இமயத்துக்கு அருகேவரை ஒரு இனிய பயணம்

அல்மோராவை அடைந்தபோது மணி ஏழாகிவிட்டிருந்தது. தில்லியில், காலை எட்டு மணிக்கு, போகலாமா வேண்டாமா என்று யோசித்து, ஒன்பதுக்கு போகலாம் என்று முடிவெடுத்து ஒன்பதரைக்கு காரில் கிளம்பி அல்மோராவை வந்து அடைந்துவிட்டோம்.
மெலிதான குளிர், உத்தராகண்டின் குமாவுன் மண்டல் விகாஸ் நிகம் (Kumaon bk_colmb2almoraMandal Vikas Nigam – KMVN) அறைகள் மிகவும் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டிருந்தன. அறையிலிருந்து அல்மோராவின் தரிசனம். விவேகானந்தர் வாழ்க்கையை படித்த எவருக்கும் நினைவுக்கு வரும் ஊர். ஆனால், அல்மோராவை தாண்டி முன்சியாரி செல்லவேண்டி இருந்ததால், ஊரில் எங்கும் செல்லாமல் அடுத்த நாள் அதிகாலை முன்சியாரி புறப்பட்டோம்.
அதிகாலை புறப்பட்டது எவ்வளவு சரியான முடிவென்பது முன்சியாரிக்கு போகும் வழியில் தான் புலப்பட்டது. நம்மூர் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லத்தக்க பெரும் பெரும் மலைகள், கிடு கிடு பள்ளத்தாக்குகள் – பல சமயங்களில் காரின் பக்கவாட்டில் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். பெரும்பாலான இடங்களில் மலையில் தனியே ஒட்டிவைத்த மெல்லிய மீசை போன்ற வழித்தடம், மேலேயும் கீழேயும் அகண்ட பெருவெளி மட்டுமே!
ஓட்டுனர், உத்தராகண்டை சேர்ந்தவர் என்பதால் பாதை பழகியிருக்கும் போல, விருட்விருட் என்று ஓட்டி அந்தப்பக்கம் யார் வருகிறார்கள் என்று தெரியாத மலை வளைவுகளில் வண்டியை திருப்பினார். எதிரில் வரும் வாகன ஓட்டுனர் ஒழுங்காக ஓட்டவில்லை என்றால், நாம் ஒழுங்காக ஓட்டினாலும் பள்ளத்தாக்கில் விழ வேண்டியதுதான்.
போதாக்குறைக்கு பெரும் பெரும் மலைச்சரிவுகள். சாலைகளை சரி செய்திருந்தார்கள் என்றாலும், மலைச்சரிவு நிகழ்ந்ததையும், கீழே நூலாக ஓடிக்கொண்டிருந்த நதிக்கரைகளில் உருண்டு விழுந்த பெரும் பாறைகள் மண்ணும், பாறைகளுமாய் விரிந்து கிடந்ததை பார்க்கும்போது பகீரென்றது.
அல்மோராவிலிருந்து இப்படி பல மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கடந்து 250 கிமீ சென்றால் முன்சியாரி வருகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் அந்தப்பக்கம் பார்த்தால் திபெத் இந்தப்பக்கம் பார்த்தால் நேபாளம். வழியெல்லாம் பெருமலைகள் ஆபத்தான பள்ளத்தாக்குகள் என்பதால் வெயிற்காலங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து தப்பித்து நிற்கின்றது முன்சியாரி. ஊரை நெருங்கும்போதே தெரிந்துவிடுகிறது, இது உத்தராகண்டிலிருந்தும் தனித்து நிற்கும் பிரதேசம் என்று.
ping_mountain_munsiyari_almoraஅதிசயமாய் பிங்க் நிறத்தில் மலைகள் – உற்றுப்பார்த்தால் இந்த மலைகளின் உயரத்தில் வளர்ந்து கிடக்கும் ரோடண்ட்ரான் மரத்தின் அழகிய பூக்கள். அப்பூக்கள் எங்கும் வியாபித்து கிடப்பதால் மலையே ரோசாப்பூ நிறத்துக்கு மாறிவிடுகிறது.
முன்சியாரியில் தெரியும் பனி மலைகளோ தனி நிறம். மேலே ரோசாப்பூ நிறம், பாதிக்கும் கீழே பச்சையே இல்லாத மரக்கலர் என்று வித்தியாசமான மலைகள்.
முதல் நாள் சென்றபோது பனிமலைகளை பார்க்கவில்லை – உத்தராகண்டில் எரியும் காடுகளிலிருந்து எழும் புகையினால் பனிமலைகள் அருகேயிருந்தும் பார்வையிலிருந்து மறைந்திருந்தன. மாலை மழை பெய்ததால் மறுநாள் புகை நீங்கி வானம் பளிச்சிட்டது.
“இதோ தெரியுது பாருங்கள், பஞ்சுளி (பஞ்சா சுளி – Pancha chuli)” என்றாள் என் மனைவி. முன்சியாரியில் இருக்கும் குமாவுன் மண்டல் விடுதியின் அறைச்சாளரம் வழியே அதிகாலையில் தெரிந்த பஞ்சா-சுளி மலைகளை பார்த்துக் கொண்டே வியந்து நின்றேன்.
வலிமையும், திகிலையும் உள்ளே வைத்திருக்கும் புதிர் கலந்த, மவுனம் நிறைந்த பெரும் ஆளுமைகளாக நிற்கும் திபெத்தின் பனிமலைகள் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தன. பார்க்கும்போதெல்லாம் மனம் அடங்கி வியப்பில் ஆழ்ந்தது.
meditation_sivaஎப்போதோ யாரோ சொல்லியதோ, எங்கோ படித்துக் கிடைத்ததோ – அந்த விஷயம் மனதில் வந்து போனது – “சிவன் பனிமலையில் தியானத்தில் இருக்கிறார் என்பது தியான உருவகம். தியானத்தின் போது பெரும் மலையும் பனிப்பிரவாகத்தையும் உருவகப்படுத்தி அதன் நடுவே கடவுளை வைத்து தியானிப்பது மனதை அமைதிப்படுத்தும்”.
இதனால் தானோ என்னவோ, இந்தியாவெங்கும் இருந்து இந்த மலைகளுக்கு வந்தார்கள், தியானித்தார்கள், எல்லாவற்றையும் விடுத்து ”சிவனே நான்” என்று, ”சிவனேன்னு” இருந்தார்களோ? – தெரியவில்லை.
இம்மலைகளை பார்க்கும்போது காமிராவில் கவனம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தேன், அவ்வப்போது சில புகைப்படங்களை என் அலைபேசியில் எடுத்தேன். உயர்தரக் காமிராவை எடுத்து வந்திருந்தாலும் இம்மலைகளை நேரில் பார்க்கும்போது நம் மனதில் ஏற்படும் உணர்வை அவை பிரதிபலிக்கா. எழுத்தில் கொண்டு வருவதும் கடினம். நேரில் சென்று பார்த்து, லயித்து, வசித்து, ஆழ்ந்து கவனிக்க வேண்டியவை அவை.
“இந்த மலைகளை அடைவதுதான் சங்க காலத்திலேயே எங்கள் மன்னர்களின் இலக்காயிருந்தது. வந்தடைந்து, இமயத்தில் தங்களது சின்னத்தை பொறித்ததாக சொல்வது உண்மையோ பொய்யோ நானறியேன், ஆனால் அப்படி ஒரு இலக்கு – ஆதர்சமிருந்தது” என்று அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடும்போது ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் குறிப்பிட்டேன். நான் ஆங்கிலத்தில் சொல்லி, ஹிந்தியில் சொல்லாமல் விட்ட விஷயங்களை மல்லிகா விர்டி குமாவுனி ஹிந்தியில் மொழிபெயர்த்து அக்கலந்துரையாடலுக்கு வந்திருந்த சிறு விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மல்லிகா (அவர் பெயர் மல்லிகாவா, மாலிகாவா என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது) ஒரு தில்லிப் பெண், பஞ்சாபி. அவரது கணவர் (என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கணவர் என்று சொல்லாமல், மல்லிகாவுடன் வாழ்கிறேன் என்ற) தியோ, பாதி மலையாளி – பாதி தமிழர் (”என் தாயார் சென்னைப் பக்கம் தான், ஆனால் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இம்மலைப்பிரதேசத்தில் நைனிதாலில் தான்” – தியோ).
மல்லிகா முன்சியாரிக்கு அருகே இருக்கும் சர்மோளி கிராமத்தின் சர்பாஞ்ச் (பஞ்சாயத்து தலைவியாக) இருந்தவர். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தியோவையும், மலைகளையும் விரும்பி தில்லியின் சமதள வாழ்வை விட்டு இங்கே வந்துவிட்டார். இப்போது அவர் இருக்கும் வீடும், விவசாயம் செய்யும் இடமும் முன்சியாரிக்கு பக்கத்தில் ஒரு காட்டுக்கு நடுவே, சர்மோளி கிராமத்துக்கு மேலே உள்ளது.
village chopriyaon tehri garhwal uttrakhand”எல்லாமே உரம், பூச்சி மருந்து இல்லாத ஆர்கானிக் விவசாயம் தான்” என்று சுற்றிக்காட்டினார். அவரது தோட்டங்களில் வால்நட் மரம், தேவதாரு மரங்கள் உட்பட இந்தப் பிரதேசத்துக்கே உரிய விதவிதமான வித்தியாசமான மரங்கள் (முன்சியாரி கடல் மட்டத்துக்கு மேலே ஏழாயிரம் அடிக்கும் மேலே இருக்கிறது), பார்லி, ராஜ்மா போன்ற தானியங்கள். நாங்கள் பார்க்கும்போது லங்கூர் குரங்கொன்று தோட்டத்தில் தின்று கொண்டிருந்தது. ”கரடிகளும், முள்ளம்பன்றிகளும் தான் பெரும் பிரச்சினை இங்கே” என்றார் மல்லிகா.
மல்லிகாவின் முயற்சியால் அங்கே இருக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து தமது வாழ்வாதரங்களை பெருக்கும் வணிகச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரது வீட்டுத்தறியை காண்பித்தார் கமலா.
அவர் அங்கிருக்கும் போத்தியா (Bhotia) சமூகத்தை சேர்ந்தவர். அவர்கள் இந்தியாவுக்கும், திபெத்துக்கும் இடையே பண்டைக்காலந்த் தொட்டு பாலமாக விளங்கிய வணிகச் சமூகத்தினர். கமலாவை பார்க்கும்போது எனக்கு மனதில் “சிரிக்கும் புத்தர்” சிலை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து சென்றது. அதில் இருக்கும் புத்தரின் முகம் போலவே அவரது முகம். இது எதேச்சையான ஒன்றா அல்லது இது போன்ற வணிக சமூகம் மூலம் சீனர்களின், திபெத்தியர்களின் மனதில் புத்தர் உருவகிக்கப்பட்டாரோ நானறியேன். இலங்கையில் புத்தமதத்தை கொண்டு சேர்த்தது தமிழ் வணிகர்கள் என்றொரு கருத்து இருக்கிறது. அது போல ஒரு வேளை இங்கும் நிகழ்ந்ததோ?
bhotia_man_and_woman”போத்தியாக்கள் வசதியானவர்கள். ஆனால், இந்திய விடுதலையின் போது, தமக்கு அட்டவணைப்பிரிவு பழங்குடி அந்தஸ்து தந்தால்தான் இந்தியாவோடு இணைவோம் என்று வாதாடி எஸ்.டி அந்தஸ்து பெற்றுவிட்டார்கள், இப்போது மற்ற எஸ்.டிக்களுக்கு செல்ல வேண்டிய சலுகைகள் எல்லாம் இவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறது” என்று முன்சியாரிப் பெண் ஒருவர் புலம்பினார்.
போத்தியாக்களின் வீடுகள் அழகும், இனிமையும், மரமும், கம்பளியும் சேர்ந்து உருவாக்கப்பட்டவை; குளிருக்கு அடக்கமானவை. போகும், வரும் வழியெல்லாம் பழைய குமாவுனி வீடுகளை, அவற்றின் அழகை, பழைய மரவீடுகள் இருப்பாரற்று பச்சை மண்டிக்கிடப்பதை பார்க்க நேர்ந்தது வருத்தமான விஷயம். “விவசாயம் இப்பகுதியில் மிகவும் சிரமமானது. இந்த ராஜ்மாவை சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள், இது போன்ற சுவையான ராஜ்மாவை நீங்கள் வாழ்க்கையில் சாப்பிட்டுருக்கவே மாட்டீர்கள், ஆனால் விவசாயத்தில் லாபமில்லை, இருக்கிற நிலத்தை விற்றுவிட்டு பந்த் நகர், டெல்லி என்று சென்று குடியேறவே இங்கிருப்போர் விரும்புகிறார்கள்” என்றார் மல்லிகா.
rhododendron_flowerமகளிர் அமைப்பான மைத்ரி சங்கடனின் நான்கு ராஜ்மா பாக்கெட்டுகளையும், சுண்டக் காய்ச்சிய ரோடண்ட்ரான் பூக்களின் சாறையும் வாங்கினேன். ரோடோண்ட்ரான் பூக்களை சாப்பிடுவது உடலுக்கு வலு சேர்க்கும், நுரையீரலுக்கு நல்லது என்று அரைகுறை ஹிந்தி, ஆங்கிலத்தில் எங்களது வழிகாட்டியான ஒரு போத்தியாப் பெண்மணி விளக்கினார்.
முந்திய நாள் சர்மோளி கிராமத்தில் ஒரு வீட்டில் மதிய உணவு சாப்பிட்டிருந்தோம் – மலைப்பகுதியில் வளரும் பசலைக்கீரையை கடைந்து வைத்திருந்தார்கள். மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது.
ஆனால், பல பிராந்திய உணவு வகைகள் வழக்கொழிந்து வருவதை பார்க்க முடிந்தது. அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் ம்யூசியத்தில் அவர்களது உணவுவகைகளின் புகைப்படங்களை வைத்திருந்தனர். திபெத்திய உணவு வகைகள் + இந்திய உணவு வகைகள் இரண்டும் கலந்த கலவைகள் அவை.
foreign_studentsமல்லிகாவின் வீட்டிலும் சர்மோளி கிராமத்தினரின் சில வீடுகளிலும் கானடா நாட்டின் அர்காடியா பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களின் பேராசிரியர் ஒருவரும் வந்து தங்கியிருந்தார்கள்.
அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கே வந்து தங்குகிறார்கள் – விவாசயத்திலும் கானடாவின் மலைப்பிரதேசங்களில் பயன்படுத்தும் முறைகளை இங்கே இவர்களுக்கு சொல்லித்தருவதை பார்க்க முடிந்தது.
குளிர்காலத்தில் பனிப்பொழிவு இங்கே கடுமையாக இருப்பதால், க்ரீன் ஹவுஸ் எனப்படும் பாதுகாக்கப்பட்ட விவசாய முறை (Protected cultivation) இங்கே பயனற்றுவிடுகிறது, பனிப்பொழிவை தாங்காது பாலிதீன் ஷீட்கள் கிழ்ந்து விடுகின்றன. உயர்ந்த மலை என்றாலும், அடிக்கடி மழை பெய்வதால் காற்றில் ஈரப்பதமும் மிக அதிகம் என்றார் மல்லிகா.
munsiyari_homestay3அங்கே இருக்கும் கிராமத்தினர் வீடுகளில் மல்லிகாவின் முயற்சியால் ஹோம் ஸ்டே ஏற்படுத்தியுள்ளனர். குமாவுன் மண்டல் விடுதியைவிட சற்றே அதிகம் என்றாலும் (குமாவுண் விடுதியின் அறை வாடகை ரூபாய் 700. இங்கே சாப்பாடு உட்பட 1500) குமாவுண் கிராம வாழ்க்கையோடு இணைந்து இருப்பதால் பலர் இங்கே வந்து தங்குகின்றனர். மேலே பனிமலைகளுக்கு ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு முன்சியாரி பேஸ் கேம்ப் என்பதால் வருடம் முழுக்க அதற்கென வரும் ட்ரெக்கிங் குழுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும் வெளிநாட்டவர் தான். நம்மவர்களுக்கு அந்த அளவு தைரியமும், ஆவலும் இருப்பதில்லை.
“அதோ கீழே தெரியுது பாருங்கள், அதுதான் கோரிநதி (தமிழில் சொல்லவேண்டுமென்றால் ‘வெள்ளாறு’) அந்தப் பக்கம் ‘காலாநதி’ (தமிழில் ‘கருப்பாறு’) இருக்கிறது, அது நேபாளத்தில் இருந்து வருகின்றது. திபெத்துக்கு இங்கேயிருந்து போக வேண்டுமென்றால் வாகனத்தில் போக முடியாது, நாலுநாள் நடந்துதான் போகவேண்டும்” என்று லஷ்மி, எங்கள் கைடு விவரித்தார்.
ஊருக்கு வெளியே ஒரு மலை முகட்டில், அத்துவானமாய் இருக்கிறது நந்தா தேவி கோவில். சுற்றிலும் சுவரைப் போன்று உயர்ந்து நிற்கும் பனிமலைகள். ஒரு பக்கம் அதல பாதாளத்தில் வெள்ளையாய் ஓடும் கோரிநதி. “மூன்று வருடங்களுக்கு முன்பு கோரிநதியில் வந்த வெள்ளத்தில் பல மலைக்கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன” என்று சொல்லிக்கொண்டே வந்தார் லஷ்மி.
இந்த முறை குமாவுண் மண்டல் விடுதியில் தங்கிவிட்டீர்கள், அடுத்த முறை வரும்போது எங்கள் ஹோம் ஸ்டேயில் வந்து தங்குங்கள் என்று கிராமத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்தனர். ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வந்தேன். வரும்போது தெரிந்த பாதாளத்தை பார்த்துவிட்டு மனைவி சொன்னார், ”அடுத்த முறை வர்றதா இருந்தா நீங்க மட்டும் வாங்க, புரியுதா”, இந்த மாதிரி அட்வென்சர் எல்லாம் கல்யாணத்துக்கு முந்தி செஞ்சிருக்கனும்”.
‘சரி’ என்று இங்கும் தலையாட்டிவிட்டு மீண்டும் பனிமலைகளைப் பார்த்து விடை சொன்னேன்.

2 Replies to “இமயத்துக்கு அருகேவரை ஒரு இனிய பயணம்”

  1. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அல்மோரா பகுதிகளில் பயணம் சென்றிருக்கிறேன். ஆனால் இதைப் பார்த்ததில்லை. ஆவலைத்தூண்டும் உங்கள் எழுத்தினால் அடுத்த முறை முயற்சிக்கிறேன்.
    ரமணன்
    ramananvsv@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.