கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்

Cricket_Sports_Boy_Child_Play_Bat_Bowl_Stumps

கிரிக்கெட் பைத்தியம் எப்போதிலிருந்து பிடித்தது எனக்கு? ஒன்பதாவது, பத்தாவது படிக்கையில், பாலகிருஷ்ணன் என்றொரு மாணவன் இருந்தான். மதிய உணவு இடைவேளையின்போது எங்கிருந்தோ ரேடியோ காமெண்ட்ரி கேட்டுவந்து இந்தியாவின் டெஸ்ட் மேட்ச் ஸ்கோரை, ரகசியமாக முன்பெஞ்ச் நண்பர்களுக்கெனச் சொல்வான். அவன் என்ன அப்படிப் பெருமையாகச் சொல்கிறான் என ஒட்டுக்கேட்டதில்தான் பட்டோடி, கவாஸ்கர், சர்தேசாய், மன்கட், ஆபித் அலி (Abid Ali) போன்ற பெயர்கள் காதில் விழ ஆரம்பித்தன, அவர்கள் அடித்த ரன்களைப்பற்றி, நேரில் பார்த்ததுபோல் பிரமாதமாக அளப்பான். நாங்கள் த்ரில் கதையைக் கேட்பதுபோல் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். எல்லாம் வகுப்பு வாத்தியார் வரும்வரைதான்.
டிவி இன்னும் தலைகாட்டாத காலம். கிரிக்கெட் என்றால் ரேடியோ காமெண்ட்ரி, ரேடியோ நியூஸ், பத்திரிக்கை செய்திகள் இவை மூலம் தான். ஆல் இண்டியா ரேடியோவின் பிரமாதமான ஆங்கிலக் காமெண்ட்ரிகள் அங்குமிங்குமாகக் காதில் விழ ஆரம்பித்து, கிரிக்கெட் டெர்மினாலஜி புரிய ஆரம்பித்தது. அந்தக்காலத்திய மிகச் சிறந்த க்ரிக்கெட் காமெண்ட்டேட்டர்களான மெல்வெல் டி மெல்லோ (Melville de Mellow), சுரேஷ் சுரையா, ராஜன் பாலா ஆகியோர்களின் நேர்முக கிரிக்கெட் வர்ணனை, ஸ்டைலான ஆங்கில உச்சரிப்பு சிறுவயது மனதில் பெரும் உற்சாகத்தை கிளர்ந்தெழ வைத்தது. ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் கிரிக்கெட் கவரேஜ் தனி சுவாரஸ்யம். டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தில் அப்போது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்கிற பத்திரிக்கை வந்தது. ஸூப்பர் சைஸ் வாரப்பத்திரிக்கை. கிரிக்கெட் பத்திகளுக்காக லைப்ரரிகளுக்குப்போய் அதைத் தேடிப் படிப்பேன். கிரிக்கெட் சீசனில், ஸ்போர்ட்ஸ்வர்ல்ட் (Sportsworld), ஸ்போர்ட்ஸ்டார் ஆகிய வார இதழ்களை வாங்கிப் படிப்பது வழக்கம். இதுவரை பேரை மட்டுமே கேட்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான, பட்டோடி, வாடேகர், சோல்கர், விஸ்வநாத், கவாஸ்கர், துராணி, இஞ்ஜினீயர், சந்திரசேகர் ஆகியோரின் ஆக்‌ஷன் படங்களை பார்த்ததும் ஏதோ தேவலோகத்து மனிதர்களை தரிசித்த பரவசம் மனசில் பாய்ந்ததை மறக்கமுடியுமா? ‘பாடப் புஸ்தகத்தப் படிக்காம, கண்ட கண்ட புஸ்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கிறான் பாருங்கோ!` -அப்பாவிடம் அம்மாவின் கோழிச்சொல்லல் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவ்வப்போது பக்கவாத்தியமாய் அமைந்தது! பொதுவாக கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்ட்டன் என்றெல்லாம் ரசனை இருந்தும், கிரிக்கெட் ஒன்றே சிந்தனையை சிறுவயதிலிருந்தே ஆக்ரமித்தது. எந்த நேரத்திலும் திடீரெனக் கதை மாறும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் நிலையற்ற தன்மை, ஒரு மாயாஜாலமாய் மனதை வசீகரித்தது. மனமும், உடம்பும் தீவிரமாய் இயங்கும் அதன் நுட்பங்கள், லாவகங்கள் பிடிபட்டன; உள்ளே போய் சொகுசாய் உட்கார்ந்துகொண்டன. கிரிக்கெட்டின் மீது அளவிலா ஆர்வம் எழுந்து, நெஞ்சை நிரப்பியது. இன்றும் பிரகாசமாக, அமரதீபமாக எரிந்துகொண்டிருக்கிறது. மற்ற ரசிகர்கள் கதை தெரியாது. நான் இப்படித்தான்.
1971-ல் அஜித் வாடேகர் தலைமையில் சென்ற இந்திய கிரிக்கெட் அணி, அப்போதைய கிரிக்கெட்டின் அசகாய சூரர்களான சர் கேரி சோபர்ஸ் (Sir Gary Sobers) தலைமையிலான வெஸ்ட் இண்டீஸை டெஸ்ட் தொடரில் முதன்முறையாக வென்றது. கவாஸ்கர் முதன்முதலாக விளையாடிய தொடர். போர்ட் ஆஃப் ஸ்பெயின் (Port of Spain) டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டைச்சதமுமாக விளாசி, கவாஸ்கர் இந்தியாவின் கிரிக்கெட் ஆர்வத்தை வெறியாக்கிவிட்ட காலம்! வீட்டில் இருந்த 4-Band Bush ரேடியோவில், சிற்றலை வரிசையில் (short wave band) கிரிக்கெட் காமெண்ட்ரி வரும். பழைய ரேடியோ – வால்வ் டெக்னாலஜி. சத்தத்தைக் கொஞ்சம் கூட்டினால், ஸ்ஸ்..என்று சீறும்! அவ்வப்போது கொஞ்சம் வார்த்தைகள் காதில் விழும். ஸ்கோர் தெரிந்துகொள்ள ஆவலாகக் காதை ரேடியோவை ஒட்டி வைத்திருப்பேன். காமெண்ட்ரி கேட்கும் நேரம் இரவு 11.30-12.30 மணி அளவில். அப்பா அவ்வப்போது முழித்துக்கொண்டு `ரேடியோவுக்குள்ள தலைய விட்டுண்டு அப்படி என்னடா காமெண்ட்ரி வேண்டிக்கடக்கு அர்த்த ராத்திரியிலே!` என்று சீறுவார். அப்பாவின் கோபத்துக்கெல்லாம் பயந்தா கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துகொள்வது எப்படி? அதே வருடம் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாடிய இந்திய அணி, சுழல் பந்துவீச்சாளரான சந்திரசேகரின் தனிப்பட்ட சாகசத்தினால் சவால்விட்ட இங்கிலாந்தையும் சாய்த்தது. கிரிக்கெட்டில் மாபெரும் வெற்றிகள். இதனைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் `இந்திய கிரிக்கெட் வெற்றிகள் 1971` என்கிற தலைப்பில் தபால்தலை வெளியிட்டது. அந்தத் தபால்தலை ஒன்று என் சிறுவயது கலெக்ஷனில் வெகுநாள் இருந்தது.
சிறுபிராயத்தில் புதுக்கோட்டைக்கு அருகே செம்பாட்டூர் என்கிற கிராமத்தில் வளர்ந்தவன் நான். கிராமத்து சிறுவர்களுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுத்து ஒரு அணியையே உருவாக்கி தலைமைதாங்கி விளையாடியிருக்கிறேன். அவர்களுக்கு விளையாட்டு ஆர்வம் அதிகம். கிரிக்கெட் பற்றி அவர்கள் பஞ்சாயத்து ரேடியோவின் தமிழ்ச்செய்தியில் தான் கேட்க முடியும். காமெண்ட்ரி அபூர்வமாகக் கேட்க நேர்ந்தாலும் ஆங்கிலம் புரியாது. (தமிழ் நேர்முகவர்ணனை வராத காலம்). பத்திரிக்கை படிக்க வாய்ப்பில்லை. ஆதலால், மாலை நேரத்தில் கிராமத்தின் ஒருமூலையில், பூட்டிக்கிடந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் உட்கார்ந்துகொண்டு இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் வீரதீர சாகஸங்களைப் பொடியன்களிடம் விவரிப்பேன். அவர்கள் உற்சாகமாகிக் கன்னித்தீவு கதைபோலக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். மெல்ல, மெல்ல கவாஸ்கர், விஸ்வநாத், சந்திரசேகர், வெங்கட், பிரசன்னா, பேடி போன்ற கிரிக்கெட் புலிகளின் பெயர்கள் அவர்களுக்கும் பரிச்சயமாயின. 1974-75-ல் வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா தொடர் நம் நாட்டில் நடந்துகொண்டிருந்தது. பட்டோடி இந்தியா கேப்டன். க்ளைவ் லாய்ட் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன். கடுமையாக நடந்த தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. தொடர் பற்றி கேட்க ஆசைப்பட்ட பசங்களுக்கு நிறைய சொல்வேன்.
கிரிக்கெட் போதை அதிகமாக ஆக, கிராமத்துச் சிறுவர்கள் விளையாட ஆசை காட்டினர். பேட், ஸ்டம்ப்புகளுக்கு எங்கே போவது? கிராமத்துத் தச்சரிடம் கெஞ்சி நல்ல மரப்பலகையில் பேட்(bat) ஒன்று செய்து கொண்டோம். அதை எங்கள் சூரர்களில் சிலரால் தூக்கிப்பிடிப்பதே கஷ்டமாக இருந்தது என்பது விளையாட்டு ரகசியம். அதைப்பத்தி எல்லாம் அதிகம் பேசப்படாது! அடுத்த பக்கத்தில் இருக்கும் பேட்ஸ்மன் கையில் பிடிக்க, தென்னை மட்டையில் எங்கள் பசங்களே செதுக்கிய கிரிக்கெட் பேட்! எங்கள் பொடியன்களே மரக்கழிகளை ஸ்டம்ப்புகளாக செதுக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஏழைகளுக்கேற்ற எள்ளுருண்டை! இதற்கெல்லாம் எங்களுக்கு, அப்போதே கிரிக்கெட் இன்னொவேஷன் அவார்ட் கிடைத்திருக்கவேண்டும். திறமை, நேர்மை, ஒரிஜினாலிட்டி போன்றவற்றிற்கு நமது நாட்டில் அதிக மதிப்பில்லை என்பதை நாங்கள் அப்போதே அறிந்திருந்தோம். அதனால் மன உளைச்சலைத் தணிக்க, ஸ்போர்ட்ஸ் சைக்கியாட்ரிஸ்டுகளைப் பார்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டதில்லை!
முதலில் டென்னிஸ் பந்தில் விளையாடிப் பார்த்தோம். சுவாரஸ்யம் தட்டவில்லை. காசு சேர்த்து கார்க் பந்துகளை (Cork balls) வாங்கி வந்து வீசினோம். அணியில் எங்களது வீரர்களின் வயது வரம்பு தாறுமாறானது. எட்டு, ஒன்பது வயது பொடியன்கள். 15, 16 வயது தடியன்கள் எனக் கலக்கலான அணி! கிராமத்துப் பசங்களை ஒன்று சேர்த்துக் கிரிக்கெட் அணி அமைப்பது, பயிற்சி கொடுப்பது என்பது அவ்வளவு ஈசியா என்ன? முக்கி முக்கி 12 பேர் வரை சேர்த்து அதை 6, 6 –ஆகப் பிரித்து மோதிக்கொள்வோம். அதிலும் சில பையன்கள் பாவம்., வயல் வேலைக்குப் போய்விடுவார்கள். விளையாட நேரமில்லை. கிராமத்துக்கு வெளியே இருந்த தண்ணீர் வற்றிப்போன குளம் ஒன்று எங்களது ஈடன் கார்டன்ஸ் ஆனது. க்ளோவ்ஸ்(gloves), பேட்டிங் பேட்கள்(batting pads) எல்லாம் ஒன்றும் இல்லை. ஷூவாவது மண்ணாவது, கல்லும் முள்ளுமான பூமியில், காலில் போட்டுக்கொள்ள செருப்புக்கூட இல்லை பலருக்கு. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அல்பங்களுக்குத்தான் இவையெல்லாம் அவசியம். எங்களைப்போன்ற வீரதீரர்களுக்கு கிரிக்கெட் பற்றிய கனவுகள், ஆசைகளே முக்கியம். ஆடிவிடுவோம்!
எங்களது டீமில் அஷோக் என்றொரு 12 வயது பையன் இருந்தான். வேகப்பந்துவீச்சாளன். அந்தக்காலத்திய ஜெஃப் ஆர்னால்ட்(Geoff Arnold, English fast-medium bowler) மாதிரி ஹை-ஆர்ம் ஆக்‌ஷன். முதல் ஓவரிலேயே எதிரியின் மிட்டில் ஸ்டம்ப்பை கழட்டிவிடும் சூரன். கார்த்திக் என்றொரு 15 வயதுப் பையன். உயரமாக , ஆஜானுபாகுவாக இருப்பான். பேட்டிங்குக்கு வந்து நின்றால் ஷார்ட்லெக் ஃபீல்டர்கள் பின்வாங்கிவிடுவார்கள். கார்க் பந்தை தைரியமாக சிக்ஸருக்குத் தூக்குவான். சிலசமயங்களில் உற்சாகத்தில் ஓவராக பந்தை மேலே தூக்கி அடித்துவிடுவான். அண்ணாந்து பார்த்தால், உயரே எழுந்த பந்து மேகங்களிடம் ஏதோ பேசிவிட்டு, வேகமாகக் குண்டுபோல் கீழிறங்கும். அதை பிடிக்க எச்சிலை விழுங்கிக்கொண்டு கையை நீட்டுவான்கள் நம்ம சில்லுவண்டுகள்! கேட்ச் பிடிக்கப்போய் கையில் பட்டுக்கொண்டால், பந்துபட்டு முட்டி பேர்ந்தால், அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொண்டு, எங்கள் மீட்டிங் இடத்துக்கு வருவார்கள். மாலையின் மங்கலான வெளிச்சத்தில் உட்கார்ந்து கிரிக்கெட்பற்றிப் ரகசியமாகப் பேசுவோம். `இருட்டுல ஒக்காந்துகிட்டு அப்படி என்னடா கதை பேசுறீங்க!` என்று அவ்வப்போது கிராமத்துப் பெரிசுகளின் கமெண்ட் காதில் கேட்கும்.
குட்டி கிரிக்கெட் வீரர்களைக் குஷிப்படுத்த, அணியில் உள்ள ஓவ்வொரு வீரனுக்கும் ஒரு இந்திய அணி வீரரின் பெயரை வைத்தேன். விக்கெட்கீப்பிங் பண்ணும் ஒரு சிறுவனின் உண்மைப்பெயர் அஜாய் கோஷ்! (தமிழ்நாட்டு கிராமத்தில் இப்படி ஒரு பெயர்-அப்பா கம்யூனிஸ்ட் அபிமானி என்பதே காரணம்). அவனுக்கு நான் கிர்மானி என்று இந்திய விக்கெட்கீப்பரின் பெயரை வைக்கப்போக, அவன் அந்தப் பெயர் வேண்டாம் எனக் கத்த ஆரம்பித்தான். அந்தப் பெயர் ஒரு மனிதனின் பெயராகவே அவனுக்குத் தோன்றவில்லை! அவ்வப்போது ஐந்து, பத்து ஓவர் மேட்ச் என்றெல்லாம் ஆடவைத்து, அவ்வப்போது அவர்களைப் புகழ்ந்து, கிரிக்கெட்டில் அவர்களுக்கு ஆர்வம் குன்றாமல் பார்த்துக்கொண்டேன். இடையிடையே பசங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் வேறே. அதையும் ஒருவழியாகப் பேசி, தாஜா செய்து சமாளித்து இவர்களை ஒரு அணியாக வைத்திருந்தது என்பது ஒரு பகீரதப்பிரயத்தனம்.
இப்படி எங்கள் கதை போய்க்கொண்டிருக்கையில், பக்கத்திலிருக்கும் டவுனான புதுக்கோட்டையில் 9-ஆவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எங்கள் அணியின் ரத்தினம் என்ற மாணவன் அங்குள்ள பள்ளி வீரர்களுடன் பேசி எங்கள் அணியோடு கிரிக்கெட் மேட்ச் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தான். ஒரு மாலையில் எங்கள் அணியின் பசங்களை அழைத்துப்பேசினேன். முதலில் அவர்கள் டவுன் பசங்களோடு, நம்மால் விளையாட முடியுமா என மலைத்தார்கள். `தோற்றால் கவலை இல்லை. அவர்களோடு மோதிப் பார்த்துவிடவேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. நம்மால் முடியும்!` என்றெல்லாம் தினம் எடுத்துச்சொல்லி, தைரியம் கொடுத்து அவர்களை சம்மதிக்கவைத்தேன். அவர்களை ஒன்று சேர்த்து, பஸ் வரும் நேரத்தில், ஒழுங்காக பஸ் நிறுத்துமிடத்திற்கு வரச்செய்வதே ஒரு சாதனைதான். அந்த சமயத்தில் பார்த்து ஒருத்தன் வயலுக்குப் போயிருப்பான்! அல்லது விடிகாலையில் வேலைக்குப்போனவன் வந்திருக்கமாட்டான். இன்னொரு கவலை அவர்கள் பெற்றோர்கள் மறுக்காமல் இருக்கவேண்டுமே என்பது. பஸ் சார்ஜ் கொடுக்கமுடியாத ஏழைப் பையன்கள் வரத் தயங்கினார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, மற்றவர்கள் காசு எக்ஸ்ட்ராவாகப்போட்டு ஒருவழியாகக் கூட்டிக்கொண்டுபோனோம்.
கலர் கலராக சட்டை போட்டுக்கொண்டு, சின்னதும், பெரிதுமாக எங்கள் அணி மைதானத்துக்கு வருகையில், புதுக்கோட்டைப் பசங்கள் குழம்பிப்போனார்கள். இவர்களா கிரிக்கெட் விளையாடப்போகிறார்கள் என நினைத்து, தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்; சிரித்துக்கொண்டார்கள். எங்களில் நாலைந்து பேர் ஓரளவு நின்று விளையாடக்கூடிய பேட்ஸ்மன்கள். கார்த்திக் வரவில்லை. சுமாராக விளையாடும் என் தம்பிகள் ரவியும், ஸ்ரீனிவாசனும் அணியில் இருந்தார்கள்.. அவர்கள் அணி ஸ்ட்ராங் என்று பயமுறுத்தினான் ரத்தினம். பார்த்துவிடுவோம் ஒரு கை என்று ஸ்ட்ரேட்டஜி எல்லாம் வகுத்து, மைதானத்தில் இறங்கினோம். இரண்டு பக்கங்களிலும் பொடிப்பசங்கள் நாலைந்துபேர் இருந்தார்கள். அதனால் டென்னிஸ் பந்திலேதான் ஆட்டம்.
முதலில் புதுக்கோட்டை அணி பேட் செய்ய, ஃபாஸ்ட் பௌலர் அஷோக்கிடம் பந்தைக் கொடுத்தேன். `முதல் ஓவர் நான் தான் போடணுமா!` என்று பந்தை வாங்கக் கொஞ்சம் தயங்கினான். `நீதான் நம்ம டீமின் பெஸ்ட் பௌலர். பயப்படாமல் எப்போதும் போடுவதுபோல் போடு. மிட்டில் ஸ்டம்ப்பைத் தாக்கு. மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!` என்றேன். அஷோக் கொஞ்சம் வாட்டசாட்டமான பையன். லாங் ரன்–அப். ஓடி வந்து, ஹை ஆர்ம் ஆக்‌ஷனில் வேகமாகப் போட்டான். அவன் வந்த வேகம், பந்தை உயர்த்திய விதம் கண்டே எதிர் அணியின் துவக்க பேட்ஸ்மன் துவண்டிருக்கவேண்டும். பதற்றத்துடன் முன்னே வந்து அடிக்கப்போக, துல்லியமாக இறங்கிய முதல் பந்து பேட்டிற்கு டிமிக்கிக் கொடுத்து, மிடில் ஸ்டம்ப்பை அனாயசமாகத் தூக்கியது. முதல் பந்திலேயே செம்பாட்டூர், புதுக்கோட்டையைப் புரட்டிப்போட்டது! டென்ஷனில் புதுக்கோட்டை பேட்ஸ்மன்கள். அஷோக் என்னைப் பார்த்து சிரித்தான். நான் அவனைத் தட்டிக்கொடுத்தேன். `அப்படியே போடு!` என்றேன்.
அஷோக், ரத்தினம், மூர்த்தி, நான் எனப் பந்துவீச்சு கைமாறியது. ஆஃப் ஸ்பின் போட்டு ஒரு நல்ல பேட்ஸ்மனை என் முதல் ஓவரிலேயே தூக்கிவிட்டேன். ரத்தினம் நன்றாக ஸ்பின் போட்டான். 12 ஓவரில் புதுக்கோட்டை ஐந்து விக்கேட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்தது. எங்கள் அணி பேட் செய்கையில், நான் ரத்தினத்தோடு முதலில் பேட் செய்யப்போய், முதல் ஓவரிலேயே கலியில் (gully) கேட்ச் கொடுத்துக் காலியானேன்! கேப்டனின் லட்சணம்! புதுக்கோட்டையின் பந்துவீச்சு, ஃபீல்டிங் பிரமாதமாயிருந்தது. ரத்தினம், அசோக், மூர்த்தி போன்றவர்கள் அவ்வப்போது அடித்து, ஓடி ரன்னெடுத்தனர். எங்கள் அணியின் ஏழைப் பையனான கோபால் கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம் உள்ளவன். மிகவும் உற்சாகமாக இருந்தவன் அவன்தான். தைரியமாக ஆடினான். பிரமாதமாகக் கட்டைபோட்டு ஒரு பக்கத்தைப் பார்த்துக்கொண்டான். மற்றவர்கள் ஒவ்வொருவராக வெளியேற, 23 ரன்னில் நாங்கள் ஆல்-அவுட் ஆனோம். கோபால் 6 ரன் எடுத்துக் கடைசிவரை அவுட் ஆகாமல் நின்றான்!
எங்களோடு ஆடிய புதுக்கோட்டை மாணவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, வேகமாக பஸ் ஸ்டாப் வந்தோம். பஸ்ஸை விட்டுவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு பஸ் கிடையாது. பசியோடு காத்திருக்கவேண்டியதுதான். கிராமத்துக்குத் திரும்பினோம். தோற்றுவிட்டோமே என்கிற வருத்தம் இருந்தாலும் டவுன் அணி ஒன்றுடன் மோதிய அனுபவம், எங்கள் அணி வீரர்களுக்கு, சந்தோஷம் தந்தது. பஸ்ஸில் ஆட்டத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். அன்று மாலை நாங்கள் வழக்கம்போல் உட்காரும் மூலையில் உட்கார்ந்து எங்களது வெளியூர் சாதனை பற்றி பெருமையாகப் பேசினோம். இன்னும் ரன்னெடுத்திருக்கலாம், நன்றாக ஃபீல்டிங் செய்திருக்கவேண்டும், அந்த கேட்சை விட்டிருக்கக்கூடாது என்றெல்லாம் எங்கள் பசங்கள் பேசிக்கொண்டதில், பரவாயில்லை; நமது அரைடிக்கெட்டுகள் தோல்வியால் சோர்ந்துவிடவில்லை ; மாறாக, கிரிக்கெட்டில் உற்சாகம் அதிகமாயிருக்கிறது என மனதுக்குத் திருப்தியாக இருந்தது. இத்தகைய வீரசாகசங்களைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துகொள்ளாமல்தான், நமது நாட்டு விளையாட்டு அமைச்சகம் இருந்தது என்பதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது. எங்கள் டீமிலிருந்து ஒருபயலும்- இந்தியாவை விடுங்கள்- தமிழ்நாட்டுக்காகக்கூட செலக்ட் ஆகவில்லை. என்ன ஒரு சோகம்!
புதுக்கோட்டை மேட்ச்சிற்குப் பிறகு, எங்கள் கிராமத்து டீமுக்கு பெரிய போட்டி விளையாடும் வாய்ப்பு அமையவில்லை. எனக்கும் அரசாங்கம் போனால்போகிறதென்று வேலை கொடுத்துவிட்டதால், கையில் பையோடு, மனமெலாம் கிராமத்துக் கதைகளோடு ஊரை விட்டு வெளியேறினேன். ஒவ்வொரு முறையும் விடுப்பில் ஊர் திரும்பும்போதும் எங்கள் முன்னாள் அணியினர் ஊர்க்கதை சொன்னார்கள்; கிரிக்கெட் கதையையும் ஆர்வம் குறையாது கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். மனமெல்லாம் கிரிக்கெட்டாக வாழ்ந்த எழுபதுகளின் அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே… வருமா இனிமேலே!

3 Replies to “கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்”

  1. மிக மிக அருமை. இதை படித்த பின் நான் அந்த காலத்திற்கே சென்றுவிட்டேன்.
    மனதை பாதித்தது.
    நீங்கள் அரசாங்க வேலைக்கு சென்றவுடன் நாங்கள் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தோம். கீரனூர், காவேரி நகர், புதுக்கோட்டை என தொடர்ந்து விளையாடி ஒரு நல்ல team உருவாக்கியது.
    செம்பாட்டூர் வந்து கீரனூர், காவேரி நகர், புதுக்கோட்டை என மற்ற அணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
    TIME MACHINE இருந்தால் மீண்டும் விளையாடப் போகலாம்.
    நன்றிகள் பல.

  2. சிறு வயது நினைவுகள் எல்லாமே இனிமை தான். மிகவும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். அதனால் தான் உங்கள் பதிவுகளிலும் அதிகம் கிரிக்கெட் பற்றி எழுதுகிறீர்கள் போலிருக்கிறது.
    நான் கிரிக்கெட் ஆடியதில்லை. எங்கள் காலத்தில் பெண்கள் கிரிக்கெட் ஆடியதில்லை! ஆனால் பிற்காலத்தில் அதை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கக் கற்றுக்கொண்டேன். அதற்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. உங்கள் கட்டுரையைப் படித்தபின் அதையும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிரிக்கெட் மூலம் சொல்வனத்தில் இடம் பிடித்திருக்கிறீர்கள்.உங்களது மற்ற படைப்புகள் விரைவில் இங்கு உலா வர நல்வாழ்த்துகள்!

  3. திரு சீனி: உங்களது உற்சாகமூட்டும் பின்னூட்டம் மூலம் செம்பாட்டூர் அணி மேற்கொண்டும் பிற அணிகளோடு போட்டிகளில் கலந்துகொண்டு ஆடிய செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தகவலுக்கு நன்றி.
    திருமதி ரஞ்சனி நாராயணன்: சொல்வனம் மூலம் சந்திக்கிறோம். வருகைக்கு நன்றி. கிரிக்கெட் ரசனை தொடர்பான உங்கள் கதையை வாசிக்க விரும்புகிறேன்.
    -ஏகாந்தன்

Leave a Reply to cheeniCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.