மகரந்தம்


[stextbox id=”info” caption=”மறக்கப்பட்டவர்களின் மறக்க முடியாத படங்கள்”]

rogovin1

மில்டன் ரோகோவின் (Rokovin) மூக்குக் கண்ணாடியைப் பொருத்தும் தொழிலில் தன் வாழ்வைத் துவங்கினார். கொலம்பியா பல்கலையின் பட்டதாரியான இவர் துவங்கிய இந்தத் தொழில் படுத்து விட நாளாகவில்லை. பட்டதாரிகள் அதிகம் இல்லாத அந்த வருடங்களில், நியுயார்க் நகரிலேயே பட்டம் வாங்கிய இவர், ஏன் உலகப் பெரு நகராக அப்போதே ஆகி இருந்த நியுயார்க் நகரை விட்டு விட்டு- அங்கேதான் கொலம்பியா பல்கலை இருக்கிறது- தள்ளி இருந்த பஃபலோ என்ற சிறுநகருக்கு இந்தத் தொழிலைச் செய்யப் போனார் என்பதை நாம் யோசிக்கலாம்.

1929 இலிருந்து ‘39 வரை பத்தாண்டுகள் அமெரிக்கப் பொருளாதாரம் சிக்கி இருந்த ‘பெரும் சரிவு’ ஆண்டுகள். நியுயார்க் நகரில் கூட அதன் தாக்கம் கடுமையாகவே இருந்திருக்கிறது. போர்க்காலத்தில் இந்தியாவில் கூட பெருநகரை விட்டுச் சிறு கிராமங்களுக்கு மக்கள் திரும்பினார்கள் என்பது நமக்கு வரலாற்றின் சுவடிகளிலிருந்து தெரியும். அதன் இன்னொரு வடிவாக அமெரிக்க மக்கள் மாநகர்களை விட்டுச் சிறு நகரங்களுக்குப் பெயர்ந்ததை நாம் பார்க்கக் கூடும்.
இப்படிச் சில சுவடுகளை வைத்துத்தான் நாம் அனைவரும் ஒரே போன்ற மக்களே என்று நாம் அவ்வப்போது, அது சிறிதே நேரமே நீடிக்கிறது என்ற போதும், கனிவோடு நினைக்கிறோம். உடனே தன்னடையாளங்களும் மாற்று அடையாளங்களும் நினைவு வந்து பழைய குரோத/ பாச, விரோத/ சினேக, வெட்டுதல்/ ஒட்டுதல் பாவங்களின் கலவையாக ஆகி விடுகிறோம்.
அவர் இடது சாரியாக மாறியதும் இந்த வருடங்களில்தான். மூக்குக் கண்ணாடியைப் பொருத்துபவருக்குப் பார்வைத் தெளிவு என்பது வாழ்வில் முக்கியமான ஒரு நோக்கம். எது சரியான பார்வை என்பது என்ன வரலாற்றுக் கட்டத்தில் நாம் இருக்கிறோம், எது இந்தக் கட்டத்துப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று நாம் யோசித்து எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தது.
பெரும் பொருளாதார ஏற்ற தாழ்வு இருக்கும் காலங்களில் சில நேரம் இடதும், சில நேரம் வலதுமாக மாற வேண்டி இருக்கலாம். இவர் இடது சாரியைத் தேர்ந்தெடுத்தார். நகர வாசி, தொழில் மையமான பஃபலோ பெரும் சரிவில் மிகவுமே நலிந்த நகரம், எங்கும் சலிப்பும், நம்பிக்கையின்மையுமாக நிறைந்த நகராக இருந்திருக்கும்.
அப்போது தொடங்கி சரியத் தொடங்கிய பஃபலோ இன்று மிக நலிந்த ஒரு நகராக உள்ளது. [இது குறித்த ஒரு கட்டுரை இங்கே. இது இறுதிக் கட்டத்தில் வலது சாரிக் கருத்துகளை முன் வைத்தாலும், முக்காலே மூன்று வீசம் பகுதியில் இது எதார்த்த அணுகலைக் காட்டுவதால் இங்கு கொணர்கிறோம். அல்லது, இடது சாரிக் கருத்துகளை விதந்தோதும் ஒரு குறிப்பில் வலது சாரிக் கருத்தை முன்வைப்பது வக்கிரமாகத் தெரியலாம்.
கட்டுரைக்கான சுட்டி இது: http://www.nysun.com/opinion/can-buffalo-ever-come-back/64879/
நகர்கள் ஏன் வளர்கின்றன, தேய்கின்றன என்பதைத் தெளிவான பார்வையில் சொல்கிறது இக்கட்டுரை. ]
அப்படி நலியத் தொடங்கிய பஃபலோ நகரில் வியாபாரம்/ தொழிலைத் துவங்கிய ரோகோவின் அன்றைய தொழிலாளர் போராட்டங்களில் ஆர்வம் கொண்டு இயங்கினார். 1942 இல் வாங்கிய ஒரு காமெராவால் பத்தாண்டுகள் சாதாரணப் படங்கள் எடுத்திருக்கிறார். 1957 இல் அமெரிக்காவில் நடந்த இடது சாரிகளுக்கெதிரான அரசியல் வேட்டையாடலில் இவர் பாதிக்கப்பட்டார். தொழில் மேலும் படுத்தது. முழு நேர ஒளிப்படங்கள் எடுக்கும் கலைஞராகிறார்.
அன்று தொடங்கி மில்டன் தன் 90வயதுக்கு அப்புறமும் படங்கள் எடுத்து வந்திருக்கிறார். இவருடைய முக்கிய கவனம் ’உழைப்பாளி மக்கள்’ மீதுதான் இருந்தது. தன் கருது பொருளானவர்களை ரோகோவின் ‘மறக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தாராம். ரோகோவின் எடுத்த பல நூறு படங்கள் மிகக் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டு, தொழிலாளர்களை அவர்களின் முழு கண்ணியத்தோடும், தொழிலில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகவும், எந்தச் சூழலில் அவர்கள் உலக மக்களின் நலனுக்குத் தம் அளிப்பைக் கொடுத்தனரோ அந்தச் சூழலையும் உள்ளிழுப்பதாகவும் அமைந்த படங்கள் என்று இன்று ஒளிப்பட நிபுணர்கள் கருதுகிறார்கள். இவரது இந்த அசாதாரணமான முயற்சி மூன்று தொகுப்புகளாக ஸான் ஹோஸே நகரின் கலை அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 18 இலிருந்து துவங்கி 2017 மார்ச், 19 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி இருக்கும்.
பேரிடர்களின் நடுவே தம் மேன்மையை இழக்காது நின்ற பாட்டாளிகளின் வாழ்வை மறக்கவொண்ணாக் காட்சிகளாக ஆக்கி இருக்கும் மில்டன் ரோகோவின் தன் 101 ஆவது வயதில் 2011 ஆம் ஆண்டு இறந்தார்.
என்னவொரு அற்புதப் பணி இவரது? இவரது பெயரைத் தாங்கிய இன்னொரு மேதை சில நூறாண்டுகள் முன்பு, இங்கிலாந்தில் மானுடம் இழந்த சொர்க்கத்தைப் பற்றிய நெடும்பாடலைக் காவியமாக்கிக் கொடுத்திருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் இந்த மில்டன் மானுடரே சக மானுடரின் நல் வாழ்வை நாசமாக்கி மறுபடி இன்னொரு சொர்க்கத்தை அழித்த காட்சியைகளையும், இடிபாடுகள் நடுவேயும் இன்னும் மானுடத்தை நம்பிக்கையோடு தாங்கி நிற்கும் உழைப்பாளிகளையும் சித்திரிக்கிறார்.
அவர்களது வாழ்வை மேம்படுத்த இவரால் இதை விட வேறேதும் செய்ய முடியாமல் இருக்கலாம். அமைப்பு என்பது தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை அத்தனை தூரமெல்லாம் மதிப்பதில்லை. ஆனால் அமைப்புகளுடைய பேரழிவுப் போக்கையும் தாண்டி தனி மனிதப் படைப்பு சக்தி ’தன் கொடியை அடிவானத்துக்கு அப்பால் பறக்க’ விட்டுக் கொண்டேதான் இருக்கிறது. கீழே உள்ள சுட்டியில் இந்தப் படங்களில் சிலவற்றை நாம் பார்க்க முடிகிறது.
http://tinyurl.com/zyym27x
[/stextbox]


[stextbox id=”info” caption=”பாழிலிருந்து எழும் எதிர்ப்புக் குரல்கள்”]

CapitalistExploit_1

இதுவும் தொழிலாளர்களை அமெரிக்க முதலியம் சுரண்டும் நூதன வழிமுறைகள் பற்றியதே. அமெரிக்காவின் மத்திய வர்க்கம் கடும் சரிவை எதிர் கொண்டிருக்கிறது, அதுவும் இந்தச் சரிவு கடந்த பத்தாண்டுகளாக அரங்கேறி இருக்கும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வீழ்ச்சி. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் மேலை உலகில் பரவலாக இருந்த வியாபார முதலியம் என்கிற வகை முதலியம், அப்போதுதான் தொழிற்சாலை சார்ந்த முதலியத்துக்கு மாறத் துவங்கி இருந்தது. சில நாடுகளில் இந்த மாறுதல் நிறையவும், சில யூரோப்பிய நாடுகளில் குறைவாகவும் இருந்தாலும், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தொழில்மய முதலியம் ஓங்கி வளரத் துவங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில். துவக்க கால தொழில் மய முதலியத்தின் தொழிற்சாலைகளில் கடுமையான வேலை அளவும், விதி முறைகளற்ற, பாதுகாப்பு, தொழிலாளர் உடல்நலம் ஆகியன குறித்த ஒரு தார்மிக நோக்கும் இல்லாத வகை நிர்வாகம் என்ற கொடூரம் நிலவியது. இதை அன்றைய நாவலாசிரியர்கள் பலர் சித்திரித்திருக்கிறார்கள்.
அமெரிக்கக் குடியரசுக் கட்சியினரில் கணிசமான பேர் அடிமை முறை அமெரிக்காவில் விலகியதும், இன ஒதுக்கல் சட்ட விரோதமானது என்று ஆனதும், பிறகு கருப்பினத்தவருக்கு சம உரிமைகள் கொடுக்கப்பட முயற்சிகள் நடந்ததும்  எல்லாம் அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று சொல்லும் கூட்டத்தினர்.
இப்படிச் சொல்லும் கூட்டத்திற்கு அனேகமாக படிப்பாளிகளையோ, அலசி நோக்கும் எவரையுமோ பிடிக்காது என்பது பிரசித்தம். குடியரசுக் கட்சியின் மேநிலை அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு சிறு கூட்டம் இந்த வகை மக்களை அறியாமையிலும், இன ஆணவத்திலும், கிருஸ்தவ மூடத்தனங்களிலும் ஆழ்த்தி வைத்திருப்பது தமக்கு அசைக்க முடியாத அதிகாரத்தைக் கொடுக்கும் என்று கணக்கிட்டு அந்த வகை நம்பிக்கைகளையே தொடர்ந்து இம்மக்களின் பண்பாட்டிலும், நம்பிக்கைகளிலும், கேளிக்கைகளிலும், சமூகப்பிரச்சார வாய்ப்புகளிலும் விதைத்து வருகிறது. இனவெறியைப் பூடகமாக ஆதரிக்கும் பல ஊடகப் பெரு நிறுவனங்கள் பல இப்படிப் பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு இந்தப் போக்குக்குத் தீனி போடுகின்றன.

குடியரசுக் கட்சிக்கு  அமெரிக்கச் சிந்தனையாளர்களில் ஒரு சிறு பகுதியினர் தீவிர ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இந்தச் சிறுபான்மை அனேக நேரம் உலகரங்கில் அமெரிக்கப் பேராளுமையை நீட்டிப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்துகிறது என்றாலும், சமீப காலங்களில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலையும் கண்காணித்து அதையும் உலக அரசியல் போல அதிகார இழுபறிக்காக எதையும் செய்யப்படக் கூடிய அரங்காக மாற்றி வைத்திருக்கிறது. அதாவது, உள்நாட்டிலேயே பண்பாட்டு வழிச் சிறுபான்மையினர், வெள்ளையரல்லாதவர், உழைக்கும் மக்கள் போன்ற சமுதாய அடித்தளத்துக் குழுக்களைக் கிட்டத் தட்ட காலனியில் வசிக்கும் மக்களைப் போலப் பார்த்து அதே போல நடத்தவும் தயாராக இருக்கும் சிறுகுழுவினர் இந்தச் சிந்தனையாளர்கள். இவர்களில் ஒரு சாரார் துவக்க நிலை நவீன காலத்துப் பொருளாதாரச் சிந்தனை, மாக்கியவெல்லியின் காலத்து அரசியல் சூதாட்டங்கள், தனி நபர் உரிமைகளுக்கு முன் எந்தக் குழு நலனும் பொருட்படுத்தத் தக்கதல்ல என்ற ஒரு விசித்திரமான அரசெதிர்ப்பு வாதம் ஆகியவற்றின் கலவையை ஒரு சித்தாந்தமாக ஆக்க முயல்பவர்கள். அதற்கு கிரேக்க நாகரீகம், ரோம நாகரீகம் ஆகிய பண்டைக் காலத்து சமுக/ தத்துவச் சிந்தனைகளை ஊக்கம் கொடுக்கும் முன்மாதிரியாகக் கூட பல்கலைகளில் போதிக்க முயல்பவர்கள்.

இந்த போக்குகளின் விளைவாக இவர்கள் விரும்புவது எல்லாம் இன்றைய முதலியத்தைச் சாரமாகச் சூழ்ந்து கட்டுமானத்தைப் புதுப்பிக்க உதவும் தொழிலாளர் நலச் சட்டங்கள், உயர் மட்ட அதிகாரிகளைக் கண்காணிக்கும் சட்டங்கள், அரசுக்குச் சேர வேண்டிய வரிகளைக் கட்டவும், பதுக்கல் அல்லது திரித்தல் மூலம் கணக்குகளை மறைக்கும் திரிசம வேலைகளை நடத்த விடாமல் பாதுகாக்கவும் அரசு மேற்கொண்டுள்ள சில அதிகாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒழித்துக் கட்டி முதலியர்களும், முதலியத்தின் கையாட்களும் மட்டுமே எதையும் தீர்மானிக்கக் கூடிய சுதந்திரம் உள்ளவர்கள், அரசுக்கோ, சமுதாயத்துக்கோ கட்டுப்படுத்த ஒரு வாய்ப்போ, உரிமையோ, நியதியோ இருக்கலாகாது என்றாகும் ஒரு நிலையைக் கொணரத் துடிப்பவர்கள். அடிப்படையில் அராஜக வாதிகள். ஆனால் தாமே மிக்க கட்டுப்பாடும், நெறிகளும், நியாய உணர்வும், சமூகப் பொறுப்பும், கிருஸ்தவத்தனமும் (கருணை இத்தியாதி) கொண்ட மேன் மக்கள், இதரர் எல்லாம் பதர்கள் என்ற மனோபாவத்தைக் கொண்டவர்கள்.
அதாவது இவர்கள் எதற்கும் கட்டுப்படாத மேன்மக்கள், மற்றார் எல்லாம் அடிமைகள். வெல்பவரே ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று முழங்கும் கால்வினியத்தின் கசடான நம்பிக்கையாளர்கள் இவர்கள். ஐன் ராண்டின் சண்டியர்கள்.

இந்தக் கூட்டம்தான் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க அமைப்புகள், ஊடகங்கள், அரசு, நீதி மன்றங்கள், மக்கள் மன்றங்கள், முனிஸிபாலிட்டிகள் என்று பல்லாயிரம் இடங்களில் கோலோச்சி வந்திருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி, ஜனநாயக் கட்சி என்று பாகுபாடு ஏதும் இல்லை. இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இரண்டும் மக்களுக்கு நலன் செய்யத் தயாரில்லாத அதிசயப் பிறவிகளால் நிரம்பிய அமைப்புகளே.

இந்த வகைக் குரூர அணுகலின் விளைவு என்ன என்பதைக் கீழ்க் கண்ட சுட்டியில் காணும் ஒரு அறிக்கை சொல்கிறது.
இன்றைய அமெரிக்க நிறுவனங்கள் ‘சட்ட பூர்வமாக’த் தொழிலாளர்களை எப்படிக் கொள்ளை அடித்து ஓட்டாண்டிகளாகவும் நோயாளிகளாகவும் பாழில் வீழ்ந்த திக்கற்றவர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன என்று விரிக்கிறது.
முன்பு நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்களாக இருந்த பல மிலியன் தொழிலாளர்கள் இன்று வேலையை விட்டு நீக்கப்பட்டு, ஒப்பந்த ஊழியர்களாக மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் என்று விளக்குகிறது. இதற்கெதிராக ஒரு தொழிலாளர் எதிர்ப்பு முயற்சி சிற்சில இடங்களில் நீதி மன்றங்களில் வழக்காடி வென்று இருப்பது ஒரு நல்ல துவக்கம் என்று மகிழ்கிறது. ஆனால் போக வேண்டிய தூரமோ பல காதங்கள், எதிரே இருப்பதோ அடர்ந்த கானகம். வழியில்லாக் கானகம். அதைக் கடக்க வேண்டிய நிலையில் அமெரிக்கத் தொழிலாளிகளின் சமூகம்.
http://tinyurl.com/hluttmv
[/stextbox]


[stextbox id=”info” caption=”’ராமானுஜன் ஒரு துருவ நட்சத்திரம்’- கென் ஓனோ”]

ken_ono

ஜப்பானிய அமெரிக்கரான கென் ஓனோ ஒரு கணிதவியலாளர். ‘எண் கோட்பாடு’ எனும் உயர் கணிதப் பிரிவில் மிகச் சிறப்பான வகையில் பல முன்னெடுப்புகளைச் சாதித்தற்காக பல பரிசுகளையும், மிக்க அங்கீகாரத்தையும் பெற்றவர். இவர் சமீபத்தில் தன் சுயசரிதையை எழுதி அப்புத்தகம் மேலை நாடுகளில் மிக்க கவனத்தைப் பெற்றிருக்கிறது. அப்புத்தகம் நமக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்று தெரிகிறது. ஒரு சிறு காரணம், புத்தகத்தின் தலைப்பு. ’ராமானுஜனுக்கான என் தேடல்: நான் எப்படி எண்ணக் கற்றுக் கொண்டேன்’ ஆம். பள்ளியிலும், கல்லூரியிலும் அத்தனை மேதமையோ, அசாதாரணப் படிப்புத் திறனையோ காட்ட முடியாத தான் எப்படி சுய முனைப்பாலும், ஊக்கமுள்ள முயற்சியாலும் ஒரு உயர் நிலை கணித ஆய்வாளராக உயர முடிந்தது என்பதை இப்புத்தகத்தில் விளக்கி இருக்கும் ஓனோ, ராமானுஜனின் அசாதாரணமான மேதமையும், அவர் வாழ்வின் சோகநிலைகளும், இருப்பினும் அவர் சாதித்த அற்புதங்களும் தனக்கு பெரும் ஊக்கத்தையும், வாழ்வில் நம்பிக்கையையும், சாதிக்க முடியும் என்ற நினைப்பையும் கொடுத்தன என்று தெளிவாக, அழுத்தமாகச் சொல்கிறார்.
இன்று உலகெங்கும் இப்படி மறைவில் வாழும் ஏராளமான சிறந்த திறமையாளர்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் ஒரு முயற்சியில், ஒரு அமைப்பை அதற்காக நிறுவி, அதை வழி நடத்துவது ஏன் என்றும் சொல்கிறார். இந்தச் சுட்டியில் அவருடைய பேட்டி இருக்கிறது. அதில் அவர் சொல்வது, ராமானுஜனின் பெரும் பாய்ச்சல் எப்படி நூறாண்டுகளாக உலகக் கணிதவியலாளர்களையும், பல துறை வல்லுநர்களையும் அதிசயத்தில் தொடர்ந்து ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
http://www.spiegel.de/international/zeitgeist/mathematician-ken-ono-talks-about-his-search-for-ramanujan-a-1104848.html

[/stextbox]

 [குறிப்புகள்: மைத்ரேயன்]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.