[stextbox id=”info” caption=”அமெரிக்க முதலியத்தின் சிறப்பம்சம்”]
விளையும் பயிரை முளையிலேயே கருக்குவது பற்றி இந்திய தார்மீக சிந்தனை கடுமையான விமர்சனம் கொண்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அமெரிக்க முதலியத்தின் சிறப்பம்சமே இதுதான். எப்படி புதுப் பயிர்களைக் கருக்குவது என்று ரூம் போட்டு யோசித்துத்தான் அவர்களின் பொருளாதாரத்தையே ‘வளர்த்திருக்கிறார்கள்’. ஒட்டகத்தைக் காட்டி சிகரெட் விற்க வேறு யாருக்குத் தோன்றி இருக்க முடியும்? இளம் பெண்கள் கடற்கரைகளில் மதுவருந்திக் கோலாகலப்படுத்துவதாகக் காட்டிக் கல்லூரி மாணவர்களை ஒழிப்பதை யோசித்துச் செய்து ஒழித்தும் இருக்கிறார்கள். அதே போல கிட்டாத கானல் நீரான பெரும் வளம் என்பதைப் படிப்பினால் அடையலாம் என்று ஒரு பொய்மையைப் பரப்பி, லாபத்துக்கு நடத்தப்படும் கல்லூரிகளில் சேரத் தூண்டி, கடனை அள்ளிக் கொடுத்து படிப்பு முடிந்து வெளியே வந்ததும் இரும்புச் சுத்தியலால் தலையில் அடித்துக் கடனைத் திருப்பச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த ஒபாமா நிர்வாகம் இந்தக் கொடுமையை ஆதரிக்கும் ஒரு நிர்மூடனைத்தான் கல்விக் காரியதரிசியாக இத்தனை ஆண்டுகள் நியமித்து இருந்தது.
[/stextbox]
[stextbox id=”info” caption=”பிரான்ஸின் ஃபாசிசம்”]
மேற்கின் அறிவுத் தாரகையும், இந்திய இடதுசாரிகளின் அபிமான பூமியுமான ஃப்ரான்ஸ் படிப்படியாகக் கீழிறங்கித் தரைக்கு வருகிறதா, இல்லை எப்போதுமே அதன் இயல்பான ஃபாசிசத்தை இப்போது வெளிப்படையாக நமக்கெல்லாம் காட்டுகிறதா என்று நாம் யோசிக்கலாம். இந்திய அறிவு ஜீவிகள் ஃப்ரான்ஸின் இந்த நடவடிக்கையைப் பார்த்து ஒப்பாரி வைப்பார்களா, ஓலமிடுவார்களா என்றும் நாம் யோசிக்க வேண்டி இருக்கும். அப்படி என்ன செய்திருக்கிறது ஃப்ரான்ஸ்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”அமெரிக்காவில் முஸ்லிம்களுடனான உரையாடல்”]
அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பொதுவெளி உரையாடல் வலுத்து வருகிறது. இதற்கு ஒரு காரணம் அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் நிற்கத் தகுதி பெறும் முனைப்பு கொண்ட அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட உரைகள். இனவெறி அரசியல் சூதாட்டத்தைப் பற்பல வருடங்களாக நடத்தி வரும் ஒரு கேபிள் தொலைக்காட்சி நிறுவனமும் (ரூபர்ட் மர்டாக் என்பாரின் கைவசம் உள்ள பல ஊடக அமைப்புகளில் இது ஒன்று), சில பத்திரிகைகளுமாக இப்படி ஒரு பதட்டத்தை உருவாக்குவதில் ஆதாயத்தைத் தேடுகின்றன. எதிராக நிற்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களின் ‘அமைதி, அமைதி’ என்கிற கூக்குரலை பொருட்படுத்தும் கூட்டம் அத்தனை இல்லை என்றுதான் தோன்றுகிறது. இது தெரிந்துதான் உலகைப் பிளந்தால் தமக்கு ஆதாயம் என்று கருதும் இஸ்லாமிசத்தின் பயங்கரவாதக் கூட்டமான ஐஸில் என்னும் கொலைகாரக் கும்பல் மேன்மேலும் கொலைகளைப் பற்பல நாடுகளில் நடத்துவதோடு பாரிஸிலும் சமீபத்தில் ஒரு 150+ பேர்களைக் கொன்று யூரோப்பியருக்குப் பீதியைக் கொடுத்திருக்கிறது. உலகில் பீதியையும், படுகொலைகளையும், யுத்தத்தையும் பரப்புவதில் ஏகபோக அதிபத்தியம் தமக்கெ உண்டு என்று இறுமாந்து இருந்த யூரோப்பியரும், வெள்ளையரும், அமெரிக்கரும் இன்று தமக்கு ஈடான பயங்கரச் சம்பவங்களை நிகழ்த்த இன்னொரு கூட்டம் எழுந்திருப்பதைக் கண்டு சற்று அயர்ந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். இந்த நிகழ்வுகளின் கூட்டு விளைவுகளில் முக்கியமானது அமெரிக்கரிடையே எழுந்து உயரும் இஸ்லாமியருக்கெதிரான கடும் சினம். ஆனால் வழக்கம்போல அமெரிக்க நடுநிலைவாதிகளிடமிருந்து சில தகவல்கள் திடீரென்று கசிந்து அமெரிக்கர் நடுவே சிறிதாவது யோசிப்பது அவசியம் என்று கருதுவாருக்கு ஒரு தடுப்பூசியைப் போட முனைகின்றன. அப்படி ஒரு தடுப்பூசி இந்தத் தகவல். அமெரிக்காவின் புகழ் பெற்ற சுதந்திரப் பெண் சிலை அமெரிக்கர்களால் அமெரிக்காவின் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுவது. நலிந்தோருக்குப் புகலிடம் கொடுக்கும் நாடு என்பது அந்த இயல்பு என பெருவாரி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இது உண்மையா, பொய்யா என்று ஆராய்வது இங்கு நோக்கமல்ல. மாறாக இந்த நம்பிக்கைக்கு எதிரான செயல்களை மேற் சொன்ன அரசியலாளர்கள் முக்கிய அரசியல் நடவடிக்கையாக முன்வைத்து ஆரவார உரைகள் நிகழ்த்துகிறார்கள் என்பதை மட்டும் சுட்டுவோம். இந்த மோசடி நடத்தைக்கு ஒரு எதிர்ப்பாக ஸ்மித்சோனியன் பத்திரிகை ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. முஸ்லிம்களைப் பார்த்தாலே அச்சம் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்ப முனைந்து வெற்றியும் கண்டு வரும் ஐஸில் பயங்கரவாதத்துக்கு இரையாகாமல் இருக்கும்படி அமெரிக்கர்களைத் தூண்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கம். இது சுட்டுவது ஒரு வரலாற்று உண்மை, புதிர், அதே நேரம் அதிசயமும். அதுதான் என்ன?
[/stextbox]
[stextbox id=”info” caption=”அமெரிக்கா சுதந்திர தேவி சிலையின் வரலாறு”]
அமெரிக்க அரசியலும், பொருளாதாரமும், ஏன் பண்பாடுமே பெரும் செல்வந்தர்களின் சூதுகளில் சிக்கி அழிந்து வருகிற நிலை இன்று. அமெரிக்க ஏழை பாழைகளும், ஏன் மத்திய வர்க்கமுமே பற்பல விதங்களில் மூளை சலவை செய்யப்பட்டு இந்தச் செல்வந்தர்கள் மேன்மேலும் தம்மைச் சுரண்டிக் கொழுக்க வழி வகுக்கும் அரசியலுக்கே வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திரச் சிலைக்கு அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஏதும் நிதி உதவி அளித்தனரா என்று பார்த்தால் அவர்கள் ஒரு சல்லிக் காசு கொடுத்ததாகத் தகவல் இல்லை. பெரும்பங்கு ஃப்ரெஞ்சு மக்கள் கொடுத்த நிதி என்றும், மீதிப் பகுதி அமெரிக்கக் கருப்பர்களும், மிக நலிந்த நிலை வாழ்வைக் கொண்ட அமெரிக்க உழைக்கும் மக்களும், ஏராளமான அமெரிக்கக் குடியேறி மக்களுமே ஒரு டாலர் இரண்டு டாலர்கள் என்று நன்கொடை கொடுத்து இந்தச் சிலை உருவாகி, பீடமேற உதவி இருப்பதாக அடுத்த கட்டுரை தெரிவிக்கிறது. அன்றும் இன்றும் அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஒட்டுண்ணிகள் என்பது இந்தக் கட்டுரையில் தெளிவாகும்.[/stextbox]
[stextbox id=”info” caption=”அமெரிக்கா ராணுவத்தின் நிலை”]
எந்த நாடும் நெடுங்காலம் தன்னிலையை இழக்காமல் சுதந்திரமாகவும், உறுதியானதாகவும் இருக்கத் தேவையான பற்பல குணங்களில் முக்கியமான ஒன்று தொலைநோக்கு. பொருளாதாரம், தொழில் நுட்பம், அறிவியல் என்று வாழ்வாதாரத்துக்கு அவசியமான நடவடிக்கைகளில் மட்டுமல்ல, பண்பாடு, கலை, தத்துவம், வரலாற்றியல் போன்ற வேறு பல நுண் சிந்தனைத் துறைகளிலும் அந்நாட்டினர் தொலை நோக்குடன் செயல்படுவது அவசியம். இவை எல்லாமே பிழைத்திருக்க அவசியமான பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பை நாட்டுக்கு அளிக்கும் ராணுவம் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நிச்சயம் தேவையானது தொலை நோக்கு. இந்தத் தொலை நோக்கு எத்தனை தூரம் இந்திய ராணுவத்திடம் இருக்கிறது என்பது குறித்து நமக்கு அதிகம் தகவல் கிட்டுவதில்லை. ஒரு அரசு அமைப்பாக இருக்கும் இந்திய ராணுவம், அனேக இந்திய அரசு அமைப்புகள் போலவே தகவல் இல்லாப் புகை மூட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க அமைப்புகள் தொடர்ந்து பொதுமக்களிடம் தகவல் கொடுத்த வண்ணம் இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அமெரிக்க அரசு உலகின் ஆகப் பெரும் ரகசிய அமைப்புகள் நிறைந்த ஒரு அரசு என்றாலும், அப்படி ஒரு மறைப்பு இல்லாதது போலவும், தன் இயக்கம் மக்களுக்கு முழுதும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஆதரவோடு நடப்பதாகவும் ஒரு பொதுவெளிப் பிம்பத்தைப் பாடுபட்டுக் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க ஊடகங்களில் ஏராளமானவை இந்தப் பிம்பக் கட்டுமானத்துக்குத் துணை போகும் சாதனங்கள்.[/stextbox]
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
