அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்

Krishna & Rukminiபெரியாழ்வார் பாசுரங்களில் கிருஷ்ணனின் வயதும், விளையாட்டுகளும், லீலைகளும் முன்னும் பின்னுமாகக் காணப்படும். இதுவும் மாந்தருக்கேற்படும் ஒருவிதமான மனத்தோற்றம்தான் (Perception). கோயியரின் ஆடைகளை ஒளித்து சல்லாபம் செய்த கிருஷ்ணனை இப்போது யசோதை, தான் அவனுக்கு முலைப்பால் ஊட்ட அச்சம் கொண்டதாகக் கூறக் காண்கிறோம். ஆழ்வாருக்குக் கிருஷ்ணன் என்றுமே குறும்புக்காரக் குழந்தைதான். ஆதலால் அவன் செய்வதனைத்துமே விகற்பமற்ற விஷமங்கள்தான்!
*****
தன் சிறுகுட்டன் வளரும் விதத்திலேயே அன்னை யசோதை அவனை யாரென்று அறிந்துகொண்டு விட்டாளாம். தன் வயதொத்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுடன் தளர்நடை நடந்து வருபவன் அவன்; நெய்யும் பால்சோறும் உண்டு திருட்டுத்தனத்தில் ஒப்பற்றவன்; பொய்யாகத் தவழ்ந்தோடி அவளிடம் வந்து கொஞ்சுபவன்; என்றைக்கு அவன் வஞ்சமகளான பூதனையின் முலையில் வாய்வைத்து பால் உறிஞ்சுவது போல உயிரையே உறிஞ்சி எடுத்தானோ, அன்றே தாயான யசோதை அவனுக்கு முலைப்பால் கொடுக்க பயம் கொண்டுவிட்டாள். தன்னுயிரையும் உறிஞ்சிவிடுவானோ என்ற பயத்தினால் அல்ல! ‘இவன் இவ்வளவு அரிய பெரிய செயல்களைச் செய்தவனாயிற்றே; இவன் குழந்தையல்ல; தெய்வம். அவனுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது?’ என்ற ஒரு தயக்கம்தான் அவளைத் தடுத்தது. அதனைத்தான் வெகு அருமையாகக் கூறுகிறார் பெரியாழ்வார்.
தன்நேர் ஆயிரம் பிள்ளை களோடு
                        தளர்நடை இட்டு வருவான்
            பொன்னாய் நெய்யோடு பால்அமுது உண்டுஒரு
                        புள்ளுவன் பொய்யே தவழும்;
            மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
                        துஞ்சவாய் வைத்த பிரானே!
            அன்னே! உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
                        அஞ்சுவன் அம்மம் தரவே!
(பெரியாழ்வார் திருமொழி- 3.1)
முந்தைய பாசுரங்களைப்படித்தபோதெல்லாம் நமக்கு எழுந்த வினாக்களுக்கு இதனைப் படிக்கும்போது விடை கிடைத்து விடுகிறது. யசோதை தன் குழந்தை வளர வளர அவன் செய்யும் குறும்புகளையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல ஏன் இருக்கிறாள்? அவனை ஏன் அதிகமாகக் கடிந்துகொள்வதில்லை? மண்ணைத்தின்றபோது வாயைத்திறந்து உலகனைத்தையும் காட்டி, தான் யாரென்பதை நொடியில் உணர்த்திப் பின் சிறுகுழந்தையாகி அவளிடமே கொஞ்சினான் கிருஷ்ணன். அதனால்தான் மாயம்செய்து அவளை மயக்கினான் எனக்கொள்கிறோம்.
பண்டொருநாள்…….
தன் சின்னக்குழந்தையை வாசனைத்தைலத்தைப் பூசி, நறுமணப்பொடியால் தேய்த்து நீராட்டினாள் யசோதை; அவனுடைய பசியால் குழைந்த வயிறுநிரம்பப் பாலையும் ஊட்டிவிட்டுத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்; குடத்தை எடுத்துக்கொண்டாள்; பக்கத்து மனைப்பெண்டிருடன் யமுனைநதியில் போய் நீராடிவரலாம் என்று சென்றுவிட்டாள். வெகுநேரம் ஒன்றும் ஆகவில்லை; அவள் திரும்பிவந்து பார்த்தபோது, பாரம் மிகுந்த வண்டி ஒன்றினை முறியுமாறு- சகடாசுரனை- கால்களால் உதைத்துக் கொன்றிருக்கிறான் இக்குழந்தை. இதென்ன, சின்னக்குழந்தை செய்யக்கூடிய செயலா? விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட! இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை! குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே!’ எனும் தாய்ப்பாசம்தான் தலைதூக்குகின்றது. ‘என் கண்ணா! தெய்வமே!’ என உடனடியாகக் குழந்தையை -தன் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவதுபோல- வாரியணைத்துக்கொண்டு விசும்பச் செய்கிறது!
பின்னொருநாள், வடக்குப்பக்க வீட்டிலுள்ள ஒரு அழகான இளம்பெண்ணிடம், வேண்டாத வீண்வம்புகள் செய்து, அவள் உருவத்தையே மாற்றிவிட்டான் இவன். இது ஒரு சாமானியக் குழந்தை செய்யும் செய்கையா? அப்போது இவன் தெய்வம் என நிச்சயமாக அறிந்துகொண்டு விட்டாள் யசோதை. இதனாலும் பால்கொடுக்க பயப்படுகிறாளாம்.
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுதூட்டிப்
                        போனேன்; வருமளவு இப்பால்
            வன்பாரச் சகடம் இறச்சாடி
                        வடக்கில் அகம்புக்கு இருந்து
            மின்போல் நுண்ணிடையாள் ஒருகன்னியை
                        வேற்றுருவம் செய்து வைத்த
            அன்பா! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு
                        அஞ்சுவன் அம்மம் தரவே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.1)
*****
வண்டாடும் சோலைதனில், மென்மையான இசையை எழுப்பும் புல்லாங்குழலைக் கையில் எடுத்துக்கொண்டு, தன்னந்தனியனாக அமர்ந்து கொண்டு, வாயில்வைத்து ஊதி, மதியை மயங்கச் செய்யும் இசையை எழுப்புகிறான் இந்த மாயக்கிருஷ்ணன். “அம்புஜம், நீ வீட்டைவிட்டு நகரக்கூடாது,” “பங்கஜம், நீ இன்றைக்குத் தயிர் விற்பேன் என்று வெளியே போகவேண்டாம்,” என்றெல்லாம் தாய்மார்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பினால் அந்த மாயக்கண்ணன் பின்னால்சென்று மயங்கி அலைவார்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அதுதான் இக்கட்டளைகள்; பங்கஜத்தின் வீட்டுத்திண்ணையில் அவளுடைய பாட்டி கால்களை நீட்டியவாறு அமர்ந்து காவலே காத்துக் கொண்டிருக்கிறாள்.
புல்லாங்குழலின் இனிய மயக்கும் இசை தொலைவிலிருந்து வருகிறது. சுருண்ட கூந்தலையுடைய இப்பெண்களுக்கு இருப்புக்கொள்ளவில்லை! வீட்டைவிட்டு அவன்பால்- அந்தக் கிருஷ்ணன்பால் ஓடத்துடிக்கிறார்கள். “பாட்டியின் கட்டுக்காவலை மீறி எப்படியடி போவது?”
கிருஷ்ணன் அதற்கும் ஒரு வழி வைத்திருந்தான்! அவன் வாசித்த ராகம் அவர்களை மயக்கும் மோஹனமா அல்லது பாட்டியை

Gopis visit Krishna at night
Gopis visit Krishna at night

உறங்கச் செய்துவிட்ட நீலாம்பரியா??!! பாட்டியின் குறட்டையொலி நன்றாகக் கேட்டதும் பெண்கள் குறும்புச்சிரிப்புடன் சிட்டெனப்பறக்கின்றனர் கிருஷ்ணன்பால்! இவர்கள் வந்ததையும் தன்வாசிப்பில் நெகிழ்ந்து நிற்பதையும் கிருஷ்ணன் கண்டுகொள்ளவேயில்லை! ஓடோடிவந்தவர்கள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்களென நிற்கின்றனர். அலையலையாகச் சுழன்று எழும் அந்த மோஹனராகம் அவர்களை எங்கோ அழைத்துச் செல்கிறது.  ஒருத்தி தன்வயமிழந்து மரத்தில் சாய்ந்து நிற்கிறாள்; இன்னொருத்தி இசையின் இனிமையில் கரைந்துருகித் தாளவியலாமல் தரையில் அவன்பக்கம் அமர்ந்துவிடுகிறாள். அவன்முன்பு மண்டியிட்ட அம்புஜம் கூப்பிய கைகளுடன் விசித்துவிசித்து அழுது கரைகிறாள்; பங்கஜம் ஒலியெழாமல் தன் மெல்லிடையை அசைத்து ஆடியவண்ணம் கிருஷ்ணனைச் சுற்றிச்சுற்றி வருகிறாள்.
தங்கள் பெண்கள் காவலைமீறிக் கண்ணனிடம் ஓடியதும் அவன் குழலிசையைக் கேட்பதும் ஒருவழியாக அன்னைமார்களுக்குப் புரிந்தது. அவர்கள் காதிலும் அந்த இன்னிசை விழாமல் இல்லை! ஆனாலும் தங்கள் இளம்பெண்களை மயக்கிவைத்திருப்பதால் அந்த இசையை- அதனை இசைக்கும் கிருஷ்ணனை- அவர்கள் வலிந்து புறந்தள்ள முயல்கிறார்கள்.  யசோதையிடம், “உன்மகன் செய்வது நியாயமா? வா இப்போதே எங்களுடன். கையும் களவுமாக அவர்களைப்பிடிக்கலாம்; எங்கள் பெண்களை மயக்கி அவர்களுடன் அவன் அடிக்கும் கூத்தைக் காண்பாய்,” என அவளையும் இழுத்துக்கொண்டு சோலையில் புகுகின்றனர் அவர்கள்.
அங்கே கண்டதென்ன?
நீலநிறப்பாலகன் குழலூதியபடி இருக்கிறான். அவன் புல்லாங்குழலிலிருந்து பொங்கிப்பிரவகிக்கும் இசை புறப்பட்டு, செவிவழியே புகுந்து, உள்ளத்தை வருடி, எண்ணங்களைத் தடவி, சிந்தையை மயக்கி, என்பையும் உருக்கி கேட்கும் ஜீவராசிகளை- பெண்களை மட்டுமல்ல- அங்கு மரங்களிலுள்ள பறவைகள், மயில்கள், வெகு சுவாதீனமாக அவனருகே அமர்ந்திருக்கும் மயில், கன்றுக்குட்டி, மேய்ச்சலுக்கு வந்த ஆடுமாடுகள் என்று எல்லாவற்றையும் ஒரு மோனலயத்தில் ஆழ்த்தியிருக்கிறதைக் கண்டார்கள். செடிகொடிகள்கூட அவனுடைய தேவகானத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மென்மையாகத்தான் அசைந்தாடுகின்றன. இல்லையில்லை- குழலின் இன்னிசைக்கேற்பத் தாமும் ஆடிமகிழ்கின்றன. யசோதையின் தாயுள்ளம் பெருமிதம், பேரானந்தம், எனச்சொல்லொணா உணர்வுக்கலவையில் தத்தளிக்கிறது. மற்ற அன்னையரும் பேச்சற்று நிற்கின்றனர். அவர்கள் காணவந்ததென்ன? கண்ணெதிரே காண்பதென்ன? சோதிமயமான கிருஷ்ணவடிவம்தான்! மெய்சிலிர்த்து, உடலெல்லாம் விதிர்விதிர்க்க, அவனைத் தரையில் விழுந்து வணங்குகின்றனர் அவர்கள். யசோதையின் கண்களில் ஆனந்தவெள்ளம் பெருக்கெடுக்கிறது.
“அப்பனே! நீ தெய்வம் என  அறிந்துகொண்டேன். எனது பெரும் குற்றம் ஒன்றே ஒன்றுதான். இவ்வளவு உயர்வான உன்னைப் பிள்ளையாகப் பெற்றதுதான் அந்தக்குற்றம்,” எனப் புலம்புகிறாள். இது கழிவிரக்கத்தினால் வந்த புலம்பலல்ல. ‘இவ்வளவு உயர்வான நீ எனக்கு மகனாகக் கிடைப்பத்ற்கு நான் தகுதி உடையவள் தானா?’ எனும் எண்ணத்தினால் யசோதை இவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றிப்பலவிதமாகப் பேசிப் பழிக்கின்றனர். என்னதான் இருந்தாலும் சிற்சில பொழுதுகளில் யசோதையும் அதனை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. ஆயினும் அவளுடைய கிருஷ்ணன் தனது தெய்வாம்சத்தை  அவளுக்கு உணர்த்தும் பொழுதுகளில் மேற்கூறிய எண்ணக் கலவைகளில் தத்தளிக்கிற உள்ளம் கொண்டவளாகிறாள் அவள்.
இதனாலெல்லாம் அச்சம் கொண்டு, ‘உனக்கு முலைப்பாலூட்ட அஞ்சுகிறேன்,’ என்று கூறுகிறாள்.
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு
                        வாய்வைத்து அவ்வாயர் தம்பாடி
            சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச்
                        சுற்றும் தொழநின்ற சோதி!
            பொருள்தாயம் இலேன், எம்பெருமான் உன்னைப்
                        பெற்ற குற்றம் அல்லால்: மற்றிங்கு
            அரட்டா உன்னை அறிந்து கொண்டேன், இங்கு
                        அஞ்சுவன் அம்மம் தரவே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.1)
‘நான் உன்னை தெய்வமென்று அறிந்துகொண்டாலும், நீ செய்யும் சில விளையாட்டுகள் உலகத்தாரால் ஒப்புக்கொள்ளும்படி இல்லையே,’ என்பதே யசோதையின் ஆதங்கம்.
தாய்மார்கள் மோர் தயிர் வெண்ணெய் என விற்கப்போகிறார்கள்; வீட்டின் தகப்பன்மார்கள் மாடுகன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்கிறார்கள்; வீட்டிற்கு யார் காவல்? தமது இளய மகளைத்தான் காவல்வைத்துவிட்டுச் செல்கிறார்கள். கிருஷ்ணன் அவ்வீடுகளுக்குச் சென்று, அப்பெண்களிடம் இனிக்கப்பேசி, அவர்களை மயக்கி அழைத்துச் சென்றுவிடுகிறானாம்; சோலையிலும் நீர்நிலைகளிலும் தன் மனம்போனபடி அவர்களுடன் களித்துக் கூத்தாடுகிறானாம்- இவை அவனைப்பற்றி யசோதையிடம் வரும் முறையீடுகள். ‘நீ இவ்வாறெல்லாம் செய்வது உன்னை எவ்வாறு எல்லாம்  குறைகூறலாம் எனக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது. நான் என்ன செய்வேன் கிருஷ்ணா? நீ உயர்த்தியான தெய்வம் என நான் அறிந்து கொண்டதனால் உனக்கு முலைப்பால் தரவும் அஞ்சி நிற்கிறேன். வேறென்ன செய்வது?’ என ஆற்றாமையில் நெகிழ்கிறாளாம் யசோதை.
தாய்மார் மோர்விற்கப் போவர், தகப்பன்மார்
                        கற்றா நிரைப்பின்பு போவர்;
            நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை
                        நேர்படவே கொண்டு போதி;
            காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
                        கண்டார் கழறத் திரியும்
            ஆயா! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு
                        அஞ்சுவன் அம்மம் தரவே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.1)
‘காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா,’ என்பது ஒரு அழகான கவிதை நயம்.
பெரியாழ்வாரின் பாசுரங்களை அவை உணர்த்தும் பக்திரசத்திற்காகவும், பாசநெகிழ்வுக்காகவும், கவிதை நயத்துக்காகவும் படித்துப்படித்து மகிழலாம். இளம்வயதில் எனது பாட்டியார் கூறும் கதைகளில் கிருஷ்ணன் என்பவன் உண்மையாகவே நம்காலத்தில் ஒரு ஊரில் வாழும் குழந்தை- சிறுவன் எனவே எல்லாச் சிறுவர் சிறுமிகளையும் போல நானும் எண்ணிக்கொண்டிருந்தேன். அவன் நம்மில் ஒருவன் எனத்தான் நம்புகிறோம். இறைவன் எனும் பீடத்தில் ஏற்றிவைத்துவிட்டால், பின் சுளுவாக நெருங்கி உறவாட முடியுமா? – இப்போது சூப்பர்மான், ஸ்பைடர்மான் என்றில்லையா? அதுபோல என வைத்துக் கொள்ளலாமே! அதனால் அவன் செய்யும் சிறு (பெரும்) குறும்புகளும் ஒப்புக்கொள்ளப்பட்டனவாகி விட்டன. உயர்வாகவும் பேசப்படுகின்றன. எல்லாம் அந்த மாயாமோஹனக் கிருஷ்ணனுக்கே தெரியும்! அவன் ஒருவனிடமே கொஞ்சியும், கெஞ்சியும், சினம்கொண்டும், அடித்தும், பிடித்தும் விளையாடி மகிழமுடியும்.
இப்படி அவனுடைய பலவிதமான கல்யாணகுணங்களில் ஆழ்ந்துவிட்டவர்களே ஆழ்வார்கள்!
******
காட்சி மாறுகின்றது!
தனது உள்ளம் கவர்ந்த ருக்மிணியுடன் கிருஷ்ணன்- துவாரகையின் மன்னன் இப்போது- சரசசல்லாபத்தில் ஈடுபட்டுள்ளான். திடீரென ஏதோ நினைவுவந்த ருக்மிணி அவனிடமிருந்து,  இறுகப்புல்லிய அவனுடைய அந்த அணைப்பிலிருந்து (ஆலிங்கனத்திலிருந்து) தன்னை விடுவித்துக் கொண்டு நகர்ந்து அமர்கிறாள்.
“ருக்மிணி, என்னவாயிற்று?” எனப் பரிவுடன் கேட்கிறான் கிருஷ்ணன்.
ருக்மிணி  சொல்கிறாள்: “என் உதடுகளை விட்டுவிடு கிருஷ்ணா! இந்த உதடுகளினால் தானே பூதனையின் உயிரை உறிஞ்சி எடுத்தாய்? அவற்றைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது,” என்பவளை, “நீ என் பாதியல்லாவா தேவி? என்னிடம் உனக்கு என்ன பயம்?” என்று கேட்டபடி புன்சிரிப்புடன் இழுத்து இன்னும் இறுக அணைத்துக்கொள்கிறான் அந்தக்கிருஷ்ணன்.
“கிருஷ்ணா, என் கழுத்தை இறுகத் தழுவவேண்டா; இப்படிப்பட்ட தழுவுதலால்தானே அந்த மருதமரங்களை முறித்துவீழ்த்தினாய்? உம்… உன் நகங்களால் இவ்வாறு என்னைச் சீண்டாதே! இந்த நகங்களால்தானே ஹிரண்யகசிபு கிழித்துக் கொல்லப்பட்டான்? மரணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டான்?”
இவ்வாறு எல்லாம் கூறியவள் அவனுடைய அந்தரங்க இரவுநேர விளையாட்டுகளைத் தடுத்துவிடுகிறளாம். இது லீலாசுகர் கற்பனை!
ஓஷ்டம் முஞ்ச ஹரேபிபேமி பவதா
                        பானைர்ஹதா பூதனா
            கண்டாச்லேஷமமும் ஜஹீஹி தலிதா
                        வாலிங்கனேனார்ஜுநௌ
            மா தேஹிச்சசுரிதம் ஹிரண்யகசிபுர்-
                        நீதோ நகை: பஞ்சதாம்
            இத்தம் வாரித-ராத்ரி-கேலி-ரவதால்-
                        லக்ஷ்ம்யாபஹாஸாத்-தரி: (ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-2.70)
இவையெல்லாம் ருக்மிணி பயத்தினால் கூறும் சொற்களல்ல என நமக்கும் தெரியும்; இயற்றிய லீலாசுகருக்கும் தெரியும். தான் மணாளன் மனிதனாக நடமாடும் தெய்வம் என அவள் அறியாதவளா? கவிதையை, கிருஷ்ணன் பற்றிய ஸ்லோகங்களை நயம்பட உரைப்பதற்கு இது ஒரு வழி- துணை. அவ்வளவே!
ஆய்ப்பாடியில் யசோதை தன் குழந்தையைத் தெய்வம் எனக் கண்டுகொண்டதால், இவனுக்கு நான் எப்படிப் பாலூட்டுவது என்று தவித்தாள் என அழகுறப் பெரியாழ்வார் பத்துப்பாசுரங்களில் விவரிக்கிறார். இவருடைய காலம் 9-ம் நூற்றாண்டு.
அதுபோன்றே பில்வமங்களர் எனப்படும் லீலாசுகர் ருக்மிணி தன் காதல்கணவனானவனும் துவாரகையின் அரசனுமான கிருஷ்ணன் செய்த வீரச்செயல்களை அவனுடன் இருக்கும்அந்தரங்கமான வேளையில் எண்ணிப்பார்க்கிறாள் எனப்பாடியுள்ளார். இவருடைய காலம் 11-ம் நூற்றாண்டு. முந்தையவரின் பாடல்களைப் பின்னவர் படித்திருப்பாரோ என்னவோ நாமறியோம். ஆயினும் இப்பாடல்களில் காணப்படும் கருத்து ஒற்றுமை நம்மை வியப்படைய வைக்கின்றது.
(கிருஷ்ணலீலைகள் வளரும்)
****************

One Reply to “அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்”

Leave a Reply to Sarasa SuriCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.