விடிவு

guilt-pain3

கோதண்டராமன் சார் போன் கால் வந்தபோது ரவி தூங்கியிருக்கவில்லை.
“எங்க சார் இருக்கீங்க…” கடைசி வார்த்தை அவருக்கு முழுசாக கேட்டிருக்காது…
“வந்துட்டோம்.. ஸ்டேஷன்லதான் இருக்கோம்.. FIR இப்பதான் படிச்சோம்..”
“முருகன் சார் எப்படி இருக்காரு…”
‘எப்படி இருக்கார்னா.. இருக்காரு…’
குரலில் இருந்தது அனுதாபமா விரக்தியா கோபமா என தெரியவில்லை. கோதண்டராமன் சார் எப்பவும் விதிமுறைகளை பேணுவதில் அதிகவனம் கொள்பவர். பதினைந்து  நிமிடங்கள் தாமதமானாலும் ரிப்போர்ட்டட் டைமை சிகப்பு மையில்தான் எழுதுவார். முருகன் சாருக்கு பக்கத்து வீட்டுக்காரர். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர். அலுவலகத்தில் கோதண்டராமன் சார் அதிகம் சிரித்து பேசி பழகுவது முருகன் சாருடன்தான்.
ஆனால் சாரி் சார் அப்படியல்லை. அவருக்கு வேலை நடந்தால் போதும். ரிப்போர்ட்டில் கையெழுத்து போட்டுவிடுவார். சிலசமயங்களில் பாராட்டு வாசகங்களையும் எழுதித் தருவார். வாடிக்கையாளர் திருப்தி படிவங்கள் கேட்டு மேலாளர்களின் கிடுக்கிப்படி இறுகும் சமயங்களில் சாரி சாரிடம் சரணடைந்தால் அவர் ஐந்து நட்சத்திரங்களும் மேலதிகமாக அலுவலகத்தில் இருந்து உரிய நேரத்தில் பாகங்கள் வந்தால் பணி இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் எழுதித் தருவார்.
அவர் இப்போது இருந்தால் சற்று ஆறுலாக இருக்கும். சாரி சாருக்கு போன் செய்யலாமா என ரவி யோசித்தான். அவர் பெங்களூர் வரை சென்றிருக்கிறார். அவரின் வீட்டு எண்தான் ரவிக்குத் தெரியும். எப்படியும் அவருக்கு செய்தி தெரிந்திருக்கும். இந்நேரம் கிளம்பியுமிருக்கக்கூடும். ராஜாவின் அக்காவும் பெங்களூர்தான். அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பியிருப்பார். அல்லது அவருக்கு விஷயம் தெரியாமலே இருக்கலாம். ராஜாவின் உறவினர் யாராவது அவனுடைய அக்காவை அழைத்து வர சென்றிருக்கலாம்.
யாராக இருந்தாலும் இந்நேரத்தில் போய் என்ன காரணம் சொல்லி கூட்டிவருவார்கள் என ரவி யோசித்தான். ராஜாவினுடைய அம்மாவும் அங்கேதான் இருக்கிறார்கள்.  அவன் அம்மா ஊருக்கு போகாமல் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதோ என ரவி நினைத்துக்கொண்டான்.
போன் அடித்தது போல் இருந்தது. எடுத்துப் பார்த்தான். அது வெறும் எழுத்துவடிவ செய்தியாக இருந்தது. நாளை காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவும்.. நானும் ஹெச். ஆர் லீடும் நேராக அங்கே வந்துவிடுவோம் என ரவியின் மேலாளர் மோகன் சார்  செய்தியனுப்பியிருந்தார். அவன் ஓகே சார் என பதில் மெசேஜ் அடித்து பின் அதை அனுப்பாமல் டெலீட் செய்தான். அவருக்கு மெசேஜ் டெலிவர்ட் என வந்திருக்கும் இனி அதை நாமும் உறுதிப்படுத்த வேண்டுமா என யோசித்தான். நேற்றிரவு போனில் மோகன் சாருக்கு தகவல் சொன்னவுடன் அவர் முதலில்  ‘ ஷிட்.. ‘ என்றார்.
‘நான் வரவரைக்குமாவது இருந்துட்டு கிளம்பியிருக்கலாமில்லடா’ என்றார். ஆனால் நேரத்தோடு கிளம்பவேண்டும் என்பதில் ராஜா பிடிவாதமாக இருந்தான்.
இந்த இரவை மற்றும் அடுத்த இரு நாட்களை எப்படியாவது கடத்திவிடவேண்டும். நாளை ஸ்டேசனில் சொல்வதை பொறுத்துதான் ஊருக்கு கிளம்பமுடியும் என்றார்கள்.  ரவி, தன்னுடைய வீட்டிற்கு போன் செய்யலாமா என யோசித்தான். இப்போது செய்வதைவிட காலையில் செய்வதுதான் உசிதமாக இருக்கும். அம்மா உடனே இங்கிருக்கும் மாமாவை அழைத்து சொல்லிவிடுவாள். அதன்பின் மாமா இந்த இரவில் கிளம்பி ஏதாவது பிசிஓ காரனை எழுப்பி என்னை அழைத்து விஷயம் கேட்கலாம். எங்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லல என திட்டுவாராயிருக்கும். ரவி அம்மாவிற்கு காலையில் போன் செய்துகொள்ளலாம் என நினைத்துக்கொண்டான். மீண்டும் கோதண்டராமன் சாருக்கு போன் செய்து எங்கிருக்கிறார் என கேட்கலாம். அவர்தான் ஸ்டேசனில் இருப்பதாக சொன்னார். திருப்பி ஏன் அதையே கேட்கிறாய் என அவர் கோபமடையலாம். அவர்கள் நாலுபேராவது கிளம்பி வந்திருப்பார்கள்.  இரவு பன்னிரெண்டு மணி வரை தான்  இருந்த  அதே பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களில் யாரிடமும் இப்போது போய் பேசுவது சரியாக இருக்காது என ரவி நினைத்தான்.
இப்போது பேச சாரி சாரை விட்டால் வேறு ஆட்கள் இல்லை. அவர் வீட்டிற்கு போன் செய்து மொபைல் நம்பரை கேட்கலாம். ஆனால் நள்ளிரவில் போன் செய்தால் மாமி பயந்துவிடுவாள். மாமிக்கு  மாரடைப்பே வரக்கூடும். அலறிவிடுவாள். சாரி சார் வீட்டிற்கு முதல்முறை சென்று காபி குடிக்கும் போது ராஜாவும் கூட இருந்தான். தனக்கு அவனை சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் அவன் பலமுறை எங்காத்துலயே சாப்ட்டுட்டு தூங்கிடுவான் என்றும் மாமி சொன்னார். ஏற்கனவே ஒருமுறை அவனோடு வண்டியில் ஏரிக்கரையில் சென்றதை பார்த்துவிட்டு சாயங்காலங்களில் வண்டியில் சுற்ற வேண்டாம் என சாரி சார் மூலமாக சொல்லியனுப்பியிருந்தாள்.
அந்த நாள் நன்றாக ஞாபகம் இருந்தது. அன்று ஏரிக்கரைக்கு பிளெமிங்கோ பறவையை காண அவன் ரவியை அழைத்துச்சென்றிருந்தான். நீண்டநேரமாய் நாரைகளும் கொக்குகளுமாய் வந்தனவேயன்றி பிளமிங்கோ வரவேயில்லை. அவர்கள் நீண்ட நேரம் நிற்பதை கண்ட ஒரு  ரிக்‌ஷாகாரர்  அருகில் வந்து பதினாறு வயதே ஆன அழகான பெண்ணோடு சம்போகம் பண்ண விருப்பமா என கேட்டார். மிகவும் அதிர்ச்சியும் படபடப்புமாய் அவருக்கு மறுப்பு சொல்லிவிட்டு வண்டியை கிளப்பி ஓட்டிக்கொண்டு வரும் வழியில் கியரை ஏற்றுவதற்கு பதிலாக குறைத்ததில் வண்டி சற்று அதிகமாக உறுமியது.  உடனே பிரேக் அடித்து நிறுத்தியபோது அது அதிக சப்தத்தை ஏற்படுத்தியது. அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் இவர்களை பார்த்தார்கள். அவர்களில் பலருக்கு ராஜாவை தெரியும். யாராவது சொல்லியிருப்பார்கள் என ரவி நினைத்துக்கொண்டான்.
ராஜாவின் பிரச்சனையே இதுவாகத்தான் இருந்ததோ என ரவி நினைத்தான். யாருக்கும் தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஊழியர் குடியிருப்பில் அனைவரும் அனைவருக்கும் தெரிந்தவரே. அனைத்து தெருக்களிலும் ஏதாவது ஒரு வீட்டில் அவனை குழந்தைப் பருவத்தில் இடுப்பில் தூக்கி வைத்துக்கொஞ்சிய ஒருவர் இருப்பார். அவனோடு பள்ளி சென்ற, விளையாடிய ஒரு தோழனோ தோழியோ இருப்பர்.
ஆனால் ரவிக்கு அந்த பிரச்சனையில்லை. அவன் ஒப்பந்த  வேலைக்காக மட்டும் அங்கே வந்தவன். ஒப்பந்த காலம் முடிந்ததும் சென்றுவிடலாம். அவன் டிபார்ட்மெண்ட் ஆட்களை தவிர வேறு யாரையும் அதிகம் தெரியாது. அவன் வீடு இருந்த ப்ளாக்கில் அவனைத்தவிர பதினோரு வீடுகள் இருந்தன.  அவர்களுக்கும் ரவியை தெரியாது. ரவியின் அலுவலகத்திற்கு இந்த நிறுவனத்துடன்  இரண்டாண்டு ஒப்பந்தம்.  ஒப்பந்த பணியாளர்களுக்கென ஒரு வீடும் உண்டு. விதிமுறைப்படி ராஜாவும் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள முடியும். ஆனால் ராஜா தன்வீட்டிலிருந்தே வந்து சென்றுகொண்டிருந்தான். அதனால்  ரவி தனியனாக இருந்தான். தன் தனிமை அளித்த சுதந்திரத்தால்தான் ராஜா நெருக்கமானானா என ரவி யோசித்துக்கொண்டிருந்தான். சுற்றிலும் தெரிந்த மனிதர்களே இருந்த தன் கிராமத்தில் தான் கோயிலுக்கோ படத்துக்கோ  போனால் கூட அப்பா செளக்கியமா என்று விசாரித்துக்கொண்டே அர்ச்சனை சீட்டோ சினிமா டிக்கெட்டோ கொடுப்பார்கள். தெருமுனை சைக்கிள் கடையில் சிகரெட் குடித்தபடி சினிமா கதை பேசும் அண்ணன்களோடு நின்றிருந்தாலே ரவியின் அப்பாவிற்கு தகவல் போய்விடும். அதே பிரச்சனை ராஜாவிற்கும் இருந்திருக்கலாம்.  அதனாலேயே அவன் சுதந்திரமாக சுற்ற முடியாமலும் இருக்கலாம். அப்பா வேலைபார்த்த அலுவலகத்திலேயே  வேலை என்றாலும் ராஜாவிற்கு அது ஒரு தங்கக்கூண்டுதான்.
அந்த குடியிருப்பும் நிறுவனமும் அருகருகிலேயே  அமைந்தவை. அங்கிருந்து மாநகரம் வர இரண்டு மணிநேரமாகும். வழியில் பனைமரங்களும் பொட்டல்வெளிகளும் மட்டுமே. அந்த  குடியிருப்பில் சுற்றிலும் அறிந்த மனிதர்களுக்கிடையேவே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு தனது வீடு ஒரு விடுதலையாக இருந்திருக்கும் என ரவி நினைத்துக்கொண்டான்.  அதானாலேயே அலுவலகம் முடிந்ததும் தன் வீட்டிற்கு  வந்து ஓரிருமணிநேரங்கள் கதை பேசிவிட்டோ அல்லது கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டோ செல்வதை வழக்கமாக்கிகொண்டிருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இருவருக்கும் பரஸ்பர நட்பு இருந்ததால்தான் அவன் வீடு வரை ரவியால் செல்ல முடிந்தது. பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டில்தான்  ரவி சாப்பிடுவான். ராஜாவின் அம்மா மோர்க்குழம்பும் அவியலும் செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தாள். ராஜாவிற்கு சிறுவயது முதலே உணவில் கூட்டு பொறியல் இரண்டும் வேண்டும். அதுதவிர சாம்பாரிலும் காய் வேண்டும். ஏதேனும் ஒன்று குறைந்தாலும் அம்மாவுடன் சண்டைக்கு கிளம்பிவிடுவான். உனக்கெல்லாம் என்னைமாதிரி கேண்டீன் சாப்பாடுதான் கதின்னு எங்கயாவது கண்காணாத இடத்துக்கு அனுப்பினாத்தாண்டா புத்திவரும் என்று சொன்னால், எங்க போனாலும் எம்மவனுக்கு சமைச்சு போட நானும் போயிருவேன் என்று உள்ளிருந்து   அம்மாவின் குரல் வரும். அப்படியாச்சும் அனுப்பிவச்சு நான் நிம்மதியா வெளிய சாப்ட்டுக்குவேன்ப்பா என்று முருகன் சார் சொல்வார்.
ராஜாவிற்கு அமைந்தது போல தனக்கும் உள்ளூரிலேயே வேலை கிடைத்திருந்தால் தானும் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கலாம் என ரவிக்கு அன்று  தோன்றியது.  அது எல்லோருக்கும்  வாய்ப்பதில்லை. ஒரு கோயிலும் நாலு குளமும் இருக்கிற தன் ஊரில் இதுபோன்ற பெரிய அலுவலகங்கள் வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அங்கேயே வேலைகிடைத்தாலும் இந்த ஊரில் இருப்பது போல சுதந்திரமாக இருக்கமுடியாது என நினைத்துக்கொண்டான். இங்கு  நினைத்தால் இரவுகாட்சி சினிமாவிற்கு போகலாம். அல்லது புது திரைப்படங்களை வீட்டில் பார்க்கலாம். ஆனால் ஊரில் தன்வீட்டில் பத்துமணிக்கு மேல் லைட் ஏரிந்து ரவிக்கு ஞாபகம் இல்லை.
அன்று உணவருந்திய பின் ராஜாவின் அக்காள் மகன் அருணுக்கு  வெளிக்கட்டில் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான் ரவி.
அருணுக்கு பேச்சு வந்திருந்தது.  ரவியையும் மாமா என்று அழைக்க ஆரம்பித்திருந்தான். ரவி சிரித்துக்கொண்டே, டேய் நான் உன் மாமாவுக்கே மாமா தெரியுமா, என்றான்.  ராஜா அவனை அறை உள்ளிருந்து பார்த்து சைகை செய்து கைகூப்பினான். அந்தப்பக்கம் அவன் அப்பாவும் அக்காவும் வேறு ஏதோ பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அக்காவிற்கு பாக்யா பற்றி தெரியும் என்பது அவள் அப்பாவியாக முகத்தை வைத்திருந்ததிலேயே தெரிந்தது.
பாக்யாவிற்கு இந்த தகவல் போயிருக்குமா என ரவி அந்த கணத்தில் யோசித்தான். ராஜாவும் அவளும் காதலித்தார்களா அல்லது  காதலிக்கலாமா என்ற யோசனையில் இருந்தார்களா என ரவிக்கு எப்போதும் ஐயம் இருந்தது. பாக்யாவை முதலில் பார்த்தபோது அவளுக்கு மாறுகண்ணோ என நினைத்தான். இல்லை என உடனே உறுதி செய்துகொண்டான். அவள் கைக்குட்டையால் அடிக்கடி உதட்டை, கன்னங்களை  ஒற்றிக்கொண்டே இருந்தாள். எங்க போனாலும் யாராவது இருக்காங்கடா ஒரு அரைமணிநேரம் பேசிட்டு வந்துடறோம், என வீட்டு சாவியை ராஜா மதியம்  வாங்கி சென்றிருந்தான். மூணறை மணிக்கு டீ குடிக்கலாம் என  வெளியே வந்து  அலுவலகசாலைகளும்  குடியிருப்புசாலைகளும் சேரும் இடத்தில் இருந்த வேப்பமரத்தை கடந்து டீக்கடையை அடைவதற்கு முன்னால் , உபயோகப்படுத்தப்படாமல் இருந்த சாலைக்கு அருகே இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்குகையில் எதிரிலிருந்து  வந்த பாதை வழியாக அவர்கள் கடந்து சென்றார்கள். அன்றுமாலையும் ராஜா வீட்டிற்கு வந்திருந்தான். ஹக் பண்ணா ஒண்ணும் சொல்லலடா ஆனா  மெளத் கிஸ் பண்ணா வாயை மடக்கி அனுமார் மாதிரி வச்சுகிறாடா…
 
காலை ஐந்துமணிக்கு ரவி மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு ரூமைப்பூட்டிக் கொண்டு அவசரமாக பேருந்து நிலையம் சென்று அன்றைய செய்தித்தாளை வாங்கி பார்த்தான். மாவட்ட செய்திகளில் இரு பத்திகளில் செய்தி வந்திருந்தது. இரு சக்கரவாகனத்தில் வந்த இளைஞர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானதையும் லாரி ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்த்ததையும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருவதையும் குறிப்பிட்டிருந்தனர். கடையிலேயே டீ இருந்தது. டீ குடித்துவிட்டு  அங்கிருந்த பொது தொலைபேசியிலிருந்து தன் வீட்டிற்கு அழைத்து விஷயத்தை சொல்லும்போது தொண்டை அடைத்துக்கொண்டது. பேப்பர் கடைக்காரர்  போனில் பேசியதைக் கேட்டே விஷயத்தை அறிந்திருந்தார். ட்ரங்க் அன்ட் டிரைவா என கேட்டார். ரவி இல்லையென தலையசைத்தான். எப்படியும் அறுத்துபாத்து ரிப்போர்ட்ல வந்துரும் என அருகிலிருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ரவிக்கு இறுதியாக பெட்ரோல் பங்க்கில் ராஜாவை முழுவதுமாக பார்த்தது ஞாபகம் வந்தது. அங்கிருந்து குடியிருப்பு ஐம்பது மைல் தூரம் இருக்கும்.  அலுவலகத்தின் மாத சந்திப்பிற்கு அவர்களின்  அலுவலக உதவியாளரும் வந்ததால் இரு வண்டிகளில் புறப்பட நேர்ந்தது.
“ஐ ஆல்வேஸ் டூ நாட் என்கரேஜ் பீப்புள் டிராவலிங் லாங் டிஸ்டன்ஸ் இன் டூவீலர்ஸ்..”
‘ஒரு சின்ன கல்லு போதும்ப்பா..போனது போனதுதான்… அம்மான்னா வருமா அய்யான்னா வருமா’
அவர்கள் வண்டியில் வந்ததை அறிந்து பொது மேலாளர் சொன்னார்.. இரவு மோகன் சார் மீண்டும் பேசும்போதும் பொதுமேலாளர் இதை மறுபடியும் சொல்லி அப்பவே சொன்னேனே என நினைவு கூர்ந்திருந்தார்.
‘ ட்ரிங்ஸ் பண்ணீங்களாடா..’
‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’
‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’
மீண்டும்  ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…
ரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா
ஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்
அந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..
சும்மா..பைக்ல போயிட்டு வரலாம்னு..
‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’
‘……’
‘அப்புறம் என்னாச்சு’
‘ ஒருத்தர் பின்னாடி ஒருத்தராத்தான் வந்தோம். எதிர்ல வந்த லாரி இடிச்சு, கீழ விழுந்ததுமே உயிர் போயிருச்சு.. ஹார்ட் பீட்டும் இல்ல.. பின்மண்டேலேந்து ரத்தம் ஒழுகி ரோடுல வழிஞ்சுது. ஏரியா புல்லா ட்ராபிக் ஆகி, ஒரு ஆட்டோ டிரைவர் எல்லாம் முடிஞ்சிருச்சின்னாரு…அப்புறம் ஆம்புலென்சுக்கும் ஆபீசுக்கும் அவன் வீட்டுக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கும் போன் பண்ணினேன்.’
‘போலீஸ் என்ன கேட்டாங்க…’
‘ ஐ விட்னஸ்னு எஃப்ஐஆரில எழுதிகிட்டாங்க.. அங்கேர்ந்து வந்து பாக்கறதுக்குள்ள உடம்ப ஜிஹெச்சுக்கு கொண்டு போயிருந்தாங்க..’
‘சரி… ஆஸ்பத்திரி வேல முடிஞ்சதும் ஊருக்கு போயிடுறா..’
‘ இல்ல மாமா… நான் அங்க போய் காரியம் முடிஞ்சதும் போறேனே…’
‘பாத்துக்க…நான் வேற ஊரில் இல்ல.. உடனே வரமுடியாது…  கூட யாரு வறாங்க?’
‘ஆபீஸ்ஸ்டாஃப் வறாங்க…’
‘ அவங்க வேறடா…சும்மா வந்து நிப்பாங்க.. ஊர்க்காரங்க ஆத்திரப்பட்டு ஒன்ன போட்டு சாத்துனா கூட நிப்பாங்கிறியா.. அவங்ககிட்ட கொடுத்துட்டு ஊருக்கு கிளம்பு..’
‘அவங்க வீட்ல சாப்டிருக்கேன் மாமா.. எப்படி போகாம இருக்கிறது..’
‘ அதெல்லாம் சாவகாசமா ஒருநாள் போய் விசாரிச்சுகலாம்டா..’
பின் நிதானமான குரலில் மென்மையாக கேட்டார், ‘சரி…அப்புறம்… குடிச்சீங்களாடா…’
 
காலை பதினோரு மணிக்கு  போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இருந்தார்…’ஜிஹெச்சில் போஸ்ட்மார்ட்டம் ஆனதும் பாடிய வாங்கிக்க அவங்க அப்பாவும் அவரோட யூனியன் ஆளுங்களும் போயிருக்காங்கபா…’
முதல்நாள் இன்ஸ்பெக்டர் அவனிடம் ஊதச்சொல்லி கேட்டபோது கூட ரவி அதை ஒரு சம்பிரதாயமாக எடுத்துக்கொண்டு ஒத்துழைத்தான். ஆனால் இன்று ஜியெம், அந்த கடைக்காரர் மற்றும் அவனது மாமா அதே கேள்வியை மீண்டும் கேட்டதில் குழம்பியிருந்தான்.
பிரேத பரிசோதனை பிரிவில் அவர்கள் பணிபுரியும் நிறுவன ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. அலுவலக சகாக்கள் முருகன் சாரை வற்புறுத்தி டீ குடிக்க அழைத்து சென்றிருந்தனர். அவர்கள் தவிர ஏழெட்டு பேர் தங்கள் வாகனங்களில் வந்து நின்றிருந்தனர். கோதண்டராமன் சார் ராஜாவின் உடலை வெளியே எடுத்துச்செல்லும் ஒப்பு சான்றிதழையும் பிரேத பரிசோதனை சான்றிதழையும்  கையில் வைத்திருந்தார். ரவியைப்பார்த்ததும் நகர்ந்து ஆம்புலன்ஸ் அருகே சென்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் உதட்டை பிதுக்கினாரா தலையை அசைத்தாரா என ரவி யோசித்தான்
முருகன் சார் வந்து ஆம்புலன்சிலேயே ஏறிக்கொண்டார். ஒருவர் அவரை இறுக்கி அணைத்தபடி அழுதுகொண்டிருந்தார். ஆனால் முருகன் சார் ராஜாவையே வெறித்து பார்த்தபடி அமர்ந்தார். அவருடன் வந்த இன்னொருவர்  மோகன் சாரையும் ரவியின் ஹெச் ஆரையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
‘பஸ் இருக்கு ட்ரெயின் இருக்கு ஏன் இந்த பசங்க பைக்ல போனாங்க..சச் எ பிக் லாஸ் டூ ஹிம்.. ஹெல்மேட் இல்லாம வண்டி ஓட்டிருக்காங்க சார்..அட்லீஸ்ட் உங்க ஆபீஸ்ல சில கண்ட்ரோல போடணும்’
ஹெச் ஆர் லீட், இளமையை கடந்திருந்தாள். மோகன் சாரும் அவளும் சிறிது விவாதித்தார்கள். பிறகு மோகன் சார் மட்டும் அவனருகில் வந்தார்…
‘யூ திங்க் ஆஃப் இட், நீ இப்ப ஊருக்கு போயிடு, இன்னும் ஒரு வருசம்தானே இருக்கு…வேற யாரையாச்சும் வச்சு பாத்துக்கிறோம்.. அவங்க ஏதாச்சும் சொன்னாங்கன்னா ரொம்ப கஷ்டமாயிடும்…’
‘ போய் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம் சார்…’
‘ பாத்துக்கடா… இது கம்பெனி கெளரவமும் சம்பந்தப்பட்ட விஷயம்… ஏதாவது பிரச்சனையாகி யெம்ப்ளாயீ ஆட்டிட்யூடுன்னு நோட் பண்ணாங்கன்னா பிரச்சனை.. அதான் சொன்னேன்…’
ரவி ஆம்புலன்சை பார்த்துக்கொண்டிருந்தான். புறப்பட தயாராக இருந்தது. அதன் பின்கதவு ஒரு பக்கம் சாத்தியிருந்தது. மறு பாதியில் வெள்ளை உடையில் போர்த்தப்பட்டு ராஜா கிடத்தப்பட்டிருந்தான். அவன் தலைமாட்டில் முருகன் சார் அமர்ந்திருந்தார். கதவு சாத்தப்பட்டது.
ஊருக்குள் ஆம்புலன்சும் அதை தொடர்ந்து ரவியின் அலுவலக காரும் சென்றது. வீட்டுக்குள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து காரிலும் பைக்கிலுமாக பின்தொடர்ந்தனர். ராஜாவின் வீட்டு முன் பந்தல் போடப்பட்டிருந்தது. அவன் வீட்டிற்குள்ளிருந்து பெண்கள் வெளியே வந்தனர். அவன் அம்மாவின் தோள்களை அவன் அக்கா பற்றியிருந்தாள். வேகவேகமாக ஓடி வந்துகொண்டிருந்தனர். ஆம்புலன்சில் ஏறியதும் வீறிடல் கேட்டது..
‘நா ராசா…!!!!’
ரவியின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. கூட்டத்தில் இருந்த சிலர் ரவியை கண்டனர். சில கணங்களில் அனைவரின் நோக்கும் தன்மீது இருப்பதை ரவி உணர்ந்தான். சில குரல்கள் கேட்டன…
‘இவந்தான்’
‘குடிச்சுட்டு ஓட்டினாங்காளாமா?’
‘இட்டுனுபோய்  கொல்றதுகினே வந்திருக்கான் போல..’
காலையிலிருந்து அனைவரும் சொன்னது இதைத்தான் என ரவி அனுபவபூர்வமாக உணர்ந்தான். அத்தனைபேர் சொல்லியும்,  இந்தளவு அசட்டையாக கூடவே வந்திருக்க கூடாதோ என நினைத்தான்.  ராஜாவின் மரணத்திற்கு எவ்வகையிலாவது தான் காரணமா என யோசித்தான். அவர்கள் பேசுவது உண்மையாக இருக்குமோ என தோன்றியது. தான் இல்லாவிட்டால் இவன் மரணித்திருக்க மாட்டான். சொந்த ஊரை விட்டு வந்து இங்கு தான் அனுபவித்த சுதந்திரம், அது கொடுத்த துணை ஆகியவற்றால்தான் ராஜா சீண்டப்பட்டிருப்பான் என நினைத்தான். தான் இல்லாமல் தனியாக அத்தனை தூரம் பைக்கில் போயிருப்பானா?
ரவிக்கு பய உணர்ச்சி அடிவயிற்றிலிருந்து கிளம்பி மேலேறியது.  அப்படியே திரும்ப சென்று பஸ்பிடித்து ஊருக்கு போய்விடலாம், அங்கிருந்து வேறு எங்காவது வேலைக்கு போய்விடலாம். இங்கே இருக்கும் துணிமணிகளையும் கம்ப்யூட்டரையும் யாரையாவது எடுத்து வர சொல்லலாம் என யோசித்தான்அப்போது சாரிசாரைக்கண்டான். அவர் அருகில் நின்றால் கூட ஆசுவாசமாக இருக்கும் அவனுக்கு. சாரிசார் தளர்வாக நடந்து சென்று ராஜா வீட்டு படிக்கட்டில் அமர்ந்தார்.  அவரும் இவனை பார்த்திருந்தார்.  ரவியைப்பார்த்து ஒருமுறை  தலையை இடமும் வலமும் ஆட்டினார்.
ராஜாவை இறக்கி வாசலில் ஒரு பெஞ்சின் மீது கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் ஆண்களும் பெண்களும் அழுதுகொண்டிருந்தார்கள். பாக்யா அருணை கையில் பிடித்திருந்தாள். அவன் புரியாமல் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். ரவி மோகன் சார் பின்னால் நின்றிருந்தான். ஒவ்வொருவராக ராஜாவை சுற்றிவந்து விலகி சென்றார்கள். இன்னும் யாராவது வரணும்னா இப்பவே வந்துடுங்கோ  என புரோகிதர் கேட்டுக்கொண்டிருந்தார். ரவி ஒரு காலடி எடுத்து முன்னால் வைத்து உடனே  பின்வாங்கினான். அப்போது அருண் அவனைப்பார்த்து மாமா என கைகாட்டினான். ராஜாவின் அம்மா அந்தகணத்தில் திரும்பி  ரவியை நோக்கினாள். கையை நீட்டியபடியே அவன்  அருகில் வந்தாள். ரவி தன்னுந்துதலில் முன்னே சென்று அவள் கையை பிடித்துக்கொண்டான்.
‘”நீ இல்லாட்டி அனாத பொணமா ரோட்ல கெடந்திருப்பான்.. எம்புள்ளைய கொண்டு வந்து சேத்துட்டியேப்பா….”
அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் கைக்குள் தன் முகத்தை புதைத்துக்கொண்டு  பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான்.
***

3 Replies to “விடிவு”

  1. பெருங்குரலெடுத்து அழத்துவங்கிய ரவியோடு என் கண்களும் குளமாயிற்று.
    அருமை, காளிபிரசாத். தொடக்கத்தில், கதை மாந்தர்கள் உறவுகள் சற்று குழப்பினாலும், கதையோட்டத்தில் வாசகனால் புரிந்துகொள்ள முடியும்.
    கதை மாந்தர்களின (குறிப்பாக ரவியின்) மன உணர்வுகள் சிறப்பாக, சுருக்கமாக, வெளிப்படுத்தியது கதைப்போக்கு. நிறைய எழுதுங்கள் காளிபிரசாத். வாழ்த்துகள்.

Leave a Reply to sureshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.