இரு பள்ளிகள்

Kid_Wall

ஈரோடு சின்னப்பாளையம் அமெரிக்கன் மிஷன் உறைவிடப் பள்ளியில் பயின்று மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற கிருஸ்டி சிறிலும் குடவாசல் தேசிய மேனிலைப் பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சோமசுந்தரமும் பட்டப்படிப்பு முடித்த பின்னர் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தேர்வுகளை சலிக்காமல் எழுதி சிதம்பரம் யுனைடட் இந்தியா இன்ஷ்யூரண்ஸில் எழுத்தர் பணியில் ஒரே நாளில் இணைந்தார்கள்.கல்வியும் பணியும் இருவருக்கும் பொதுவாயிருக்க பொது அல்லாத விஷயங்கள் பல இருந்தன.எனினும் பிறரின் கண்களில் முதல் பார்வைக்குத் தென்பட்ட ஒற்றுமை அவர்கள் இருவரையும் ஒன்றாக எண்ணச் செய்தது.மனித உறவுகளின் விசித்திரம் காரணமாக அவ்விருவரும் அவர்கள் ஒற்றுமை தற்செயலானது என நம்ப முற்பட்டு பின்னர் அவர்களுக்குள் வேறு ஒற்றுமை ஏதேனும் இருக்கிறதா என அறிய முற்பட்டனர்.ஒவ்வொருவரும் அடுத்தவரில் தாங்கள் விரும்பும் அம்சத்தைக் காண முயன்றனர்.அம்முயற்சி துவக்கத்தில் வேறுபட்ட பழக்கங்களையும் சுபாவங்களையுமே அடையாளம் காட்டியது.
நீளமான கைகளையும் அகலமான தோள்களையும் கொண்ட கிருஸ்டி உயரமான தோற்றம் கொண்டவர்.கூர்மையான நாசியும் அழகான பெரிய கண்களின் மேல் திரையென அமைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியும் ஒரு கம்பீரத்தை அவரது தோற்றத்துக்கு அளிக்கும்.புது வெள்ளத்தின் நுரை போன்ற தலைமுடி குறைவான அடர்த்தியுடன் இருக்கும்.ஈர்ப்பு மிக்க தோற்றமும் எளிமையான ஆடை அணிமுறையும் உடையவர் கிருஸ்டி.முகத்துக்கு பவுடர் கிடையாது.சாயம் கிடையாது.கைகளில் சில நாட்கள் தங்க வளையல்கள்.சில நாட்கள் ஆடையின் வண்ணங்களுக்கேற்ற பிளாஸ்டிக் வளையல்கள்.இசையாய் ஒலிக்கும் கண்ணாடி வளையல்கள்.காதில் தோடு இல்லாத கம்மல் மட்டும்.கிருஸ்டி துடிப்பும் ஆர்வமும் மிக்க இயல்பு கொண்டவர். தன் பெயருடன் தந்தையின் பெயரையும் இணைத்து கிருஸ்டி சிறில் என்றே கூறுவார்.அவர் பெயருக்கும் அவருக்கிருந்த அளவுக்கே ஈர்ப்பு இருந்தது.பெயரைக் கேட்பவர்களுக்கு இரு பெயர் இணைந்து இருப்பது நூதனமாக இருக்கும்.மனதுக்குள் சொல்லிப் பார்ப்பார்கள்.இரண்டும் இணையாமல் உள்ளதாக எண்ணுவார்கள்.பின்னர்,மிகப் பொருத்தமாக இணைந்திருப்பதாகவும்.தயக்கத்துடன் சிறில் என இழுப்பார்கள்.’’எனது தந்தை.விவசாயத் தொழிலாளியாக இருந்தார்.மஞ்சள் காமாலையால் இறந்தார்.’’என தெளிவான குரலில் திடமாக பதிலுரைப்பார் கிருஸ்டி.இனிமையாகப் பழகுவதும் எதற்கும் சினம் கொள்ளாமல் இருப்பதும் மென்மையாகப் பேசுவதும் எதற்கும் அஞ்சாமல் இருப்பதும் கிருஸ்டியின் இயல்புகள்.தேக்கம் என்பது பரவலான இயல்பாக இருக்கும் காப்பீட்டு அலுவலகங்களில் அலுவலர்களும் ஊக்கமில்லாதவர்களாக மனம் மரத்துப் போன இயல்புடன் சில்லறை விவகாரங்கள் மற்றும் வம்புடன் நாளின் பெரும்பகுதியைச் செலவிடும் வாழ்முறையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.சிலரே விதிவிலக்கு.அலுவலக வணிகத்திற்கு பொறுப்பேற்கும் மேலாளர்,தொழிற்சங்க செயல்பாட்டாளர்கள்,சுபாவத்திலேயே மந்தம் இல்லாதவர்கள் ஆகியோரே சற்று மாறுபட்டவர்கள்.அதிலும் மேலாளருக்கு அலுவலர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற மனத்தாங்கல் இருக்கும்.தொழிற்சங்கத்தில் அரசியலும் சச்சரவுகளும்.இந்திய அலுவலகங்களை நடத்த ஒரு பொது விதி உண்டு:வேலை செய்பவர்களுக்கு வேலையைக் கொடு.சும்மா இருப்பவர்களுக்கு ஊதியம் கொடு.
சோமசுந்தரம் தான் சுந்தர் என அழைக்கப்படுவதையே விரும்புவார்.பெயரைக் கேட்டால் சுந்தர் என்றே கூறுவார்.வீட்டில் சுருக்கமாக கூப்பிட்டு அதுவே பழகி விட்டது என்பதே காரணம்.நீடாமங்கலத்தில் இருந்த ஒரு பெரிய பண்ணைக் குடும்பத்தைச் சேர்ந்த நாராயண ஐயர் என்பவர் தனது மனைவியை அவளது முதல் பிரசவத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதம் காரணமாக இழந்தார்.சிசுவையும் காக்க முடியவில்லை.நாற்பதாவது நாள் காரியம் முடிந்தது.வழக்கறிஞர்களை அழைத்து தவறிப் போன மனைவியின் பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்கச் சொன்னார்.தனது தம்பியை அழைத்தார்.
“சொத்து மனுஷனுக்கு ஒரு அளவு வரைக்குந்தான் பயன்படும்.அது பயன்படாத ஒரு நேரமும் வாழ்க்கையில வரும்.ரெண்டையும் நான் பார்த்துட்டேன்.மனுஷன்ல வேண்டியவன் வேண்டாதவன்னு இருக்க முடியாது.இந்த ஊர்ல ஒரு ஆஸ்பத்திரி நடத்து.ஸ்கூல் படிப்போ காலேஜ் படிப்போ படிக்க உதவின்னு வந்து கேட்டா ஃபீஸ் கட்டி படிக்க வை’’
அவர் சொற்கள் மிகச் சாதாரணமாகவே ஒலித்தன.நாராயண ஐயரின் சகோதரர் திகைத்தார்.சுற்றி இருந்தவர்கள் கலங்கினர்.வீட்டில் இருந்த பெண்கள் விசும்பினர்.யாராலும் ஒரு சொல்லும் பேச முடியவில்லை.அதன்பின் இரண்டு நாட்கள்.மைதிலி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு தனது சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு அளித்தார்.பதினைந்து வேலி நிலம்.நீடாமங்கலத்தில் இருந்த மூன்று பங்களா.சென்னையில் இருந்த ஒரு வீடு.அறங்காவலர் என்ற முறையில் ஒரு பங்களாவை தனது தம்பி கேசவ ஐயரும் அவரது வாரிசுகளும் அனுபவிக்கலாம் என அனுமதி அளித்திருந்தார்.எண்ணிக்கையில் பெரிய குடும்பம்.மைதிலி அம்மாளின் மரணத்திலிருந்தே அவர்கள் மீளவில்லை.அறக்கட்டளை உருவான மறுநாள் காலை எப்போதும் போலவே விடிந்தது.வீட்டில் நாராயண ஐயர் இல்லை.கும்பகோணத்துக்கும் தஞ்சாவூருக்கும் திருவாரூருக்கும் ஏன் சென்னைக்கும் கூட ஆட்கள் தேடிச் சென்றனர்.எந்த தகவலும் இல்லை.
கேசவ ஐயர் நேர்மையான மனிதர்.தந்தை எழுதி வைத்த சொத்தே பதினைந்து வேலி இருந்தது.அறக்கட்டளையை செவ்வனே நடத்தினார்.முதலில் ஒரு பங்களா மைதிலி கிளினிக் ஆனது.கும்பகோணத்திலிருந்து ஒரு டாக்டர் தினமும் மாலை வந்து மூன்று மணி நேரம் பார்ப்பார்.அன்றாடப்பாடுக்கு சிரமப்படுபவர்களுக்கு மருந்தும் கொடுத்து விடுவார்கள்.மருத்துவருக்கு மாத ஊதியம்.தர்ம நிறுவனங்களுக்குரிய ஏனோ தானோ தன்மை இல்லாமல் சீரான நிர்வாகம் கிளினிக்கில் இருந்தது.
டிரஸ்டு நிலத்தையோ தனது சொந்த நிலத்தையோ கேசவ ஐயர் குத்தகைக்குத் தரவில்லை.தஞ்சை மாவட்டத்தின் நிலக்கிழார் மனோபாவம் அவருக்கு இல்லை.குத்தகைக்குத் தந்திருந்தால் ரூபாய்க்கு பத்து பைசா கூட தேறியிருக்காது.தர்மம் செய்வது இருக்கட்டும்.சொந்தப்பாடுக்கு ஏதாவது உத்யோகம் பார்க்க வேண்டிய நிலை வந்திருக்கும்.கட்டளை நிலத்தில் மூன்றில் இரு பங்கிலும் சொந்த நிலத்தில் பாதியிலும் தேக்கு மரங்களை நடவு செய்தார்.நிலத்தைச் சுற்றிலும் முறையான வேலி அமைப்பதற்கே பெரும் செலவு பிடித்தது.நாராயண ஐயர் வெளியேறிய பின் ஐந்து ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டார்.நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தாலும் பாதிப்பு கணிசமாக இருந்தது.இழுத்துப் பிடித்து சமாளித்து ஒரு அடித்தளத்தை வலுவாக உருவாக்கிக் கொண்டார்.அதன் பின்னரே அவரது திருமணம்.திருச்சியில் கல்லூரி பேராசிரியராயிருந்தவரின் ஒரே மகளான லலிதாவை திருமணம் செய்து கொண்டார்.அத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை.பெயர் மைதிலி.
நீடாமங்கலம் ஐம்பது ஆண்டுகளாகப் பேசும் கதை இது.இப்போது மைதிலியின் பேரன் பேத்திகள் பூர்வீகத்திலும் அமெரிக்காவிலும் ஃபிரான்ஸிலும் இருக்கிறார்கள்.டிரஸ்டு சொத்து ஒப்பீட்டளவில் சாதாரணம் என்னும் அளவுக்கு அவர்களின் வருட சம்பாதித்யம் இருக்கிறது.ஆனாலும் நாராயண ஐயர் விரும்பியவாறே அறக்கட்டளை நடக்கிறது.கும்பகோணத்திலும் திருவாரூரிலும் பலவிதமான மருத்துவமனைகள் வந்துவிட்டதால் மைதிலி கிளினிக்கின் மவுசு இப்போது குறைந்துள்ளது.மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஒரு டாக்டர் இப்போதும் பார்க்கிறார்.வயலும் வயல் சார்ந்த வாழ்வும் உருவாக்கும் மாறாத்தன்மையும் சலிப்பும் சாராயத்தையும் அரசியலையும் ஊருக்குள் கொண்டு வந்தன.ஊரிலிருந்து உத்யோகம் பார்க்க எங்காவது போனால்தான் விமோசனம் என நம்புபவர்கள் பலர் இருந்ததால் கல்விக்கான உதவி கேட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருந்தது.எடுத்துக் கொண்ட விஷயத்தில் உறுதியாக இருந்தனர் கேசவ ஐயர் குடும்பத்தினர்.டிரஸ்டு நிலத்தில் வளர்த்த தேக்கை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒரு மலையாள மர வியாபாரியிடம் விற்பனை செய்தார் கேசவ ஐயர்.கிடைத்த பெரும்பணத்தைக் கொண்டு நேஷனல் எலிமெண்டரி ஸ்கூலை ஆரம்பித்தார்.பின்னர் அது உயர்பள்ளியாகி இப்போது மேனிலைப் பள்ளியாக இருக்கிறது.
நாராயண ஐயர் பங்களாவுக்கு எதிரில் இருந்த திடலில் ஓர் அரச மரமும் ஒரு வேப்ப மரமும் மிக அருகில் வளர்ந்தன.மைதிலி அம்மாள் மரணத்துக்குப் பின் அவை சற்றே பெரிய மரங்களானதும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அந்திப் பொழுதில் அகல்விளக்கு ஏற்றி வழிபடத் துவங்கினர்.கிளினிக்கில் வைத்தியம் பெற்று குணம் அடைந்தவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள்,திருமணத்துக்கு காத்திருக்கும் இளம்பெண்கள்,தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டனர்.கேசவ ஐயர் அங்கே ஒரு நாகப்பிரதிட்டை செய்தார்.பின்னிக் கொண்டிருக்கும் இரு நாகங்கள்.இணையும் நாகங்கள்.பூசல் கொள்ளும் நாகங்கள்.முரண்படும் நாகங்கள்.விளையாடும் நாகங்கள்.பின்னர் ஓர் ஆனைமுகனை அம்மரத்தடியில் நிறுவினர்.
தஞ்சாவூர் ஜில்லாவின் பெரிய குடும்பங்களுக்கு தானாகவே சேரும் துதிபாடிகளின் கூட்டம் தான் எல்லா தீமைகளுக்கும் துவக்கம்.குடி,சீட்டாட்டம்,குதிரை இன்ன பிற.இப்பழக்கங்கள் இல்லாமல் இருக்கும் குடும்பங்கள் பெரியவையாகவே நீடித்தன.நீடாமங்கலத்தின் எல்லா குடும்பங்களுமே இந்த கதையைக் கூறி தங்கள் கதைக்கு வருவர்.நேஷனல் பள்ளியில் படித்தவர்களே அவ்வூரில் பெரும்பான்மையானோர்.சோமசுந்தரத்தின் தந்தை கணபதி பிள்ளை மைதிலி டிரஸ்டின் கணக்கு வழக்கை பார்ப்பவர்.தனது பதினாறு வயதில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு இப்போது ஐம்பது ஆண்டு பணி அனுபவம் கிடைத்திருக்கிறது.
காலை ஐந்து மணிக்கு விழிப்பு தட்டி விடும் கணபதி பிள்ளைக்கு.போர்வையை மடித்து வைத்து விட்டு பாயை சுருட்டி வைப்பார்.ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு திண்ணையில் வந்து அமர்வார்.வருடக்கணக்காக ஒரே செயலை செய்வதால் உருவாகும் சோர்வு முதலில் வரும்.வானம் வெளுப்பதற்கு தயாராகும்.விடிவெள்ளியைப் பார்ப்பார்.சோர்வில்லாமல் சலிப்பில்லாமல் தான் உதயத்தின் வருகைக்கு கட்டியம் கூறுகிறது.ஏன் மனிதன் மட்டும் சோர்ந்து விடுகிறான்சிட்டுக்குருவிகள் திண்ணைக்கு வரும்.கனத்த கார்வையுடன் காகங்கள் கரையும்.வாழ்க்கை காக்கை குருவிகள் விடிவெள்ளி கதிரவனுடன் தான் அமைந்திருக்கிறது என எண்ணுவார்.காலைக்கடன் முடித்து கிணற்றில் நீர் மொண்டு தலையில் ஊற்றிக் கொள்வார்.ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என கூறிக்கொண்டே தலையில் ஊற்றுவார்.வங்காளத்திலிருந்து ஒரு பக்த கோஷ்டி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் போது நீடாமங்கலம் வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். காங்ரேஜ் காளை மாடுகள் இழுக்கும் வண்டியில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக பிச்சை எடுத்துக் கொண்டு பஜனை பாடி நாடு முழுதும் செல்லும் கோஷ்டிகளில் ஒன்று அது.அவர்களிடம் ஊருக்கு வர வேண்டும் என விண்ணப்பித்து ஒரு கல்யாண மண்டபத்தில் இரண்டு நாட்கள் தங்க வைத்திருந்தார் கேசவ ஐயர்.ஏற்பாடுகளை கணபதி பிள்ளை பார்த்த போது அக்குழுவிலிருந்த ஒருவர் தினமும் தலையில் நீர் ஊற்றிக் கொள்ளும் போது இவ்வாறு செய்யுமாறு சொல்லியிருந்தார்.பிள்ளைவாள் வருடக்கணக்காக அப்படியே செய்கிறார். ஒவ்வொரு முறை ஊற்றும் போதும் அம்மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமாக நினைவில் கொண்டு வருவார்.நாற்பது வாளி தண்ணீர் தலையிலும் உடலிலும் கொட்டப்பட்டதும் கோடைக்காலமானாலும் குளிரும்.கணக்கு எழுதுவது வேலை என்பதால் குளிப்பதிலும் மந்திரம் சொல்வதிலும் கூட ஒரு கணக்கும் இரு வேலைகளின் இணைப்பும் வந்து விட்டதா என்ற ஐயம் அவருக்கு தினமும் எழும்.வெள்ளாடை மட்டுமே அணிவார்.சில வீடுகள் தள்ளி இருக்கும் கட்டளையின் காரியாலயத்துக்குப் போவார்.அவர் போகும் நேரத்தில் ஒரு கிழவி கூட்டிக் கொண்டிருப்பாள்.அவரைப் பார்த்ததும் அவசரமாக கூட்டி முடிப்பாள்.வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.தனது இருக்கையில் சென்று அமர்வார்.அவர் செய்ய வேண்டிய பணிகள் எடுக்க வேண்டிய முடிவுகள் ஆகியவற்றை முதல் நாளே முடித்திருப்பார்.யாராவது புதிதாக வந்தால்தான் உண்டு.சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு மரத்தடி ஆனைமுகன் சிற்றாலயத்துக்குச் செல்வார்.வானில் கிளைக் கரங்களை விரித்து பரப்பியிருக்கும் அரசடியில் குழந்தையாகவும் தெய்வமாகவும் மூஞ்சுறு வாகனத்தில் அமர்ந்திருக்கும் கணபதியை கண்டு வணங்குவார்.இந்தக் குழந்தைதான் சிவனின் படைகளை வழிநடத்தியதா?வீட்டுக்குத் திரும்பி வருவார்.வீட்டு அம்மா எழுந்து குளித்து பூசனைக்குத் தேவையான மலர்களைப் பறித்து வைத்து தயாராக இருப்பார்.தேவாரம் பாடுவார்.அதிகமும் திருஞானசம்பந்தர்.பூஜை முடித்து காலை உணவு முடித்து அறக்கட்டளை அலுவலகத்துக்கு செல்வார்.
நிலப்பிரபுத்துவ கூறுகள் மிகுந்திருக்கும் அச்சிற்றூரில் எல்லாருக்குமே பலவிதமான மனிதர்கள் கூடிப் பிரியும் ஒரு பட்டணத்தைப் பற்றிய கனவு இருந்தது.அக்கனவே அவர்களை படிப்பை நோக்கி இட்டுச் சென்றது.மாநகரங்கள் கூடிப் பிரிவதைப் பார்க்கிறோம்.ஆனால் அங்கே மனிதர்கள் விவசாய மண்ணின் மனிதர்களை விட கூட்டு வாழ்க்கையில் பழக்கம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.விவசாயம் கூட்டு வாழ்க்கைக்கான பழக்கத்தை உருவாக்கவில்லை.ஆனால் எப்படியெல்லாம் முரண்பட்டுக் கொள்ள முடியும் என்பதன் வகைமாதிரிகளில் பரிச்சயம் கொண்டிருந்தனர்.சுந்தருக்கு ஒரு இலகுவான வாழ்க்கை பிறப்பிலேயே அமைந்து விட்டது.பெரும் செல்வத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு வாழ்க்கை அவரது தந்தைக்கு வாய்த்திருந்தது.முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் ஊதியத்தைத் தாண்டி வசதிகளும் அங்கீகாரமும் இருந்தது.கேசவ ஐயருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்ததால் பள்ளி ஆசிரியர்கள்,கிளினிக் மருத்துவர்,கடைவீதியில் கடை வைத்திருப்பவர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் மரியாதையைப் பெற்றிருந்தார்.மேற்படியார்களின் மதிப்பு பெற்றவர் ஊராரால் ஏற்கப்படுவது இயல்புதானே!
சுந்தர் எழுத்தர் உத்தியோகத்தில் பொருந்திப் போனதற்கு அவரது தந்தையும் கணக்குப் பிள்ளையாய் இருந்தவர் என்பதைத் தாண்டி நீடாமங்கலம் நேஷனல் பள்ளியின் இயங்குமுறையும் ஒரு முக்கிய காரணம்.பள்ளி தினமும் காலை பத்து மணிக்குத்தான் துவங்கும்.குடியானவர்கள் வீட்டு மாணாக்கர் கருக்கலிலேயே வயலுக்குச் சென்று வயல் வேலைகளில் தந்தையருக்கு ஒத்தாசை செய்து விட்டு சாவகாசமாக வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு கிளம்புவார்கள்.பத்து மணிக்கு வகுப்புகள் துவங்கி விடாது.மைதானத்தில் கூட்டு வழிபாட்டுக்காக அனைவரும் கூடுவர்.ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை படிக்கும் மாணவர்கள் கூடுவர்.ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் அனைவரும் வந்து விடுவார்கள்.தேவாரமும் பிரபந்தமும் இறை வணக்கப் பாடல்கள்.மாணவ மாணவிகளுடன் ஆசிரியைகளும் இணைந்து பாடுவார்கள்.பகவத்கீதையிலிருந்து சில சுலோகங்கள்.பள்ளிக் குறிப்புகள் வழங்கப்படும்.அதன் பின்னர் தேசிய கீதம்.மாணவர்கள் கலைந்து வகுப்புக்குச் செல்வர்.பத்து மணிக்கு ஆரம்பிக்கும் இவை நிறைவு பெற இருபது நிமிடமாவது ஆகி விடும்.முதல் பிரிவேளையில் பாதி கடந்து விடும்.வகுப்பில் வந்து வருகைப் பதிவேடு குறிக்க ஐந்து நிமிடமாவது தேவை.தினமும் பத்தரை ஆகும் வகுப்புகள் ஆரம்பிக்க.அமாவாசை தினம் என்றால் பள்ளி பதினோரு மணிக்குத்தான் ஆரம்பிக்கும்.கூட்டு வழிபாடு அன்று கிடையாது.வகுப்பிலேயே வழிபாட்டுப் பாடல்களை பாடிக் கொள்ள வேண்டும்.பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை காலைப் பகுதி.மதியம் இரண்டு மணியிலிருந்து நாலரை மணி வரை மதியம் பகுதி.ஆற அமர பள்ளிக்கு கிளம்புவது என்பது அப்படித்தான் பழக்கமானது.மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வர்:ஐந்தரை மணி நேரம் தான் பள்ளி நடக்கிறது.காலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் உணவுக்கு ஒரு மணி நேரம் விட்டால் கூட மதியம் பன்னிரண்டரை மணிக்கு வீட்டுக்கு சென்று விடலாம்.மதியம் முழுக்க லீவு
பள்ளியின் மீதும் மாணாக்கர் மீதும் பிரியமும் வாஞ்சையும் கொண்ட மகத்தான ஆசிரியர்கள் பலர் அப்பள்ளிக்கு வாய்த்திருந்தனர்.கம்பராமாயணத்தை மனப்பாடமாய் வைத்திருந்த சேஷாத்ரி சார்.சம்பிரதாயமான முறையில் ஆங்கிலம் எழுத கற்றுத் தந்த கஸ்தூரி டீச்சர்.கணிதம் தன்னுள் ஓர் அழகைக் கொண்டுள்ளது என்பதை உணர வைக்கும் ராமகிருஷ்ணன் சார்.அறிவியல் ஆசிரியரான சீனிவாசன் சார்.உலக வரைபடத்தையும் இந்திய வரலாறையும் காந்தியையும் நேருவையும் ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் விவேகானந்தரையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விசுவநாதன் சார்.
கணபதி பிள்ளை சொல்வார்:“ஒரு ஸ்தாபனம் எப்படி நடக்கணும்ணு தீர்மானிக்கிறது அது அமைஞ்சிருக்கிற மண்.அந்த மண்ணுக்கு தன் மேலே நடக்கிற விஷயம் மேல நம்பிக்கை இருக்கணும்.மண்ணோட நம்பிக்கைக்கு பாத்திரமா மனுஷன் நடந்துக்கணும்.திருவள்ளுவர் நிலமென்னும் நல்லாள்னு சொல்றார்.மண்ணோட ராசிக்கு அப்புறம் தான் மனுஷனோட ராசி.நாம வானத்தை அண்ணாந்து பார்த்தே பழகிட்டோம்.கடவுள் அங்க தான் இருக்கார்ன்னு முடிவு பண்ணிட்ட மாதிரி.விதையை விருட்சமாக்குற கடவுள் ஏன் மண்ணுக்குள்ள இருக்கக்கூடாது.”
”தர்ம சிந்தனையை உலகத்துல முழுக்க இல்லாமல் செய்துட முடியாதுங்கறத்துக்கு நம்ம டிரஸ்டு ஒரு உதாரணம்.ஆயிரம் வருஷம் முன்னால சோழ ராஜா செய்ததும் இதுதான்.மக்கள்ட்டயிருந்து வந்த வருமானத்தை மக்களுக்கே கோயிலா குளமா சத்திரமா திருப்பிக் கொடுத்தான்.அப்பப்ப மறந்துடறோம்னாலும் இன்னைக்கும் அவனை நினைச்சுப் பாக்கறோம்”.
கணபதி பிள்ளை தடைகளைத் தாண்டி வளர்ந்தவர் அல்ல.அவர் செய்த வேலையைப் பற்றிய அறிவு அவருக்கு முழுமையாயிருந்தது.நேர்மையானவராய் இருந்தவராதலால் நம்பிக்கைக்குரியவராயிருந்தார்.வாழ்வில் பணத்தட்டோ தானியத்தட்டோ இல்லை.எப்போதும் பத்து பேருக்கு அறிவுரை கூறும் இடத்திலேயே அவர் இருந்துவிட்டார்.
ஒரே நாளில் பணியில் இணைந்தவர்கள் என்பதால் சுந்தரும் கிருஸ்டி சிறிலும் பயிற்சிக் காலத்தை ஒரே நாளில் முடித்து பணி நிரந்தரம் பெற்றார்கள்.அரசு உத்யோகத்தில் அத்தருணம் கொண்டாட வேண்டிய ஒன்று என்பதால் சுந்தர் கிருஸ்டியிடம் கேட்டான்:இங்கே பக்கத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோவில் உள்ளது.ஞாயிற்றுக்கிழமை சென்று வரலாமா?கிருஸ்டிக்கு லேசான தயக்கம்.ஆனாலும் ஒரு நாளைக்காவது பணி புரியும் ஊரை விட்டு வெளியே செல்வது என்ற எண்ணமே மனதுக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்தது.சுந்தர் தனது நண்பர் ஒருவரின் மாருதி காரை எடுத்து வந்தான்.ஊர் எல்லையைத் தாண்டுவதற்குள் அலுவலகத்தில் உலவும் பொது வம்புகளை மிகச் சுருக்கமாக பேசி முடித்தனர்.புறவழிச்சாலையைக் கடந்ததும் இருக்கையில் தன்னை தளர்த்திக் கொண்டு அமர்ந்ததன் மூலம் தளர்வான மனநிலையை அடைய முயன்ற கிருஸ்டி பேச்சைத் துவங்கினாள்.
’’ஆஃபிஸ் கஸ்டமர் ஒருத்தர் சொல்லி பரங்கிப்பேட்டை பாபாஜி கோயிலுக்குப் போயிருந்தேன்.சின்ன கோயில் ஆனால் ரொம்பவும் அமைதி.வெறுமனே உக்காந்திருந்தேன்.நேரம் போனதே தெரியல.ஏதேதோ ஞாபகம் வந்தது.அப்பா ஒரு தடவை புது துணி எடுத்துட்டு வரார்.நான் அவரை சுத்தி சுத்தி வரேன்.துணியை தொட்டுப் பாக்கறன்.அப்பா கையப் புடிச்சிக்கறேன்.அப்பா என்னை தூக்கி மடியில உக்கார வச்சுக்கரார்.நான் ரொம்ப சின்ன வயசு.ஆறு வயசு.ஆனா இது ஞாபகத்துல ஆழமா பதிஞ்சிடுச்சு.எப்பவாவது ஞாபகத்துக்கு வரும்.அன்னைக்கு ஏன் ஞாபகத்துக்கு வந்ததுன்னு தெரியல’’.
வாகனம் சேத்தியாத்தோப்பு நோக்கி விரைந்து கொண்டிருந்தது.இருபுறமும் பச்சை வயல்கள்.சாலையின் இருமருங்கிலும் வளர்ந்த நெடிய மரங்கள்.ஆங்காங்கே பள்ளங்களுடன் சாலை சுமாராகத்தான் இருந்தது.பெண்களால் எளிதில் உணர்ச்சிகரமாகி விட முடிகிறது.சிலரிடம் மட்டுமே உணர்வை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதால் தன்னை தொகுத்துக்கொள்ள அவ்வியல்பு அவர்களுக்கு முக்கியமாயிருக்கிறது.அதைக் கொண்டுதான் அவர்கள் ஆண்களை மதிப்பிடுகிறார்கள்;கண்காணிக்கிறார்கள்.
”மேடம்!கங்கை கொண்ட சோழபுரம் போக மீன்சுருட்டி வழியா போற வழிதான் சுருக்கமானது.ஆனால் நாம இப்ப வீராணம் ஏரிக்கரை வழியா போகப் போறோம்.நீங்க இந்த ஏரி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?”
”பொன்னியின் செல்வன்ல படிச்சுருக்கேன்.முதல் அத்தியாயமே அதுதானே.அதை இப்ப பார்க்கப் போறோமா.கிரேட்.நான் உங்களுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும்”.
ஒரு உணர்வெழுச்சி அறுபட்டு வேறு விஷயம் பற்றி மாறியதை எதிர்பாராததால் கிருஸ்டிக்கு ஓர் அசௌகர்யம் ஏற்பட்டது.
’’உங்களுக்கு ஞாபகம் இருக்கா?அதுல பூங்குழலி ஒரு பாட்டு பாடுவா.அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடலும் பொங்குவதேன்.அந்த பாட்டு பல இடத்துல வரும்.ஒரு இடத்துல அகக் கடலும் ஓய்ந்திருக்க அலைகடலும் பொங்குவதேன்னு பாடுவா.எங்க ஸ்கூல்ல அக்டோபர் மாசம் பத்து பன்னிரண்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடக்கும் போது காலையில லீவு விட்டிருவாங்க.அப்படி ஒரு நாள்ல தான் நான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சேன்.எடுத்தா கீழே வைக்காம.பல தடவை படிச்சுருக்கேன்’’.
கோடிக்கரை குழகர் கோயிலும் உப்பளங்களும் சுந்தரின் நினைவில் எழுந்தன.
“ஒரு காலேஜ் நண்பனோட கோடிக்கரை போயிருந்தேன்.நாள் முழுக்க அங்க இருந்தோம்.வலசை செல்லும் பறவைகள் அங்கே வந்திருந்தன.தொலை தூரத்தில இருந்து பறந்து வரும் பறவை நம்ம அகங்காரத்தை உடைச்சுடுது.முறமாட்டம் இருக்குற சிறகை அது அடிக்கும் போது உலகம் மேல இருக்கற நம்பிக்கையை பிரகடனப்படுத்தற மாதிரி இருக்கும்.வானத்துப் பறவைகளைப் பாருங்கள்;வயல்வெளி மலர்களைப் பாருங்கள்.தேவ குமாரன் மனுஷண்ட்ட வேற என்ன சொல்லுவான்.வானத்தைப் பார்த்து உணர்ந்துக்க.முடியலையா பூமியை பார்த்து உணர்ந்துக்க.மனுஷனுக்கு ரெண்டுமே சுலபமா இல்ல என்பது தான் உண்மை’’.
விவிலியம் கூறப்பட்டது கிருஸ்டிக்கு உவகையையும் புன்னகையையும் கொண்டு வந்தது.
சுந்தர் உங்களுக்கு எப்படி பைபிள்ள ஆர்வம்?
”எங்களுக்கு பள்ளியில் விசுவநாதன்னு ஒரு சோஷியல் சயன்ஸ் டீச்சர் இருந்தார்.அவர் வகுப்பு எடுக்கும் போது பல விஷயங்களை சொல்லுவார்.அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது.வகுப்புக்கு வந்ததும் அவரது மேஜையையும் நாற்காலியையும் எடுத்து ஓரமா போட்டுட்டு அரை நிமிஷம் அமைதியா நிற்பார்.உலகம் மிகப் பெரியது என்று சத்தமாக சொல்வார்.வகுப்பே நிசப்தமாகும்.திலகருக்குப் பின் காந்தி காங்கிரசை வழிநடத்தியது…ன்னு வகுப்பு எடுப்பார்.அவரோட பாதிப்பு அவர் மாணவர்கள் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில இருக்கும்.எழுத்து கூட்டி படிக்க உங்களுக்கு சொல்லித் தந்திருக்காங்க.எதையுமே படிக்கற பழக்கம் இல்லன்னா படிக்கத் தெரியாதவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்பார்.நான் அவர் வீட்டுக்கு அப்பப்ப போவேன்.அவர் லைப்ரரில இருக்கற எல்லா புத்தகங்களையும் நான் படிச்சுருக்கேன்.விவேகானந்தர்,காந்தி,மார்க்ஸ்,நேரு,வினோபா,உ.வே.சா எல்லாரும் அவரோட லைப்ரரி-ல தான் அறிமுகமானாங்க.குரான்,பைபிள்,சத்யார்த்த பிரகாசத்தை சார்ட்ட இருந்து வாங்கி படிச்சிருக்கேன்”.
சேத்தியாத்தோப்பு உள்ளே நுழைந்து வீராணம் நோக்கி நகர்ந்ததும் முதலில் ஒரு ஆறு என்ற எண்ணமே கிருஸ்டிக்குத் தோன்றியது.நாணல் மேடுகள் அவற்றின் பச்சை நிறம் வெளிறி வெயிலில் உலர்ந்து கிடப்பவை போல தோன்றின.தூரம் செல்ல செல்ல கரை விலகிக் கொண்டே சென்று  கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்றது.பெரும் வயலுக்கு அமையும் சிறு வரப்பென ஏரிக்கரை அமைய ஏரி விரிந்து பரந்து கிடந்தது.கரையில் தார்ச்சாலை.அதன் இருமருங்கிலும் அரச மரங்களும் ஆல மரங்களும்.சிறு விநாயகர் ஆலயங்கள்.வேல் மட்டும் நடப்பட்ட வீரனின் சிற்றாலயங்கள்.பாங்கொலிக்கும் சில மசூதிகள்.பட்டுச்சேலை போல நீண்டு அகன்று இருந்தது ஏரி.பாதிக்கும் மேல் நீர் நிரம்பி மென்காற்றால் அலைவுக்குட்பட்டு அலைகள் மெல்ல கரையை நோக்கி நகர்ந்து மோதி அச்சிறு எழுச்சி வானின் சூரியனை பல்வேறு இடங்களில் பிரதிபலித்து மௌனமும் அலைமோதலுமாக ஏரியின் தண்ணீர் இருந்தது.மீன்கொத்திகள் மீன்களின் வருகையை எதிர்நோக்கி கரைமரங்களின் கிளைகளில் காத்திருந்தன.உச்சிக்கிளைகளில் கழுகும் கருடனும் அளவில் பெரிய மீன்களை காலால் கவ்வி மேலெழும் போது சிக்கிய மீனின் வால் இரு திசைகளில் திமிறி துடித்தது.அச்சமக்குலைவை உயர எழுந்து வலுவான சிறகடிப்பு மூலம் சமானமாக்கி முன்னர் அமர்ந்த இடத்தில் வந்து அவை அமர்ந்தன.அருகில் இருந்த சக வேட்டையாடிகள் பங்குக்கு வந்த போது அதிருப்தியைக் காட்டி விரட்டின.கரையோரம் கட்டப்பட்டிருந்த சிறு படகுகள் ததும்பிக் கொண்டிருந்தன.கந்தகுமாரன் மதகடியில் காரை நிறுத்தி விட்டு ஏரியிலிருந்து ஊருக்கு பாசனத்துக்கு நீர் செல்லும் மதகின் மேலே நின்று ஏரியை நோக்கினர்.சிறு சிறு வெண்ணிற மேகக்கூட்டங்கள்.தொலைதூர மரங்கள்.எங்கும் நிறைந்திருக்கும் நீர்.கிருஸ்டி மதகுக்குப் பக்கத்தில் இருந்த சிறு படிக்கட்டின் வழியே ஏரிக்குள் இறங்கினாள்.கைகளில் தண்ணீரை எடுத்து எல்லா புறமும் தெளித்தாள்.உள்ளங்கைகளில் நீரை எடுத்து அதனையே பார்த்துக் கொண்டு இருந்து விட்டு கீழே விட்டாள்.மீண்டும் மீண்டும் அதனை செய்தாள்.கிருஸ்டியைப் பார்த்து சுந்தரும் ஏரிக்குள் வந்தான்.
“ஒரு குழந்தையைப் போல இருக்கிறீர்கள்!’என்று சுந்தர் சொன்னான்
‘’எல்லாருக்குள்ளும் ஒரு குழந்தை எப்போதும் இருக்கிறது.நம் மனதின் பல அறைகளில் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் அக்குழந்தையை அடைத்து வைத்து விடுகிறோம்.”
ஆகையால் மனந்திரும்பி நீங்கள் குழந்தைகளைப் போல் ஆகாவிடின் எந்தையின் ராஜ்யத்துக்குள் ஒருபோதும் பிரவேசிக்க முடியாது.சுந்தர் சொன்னான்.
நீங்கள் தீவிர கிருஸ்தவர்கள்ட்ட இப்படி பைபிள் வாசகமா சொன்னா நீங்க ஏன் மதம் மாறக் கூடாதுன்னு கேக்க ஆரம்பிப்பாங்க.
இருவரும் சிரித்தார்கள்.மனதில் அணுக்கமாக உணர்ந்தார்கள்.பிறகு தொடர்ந்து பயணப்பட்டனர்.பல விஷயங்களில் இருவருக்கும் பொதுவான பார்வை இருந்தது.ஒரே மாதிரி அபிப்ராயம் இருந்தது.எதிர் பாலினத்தின் அருகாமை சில பொழுதுகளுக்காகவாவது மனதை மென்மையடையச் செய்கிறது.அம்மென்மையை அக்கணங்களுக்கேனும் உண்மை என நினைத்தனர்.
காட்டுமன்னார் கோவிலில் மதிய உணவு உண்டு விட்டு கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டனர்.மாலை மூன்று மணி அளவில் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தி விட்டு ஒரு போர்ஷெட்டுக்குச் சென்றனர்.நிலத்தடி நீர் குழாய் வழியே பீறிட்டு வெளியேறியது.கிருஸ்டி பாதி குழாயை கையால் அமுக்கிப் பிடித்ததால் மீதிப் பகுதி வழியே அதிக அழுத்தத்துடன் நீர் வெளியே வந்தது.கையை விட்டாள்.மீண்டும் பிடித்தாள்.கைகளில் தண்ணீரை அள்ளி அள்ளி குடித்தாள்.அந்த நீரிலேயே கரைந்து போக விரும்புவது போல அவளது செயல்கள் இருந்தன.சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு கிளம்பினர்.
கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருவரும் வழிபட்டனர்.பிரகதீஸ்வரரின் திருமுன் கிருஸ்டி பரவசமாகி நிற்பது போல் சுந்தருக்குத் தோன்றியது.கோயில் சுவரில் சாய்ந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.வெளிப் பிரகாரத்துக்கு வந்தனர்.ஒவ்வொரு சிற்பத்தையும் சுந்தர் விளக்கினான்.துவாரபாலகர்கள் இருவருமே உருவத்தால் பெரியவர்கள்.பெரிய யானையை விழுங்கும் பாம்பு அவர்கள் காலில் சிறிதாக இருக்கிறது.அவர்கள் காவலிருக்கும் தெய்வம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற கற்பனையை உருவாக்கும் சிற்பம்.அர்த்தநாரீஸ்வர சிற்பம் பற்றி விளக்கினான்.சிவனுடன் கோபிக்கும் உமையின் சிற்பம்.மண்டையோட்டு மாலை அணிந்த பைரவரின் சிற்பம். கூறப்பட்ட ஒவ்வொரு விபரத்தையும் ஆழமாகக் கேட்டுக் கொண்டாள் கிருஸ்டி.ஆலயத்தை பலமுறை சுற்றி வந்தார்கள்.சுற்றிலும் புல் வளர்க்கப்பட்டு அளவாக வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தது.வெவ்வேறு கோணங்களில் ஆலயத்தையும் சிற்பங்களையும் பார்த்து சண்டிகேஸ்வரர் பட்டாபிஷேகம் அருகே அமர்ந்து கொண்டார்கள்.சிவனுடைய ராஜ்யத்தில் சண்டிகேஸ்வரரும் கிளர்க்கியல் கேடரில் உள்ளவர்தான் என்று கிருஸ்டி சொல்ல இருவரும் சிரித்தார்கள்.
எல்லா விதமான கட்டுப்பாடுகளும் நீங்கி பூரண சுதந்திரத்தை காற்றாய் சுவாசித்து கிருஸ்டி அமர்ந்திருந்தாள்.பகலும் இரவும் இணையும் அந்திப் பொழுது அப்புராதானமான இடத்துக்கு மேலும் புராதானத் தன்மையை அளித்தது.குடும்பமாய் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் புல் தரையில் ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தன.ஞாயிறாதலால் ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது.
’’அம்மாவுக்கு நான் கன்னியாஸ்திரி ஆகிவிடுவேனோ என்று உள்ளூர பயம் இருந்தது.கான்வென்ட் ஒத்தாசையால்தான் படித்தேன்.அந்த ஒத்தாசை அம்மாவுக்கு மிகவும் முக்கியம்.அதே நேரம் என்னை முழுக்க இழந்திரவும் கூடாது.வெளியில் சொல்ல முடியாம கஷ்டப்பட்டாங்க அம்மா.நான் ஒரு தடவை நேரடியா சொன்னேன்.நான் அப்படி போக மாட்டேன்னு.அம்மாவுடைய பயம் இன்னும் அதிகமாயிடுச்சு.குடும்பத்தில இருந்தத விட அதிகமா சமூக ஸ்தாபனங்கள்ள இருந்திருக்கன்.பலவிதமான கஷ்டம் இருக்கும்.ஹாஸ்டல்ல கான்வென்ட்ல இருக்கறவங்க எல்லா விதமான சிஸ்டத்துக்கும் எதிரா போயிடுவாங்க.ஹியூமன் சைக்காலஜி அது.ஆனா நாங்க படிச்ச கான்வெண்ட் அற்புதமானது’’.
’’சிஸ்டர் மேரி கிளாரா எங்க கான்வென்டோட இன்சார்ஜ்.நூற்று இருபது பேர் படிச்சோம்.பலவிதமான வேலைகள் செய்ய அங்க வாய்ப்பு இருந்துச்சு.தோட்ட வேலை செய்வோம்.ஐம்பது ஏக்கர் தென்னந்தோப்புக்கு நடுவில கான்வென்ட்.கீத்து முடைவோம்.மடையில தண்ணி பாய்ச்சுவோம்.எம்பிராய்டரி வேலை எங்க எல்லாருக்குமே தெரியும்.மியூஸிக் ட்ரூப் அங்கேயே இருந்துச்சு.டர்ன் படி எங்க கான்வெண்டுக்கு நாங்களே சமைப்போம்.பெட்ஷீட் எல்லாத்தையும் துவைச்சு உலர்த்துவோம்.சிஸ்டரே எங்க கூட இருந்து வேலை செய்வாங்க.மாலை நேரத்தில பிரார்த்தனைக்கு எல்லாரும் அசெம்பிள் ஆவோம்.சிஸ்டர் ஜீசஸ் முன்னாடி மண்டி போட்டு மனமுருகி பிராத்தனை பண்ணுவாங்க.சிஸ்டருக்கு அவர்ட்ட கேக்கரதுக்கு எதுவும் இல்லை.ஆனா சொல்லியிருப்பாங்க-நான் என்னால முடிஞ்சத முழுசா செஞ்சிருக்கேன்னு.அவங்க லைப்ரரில மகாத்மா காந்தி ஃபோட்டாவும் ஒரு புத்தர் சிலையும் இருக்கும்.எங்க கிட்ட எப்போதும் சொல்லுவாங்க-கருணையில்லாத மனுஷங்க குறைபாடான சமூகத்தை உருவாக்க முடியும்னா கருணை இருக்கிறவங்க அதை சரிசெய்ய முடியும்.குறைந்தபட்ச ஒழுங்கு என்பது அவங்கள்ட்ட இருந்து நான் கத்துக்கிட்டது’’.
.இருவருமே பழைய நினைவுகளாலும் பெருக்கெடுத்த உணர்ச்சிகளாலும் தன்னுள் ஆழ்ந்தவர்களாக ஆலயத்திலிருந்து சிதம்பரத்துக்கு புறப்பட்டார்கள்.முந்திச் செல்ல முயன்ற வாகனங்கள் எழுப்பும் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டது.தில்லை வடக்கு வீதி காளியம்மன் கோவில் வளைவுக்கு அருகில் கிருஸ்டி இந்த நாள் மிகவும் இனிமையானது எனக் கூறி இறங்கிக் கொண்டாள்.வாகனத்தை நண்பனிடம் வழங்கி விட்டு தன்னுடைய அறைக்கு சுந்தர் வந்தான்.அச்சிறு அறையில் பல மனிதர்கள் சூழ்ந்து நிற்பது போல் தோன்றியது.மாடிக்குச் சென்றான்.நடராஜர் ஆலய கோபுரங்கள் வான் நோக்கி உயர்ந்திருந்தன.மேகமற்ற தெளிந்த வானில் நட்சத்திரங்கள் மினுக்கின.கீழே போய் பாயை எடுத்து வந்து போட்டு படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்து அப்படியே  தூங்கிப் போனான்.
அடுத்தடுத்த மாதங்களில் பலவிதமான போட்டித் தேர்வுகளை எழுதுவதும் அதற்கு தயாரிப்புகளைச் செய்வதும் அவர்களின் வேலையாக இருந்தது.அலுவலகப் பணிகளும் சரியாக இருந்தன.பாடக் குறிப்புகளை அலுவலகத்தில் பகிர்ந்து கொள்வார்கள்.தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வில் சுந்தர் வருவாய் மாவட்ட அலுவலர் பதவிக்கு தேர்வானார்.கிருஸ்டி சிறில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாடு மாநில அளவில் நான்காவது இடத்தில் தேர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சார் ஆட்சியராக பொறுப்பேற்றார்.

One Reply to “இரு பள்ளிகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.