கொரங்கி

chidrenPlay

“ஏ வடிவக்கா, நியூஸ் கேட்டீகளா?”, என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள் மாரியம்மா சித்தி.
“இல்ல மாரி என்ன சேதி?”
“தமிழ்நாட்ல நாளைக்கு பந்தாம். லாரி ஒண்ணும் ஓடாதாம்”
“அடிப்பாவி, போனவாரந்தானடி ஒரு நாளு பந்து வந்துச்சு, நாளைக்கு வேறயா?” என்று அலுத்துக் கொண்டாள் அம்மா.
“ஆமாக்கா”
“நம்மள மாதிரி பாவப்பட்ட ஜென்மம் வேற யாருமிருக்காதுடி. தமிழ்நாட்ல பந்துனாலும் கஷ்டம், இங்க கேரளால பந்துனாலும் கஷ்டம்”.
“என்னக்கா பண்றது? வாங்க போயி பாலு, காய்கறிலாம் வாங்கிட்டு வந்துரலாம்,” என்று என் அம்மாவை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்  மாரியம்மா சித்தி.
ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பும், அக்கா எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். நான் – அக்கா, கீரி – பாம்பு எந்த வித்தியாசமும் கிடையாது. எதற்கெடுத்தாலும் சண்டையிட்டுக் கொள்வோம். ஒரு நாள் கூட சண்டை போடாமல் எங்களுக்குத் தூக்கம் வராது.
அன்று, மார்கழி மாதக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. எங்களைப் படுக்கையிலிருந்து எழுப்பிவிட்ட அம்மா, கொல்லைப்புறத்திற்குச் சென்று, அடுப்பைக் கூட்டி, விறகு வைத்து, நாங்கள் குளிப்பதற்கு வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து “ஏ புள்ளைகளா,வென்னி ரெடி. யாராது குளிக்க வாங்க” என்றாள். இருவரும் ஓடினோம்.
“நா மொதல்ல”
“இல்ல, நா மொதல்ல”
“எம்மா, எனக்கு இன்னைக்குப் பரிச்ச, நா மொதல்ல குளிச்சிட்டு வாரேன்” என்று பாவமாகக் கேட்டாள் அக்கா.
“எனக்குந்தான். நா மொதல்ல குளிச்சிட்டு வாரேன்” என்று நானும் விடுவதாக இல்லை.
“போலெ கொரங்கா”
“போட்டி கொரங்கி”
“போலெ கொரங்கா”
“போட்டி கொரங்கி”
நாங்கள் சண்டை போடுவதைப் பார்த்த அம்மா “பேசாம இருக்க மாட்டீங்களா? அவந்தான் ஏழு வயசுப்  பய, மொதல்ல குளிச்சிட்டுப் போறான்.  பொறு, அவனைவிட ஏழு வருஷம் பெரியவள்ல நீ?  ஒனக்கும் வென்னி கொதிக்கி, இரு” என்று எப்போதும்போல் எனக்கு வக்காலத்து வாங்கினாள். அழுகையை அடக்கிக் கொண்டு நின்ற அக்காவைப் பார்த்து வலிச்சங்காட்டி விட்டு நான் குளிக்கச் சென்றேன்.
குளித்து, பள்ளிச் சீருடை அணிந்து இருவரும் சாப்பிட உட்காந்திருந்தோம். ஒருவரை ஒருவர் முறைத்தவாறு.
“எம்மா பசிக்கிம்மா”
“எம்மா எனக்கும் பசிக்கிம்மா”
“ஏல கொரங்கா, நா சொன்னதையே சொல்லாதல”
“போட்டி கொரங்கி. எம்மா பசிக்கிம்மா,” என்று அவள் சொன்னதையே நானும் சொன்னேன்.
தோசையை எடுத்து வந்த அம்மா முதலில் என் தட்டில் வைத்தாள்.
“எம்மா நாந்தான மொதல்ல கேட்டேன்” என்றாள் அக்கா.
“ஏண்டி, அவந்தான் சின்னப் பய…” என்று ஆரம்பித்த அம்மாவிடம், “போங்கம்மா எனக்கு தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம்”, என்று கோபித்துக் கொண்ட அக்கா சாப்பிடாமல் எழுந்து சென்றாள். நான் ஆர அமர உட்கார்ந்து இரண்டு தோசையை முழுங்கி விட்டுச் சென்றேன்.
பின் பள்ளிக்குக் கிளம்பும்போது சண்டைதான்.
“ஏ பாப்பா, மலைல ஏறும்போது வழுக்கிறாமட்டி. தம்பிய கையப் பிடிச்சு பத்தரமா கூட்டீட்டு போ” என்று கத்தினாள் அம்மா.
“இவரு பெரிய இவரு. இவுகள பத்தரமா வேற கூட்டீட்டுப் போணுமாம்ல”, என்று முணுமுணுத்துக் கொண்டே என்னைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் அக்கா.
தேயிலைத் தோட்டத்தின் ஒற்றையடிப் பாதையில் முன்னே அக்கா செல்ல, அவளைப் பின் தொடர்ந்து நான்.
“ஏல கொரங்கா, அங்க பாரு ஒரு பாம்பு”
“போடி கொரங்கி, பொய் சொல்லாத, நா பயப்பட மாட்டேன்”
“ஏல நெசமாத்தேன் சொல்றேன் அங்க பாரு”
“ஆமா அக்கா, எனக்கு பயமா இருக்குக்கா” என்று பாம்பைப் பார்த்த நான் பயந்து நடுங்கி அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
“பயப்படாதல நா பாத்துக்குறேன்” என்று சொன்னவள், ஒரு கல்லை எடுத்து அதன் மேல் எறிந்தாள். பாம்பு சரசரவென்று தேயிலைச் செடிக்குள் ஓடியது.
பள்ளிக்கு வந்த இருவரும் அவரவர் வகுப்புக்குச் சென்றோம்.
சிறிது நேரம் கழித்து அக்கா வகுப்பை எட்டிப் பார்த்தேன். டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.
“டீச்சர், பாப்பா இருக்காளா?” என்று கேட்டேன்.
“பாப்பாவா? யாரு பாப்பா?” என்றாள் டீச்சர்.
“இல்ல இல்ல, ராஜேஸ்வரி இருக்காளா?”
“நீ யாரு?”
“நா அவ தம்பி முருகன். ரெண்டாங்க்ளாஸ் படிக்கேன்”
“ராஜேஸ்வரி ஓந்தம்பி கூப்பிடறான் பாரு,” என்று அக்காவை அழைத்தாள் டீச்சர்.
வெளியே வந்தவள் “ஏல கொரங்கா, கிளாஸ் நடுவுல ஏம்ல வந்த?” என்று கேட்டாள்.
“எங்க டீச்சர் ஒன்ன கூப்ட்டாங்க” என்றேன்.
“எதுக்குல?”
“இல்ல….கொடி நாளுக்கு ஒரு ரூவா கொண்டு வரச் சொன்னாங்க. நா மறந்துட்டேன். அதான்” என்று தலையைச் சொரிந்து கொண்டு நின்றேன்.
“மறப்பியே! திங்கதுக்கு மறந்தியா? நல்லா ரெண்டு தோசைய முழுங்கிட்டுத்தான வந்த?” என்று என் தலையில் ஒரு கொட்டு வைத்து என்னுடன் என் வகுப்புக்கு வந்தாள்.
என் டீச்சரிடம் வந்து மன்னிப்பு கேட்டவள், திங்கட்கிழமை கண்டிப்பாக கொண்டு வந்து விடுவான் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
இரவு இருவரும் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். மதியம் வைத்த சோறு, சாம்பார், கோஸ் பொறியல். இருவர் தட்டிலும் சோறு போட்டு சாம்பாரை ஊற்றிய அம்மா, “புள்ளைகளா, இன்னைக்கு மாங்கா போட்ட சாம்பார். ஒரே ஒரு மாங்கொட்ட தான் இருக்கு. யாருக்கு வேணும்?” என்றாள்.
“எம்மா எனக்கு”
“எம்மா எனக்கு”
“போன தடவ அவனுக்குத்தான கொடுத்தீங்க, இப்போ எனக்கு வேணும்” என்றாள் அக்கா.
“இல்ல எனக்கு வேணும்”
“போலெ கொரங்கா”
“போட்டி கொரங்கி”
“சரி சரி சண்ட போடாதீங்க” என்று சொன்ன அம்மா, “அவன் பாதி தின்னுட்டு ஒனக்குத் தருவான்” என்றாள் அக்காவிடம்.
“போம்மா, அவஞ்சப்புனதெல்லாம் எனக்கு வேணாம். நா வெறும் சாம்பாரே ஊத்திக்கிறேன்” என்று சாம்பாரை ஊற்றி சாப்பிட்டாள் அக்கா.
நான் வேண்டுமென்றே மாங்கொட்டையை சப்பிச் சப்பிச் சாப்பிட்டேன்.
அப்பாவும் ஆச்சியும் வெளியே திண்ணையில் படுக்க, நாங்கள் வீட்டிற்குள் படுத்தோம். மீண்டும் ஆரம்பித்தேன் என் சேட்டையை.
“கொரங்கி நாந்தான் அம்மாகிட்ட படுப்பேன்” என்றேன்.
“போல கொரங்கா நாந்தான் படுப்பேன்” என்றாள்.
“போட்டி கொரங்கி”
“போல கொரங்கா”
“என்ன சண்ட போட்டுட்டு? அவந்தான் சின்னப் பய….” என்று வழக்கம் போல் ஆரம்பித்தாள் அம்மா.
பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “போம்மா… நா வெளிய போயி ஆச்சி கூடப் படுத்துக்குறேன். நீ அவன் கூடயேப் படுத்துக்கோ,” என்று சொல்லிவிட்டு தலையணையையும் போர்வையையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
மறுநாள் சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு மூவரும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றோம். வாராவாரம் தவறாமல் கோவிலுக்குச் செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருந்தாள் அம்மா. சில நேரம் நாங்கள் செல்வோம், சில நேரம் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாதபோது செல்ல மாட்டோம். போகிற வழியில் செட்டியார் கடையில் சூடம், பத்தி, பழம் வாங்கிக் கொண்டு, தேயிலைத் தோட்டத்தின் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றோம்.
ஐயப்பன் கோவில். தேயிலைத் தோட்டத்தின் நடுவே, கேரள முறைப்படி கட்டப்பட்டு, முல்லைப் பெரியாறு நதிக்கரையில் அமைந்திருக்கும் அழகான கோவில். ஊரில் ஐயப்பன் கோவில் தவிர ஒரு மாரியம்மன் கோவிலும் உண்டு. ஆனால் ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதையே நாங்கள் விரும்புவோம். அந்த இடம் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.
கோவிலுக்குள் சென்ற எங்களை மலையாளத்தில் வரவேற்றார் ஐயர். வாரா வாரம் செல்வதால் அம்மாவுக்கு அவர் நல்ல பழக்கம். பின் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். நாங்கள் வாங்கி வந்திருந்த பழம், பத்தி, சூடம் அனைத்தையும் வாங்கிக் கொண்டபின் ஐயர், “அர்ச்சனை உண்டா?” என்றார்.
“வழக்கம் போலத்தான்” என்று அம்மா பதிலளித்தாள். பின் அனைவரும் சாமி கும்பிட்டோம்.
காலையில் ஒன்றும் சாப்பிடாமல் வந்திருந்ததால் பசி குடலைப் பிடுங்கியது. வருகிற வழியில் நூர் அண்ணன் கடையில் சுடச்சுட உளுந்து வடையும்,  பருப்பு வடையும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வந்தோம். நானும் அக்காவும் கோவிலுக்கு வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஞாயிற்றுக் கிழமை நானும் அக்காவும் விளையாடிக் கொண்டிருந்தோம்.
“புள்ளைகளா, இன்னைக்கு மத்தியானம் என்ன வைக்கணும்?” என்று கேட்டாள் அம்மா.
“சிக்கன்”
“இல்ல மீன்”
“ஏல கொரங்கா, போன வாரந்தான மீன் தின்ன?”
“போடி கொரங்கி, சிக்கன் சூடு”
“ஆமா இவரு பெரிய டாக்டரு. சூடாம்ல சூடு.போய்த் தொல, மீனே வைங்க” என்று கோபித்துக் கொண்டாள் அக்கா.
போன வாரம் மீன் சாப்பிட்டதை அக்கா நினைவூட்டி விட்டதால், “சரி சிக்கனே வைங்க” என்றேன்.
“ஏல கொரங்க என்னல மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க? ஒழுங்கா சொல்லு சிக்கனா மீனா?” என்றாள்.
“சிக்கன்” என்றேன்.
வாரத்தின் அனைத்து நாட்களும் இட்லி, தோசை, சோறு, சாம்பார் என்று கழிந்தாலும், ஞாயிற்றுக் கிழமை தவறாமல் அசைவம் வைத்து விடுவாள் அம்மா. நாங்களும் அதை சாப்பிடுவதற்காக ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்கிக் கொண்டிருப்போம்.
இரவு, நரி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. எனக்கோ பயம். தூக்கம் வேறு கண்ணைச் சொருகியதால் எட்டு மணிக்கே, “எம்மா எனக்கு தூக்கம் வருது” என்றேன்.
“ஏ பாப்பா,தம்பியக் கொஞ்சம் தூங்க வையேன். நா அடுப்பு வேலையா இருக்கேன்” என்றாள் அம்மா. சற்று நேரம் கழித்து தூக்கத்தில் விழித்துப் பார்த்தேன். அக்கா மடியில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
மறு நாள் அதே பழைய களேபரங்களுக்கு இடையே பள்ளிக்குக் கிளம்பிச் சென்றோம். பள்ளி வந்ததும் நான் மறந்திருந்த ஒரு ரூபாயை அக்கா நீட்டினாள். அதை வாங்கிய நான் “தேங்க்ஸ் கொரங்கி” என்று சொல்லிவிட்டு ஓடினேன்.
மதியம் உணவு இடைவேளையின்போது அக்கா வகுப்புக்குச் சென்றேன். எங்கு தேடியும் அவளைக் காணவில்லை.
எதிரே தென்பட்ட வசந்தி டீச்சரிடம் “ராஜேஸ்வரி எங்க?” என்றேன்.
“அவளுக்கு உடம்பு சரியில்ல. அப்போவே வீட்டுக்குப் போய்ட்டா” என்றாள். கேட்ட எனக்கோ மனது படபடப்பாக இருந்தது. பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் நினைவாகவே இருந்தது. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எப்படா நாலு மணி ஆகுமென்று இருந்தது. வகுப்பில் ஒன்றையும் கவனிக்கவில்லை. அக்காவுக்கு என்ன ஆச்சோ என்ற எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. மணி அடித்தவுடன், முதல் ஆளாக  வீட்டை நோக்கி எழுந்து ஓடினேன். தினமும் பள்ளியிலிருந்து வீடு வர 45 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 20 நிமிடத்தில் வீடு வந்தடைந்தேன்.
வீட்டு முன் ஒரே கூட்டம். பார்த்த எனக்கோ கை, கால் எல்லாம் நடுங்கியது, அக்காவுக்கு என்ன ஆச்சோ என்று.
அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று வெளியில் நின்ற அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, ஆச்சி எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். அக்காவை மட்டும் காணவில்லை. நெஞ்சு படபடத்தது. கண்கள் அலைபாய்ந்தன. வீடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டு புறவாசலுக்குச் சென்ற நான் புதிதாக கூரை ஒன்று வேயப்பட்டிருந்ததைக் கண்டேன். எட்டிப் பார்த்தேன்.
“ஏட்டி கொரங்கி, இங்க என்னட்டி பண்ற?” என்றேன்.
பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து வெட்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள் அக்கா.
மறுபடியும், “ஏட்டி கொரங்கி, ஒன்னத்தான கேக்கேன்” என்றேன்.
இதைக் கண்டு ஓடி வந்த ஆச்சி “ஏல மூதி,அவளப் போயி கொரங்கி கிரங்கினு கூப்டுட்டு இருக்க? அக்கானு கூப்டுல” என்றாள்.
“போ கெழவி. அப்படிலாம் கூப்ட முடியாது.சரி அவளுக்கு என்னாச்சு?” என்றேன்.
“இவன் ஒரு வெவரங்கெட்ட பய” என்று அலுத்துக் கொண்டவள்,  “அவா சடங்காயிட்டால” என்று போகிற போக்கில் சொல்லி விட்டுச் சென்றாள்.
ஞாயிற்றுக் கிழமை மட்டுமே கறி, மீன் சாப்பிட்டுப் பழகிய எங்கள் வீட்டில் இப்போது தினமும் மீன், கோழி, ஆடு, முட்டை, பால், களி, வடை, பிரியாணி என விதவிதமாக விருந்து வைத்தனர். ஒரு நாள் அத்தை, ஒரு நாள் சித்தி, ஒரு நாள் பெரியம்மா, ஒரு நாள் ஆச்சி இப்படி ஒவ்வொரு நாளையும் ஒவ்வொருவர் குத்தகைக்கு எடுத்திருந்தனர். ஒரு மாத காலம் அக்கா பெயரைச் சொல்லி நான் நன்றாக சாப்பிட்டேன். அந்த ஒரு மாதமும் அக்கா வராததால் நானும் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டிலும் அக்காவுடன் சண்டை போட முடியவில்லை. அவளுடன் பேசுவதற்கே தடை போட்டிருந்தனர். இது போதாதென்று, “ஏல இனி அவள பாப்பா,கொரங்கினெல்லம் கூப்டக் கூடாது. அக்கானுதான் கூப்டனும்” என்றாள் அம்மா.
ஒரு மாத காலம் முடிந்து ஒரு திங்கட்கிழமை இருவரும் பள்ளிக்குச் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தோம். அக்காவை மட்டும் அழைத்து, அனைவரும் அவளுக்கு திருநீர் பூசி விட்டு, பணம் கொடுத்தனர். என்னை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எனக்கோ அக்கா மீதும் மற்றவர்கள் மீதும் கடுங்கோபம் வந்தது.
வழக்கம்போல் தேயிலைத்தோட்ட ஒற்றையடிப் பாதையில் அக்கா முன்னே செல்ல நான் அவளைப் பின் தொடர்ந்தேன். அக்கா குனிந்த தலை நிமிராமல் நடந்து சென்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. சற்று தூரம் சென்ற பின் எதிரே கணக்கு வாத்தியார் ராஜன் சார் வந்தார்.
“ஏ ராஜேஸ்வரி என்ன ரொம்ப நாளா ஆளக் காணும்?” என்று கேட்டார்.
“அதுவா சார்… அது ஒண்ணுமில்ல மஞ்சக்காமால, அதான் வர முடியல சார்” என்றாள்.
சட்டென்று நான், “சார் பொய் சொல்றா சார். மஞ்சக்காமாலயும் இல்ல ஒண்ணுமில்ல, அவ சடங்காயிருந்தா சார்” என்று சொன்னேன்.
“டேய் பேசாமப் போடா,” என்று சொல்லிவிட்டு அவரும் சென்றார்.
வெகு நேரம் அக்கா எதுவும் பேசவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு  திரும்பி தலையைக் குனிந்து நின்று கொண்டிருந்தாள். “என்னட்டி கொரங்கி என்னாச்சு? ஏங் குனிஞ்சிட்டே இருக்க, தலைய நிமுந்து பாரு,” என்று சொல்லி அவள் தலையைத் திருப்பினேன். அவள் கண்கள் கலங்கி கண்ணீரால் நிறைந்திருந்தன.
***

2 Replies to “கொரங்கி”

  1. அருமையான கதை. “வலிச்சங்காட்டுதலை” எங்கள் ஊரில் வக்கனம் காட்டுதல் என்று சொல்லுவோம் (எட்டயபுரம், விளாத்திகுளம் அருகே ஒரு கிராமம்). உணர்வுகளுக்குள் மேலிடச் செய்து சிலிர்க்க வைக்கும் கதை. என் தங்கையுடன் விளையாடிய நாட்களை மீட்டெடுக்கும் நினைவுகளின் மீளாக கதை என்னுள் பாய்கிறது. மு. வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். லவ் யூ..

Leave a Reply to maniCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.