மனிதக் குணம்

kasi

“அப்போது நேரம் மாலை அய்ந்து கூட இருக்காது, நன்றாக இருட்டி விட்டது, இரவு தங்கும் கேம்புக்கு இன்னும் நான்கு மணி நேரமாவது நடக்க வேண்டும். ஒற்றையடிப் பாதைதான், ஒரு பக்கம் பாதாளத்தில் நதியின் ஓசை இன்னோரு புறம் உச்சி தெரியாத சிகரம். சூரியன் மறைந்தவுடன் குளிர் துளைக்க ஆரம்பித்தது. நாங்கள் தான் குழுவிலேயே வயசானவர்கள், மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை, பின் தங்கி விட்டோம். பனி மூட்டம் ஒரு அடி கூட கண் தெரியவில்லை. “விசாலம், கையப் புடிச்சுக்க, சறுக்கி விழுந்தா நேரா கைலாசம்தான், ரெண்டு பேருமா போயிடலாம்னேன். நமசிவாய, நமசிவாயன்னு சொல்லிட்டே நடந்தோம்.”
‘அப்புறம் என்ன ஆச்சு “ சிதம்பரம் அய்யாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ஆவலாகக் கேட்டார் – தலையில் தொப்பி, கழுத்தில் காமரா என்று சுற்றுலாப் பயணியின் சகல சாமுத்திரிகா லட்சணங்களுடன். அந்த மிகப் பெரிய கூடத்தில் சோபாக்களிலும் நாற்காலிகளிலும் பெரியவர்கள், இளைஞர், சிறுவர்கள் என்று சுற்றிலுமாக அமர்ந்து சங்கீதக் கச்சேரி போல ஆர்வமாக அய்யா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சபையே கட்டுப் பட்டுக் கிடந்தது.
“அப்புறம் என்ன அப்படியே தட்டுத்தடுமாறி நள்ளிரவில் கேம்புக்குப் போய் சேர்ந்தோம், காலை சூரிய வெளிச்சத்துல பொன் மாதிரி ஜ்வலிச்ச கைலாச பர்வதத்த பார்த்தவுடனே பட்ட கஷ்டம் எல்லாம் அப்படியே மறந்து போயிடுச்சு.”
அந்த இரண்டு மணி நேரத்தில் நாங்கள் எல்லோரும் மானசரோவருக்கும், கைலாசத்துக்கும் சென்று வந்தோம். “நாமும் கைலாஷ் போய் வரலாமா” என்று என் மனைவி தீவிரமாகக் கேட்டாள்.
சிதம்பரம் பரம்பரையாக பெரிய குடும்பத்தச் சேர்ந்தவர்களுக்கு உள்ள கம்பீரமும் பணிவும் அளந்து கலந்த உருவம். சற்று குள்ளம், பருமன், ஆனால் கூர்மையான பார்வை. தூய வெள்ளை வேட்டியும், ஜிப்பா என்று சொல்ல முடியாத பூவேலை செய்த வெள்ளை சட்டை. அவருடைய குரல் மெலிதாக ஆனால் உறுதியாக, பல வருடத்து அனுபவம் பேசியது. கூடவே எப்போதும் மணி என்று ஒரு உதவியாளர்.
சிதம்பரம் அய்யாதான் அந்த அரண்மனையின் உரிமையாளர். ஆமாம், அதை ஹோட்டல் என்றோ, விடுதி அல்லது ரிஸார்ட் என்றோ சொல்லி கொச்சைப்படுத்த முடியாது. பெரிய கல்யாண மண்டபம் மாதிரி. அதில் தங்கி இருந்தவர்களும், சுற்றிப் பார்க்க வருபவர்களும், சாப்பிடுபவர்களும், எப்போதும் கல்யாணக் களைதான். தன்னுடைய பூர்வீக வீட்டை சுற்றுலா ஹெரிடேஜ் ஹோம் என்று ஆக்கி இருந்தார். காம்பவுண்டுக்குள் நுழையும் போதே அசந்து நிற்க வைக்கும் முகப்பு. பூவாக தண்ணீர் சிந்தும் ஃபௌண்டன், பெரிய அலங்கார மரங்கள், வாசல் வராந்தாவில் ஏறியவுடன் நீள பெஞ்சு – சுமார் இருபதடி இருக்கும், ஒரே மரப் பலகையில் செய்தது, பளபள என்று அமர அழைத்தது. பர்மா தேக்கு என்று அய்யா சொன்னார். வீட்டில் ஒவ்வொன்றும் அபூர்வமானதாக இருந்தது. அய்ந்து கட்டுகள், கல்யாணக் கூடம், நூறு அறைகள் என்று அவருடைய தாத்தா கட்டின வீட்டை பாழடைய விடாமல், சில அறைகளை சுற்றுலா வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்.
“இதெல்லாம் வருமானத்துக்காக செய்யல, தாத்தா, அப்பா சேர்த்து வெச்ச சொத்தே இன்னும் ஏழு தலமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். எப்பவும் பிஸினஸ்தான், ஒடி ஒடி சேர்த்தாங்க. இத்தன பெரிய அரண்மன மாதிரி வீட்ட அவங்க யாரும் அனுபவிக்கல. நாந்தான் ரிடயாரன பிறகு ஊருக்கு வந்து, இந்த வீட்டயும் பார்த்துக்கிட்டு,வரவங்களுக்கு நம்ம கலை பண்பாடு எல்லாம் விளக்கி பொழுத நல்ல படியா கழிச்சிட்டிருக்கேன்.”
உண்மைதான், தினமும் மாலையில் அந்தப் பெரிய கூடத்தில் தர்பார் நடந்தது. நிறைய பேர் வெளி நாட்டவர்களும் வந்து தங்கி இருந்தார்கள். தினமும் ஒரு விஷயம் எடுத்துக் கொண்டு அசத்தினார். நாங்கள் இருந்த முதல் நாள் கைலாச யாத்திரை, இரண்டாம் நாள் குடைவரைக் கோயில்கள், மறு நாள் மரபு ஒவியங்கள். ஒரு பெரிய நூலகம். அதிலிருந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்து படித்துக் காண்பிப்பார். எல்லாம் அருமையான புத்தகங்கள். இந்திய குகைக் கோயில்கள் (1880), லாங்கர்ஸ்ட் எழுதிய ஹம்பி ரூயின்ஸ் (1933), என்று ஆரம்பித்து சமிபத்தில் தொல்பொருள் துறை வெளியிட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் ஓவியங்கள் வரை சேர்த்திருந்தார்.
வெறும் புத்தக அறிவு மட்டும் அல்ல, எல்லா இடங்களுக்கும் தானே சென்று வந்த அனுபவங்களையும்,ஊர்,மனிதர்களைப் பற்றியும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கலைகள், உணவு என்று நிறைய ஆதார பூர்வமாகப் பேசினார். தஞ்சாவூர் பெரிய கோவிலின் கோபுரம் உள்புறம், நாயக்கர் காலத்து ஓவியங்களைச் சுரண்டி அவற்றுக்கு அடியில் சோழர் காலத்து ஓவியங்களை நாங்களும் கண்டு பிடித்தோம். எல்லோரா சிற்பங்களுக்கும் பல்லவர் சிற்பங்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டோம். காலை உணவின் போது சாம்பார் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் காலத்தில் உண்டாக்கப் பட்டதைத் தெரிந்து கொண்டோம். என்ன அதிசயாமான ஞாபக சக்தி, சாதுரியப் பேச்சு, அவரை மிகவும் மெச்சினேன்.
காலை உணவே ராஜ போஜனமாக இருந்தது. சர்க்கரைப் பொங்கல். வெண் பொங்கல், இட்லி, வடை,சாம்பார், பணியாரம்,ஊத்தப்பம்,பூரி கிழங்கு, கூடவே நான்கு விதமான வண்ணச் சட்டினிகள் – நாங்கள் எல்லோருமே சாப்பிட முடியாமல் திணறினோம். அய்யா கூட அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், ஆனால் எதுவும் சாப்பிடவில்லை. பிறகு மணி சொன்னார் “ அய்யா சாப்பாடே வேற. எல்லாம் பிடிக்கும் ,பார்த்தே என்ன குறைன்னு சொல்லுவாரு. ஆனா தினமும் காலையில பழம், மதியம் மூன்று கவளம் சோறு, இரவு பால் பழம் இவ்வளவுதான்.”
“ஆச்சரியம்தான், இவ்வளவு ரசிகராக இருக்கறவருக்கு சாப்பாட்டுல பிரியம் இல்லயா ?” என்றேன்.
“எல்லாம் நிறைய இருந்தது.” மணி ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, “அவரையே கேளுங்க, காசியில என்ன ஆச்சுன்னுட்டு, இஷ்டம் இருந்தா எப்பவாவது அதப் பத்தி பேசுவாரு”
என் மனைவிக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அவள் வற்புறுத்த, மாலை நாங்கள் அவரைத் தனியே பார்த்தோம்.
அவள்தான் ஆரம்பித்தாள். “ காசி போய் வந்திங்களாமே, அங்க ஏதோ அனுபவம்னு கேள்விப்பட்டோம்”
“யாரு இந்த மணிப்பயல் வேலையா ? நான் ஒண்ணும் சொல்றத்துக்கில்ல”
“இல்ல, நாங்க எல்லாம் நாக்க கட்டுப் படுத்த முடியாம மூணு வேள இல்ல, நாலு வேள வயிறு முட்ட சாப்பிடறோம். அதெப்படி உங்களால தினமும் இத்தன வகை இருந்தாலும்கூட சாப்பிடாம இருக்க முடியுது ?”
ஒரு கணம் எங்களை உற்றுப் பார்த்தார்.
“அது ஒரு பெரிய கதை,” தோட்டத்துக்கு நடக்க ஆரம்பித்தார். நாங்களும் பின் தொடர்ந்தோம். பெரிய செண்பக மரத்தடியில் இருந்த கல் பெஞ்சுகளில் அமர்ந்தோம். அபூர்வமான மணம் அவருடைய பழைய நினைவுகளைக் கிளறி இருக்க வேண்டும்.
“ஹனுமான் கட்டத்துல நம்ம சத்திரம் இருக்கு. நம்ம ஊருலேர்ந்து போகிறவங்க தினமும் வடை பாயசத்தோட ஒரு வேளைக்கு ஆயிரம் பேராவது சாப்பிடுவாங்க. அதே மாதிரி ராமேசுவரத்துல வட நாட்டுலேர்ந்து எத்தன ஆயிரம் வருவாங்க்க, அவங்களுக்கெல்லாம் சுடச்சுட ரொட்டி தால் சப்ஜின்னு நாள் முழுக்க.”
“அட, ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கா ? என்னதான் இருந்தாலும் செய்ய மனசு வரணுமே, அது சரி அதுக்கும் நீங்க வெறும் பழம் சாப்பிடறத்துக்கும் என்ன சம்மந்தம் ?”
“ அது ஒரு பெரிய கதை, உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லையே” இருந்தாலும், மறுபடியும் கேட்டால் சொல்லுவார் போல இருந்தது.
“வழக்கமாக எல்லோரும் காசியில் ஏதாவது ஒரு காய், பழத்தை விட்டு விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதுவும் கூட பலர் சாமர்த்தியமாக பாகற்காய் மாதிரி பிடிக்காத காய் சாப்பிடுவதை விட்டு விடுவார்கள். நீங்கள் சாப்பாட்டையே விட்ட மாதிரி இருக்கிறதே ?”
அய்யா மேலே மரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். மெல்ல அவரே ஆரம்பித்தார்.
“அப்ப சின்ன வயசு, அப்பா போய் ஒரு வருஷம், திதி காசில செய்யலாம்னு ஒரு ஆசை. அப்பதான் நான் முத முதலா காசிக்குப் போறேன். அப்பப்பா என்ன மாதிரி ஊர் அது- ஊர் முழுக்க கோயில்தான். எங்க பார்த்தாலும் சிவ லிங்கம். விசுவ நாதருக்கு என் கையால அபிஷேகம், விசாலட்சி கோயில் நம்ம ஊர் மாதிரி கோபுரம், தங்க அன்ன பூரணி, எத்தனை படித் துறை, அலுக்காம சலிக்காம நாள் முழுக்க ஓடற கங்கைய பார்க்கலாம், சாயங்காலம் ஆரத்தி, பூவும் அகல் விளக்குகளும் தேவ லோகம் மாதிரி. எத்தனை மாதிரி ஜனங்கள், எத்தன கடைகள், வண்ண வண்ண பட்டுப் புடவை, பித்தளை செம்புப் பாத்திரம், விக்கிரகங்கள், பூஜைப் பொருட்கள், ஸ்வீட் கடை – அப்படியே மண் சட்டில பால் ஏடா எடுத்துக் கொடுப்பான், காலையில் பூரி, ஆலு, கச்சோரி, அகலமான வாணலியியில ஜிலேபி சுற்றுவான், பாளம் பாளமாக உடைத்து தயிரில் லஸ்ஸி, கடைசியாக பான். ஒரு கடை முழுக்க ஊறுகாய். நம்ம ஊர்ல எலுமிச்சம் பழம் ,மாங்காய்னு ஊறுகாய் பார்த்திருக்கிறோம். இந்த கடையில எல்லா காயிலயும் ஊறுகாய் போட்டிருக்கிறான். வெண்டைக்காய்,காலிஃளவர், காரட், சிவப்பாக பெரிய மிளகாய் என்று நவராத்ரி கொலு மாதிரி அடுக்கி வைத்திருக்கிறான்.
அன்று தான் திதி. விசாலம் காபி கூட இல்லைன்னுட்டா. எனக்கோ பூரியும் கச்சோரியும் ஜிலேபியும் வேணும் போல இருந்த்து. கங்கையில குளிச்சு ஒரு படகுல புரோகிதர் கூட வர கிளம்பினோம். அங்க அஞ்சு படித்துறையில குளிச்சு போய் பிண்டம் போடணும்னாங்க. படகுலயே ஒருவர் சோறு செஞ்சார். அந்த வாசனை வேற பசியைக் கிளப்பி விட்டது. மணி கர்ணிகை கட்டம்னு ஞாபகம். எனக்கு பசி மீறிப் போச்சு. அவர் வெள்ளை வெளேர்னு சோற்று உருண்டை எடுத்துக் கொடுக்கறாரு. நாங்க படியில உட்கார்ந்திருக்கிறோம். அங்கதான் ஊர் முழுக்க சாமியார்கள் உண்டே, அந்த மாதிரி ஒருத்தர் கங்கையை பார்த்து உட்கார்ந்திருந்தார். அப்படியே என்னப் பார்த்து திடீர்னு இடி மாதிரி சிரிக்கறாரு. எனக்கு கோவம் வந்திடுச்சு. என்னதான் நெனச்சுட்டிருக்காரு , நாங்க தமிழ் நாட்டுலேர்ந்து இவ்வளவு தூரம் வந்து ஈரத்தோட உட்கார்ந்துகிட்டு பய பக்தியோட கங்கைக் கரையில திதி கொடுத்திட்டிருக்கோம், இந்த அழுக்கு சாமியார் என்னப் பார்த்து சிரிக்கறாரு. “ அப்பா, மிளகாய் ஊறுகா கூட நல்லா இருக்கும், சாப்பிட்டுப் பாரு” அப்படின்னுட்டு மறுபடி விழுந்து விழுந்து சிரிக்கறாரு. அவரு பேசினது தமிழ் இல்ல, இருந்தா கூட வார்த்தைக்கு வார்த்தை புரியுது. என் முகம் பேயடிச்சது மாதிரி ஆயிருச்சு. எனக்கு அந்தச் சோற்றுல கட்டித் தயிர் கலந்து கடையில பார்த்த மாங்கா ஊறுகாயுடன் சாப்பிடணும்னு புத்தி ஒரு கணம் போயிருந்தது. நான் மனசுல நினைத்துக் கொண்டிருந்தது அவருக்கு எப்படி தெரிந்தது. நான் எழுந்தேன், விசாலம் என்னமோ ஏதோன்னு பயந்துட்டா. நேரே போய் அவர் காலில் விழுந்தேன் “ சாமி, தப்பு செஞ்சுட்டேன், மன்னிச்சுடுங்க “ கதறினேன். விசாலத்துக்கு ஒன்ணும் புரியல. அவர் சொல்றாரு “ நான் யாருப்பா மன்னிக்கறத்துக்கு “ – ரெண்டு கையையும் மேலே விரிச்சாரு “அவன் கிட்ட கேளு, உங்க அப்பா கிட்ட கேளு “ எனக்கு என்ன செய்யறதுன்னே புரியல “ சாமி, எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்களேன், தாங்க முடியல” அப்படின்னேன். அவரு சொன்னாரு “ தினம் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடு, நீ சாப்பிடாத, அதுதான் உனக்கு விதிச்சிருக்கு “ அப்படின்னாரு. அன்னிக்கு விட்டது தான்.”
அய்யா எங்கோ மேலே பார்த்துக் கொண்டிருந்தார்- கண்களில் நீர் – மனசு கங்கைக் கரைக்கு மறுபடியும் போயிருக்க வேண்டும். மறுபடியும் எதுவும் பேசுவார் என்று தோன்றவில்லை. என் மனைவி இரவு வெகு நேரம் வரை திரும்பத்திரும்ப எவ்வளவு பெரிய மனிதர், இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு என்னவோ இவ்வளவு பெரிய ரசிகர், நல்ல சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லயே என்றுதான் தோன்றியது.
மறு நாள் காலை கிளம்புவதாகத் திட்டம். லஞ்சுக்கு மதியம் நேரம் ஆகி விடும் என்று வயிறு முட்டத் தின்று விட்டு, சற்றே குற்ற உணர்வுடன் அய்யாவை பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என்று தேடினோம். மூன்றாம் கட்டில்தான் அவர் வசிக்கும் இடம் என்று மணி சொல்லி இருந்தார். நேராக பின் பக்கம் சென்றோம். எளிமையான இரண்டு அறைகள் மட்டும் உபயோகத்தில் இருந்தன. ஒரு அறைக் கதவு திறந்திருந்தது. “அய்யா” என்ற குரலுக்கு பதில் இல்லை. தயங்கி உள்ளே நுழைந்தோம். ஒரு சாதாரண மரக் கட்டில், ஒரு பிரம்பு நாற்காலி, அருகே ஒரு சிறிய மேசையில் புத்தகங்கள், ஒரு டேபிள் ஃபான் சுற்றிக் கொண்டிருக்க, ஒரு சாய்வு நாற்காலியில் புத்தகத்துடன், மெல்லிய குறட்டை ஒலி, அய்யா உறக்கத்தில் இருந்தார். அவரை எழுப்ப மனமில்லை. முன்னே சென்ற என் மனைவி திடீரென “அடப் பாவி” என்று கையைக் காண்பித்து, முகத்தை சுழித்துத் திரும்பினாள். “எல்லாமே பொய்”. அப்போதுதான் கவனித்தேன் அவருக்கு முன்பாக மேசையில் ஒரு தட்டு , பக்கத்தில் ஒரு காலி தம்ளர், தட்டில் நான்கு விதமான சட்டினிகளும் மீதமாகி இருந்தன. எனக்கு அப்படித் தோன்றவில்லை. சட்டென்று மனது நிறைவானது. கை கூப்பி வணங்கி “ அய்யா ,வருகிறோம்” என்று மெல்லச் சொல்லித் திரும்பினேன். அய்யா குழந்தை மாதிரி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

5 Replies to “மனிதக் குணம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.