காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?

test-cricket1
 
டெஸ்ட் கிரிக்கெட் படுத்துவிட்டதா?  இனி அவ்வளவுதானா? இப்படி சில கேள்விகள், சந்தேகங்கள் மீண்டும் கிளம்பியிருக்கின்றன. மீண்டும் என்றால்? சொல்கிறேன். எழுபதுகளில் குறைந்தபட்ச ஓவர் கிரிக்கெட் (Limited overs cricket) என அழைக்கப்பட்ட ஒரு-நாள் கிரிக்கெட் துவங்கி இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலுமாக ஆடப்பட்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது தீவிரம் கொள்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் க்ளாசிக் வடிவமான ஐந்து நாள் போட்டிகளில், அதன் நுட்பங்களில், சாகசங்களில்  காலங்காலமாக ஊறியிருந்த ரசிகர்கள், – purists எனப்படும் பழமைவாதிகளான நிபுணர்கள், விமரிசகர்கள் கூட்டம் இது பற்றி அறிய நேர்ந்ததும் முகத்தைச் சுளித்துக்கொண்டது. `என்ன! கிரிக்கெட்  மேட்ச் ஒரே நாளிலே முடிந்துவிடுமா! ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களாவது வருமா, அணிக்கு 60-ஓவர் என்று விளையாடுவதெல்லாம் ஒரு கிரிக்கெட்டா என்றெல்லாம் கூவினர். கிண்டலடித்தனர். (முதலில் 60-ஓவர் மேட்ச்சாக ஆரம்பிக்கப்பட்டு,  பிறகுதான் 50-ஓவர் போட்டியாக ஒரு-நாள் கிரிக்கெட் உருமாற்றமானது). 1975-ல் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்தில் ஐசிசி நிகழ்த்திக் காட்டியது. Prudential Insurance போன்ற ஸ்பான்சர்கள் வந்தார்கள். கூட்டமும் வந்தது.  கிண்டல், கேலிகளை புறந்தள்ளி கம்பீர நடைபோட்டது ஒரு-நாள் வகை கிரிக்கெட்(One-day Internationals). 1979, 1983 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்துமுடிந்தபோது ரசிகர்களிடையே அதன் புகழ் தீயெனப் பரவி விட்டிருந்தது. அப்போதுதான் முதலில் எழுப்பினார்கள் இந்த சந்தேகத்தை; கிட்டத்தட்ட முடிவுகூட செய்துவிட்டிருந்தார்கள்: இனி டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல காணாமற்போய்விடும்.. அம்போ!
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. காணாமல் போய்விட்டதா டெஸ்ட் கிரிக்கெட்? டி-20 போன்ற கிரிக்கெட்டின் அசத்தலான மூன்றாவது வடிவம் வந்து அதற்கான உலக்கோப்பைகள் நடந்து புகழ்பெற்றுவிட்டபோதும், டெஸ்ட் தொடர்கள் இன்னமும் நடத்தப்படுகின்றன. ஆனால்,பல நாடுகளில், முன்பு போல அவ்வளவு கூட்டம்  டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென வருவதில்லை. வருடத்திற்கான கிரிக்கெட் காலண்டரில் அவ்வளவு எண்ணிக்கையில் டெஸ்ட்டுகள் முன்புபோல் நடத்தப்படுவதில்லை. எந்த நாட்டில் நடத்தப்படுகிறதோ அந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்ப சரியான காலஒதுக்கீட்டில் (right time-slot) டெஸ்ட் போட்டிகள் நிகழ்வதுமில்லை. இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளெல்லாம் டி-20 போட்டிகளுக்குத்தான் இப்போதெல்லாம். பெரும்பணம் பண்ணுகிறார்கள் ஸ்பான்சர்கள்.  காலத்தின் நிர்பந்தம். ஆனால், கிரிக்கெட் என்னும் மகத்தான விளையாட்டின், உண்மையான, நுட்பமான, அழகான முகம் டெஸ்ட் கிரிக்கெட்தான் என நினைப்பவர்கள் அந்த விளையாட்டை கலாபூர்வமாக ரசிப்பவர்கள் (connoisseurs of the game); கிரிக்கெட்டின் சாதாரண ரசிகர்களில் இப்படி நினைப்பவர்களும் உலகெங்கும் உண்டு. கிரிக்கெட்டை அவ்வாறே அவர்கள் தொடர்கிறார்கள். டெஸ்ட்  வீரர்களின் மகத்தான சாதனைகளும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டு, கிரிக்கெட் ரசிகர்களைக் குஷிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இதை யாரும் மறுக்கமுடியாது. டி-20-யின் வளர்ந்துவரும் புகழினால் டெஸ்ட் கிரிக்கெட் செத்துவிடும் என்று சொல்வது, நாவல்கள் பரவலாக வாசிக்கப்படுவதால், இலக்கியத்தில் கவிதை எனும் வடிவம் நசித்து நாசமாகிவிடும் என்று சொல்வதைப்போன்றது. இப்படித்தான் எண்பதுகளின் ஆரம்பத்தில், முதன்முறையாக நமது வீடுகளில் நுழைந்து சேதி சொல்லி, ஆடிப்பாடி, சினிமாவையும் போட்டுக் காண்பித்த டிவி- ஐப் பார்த்து ஆச்சரியப்பட்டு சொன்னார்கள் சில அசடுகள் : நாட்டில் சினிமா தியேட்டர்கள் இனி இழுத்து மூடப்பட்டுவிடும்! அப்படித்தான் நடந்ததா? அதுமாட்டுக்கு அது, இதுமாட்டுக்கு இது என்று ஓடிக்கொண்டிருக்கிறதா, இல்லையா?
சரி, வாதங்களைத் தாண்டி விஷயத்துக்கு வருவோம். இப்போது என்ன நடந்துவிட்டது? டெஸ்ட் கிரிக்கெட்டின் கதை முடியப்போகிறது, இதோ முடிந்துவிட்டது என்று கூப்பாடுபோடும் விமர்சகர்களில் நம்மவர்கள் சிலர் – பிரதானமாகக் குறிப்பிட்டு விசனப்படுவது சமீபத்தில் ஏனோதானோவென நடத்தப்பட்டு முடிந்த வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா டெஸ்ட் தொடர்பற்றி.  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டினால் சரியாகத் திட்டமிடப்படாது நடத்தப்பட்ட ஒரு தோல்வித் தொடர் இது. A clearly avoidable fiasco. மழைக்காலம் எனத் தெரிந்தும் 4-மேட்ச் டெஸ்ட் தொடருக்கு அந்த நாட்கள்தான் கிடைத்தது அவர்களுக்கு. தொடரின் பெரும்பாலான பகுதிகளை மழை தின்று ஏப்பமிட்டுவிட்டது. மைதானத்தில் கொஞ்சநஞ்சம் தெரிந்த கூட்டமும் சிதறிவிட்டது. போதாக்குறைக்கு தேங்கிய நீரை உறிஞ்சி எடுக்க தொழில்பூர்வமான கருவிகள் இல்லாத ஒரு மைதானம் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் (Port of Spain) என்று உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இந்த அபத்தக்காட்சிகளுக்கெல்லாம் யார் காரணம்? வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. இந்தத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்தது. டெஸ்ட் டீம் செலக்‌ஷன் சுத்த அபத்தம். முதல்தர விளையாட்டு அனுபவம்கூட(first class cricket) சரிவர இல்லாத துவக்க ஆட்டக்காரர்களை வெஸ்ட் இண்டீஸ் தேர்வு செய்தது. அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் நின்று ஆடவோ, ரன் சேர்க்கவோ முடியவில்லை. மிடில் ஆர்டரில் இருந்த ஓரளவு அனுபவ வீரர்களும் தடவினார்கள்.  அதேபோன்றதுதான் அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சாளர்களின் தேர்வும். அவர்கள் விளையாடிய விதம் சர்வதேச கிரிக்கெட்தரத்திற்கு இன்னும் அவர்கள் உயரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. சிலவருடங்களாகவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் இஷ்டப்படி காரியங்கள் செய்துவருகிறார்கள்:  சர்வதேசதரம் வாய்ந்த புகழ்வீரர்களான கிறிஸ் கேய்ல்(Chris Gayle), டுவைன் ப்ராவோ (Dwayne Bravo), ஆந்த்ரே ரஸ்ஸல், கரன் போலார்ட், டேரன் சேமி (Darren Samy), கெமார் ரோஷ் (Kemar Roche), சுனில் நரைன் போன்றவர்களை டெஸ்ட் அணியில் சேர்க்கவே மாட்டோம், அவர்களில் சிலரோடு சண்டைபோட்டுப் பொழுதைப் போக்குவோம் என அடம்பிடித்தார்கள் நிர்வாகிகள். இதற்குமுன் ஆஸ்திரேலிய அணியோடு டெஸ்ட் விளையாடியபோதும் கிட்டத்தட்ட  இதே கதைதான். ஆஸ்திரேலியாவின் ஹெரால்ட் சன் (The Herald Sun) பத்திரிக்கை, வெஸ்ட் இண்டீஸை `ஒர்ஸ்ட் இண்டீஸ்`(Worst Indies) என அழைத்து ரசிகர்களின் எரிச்சலை வெளிப்படுத்தியது! யார் தரமானவர்களோ, யாரின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்களோ அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் நுழையமுடியவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான சிலர் நாங்கள் டெஸ்ட் விளையாடமாட்டோம் என்று ஒதுங்கிவிட்டார்கள். ஊர்பேர் தெரியாக் கத்துக்குட்டிகளை வைத்து ஆடினால் ஸ்கோர் எப்படி வரும்? ஜெயிப்பது அல்லது குறைந்தபட்சம் டிரா செய்வதுதான் எப்படி? ஒரு சுவாரஸ்யமும் இல்லாத மேட்ச்சுகளுக்கு ரசிகர்கள் காசுகொடுத்து ஏன் வரவேண்டும்? டெஸ்ட் கிரிக்கிட்டின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது என்று ஓலமிட்டு என்ன பயன்? கரீபியன் பிரதேசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கிற லட்சணமா இது?
மேலே சொன்னது வெஸ்ட் இண்டீஸின் தரக்குறைவான டெஸ்ட் அணித் தேர்வு, மற்றும்  டெஸ்ட் கிரிக்கெட்டை தொழில்ரீதியாக நடத்தத் தெரியாமல் நிர்வாகமும், விளையாட்டுவீரர்களும் தங்களில் ஒருவரை ஒருவர் குறைகூறிப் பொழுதுபோக்கும் மோசமான, தவிர்க்கப்படவேண்டிய நிலைபற்றி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், திறமையாக, தொழில்ரீதியாக நடத்தப்படுகின்றன.  கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளைப்போலவே, இந்தப் பகுதிகளிலும், டி-20 கிரிக்கெட்டின் பாதிப்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்ப்பதற்கு முன்புபோல் ரசிகர்கள் ஒரேயடியாக முட்டி மோதுவதில்லை. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் காலாவதியாகிவிட்டதோ என்று பயப்படும்படியாக ஏதும் நடந்துவிடவுமில்லை.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கிடையேயான `ஆஷஸ் டெஸ்ட் தொடரை`ப் (Ashes Test Series) பார்க்க 5,60,000 ரசிகர்கள் வருகை தந்தனர்.  ஆஷஸ் தொடர் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிற்கிடையே நிகழும் யுத்தம் போல் ரசிகர்களால் இன்னமும் பார்க்கப்படுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆயுளுக்கு மிகவும் நல்லது! கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியா நியூசிலாந்திற்கிடையே அடிலெய்டில் (Adelaide, Australia) நடந்த முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை 1,23,736 பேர் மைதானத்திலிருந்து ரசித்தார்கள். இந்த வருட புத்தாண்டு தினத்தன்று தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்(Cape Town) மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச்சை 85,235 பேர் பார்த்து ரசித்தார்கள். இந்தியாவும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்துவதுபற்றித் திட்டமிட்டு வருகிறது. இவையெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய நம்பிக்கை தரும் செய்திகள். இந்திய துணைக்கண்ட நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷின் மைதானங்களிலும், பாகிஸ்தான் விளையாடும் அபுதாபி, ஷார்ஜா போன்ற மைதானங்களிலும்  டெஸ்ட் போட்டிகள் நன்றாக ஆடப்பட்டு, ரசிகர்களால் உற்சாகமாகப் பார்க்கப்பட்டு வருகின்றன.
டி-20 கிரிக்கெட் ஒரு அதிவேக விளையாட்டு. ஒன்றிரண்டு ஓவர்களில் ஒரு அணியின் தலைவிதியையே மாறிவிடும். மூன்று மணி நேரத்தில் நீயா-நானா என ஒரு முடிவைத் தந்துவிடும் ஒரு pure thriller. ரசிகர்களுக்கு அது மாலை நேரத்து பிக்னிக் போல அமைந்துவிடுகிறது. அலுவலகம் முடிந்து கிரிக்கெட் பார்த்துவிட்டு நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பி தூங்கிவிடலாம். லீவு போடவேண்டிய அவசியமில்லை. இப்படி ஒரு சொகுசான மாலைப்பொழுதை டெஸ்ட் கிரிக்கெட் தருவதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் சிறப்பான கலை அம்சம். Classic version, a pure art form of cricket. இந்த க்ளாசிக் வகைமையில் காணப்படும் நுட்பம், சாகசம், ஐந்து நாட்களில் அந்த விளையாட்டின் போக்குகள், உள்ளியல்புகள் (nuances) ஆகியவற்றை கிரிக்கெட்டின் வேறெந்த வகையிலும் காணமுடியாது. முதலாவது நாள் தொடங்கி கடைசி நாள் வரை, கேப்டனும் வீரர்களும் சிந்தித்து, வியூகம் அமைத்து(strategy) போராடி ரன் சேர்க்கும், விக்கெட்டுகளை சரிக்கும் திறமை, பொறுமை, விவேகம், நுணுக்கம் கலந்த சாத்தியக்கூறுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே காணக்கிடைக்கும். குறைவாக இருப்பினும் அதற்கென கலாரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள்; ஆர்வமாகப் பார்ப்பார்கள்; பேசுவார்கள். மேலும் வளர்வார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த செய்ய வேண்டியவை

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ICC), டெஸ்ட் கிரிக்கெட்டின் குறைந்து வரும் ரசிகர் கூட்டத்தை சரிக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க முனைவதாகத் தெரிகிறது. இப்போது இருக்கும் பத்து டெஸ்ட் விளையாடும் அணிகளை `வலுவானவை`, `வலுக்குறைவானவை` என இரு அடுக்களில் அமைத்து, ஒவ்வொரு அடுக்குக்குள்ளேயே அந்தந்த அணிகளை மோதவிடலாம் என ஒரு திட்டம் மேம்போக்காக விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஜிம்பாப்வே  ஆகிய நாடுகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. டெஸ்ட் மேட்ச்சுகளை நான்கு நாட்களில் முடித்துக்கொள்ளலாம் என்கிற யோசனைக்கும் இப்போதைக்கு இதே கதிதான்.
அக்டோபரில் வரவிருக்கும் ஐசிசி மீட்டிங்கில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உலக சேம்பியன்ஷிப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, ஐசிசி தரவரிசைப்படி, உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெஸ்ட் அணிகள் சேம்பியன்ஷிப்பிற்காக, ஒரு நடுநிலை மைதானத்தில் (neutral ground) மோதவேண்டும்; இந்த சேம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என ஒரு திட்டம் வலம் வந்துகொண்டிருக்கிறது.  இப்போது இருப்பதைப்போலவே இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் தொடர்பற்றிய தேதிகள், ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளே பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது, இரு தரப்பு டெஸ்ட் மற்றும் பிறவகைக் கிரிக்கெட் தொடர் விஷயத்தில் ஐசிசி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐசிசி உறுப்பினர்-நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்க, மேலும் புதிய யோசனைகளை சொல்லக்கூடும்.
ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடும், டெஸ்ட் கிரிக்கெட்டின்மீது ரசிகர்களின் ஈர்ப்பை நிலைநிறுத்த,  கூட்டத்தை அதன்பால் இழுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என நிபுணர் குழு அமைத்து விவாதிக்கவேண்டும். நிர்வாகிகள் என்கிற போர்வையில் அரசியல்வாதிகள் கிரிக்கெட் போர்டுகளுக்குள் புகுந்து குழப்புவதைத் தவிர்க்கவேண்டும். சர்வதேச அனுபவமுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அவர்களில் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்கனவே பங்காற்றிய அனுபவசாலிகள் என  இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டால்தான் காரியம் ஒழுங்காக நடக்கும். கீழ்க்கண்ட வகையில் திட்டமிட்டு செயல்படலாம்:

 1. ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் தேர்வுக்குழுவும் அந்தந்த நாட்டின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களைக்கொண்டு தரமான அணியினை டெஸ்ட் தொடருக்கெனத் தேர்வு செய்யவேண்டும். கடுமையான போட்டிக்கும், ரசிகர் ஆர்வத்திற்கும் இதுவே நிச்சயமாக வழிவகுக்கும்.
 2. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் துவக்கப்பட்டு பெரும் ஆதரவை ரசிகர்களிடையே பெற்ற `பகலிரவு டெஸ்ட் மேட்ச்சுகள்`  இந்தியா போன்ற கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடுகளில் நடத்தப்படவேண்டும்.
 3. வலுவான, வலுவற்ற டெஸ்ட் அணிகள் என்று இருவகையிலுமிருந்தும் ஒவ்வொரு காலண்டர் வருடத்திலும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு டெஸ்ட் மேட்ச்சுகள் ஒவ்வொரு நாட்டு அணியும் விளையாடும்படி, இருதரப்பு ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கவேண்டும்.
 4. எந்தெந்த கிரிக்கெட் மைதானங்களில் கிர்க்கெட்டிற்கான ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறதோ, அந்த கிரிக்கெட் செண்ட்டர்களுக்கு (உதாரணமாக இந்தியாவில் கல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, நாக்பூர் போன்றவை) அவசியம் மேட்ச்சுகள் தரப்படவேண்டும்.
 5. டெஸ்ட் போட்டிகள், விழாக்காலங்களில் வருமாறு அமைத்துக்கொள்ளல் உசிதமானது. மேட்ச் நடக்கும் நாட்களில் குறைந்தபட்சம் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வருமாறு அமைத்துக்கொள்வது, சரியாக நிரம்பாமல் திட்டுதிட்டாக இருக்கும் மைதானத்தை மேலும் ரசிகர்களால் நிரப்ப இந்த உத்தி உதவும்.
 6. ஐந்து நாட்களுக்கு போட்டி செல்லுமாகையால், விடுமுறை நாட்களில் ஒரு வகைக் கட்டணமும், மற்ற நாட்களில் குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படவேண்டும். ஏற்கனவே விடுப்பில் இருப்பவர்களை, அல்லது அந்த நாளில் விடுப்பு எடுக்க வாய்ப்பு உள்ள ரசிகர்களை டெஸ்ட் மைதானத்தை நோக்கி இது திருப்ப முயற்சிக்கும்.
 7. சிறுவர்கள், மாணவர்களுக்கென மொத்த டிக்கெட் விற்பனையில் ஒரு பங்கு ஒதுக்கிக்கொள்வது இளம் ரசிகர்களை ஈர்க்கும் உத்தியாக அமையும். பள்ளி மாணவர்கள், 15 வயதுக்குட்பட்டோருக்கான டிக்கெட்டுகள் சலுகை விலையில் விற்கப்படவேண்டும்.
 8. ஒரு நாட்டின் கிரிக்கெட் போர்டோடு  தொடர்பற்றி பேசி முடிவாகையில், டெஸ்ட், ஒரு-நாள் கிரிக்கெட், டி-20 என ஒரு பேக்கேஜாகத் (cricket’s three formats in a single package) தரமுடிந்தால், டி-20 கிரிக்கெட்டிற்காக ஓடிவரும் ஸ்பான்சர்களை டெஸ்ட் போட்டிகளுக்காகவும் சேர்த்து வளைக்கமுடியும்.
 9. டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு நாள் முழுதும் உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டு. ஆதலால் மைதானம் ஒரு பிக்னிக் ஸ்பாட்டாக மாறவேண்டும். Sportainment! மனோரஞ்சித விளையாட்டு அனுபவம். முக்கியமாக இளைஞர்கள், சிறுவர்களோடு குடும்பத்தினர் வந்து பொழுதுபோக்க, இலவச இண்டர்னெட்(Free Wi-fi), மற்றும் குறைந்த விலையில் சிற்றுண்டி வகைகள், பானங்கள் வழங்க வசதி செய்துதரப்படவேண்டும்.
 10. டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் மைதானத்தில் மட்டுமன்றி, ஆன் –லைனிலும் எளிதாகக் கிடைக்க வழிவகுக்கப்படவேண்டும்.
 11. இந்தியா போன்ற துணைக்கண்ட நாடுகளில், `பாஸ்` (Free pass) எனப்படும் ஓசி கிரிக்கெட் டிக்கெட்டுகளை  கணிசமாகத் தகுதியில்லாதோருக்கு வழங்கும் பைத்தியக்காரத்தனம் குறைக்கப்படவேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் சங்கம், உறுப்பினர்நாட்டு கிரிக்கெட் போர்டுகளோடு முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தி, உசிதமான மாற்றங்களைக் கொணர்ந்து டெஸ்ட் தொடர்களை நடத்தினால், வரும்காலத்தில் டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் மீண்டும் வளர்ந்துவரும் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணும் என்பதில் ஐயமேதுமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.