முன் குறிப்பு:
1886 இல் லியோடால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதை மூன்று துறவிகள் . இப் படைப்பு, மதம்,பிரார்த்தனை,ஜெபம்,ஆன்மிகம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த-கூர்மையான பல விமரிசனங்களை மிக இயல்பாக முன் வைக்கிறது.ரஷியாவின் வோல்கா மாகாணத்தில் வழங்கி வரும் ஒரு பழங்கதை என்ற முன் குறிப்போடு இதை எழுதியிருக்கும் டால்ஸ்டாய்,பின் வரும் விவிலிய வாசகங்களைக் கதையின் முன் குறிப்பாகச் சேர்த்திருக்கிறார்.
‘’நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போலத் தேவையில்லாமல் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி விரயமாக்காதீர்கள்.அவர்கள் அதிகமான வார்த்தைகளைச் சொல்வதனாலேயே தங்கள் பிரார்த்தனை கேட்கப்படுமென நினைக்கிறார்கள்; அவர்களைப் போல நீங்கள் இருக்க வேண்டாம்.உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்வதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.’’ மத்தேயு-அதி.6- 7,8
ஆர்க் ஏஞ்சலிலிருந்து சோலோவெட்ஸ்க்கிலுள்ள மடத்தை நோக்கிப் பாய்மரக்கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு பாதிரியார். புனிதயாத்திரை மேற்கொண்டிருக்கும் பயணிகள் நிறையப் பேரும் அதே கப்பலில் இருந்தனர்; அங்கே உள்ள ஆலயங்களைப் பார்ப்பதற்காக அவர்கள் போய்க் கொண்டிருந்தனர்.
காற்றின் வேகமும்,பருவநிலையும் சாதகமாக இருந்ததால் அந்த நீர்வழிப்பயணம் சிரமமில்லாததாகவே இருந்தது; புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த யாத்ரிகர்கள் மரக்கலத்தின் மேல் தளத்தில் படுத்துக் கொண்டும் உணவருந்திக் கொண்டும் சிறு சிறு கூட்டமாக உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டும் இருந்தனர்.அப்போது அந்தப் பாதிரியாரும் மேல்தளத்துக்கு வந்தார்;அங்கே குறுக்கும் நெடுக்குமாக அவர் உலவிக் கொண்டிருந்தபோது கப்பலின் முன் பகுதியில் நின்றபடி மீனவன் ஒருவனோடு ஒரு சிலர் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;கடலின் பக்கமாக எதையோ சுட்டிக் காட்டியபடி அவர்களிடம் அந்த மீன்பிடிப்பவன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.சற்றே நின்று அவன் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த திசையில் தன் பார்வையை ஓட விட்டார் பாதிரியார்.நல்ல வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்த கடற்பரப்பைத் தவிர அவர் கண்களில் வேறெதுவும் படவில்லை.அவர்கள் என்ன பேசுகிறார்களென்பதை அறிந்து கொள்ள அவர்களின் அருகே நெருங்கிச் சென்றார் அவர்;ஆனால் அவரைக் கண்ட மாத்திரத்தில் தன் தலைத் தொப்பியைக் கழற்றி விட்டு அவன் அமைதியாகி விட்டான்; அங்கிருந்த மற்றவர்களும் தங்கள் தலைத் தொப்பிகளை அகற்றி அவருக்கு வணக்கம் செலுத்தினர்.
’’நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்காக இங்கே வரவில்லை நண்பர்களே! அவன் உங்களிடம் என்னசொல்லிக் கொண்டிருந்தான் என்பதைக் கேட்பதற்காகவே வந்தேன்,’’ என்றார் பாதிரியார்.
’’இந்த மீன்பிடிப்பவன், ஒரு சில துறவிகளைப் பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்’’-என்றான் அங்கிருந்த மற்றவர்களைக் காட்டிலும் சற்றுத் துணிச்சலோடு காணப்பட்ட ஒரு வியாபாரி.
’’ துறவிகளா?யார் அவர்கள் ?’’என்று கேட்டபடியே கப்பலின் ஒரு பக்கம் சென்று அங்கே கிடந்த ஒரு பெட்டியின் மேல் அமர்ந்து கொண்டார் பாதிரியார்.
’’அவர்களைப் பற்றி எனக்கும் சொல்லுங்கள்.அதைப் பற்றிக் கேட்க நானும் ஆசைப்படுகிறேன். அது சரி…நீங்கள் எல்லோரும் எதையோ சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தீர்களே, அது என்ன?’’
‘’அதோ அங்கே தெரிகிறதே அந்தச் சிறிய தீவைத்தான்; நீங்கள் இந்தப் பக்கமாக இப்படிப் பார்த்தால் தெரியும் இதோ பாருங்கள்,’’என்றபடி தொலைதூரத்தில் சற்று வலப் புறமாகத் தென்பட்ட ஒரு இடத்தை அவருக்குச் சுட்டிக் காட்டினான் அந்த மனிதன்.
’’அந்தத் தீவிலேதான் ஆன்ம முக்தி பெறும் நோக்கத்துடன் அந்தத் துறவிகள் வாழ்ந்து வருகிறார்கள்.’’
‘’என்னது..?தீவா…? அது எங்கே இருக்கிறது?அப்படி எதுவும் எனக்குத் தென்படவில்லையே?’’
‘’அதோ அங்கே தூரத்தில்…! தயவு செய்து என் கைகளை ஒட்டியே பார்த்துக் கொண்டு வாருங்கள்;அங்கே சின்னதாய் ஒரு மேகம் கண்ணில் படுகிறதா?அதற்குக் கீழே கொஞ்சம் இடதுபுறமாக இலேசாக ஒரு கீற்றுப் போலத் தெரிகிறதே அதுதான் அந்தத் தீவு.’’
பாதிரியார் கவனமாகப் பார்க்க முற்பட்டபோதும் பழக்கமில்லாத அவர் கண்களுக்குச் சூரிய ஒளியில் மின்னும் நீர்ப்பரப்பைத் தவிர வேறெதுவும் புலப்படவில்லை.
’’எனக்கு அது தட்டுப்படவில்லை,’’என்றார் அவர்.
‘’அது இருக்கட்டும்.அங்கே வசித்து வரும் துறவிகள் யார்?”’
‘’அவர்கள் புனிதமான தபசிகள்,’’என்று பதிலளித்தபடி தொடர்ந்தான் அந்த மீனவன்.
‘’நான் வெகு காலத்துக்கு முன்பே அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் சென்ற இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்லை.’’
ஒருமுறை தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மரக்கலம் கவிழ்ந்து போனதால்,தான் எங்கே இருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் அந்தத் தீவில் ஒரு இரவைக் கழிக்க நேர்ந்த சம்பவம் பற்றி அவன் விவரித்தான். காலையில் அந்தத் தீவுக்குள் சுற்றிவந்தபோது மண்ணால் செய்யப்பட்ட ஒரு குடிசையை அவன் காண நேர்ந்தது;அதன் அருகில் நின்றுகொண்டிருந்த முதியவர் ஒருவரையும் அவன் கண்டான்.பிற்கு மேலும் இருவர் அந்தக் குடிசையிலிருந்து வெளியே வந்தனர்.அவர்கள் அவனுக்கு உணவளித்து,அவனது ஆடைகளைக் காய வைத்துக் கொள்ள உதவியதோடு அவனது உடைந்து போன படகைச் சரிப்படுத்திக் கொள்ளவும் உதவினர்.
‘’அவர்கள் எப்படி இருப்பார்கள்?’’என்று கேட்டார் பாதிரியார்.
‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது, அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்; அவரும் கூட வயதானவர்தான். அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார். அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர். நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்; கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்; பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும். உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்; தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை.’’
’’அவர்கள் உன்னிடம் ஏதாவது பேசியதுண்டா?’’என்று கேட்டார் பாதிரியார்.
“பெரும்பாலும் அவர்கள் அமைதியாகவேதான் எல்லாவற்றையும் செய்வார்கள்;தங்களுக்கிடையே கூட அவர்கள் அதிகம் பேசிக் கொள்வதில்லை.அவர்களில் எவரேனும் ஒருவர் குறிப்பாகப் பார்த்தாலே அதை மற்றவர்கள் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.அவர்கள் வெகு காலமாக அங்கிருக்கிறார்களா என்று அந்த உயரமானவரிடம் நான் கேட்டேன்;அவர் கோபமாக இருப்பது போல முகத்தைச் சுளித்தபடி ஏதோ முணுமுணுத்தார்;ஆனால் அந்த வயதானவர் அவரது கையைப் பிடித்துக் கொண்டு புன்னகைத்ததும் அந்த உயரமானவர் அமைதியாகி விட்டார். ’எங்களிடம் கருணையோடிருங்கள்’என்று மட்டும் சொன்னபடி அந்த வயதான மனிதர் புன்னகைத்தார்.அவ்வளவுதான்.’’
மீனவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அவர்களது கப்பல் அந்தத் தீவை நெருங்கியிருந்தது.
‘’நீங்கள் விரும்பினால் அந்தத் தீவை இப்போது மிகவும் தெளிவாகவே பார்க்கலாம் ஐயா’’என்று கூறியபடி தன் கையால் அதைச் சுட்டிக் காட்டினான் அந்த வியாபாரி. பாதிரியார் சற்றுக் கூர்ந்து பார்த்தபோது கறுப்பான கீற்றுப் போன்ற அந்தத் தீவு அவர் கண்ணுக்குத் தென்பட்டுவிட்டது.கப்பலின் முன்பகுதியிலிருந்து பின்பகுதியை நோக்கிச் சென்ற அவர்,சுக்கானைப் பிடித்தபடி கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தவர்களிடம் ‘’அது என்ன தீவு?’’என்றார்.
‘’அதுவா?’’என்று கேட்ட ஒருவன்,
‘’அதற்குப் பெயர் எல்லாம் எதுவும் இல்லை.அதைப் போல நிறையத் தீவுகள் இந்தக் கடலுக்குள் இருக்கின்றன’’ என்றான்.
‘’தங்களின் ஆன்ம முக்தியை வேண்டியபடி அங்கே சில துறவிகள் வசித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுவது நிஜம்தானா?’’
‘’அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் அருள்தந்தையே..!ஆனால் அது உண்மையா என்பது எனக்குத் தெரியாது.அப்படிப்பட்டவர்களைப் பார்த்திருப்பதாக மீன் பிடிப்பவர்கள் சொல்கிறார்கள்; ஆனால் அவர்கள் பெரும்பாலும் கதை விடுபவர்களாகத்தான் இருக்கக் கூடும்’’
‘’நான் அந்தத் தீவில் இறங்கி அந்த மனிதர்களைப் பார்க்க விரும்புகிறேன்,’’ என்றார் பாதிரியார்.
‘’அதற்கு என்ன செய்யலாம்?’’
‘’தீவுக்கு நெருக்கமாகச் செல்வது கப்பலால் முடியாது,’’என்று பதிலளித்த மாலுமிகள், ‘ஆனால் ஒரு படகின் மூலம் நீங்கள் அங்கே செல்ல முடியும். எதற்கும் கப்பல் கேப்டனிடம் பேசுவது நல்லது,’’என்றனர்.
கப்பல் கேப்டனுக்குச் செய்தி சொல்லி அனுப்பப்பட அவரும் அங்கு வந்துசேர்ந்தார்.
‘’நான் அந்தத் துறவிகளைப் பார்த்தாக வேண்டும்.தீவின் கரைக்கு என்னை ஓட்டிச் செல்ல முடியுமா?’’என்றார் பாதிரியார்.
ஆனால் கேப்டனோ அவரைத் தடுத்து நிறுத்தவே முயன்றார் .
‘’கட்டாயம் அங்கே போக முடியும்…ஆனால் அதற்கு நிறைய நேரத்தை நாம் செலவிட வேண்டியிருக்கும்,’’ என்று கூறிய அவர்,’’அருள்தந்தையே…நீங்கள் அனுமதித்தால் இன்னும் ஒன்றையும் சொல்லிக் கொள்கிறேன்..இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்வதற்கு அந்தக் கிழவர்கள் தகுதியானவர்கள் இல்லை. அவர்கள் மிக மிக முட்டாள்தனமான கிழவர்கள் என்றும் எதையுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்றும் ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசுவதில்லை என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சொல்லப் போனால் கடலிலுள்ள மீன்களுக்கும் அவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.’’
‘’எனக்கு அவர்களைப் பார்த்தாக வேண்டும்,’’என்றார் பாதிரியார்.
‘’அதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமத்துக்கும்,நேர விரயத்துக்கும் உரிய தொகையை நான் கொடுத்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு ஒரு படகை ஏற்பாடு செய்து கொடுங்கள்’’
அதற்கு மேல் வேறு வழி இல்லை;அதனால் உரிய ஆணை உடனே பிறப்பிக்கப்பட்டது.
மாலுமிகளும் கப்பலோட்டிகளும் கப்பலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அதன் திசையைத் திருப்பித் தீவின் பக்கமாகச் செலுத்தத் தொடங்கினர்.கப்பலின் முன்பகுதியில் பாதிரியார் உட்கார வசதியாக ஒரு நாற்காலி கொண்டுவரப்பட்டது;அதில் அமர்ந்தபடி எதிரே தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.பிற பயணிகளும் அங்கே வந்து குழுமியபடி தீவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.கூர்மையான கண்பார்வை கொண்டவர்களுக்கு அங்கிருந்த பாறைகள் புலப்படத் தொடங்கியிருந்தன;பிறகு மண்ணாலான ஒரு குடிசையும் தெரிந்தது.இறுதியாக அந்தத் துறவிகளும் கூட ஒருவனின் பார்வையில் தென்பட்டு விட்டார்கள்.
ஒரு தொலைநோக்கியை எடுத்து வந்த கப்பல் கேப்டன், முதலில் அதன் வழியே பார்த்து விட்டுப் பிறகு பாதிரியாரிடம் அதைக் கொடுத்தார்.
’’இதோ…இப்போது தெளிவாகத் தெரிகிறது.கரையில் மூன்றுபேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.அதோ..அந்தப் பெரிய பாறைக்குக் கொஞ்சம் வலது புறத்தில்..’’
தொலைநோக்கியை வாங்கிச் சரியாக அமைத்துக் கொண்ட பாதிரியார் அந்த மூன்று பேரையும் பார்த்தார்;உயரமான ஒருவர்,குள்ளமான மற்றொருவர்,எல்லோரையும் விட மிகவும் குள்ளமான கூன் விழுந்த இன்னொருவர்;அவர்கள் மூவரும் ஒருவரோடொருவர் கை கோர்த்தபடி கரையில் நின்று கொண்டிருந்தார்கள்.
கேப்டன் பாதிரியாரைத் திரும்பிப் பார்த்தபடி இவ்வாறு குறிப்பிட்டார்.
’’அருள்தந்தையே, நமது கப்பலால் இதை விட அருகாமையில் செல்ல முடியாது.நீங்கள் அக்கரைக்குச் செல்ல வேண்டுமென்றால் தனிப் படகிலேதான் போக வேண்டும்;நாங்கள் வேண்டுமானால் நங்கூரம் போட்டு இங்கே நின்று கொள்கிறோம்’’
கப்பலைப் பிணைத்திருந்த கயிறுகள் இழுக்கப்பட்டு நங்கூரம் பாய்ச்சப்பட்டது;மரக்கலத்தின் பாய்களும் சுருட்டப்பட்டன.அப்போது ஏற்பட்ட ஒரு சிறு குலுக்கலில் கப்பல் சற்றே அசைந்தாடியது.கப்பலிலிருந்து ஒரு படகு கீழிறக்கப்பட்டுப் படகோட்டிகள் அதற்குள் குதித்தனர்;பாதிரியார் ஒரு ஏணி வழியே கீழ் இறங்கிச் சென்று படகுக்குள் அமர்ந்து கொண்டார்.படகோட்டிகள் துடுப்புகளை வலிக்கப் படகும் விரைவாக அந்தத் தீவைச் சென்றடைந்தது.
கல்லெறியும் தூரத்துக்கு அருகே நெருக்கமாக வந்த பிறகு அந்த மூன்று முதியவர்களையும் அவர்களால் காண முடிந்தது;கழுத்தைச் சுற்றி ஒரு பாயை மட்டும் கட்டிக் கொண்டிருந்த உயரமானவர்,குடியானவனின் கந்தலான உடையைத் தரித்திருந்த குள்ளமானவர்,பழசாகிப் போன மதகுருவின் மேலங்கியை அணிந்திருந்த கூனல் விழுந்த மிகவும் மூத்த மனிதர்;அவர்கள் மூவரும் கைகளைக் கோர்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.
துடுப்புப் போடுபவர்கள் படகைக் கரைப் பக்கமாக இழுத்து வந்து வளையத்தோடு இறுகப் பிணைத்து நிறுத்திய பின் பாதிரியார் அதிலிருந்து வெளியே இறங்கி வந்தார்.
அந்த முதியவர்கள் அவரை நோக்கி மண்டியிட,அவர், அவர்களை ஆசீர்வதித்தார்;அப்போது அவர்கள் இன்னும் சற்றுக் குனிந்தபடி அவரை மண்டியிட்டு வணங்கினர்.
பாதிரியார் அவர்களிடம் பேசத் தொடங்கினார்.
‘’தெய்வாம்சம் நிரம்பியவர்களே..நீங்கள் உங்கள் ஆன்ம முக்தியை வேண்டியும், சக மனிதர்களுக்காக இறைமகன் இயேசுவிடம் பிரார்த்தனை செய்தபடியும் இங்கே வசித்து வருவதாக நான் கேள்விப்பட்டேன்’’
என்றபடி பேச்சைத் தொடங்கினார் அவர்.
‘’நான் இயேசுவின் தொண்டிற்குத் தகுதியில்லாத ஒரு மனிதன்தான் என்றபோதும்- அவரது அளப்பரிய கருணையால் அவரது மந்தைகளைக் காக்கவும், வழி நடத்தவும் பணிக்கப்பட்டிருக்கிறேன்.கடவுளின் சேவகர்களாக இருக்கும் உங்களைப் பார்க்கவும், என்னால் முடிந்தது எதுவும் இருந்தால் அதை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் நான் விரும்புகிறேன்’’
அந்த முதியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டபடி அமைதியாக நின்றிருந்தனர்.
‘’சரி..சொல்லுங்கள்…’’என்றபடி தொடங்கினார் பாதிரியார்.
‘’உங்கள் ஆன்ம முக்திக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?இந்தத் தீவில் இருந்து கொண்டு இறைவனுக்கு எந்த வகையில் சேவகம் செய்கிறீர்கள்?’’
இரண்டாம் துறவி பெருமூச்செறிந்தபடி தங்கள் எல்லாரையும் விட வயதில் மூத்த துறவியை நோக்கினார்.அவர் புன்னகை புரிந்தபடி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘’இறைவனுக்கு எப்படிச் சேவை செய்வது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது.நாங்கள் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்தபடி ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறோம். கடவுளின் ஊழியரே! நாங்கள் செய்வது அவ்வளவுதான்’’
‘’அது போகட்டும்..கடவுளிடம் நீங்கள் எவ்வாறுஜெபம் செய்கிறீர்கள்’’என்று கேட்டார் பாதிரியார்.
‘’நாங்கள் இந்த வகையிலேதான் பிரார்த்திக்கிறோம்’’என்றபடி அதைச் சொல்லத் தொடங்கினார் ஒரு துறவி.
‘’நீங்களும் மூவர்…நாங்களும் மூவர்…எங்களிடம் கருணையோடிருங்கள் ’’
முதிய துறவி இவ்வாறு சொன்னதும் அவர்கள் மூவரும் வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்தி அதையே திரும்பக் கூறினார்கள்.
‘’’நீங்களும் மூவர்…நாங்களும் மூவர்…எங்களிடம் கருணையோடிருங்கள்’’
பாதிரியார் புன்னகை செய்து கொண்டார்.
‘’புனிதமான மும்மைத் தத்துவம்(பிதா,சுதன்,பரிசுத்த ஆவி) பற்றி நீங்கள் நிச்சயம் ஏதோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்’’என்றார் அவர்.
‘’ஆனால் உங்கள் ஜெபம் சரியானதாக இல்லை; தவ சீலர்களே..நீங்கள் என் பாசத்துக்குப் பாத்திரமாகி விட்டீர்கள். இறைவனைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது; ஆனால்,அவருக்கு சேவகம் செய்வது எப்படி என்பது உங்களுக்குத் தெரியவில்லை.ஜெபம் செய்வதற்கான முறை அது அல்ல…இதோ கேட்டுக் கொள்ளுங்கள்.நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்.அது என்னுடைய சொந்தப் பிரார்த்தனை இல்லை;புனிதமான இறைநூல்களில் தன்னை எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று இறைவன் ஆணையிட்டிருக்கிறானோ அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்லித் தரப் போகிறேன்’’
பூமியிலுள்ள மனிதர்களிடம் கடவுள் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொண்டார் என்பதை அந்த மூன்று துறவிகளிடமும் விரித்துரைக்க ஆரம்பித்தார் பாதிரியார்;கடவுள் ஒருவனே பிதாவாய்..குமாரனாய்..பரிசுத்த ஆவியாய்..மூன்றாகவும் வந்ததை அவர்களிடம் எடுத்துரைத்தார் அவர்.
‘’அம் மூவரில் மகனாக இருந்த கடவுளே மனிதர்களைக் காக்க மண்ணுக்கு வந்தார்’’என்ற அவர்,
‘’நாம் எல்லோரும் இப்படித்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் கற்றுத் தந்திருக்கிறார்.எனவே நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுவிட்டு அப்படியே திருப்பிச் சொல்லுங்கள்..
’எங்கள் பிதாவே’
முதலில் நின்றிருந்த வயதான மனிதர் ‘எங்கள் பிதாவே’என்று அதையே திரும்பச் சொல்ல-அடுத்து இரண்டாமவரும்,தொடர்ந்து மூன்றாமவரும் ‘எங்கள் பிதாவே’என்று அதையே திரும்பக் கூறினர்.
‘’பர மண்டலத்தில் இருப்பவரே’’என்று தொடர்ந்தார் பாதிரியார்.
முதல் துறவி ‘’பர மண்டலத்தில் இருப்பவரே’’என்று அதையே திரும்பக் கூறினார்;ஆனால் இரண்டாமவர் அந்தச் சொற்களை உச்சரிக்கத் தடுமாறினார்;உயரமாய் இருந்த துறவியாலும் அதை ஒழுங்காகக் கூற முடியவில்லை.அவருடைய முடி மிகவும் அடர்த்தியாக- அவரது வாயை மறைக்கும் வகையில் புதர் போல வளர்ந்திருந்ததால் அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை.மிகவும் வயதானவராக இருந்த துறவிக்குப் பற்களே இல்லையென்பதால் அவராலும் ஏதோ தெளிவில்லாத வார்த்தைகளை முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.
பாதிரியார் அந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்ல அவரைத் தொடர்ந்து அந்த முதியவர்களும் அவற்றைச் சொல்லிக் கொண்டே இருந்தனர்.பாதிரியார் ஒரு கல்லின் மீது அமர்ந்தபடி இருக்க,அவர்கள் அவரது வாயையே பார்த்தபடி அவர் சொல்லும் வார்த்தைகளையே திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தனர்.நாள் முழுவதும் அதற்காகவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்த பாதிரியார் ஒவ்வொரு சொல்லையும் இருபது முப்பது தடவையோ அல்லது அதற்கும் மேல் நூறு முறையோ கூடச் சொல்லிக் கொண்டிருக்க அந்த முதியவர்களும் அவற்றையே திருப்பிச் சொன்னபடி இருந்தனர்.அவர்கள் தவறு செய்து குழப்பும்போதெல்லாம் அவர் அவர்களைத் திருத்துவதோடு ஆரம்பத்திலிருந்து மறுபடியும் சொல்லுமாறு செய்து கொண்டிருந்தார்.
கடவுள் மீதான அந்த ஜெபத்தை அவர்களுக்கு முழுமையாகக் கற்பித்துக் கொடுக்கும் வரை அவர் கொஞ்சமும் சளைக்கவில்லை;தான் சொன்னதைத் திருப்பிச் சொல்வதோடு மட்டுமன்றித் தாமாகவே அதைச் சொல்லும் வரை அவர் அவர்களை விடவில்லை.மூவரில் நடுவாக இருந்த துறவிதான் முதலில் அதைக் கற்றுக் கொண்டு தானாகவே முழுவதையும் திரும்பச் சொல்லப் பழகிக் கொண்டார்;அவரைத் திரும்பத் திரும்ப அதையே சொல்லுமாறு செய்தார் பாதிரியார்; இறுதியில் ஒரு வழியாக மற்றவர்களும் அதைச் சொல்லப் பழகி விட்டார்கள்..
தன்னுடைய கப்பலுக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பாதிரியார் ஆயத்தமானபோது இருட்டத் தொடங்கி விட்டது;நீர்ப்பரப்புக்கு மேலே நிலவொளி படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.அந்த முதியவர்களிடமிருந்து அவர் விடை பெறும்போது அவர்கள் மண்ணில் மண்டியிட்டு விழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் அவர்களைத் தூக்கி நிறுத்தி ஒவ்வொருவரையும் முத்தமிட்ட பின், தான் கற்பித்த வகையில் ஜெபம் செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்ட பிறகு, படகில் ஏறிக் கப்பலுக்குத் திரும்பினார்.
அவர் கப்பலை நோக்கிப் படகில் வந்து கொண்டிருந்தபோது இறைஜெபத்தை உரத்த குரலில் அந்த மூன்று துறவிகளும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததை அவரால் கேட்க முடிந்தது.படகு கப்பலின் அருகே வந்து விட்ட பிறகு அவர்களது குரல்கள் கேட்கவில்லை;ஆனால் நிலவொளியின் துணையால் அவர்கள் நின்றுகொண்டிருந்ததை மட்டும் பார்க்க முடிந்தது;கரையில் அவர்களிடமிருந்து விடைபெறும்போது நின்றுகொண்டிருந்த அதே வகையில் மிகக் குள்ளமானவர் நடுவிலும்,உயரமானவர் வலது புறத்திலும்,நடுத்தரமானவர் இடது புறத்திலும் நின்றிருந்தனர்.
பாதிரியாரின் படகு கப்பலை அடைந்து அவர் அதில் ஏறியதும், நங்கூரம் விடுவிக்கப்பட்டுக் கப்பலின் பாய்கள் பறக்கவிடப்பட்டன.காற்றின் வேகத்தை உள்வாங்கியபடி கப்பல் மிதந்து செல்லத் தொடங்கியது.பாதிரியார் கப்பலின் பின்புறமாக ஓர் இருக்கையில் அமர்ந்தபடி அவர்கள் விட்டு வந்த அந்தத் தீவையே பார்த்துக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் அந்தத் துறவிகளையும் கூட அவரால் பார்க்க முடிந்தது;பிறகு அவர்கள் கண்ணில் படவில்லை;அந்தத் தீவு மட்டும் இன்னும் கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருந்தது.இறுதியாக அதுவும் கூடக் கண்பார்வையிலிருந்து மறைந்து போயிற்று;நிலவொளியில் ஜொலித்துக் கொண்டிருந்த கடலை மட்டுமே இப்போது காண முடிந்தது.கப்பலில் இருந்த புனிதப் பயண யாத்ரிகர்களும் உறங்கி விட மேல் தளத்தில் எல்லா அரவங்களும் அடங்கி அமைதியாகி விட்டது.பாதிரியாருக்கு உறங்க விருப்பமில்லை;தன்னந்தனியே அமர்ந்தபடி கண்ணுக்குப் புலப்படாத அந்தத் தீவைக் கடலுக்குள் வெறித்தபடி,இனிமையான குணம் படைத்த அந்த முதியவர்களையே நினைத்துக் கொண்டிருந்தார் அவர்.கடவுளைப் பற்றிய அந்த ஜெபத்தைக் கற்றுக் கொண்டதில் அவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.அப்படிப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களுக்கு அதைக் கற்பித்து உதவுவதற்குத் தன்னை அனுப்பி வைத்ததற்காக இறைவனுக்கு அவர் நன்றி செலுத்தினார்.
அந்தக் கடலுக்குள் மறைந்து போன தீவின் பக்கமாய் வெறித்தபடிஅப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தார் பாதிரியார்.நிலவின் கற்றைகள் இங்கும் அங்குமாக அலைகளின் மீது மின்னி விளையாடிக் கொண்டிருந்தது அவர் பார்வைக்குப் புலனாகிக் கொண்டிருந்தது.
கடலுக்குக் குறுக்காக நிலவு விரித்துப் போட்டிருந்த ஒளிமயமான பாதையில் வெண்மை நிறத்தில் பிரகாசமான ஏதோ ஒன்று…அவருக்குப் புலனாகியது. அது சீகல் பறவையா..அல்லது ஏதேனும் ஒரு சிறிய படகில் விரித்துக் கட்டப்பட்டிருக்கும் பாய்த் துணியின் பளபளப்பா..?வியப்பில் ஆழ்ந்தபடி தன் கண்களை அதன் மீதே பதித்தபடி இருந்தார் பாதிரியார்.
’ஏதோ ஒரு படகு நமக்குப் பின்னால் வருகிறது போலிருக்கிறது’ என்று அவர் எண்ணிக் கொண்டார். ’ஆனால் அது மிகவும் வேகமாக அல்லவா தாண்டிக் கொண்டு வருகிறது? ஒரு நிமிடம் முன்னால் வெகு தொலைவில் இருந்த அது இப்போது இவ்வளவு பக்கத்தில்….அது ஒரு படகாக இருக்க வழியில்லை; காரணம் அதில் விரித்துக் கட்டப்பட்ட பாய்கள் எதுவும் இல்லை;ஆனால் எப்படியிருந்தாலும் நம்மை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அது நம்மைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது’
அவரால் அது இன்னது என்பதைத் தெளிவாகக் காண முடியவில்லை;அது படகோ பறவையோ இல்லை,மீனும் கிடையாது! ஒரு மனிதனால் இவ்வளவு பெரிதாக இருக்க முடியாது;மேலும் அப்படி நடுக் கடலில் இருப்பதும் அவனால் சாத்தியமாகக் கூடியதில்லை. தன் இருக்கையை விட்டு எழுந்தபடி மாலுமிகளை அழைத்தார் பாதிரியார் .
‘’நண்பர்களே அது என்னவென்று கொஞ்சம் பாருங்களேன்…என்ன அது…?’’
பாதிரியார் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தபோதும் இப்போது அது என்னவென்பதை அவரால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
அந்த மூன்று துறவிகளும்தான் நீரின் மீது ஓடி வந்து கொண்டிருந்தார்கள்; வெண்மை நிறத்தில் அவர்கள் ஒளிர்ந்து கொண்டிருக்க,அவர்களின் தாடிகள் சாம்பல் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தன;விடிகாலைப் பொழுது விரைந்து வருவதை விடவும் விரைவாக அந்தக் கப்பலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அந்தக் காட்சியைக் கண்டதும்,கப்பலின் சுக்கான் பிடிப்பவர்கள் கூட அச்சத்தினால் அதைக் கைநழுவ விட்டு விட்டார்கள்.
‘’அடக் கடவுளே அந்தத் துறவிகளல்லவா நம்மைத் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்? ஏதோ சாதாரணமான ஒரு நிலப்பரப்பின் மீது ஓடி வருவதைப் போல் அல்லவா இவர்கள் தண்ணீரின் மீது ஓடி வருகிறார்கள்”
பாதிரியார் இவ்வாறு குரல் எழுப்புவதைக் கேட்ட மற்ற பயணிகளெல்லாம் குதித்தோடி வந்து கப்பலின் பின்பகுதியில் கூட்டமாய்க் குழுமி விட்டனர்.அந்த மூன்று துறவிகளும் ஒருவரோடொருவர் கை கோர்த்துக் கொண்டு வருவதையும் அவர்களில் முன்னாலிருந்த இருவரும் கப்பலை நிறுத்தச் சொல்லி வேண்டுவதையும் அவர்கள் கேட்டனர்.அந்த மூன்று பேரும் தங்கள் கால்களையே நகர்த்தாமல் நீர்ப்பரப்பின் மீது சறுக்கியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் நிறுத்தப்படுவதற்குள் அவர்கள் அதனருகே வந்து சேர்ந்து விட்டிருந்தனர்;பிறகு தலையை நிமிர்த்திய வண்ணம் மூவரும் ஒரே குரலில் இவ்வாறு கூறினர்.
’’கடவுளின் சேவகரே..நீங்கள் கற்றுத் தந்த அந்த ஜெபத்தை நாங்கள் மறந்து போய் விட்டோம்.அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த வரையில் அது எங்கள் நினைவில் இருந்தது;ஒரே ஒரு முறை சொல்லாமல் விட்டதும் ஒரு வார்த்தை மட்டும் நழுவிப் போயிற்று…இப்போதோ எல்லாமே சுக்கல் சுக்கலாகிப் போய் விட்டது; எங்களுக்கு அதில் எதுவுமே ஞாபகமில்லை.இன்னொரு தடவை அதை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்’’
பாதிரியார் தனக்குத்தானே சிலுவைக் குறி போட்டுக் கொண்டார்;பிறகு கப்பலின் பக்கம் சாய்ந்து நின்று அவர்களைப் பார்த்தபடி சொன்னார்.
‘’தெய்வாம்சம் பொருந்தியவர்களே..! நீங்கள் செய்து வரும் பிரார்த்தனையே இறைவனை எட்டி விடக் கூடியதுதான்…. உங்களுக்கு அதைக் கற்றுத் தரும் தகுதி என்னிடம் இல்லை. பாவியாகிய என்னை மன்னித்து விடுங்கள்’’
பிறகு அந்த முதியவர்களை நோக்கிக் குனிந்து மண்டியிட்டார் அவர்.
அவர்கள்,தாங்கள் வந்த வழியாகவே கடலுக்குள் திரும்பிச் சென்றனர். கண்பார்வையிலிருந்து கடைசியாக அவர்கள் மறைந்து போன புள்ளியில்- அன்று மாலை வரை பிரகாசமான ஒரு வெளிச்சம் சுடர் விட்டுக் கொண்டே இருந்தது.