கோவிலுக்குப் போகிறாட்கள் தேரடியில் இறங்கிக் கொள்ளலாம். பஸ் சர்ரென்று வந்து நிற்க, புழுதி… உள்ளேயிருந்து தேவர் தேவதைகளாய் சனங்கள். தேவர்களே வந்து சாமியை வழிபடும் ஸ்தலம், வந்தது புஷ்பக விமானம் என்பதாய்க் காணும். சனங்கள் வந்து இறங்க ஊர்க்காரர்களை விட நாய்கள் உற்சாகப் பட்டன. ஊர்க்காரர்கள் தின்ன எதும் தருகிறார் இல்லை. வர்றாட்கள் எப்படி தெரியாது. ஆனால் நம்பிக்கை தானே வாழ்க்கை?
திருவிழாச் சமயம் சுத்துவட்ட அத்தனை சனமும் அந்தாப்ல வந்து பரவசமாய் அப்பும். குழல் விளக்கும் கொசுக்களும். வேல்வேல், வெற்றிவேல்! வெற்றிவேல், வீரவேல்! வேல்வேல் முருகா. வெற்றிவேல் முருகா! வெற்றிவேல் முருகனுக்கு… அரோகரா! அடிவாரத்தில் தேங்காய் உரித்தாப் போல சனங்கள் முடிச்சடையுடன் அமர்ந்து மொட்டையாய் எழுவார்கள். தலைநிறைய சந்தனம் குளிர்ந்து காயும். உட்காரும் போது அழுத குழந்தைகள் எழும்போது, கண்ணாடி காட்டுவார்கள், அதுங்களுக்கே சிரிப்பு தாளாது. இவ்வளவு லூசா நான்? வாழ்க்கை சுவாரஸ்யங்களால் ஆனது. தானே தன்னை பைத்தாரனாய் உணரும் தரிசனக் கணம் அது. அவனை அவனுக்கே அடையாளம் தெரியாத கணம். அல்லது, அதுவரை அவனாக நினைத்திருந்த அவன், அது அவன் இல்லையோ?… என்றெல்லாம் கிறுக்குத்தனமான சிந்தனைகள் கிளைக்க ஏதுவான கணம். அதுக்கு பேர் தத்துபித்துவம்.
நாநூற்றுச் சொச்ச படிகள். இத்தனை படிகளின் எண்ணிக்கை பற்றிக் கூட யாராவது ஒரு ஐதிகப் பின்னணி சொல்வார்கள். தந்தைக்கு உபதேசம் செய்த குமரக் கடவுள். அவ்வளவு படி எப்படி ஏறினான் தெரியவில்லை. நம்ம வீட்டுப் பிள்ளைகள் அங்க ஏறிக்கிட்டு, அப்பா இறக்கி விடூ…ன்னு குரல் எடுக்கும். அழுகைக்குரல். இது பயமற்ற கடவுள். யாமிருக்க பயமேன்? மலை மேல இல்லய்யா நீ ஏறி நிற்கிறாய்? கிட்ட வந்து அதைச் சொல். அவ்வளவு உயரத்தில் நீ இருக்கே. எனக்கு பயந்து கெடக்கு. மலை மேல, ராத்திரி, தனியாய்… உனக்கு பயமா இல்லியா முருகா?
சீரில்லாத படிகள். குளறுபடிகள், என்று சொல்லலாம் அதை. பத்து அடிக்கு கொஞ்சம் சம தரை. திரும்ப படிகள் மேலே ஏறின. படிகளுக்கு அப்புறமும் இப்புறமுமாக வகை தொகை இல்லாத கரும் பாறைக் கற்கள். ஓரிடத்தில் கல் முன்னே நீண்டு மாடியில் கட்டிய சிட்அவ்ட் போல இருந்தது. அதன் பின்னே ஒரு பனை மரம். அதன் உச்சி, பாறைக்கு நிழல் தருகிற அளவில் இருந்தது. சூரியன் நகர அந்த நிழலும் நகர்ந்து காணாமல் போகும். தூரத்தில் இருந்து பார்க்க பாறை மேல் அஞ்சு தலை நாகம் போல் காணும் பனைமரம்.
சாமிக்கு ஒரு துணை கிடைத்தாப் போல ஆச்சு. ஒருநாள் அந்தக் கோவிலுக்கு வந்த சனங்கள் அங்கே, பாறையின் பனை நிழலில், ஒரு மனிதனைக் கண்டார்கள். பால்கனியில் அவன் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தான். கீழே பெரும் பள்ளம். அவன் நின்றிருந்தால், தற்கொலை கிற்கொலை… என்று சனங்கள் பயந்திருப்பார்கள். யாமிருக்க பயமேன், முருகனே பயந்திருப்பான். அவனை ஊர் சனங்கள் முன்னே பின்னே பார்த்தது இல்லை. எப்போது வந்தான், எதற்கு வந்திருக்கிறான் தெரியவில்லை. யாரும் அவனை நெருங்கிப் போகவில்லை. அவனிடம் போய் யாரும் விசாரிக்கவில்லை. சம்மணமிட்டு கண்மூடி அமர்ந்திருந்தான். பாவி மட்டை தூங்கறானோ? அது எதுக்கு உட்கார்ந்துக்கிட்டே தூங்கணும். படுத்திறலாம் அல்லவா? படியேறும் மொட்டை மண்டைகள் பாறைக்கு மேட்சாய். பிரார்த்தனை என மொட்டை போட்டுவிட்டு, சாமியிடம் மொட்டை போட்டு விட்டேன், என்று காட்டப் போகிறார்கள். எல்லாரும் அவனை வேடிக்கை பார்த்தபடியே மலை ஏறி சாமிகும்பிடப் போனார்கள். சாமி கும்பிட்டுவிட்டு திரும்ப அந்தப் படிகளில் இறங்கினார்கள். அப்பவும் அவன் அப்படியே அமர்ந்திருந்தான் அவனிடம் அசைவு கிஞ்சித்தும் இல்லை. ஏலேய் ஒண்ணுக்கு கூடப் போகாம இப்பிடி உட்கார்ந்திருக்கியேடா? அட குடிக்கத் தண்ணி தவிக்காதா? பசி எடுக்காதா? அடிவாரத்தில் பத்து கடைக்கு ஒரு கடை கிளப்புக் கடைதான். சாப்பா டுப்போ டப்ப டும், என்று தெரிந்த லட்சணத்தில் எழுதி வெச்சிருப்பார்கள். வாசல் பார்க்க எண்ணெய்ச் சட்டி வைத்து எதாவது பொறிக்கிறது ஒரு உத்தி. தெருவில் போறவனே அதன் வாசனைக்கு உள்ளே வந்துருவான். வயறு கபகபன்னு திறந்துக்கும்.
திடீரென்று மனுசாளுக்கு இப்படியெல்லாம் தோணி விடுகிறது. அதே பாறையை எத்தனை சனம் பாத்து தாண்டிப் போகிறது. யாருக்கும் இப்படி இங்கே அமர்ந்து தவம் பண்ணணும் என்று யோசனை தோணவே இல்லை. மகன் என்ற நிலையில் இருந்து மகான் என்று ஆக, துணையெழுத்து சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறானோ? கண்ணைத் திறந்தால் உலகத்தைப் பார்க்கலாம் இப்படி கண்ணை மூடி எதைப் பார்க்கிறாய் அப்பா? அப்படிக் கண்ணை மூடி உட்கார்ந்து உள்ளே எதையோ பார்க்கிறதானால் இங்கே வரை வரணுமா என்ன? வீட்லயே அந்த சோலியப் பார்க்கலாம் இல்லே? இங்க வந்து தியானம் பண்ணி தானறியாத தூக்கத்துல தலை உருள பொதுக்கடீர்னு விழவா? கீழே… யம்மாடி, பெரும் பள்ளம் அது. ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கழண்டுரும்.
வெளியே காட்சிகள் அற்புதமாய் இருந்தன. அந்தப் பாறையில் இருந்து ஊர் முழுசுமாய்த் தெரிந்தது. அங்கங்கே மரங்கள், ஊதுபத்தி ஏத்தி வெச்சாப் போல. பாறை இடுக்குகள் தாவரம் அப்பிக் கிடந்தன.. மயிர் மழிக்காத அக்குள்கள். அதை நோண்டினால் பாம்பு நட்டுவாக்காளி கிடக்கும். தூர தூரமாய் ஆடுகள் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தாழ்வாரத்தில் சச்சதுர வயல்கள், கேரம் போர்டு போல. சில வயல்களில் கேரம் போர்டு ஓரத்துத் துளை போல் கிணறுகள் இருந்தன.
எப்பவாவது மயில் ஒன்று எதாவது பாறைக்கு வந்து அமரும். “முருகா, முருகா” என்று சனங்கள் அதைப் பார்த்து கன்னத்தில் அடித்துக் கொள்வார்கள். ஓவர் பக்தியில் அப்படி அடித்ததில் ஒருத்தனுக்கு பல் உடைந்து கையோடு வந்துவிட்டது. கொஞ்ச நாளாய் ஆடிக் கொண்டிருந்த பல் அது. மயில் ஆட பல் ஆட… மயில் அழகு. மயில்களின் அகவல் அழகு. சட்டென அது ஒரு எடுப்பு எடுத்துப் பறப்பது கண்கொள்ளாக் காட்சி. சிறு மழைப் பொழுதில் அது தோகை விரித்து நாலு திசையிலும் திரும்பி அதைப் பெருமிதத்துடன் காட்டுவது, தானியங்களைக் கொத்தும்போது அது கழுத்தை லலிதமான ஒரு விரைப்புடன் நீட்டுவது கொள்ளை அழகு. ஐயோ இவ்ளோ விஷயம் இருக்கு. இந்த முடிவான் கண்ணை மூடி உட்கார்ந்துருக்கு.
சற்று உயரத்தில் இருந்து பார்க்க உலகமே அழகாய்த் தான் ஆகிவிடுகிறது. இதையெல்லாம் பச்சக் பச்சக் என்று புகைப்படம் எடுக்கிறார்கள் சிலர். சிலர் அங்கயும் வந்து செல்ஃபி எடுக்கிறான். இந்தப் பாவிமட்டை, இங்க வந்து தூங்கறான் இல்லே? அதை மாதிரிதான். அவன் வந்ததும் பாறையில் அமர்ந்த கோலத்தில் தியானம் செய்வதும் பாலில் தண்ணி ஊத்தினாப் போல ஊரில் லேசாகப் பரவியது. மறுநாள் காலை. சில வெட்டி வீரமணிகள் அதைக் கேட்டு குன்றுக்கு வந்து பார்த்தார்கள். ஏ எங்கப்பா? அதோ. பாவம் என்னாச்சி? வீட்ல டூ விட்டுட்டு வந்துட்டானா? தூரத்தில் இருந்தே தான் பார்த்தார்கள். தியானம் ஞானம்லாம் நமக்கு லாயக் படாது. படக்னு சம்மணம் அடிச்சி உக்காந்திட்டான். மாடு வண்டில பூட்டும் போது சில சமயம் இடக்கு பண்ணி அப்படியே உக்காரும்ல. அதைப் போல. மெல்ல அவர்கள் கலைந்து போனார்கள்.
மறுநாள் வெயில் முற்ற ஆரம்பிக்கிற பதினோரு மணி வாக்கில் அவனை ஊருக்குள் பார்க்க முடிந்தது. மெலிந்த தேகம். மேல்சட்டையே தொள தொளவென்று இருந்தது. தளர்ந்த நடை. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கையை மறித்துக் கட்டியபடி நின்றான். கையை நீட்டி இல்லே பிச்சை கேட்கணும்? அவன் கேட்கவில்லை. எதுவுமே அவன் பேசவில்லை. பேச அவசியம் இல்லை போல் நின்றான். எல்லாரும் வீட்டின் உள்ளே இருந்து அவனைப் பார்த்தார்கள். அவர்களும் அவனிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அவனுக்கு அன்றைக்கு எதுவும் சாப்பிடக் கிடைத்ததா சந்தேகமே. அடிவாரத்தில் குளம் இருக்கிறது. கோவில் குளம். தண்ணீர் பச்சையாய்க் கிடக்கும். படியில் இறங்க மொய் மொய் என்று மீன்கள் பொரிக்கு வரும். அந்தக் தண்ணீர் தான் அவனுக்கு அன்றைய ஆகாரம். பச்சைத் தண்ணி குடிக்கிறான் என்றால் காய்ச்சாத தண்ணீர் என்று அர்த்தம். இந்தத் தண்ணியே பச்சைக் கலரில் இருந்தது. ஸ்ப்ரைட் குளிர் பானம் போல. திரும்ப குன்றுப் படிகள் ஏறி மேலே போனான் அவன். மாலையாக திரும்ப கோவிலுக்கு வந்த சனங்கள் அவன் அதே பாறையில் படுத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள். ஏ எங்கடா? போயிட்டானா? நம்மூரை நம்பியா ஒருத்தன் வருவான்? இங்க கடவுள் எதிர்ப்பு கோஷ்டியே இருக்கே… அதான் வேற ஊர் போயிட்டானா? இல்லடா. அதோ பாறையில் படுத்துக் கிடக்கான் பார்.
மறுநாளில் ஊருக்கு அவன்முகம் பழகிவிட்டாப் போலிருந்தது. குன்றில் இருந்து இறங்கும் போதே கிளப்புக் கடைகளிலேயே அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தார்கள் சிலர். அவன் யாரையும் பார்க்கவில்லை. முதல் இரண்டு வீடுகளில் எதுவும் கிடைக்கவில்லை. மூணாவது வீடு அதுவே பூட்டிக் கிடந்தது. நாலாவது வீட்டில் எதோ சாப்பிட எடுத்து வந்த ஒரு பெண் அவன் வெறுங்கையுடன் நிற்பதைப் பார்த்தாள். அவனிடம் பாத்திரம் எதுவும் இல்லை. அவளே உள்ளேபோய் ஒரு இலைக் கிழிசலில் உணவு, பிசைந்த சாம்பார் சாதம் கொண்டு வந்தாள். சூடாய் இருந்தது. அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்தாள். அவன் வாங்கிக் கொண்டான். தலை அசைக்கக் கூட இல்லை. நன்றி சொல்லக் கூட இல்லை. வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.
ஊரில் ரெண்டு கோஷ்டி உண்டு. அந்தப் பகுதி எம் எல் ஏ இதே ஊர்க்காரர் தான். தேரடி தெரு. எப்பவும் வாசலில் நாலு வண்டியாவது அங்கே நிற்கும். அவர் சொல்லும் ஏவல்களை எடுத்துச் செய்ய. குத்து வெட்டு அடிதடி ரகளை. கேட்டால் மாவீரர்கள் என்பார்கள். அடுத்தவன் செல்வன். கொஞ்சம் ஆஸ்திதி பூஸ்திதி உண்டு. பிதுரார்ஜிதம். மாடுகள் வைத்திருக்கிறான். கடவுள் எதிர்ப்பு கொள்கைக்காரன். முன்னோர் சொத்து வேணும். அவர் சொல் வேணாம்… பேச உற்சாகமா இருக்கிறதா இல்லியா? கோவில் உண்டியல்ல போடற பணத்தை எதாவது ஏழை பாழைகளுக்கு உதவி செய்யுங்கள், என்று மேடையேறி சத்தமாய்ப் பேசுவான். சிலருக்கு சாமி வந்தாப் போல ஆவேசமாய் எடுப்பு எடுத்தால்தான் பேசினாப் போல இருக்கிறது. நான் தமிழன்னு சொல்லவே ஆவேசப் பட வேண்டிய அவசியம் என்னவோ? பெரிய லோட்டாவில் காபி கேட்கிற ரகம். இவனுக்கும் சமூகப் பணி என்று சொல்லி பேர் வாங்க கொள்ளை ஆசை. நீங்க எல்லாம் முட்டாள்கள், என்று சொல்லி புகழ் பெற ஆரம்பித்த பின், தேர்தல், வாக்கு என்று போணியாகுமா? என்றாலும் மனுசன் என்றால் ஆசை இல்லாமல் எப்படி?
அவன் திரும்ப மலை ஏறப்போனான். அவனைப் பார்த்ததும் நாய் ஒன்று கூட ஓடி வந்தது. இந்த ஊர்ல கூட சோறு போடற ஆட்களைக் கண்டு பிடிச்சிட்டியே ஐயா, என அது அவனைப் பார்த்து ஆச்சர்யப் பட்டது. நாமளும் இப்படி வீட்டு முன்னால் கையை மடிச்சிக் கட்டி நிப்பமா? அவன் திரும்பிப் பார்த்தபடியே போனான். கூடவே நாயும் வந்தது. கை இலையைப் பிடுங்கி விடுமோ என அவன் யோசித்தாப் போலிருந்தது. என்ன தோணியதோ அவன் நின்றான். இலைப் பொதிவைப் பிரித்தான். நாய் உற்சாகப் பட்டு உடல் பூரா நெளித்தது. அந்த உணவு வாசனையை அப்படியே உள்ளே இழுத்தது. சூடாய் சாம்பார் சாதம். நாய்களுக்கு மனுசாளை எவ்வளவு புரிகிறது. அவன் ஒரு கை உணவு எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து நாய்க்கு நீட்டினான். நாக்கை நீட்டி அந்த உணவை சுவீகரித்துக் கொண்டது நாய். தொட்டுக்க எதும் வெச்சிருக்காளா மகாலெட்சுமி?
அடுத்த நாள் மலை ஏறிய மொட்டைகள் அந்த பால்கனிப் பாறையில் அவனுடன் நாயைப் பார்த்தார்கள். ஊரில் மனுசாளுக்கு முந்தி அவனுடன் அது பழகிக் கொண்டதோ? அவன் முன்னால், மகாதேவனின் முன்னால் நந்தி போல குந்தி யிருந்தது நாய். முன்காலை நீட்டி உட்கார்ந்திருந்தது. அவன் கட்டளைக்கு அது காத்திருந்தது. அவன் யாரிடமும் பேசுவது இல்லை. ஆனால் கட்டளைகள் அதற்குத் தேவை இல்லை. சமிக்ஞைகள். அல்லது மனமறிந்து செயலாற்றுதல். அது அவனை ரொம்ப அறிந்தாப் போல அவனைப் பணிந்து நடந்து கொண்டது. அவனுக்கு என்ன கிடைக்கிறதோ எனக்குப் போடுவான். சாப்பாட்டுப் பிரச்னை இல்லை அதற்கு. இதெல்லாம் பூர்வ ஜென்மத் தொடர்பாகக் கூட இருக்கலாம்.
அந்தத் தமிழன், இதை அவன் கேள்விப்பட்டான். யார்றா அது? கோமாளி?… என அவன் சிரித்தான். எளிய ஏழை பாழைகளை நக்கல் அடித்து சந்தோசப் படலாம். நமக்கும் பொழுது போகுது இல்லே. அடிவாரத்தோடு சரி. அவன் அந்த குன்றக்கோட்டத்து மலைப் படிகள் ஏறியதே கிடையாது. அவனது மாடுகள் அந்தப் பக்கம் மேயும். சின்னச் சின்ன குற்றுச் செடிகள். புற்கள் மண்டிய அந்த வளாகம் மாடுகள் மேயத் தோதான இடம். உயரத்தில் கோவில். அதன் மதில் சுவர் தாண்டி நாலு பக்கமும் வெளிப் பிராகாரம் போல நல்லா பத்து பன்னிரண்டடி இடம் இருந்தது. அதையும் சுற்றி வலம் வருகிற பக்திமான்கள் உண்டு. மதில் உள்ளே நந்தவனம் இருந்தது. சாமிக்கு பூஜைக்கான நந்தியாவட்டை, அரளி என பூ மரங்கள். மதில்களில், கோபுரத்தில் என மயில்கள் வந்து இறங்குவது உண்டு. அப்போது அதைப் பாரத்த சனங்கள் கிளர்ச்சியுற்று, “அரோகரா அரோகரா!” என்று பரவசப் பட்டார்கள். மதில் வெளியில் நிழல் ஒதுக்கத்தில் ஆட்டு இடையன்கள், மாட்டு மேய்ப்பர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களில் யாராவது புல்லாங்குழல் வைத்திருந்தால் எதாவது மெட்டு எடுப்பதும் உண்டு. அதைக் கேட்கிற சுகத்தில் வெயிலே தெரியாது. குமரகுருவுக்கான நாத ஆராதனை.
ஊர் பலவிதம். கடவுள் இல்லை, என அந்தக் கரையில் சிலர் வாழ்ந்தால், மகா பக்திமான்கள் சிலரும் ஊரில் இருந்தார்கள், இந்தக் கரையில். இவர்களும் தமிழர்கள் தான். தமிழர் என்று சொல்லிக் கொள்ளாத தமிழர்கள். ஒருநாள் பக்தர் ஒருவர், தமிழர் என்று சொல்லிக் கொள்ளாத தமிழர், மலை ஏறும்போது மழை பிடித்துக் கொண்டது. திடீரென்று காற்று கிளம்பி ஊ ஊவென்று மரங்கள் மடிந்து எழுந்தன. மாரியம்மன் திருவிழா சாமியாட்டம் போல. ஒதுங்க இடம் கிடையாது. பாதிப் படிகளில் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதும் ஒரே முயற்சிதான். நனையாமல் தப்ப முடியாது. அவர் பால்கனிப் பாறையைப் பார்த்தார். அவன். கூட நாய். அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.
மழை ஆரம்பித்தது. அந்த நாய், மேலே விழுந்த மழைத் துளிகளில் சட்டுச் சட்டென மேல்தோல் சிலிர்த்தது அதற்கு. முன்னே எட்டி வந்து அவன் முகத்தை நக்கியது அது. வா ஐயா. எழுந்திரு. எங்காவது ஒதுங்கலாம். அவன் ஒதுங்கவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான். தியானம் கலையாத மோன நிலை. நாய் என்ன செய்யலாம் என்று யோசித்தது. ராமன் இருக்கும் இடம் அயோத்தி. அது அவனுடனேயே மழையில் நனைய முடிவு செய்தது.
பக்தர் இங்கேயிருந்து, படிகளில் இருந்து பார்த்தார். கையில் அர்ச்சனைக்கு பூ பழம் வெத்தலை பாக்கு எல்லாம் வைத்திருந்தார். என்ன தோணியதோ அவனை நோக்கி “முருகா, முருகா” என்று ஓடினார். காலடியில் பூமி நழுவி நழுவி பின்னால் எதிர்த்திசையில் ஓடியது. அவன் முன்னே நின்றார் தமிழர். மூச்சிறைத்தது. தேங்காய் பையில் இருந்து நழுவி அவன் முன்னே விழுந்து, சரியாக ரெண்டு துண்டுகளாக உடைந்தது. ஆகா, என்று கத்தினார் பக்தர். சிறு இலைப் பொதிவில் இருந்து பூவை எடுத்து இலைமேல் வைத்தார். பழங்களையும் வைத்தார். மழை கொட்டிக் கொண்டிருந்தது. அவர் நனைந்தபடியே அப்படியே அங்கேயே அந்தப் பாறையில் விழுந்து வணங்கினார். அவன் கண்ணைத் திறக்கவில்லை. வெளி சப்தங்கள் எதுவும் அவன் கேட்டானா? கேட்டும் கண்ணைத் திறக்காமல் இருக்கிறானா? அவர் போய்விட்டார். அவன் கண்மூடி யிருந்தான். நாய் பார்த்தது. இலை. வாழைப்பழம். தேங்காய். ஒரு வாய் வைப்பமா என்று இருந்தது அதற்கு. இருந்தாலும் அது செயல்படவில்லை. எசமான் கண் விழிப்பார். விழிக்காமல் எங்க போவாரு? தன் பங்கைக் கட்டாயம் அவர் தருவார். தராம எங்க போவாரு? காத்திருந்தது அது.
அந்த பக்தர் மறுநாள் நாலைந்து பேருடன் வந்தார். அந்தப் பாறை மேலேயே ஒரு பந்தல் அமைத்துக் கொடுத்தார். அவன் ஊருக்கு உணவு தேடிப் போயிருந்தான். நாயும் போயிருந்தது. பின்னே? உணவு தேடி இல்ல போறாரு? அவன் திரும்பி வந்தபோது பக்தர் காத்திருந்தார். பந்தல். அவன் அமர ஒரு பாய் கைகட்டி வாய் பொத்தி பக்தர் வழி ஒதுங்கினார். அவன் போய் அந்தப் பாயில், நாயும் கூட அமர்ந்தது. ஒரு மஞ்சள் பூசிய பெண்மணி அவன் உட்கார்ந்ததும் அவனுக்கு தாம்பாளத்தை வைத்து பாதங்களைக் கழுவி, பூவைத்து, சந்தன குங்குமம் இட்டு, பாதபூஜை செய்தாள். நாய் பார்த்துக் கொண்டிருந்தது. உனக்கெல்லாம் பாத பூஜை கிடையாது. சிறு இலையில் சர்க்கரைப் பொங்கல் பரிமாறினார்கள். அவன் இலையை இன்னும் சின்னதாக் கிழித்தான். பக்கத்தில் நாய்க்கு வைத்தான். அதற்கும் பரிமாறினார்கள்.
“குழந்தை பாக்கியம் இல்ல சாமி” என்று நெகிழ்ந்தார் பக்தர். குறிப்பாகத் தமிழர். அவன் தன் முன் வைத்திருந்த ஒரு பழச் சீப்பில் இருந்து ஒரு பழத்தை மாத்திரம் பிய்த்தான். அந்தப் பெண்மணியை அருகே அழைத்தான். அவள் அவன்முன் வந்து வாய்பொத்தி குனிந்து நின்றாள். அவள் முந்தானையில் ஒரு பழத்தை வைத்து இடுப்பில் கட்டினான் அவன். “முருகா முருகா” என்று அழுதார் பக்தர்.
அதன் பிறகு அவனைத் தேடி வந்து உணவு படைக்க ஆரம்பித்தார்கள். அவன் கீழே அநேகமாக இறங்குவதே இல்லை. பக்கத்துப் பாறைகளில் சில மயில்கள் வந்து உட்கார்ந்து எழுந்து போயின. எப்பவாவது கீழ்க் குளத்துக்கு இறங்கி வருவான். குளியல் தெளியல் என்று சுத்தம் செய்து கொள்வான். ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த சனங்கள் அவனுக்கு ஒதுங்கி வழி விட்டார்கள். அவன் குளித்துவிட்டு படியேறியபோது அவன் பாதம் பட்ட இடங்களைத் தொட்டு அவர்கள் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவன் எதையும் கவனிக்கவில்லை. ஊரில் தன்னைப்போல அவனுக்கு மௌனசாமி என்று பெயர் ஏற்பட்டிருந்தது.
தேர்தல் வந்தது. அந்த முறை ஊர்ப் பணக்காரனுக்கு, தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தமிழனுக்கு தேர்தலில் போட்டியிட ஆசை வந்தது. ஏற்கனவே இருந்த எம் எல் ஏ செல்வாக்கானவர் தான். அவரை வீழ்த்தி ஜெயிப்பது சாமானியக் காரியம் அல்ல, என்று சகாக்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் சாமானியன் அல்ல, என்றான் செல்வன். திடீரென்று ஒருநாள் செல்வன் “முருகா,” என எழுந்து கொண்டான். உடம்பே பரவசத்தில் ஆடியது. முருகன் தமிழ்க் கடவுள், என்றான். தேர்தல் நெருங்கி வந்தது. மேடையில் பேச்சுகள் பிரச்சாரம் எங்கிலும் கையில் வேல் எந்தி முழங்கினான். தன் பேச்சில் அபார நம்பிக்கையும் சுய மோகமும் அவனை ஆட்டுவித்தது. பேசும்போது ஒரு சாமியாட்டம் ஆவேசம் வந்தது அவனுக்கு. எல்லாம் முருகன் அருள்.
பால்கனிப் பாறையின் பந்தல் இப்போது பெரிதாகி யிருந்தது. மௌனசாமி கண்மூடி இருந்தது. செல்வன் படிகள் ஏறி, அதுவரை அந்தப படிகளில் தன் மாட்டைத் தேடிக் கூட அவன் ஏறியது கிடையாது, அந்த பால்கனிப் பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் நாய் பெருங் குரல் எடுத்துக் குரைத்தது. ஏன் தெரியவில்லை. மௌனசாமி முன் கைகட்டி நின்றான் செல்வன். கூட சிறு படை. “சாமி அவசியம் நீங்க நம்ம ஜாகைக்கு போஜனம் பண்ண வரணும்…” மௌனசாமி அவனையே பார்த்தது. அது என்ன பதில் சொல்லப் போகிறது என்று எல்லாரும் காத்திருந்தார்கள். செல்வனே கொஞ்சம் பதட்டமாய்த் தான் பார்த்துக் கொண்டிருந்த்ன். சரி, என்கிறாப்போல தலையாட்டியது சாமி. ஹா என்று சிலிர்த்தான் பணக்காரன்.
காலையில் குளித்து முடித்து நெற்றியில் பட்டையாய்த் திருநீறு பூசி காவி வேட்டி காவித் துண்டை உதறி அணிந்துகொண்டு சாமி கிளம்பியது. சாமி செல்வன் வீட்டில் சாப்பிட ஒத்துக்கொண்டது ஊருக்கே தெரிந்திருந்தது. செல்வன் வீட்டில் அத்தனை கூட்டம். அவன் வீட்டில் கூடத்தில் பெரிய வேல் ஒன்று நிறுத்தப்பட்டு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, என எழுதியிருந்தது. அதன் பக்கத்தில். சாமி வர கூட்டம் விலகி வழி விட்டது. சாமியை முன்னே வந்து வரவேற்ற ஒரு பெண்மணி, அவள் வயிறு சற்று வீங்கியிருந்தது. அவள் முழுகாமல் இருந்தாள். கூட அவள் கணவர். “முருகா, வாங்க முருகா” என பரவசத்துடன் அழைத்தார். செல்வனுக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது. வீடு, அவன் வீடு,. இங்கே சாமிக்குக் கிடைக்கும் இந்த மரியாதை… சாமியைப் பார்க்கவே பயமாய் இருந்தது அவனுக்கு.
சாமியை உட்கார வைத்துப் பரிமாறினார்கள். கூடவே அந்த நாய். பக்கத்தில் அதற்கும் ஒரு இலை. அதுவும் வாலை ஆட்டியபடியே திருப்தியாய் உண்டது. அதே ஊர் நாய்தான் அது. எத்தனை கல்லடி வாங்கியிருக்கும்? இப்போது இவர்களையிட்டு அதற்கு பயம் இல்லை. பாதி சாப்பாட்டில் அது எழுந்து போய்விட்டால் அவர்கள் அழுது விடுவார்கள். சாமி சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தது. கூடவே நாய். அதற்கும் சைக்கிளின் ப்ரீவீலில் போடுவது போல கழுத்தைச் சுற்றிக் கட்டிய பூ மாலை. வரிசையாய் ஒவ்வொருவராய் வந்தார்கள். சாமி எல்லாருக்கும் விபூதி தந்தது. செல்வன் அவனும் ஓரடி முன்னே வந்து பணிந்து அந்த விபூதியை வாங்கி கண்ணைமூடி “முருகா” என்று சத்தமாய்ச் சொல்லி பூசிக் கொண்டான்.
திடீரென்று சாமிக்கு உடம்பு நடுங்கியது. அவர் முன் நீண்ட வளையல் கை. அந்த மணிக்கட்டுப் பக்க சிறு மச்சம். சட்டென தலையை உயர்த்தி சாமி பார்க்க நினைத்து, தன்னை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டது. காலில் மெட்டி தெரிந்தது. கல்யாணம் ஆயிருக்கும். சாமி ரொம்ப அலுப்பாய் உணர்ந்தது. அவள்தானா? காரிலேயே மலை அடிவாரத்தில் செல்வன் சாமியை இறக்கி விட்டான். நிமிர்ந்து பார்த்திருக்கலாமோ? சாமி போய்ப் பந்தலில் படுத்துக் கொண்டது. உடம்பு சரியில்லையா? சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லையா? நாய் சாமியை விநோதமய்ப் பார்த்தது.
என்னடா நடக்குது இங்க, என்று எம் எல் ஏ ஆத்திரப்பட்டார். செல்வனின் காரியங்கள் அவருக்குப் புரியவில்லை. தனக்கு எதிரான சதி ஏதோ நடப்பதாக அவர் உணர்ந்தார். அவருக்கு ஏனோ படபடப்பாய் இருந்தது. அவர் பயம் நியாயமே. அந்தத் தேர்தலில் அவர் தோற்றுப் போனார். செல்வன் வெற்றி பெற்றான். செல்வன் தாரை தப்பட்டையுடன் குன்றப் படிகள் ஏறி வந்தான். மௌனசாமிக்கு மாலை மரியாதை செய்து சால்வை போர்த்தினான். “ஒரு மண்டபம் கட்டிருவோம் சாமிக்கு” என்றான் உற்சாகமாய். எல்லாரும் தலையாட்டினார்கள். சாமி எதுவும் பேசவில்லை. அதன் முகத்தின் அந்த தேஜஸ் கொஞ்.சம் உள்வாங்கினாப் போலத்தான் இருந்தது.
அன்றைக்கு ராத்திரியே முன்னாள் எம் எல் ஏ ஆட்கள் ஒரு காரியம் செய்தார்கள். ராத்திரி கூட அல்ல. அந்தி சாய்ந்து இருள் நுழையும் நேரம். செல்வனின் மாடு ஒன்.று பந்தலுக்குப் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. மாடு மேய்க்கிறவன் எங்க இருக்கானோ? புல்லாங்குழல வாசித்துக் கொண்டிருந்தான். இசை மாத்திரம் கேட்டது. அழகான பொழுது. மாட்டைத் திரும்ப ஓட்டிப் போகிற நேரம்தான். திடீரென்று மாடு ஒன்று அலறும் சத்தம். செல்வனின் மாடு அது. நீளக் கத்திகளால் அதை மாற்றி மாற்றிக் குத்திவிட்டு யாரோ இருளில் ஒடினாரகள்.
சாமி கண்மூடி உட்கார்ந்திருந்தது. அதனால் தியானம் செய்ய முடியவில்லை. குழல் இசை அதற்கு துயரம் தருவதாய் இருந்தது. மனம் கட்டுப்பட முடியாத அளவு தத்தளிப்பதாக உணர்ந்தது சாமி. திடீரென்று நாய் எழுந்து கொள்வதை மௌனசாமி பார்த்தது. மாட்டின் அலறல் ஓய்ந்திருந்தது. இரத்த வெள்ளத்தில் அசைவற்று சடலமாய்க் கிடந்தது மாடு. அதன் கண்கள் தெறித்து வந்திருந்தன. அது கிடந்த கிடக்கை கோரமாய் முகத்தில் அறைந்தது. ஊன் பிதுங்கி ரத்தம் வழிந்திருந்தது. கடுமையான ரத்த வாடை. அதுவரை எத்தனை பவித்ரமாய் இருந்தது அந்தப் பிரதேசம். நாய் உற்சாகமாய் அதை நோக்கி ஓடுவதை சாமி பார்த்தது. மாட்டின் பிய்ந்த சதையைக் கவ்வி வெளியே இழுத்து அவ்க் அவ்க் என்று கடித்தது நாய்.