பூச்சியாய்த் தவிக்கிறது மூச்சு. உடனே டாக்சி சொல்லிஅவரை எழுப்பி உட்கார்த்தினார். இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்போல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார், தெளிவித்தார் அண்ணா. “என்னாச்சி மாது?” சுரணை மெல்ல மீள்கிறது. மாதவன் என்னவோ சொல்ல வந்தார். முடியல்லஎன்று சொல்ல வந்தார். அதையே சொல்ல, முடியல்ல. உதடு அசைந்ததே தவிர வார்த்தைகளே வரவில்லை. வெறும் காற்று வாய் வழியே வந்தது. மூச்சுதான் உலைத் துருத்தி போல மகா கனமாய், வடக்கயிறாய்அப்படியே கண்ணை மூடிக் கொண்டார். வாசலில் டாக்சி வந்து நின்றது.

அவ்வளவுதான். கதை முடிந்துவிட்டது

என்றுதான் அண்ணா நினைத்தார். மாதவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆஸ்பத்திரி. மாதவன் கடைசியாய் ஓய்வு பெற்ற பணி கேடருக்கு, தனி அறை எலிஜிபிள். செலவுகள் ரீயிம்பர்சிபிள். நாலு ஐந்து நாட்கள். பாதிகாய்ந்த இலையாய்க் கிளையோடு ஒரு படபடப்பு. மாதவன் அத்தனைக்கு எதையும் மனசில் வைத்துக்கொண்டு அவஸ்தைப் படுகிறவர் அல்ல. வாழ்க்கையில் பெரிதும் அலையடிப்புகளில் மாதவன் மாட்டிக் கொள்ளவும் இல்லை. தனிக்கட்டை. கல்யாணம் காட்சி பெண்டாட்டி பிள்ளைஎந்த பிரிஃபிக்ஸ், சஃபிக்சும் இல்லை. ஆகவே வாழ்க்கையில் இஃப்ஸ் அன்ட் பட்ஸ் இல்லை. எளிய நிம்மதியான வாழ்க்கை தான் அவர் வாழ்ந்தார். வேலையிலும் அவர் அதிகாரி. தப்பு செய்ய எலிஜிபிள். அவரைக் கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரிந்தவர்.

அபாரமான சுதந்திரமான வாழ்க்கை. தனியே இராத்திரி பதினோரு மணிக்கு மொட்டைமாடியில் காற்று வாங்கியபடி டிரான்சிஸ்டர் கேட்கும் மாதவன். இளையராஜா குரலில் அவரை விட நன்றாகப் பாடுவார். பொண்டாட்டி இருந்தால் இதெல்லாம் சாத்தியமே இல்லை. லூஸ் பட்டம் உறுதி. கல்யாணம் ஆனதுமே எல்லா ஆம்பிளைகளும் லூஸ் ஆகிவிடுகிறார்கள் எப்படியோ. கல்யாணம் என்பதே லூஸ் பட்டத்திற்கான கானவொகேஷன் போல

இப்ப எப்பிடி இருக்குடா?” என்று கேட்டார் அண்ணா. “ஹ்ரும். வேளை வந்தாச்சிஎன்றபடி மாதவன் திரும்ப கண்ணை மூடிக் கொண்டார். ஆனால் வேளை வரவில்லை. திடீர் திடீரென்று உடம்பில் அப்படி ஒரு வலி உள்ளே ஆளைப் புரட்டி யெடுத்தது, களக் புளக் என்று கொதிக்கிற சுடுதண்ணியில் ரவையைக் கொட்டி உப்புமா கிளறுகிறாப் போலஆனால் சிறிது நேரத்தில் எதுவுமே நடக்காத மாதிரி எல்லாமே அடங்கிவிட்டது. வாயைப் பிளந்தபடி மாதவன் உறங்க ஆரம்பித்தார். உப்புமா கிண்டி முடித்தாயிற்று.

பெரிய ஆஸ்பத்திரி. அங்கேயே கான்ட்டீன் 24 மணி நேரமும் சாப்பிடக் கிடைக்கும். சாப்பிட ஆள் இருந்தால் திறந்திருக்காமல் என்ன? நோயாளியைப் பார்க்க வருகிறவர்கள் ராத்திரி பன்னிரெண்டு மணிக்குமசால் தோசை கிடைக்குமா?” என விசாரிக்கிறார்கள். குழந்தையைக் கூட்டி வந்தால் கட்டாயம் அங்கேயும் கட்டாயம் ஒரு விசிட் அடிக்கிறதுதான். டாக்டர் நோயாளியைஜங்க் ஃபுட் அவாய்ட் பண்ணுங்க…” என்றால் சரி, என்று தலையாட்டி விட்டு, வெளியேயே கான்ட்டீனில் பிட்சா ஆர்டர் பண்ணுகிறார்கள்.

ஃபோன் டெலிவரி, ரூம் சர்விஸ் கூட உண்டு.

இப்பவெல்லாம் ஸ்டார் ஆஸ்பத்திரி என்றால், எதிரிலேயே ஹெச்.எஸ்.பி, .2.பி என ஸ்டார் ஹோட்டல்களின் கிளைகள் வர ஆரம்பிச்சாச்சி. ரொம்ப காஸ்ட்லி. ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு சலுகை விலையில் டோக்கன் உண்டு.

கீழ்த்தள புற நோயாளிகள் வளாகமே பெரிசு. நுழைந்த ஜோரில் ஆஸ்பத்திரி நிறுவனர் மாலையாடு சிரித்துக் கொண்டிருப்பார் படமாக. இப்போது தலைமுறை மாறி, அவர் பையன். பையன் படம் மாட்டப்படவில்லை. தேவைக்கு அதிகமான நீள மேசைக்கு அந்தப் பக்கம் ரிசப்ஷனிஸ்ட். அவள் பக்கத்தில் தொலைபேசி. கணினி. “பேமென்ட்டா ரீயிம்பர்ஸ்மென்ட்டா?” முதலிய கேள்விகளை அவள் புன்னகையுடன் கேட்பாள். மேலே மேலே தளங்களில் நோயாளி அறைகள். சாதா. ஸ்பெஷல் சாதா. .சி.யூ. என துட்டுக்குத் தக்கபடி.

அண்ணா ரா தங்க மாட்டார். பகலில் வெயிலேற வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். தம்பி விழித்துக் கொண்டிருந்தால் வந்து கையைப் பிடித்துக் கொள்வார். “நல்லா தூங்கினயா?” என்று கேட்பார். “வேற வேலை என்ன? தூங்கிக்கிட்டே கிடக்க வேண்டிதான்…” என்றார் மாதவன். “எழுந்து உட்கார்ந்துக்கிட்டா தேவலை…” என அவர் பரிட்சித்துப் பார்த்தார். உடம்பே கிடுகிடுவென்று ஆடி ஆளைச் சரித்தது. “காலரா வராமலேயே இந்த ஆட்டம் ஆட்டுதே…” என்றார் மாதவன். “வேணாண்டா. பேசாமல் படுத்துக்கோஎன்றார் அண்ணா.

தனி அறை. உதவியாளருக்கு என தனியே சிறு பெஞ்ச் மேலாக பச்சை ரெக்சீன் மெத்தை, ரயில் பெர்த் போல. தலகாணி தர மாட்டார்கள். தனி உள் கழிவறை உண்டு. அவசரம் என்றால் நர்சை அழைக்க அழைப்புமணி. அழைக்கா விட்டாலும் மணிக்கு ஒருதரம் தேக உஷ்ண நிலவரம் செக் அப். சுறுசுறுப்பான நர்சுகள். வராந்தாவில் பெரிய முருகன் படம். சிறு காற்றுக்கும் அதன் பெரிய சந்தன மாலை அசையும். கடவுளே பேசுகிறாப் போல ஓர் உயிர்ப்பு பிரமைதட்டும். ஆஸ்பத்திரியில் இப்படியெல்லாம் நிறைய சந்திக்கலாம். உதவியாளர்களைப் பார்க்க டாக்டர் வந்தாலே பரபரப்பு தட்டும். எதுவும் சொல்லாமல் தாண்டிப் போனாலும் பரபரப்பாக இருக்கும்.

ஆஸ்பத்திரியில் கனமாய் ஒரு மௌனம் இருக்கிறது. அது பல சமயங்களில் பல்வேறு உணர்ச்சிகளை உள்ளே உருட்டி விளையாட வல்லது. திடீர் திடீரென்று எதோ அறையில் இருந்து வலியின் முனகல் கேட்கலாம். அல்லது ஒரு மரண ஓலம். உதவியாளின் பெருங்குரல் எடுத்த அவல அழுகை. அல்லது திடீர் என்று வாசலில் சைரன் அலறியபடி ஆம்புலன்ஸ் வந்து நிற்கும். ஸ்ட்ரெட்சர்நோயாளிக் கிடத்தியை உருட்டியபடி ஆஸ்பத்திரி ஊழியரும் நர்சும் வாசலுக்கு ஒடுவார்கள். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய நோயாளி ஐம்புலன்சும் அடங்கி யிருப்பார். மிக அமைதியான அந்த வளாகம் சட்டென துரிதப்படும். திரும்ப எல்லாம் அடங்கிய அமைதி. சப்தத் தவளைகள் குதிக்கும் குளம். ப்ளக். திரும்ப அமைதி.

மாதவனின் கடைசிக் கணங்கள் என்பதை டாக்டர்களும் உணர்ந்தாப் போலத்தான் இருந்தது.

மாலையானால் கிளம்பி வீடு வந்துவிடுவார் அண்ணா. ராத்திரி மாதவன் தனியே தான் இருந்தார். அவரே அண்ணாவைத் தங்க வேண்டாம் என்று விட்டார். சாவை என்ன வேடிக்கை பார்க்க வேண்டிக் கிடக்கிறது? சாவு ஒரு அபத்தம். அத்தனை அர்த்தங்களையும் அது அபத்தமாக்கி விடுகிறது. எதுவும் அவசரம் என்றால் ஆஸ்பத்திரியில் இருந்தே வீட்டுக்குக் கூப்பிடுவார்கள். அண்ணா, அவருக்கும் வயதாகவில்லையா? கிழடு கட்டைகளை ஆஸ்பத்திரியில் உதவிக்கு என்று வைத்துக் கொள்ள முடியாது. அதுகள் பேஷன்ட்டை அல்ல, தன் சாவை நினைச்சுப் பாத்து பயந்துக்க ஆரம்பிக்கக் கூடும்.

ரெண்டுநாளுக்கு ஒருதரம் ருக்மணியும் ஒருநடை அவருடன் வருவாள். கனத்த உடம்பு. உருவம் செய்ய முடியாத சப்பாத்தி மாவுக் கொளகொளப்பு. கன்னம், கைகள், இடுப்பு எங்கும் கதைத் தொங்கல். மாடி ஏற முடியாது. ஷேர ஆட்டோ, பஸ்சிலேயே காலைத் த்தூக்கி ஏற லாயக்கில்லை. என்றாலும் மனசு வைத்து கொழுந்தனாரைப் பார்க்க வந்தாள்.  அலட்டிக்கக் கூடாது. இங்கதான் உங்களுக்கு வசதி. வீட்ல இதுமாதிரி நமக்கு வசதிப்படுமா?” என்பது போல எதாவது சொல்வாள். அதாவது, எங்க வீட்ல வந்து படுததுக்கற வேலை வேணாம். மாதவன் தலையாட்டினார். “ஆச்சி. இங்கேர்ந்து அப்பிடியேபோயிட வேண்டிதான்என்றார். “நீங்களா எதுனா கற்பனை பண்ணிக்க வேணாம்அதது வேளை வந்தால் நடக்கும். யாரால் நிறுத்த முடியும்?” என்பாள் ருக்மணி. அண்ணா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த மாதிரி அசட்டுத் தத்துவங்கள் அவரை எப்போதும் ஆயாசப் படுத்துகின்றன. ருக்மணிக்கும் அவரிடம், மாதவனிடம் பேச வேறு எதுவும் இல்லை. அதுவும் தெரிந்தது அவருக்கு.

நம்ம எல்லார் வாழ்க்கைக்கும் கதை வசனம் டைரக்சன், மேலேயிருந்து ஒருத்தனை பண்ணிக் கொண்டிருக்கிறான். கொட்டாவி வந்தது அண்ணாவுக்கு.

ருக்மணி இப்பதான் மாதவனுடன் இவ்வளவாவது பேசுகிறாள். மாதவன் தன் அண்ணாவின் கல்யாணத்தோடு தனி ஜாகை பார்த்துக்கொள்கிறாப் போல ஆயிற்று. யப்பாஎத்தனை பழைய கதை. சில கதைகள் ஆறுவது இல்லை. ஆறாதது சினம். அவர்தான் தம்பியை தனியே இருக்கச் சொன்னது. அப்போது தம்பி மீது அவருக்கு, லெட்சுமணனுக்கு அபாரக் கோபம் இருந்தது.

மாதவன் ரொம்ப ரொம்ப தப்பான காரியம் ஒன்றைச் செய்துவிட்டான். ஏன் அப்படிச் செய்தான், அதான் தெரியவில்லை. அப்படியும் ரொம்ப கெட்ட பையன் இல்லை. யாரும் அவன் அப்படிச் செய்தான் என்று சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள்.

அண்ணாவுக்குக் கல்யாணம். எங்கும் உற்சாகமும் பரபரப்புமாய் இருந்தது. ருக்மணி முகம் நிறைந்த பூரிப்புடன் ஜ்வலித்தாள். அப்போது இப்படி தக்காளிக் கொளகொளப்பாய் இல்லை. சிக்கென்று இருந்தாள். அவள் நடக்க கொலுசுகளின் இசை அலை எழுந்து சிதறியது. கலகலவென்று தோழிகள் கூட. எல்லாவளுக்கும் சுயம்வரக் கனவுகள். ருக்மணி காரியம் ஆயிற்று. அடுத்து?… என தன்னைப் பற்றி நினைக்கவே வெட்கமாய், சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. தன் அழகின் மீதான நம்பிக்கைக் கிறுகிறுப்பு. எப்போதும் தான் யாராவது ஆணால் பார்க்கப் பட்டுக் கொண்டே யிருக்கிறோம், என்கிற தினவு. அதை உதட்டுச் சுழிப்புடன் அலட்சியம் செய்ய வேண்டும். அது பெண்ணின் இயல்பு அல்லவா?

கல்யாணக் காலத்தில் இந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எங்கிருந்துதான் அப்படி ஒரு அசட்டுக்களை வந்து அப்புமோ தெரியவில்லை.  லெட்சுமணனுக்கு அவளைப் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும் போலிருந்தது.  இனி தன் வாழ்க்கையில் பிரச்னையே இல்லை, என ஏனோ நினைத்தான். பல பேர் வாழ்க்கையில் இனிதான் பிரச்னையே. அதை அவன் நினைக்கவில்லை. அந்தக் கணம், அதன் ஆனந்தம். மருந்து குடிக்கையில் குரங்கை நினைப்பதா?

கிட்டத்தில் அவளிடம் இருந்து ஒரு வாசனை. அவனுக்கும் பான்ட்ஸ் பவுடர் பிடிக்கும். பிடிக்காட்டி கூட அவளது பவுடரை அவன் மாற்றிக் கொள்ளத் தயாராய் இருந்தான். அதெல்லாம் காற்றே கிச்சு கிச்சு மூட்டிய காலங்கள்.

மாதவன் அப்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு. அவனுமே ஒருமாதிரியான திளைப்பில் தான் இருந்தாப் போலிருந்தது. அண்ணா கல்யாணத்தில் அவனுக்குத் தன்கல்யாணப் பரவசங்கள் இருந்திருக்கலாம். கிழடுகளுக்கே அப்படி ஆகிறது. இது இளசு. வாலிபம். கண் டெஸ்டிங்குங்கு மருந்து போட்டாப் போலவிரிந்த அவன் கண்ணுக்கு வெளியே வானவில்கள். புத்தாடை. நண்பர்கள் வேறு அவனை லகரிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

கீழே கல்யாண மண்டபம். மாடியில் சாப்பாட்டுக் கூடம்.

ருக்மணிக்கு ஒரு தங்கை. சாரதா. அவள் கல்லூரியில் அப்போது தான் நுழைந்திருந்தாள். முதல் வருடம், கல்யாண வளாகத்தில் இருந்து சாரதா மாடியேறப் போகிறாள். அப்போதுதான் மாதவன் மாடியில் இருந்து கீழே இறங்குகிறான். சட்டென ஏனோ மின்சாரம் துண்டிக்கப்பட, கண நேரத்தில் அந்த தப்பான முடிவு எடுத்தான் மாதவன். அழகான சாரதா. வயது. இளமை. பொங்கும் பூரிப்பு. அவளிடம் இருந்து வந்த சந்தன வாசனை. பட்டுப் புடவையின் சரசரப்பு, என்னவோ ரகசியம் போல கூடப் பேசிக்கொண்டே வந்தது. மைதீட்டிய விழிகளில் எப்பவுமான சிரிப்பு. கிறங்க வைக்கிற அழகு. மின்சாரம் இல்லை.

அவனுள் மின்சாரம். அந்த இருளில் அவளைச் சட்டென தன் பக்கம் இழுத்தான் மாதவன். அவள் உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் இட்டான்.

தானே தன்னை மறந்த கணம் அது. உண்மையில் அத்தனை நேரம் அவள் அவனை ஓரக்கண்ணால் நோட்டம் பார்த்தபடியே தோழிகளுடன் கலகலத்துக் கொண்டிருந்தாள். தோழிகள் அல்ல கலகலக்கும் சோழிகள். என்றாலும் அவனது அந்த தைரியம் அவளே எதிர்பாராதது. என்ன அவசரம் அவனுக்கு. முத்தம். ரெண்டு த் வருகிற முத்தம். சட்டென விளக்கு திரும்ப உயிர் பெற்றபோது அவள் எதிரே அவன். பளாரென்று விட்டாள் அவனை ஓர் அறை. கன்னம், நெற்றிப் பொட்டு, உச்சந்தலை என்று அந்த அறை விஷம் போல பொறி பறக்க சூடாய் ஏறியது. விக்ஸ், அமிர்தாஞ்சனம் தேய்த்தாப் போல

ச். அவளே எதிர்பாராமல் தோழிகள் ஓடி வந்தார்கள். மாதவன் மாட்டிக் கொண்டான். பெரியவர்கள் அடிக்க வந்தார்கள். பெரும் கூச்சல் குழப்பமாகி விட்டது. என்னவென்றே தெரியாமல் கல்யாண மாப்பிள்ளை லெட்சுமணன் அந்தப் பக்கம் வந்தான். அவன் முகம் கருத்து விட்டது. தன் கல்யாணமே நடக்குமோ நடக்காதோ, என அவன் பயந்து விட்டான்.

சுற்றிலும் ஆள் கூடி நிற்கிறார்கள். அவன் வந்ததால், அடிக்க ஓங்கிய கையுடன் அப்படியே நிற்கிறார்கள். தன் சட்டைப்பையில் கைவிட்டான் லெட்சுமணன். ஆயிரம் ரூபாய் நூறுகளாக வைத்திருந்தான். சில்க் சட்டை. உள்ளே பணம் ஒரு தோரணையாய் இருக்கும், என நினைத்திருந்தான். தோரணையாவது வெண்ணெயாவது. முதலுக்கே மோசம் இங்கே. அப்படியே அந்தப் பணத்தை மாதவன் கையில் வைத்து அழுத்தினான். சட்டையில் தெளித்த ஜவ்வாது வாசனை ரூபாய்த் தாள்களிலும் வீசியது. “தம்பின்றதால உன்னைக் காப்பாத்தி விடறேன். அடி விழறுதுக்குள்ள ஓடிப்போ…”

சாரதா அழுதபடி மணமகள்அறைக்குள் ஓடி வந்தாள். அழகான சாரதா. நெத்தி சுட்டி. காதில் குண்டலங்களின் கும்மாளம். மேக் அப் போட்ட ரோஸ் பூச்சு. எல்லாமும் அபத்தமாய் இருந்தன. கண் மை கலைந்து ஒருபேய்எஃபெக்ட் தந்தது. மாறுவேசப் போட்டி. அழுதபடி வந்தாள் சாரதா. “என்னடி? என்ன? என்ன?….” என பதறி ஓடி வந்தாள் ருக்மணி. சிக்கென்று இருந்தாள் அப்போது. (இப்போது? பெண்கள் ரொட்டிப் பிறவிகள்.) ருக்மணி தலை நிறைய பாரமாய் பூ வைத்திருந்தாள். அவளே மல்லிகைச் செடியாய் இருந்தாள்.

லெட்சுமணன் தன் அறையில் காத்திருந்தான். யாரோடும் பேசவில்லை. கல்யாண மண்டபமே கம்மென்று ஆகிவிட்டது. இழவு வீடு போல. இழவு வீட்டில் கூட ஒப்பாரி கேட்கும். ஒரு சங்கு ஊதுவார்கள். பள்ளிக்கூடம் விட்டாப் போல (உயிர் வெளியேற) டிங் டிங் என்று மணி அடிப்பார்கள். அதுவரை வாசலைப் பார்க்க ஒலிபெருக்கி வைத்துஆராதனாஇந்திப் பாடல்கள் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன. கம்மென்று ஆகிவிட்டது எல்லாம். முதலில் அப்பா உள்ளே வந்தார். “என்னடா?” என்று அவன் தோளைத் தொட்டார். “பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுங்க…” என்றான் லெட்சுமணன். “எதுக்குடா?” என்றார் அப்பா. “அப்டியே சாரதா, ருக்மணிஎல்லாரும் வரட்டும்என்றான் லெட்சுமணன்.

எல்லாரும் உள்ளே வந்தார்கள். மணமகன் அறை. மணமகனின் தம்பி வாங்கிய அறை பற்றிய பேச்சு வார்த்தை. லெட்சுமணனுக்கு அம்மா இல்லை. பெண்ணுக்கு அம்மா இருந்தாள். அவளை வர வேண்டாம் என்றுவிட்டார்கள். ருக்மணி. சாரதா. அவர்களின் தந்தை. இவன்அப்பா. இவன். லெட்சுமணன்இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என்று மாமனாரிடம் கேட்டான். “நீ என்ன சொல்றேம்மா?” என்று சாரதாவிடம் அவனே கேட்டான். “நீயும் எதும் பேசணுமானால் பேசலாம்…” என்றான் ருக்மணியிடம். எல்லாரும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தார்கள். இங்கே அங்கே என ஒரு நாடகத்தில் போல நடந்தான் லெட்சுமணன். நாடகத்தில் இப்படி நடந்து நைசாக மைக் பக்கத்தில் போய் நிற்பார்கள்.

யாரும் பேசவில்லை. எல்லாருமே திகைப்பாய் இருந்தார்கள். “நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சம்மதிக்கிறேன்என்றான் லெட்சுமணன். அவனே தொடர்ந்து பேசவேண்டி யிருந்தது. “மாதவன் இல்லை. அவனை அனுப்பிட்டேன். அவனால் இனி உங்களுக்கு மாத்திரம் இல்லை, எங்களுக்கும் தொந்தரவு வராது. வர விட மாட்டேன்என்றான் லெட்சுமணன். “உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன் சார்என மாமனாரின் கையைப் பிடித்துக் கொண்டான். “நீ இதுக்காக என்னை வேணான்னு சொல்லிடக் கூடாது ருக்மணி…” என அவள்பக்கம் திரும்பிச் சொன்னான்.

சாரதா திரும்ப மேக் அப் பண்ணிக் கொண்டு வந்திருந்தாள் இப்போது. கண் மை ஈஷலை முற்றிலும் அழிக்க முடியவில்லை. ஒரே கருப்பாய் நிழலிட்டிருந்தது. கண் மை படுத்திய பாடு, இனி அவள் அழ மாட்டாள் போலிருந்தது. அவள்தான அந்த சாவி போன்ற வாக்கியத்தைப் பேசியது. “அக்கா உனக்கு இஷ்டம்னா நீ இவரைக் கல்யாணம் பண்ணிக்கோஎன்றாள் சாரதா. “எனக்கு இவர்மேல என்ன கோபம்?” என்றாள். “நீயும் இவர்மேல கோபப்பட என்ன இருக்கு?” என்றாள்.

ருக்மணி அப்பாமேல் சாய்ந்தபடியே கண் மை கலைந்து விடாத ஜாக்கிரதையுடன் அழுதாள். அப்பாவுக்கு இவள் கல்யாணத்துக்கே சம்மதிப்பாள், இல்லைஎன புரியாமல் குழப்பம் ஆகிவிட்டது. அவருக்கு இனி வேறு மாப்பிள்ளை என்று தேடுவது, மகா காரியமாக இருந்தது. ‘சரி. ஆக வேண்டியதைப் பார்ப்பம்என்றார் பெண்ணின் தந்தை. லெட்சுமணன் அவள்முன் குனிந்துஉன்னை நான் நல்லா வெச்சிப்பேன் ருக்மணிஎன்றான். உடம்பே ரப்பர் பொம்மை பொல ஒரு விரைப்புடன் இருந்தது. சிறு பதட்டம்.

பெண்ணின் தந்தை வெளியே வந்தார். நாதஸ்வரக்காரனைப் பார்த்துவாசிங்கஎன்றார் அபஸ்வரத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்தான் அவன். அட்வான்ஸ் தான் வாங்கியருந்தான். மீதிப் பணமும் வந்துவிடும். அவன் வாசிப்பில் அந்த உற்சாகம் தெரிந்தது.

கொஞ்சம் ஏனோ தானோவென்று தான் இருந்தது கல்யாணம். மாதவன் எங்கே போயிருப்பான், என திடீரென்று அண்ணா நினைத்துக் கொண்டான். சனியன் எங்கேயாவது போய்த் தொலையட்டும், என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். என்றாலும் வருத்தமாய்த் தான் இருந்தது. அப்பாவின் நினைவுகள் பற்றித் தெரியவில்லை.

அசட்டு முதல் இரவு. அவள் முகத்தைப் பார்க்கவே அவனுக்கு பயமாய் இருந்தது. அவன் அவளைத் தொட்டாலே அவள் நடுங்கினாள். வேறு வழியில்லாமல் இந்த வீட்டில் வந்து மாட்டிக் கொண்டோமோ என நினைத்தாள். அவளைத் தொட அவன் முயற்சி செய்யவில்லை. பால் சொம்பு அப்படியே திறக்கப் படாமல் இருந்தது. சீட்லெஸ் பச்சை திராட்சை. ஆப்பிள். கமலா ஆரஞ்சு. அதைப் பார்த்தான் அவன். “அது கமலா ஆரஞ்சு. இது ருக்மணி ஆரஞ்சுஎன அவள் உதடுகளைபெருமூச்சு விட்டான் லெட்சுமணன்.

அவர்களது கல்யாண ஆல்பத்தில் மாதவன் இல்லை.

வாழ்க்கையை எப்படி அனுபவிக்க வேண்டும், என்கிற ருசி தெரிந்தவன் லெட்சுமணன். அவளைச் சரிசெய்ய அவன் அவசரப்படவில்லை. அவன் அதிகம் சிரமப்படவும் வேண்டியிருக்கவில்லை. ரியல் எஸ்டேட் அப்போது ஏறுமுகத்தில் இருந்தது. வீட்டில் குபேர விக்கிரகம் வாங்கி பூஜை அறையில் வைத்திருந்தான். அதன் எதிரே தட்டு நிறையமஞ்சள் இருபதுபைசாநாணயங்களால் அதற்கு மேட்ச் பண்ணியிருந்தான். சதா நல்லெண்ணெய் விளக்கு அங்கே எரிந்தபடி யிருந்தது. நல்ல சுத்த பத்தமான ஆள் அவன். நகத்தையே அவ்வப்போது வெட்டி விடுவான். தினசரி சவரம். கன்னம் ஒரு பச்சைப் பொலிவு கண்டிருந்தது. சிரித்தால் பளீரென்ற பல்வரிசை அழகு. நெத்தி நடுவாந்தரத்தில் குங்குமம் வைக்கிற பழக்கம் இருந்தது. பொதுவாக நாதஸ்வர பார்ட்டிகள், அம்மன் கோவில் குருக்கள் அப்படி குங்குமத்துடன் அலையும். அத்தோடு மேட்சாய் பிற்காலத்தில் வெத்தலை பாக்கு போட்டு உதட்டைச் சிவக்கப் பண்ணிக்கொண்டான். அங்குவிலாஸ் பன்னீர்ப் புகையிலை. கழுத்தில் ஐந்து பவுனில் கெட்டிச் சங்கிலி மயிர்க் கற்றைகளில் புரளும்.

தம்பி மாதவனுக்கு வாழ்க்கை சார்ந்து இத்தனை ரசனை இல்லை. ஆனால் அவன்தான் தப்பு பண்ணியது, என்பது விசித்திரம்.

பத்தே பதினைந்தே நாளில் ருக்மணியை லெட்சுமணன் முகம்மலர வைத்துவிட்டான். மீண்டும் மடைகள் திறந்துகொண்டன அவளுக்கு. அவளுக்கு அங்கே ஒரு குறையும் இல்லை. மாமியார் இல்லாத வீடு. புகுந்த வீட்டுக்கு வந்தபோது மாலை பேட்ட மாமியார் படம். சந்தோஷமாய் நமஸ்கரித்தாள். மாமனார் கோவில் கைங்கரியம் அது இது என்று வெளியே கைவேலைகளை இழுத்துவிட்டுக் கொண்டார். நாய்க்கு வேலை இல்லை. நிற்க நேரம் இல்லை, என்று வசனம். ஹரஹர சிவசிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாயஎன்றெல்லம் அச்சடித்த காவி அல்லது மஞ்சள் வேட்டி அணிந்தார் அவர், மஞ்சள் மேல் துண்டு. காதில் கடுக்கன் அணிந்த மாமனார். அவரே தோடுடைய செவியன் தான். ஆனால் காதில் பூவுக்கு இது பரவாயில்லை, என்று இருந்தது அவளுக்கு. கோவில் காரியத்துக்கு பூ கட்ட இங்கே தான் கூடத்தில் பூக்களை அம்பாரமாய்க் கொட்டி நாரில் தொடுத்து மாலைகட்டி எடுத்துப் போவார்கள். கூடத்தில் எப்பவும் ஒரு மணம் நிறைந்து கிடக்கும்

பிரதோஷம், சங்கடஹர சதுர்த்திஎப்போது பேசினாலும் இப்படி எதாவது அவரிடம் வரும். நவராத்திரி. சிவராத்திரி…. லட்சார்ச்சனை. பாராயணம். கையில் அர்ச்சனைத் தட்டை வைத்துக்கெண்டேநம்ம கைல என்ன இருக்கு?” என்பார். அதிகாலை பஜனை. கும்பாபிஷேகம். ஆன்மிகக் குட்டிக் கதைகள் நிறையச் சொல்வார். தினசரி வீட்டு வாசல் கரும்பலகையில் ஆன்மிகப் பொன்மொழி எதாவது எழுதிப் போடுவார். கோடை காலத்தில் வாசலில் ஈர மண்ணில் புதைத்த மண்பானைத் தண்ணீர் வைப்பார். தெருவில் வரும் போகும் சனங்கள் தாகமாறட்டும். பெரியார் தமிழகத்தில் பிறந்ததில் அவருக்கு வருத்தம் உண்டு. இது தவிர ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடுகள் வேறு, அவரே பஸ் ஏற்பாடு செய்து அழைத்துப் போதல். எங்க ரெஷ்ட் எடுக்க முடியறது ஷொல்லுங்கோ.

கிரகப் பெயர்ச்சி சமயங்களில் பஸ் ஏற்பாடு பண்ணி பரிகார ஸ்தலங்களுக்கு அழைத்துப் போனார். ஒருமுறை பரிகாரம் பண்ணப் போன பஸ் விபத்தாகி, அதில் போன மூணு பேர் அவ்ட். ருக்மணியின் கல்யாணத்துக்கு நமச்சிவாய பஜனா மண்டலி என ஒரு பத்து நாற்பது பேர் பஸ் வைத்துக்கொண்டு வந்து இறங்கினார்கள். கல்யண நாள் மதியம்பார்வதி கல்யாணம்நடந்தது. கல்யாண முகூர்த்தம முடிந்து எல்லாருக்கும் பானக விநியோகம்.

படுக்கை அறையில் கண்ணாடி மாட்டியிருந்தான் லெட்சுமணன். அவளுக்கு ஒரே சிரிப்பு. வெட்கம். இப்படி யெல்லாம் அவள் கேள்விப் பட்டதே இல்லை. உயரம் தட்டாத மலிவுப் பாவாடைகள் அணிந்து புடவைக்குள் உயரத்தில் அது நிற்கும். இங்கே அவன் உள்ளாடைகளுக்கே தனியாய்ச் செலவு செய்தான். லேஸ் வைத்த பிரா, எத்தனை அழகு. ஆளுக்கு தனித் தனி சோப். அவளுக்கு பாண்ட்ஸ் பவுடர் பிடிக்காது. வீட்டில் பெரிய டப்பாவாய் அதையே வாங்குவார்கள். அதையே எல்லாரும் போட்டுக் கொள்வார்கள். இவனும் பெரிய டப்பா வாங்கி வந்தபோது அவள் சொன்னாள். உடனே அடுத்த தடவை, மைசூர் சான்டல் டால்கம் பவுடர் வாங்கியாச். “எனக்கும் பாண்ட்ஸ் பிடிக்காதுஎன்றான் அவளிடம். பெண்கள் ஆண்களைப் பொய் சொல்ல வைக்கிறார்கள். இதெல்லாம் எங்க போய் முடியுமோ?

கல்யாணம் முடிந்து அவளைக் கொண்டுவிட அப்பா வந்திருந்தார். காமா சோமாவென்று கல்யாணம் ஆகி, முதல் இரவு சோபிக்காமல், எல்லாரும் உம்மென்று மாப்பிள்ளை வீடு வந்து இறங்கி யிருந்தார்கள். வீட்டில் ஆரத்தி எடுக்க ஆள் இல்லை. ஒரு அத்தை இருந்தாள். அவள் விதவை. அவள் ஆரத்தி எடுக்கப்டாது. நேரே எதிரே வரப்டாது. “இங்க இனி எல்லாமே நீதான்…” என்றான் லெட்சுமணன். “உன்னால தான் வீடே வெளிச்சமாகப் போகுது…” தன் நெஞ்சு அறிவது பொய் சொல்க, கல்யாணக் குறள் இது. பொய்மையும் வாய்மை இடத்து. ருக்மணி விரைவில் தேறி வந்தாள். தொலைபேசி உள்ள வீடு. அதுவே புதுசு. நல்ல சினிமா என்றால் அவளைக் கேட்காமல் டிக்கெட் (தரை டிக்கெட் அல்ல. பால்கனி) வாங்கிவரும் கணவன். அவளுக்குப் பிடித்த பொய்கள் சொல்கிறான். “ருக்கூ…” என அவளைக் குயில் போல் அழைக்கிறான். அவள்அப்பா, எப்பவும் சாமி படங்களுக்குத் தான் கூட்டிப் போவார். காதல் படங்கள் அவரைக் கலவரப் படுத்தின. அவருக்கு ரெண்டும் பெண்கள்.

திரும்ப அவள் அப்பாவீட்டுக்குதாலியைப் பிரித்துக் கோர்க்கஎன போயிருந்தாள். அப்பாவின் படுக்கை அறையைத் தற்செயலாகப் பார்த்தாள். புதுசாய்க் கண்ணாடி இருந்தது.

மாதவனை அவன் பெரியம்மா வீட்டில் விட்டார்கள். பெரியம்மாவுக்குப் புருஷன் கிடையாது. எங்கே போனான் யாருக்குமே தெரியாது. ரொம்பக் கண்டிப்பான பெரியம்மா. யாரையாவது திட்டிக்கொண்டே யிருக்க வேண்டும் அவளுக்கு அதனால் தான் கணவன் ஜுட் என ஊரில் பேச்சு. பிள்ளை இல்லை. மாதவனையே பிள்ளை என அவள் வரித்தாள். கல்யாணத்துக்கு அவளும் வந்திருந்தாள். மாதவன் பண்ணிய காரியம் தெரியும். என்றாலும் அவனை வளர்க்க ஆகிற செலவுகள் கிடைத்தன. அவள் மறுக்கவில்லை. அவளுக்கும் ஒரு துணை ஆச்சே. இவனையும் ரொம்ப கண்டிக்கக் கூடாது, இவனும் ஜுட் விட்ருவானோ, என்கிற பயம் இருந்தது அவளுக்கு.

சிறு சறுக்கல். ஆனால் மாதவனின் வாழ்க்கையில் அது முக்கியமானது. மாதவன் அதில் இருந்து விடுபட்டுத் தேறினான். அற்புதமாய்ப் படித்தான். அதன்பிறகு அவன் பல்கலைக் கழக அளவில் மெடல் வாங்கி புகழ் பெற்றான். அரசு நுழைவுத் தேர்வு எழுதி அரசாங்க வேலை கிடைத்தது. சட்டங்களின் நுணுக்கங்கள் அவனுக்குப் பிடிபட்டன என்றுதான் சொல்ல வேண்டும். ரூல நம்பர். சப் டிவிஷன் நம்பர்அமென்ட்மென்ட், அடிஷன், டிலிஷன்  புரொவைடட், சப்ஜெக்ட் டு, நாட் ஒன்லி பட் ஆல்சோரெட்ராஸ்பெக்ட்டிவ் எஃபெக்ட்எல்லாமே அவனுக்கு விளங்கியது. ஞாபகம் இருந்தது. சட்ட நுணுக்கமான ஓர் ஆங்கில மொழிப் பிரயோகத்தையே அவன் தானும் கைக்கொள்ள விரும்பினான். நண்பர்களிடமே கூட, ‘வித் ரெஃபரன்ஸ் டு யுவர் கொஸ்சின்…’ என்றே பேச விரும்பினான். அவன் கையெழுத்தும் அழகாகவே அச்சு கோர்த்தாப்போல நூல் பிடிச்சாப் போல வரிசை விலகாமல் இருந்தது.

கொட்டாவி விட்டபடியே மேல் அதிகாரிகள் அவனிடம் உதவி கேட்டார்கள். “இதுக்கு ப்ரிசிடென்ஸ் இருக்கு சார். இப்படித்தான் நைன்ட்டீன் சிக்ஸ்ட்டிலஎன்னாச்சின்னாஎன அவன் ஆரம்பிக்க, “என்ன எழவு ஆச்சோ. இதை என்ன பண்ண சொல்லுய்யா…” என அவனிடம் அந்தக் கடிதத்தை எறிந்தார்கள் அதிகாரிகள். ஒழுங்கு நடவடிக்கை என மெமோ, அவன் டிராஃப்ட் செய்ய அவர்கள் அதில் கையெழுத்து இட்டார்கள். யார் மெமோ வாங்கினானோ அவனும் இவனிடமே உதவிக்கு ஓடி வந்தான். மாதவனும் அவனுக்கு பதில் எழுதித் தந்தான். நமோ நாராயணா போல இவன் மெமோ நாராயணன் ஆனான்.

ஜீவோ ஸ்பெஷலிஸ்ட்டாய் ஒரு என்ஜிவோ. சரியாக பத்துமணி அலுவலகத்துக்கு, பத்துமணிக்கு அலுவலகத்தில் இருந்தான். நேர ஒழுங்குகள் இருந்தன அவனிடம். தாமதம் அவனுக்குப் பிடிக்காது. வார்த்தையை முன்பின் மாற்றிப் பேசுவது பிடிக்காது. யாருமே அவனிடம் பேச பயந்தார்கள். அதிகாரிகளின் செல்லம் அவன். அவனிடம் எதற்கு வம்பு என நினைத்தார்கள். ஆனால் யாருக்கும் அவன் எந்தத் தீங்கும் செய்தது கிடையாது. சட்டையில் சிவப்பு பச்சை நீலம் கருப்பு என நால்வகை மையுடன் பேனாக்கள் இருந்தன தயாராய். ரீஃபில் பேனா பிடிக்காது. ஒருநாள் அதில் மை கசிந்து சட்டை டிராஃபிக் சிக்னல் போல ஆகிவிட்டது.

அல்லது தேசியக் கொடி போல.

ருக்மணிக்குக் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. அப்போதிருந்து தான் அவள் உடல் ஊத ஆரம்பித்தது. காலம் அவளையே பலூன் விளையாட்டு விளையாடியது. கோடி ஒரு வெள்ளைக்கு. குமரி ஒரு பிள்ளைக்குஎன்பது வசனம். கழுத்து வரை வெள்ளை, மேல் பக்கம் பசுமஞ்சள்என அமைந்த பீங்கான் ஊறுகாய் ஜாடிபோல ஆகி வந்தாள். எலும்புக்கு ஜிப்பா போட்டாப் போல சதை ஆடியது. பையனும் நல்ல குண்டு. எப்பவும் அவனுக்கு எதாவது சாப்பிடத் தந்துகொண்டே யிருந்தாள் அவள். அதனால் அவன் ஊதி யிருக்கலாம். அப்படியே அவளும் சாப்பிட்டாள். (அதனால் …)

ரொம்ப நாளுக்குப் பிறகு மாதவன் அண்ணன் வீட்டுக்குள் நுழைகிறான். குழந்தைக்குப் பெயர் வைக்கிற புண்ணியாகவசன நாள். பெரிய தொட்டிலாய் வாங்கி யிருந்தார்கள். நல்ல கூட்டம். நமச்சிவாய பஜனா மண்டலிக் கூட்டமே அதிகம். ஒரே சப்த களேபரம். அண்ணா உள்ளேநுழைகிற மாதவனைப் பார்த்தான். அவனை நேரில்பார்த்தே எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் இருவர் இடையே, ஒரு இஃப் ஒன்லி, அன்லெஸ் அதர்வைஸ் எல்லாம் வந்துவிட்டது. என்றாலும் அவனைப் பார்த்த கணம் மனம் நெகிழ்ந்து கொடுத்தது. என் கல்யாணத்துக்குக் கூட இல்லாமல் அவனைத் துரத்தி விட்டேன்.

எங்கடா வந்தேஎன்று கேட்க நினைத்தவன், வெறுமனே தலையாபட்டினான். ருக்மணி குழந்தையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். லெட்சுமணன் அவளைப் பாரித்தான். தாய்மையின் பூரிப்பில் இருந்தாள். சிக்கென்றிருந்தாள். சதை நீர் கொள்ளாத பாத்திரமாய் அப்போது பொங்கி வழியவில்லை. அழகாய்ததான் இருந்தாள். காதில் அங்குசம். ஆனால் அவள் யானை போல் இல்லை. “ருக்கூ…” என்றான் குயிலைக் கூப்பிடுவது போல. “மாது வந்திருக்கான்…”

ருக்மணி அவனைப் பார்த்தாள். அவளுக்கு, அவனை வரவேற்பதா வேண்டாமா, என்ன ரியாக்சன் தர வேண்டும், தெரியவில்லை. கடவுளின், கதை வசனம் டைரக்சன், அங்கே மிஷ்டேக். ஆனால் அவளது மௌனம், அதுபோதும் மாதவனுக்கு. நேரே வந்து அண்ணியின் மடியில் இருக்கும் குழந்தை கையில் பரிசுப் பொருளை வைத்தான். சின்ன தந்தவண்ண டப்பியில் மோதிரம். “அட சக்கரைக் குட்டி..” என அதன் கன்னத்தை நிமிண்டினான். “உங்களை மாதிரிதான் இருக்கான் அண்ணிஎன்றான் மாதவன். எல்லாரும் சிரித்தார்கள். ருக்மணியிடமும் மெல்ல ஒரு சிரிப்பு வந்தது. பஜனா மண்டலியில் இருந்த சிறுமி ஒருத்திகண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் கவலைகள் பிறந்ததம்மாஎன பாட ஆரம்பித்தது. “கவலைகள் பறந்ததம்மான்னு பாடணும்என யாரோ திருத்தினார்கள்.

குழந்தைக்குப் பேர் வைத்த அந்த வைபவத்துக்கு சாரதா வரவில்லை. அப்பா அம்மா சித்தி என ஒரு பத்து பேர் பெண் சைடு உறவுக் கூட்டம். சாரதாவுக்குக் கல்யாணம் பாரத்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்ப்டடான் மாதவன். ஒரு பெருமூச்சு விட்டான். நல்லா யிருக்கட்டும்என நினைத்துக் கொண்டான். ருக்மணி அவனுக்குக் காபி கொண்டுவந்து தநதாள். “வேணாம் அண்ணி…” என்றான். அவன் மறுத்தது அவளுக்கு முகம் மாறியது. “இது உன் வீடு தம்பி. நான் வந்தவ. உனக்கு நான் காபி தராத பாவம் எனக்கு வேணாம்…” என்றாள் ருக்மணி.

இல்ல. இல்லகாபி வேணாம். டீ தான் நான் குடிப்பேன்என்று விளக்கினான் மாதவன்.

கடைசி வரை மாதவன் கல்யாணமே பண்ணிக் கொள்ளவில்லை. அவனுக்குள் ஒரு காயம் இன்னும் ஆறாமல் இருந்ததா தெரியாது. அவன் பெற்ற அத்தனை வீச்சுகளும் வெற்றிகளும் அவனைத் தனிமைப் படுத்தின. அதிகாரம் சார்ந்த ஓர் ஆளுமைக்குள், தான் தனது சிறு செயலால் தலை தாழ்த்த நேர்ந்துவிட்டதை அவன் உணர்ந்தான். எக் காலத்திலும் இனி தன் கை கீழே இறங்கிவிட அனுமதிக்கக் கூடாது, என நினைத்தான். இனி ஒரு கல்யாணம், அதுசார்ந்த ஊடாட்டங்கள் குறித்து அவனுக்கு யோசனை இருந்திருக்கலாம். தன்னை யாரும் கேள்வி கேட்கிற, மேலாண்மை செய்கிற நிலை இனி வேண்டாம். மேலும் நஷ்டங்கள் வந்தால் அவனால் தாள முடியாது என்று இருந்தது.

ஆனால் அண்ணா அண்ணி சந்தோஷமாய்த்தான் இருந்தார்கள். தொங்கத் தொங்க நகை அணிகிறாள் அண்ணி. கார் வாங்கியாச்சி. அண்ணா ரியல் எஸ்டேட் பிசினெசில் கொழிக்கிறான். பையன் ஒருத்தன். மகாதேவன் என்று பெயர். ஆளே மகாவாகத் தான் இருக்கிறான். மெகா தேவன்என்றும் சொல்லலாம். வீட்டிலேயே தேன்குழல், முறுக்கு, சீடை, அதிரசம் என எதாவது செய்துகொண்டே யிருந்தாள் ருக்மணி. நொறுக்குத் தீனி ஸ்பெஷலிஸ்ட். சின்ன வயசில் கொஞ்சம் பசியை உணர்ந்து அவள் வளர்ந்திருக்கலாம், என்று தோன்றியது. பையன் பசியே அறியாமல் வளர்கிறான். அவன் வேணாம், என்றாலும் இவள் விடமாட்டாள் போலிருந்தது. மரக்காலும் ஆழாக்கும் போல இருந்தார்கள் இருவரும்.

அந்த சாரதாவுக்குக் கல்யாணம் ஆயிற்று. வட இந்திய மாப்பிள்ளை. அவளுக்கும் இந்தி தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு அவளும் இப்படி, அக்கா போல, பூசணிப்பழமாய் ஆகிவிடுவாளா தெரியாது. கல்யாணத்துக்கு அண்ணா அண்ணி போய்வந்தார்கள். அவன் போகவும் இல்லை. அழைப்பும் இல்லை. அப்புறம் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தெரியும். அண்ணா வேலையாய் இருந்ததால், மரக்காலும் ஆழாக்குமாய்ப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். பெரியம்மா அடிக்கடி லெட்சுமணனோடு தொடர்பில் இருந்தாள். அப்பா செத்துப் போனார். அதற்குப் போயிருந்தான். நமச்சிவாயா பஜனை மண்டலியே அழுதது. அண்ணி மறக்காமல் டீ தந்தாள். அதற்கு சாரதா வரவில்லை. அவள்அப்பா பேத்தியுடன் வந்திருந்தார். அழகாய் இருந்தாள் அந்தப்பெண். ஸ்ருதி என்று பேர் சொன்னார்கள்.

மாதவனுக்கு வாழ்க்கை தனிக்கட்டையாகவே பழகிவிட்டது. இதில் கிடைக்கும் அந்த ஆசுவாசம் வேண்டியிருந்தது என்றுகூட நினைத்தான். பெரியம்மா அண்ணாவிடம் அவனது கல்யாணம் பற்றிப் பேசினாள். அண்ணி கூட இவனிடம் ஒருநாள் பேசினாள். மையமாய்த் தலையாட்டினான் மாதவன். கல்யாணம் என்ற விஷயமே சிலருக்கு, சில ஆண்களுக்கு, ஏன் சில பெண்களுகிகே கூட ஒத்துப்போவது இல்லை. தனிப் பிறவிகள் அவர்கள்  என்று தோன்றியது.

சில துப்புகள் வந்தன. ஏழைப் பெண் ஒருத்தி. அவர்களே ஜாதகப் பொருத்தம் இருக்கிறது, என்று பெண்ணின் படமும் அனுப்பி வைத்திருந்தார்கள். பசிக்கொடுமை இருந்து அவளும் பிற்காலத்தில் பட்சணங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். அவன் இடம் கொடுக்கவில்லை. வேணாம், என்று அத்தனை முரட்டுத்தனமாய்ச் சொல்லிவிட்டு வந்துவிட்டான். வேணாம், என்று சொல்லலாம். அதற்கு ஏன் இந்த மூர்க்கம். அவனுக்கே தன் கோபம் ஆச்சர்யம் தந்தது. அவமானம் முன்னே வர பழி தீர்க்கிற வடிகாலாக இந்தக் கோபம் என்று பட்டது. அட யாரைப் பழி தீர்க்கிறாய்? அண்ணனையா? அண்ணியையா? அவர்கள் எல்லாம் தன்பாட்டுக்கு தன்னளவில் வாழ்க்கையை லகான் பிடித்துப் போகிறார்கள். நீதான் இப்படி அல்லாடிக் கொண்டுஇல்லை. எனக்கு ஒரு சிரமமும் இல்லை, என நினைத்துக் கொண்டான். அவன் அப்படி ஆத்திரமாய்த் தலையாட்டி மறுத்ததில் அண்ணிக்கு வருத்தம்.

மாதவன் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றான். ஊழியர் சங்கத்தில் அதற்குப் பாராட்டுவிழா எடுத்தார்கள். வழிய வழிய பொன்னாடை போர்த்தினார்கள். பதவி உயர்வு எதிர்பாராதது அல்ல. முழுக்கைச் சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் அவனது கடிகாரம். சட்டையை இழுத்து உயர்த்தி மணி பார்க்கும் தோரணை. தலையில் சிறு நரைகள். ஒடிசலான உயர்ந்த உருவம். அவன் உடம்பில் சதை வைக்கவே இல்லை. சாக்பிசில் செதுக்கிய சிற்பம் போல இருந்தான். கூர்மையான மூக்கு. அப்பா சாயல் அது. தங்க பிரேம் கண்ணாடி. லஞ்சம் வாங்க மாட்டான். தேவை இல்லை. அந்த நிமிர்வே அழகாய் இருந்தது. அலுவலகத்திலும் வெளியிலும் எப்பவுமே ஆங்கிலத்தில் புழஙகினான். காலையில்தி இந்துவாசித்தான். லெட்டர்ஸ் டு தி எடிட்டர், எழுதினான். பள்ளிக்கூட ஆண்டு விழாவில் வரிசையாய்ப் பேர் படிக்கப் படிக்க குழந்தைகளுக்குப் பரிசு வழங்க அவனை அழைத்தார்கள். பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றினான். ஹாஸ்டலில் படிக்கும் பையன் அப்பாவுக்குக் கடிதம் எழுதினானாம். ஐயம் ஹியர் வெல். ஹோப் யுவார் ஆல்சோ இன் தி சேம் வெல்இப்படி நகைச்சுவைகளைத் தவறாமல் எடுத்து அளித்தான். அப்புறம்பெரியம்மா செத்துப் போனாள். மர்மக் கதையில் கடைசிப் பக்கம் கிழிந்து விட்டாப் போலகடைசி வரை அவளுக்கு தன் கணவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாமல் செத்துப் போனாள். சரி. இனி சாப்பாட்டுக்கு என்றாவது அவன் கல்யாணம் என்று வாய் திறப்பான், என அண்ணி எதிர்பார்த்தாள். வயசும் ஆகிறது நாற்பது.

இந்த ஜாக்கிரதை உணர்வு, அல்லது தயக்கம் தேவையே இல்லை என்று இருந்தது அண்ணாவுக்கு. தம்பிமேல் இருந்த கோபத்தில் நல்ல வரன்கள் வந்தபோது அவன், அண்ணா மறுத்து விட்டான். வர்றாட்களிடம், இவன் இப்படி ஒரு காரியம் பண்ணினான், என்று உண்மை சொல்லாமல், நான் சம்பந்தம் பேச மாட்டேன், என்றான். அப்பாவின் மரணம். தம்பி சார்ந்து லெட்சுமணனுக்குச் சில பொறுப்புகள் இருப்பதாகத் தோணியது. ஆனால் மாதவன் விலகி விட்டான்.. அவர்கள் துண்டாடப் பட்டார்கள். அப்பா அவர்களுக்கு ஒரு இணைப்புப் பாலம் என இருந்ததாக அதுவைர தோணாதது இப்போது தோணியது. வாசல் கரும்பலகையில் எழுத ஆளில்லை.

வீட்டில் உதவிக்கு என வேலைக்காரிகூட வைத்துக் கொள்ளவில்லை அவர். வீட்டு வாசலில் டிவியெஸ் 50 நிற்கும். போர்டு உண்டு. கா. மாதவன். தலைமைக் கணக்கு அதிகாரி. சின்ன பிளாஸ்டிக் சிப்.. உள்ளே வெளியே என எழுதிய போர்டில் நகரும்படி. ரௌடி வீட்டில் இப்படி உள்ளே வெளியே என்று போட்டால் அதன் அர்த்தம் வேறு. தமிழ்நாட்டுக்குள் சரளமாக மாற்றல் வந்தது. கணக்கு தணிக்கை என்று நாலு இடம் டூர் போனார் மாதவன். ட்டியே டியே வாங்கிக் கொண்டார். அதிகாரமான ஆங்கிலக் குரல். அவர் வருகிறார் என்றாலே அந்த அலுவலகம் பதறித் தயாராகும். எப்போது எந்த ஃபைலைக் கேட்பார் தெரியாது. அதென்னவோ, எந்த ஃபைலை, அவர் கண்ணில் படக் கூடாதே, என்று நினைத்தோமோ, அதே ஃபைலை முதலில் கேட்கிறார் மனுசன்.

சாரதாவின் பெண்ணுக்குக் கல்யாணம். அவனுக்கும் பத்திரிகை வந்தது. ஆச்சர்யமாய் இருந்தது. திடுக் என முதன் முதலாய் ஒரு தடுமாற்றம். அண்ணா அனுப்பச் சொன்னானா? அவளே அனுப்பினாளா? சாரதாவையே பார்த்து நாளாயிற்று. இவள்ருக்மணி மாதிரி அவள் கொளகொளத்திருப்பாளா? பெண்ணுக்கே கல்யாணம் என்கிறாள். மாப்பிள்ளை வேதாரண்யம். சொந்த பிசினெஸ் என்று தெரிந்தது. கல்யாணம் மும்பையில். எங்கேயிருந்து இந்த மாப்பிள்ளையை இவ்வளவு தள்ளிப் பிடி9த்தாள் தெரியவில்லை. ஸ்ருதி வெட்ஸ் நாகராஜன். அண்ணாவும் ருக்மணியும் மகாதேவனும் போய் வந்தார்கள். அவன், மகாதேவன் இப்போது கல்லூரி போகிறான். பைக் வைத்திருக்கிறான் மகாதேவன். ரெடிமேட் உடைகள் அவனுக்கு சரியாக அமையவில்லை. தைத்துப் போட்டுக் கொண்டான்.70 எம் எம் படம் போல இருந்தான்.

அவன் அழுதது சாரதாவின் மரணத்தின் போதுதான். தந்தி வந்திருந்தது அண்ணாவுக்கு. ருக்மணிக்கு சாரதாவை ரொம்பப் பிடிக்கும். டாக்சி வைத்துக் கொண்டே போனார்கள். நல்ல சாவுதான். ஷேத்ராடனம் என்று ராமேஸ்வரம் வந்தாள் சாரதா. திரும்பிப் போக ரெண்டுநாள் இருக்கையில், வேதாரண்யத்திலேயே அவள் உயிர் பிரிந்தது. ஒரே பெண். நல்லா வளர்த்தாயிற்று. ஒருத்தன் கையில் கொடுத்தாயிற்று. அவன் பிசினெசும் நல்லாதான் போகுது, என்று தெரிகிறது. கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துக் கடிதம், அழகான ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைத்தது ஞாபகம் வருகிறது.  வேதாரண்யத்தில் தான் சாவு. போய்ப் பார்க்கலாமா, என்றுகூட இருந்தது. அடக்கிக் கொண்டார் மாதவன். திரும்ப ஆங்கிலத்தில் ஒரு கடிதம்ச், வேணாம்என நினைத்தபடியே கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

அண்ணா வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கிக்கொண்டு வந்தார் மாதவன். அதுவரை கணக்கு தணிக்கை என்று பல ஊர் பார்த்தாயிற்று. வேதாரண்யம் கூட ஒருதரம் போனார். ஒரு சபலம். ஸ்ருதி வீட்டுக்கு ஒரு நடை போகலாமா, என்றுகூட யோசித்தார். சாரதாவின் பெண் ஸ்ருதி. கால் தயங்கியது. போகவில்லை அவர். என்றாலும், சாரதா இறந்த பூமி. அவர் உடம்பு சிறிது நடுங்கியது. “போலாம்என்றார் கார் டிரைவரிடம். தணிக்கைக்கு எங்கே போனாலும் டிரைவருடன் கார் அவருக்காகக் காத்திருந்தது. அதுவே ஒருவகை லஞ்சம் தான். ஒய் டிசிப்ளினரி ஆக்ஷன் கேனாட் பி டேக்கன் எகெய்ன்ஸட் யு, என மெமோ, ஷோ காஸ் நோட்டிஸ், தட்டலாம்.

பெரிய வீடு. காற்று சதந்திரமாய்ச் சுற்றி வந்தது. ரெண்டு படுக்கை அறை. ஒன்றை வாசிப்பறையாக வைத்துக் கொண்டார். பின் அலமாரியில் ஏராளமான புத்தகங்கள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள். தத்துவ விசாரங்கள். அரவிந்தரின் லைஃப் டிவைன். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன். ரா. கணபதியின் தெய்வத்தின் குரல். சின்மயானந்தாவின் பகவத் கீதை.. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம். காந்தியின் சத்திய சோதனை. நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா. கல்கியின் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம். பெரிய தொலைக்காட்சிப் பெட்டி. டென்னிஸ் பார்ப்பார். கைரேடியோ. இளையராஜா பிடிக்கும்.

ஓய்வுக் காலத்தில் ஜிப்பா அணிய ஆரம்பித்தார். அதே மிடுக்கைக் கைக்கொள்ள முனைந்தார். வேகு வேகென்ற அதே நடை. இப்போதெல்லாம் சிறிது திணறுகிறது. கொஞ்சம் அப்படியே நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பின் பிடிவாதமாய், ‘எனக்கு ஒண்ணும் இல்லை,’ என தலையை உதறி, கிர்ர் என்று பல் காட்டியது உள்ளே எதோ மிருகம்தானே அதை மறுக்கிறார். மீண்டும் நடை. ஹா. இதுவரை அநாவசியமாக மருந்து எடுத்துக் கொண்டது இல்லை. கண்ணுக்கு புரை ஆபரேஷன் கூட செய்துகொள்ளவில்லை. என்ன ஆகிவிடும்?… என நினைத்தார்.

சேர்த்து ஆளைச் சரித்தது ஒருநாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்தான் அண்ணா. அவன் வந்ததே அவருக்குத் தெரியாது. மயங்கிக் கிடந்தார். அண்ணாதான முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியது. “நான் எங்கருக்கேன்?’ என கேட்க நினைத்தார். எல்லா சினிமாவிலும் அப்படித்தான் கேட்கிறார்கள். அவர் மலங்க மலங்க விழித்தார். அந்தச சூழல் விளங்கவில்லை. தன் வீடுதான். இதுஅண்ணா. வாசலில் டாக்சி வந்து நிற்கும் சத்தம்.

எப்பிடி இருக்கே மாது?”  என்றபடி உள்ளே வரும் அண்ணா. “ஹ்ரும்என்கிறார். “நேத்து ஒரே இருமல்என்றபடியே திரும்ப படுத்துக் கொள்கிறார். “டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” அண்ணா பதில் சொல்லவில்லை. எல்லாரும அவர் நாடி அடங்கி வருவதை யூகிக்கிறார்கள். ஆனால் உயிர் அவரைப் பிரிய மறுத்தது. எந்த அதிர்ச்சிக்கும் பழகிவிட்ட பாறை மனது. உணர்ச்சிகள் இறுகி விட்டன அவருக்கு. வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. சரி. வெறுப்பும் அற்ற நிலை. தினசரி மாற்றம் இல்லாத சராசரி வாழ்க்கை. பாம்புகள் ஏணிகள் இல்லாத பரமபதம் இது.

சில சமயம் நினைவு மயங்க அப்படியே கண் திறக்க முடியாமல் கிடந்தார் மாதவன். என்றாலும் நர்ஸ் உள்ளே வருவது கேட்கிறது. பாத சரசரப்பு தெரிகிறது. நாடி பார்க்கிறது புரிகிறது. மருந்தும் குளூகோசும் ஏறுவது தெரிகிறது. நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவசரமாக ஆக்சிஜன் மாஸ்க் வைத்தார்கள். உடம்பு நெளிய நெளிய மாதவன் மூச்சுவிட சிரமப் பட்டார். அவரைப் பார்க்கவே அண்ணா சிரமப்பட்டார். வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு நின்றார். அவர் உடம்பு நடுங்கியது. அண்ணா அழுவதைப் பார்த்தார் மாதவன். வ்வேஎன்றார். அழாதே. வேணாம்அதைச் சொல்ல முடியவில்லை.

சரி. இறந்துவிடுவார்என்று இருந்தது.

ஒரு அரைமணி நேரம். மாதவனின் மூச்சு சீரடைந்தது. என்ன இது? சாவு கிட்ட வருகிறது. அடங்க மாட்டேன் என்கிறது. பொன்னாசை. பூவாசை அதாவது பூமியாசை என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறாள் ருக்மணி. அப்படியெல்லாம் இவருக்கு, முன்பே ஆசை கிடையாது. எதைச் சேர்த்து அவர் யாருக்குத் தரப் போகிறார். வாரிசு இல்லை. அத்தனை எளிமையாய் வாழ்ந்தவர் மாதவன். வாழ்க்கையில் எதையம் வேண்டியவர் அல்ல அவர். அதனால் சாவையும் அவர் எதிர்பார்த்தோ, அதற்கு பயந்தோ அவரால் உணர்வு கொள்ள முடியவில்லை.

உயிர் உள்ளே திகைக்கிறது, என்று தெரிந்தது.

தினசரி அண்ணா காலையில் வந்து அவருடன் இருப்பார். உள்ளே நுழைகையிலேயே தம்பியின் மரணச் செய்தி வரக் கூடும், என வருவார். அறைக் கதவைத் தட்ட, எஸ், என மாதவன் குரல் கொடுப்பார். “நல்லா தூங்கினியா அண்ணா?” என அவரைக் கேட்டுச் சிரித்தார் மாதவன். “நேத்து ஒரு மாதிரி நெஞ்சை வலிக்கறாப்போல இருந்தது…“ என்றார். “அப்பறம்?” என்றார் அண்ணா. “ட்ரான்குலைசர் போட்டு தூங்கப் பணிணினாங்க.”

இன்னனியோட எத்தனை நாள் ஆச்சு?” என்று கேட்டார் மாதவன். “அதைப்பத்தி என்ன?” என்றார் லெட்சுமணன். “இன்னிக்குத் தேதி என்ன?” என்றார் மாதவன் விடாமல். “படுத்த படுக்கையா இப்பிடியே கெடக்கேன். எழுந்துக்க முடியல்ல.” – “வேணாம். அப்பிடியே படுத்துக்கோ இவனேஎன்றார் அண்ணா.

மாதவன்?” என்று அறைக்கு வெளியே இருந்து சின்னப் பெண் ஒருத்தியின் குரல் கேட்டது. இருவருக்கும் ஆச்சர்யம். அந்தப் பெண் உள்ளே வந்தாள். அயர்ந்து போனார் மாதவன். அவள் அச்சுஅசல் சாரதா போலவே இருந்தாள். “ஸ்ருதி?” என்றார் மாதவன். “ஆமாம்என்றார் அண்ணா. அவளுடன் அவளது சின்னப் பையன். “யாரும்மா இது?” என்கிறான் பையன். “தாத்தாடாஎன்கிறாள் அவள். “ஏன் இங்க படுத்திண்டிருக்கார்?” என்று கேட்கிறான் அவன். அவனிடம் கேள்விகள் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தன. “தாத்தா செத்துப் போகப் போறாளாம்மா?”

ஷ். அப்டில்லாம் சொல்லக் கூடாதுஎன்கிறாள் ஸ்ருதி. “ஆமாண்டாஎன்கிறார் மாதவன். “உங்களுக்கு உவ்வாவா தாத்தா?” அவன் மேலும் கேள்விகள் கேட்குமுன் லெட்சுமணன் அவனைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.

ஸ்ருதி வந்தது அண்ணாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பேரனை அணைத்துக்கொண்டே ஜன்னல் வழியே உள்ளே பார்த்தபோது இன்னொரு ஆச்சர்யம். மாதவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்திருந்தாள் ஸ்ருதி. திடீரென்று மாதவனின் தலையைக் கோதியபடியே, குனிந்தாள். ஸ்ருதி அவர் கன்னத்தைத் தன் கைகளில் ஏந்தி ஒரு முத்தம் கொடுத்ததைப் பார்த்தார் அவர்.

காரில் வந்திருந்தாள் ஸ்ருதி. “வீட்டுக்கு வாயேம்மா…” என்று அண்ணா கூப்பிட்டார். “இல்லை. நான் உடனே திரும்பப் போயாகணும். இதுவரை என்னை அவர் விட்டதே ஆச்சர்யம் பெரியப்பாஎன்றபடி காரில் ஏறிக் கொண்டாள். டாடா காட்டிவிட்டுப் போயே விட்டாள்.

வீடுவரை நடந்தே போனார் லெட்சுமணன். மனசு மிதக்கிறாப் போல இருந்தது. வீட்டுக்குப் போகுமுன் ஆஸ்பத்திரியில் இருந்து செய்தி வரக் கூடும், என்றுதான் இருந்தது. ருக்மணி கதவைத் திறந்த போது எதும் சொல்வாள் என்று எதிர்பார்த்தார். போன் வந்ததா?… கேட்க வெட்கமாய் இருந்தது. தவிரவும் அவளே சொல்ல மாட்டாளா, என்றும் இருந்தது.

ஒரு ஆச்சர்யம் ருக்கூ…” என்றார் லெட்சுமணன். “என்னாச்சி?” என்று ருக்மணி திரும்பிப் பார்த்தாள். ”நம்ம ஸ்ருதி இல்ல?… மாதவனைப் பார்க்க வந்திருந்தாடி…” என்றபடியே உள்ளே பாத்ரூமில் கால் கழுவிக் கொண்டார். “தெரியும்என்றாள் ருக்மணி. திரும்ப அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் லெட்சுமணன். “நான்தான் வரச்சொன்னேன்என்றாள் ருக்மணி.

தொலைபேசி ஒலித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.