அருவம்

dreamstime

அந்த சனிக்கிழமை இரவை எப்படி கடப்பது என்று மந்திரமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தான். நாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்வதின் பொருள் என்ன என யோசித்துக்கொண்டிருந்தபோது சண்டை போட்டுக்கொண்டு கனமான தொப்பை மீது ஓடி வந்து விழுந்த பெரிய மகனையும் சிறிய மகளையும் “அங்கிட்டு போய்த் தொலைங்க மூதிகளா” என்று உரக்கச் சத்தம் போட்டு ஏசினான். உள்ளே இருந்து மங்களம் “அவாகிட்ட போகாதீங்கன்னா கேக்குகளா” என்று சொன்னது இவனுக்கு மெல்லக் கேட்டது. “அப்பா ஏம்மா எப்பவும் எரிஞ்சே விழறாங்க” என்று மகன் மங்களத்திடம் கேட்டிருப்பான் என மந்திரமூர்த்தி நினைத்துக்கொண்டான்.
நாளெல்லாம் எண்ணெய்க்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்தால் இங்கேயும் ஒரு நாதி இல்லை என்று மெல்லச் சொல்லலாமா அல்லது சத்தம் போட்டுச் சொல்லலாமா என யோசித்தான். தன் பனியனை இழுத்துப் பிடித்து முகர்ந்து பார்த்தான். எண்ணெய்ப் பிசுக்கு வாடை எதுவும் இல்லை. ஆனால் மங்களம் எப்படி எப்போதும் பிசுக்கு வாட தாங்கல என்கிறாள் என்பது இவனுக்குப் புரியாத ஒன்றாகவே இருந்தது. இத்தனைக்கும் அவள் அப்படிச் சொல்லும்போது அவன் பனியன் இல்லாமல்தான் இருப்பான். கடந்த ஒரு வாரமாக இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதன் அர்த்தம் பிரச்சினைகளே இல்லை என்பதல்ல.
வரும் தையோடு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் முடியப் போகின்றன. நடந்தால் ஒடிந்து விழுந்துவிடுபவள் போல வீட்டுக்குள் வந்த மங்களம் கொஞ்சம் பூசினாற் போல் ஆகி இருக்கிறாள். இப்போதும் அழகில் எந்தக் குறையுமில்லை. இரவுகளில் அவளது போதையைத் தவிர்த்துக் கிடப்பது மந்திரமூர்த்திக்கு மிகவும் கஷ்டம்தான். போன வாரம்கூட அவள் அவனை ஒட்டிப் படுத்துக் கிடந்தபோது, விலக்கிப் பார்த்த அவனுக்கு அவள் நெல்லையப்பர் கோவில் தூண்தோறும் நிற்கும் ஒரு கருஞ்சிலை நேர்த்தியாகக் கால் சற்றே வளைத்து அவனை நெருக்கி முலைசேர்த்துப் படுத்திருப்பது போலத்தான் தோன்றியது. இதற்கு, சிலையைப் போன்ற நிறம் என்று பொருளில்லை. நல்ல சிவப்பு நிறம். இந்தச் சிவப்பு நிறச் சிலையில் இவன் நிலையழித்து வெறிகொண்டு கிடந்திருக்கிறான். கழுத்துச் சதை மட்டும் அவளுக்கு கொஞ்சம் நாளாக லேசாக ஆடத் தொடங்கி இருக்கிறது. ஆனால் அவன் அவளிடம் சொன்னதில்லை. ஏனென்றால் அவன் கல்யாணத்தில் இருந்ததைவிட நான்கைந்து சுற்றுப் பெருத்திருந்தான். நடந்தால், மாடி ஏறினால் மூச்சு வாங்கியது. இரவில் ஒரு பக்கம் வெறியும் இன்னொரு பக்கம் சோம்பலும் வந்தது. அவள் தயாராவதற்குள் எவ்வளவு நேரம்ட்டி என்று சொல்லத் துவங்கி சில மாதங்கள் ஆகியிருந்தன. தலைமாட்டில் குடிக்க நீர், டார்ச் லைட் எல்லாம் வைக்க ஆரம்பித்து ஒரு வருஷமாயிற்று. வெஸ்டர்ன் டாய்லெட் இல்லாவிட்டால் எரிச்சல் வந்தது. “உங்க சித்தி வீட்டுல ஒரு வெஸ்டர்ன் டாய்லட் கூட இல்லயேட்டீ” என்று அவன் ஒருதடவை சொன்னபோது, மங்களம், “ஒங்க வீட்டுக்காரங்கள்லாம் இங்கிலாந்துலல்லா பொறந்தாங்க” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
 
சமையலறையில் எல்லா வேலையையும் முடித்துவிட்டு மங்களம் அறைக்குள் நுழையவும் மல்லிகைப் பூ மணம் ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது. “இப்ப என்ன எழவுக்கு இந்த மல்லியப்பூ” என்றவனை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பசங்களுக்குப் பாயை விரித்துப் போட்டாள். பையனும் பெண்ணும் வந்து படுத்துக்கொண்டார்கள். “ஒண்ணத்தாண்ட்டீ கேக்கேன்” என்ற மந்திரமூர்த்திக்கு முதுகைக் காட்டிப் பக்கத்தில் படுத்துக்கொண்டு சொன்னாள், “ஒங்கள வெக்கச் சொல்லலியே.”
மூத்தவன் காலை அவள் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்குவதைப் பார்க்க இவனுக்கு எரிச்சலாக வந்தது. “ஒண்ணு தன் புத்தி வேணும். இல்லன்னா சொல் புத்தி வேணும். ரெண்டுங்கெட்ட மூதிகள என்ன பண்ண” என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள் பையனை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்தாள் மங்களம். “வெளக்க யார் அணைப்பா? ஒங்க அப்பா வருவாவளோ” என்று அவன் சொல்லவும் திரும்பிச் சீற்றத்துடன் “ஒங்கம்மா கை இழுத்துக்குட்டோ” என்றவளைப் பார்க்கும்போது உள்ளே ஒரு சந்தோஷம் பொங்கி வந்தது.
எத்தனை வெறுப்பேற்றினாலும் அமைதியாக இருக்கப் பழகிக்கொண்டுவிட்டாளோ என்று நினைக்கும் நேரத்தில் சரியாக அவள் உடைவது இவனுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படி அவளைப் பொங்க வைக்க முடியாவிட்டால் தான் என்றைக்கோ சன்யாசம் போயிருக்கலாம் என நினைத்துக்கொண்டான். முன்பெல்லாம் எட்டு நொடிகளில் சீறுவாள். இப்போது அது எட்டு நிமிடம் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். பத்து வருடங்களில் இரண்டு குழந்தைகளில் இந்த முன்னேற்றம்கூட இல்லாவிட்டால் இவளை எப்படி ஒரு பெண்ணென்பது? மந்திரமூர்த்திக்குள் இன்னும் கொஞ்சம் வன்மம் வந்தது. ஒரு பெண்ணுக்கு ஏன் அத்தனை வீம்பு? அதுவும் ஒரு வாரமாக. அதுவும் கணவனுக்கு எதிராக. அதுவும் ஓர் ஆண் என்ற அடிப்படை நினைப்பு கூட இல்லாமல்.
“என்னட்டி வாய் நீளுது?” என்றவனுக்கு, “பேசாம படுங்க. வாயக் கிண்டாதீங்க. ஒங்களுக்கு வேற கோவம். வேற நெனப்பு. வேற வேற வார்த்தைல கொட்டாதீங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். மந்திரமூர்த்திக்கு வன்மம் இன்னும் கொஞ்சம் கூடியது. கூடவே கோபமும் சேர்ந்துகொண்டது. அப்படியானால் இவளுக்கு தன்னைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கிறது என்று நினைக்கும்போது இன்னும் கொஞ்சம் வெறி ஏறியது. இவள் அறியாத நான் இல்லையோ என்ற எண்ணம் பெரிய தோல்வியைக் கொண்டு வந்து அவன் தலையில் கொட்டியது. தலையை உலுக்கிக் கொண்டான். இன்னும் என்ன சொல்லலாம் என யோசித்தான்.
மகனும் மகளும் நன்றாக உறங்கிவிட்டார்கள் என்பது தெரிந்தது. மெல்லிய விளக்கொளியில் மங்களமும் உறங்கத் தொடங்கி இருந்தாள். எப்படி இவளால் இப்படி உறங்கமுடிகிறது? அப்படியானால் தன் நிலை இந்த அறையில் என்ன? ஆண் ஒரு பெண்ணின் கை பொம்மைதானா? தான் அவளது கை பொம்மை என்ற எண்ணம் வரவும் மூச்சின் வேகம் கூடியது போல இருந்தது. ஒருவேளை நடிக்கிறாளோ? உடலில் ஒரு வெப்பம் பரவியது.
சேர்ந்து கிடந்து இன்றோடு ஒரு வாரம் ஆயிற்று. என்ன சண்டை என்பது எத்தனை யோசித்துப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்ற வழக்கம்போன்ற ஒரு சண்டைதான். என்னவோ முறுக்கிக்கொண்டுவிட்டாள். இது அவளது திடீர்ப் பழக்கமாக இருந்தது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் அவனை ஒருவாரமாகக் கிட்டவே அண்டவிடவில்லை. ஒரு பெண்ணுக்கே அத்தனை வீம்பென்றால் என மந்திரமூர்த்தியும் விலகிப் போனான். ஆனால் அவளது எந்த ஒரு அசைவிலும் இப்படி ஒரு விலகல் இருப்பதை அவள் வெளிக்காட்டவே இல்லை. எல்லாம் எப்போதும் போல இருந்தது. அவனிடம் பேசுவதில் கூட எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உறவு மட்டும் இல்லை. பெண்களில் இவள்தான் தேர்ந்த நடிகையா அல்லது எல்லாப் பெண்களுமே இப்படித்தானா என யோசித்தான். மங்களத்தைப் பற்றியே ஒரு முடிவுக்கு வரமுடியாதபோது அத்தனை பெண்களைப் பற்றியும் யோசிப்பது தனக்குத் தேவையில்லாத செயல் என்ற முடிவுக்கு வந்தான்.
இந்த ஒரு வாரத்தில், முதல் இரண்டு நாள்கள் மந்திரமூர்த்திக்கு எப்போதும் போல் கழிந்தது. எப்படியும் மூன்றாவது நாள் இரவில் அவளாகவே வந்துவிடுவாள் என்பது அவனுக்கு நிச்சயம் தெரியும். அப்படித்தான் கடந்த காலம் சொல்லியது. கல்யாணம் ஆன புதிதில் ஐந்து நிமிடம் கூட அவளால் அவனைவிட்டுப் பிரிந்து இருக்கமுடியாது. இரவில் அவனை உரசிக் கொஞ்சாமல் அவளுக்கு உறக்கம் வராது என்று அவளே பலமுறை சொல்லி இருக்கிறாள். ஒருவருட இடைவெளியில் அடுத்தடுத்து குழந்தைகள். எல்லாரும் கிண்டல் செய்தார்கள். கல்யாணம் ஆன பிறகுதானே பெத்துக்கிட்டோம் என்று இவனது காதோடு சொல்வாள். இருவருக்கும் இடையில் படுத்துக்கொண்டு உறங்கும் குழந்தைகளை அப்படியே தூக்கி அந்தப்பக்கம் ஒன்றாகவும் இந்தப் பக்கம் ஒன்றாகவும் போட்டுவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு தூங்கினால்தான் அவளுக்குத் தூக்கம் வரும். ஆனால் இதெல்லாம் தான் கண்ட கனவோ என்ற எண்ணம் ஒரு வாரமாக மந்திரமூர்த்திக்கு வரத் தொடங்கி இருந்தது.
அத்தனை பெரிய சண்டையா என்று யோசித்துப் பார்த்தான் மந்திரமூர்த்தி. ஆனால் சண்டை என்ன என்பது முக்கியமல்ல என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு ஆம்பளைங்க போல அடிச்சமா என்ன என நினைத்துக்கொண்டான். இது ஒரு மிரட்டல் என்ற முடிவுக்கு வந்தான். எதை யாருக்கு அறிவிக்கிறாள்? மந்திரமூர்த்திக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை.
இப்படி ஒரு சனிக்கிழமை இரவு கழியவேண்டியதன் அவசியம் என்ன என்று யோசித்தான். கல்யாணத்துக்கு முன் பெண்களைப் பற்றியே யோசித்துக் கிடந்ததும், அலைக்கழிக்கும் உடலுடன் அலைபாய்ந்ததையும் நினைத்துக்கொண்டான். இன்று பக்கத்தில் மனைவி படுத்துக்கிடக்க ஒரு சனிக்கிழமை இப்படி ஏன் கழியவேண்டும் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. என்ன இருந்தாலும் அவள் தன் மனைவிதானே என்ற எண்ணம் வரவும் தானாக இறங்கிப் போனால்தான் என்ன எண்ணம் தோன்றியது. வேண்டுமென்றே அதற்காகத்தான் மல்லிகைப் பூ வைத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான். குரலை மெல்ல செருமிக்கொண்டு மங்களம் என்றழைத்தான். அவள் அணுங்கவே இல்லை. கொஞ்சம் சத்தமாக அழைத்தான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்தனை திமிரா என்ற எண்ணம் உடனே மேலெழுந்தது. அப்படியே ஒரு மிதி மிதித்தால் என்ன என்று யோசித்தான். ஏனோ தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் மங்களம் “கூப்பிட்டேளா” என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. “ஒங்களத்தான்… கூப்பிட்ட மாதிரி கேட்டதே” என்றாள். “தண்ணி வேணும்” என்றான் மந்திரமூர்த்தி. “அதுக்கேன் எழுப்புதீங்க. தலைமாட்டுல சொம்புல இருக்குல்லா… இந்த ஆம்பிளைங்களோட அலம்பல்” என்று சொல்லிவிட்டு, தலைமாட்டில் இருந்த நீர்ச்செம்பை அவன் பக்கம் தள்ளிவிட்டு, மீண்டும் உறங்கத் தொடங்கினாள். அவள் தள்ளியதில் செம்பிலிருந்த நீர் கொஞ்சம் வெளியே சிதறியது. நீரைக் குடிக்காமல் அப்படியே படுத்துக்கொண்டிருந்தான் மந்திரமூர்த்தி.
நாற்பது வயதில் நாய்க்குணம் என்று அடிக்கடி மங்களம் தன்னைச் சொல்வதைப் பற்றி யோசித்தான் மந்திரமூர்த்தி. உண்மையிலேயே தனக்கு நாய்க்குணம்தானா என்று எத்தனை யோசித்தும் ஒரு முடிவுக்கு அவனால் வரமுடியவில்லை. நாய்க்குணம் என்றால் நாய் போல் கோபமாக விழுவதில்லை என நினைத்துக்கொண்டான். இது இத்தனை எளிதான சொலவடை அல்ல என்று பலமுறை நினைத்திருக்கிறான். நாற்பது வயதில் உடம்பு நாய் போல் அலைவதுதான் காரணம் எனத் தோன்றியது. நாற்பது வயதில் மட்டும் நாய்க்குணம் என்று சொல்வதற்குப் பின்னர் இதுதான், இது மட்டும்தான் காரணமாக இருக்கமுடியும். தன் யோசனை சரிதானா என்ற குழப்பம் வந்தது. சின்ன வயதில் படித்த பாலகுமாரன் கதைகள் நினைவுக்கு வந்தன. கதைகளுக்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தோன்றியது. எல்லாம் ஒரு பொய். ஒரு வாரத்தில் இந்தப் பெண் தனக்குக் காட்டியதுதான் வாழ்க்கை. ஒரு கட்டத்தில் இவளை ஒன்றுமே செய்யமுடியாது என்பதை தன் உள்மனம் புரிந்துகொள்ளத் துவங்கியதை நினைத்து பெரிய ஏக்கமும் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது.
மீண்டும் அவளைப் பார்த்துத் திரும்பிப் படுத்துக்கொண்டான். ஓடி வந்து கட்டிக்கொள்ளாமல் கெஞ்சாமல் மன்னிப்புக் கேட்காமல் திமிருடன் அவள் படுத்திருப்பது மெல்லிய விளக்கொளியில் பூதாகரமாகத் தெரிந்தது. அதே மங்களம் ஒரு பூதாகரமான சிலையாக பெருவடிவெடுத்து தன்னை எப்படி மிஞ்சுகிறாள் என்ற ஆச்சரியம் மேலிட்டது. உறங்குகிறாளா நடிக்கிறாளா? என்ன சொன்னால் அவளை கோபம் கொள்ளச் செய்யலாம்?
நள்ளிரவைத் தாண்டி இருந்தது. வெளியில் மழைச் சத்தம் கேட்டது. சனிக்கிழமை இரவில் மழை பெய்வது ஒரு வரம் என்று எதோ ஒரு வேகத்தில் அவளிடம் அவன் சொல்லி இருந்தான். அவளும் அன்றைய அதீத நெருக்கத்தில் அதை ஒரு புதிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொண்டிருந்தாள். ஏன் அதையெல்லாம் சொன்னோம் என்ற எண்ணம் இப்போது ஓடியது. எதோ ஒன்று தன்னை வீழ்ச்சியை நோக்கிக் கொண்டு செல்வதை அறிந்தான். அப்படித் தோற்க முடியாது. அதுவும் மனைவியிடம். அதைவிட ஒரு பெண்ணிடம். ஆனால் அவள் நிம்மதியாக உறங்குவது தெளிவாகத் தெரிந்தது. உலக தெய்வங்களெல்லாம் பெண்களுக்கு ஏன் இப்படி ஆதரவாக நிற்கின்றன என்ற கோபம் வந்தது.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். புரண்டு படுத்த மங்களம், “என்ன அர்த்தராத்திரிப் பிசாசு பிடிச்சிட்டா… இங்கன இருக்க பாத்ரூமுக்குப் போக லைட்டா? கொடுமையே” என்று முனங்கிக்கொண்டே தன் சேலையால் கண்ணை மூடிப் படுத்துக்கொண்டாள். முன்பெல்லாம் அவன், “எங்கன இருக்குன்னு தெரியவேண்டாமாட்டி” என்பான். இன்று அவன் பதில் எதுவும் பேசவில்லை. கண்ணை மூடிப் படுத்துக்கிடந்தவள் விடும் மூச்சில் அவளது உடல் அசைவது வெளியில் பெய்யும் மழைக்கு ஏற்ற லயத்தில் இருப்பது போலத் தோன்றியது. அப்படியே ஒரு நிமிடம் நின்றிருந்தான். ஒரு நொடி தூரத்துக்கிடையே இருவேறு உலகங்கள் இருப்பது தெரிந்தது. மிக எளிதாகக் கடக்க முடியும் ஒரு நொடி. கண்ணை மூடிப் படுத்துக் கிடந்தவள் கண் திறந்து, கூசிய கண்களை இடுக்கிக்கொண்டு, அவனிடம், “ஹால் ஜன்னலை மூடிட்டுப் படுங்க. மழைச்சாரல் அடிச்சா காத்தால வீடு முழுக்க நனைஞ்சி கெடக்கும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சேலைத் தலைப்பால் இந்தமுறை தலையையே மூடிக்கொண்டாள்.
அவன் விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் வந்து படுத்துக்கொண்டான். மணியைப் பார்த்தான். இந்த இரவு முழுக்க இப்படியே உறக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற யோசனை எழுந்தது. லேசாகக் கண் எரிவது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் தலை வலியும் வந்துவிடும் போலத் தோன்றியது. நாளை ஞாயிற்றுக் கிழமைதான் என்பது கொஞ்சம் ஆசுவாசம் தந்தது. இவள் எத்தனை நாள் இப்படித் தள்ளியே இருப்பாள் என்ற கேள்வி எழுந்தபோது இவளை என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இவள் இல்லாவிட்டால் ஆயிரம் பேர் என்று பலதடவை சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டான். உள்மனம் அதெல்லாம் பொய்தானே என்றது. தனக்கு அந்த சாமர்த்தியம் எல்லாம் கிடையாது என்பது தனக்குத் தெரியுமோ இல்லையோ மங்களத்துக்குத் தெரியும் என்று அவனுக்குத் தெரியும். இப்படி இவளிடம் எல்லாவற்றையும் கொட்டியதுதான் பிரச்சினை என்ற முடிவுக்கு வந்தான். ஒரு குறைந்த அளவு ரகசியம் தனக்கென இருந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்தான். சின்ன வயதில் தன் கண்ணுக்கு அழகாகப் பட்ட பெண்களெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தார்கள். ஆனால் இனி அதைப் பற்றி யோசித்து என்ன ஆக என்ற கேள்வி எழுந்தபோது பதில் தெரியாமல் விழித்தான். ‘என்ன திருத்திருன்னு முழிக்கீங்க’ என்று மங்களம் சொல்வது போலவே கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவள் ஒருக்கழித்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். இதை அவள் சொல்லி இருக்கமுடியாது. ஒருவேளை சொல்லி இருந்தாலும் இந்த நேரத்தில் ‘தப்பிச்சிக்கிட்டவ தப்பிச்சிக்கிட்டா மாட்டிக்கிட்டவ மாட்டிக்கிட்டா’ என்று சொன்னால்தான் அது மங்களம்.
தனக்கும் அவளுக்கும் ஏற்பட்டுக் கிடக்கும் மிகப் பெரிய அகழியின் நீளம் ஒரு அடி கூட இருக்காது. கையை இடையில் வைத்து மெல்ல அழுத்தினால் போதும். அதுகூட வேண்டாம், மெல்ல செருமிவிட்டு அவளை ஒட்டிப் படுத்துக்கொண்டாலும்கூட போதும். ஆனால் இந்த ஒரு வாரத்தில் இது எதுவுமே செல்லுபடியாகவில்லை. அப்படி என்ன சண்டை என்று மீண்டும் யோசிக்க நினைத்தான். ஆனால் என்ன சண்டை என்பது ஒரு பொருட்டல்ல என்பதும் என்னதான் சண்டையாக இருந்தாலும் இப்படி ஒரு பெண் ஆணை போட்டுப் பார்ப்பது பெரிய அவமானம் என்றும் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் தன் மேல் தவறே இல்லை என்ற முடிவுக்கு வந்தான். ஒரு வாரம் கழித்து தானாகக் கீழிறங்கி போனால் தன் பிடி ஒட்டுமொத்தமாக நழுவிவிடும் என நினைத்துக்கொண்டான்.
இப்படி இதற்கு முன்பு நடந்ததுண்டா என யோசித்துப் பார்த்ததில், ஒன்றிரண்டு நாள்களில் அவளே வந்து இரவில் கட்டிக்கொண்டு ஸாரி சொன்ன நிகழ்வுகள்தான் நினைவுக்கு வந்தன. இதென்ன புதுசாக? ஒரு வாரத்தில் அவன் தந்த சமிக்ஞைகளை எல்லாம் அவள் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் குழந்தை கூட நம்பாது என்பது மந்திரமூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் பகிரங்கமாக தான் சென்று அவள் காலில் விழவேண்டும் என எதிர்பார்க்கிறாள் என்பதை நினைக்கும்போது இவளெல்லாம் ஒரு பெண்ணா என்ற எண்ணம் மேலோங்கியது.
எதை எதையோ யோசித்துக்கொண்டே அப்படியே உறங்கிப் போனான்.
மறுநாள் காலை இவன் எழுந்தபோது அவள் குளித்துமுடித்து தலையில் துண்டுடன் எல்லா அறைகளுக்கும் ஊதிபத்தி காட்டிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை இழுத்துப் போட்டுக்கொண்டால் என்ன எனத் தோன்றியது. குழந்தைகள் எங்கே என்ற எண்ணம் முதலில் வந்தது. அடுத்து, தான் அத்தனை சீப்பாகப் போய்விடக்கூடாது என்ற நினைப்பு வந்தது.
“காலங்காத்தால என்ன எழவு ஊதுபத்தி” என்றான். அவள் மிகச் சுருக்கமாக, “எல்லாம் நல்ல எழவுக்குத்தான்” என்று சொல்லிவிட்டு அடுத்த அறைக்குள் நகர்ந்தாள். எழுந்து டாய்லெட்டுக்குச் சென்றவன் அங்கிருந்தே கத்தினான். “யார் இருக்கா உள்ள? சரியா நா வரும்போதுதான் எழவ கூட்டணுமா” என்றான். மங்களம் பதில் சொல்லவே இல்லை. உள்ளே இருந்து பையன், “இப்பதாம்ப்பா போனேன். அஞ்சு நிமிஷம்” என்று பதில் சொன்னான். எரிச்சலில் வாய்க்கு வந்ததைக் கத்திக்கொண்டே பல் தேய்க்க வந்தான். “நேத்தே பேஸ்ட் வாங்கிட்டு வரச் சொன்னேன், நீங்கதான் வாங்கியாரல” என்ற மங்களம், “இருக்கத பிதுக்கி நாங்க தேச்சிட்டோம்.”
“எல்லா எழவையும் என் தலைலயே கொட்டுங்க” என்று சொல்லிவிட்டு வெறும் கையால் பல் துலக்கிவிட்டு நியூஸ் பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டு பால்கனியில் போய் உட்கார்ந்தான்.
எந்தச் செய்தியும் மனதில் நிலைக்கவில்லை. மங்களம் இன்னும் எத்தனை நாள் நம்மை இப்படி போட்டு வாங்குவாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் செய்தியை மேய்ந்துகொண்டிருந்தன. எதோ ஒரு செய்தி, மனைவி தலையில் கணவன் கல்லைப் போட்டுக் கொன்றதாகச் சொல்லியது. அசிரத்தையாகப் பக்கங்களைப் புரட்டிவிட்டு மூடி வைத்தான். ”காப்பி கொடுக்க இவ்வளவு நேரமாட்டி” என்று கத்தினான். “பால் காய வெச்சிருக்கேன். உங்களுக்காக நான் குதிக்கலாம். பால் குதிக்குமா என்ன? நா வேணா சொல்லிப் பாக்கேன், எங்க… பால் குதி பால் குதி” என்று மங்களம் உள்ளிருந்தே சொன்னாள். “திமிரெடுத்து அலையாதட்டி. பொம்பளயா அடக்கமா இரி. இல்லன்னா போய்க்கிட்டே இரு. ஆளில்லன்னு நினைக்காதட்டி, ஆயிரம் பேர் வருவா” என்று இவன் பதிலுக்குக் கத்தினான்.
அவள் அங்கிருந்து மூச்சு வாங்கிக்கொண்டு வெளியில் வந்து “ஒங்களுக்கு வேற என்னமோ பிரச்சினை. என்ன போட்டு உயிர எடுக்கீங்க… தெரியாதா என்ன” என்று சொன்னாள். பதிலுக்கு அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “என்னட்டி வேற பிரச்சினை? என்னத்த கண்டுட்டுவ நீ?” என்றான். “எல்லாம் அவாஅவாளுக்குத் தெரியும்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், மகனையும் மகளையும் அழைத்து “ஒங்கப்பா கிட்ட போகாதீங்க. என்னமோ ஆயிட்டு அந்தாளுக்கு” என்றாள். வேகமாக எழுந்து வந்தவன் “ஆமாட்டி கோட்டி பிடிச்சிட்டு. போதுமா? போதுமாட்டி?” என்றவன், டவுசர் மாட்டிக்கொண்டிருந்த மகனையும் மகளையும் நோக்கி, “ஒங்கப்பாவுக்கு நல்ல கோட்டி கேட்டியளா. எல்லாம் தெகஞ்ச ஒங்கம்மாக்காரியே சொல்லிட்டா” என்றவன், தன் கையிலிருந்த நியூஸ் பேப்பரை தூர விட்டெறிந்தான். அது காலி நீர்ச்செம்பின் பட்டு பெரிய சத்தம் எழுந்தது. மகள் அந்த நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டே அம்மாவிடம், “அம்மா, காலேல என்ன டிஃபன்?” எனக் கேட்டாள். அவன் அவளையே முறைத்துப் பார்த்தான். மங்களம் ஒன்றும் நடக்காதவள் போல, “பூரி கேட்டில்லட்டி. அப்பாவுக்கும் பிடிக்கும்லா” என்று சொல்லிவிட்டு அடுப்பாங்கறைக்குள் போனாள்.
மகன் அவனைத் தள்ளிக்கொண்டு வெளியில் விளையாட ஓடினான். மகள் அம்மா பின்னாடியே சமையலறைக்குள் சென்றுவிட்டாள். இவன் தனியாக அந்த அறையில் நின்றிருந்தான். தான் ஏன் அப்படி நிற்கிறோம் என்பதே அவனுக்கு விளங்கவில்லை. வேகமாகத் தன் அறைக்குள் சென்றவன் எண்ணெய்ப் பிசுக்குடன் இருந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியில் போனான். எங்கே போகிறேன் என அவன் சொல்லவில்லை. அவன் போவது மங்களத்துக்குத் தெரிந்தது. அவன் தலை மறைந்ததும் தன் மொபைல் போனை எடுத்து தன் அக்காவை அழைத்தாள்.
“ஏட்டி, ரொம்ப கோவமா இருக்காங்க கேட்டுக்கொ. பிசுக்குச் சட்டைய போட்டுக்கிட்டு வெளிய போயிருக்காங்க. ஒங்க வீட்டுக் கோவமில்ல எங்க வீட்டுக்கோவமில்ல. மொகத்துல ஒரு கை பொரி போட்டா அப்படியே பொறிஞ்சிக்கும்ட்டி. இருக்கட்டும். நேத்தே அலைபாய்ஞ்சித்தான் கெடந்தாங்க. மல்லிகப்பூவேற, மள வேற… கொஞ்சம் பாவமாத்தான் இருந்ததுட்டி. இருக்கட்டும், அப்பத்தான் ஒறைக்கும்னு விட்டுட்டேன். இன்னைக்குத் தாண்டாதுட்டி அவருக்கு” என்றாள்.

One Reply to “அருவம்”

  1. பர்துபாய் வியாழன் இரவு சிறுகதையை விட இந்த மந்திர மூர்த்தி சனி இரவுக் கதையில் விவரணையில் நல்ல முன்னேற்றம் . நெல்லையின் தெருக்களை, வளவுகளை , முடுக்கு வீடுகளை கண் முன்னே கொண்டு வந்து இருக்கிறார் ஹரன் பிரசன்னா .
    திருமணம் ஆகி குழந்தை(கள்) பெற்ற ஆல் பர்பஸ் ஆண்கள், 32 வயது கடந்த உடனேயே சுய இன்பம் என்னும் மருந்தை (ஒரு நாளைக்கு 3 முறை / 1 முறையேனும் தவறாது) உட்கொள்ளத் துவங்க வேண்டும் , என்பதை ஹரன் பிரசன்ன மறந்து இருக்கலாம்.
    டைனோ பாயும் Dyno Buoyமறந்தது ஏனோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.