குளக்கரை


[stextbox id=”info” caption=”அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ இருண்ட பிரதேசங்கள்”]

Alabama_State_Capitol_Montgomery

இந்தியாவில் எவாஞ்சலியக் கிருஸ்தவத்தைப் பரப்பி, இந்து சமுதாயம் என்று ஒன்று இல்லாமல் ஆக்க அமெரிக்க எவாஞ்சலியம் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட தன்னார்வக் குழுக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது செய்திகளில் சமீபத்தில் வெளி வந்தது. இந்தத் தன்னார்வக் குழுக்களில் பெரும்பான்மை என்ன மதம் சார்ந்தவை என்பதை அந்தச் செய்திகள் சொல்லவில்லை, ஆனால் நாம் எளிதே ஊகிக்கலாம்தானே? நிதி எங்கிருந்து கொட்டுகிறதோ அந்த எஜமானர்களின் விருப்பப்படிதான் தன்னார்வக் குழுக்கள் இயங்கப் போகின்றன. பெருவாரியான இந்த வகைக் குழுக்களின் அடிப்படை செயல்திட்டமே இந்தியாவை எப்படி உடைப்பது, எப்படி மறுபடி காலனியத்திற்கு அடிமையாக இந்த நாட்டை ஆக்குவது, இந்துக்களை எப்படி மறுபடி அடிமை மக்களாக ஆக்குவது என்பனதான். அல்லது அவை இந்தக் குழுக்களில் கணிசமானவற்றின் ஆதார நோக்கம்.
சரி இப்படி ஒரு அழிப்பு நோக்குடன் செயல்படும் ஒரு மத இயக்கத்தை உலகெங்கும் பரப்ப ஏராளமாக நிதி அளிக்கின்ற அமெரிக்க மக்கள் என்ன அப்படி ஒரு அசாதாரணமான ‘கருணை’ பொங்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள், அப்படித்தான் அமெரிக்கா என்ன ஜனநாயக நாடு என்று பார்க்கத் துவங்கினால், குளவிக் கூட்டில் கை வைத்தது போல் ஆகி விடுகிறது நம் நிலைமை. அமெரிக்க செய்தித்தாள்களையோ, ஊடகங்களையோ அணுகாமல் இருக்கும் வரை நமக்குக் கொஞ்சம் புத்தி ஸ்வாதீனம் எஞ்சி இருக்கும் என்று கருத வேண்டி வருகிறது. அத்தனை பொய்கள், மாய்மாலங்கள். அதுவும் தொலைக் காட்சி ஊடகங்கள் என்று எடுத்தால் தமிழில் இருக்கும் கேபிள் நிறுவனங்கள் கூட அமெரிக்க செய்தி அமைப்புகளிடம் பிச்சை வாங்க வேண்டி இருக்கும்.
இத்தனைக்கும் நம் தொலைக்காட்சி அமைப்புகள் துணிந்து எந்தப் பொய்யையும் சொல்லக் கூடியன என்று நமக்கு ஒரு யோசனை இருக்கிறது இல்லையா? ஆனாலும் அன்றாட போதை பழகி விட்டது, அது இல்லாமல் நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. காச நோய் அரித்த நுரையீரலோடு கூட, சிகரெட்/ பீடியைப் பற்ற வைக்கும் நோயாளி போல, நிறுவனங்கள்/ அமைப்புகள் மீது முழு அவநம்பிக்கை பீடித்த பின்னும், நாம் தொலைக்காட்சி செய்திகளை, சிந்தனை மேடைகளை, பட்டி மன்றங்களைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்க ஓடி வருகிறோமில்லையா? அப்படிப்பட்ட இந்திய/ தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட அமெரிக்க செய்தி நிறுவனங்களின் பெரும்பொய்கள் முன் ஸ்தம்பித்துத்தான் நிற்க வேண்டும்.

இதை யோசித்த ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நாயகர், இவர் ஒரு அரசியல் கிண்டல் பேர்வழி, தன் ‘நிருபர்’ ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்திய செய்தி/ காட்சி ஊடகங்களை ஒரு சாம்பிள் பார்க்கச் சொல்லி அதைத் தொகுத்து ஒரு காட்சியில் வெளியிட்டார்.  அந்த அமெரிக்க ‘நிருபர்’ அமெரிக்க ஊடகங்களின் போலித்தனத்தையும் சொல் ஈட்டியால் குத்துகிறார், இந்திய நிறுவனங்களையும் காலை வாருகிறார். அந்த விடியோ இங்கே கிட்டும்.

ஆனாலும் அன்றாடம் இவற்றின் பொய்கள் எப்படியோ அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் இங்கு ஏதோ ஒரு மூலையிலாவது மாற்றுப் பத்திரிகைகள், ஊடகங்கள் இயங்குகின்றன. அவை மலையைக் கெல்லி மலையளவு பொய்களின் அடியே இருக்கும் சிறு எலியளவு உண்மையைக் கொண்டு வந்து விடுகின்றன. இவற்றில் சில தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுபவை என்பதையும் கவனிக்கலாம்.

இந்தப் பொய்களின் புகை மூட்டத்தை, எளிதில் அழிக்க முடியாத போலித்தனத்தை இந்தியர் மீது திணிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு உதவும் இந்தியத் தன்னார்வக் குழுக்கள் என்ன ஒரு பயங்கரத்தை இந்தியாவில் விதைக்க முற்படுகிறார்கள் என்பது கீழே கொடுக்கப்படும் செய்தியைப் படித்தால் உடனே புரியலாம்.

அலபாமா மாநிலத்தில் அடையாள அட்டை இருந்தால்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று சட்டத்தை மாநில சட்டசபையில் கொணர்ந்திருப்பது அமெரிக்கக் குடியரசுக் கட்சி. இந்தக் கட்சி வெள்ளை இனவெறியர்களில் பெரும்பான்மையினர் சேர்ந்திருக்கிற கட்சி என்பது நமக்கு இத்தனை நேரம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்னொரு கட்சியான ஜனநாயகக் கட்சி இனவெறியர் இல்லாத கட்சி என்று மட்டும் நாம் தப்புக் கணக்குப் போட்டு விடக் கூடாது. ஆனால் பெரும்பான்மை இனவெறியர் உறுப்பினராக அல்லது ஆதரவாளராகச் சேர்ந்து இருப்பது, அல்லது வாக்களிப்பது குடியரசுக் கட்சியாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம்.

அதிபர் தேர்தல் வேட்பாளர்களிலேயே குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானவர் வெள்ளை ஆதிக்கமே முக்கியம் என்று பலவிதமாக, பூடகமாகவும், சங்கேதச் சொற்கள் மூலமும் சொல்லித் திரிவதாக அமெரிக்க ஊடகங்களே தினம் விமர்சிக்கின்றன.
இப்படி விமர்சிப்பதால் அமெரிக்கா ஜனநாயக நாடாகி விடுமா என்று கேட்க வேண்டாம். ஆகாது. நடைமுறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பது இந்த அலபாமா சம்பவத்தில் புரியும்.
அலபாமாவில் கணிசமான எண்ணிக்கையில் கருப்பின மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனேகமாக எவரும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது குடியரசுக் கட்சிக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கு என்னவெல்லாம் தடைகள் எழுப்ப முடியுமோ அதையெல்லாம் எழுப்பி கருப்பின மக்களின் வாக்குரிமைக்கும், அவர்களின் தேர்வுக்கும் பலனில்லாமல் செய்வது என்பது குடியரசுக் கட்சியின் பல முயற்சிகளில் ஒன்று.
அதன் ஒரு விளைவுதான் அடையாள அட்டைக்கான சட்டம். இது என்ன பிரச்சினை, கருப்பின மக்களும் அடையாள அட்டையைப் பெறலாமே என்றால், அமெரிக்காவில் அடையாள அட்டையைப் பெறுவது எத்தனை கடினம் என்பது அங்கு வாழ்ந்தால் தெரியும்.
ஒப்பீட்டில் இந்தியாவில் ஆதார் அட்டைக்குப் போய் அரசு அலுவலகங்களில் நின்று கால் தேய்ந்தவர்களுக்கு மட்டுமே  அரசு அலுவலகங்கள் உடனுக்குடன் வேலை செய்யாமல் இருந்தால் என்ன துன்பங்கள் சாதாரணக் குடிமக்களுக்கு நேரும் என்பது தெரிந்திருக்கும். அது கருப்பின மக்களுக்கு அமெரிக்காவில் ஏற்படும் துன்பத்தை ஒத்தது அல்லது அதை விடக் கூடுதலானது.
பெருவாரி அமெரிக்கர்களுக்குப் பாஸ்போர்ட் இருப்பதில்லை. அவர்கள் உள்நாட்டில் எதற்கும் பயன்படுத்தும் அடையாள அட்டையாக கார் ஓட்டக் கிடைக்கும் உரிம அட்டையைத்தான் வைத்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் (உரிமம்) மாநில அரசுடைய ஒரு அலுவலகத்தில் மட்டுமே கிட்டும். தரகர்கள் மூலம் இந்தியர் வாங்குவது போல இதை வாங்க முடியாது. பெரு நகரங்களில் வாழும் கருப்பின மக்களில் நிறைய பேருக்கு கார்கள் இல்லை என்பதால் அவர்களிடம் இந்த காரோட்டும் உரிம அட்டை இருக்காது, அல்லது அவற்றை அவர்கள் புதுப்பிக்கத் தவறிக் கொண்டிருப்பார்கள். ஏற்கனவே இது ஒரு தடை, ஒரு பிரச்சினை அவர்களுக்கு. இது போதாது என்பது போல, இந்த உரிமம் வழங்கும் அலுவலகங்களில் கணிசமானவற்றை அலபாமா மாநில அரசு சமீபத்தில் மூட உத்தேசித்துள்ளது. அது தன் வரவு செலவு பட்ஜெட்டில் துண்டு விழுவதைச் சமாளிக்க அரசுச் செலவைக் குறைக்கிறதாம், அதனால் இந்த அலுவலகங்களை மூடப் போகிறதாம்.
சரி அதனாலென்ன? பாழ்கிணற்றில் அந்தரத்தில் செடியின் வேரைப் பிடித்துத் தொங்குகிறவனைக் குளவி சுற்றி வருவதைப் போன்றது இது.

இப்படி மூடப் போகிற அலுவலகங்களில் பெருவாரி அலுவலகங்கள் கருப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற மாவட்டங்களில்தான். அதாவது கருப்பின மக்களுக்கு அடையாள அட்டைகள் எத்தனை துன்பப்பட்ட பின் கிடைக்கும்படிச் செய்யலாம் என்று யோசித்துச் செய்த மாதிரி தெரிகிறது.

இப்படித் தடைகள் இருந்தால், ஏற்கனவே வாக்களிப்பதில் அத்தனை சுரத்து இல்லாமல் இயங்கும் கருப்பின மக்கள் வாக்களிக்க வரவே மாட்டார்கள் என்பது குடியரசு கட்சி பெரும்பான்மையினராக ஆளும் இந்த மாநிலத்து அரசின் கணக்கு. அமெரிக்காவில் தேர்தல் அன்று நிறுவனங்களை மூடுவதில்லை. பொது விடுமுறை கொடுப்பதில்லை. ஜனநாயகத்தில் அத்தனை ஈடுபாடு இந்த அமெரிக்க அரசுக்கும், கட்சிகளுக்கும். அதைப் பயன்படுத்திக் கருப்பினத்து மக்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்த எத்தனை தடை எழுப்பலாம் என்று யோசிக்கும் இதுதான் இன்று அமெரிக்க மைய அரசிலும் பெரும்பான்மைக் கட்சி. இந்த அரசுதான் இந்தியாவுக்கு எப்படி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பன்னாட்டு அரங்குகளில் அறம் போதிக்க முயல்கிறது. (ஒரு கொசுறு: அலபாமா  மாநிலத்தில் மட்டும் இப்படி வாக்குரிமையைப் பயன்படுத்தத் தடை கொணரப்படவில்லை. குடியரசுக் கட்சி ஆளும் பல மாநிலங்களில் இப்படித் தடைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.)

காஷ்மீரைப் பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துக் கொடு, வங்கதேச குடியேறிகளுக்குச் சம உரிமை கொடு, நாகாலாந்துக்கு சுய நிர்ணய உரிமை கொடுத்து அதையும் விட்டு விடு, பஞ்சாபையும் விட்டு விடு, தமிழ் நாட்டை திராவிடர்களுக்குக் கொடுத்து விடு, இப்படி நமக்கு உபதேசம். இந்த உபதேசத்தை நமக்குத் தினம் செய்பவர்கள் அமெரிக்கர் கூட இல்லை, அவர்களுடைய கொடைக் குடை நிழலில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் வாழும் அற்புத ஜீவிகளான இந்திய அறிவு ஜீவிகள்- இந்நேரம் சொல்லாமலே தெரிந்திருக்கும் இவர்கள் எல்லாம் மார்க்ஸ் ஜபம் செய்யும் புனிதர்கள் என்று.

செமிதிய மதங்களுக்கு அப்படி ஒரு தீர்க்கமான நோக்கம் உண்டு. சுய நிர்ணயம் என்ற மந்திர உச்சாடனத்தை வைத்து, உலகில் உள்ள எல்லா நாடுகளையும் குறுங்குழு தேசியத்தில் சிக்கிய மக்களாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு எல்லா மக்களையும் அகதிகளாகவும், அபலைகளாகவும் ஆக்கி விட்டால், பின் எஞ்சுவது என்னவாக இருக்கும்.
அட ஆமாம்! ஒன்று அரபு ஏகாதிபத்தியம் அல்லது வெள்ளை ஏகாதிபத்தியம் என்பது செமிதியர்களின் கணக்கு. அதைத்தான் இந்திய மார்க்சியர்களும், இதர பஜனை கோஷ்டிகளும் முனைந்து இந்தியர்கள் மீது/இந்துக்கள் மீது சுமத்தப் பெரும்பாடு படுகிறார்கள். ஆனால் பாருங்கள், அரபு ஏகாதிபத்தியம் மைய நாடுகளிலேயே சிதறு தேங்காயாகிக் கொண்டிருக்கிறது. வெள்ளை ஏகாதிபத்தியம்? அதுதான் அலபாமா விஷயத்திலேயே காரீயமாகப் பல்லை இளிக்கிறதே. கடந்த சில வருடங்களில் 50 இல் 24 மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் அந்தந்த மாநிலங்களில் பல குழுக்கள் அமெரிக்காவிலிருந்து தங்கள் மாநிலம் பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று கையெழுத்து இட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம். டெக்ஸாஸ் மாநிலம் அமெரிக்காவிலிருந்து பிரியவேண்டும் என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது. புடின் கூட டெக்ஸாஸ் மக்களுக்குச் சமீபத்தில் இப்படிப் பிரியும் முயற்சிக்குத் தன் ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகச் செய்தி வந்தது. எரிகிற கொள்ளியில் பெட்ரோலை வார்ப்பது புடினிய சகோதரத்துவம்.

உளுத்து உதிரத் தொடங்கி இருக்கிற இந்த ஏகாதிபத்திய அரசின், இந்த இனவெறி நிரம்பிய மக்களின் நிதி உதவியைப் பெற்றுத்தான் இந்தியாவின் தன்னார்வக் குழுக்கள் இந்தியாவில் இனவெறி அதிகம், இந்துக்கள் ஃபாசிஸ்டுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு ஜால்ரா போட எத்தனை இந்திய முற்போக்குகள் உடனே ஓடோடி வருகின்றனர். அடடா என்ன ஒரு எஜமான விசுவாசம் நம் முற்போக்குகளுக்கு. வெள்ளையர் நம் நாட்டை விட்டுப் போனதில் மிகத் துக்கம் கொண்ட திராவிடியக் கொழுந்துகளுக்குச் சற்றும் சளைக்கவில்லை இன்றைய முற்போக்குகள்.

http://www.slate.com/blogs/the_slatest/2015/10/01/alabama_closes_dmvs_in_majority_of_black_belt_counties_passed_voter_id_law.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சூஸான்னா இதைப் படித்தால் என்ன சொல்வார்? “]

Migrants_refugees_Berline_Immigrants_Aliens

டெய்லி மெயில் ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை. அனேகமாக வலதுசாரியாகத்தான் இருக்கும். இது ரூபர்ட் மர்டாக்கின் பத்திரிகையாக இருந்தால் நிச்சயம இதன் செய்திகளில் எங்காவது இனவெறியும் யூரோப்பிய மைய அகம்பாவமும் வெளிப்படாமல் இராது. அதற்கேற்றாற்போல இந்தச் செய்தியும் கடந்த சில மாதங்களாக விளக்கை நோக்கி வரும் கார்கால ஈசல் போல, விட்டில் போல யூரோப்பில் வந்து அம்மும் மேற்காசிய நாட்டு அகதிகளைப் பற்றியது.
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் என்று யூரோப்பும், அமெரிக்காவும் பெரும் களேபரத்தில் மூழ்கி இருக்கிற மேற்காசிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று ஒரு சாக்கைச் சொல்லி, அங்கு படையெடுத்துப் போய்ப் பல நாடுகளை உடைத்து, பெரும் திரளான மக்களை அகதிகளாக்கி, ஏராளமான உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் விளைத்து இருப்பதை நாம் அறிவோம். அதை டெய்லி மெயில் அறியுமா என்றால், அறிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாத யூரோப்பிய சாமர்த்தியம் அதற்கு உண்டு.

இந்த டெய்லி மெயிலில் செய்தி வந்தால் நாம் அதைக் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்ப்பது நல்லது. ஆனால் இந்தச் செய்தியை ஜெர்மன் பத்திரிகையான டெர் ஷ்பீகலும் கிட்டத்தட்ட அதேபோலப் பிரசுரித்திருக்கிறதாகத் தெரிகிறதால் இதை இப்போதைக்கு ஏற்கலாம். இதன் சாரம்- ஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லையாம். பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும்.
இந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான்னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது. அவருக்கு உண்மை விளம்பி என்று வேறு மேற்கில் பட்டமெல்லாம் கொடுக்கிறார்கள். ஒரே பாராட்டு, இந்தியாவின் முகமூடியைக் கிழிக்கிறார் என்று.
இப்படியாகப்பட்ட டெய்லி மெயிலின் இந்தச் செய்தியைப் பார்ப்போம். ஏன் பாகிஸ்தானில் அபார வளர்ச்சி, பிரமாதமான பொருளாதார வளமெல்லாம் இருக்கையில் இப்படிப் பாகிஸ்தானியர் உயிரைப் பணயம் வைத்து ஜெர்மனிக்குக் கடத்தல் தோணியில் எல்லாம் போகிறார்கள் என்று பார்த்தால், கராச்சியில் குற்றக் கும்பல்கள் ஊரை நாசம் செய்கின்றன, அங்கு வாழ்வதை விட நரகத்தில் வாழலாம் என்கிறார்கள் இந்த ‘அகதிகள்’.  கராச்சியில் குற்றக் கும்பல்கள் என்றால், வேறு யார், பம்பாய் புகழ் தாவுத் இப்ராஹிம் கூட்டம்தான் அங்கும். ஆனால் ஜெர்மனியில் வந்திருப்பவர்களில் நிறைய பேர் லாஹூர் வாசிகள் வேறு. லாஹூர்க்காரர்களுக்கு என்ன ஐயா சாக்கு என்றால், வேலை போய் விட்டதாம், பிழைக்க முடியவில்லையாம்.

மேலும் தகவலைப் பார்த்தால், இவர்கள் ‘அகதி’களே இல்லை, வசதியான குடும்பங்களில் இருந்து வரும் நன்கு படித்த மனிதர்கள். ஆனால் பாகிஸ்தானில் வாழ என்ன வழி இருக்கிறது? மிஞ்சிப் போனால் ராணுவத்தில் சேரலாம்,இல்லை பயங்கர வாதக் கும்பல்களில் ஆயுதம் ஏந்திக் காஷ்மீரில் வந்து குண்டு வைத்து விட்டுச் சாகலாம், இல்லை போதை மருந்து கடத்தலில் இறங்கலாம். மற்ற தொழில்கள் எல்லாம் பஞ்சாபிகளுக்குத்தான் கிட்டும் என்று ஊகம் செய்தால் அது தவறாக இராது. இல்லை என்றால் நம் முற்போக்கு மாநிலங்களில் இருந்து மேற்காசியாவுக்குப் போகிறார்களே படை படையாக, அவர்களைப் போல மேற்காசியாவின் கந்தக பூமிக்கு வேலை தேடிப் போய்த் திண்டாடலாம். அங்கும் இந்தியர்களுக்கு இருக்கும் மரியாதை பாகிஸ்தானியருக்கும் வங்காள தேசத்தினருக்கும் இல்லை என்று அங்கு இருந்து பழகிய நண்பர்கள் சொல்கிறார்கள். அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும். நாம் நினைப்பதாக இராது.

சூஸான்னாவுக்கு இந்த சூட்சுமமெல்லாம் தெரியும். அவர் ஒரு உண்மை விளம்பிக் கட்டுரை எழுதி இருக்கிறாரா என்று தேட வேண்டும்.
இவர்களை ஜெர்மனி உள்ளே விடுமா என்றால் விடாது. இவர்கள் போர்க்கால, போர்க்கள அகதிகள் இல்லை. பொருளாதார அகதிகள் என்று முத்திரையிட்டு, தற்காலிகமாகத் தங்க இடம் கொடுத்து விட்டு, சில மாதங்களில் ஆவணங்களைத் தயாரித்து இவர்களின் முந்தைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடும் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பாகிஸ்தானியர் சொல்கிறார்,
“My children deserve a better life than in Pakistan,” says Atif. “They will grow up happy in Germany.”
இதுதான் எப்படி சாத்தியம்? இவரோ, இவர் குடும்பத்தினரோ ஜெர்மன் மக்களின் பண்பாட்டையோ, கிருஸ்தவத்தையோ, ஜனநாயகத்தையோ நேசிப்பதில்லை. எத்தனை காலம் ஜெர்மனியில் இருந்தாலும் இஸ்லாம்தான் சிறந்தது ஷரியாதான் சிறந்தது என்று அதே கீறல் விழுந்த பிளேட்டைத்தான் ஓட்டுவார்கள். அப்படி அவைதான் சிறந்தது என்றால் அதற்கு ஏன் ஜெர்மனிக்கு வர வேண்டும். பாகிஸ்தானில் இரண்டும் இருக்கின்றனவே, அங்கேயே இருந்தால் சூஸான்னாவுக்காவது மகிழ்ச்சியாக இருக்குமே என்று இவர் போன்றவர்கள் யோசிப்பதே இல்லை.

ஜெர்மனியருக்குப் புரிகிறதோ இல்லையோ, நமக்கு என்னவோ இவர்கள் யோசனை புரிகிறது. இந்தியரும் பாகிஸ்தானியர் போலத்தானே யோசிப்பார்கள் என்பதாலா என்று கேட்காதீர்கள். கூட வாழ்ந்த பழக்கத்தில் புரிகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

தமக்கு இரண்டு கண்ணும் போனாலும், மற்றவருக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கும் அற்புத சிந்தனையாளர்கள் இந்த பாகிஸ்தானிய பொருளாதார அகதிகள். வேறெப்படி இவர்களை நாம் புரிந்து கொள்வது? என்னய்யா இப்படி, நொந்து போய்த் திண்டாடுகிற அகதிகளை இப்படி எல்லாமா சீண்டுவது என்று கேட்டீர்களானால், அப்படி நொந்து போய் அகதிகளாகிற ஆஃப்ரிக்கரை, சிரியரை, ஈராக்கியரை நான் ஏதும் சொன்னேனா என்று சோதியுங்கள். அவர்கள் உண்மையிலேயே பரிதாபமான மனிதர்கள், அவர்களை ஏன் சீண்ட வேண்டும். இந்திய முற்போக்குகளும், மார்க்சிய லெனினிய மேதாவிகளும் நாட்டைப் பிடிப்பதில் வெற்றி பெற்றால் இந்தியா சிதறுண்டு இந்துக்கள் இப்படித்தானே அகதிகளாக எந்த நாடு தம்மை உள்ளே விடும் என்று அலைவார்கள், அதை நான் இப்போதே யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உண்மையான அகதிகளைச் சீண்டுவது பயங்கரக் கர்ம் பலனைக் கொண்டு வரும் என்ற பயமாவது இருக்க வேண்டும் இல்லையா?

http://www.dailymail.co.uk/news/article-3249667/Germany-state-SIEGE-Merkel-cheered-opened-floodgates-migrants-gangs-men-roaming-streets-young-German-women-told-cover-mood-s-changing.htmlDescription
[/stextbox]


[stextbox id=”info” caption=”பயமா நம்மைப் பிணித்து வைக்கிறது? “]

Nothing to Lose but Our Fear_Fiona_jeffries

 இந்தக் கட்டுரையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் ஏதோ புனிதர்களைப் போலப் பேசப்படுகின்றனர். அவர்கள் மட்டுமே தீரர்களாக நாஜிசம், ஃபாசிஸம் ,இனவெறியை எல்லாம் எதிர்த்தவர்கள் என்ற கட்டுக்கதை மறுபடி நிறுவப்பட முயற்சி நடக்கிறது. ஆனால் சோவியத் ரஷ்யா எப்படி ஹிட்லரோடு ஒத்துழைத்தது என்பதோ, இதே ஃபாசிஸம் ஜெர்மனியில் கம்யூனிசத்தின் கீழ் வளமாக இருந்தது என்பதை எல்லாம் இந்தக் கட்டுரை யோசிப்பது கூட இல்லை. உலகின் மிகப் பெரும் கொலைக்களங்கள் கம்யூனிசத்தின் பேயாட்டத்தில் இருந்தன. அதுவும் உலகின் இரு பெரும் சோதனைக்களங்களில் சுமார் 45 மிலியன் மக்கள் கொல்லப்பட்டனர், தேவையின்றியே, வெறும் அதிகார மமதையால் என்பதை எல்லாம் சுகமாக மறந்து விட்டு, இதாலிய கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் என்று ஒரு அர்த்தமற்ற கதையை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.
அந்த உதாரணக் கதைகளை எல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் என்ன திரும்பத் திரும்ப இந்தக் கட்டுரை சொல்கிறது என்று கவனித்தால், அரசும், ஆக்கிரமிப்பாளர்களும், வலியவர்களும் (முதலாளிகள் என்பது சொல்லாமல் சொல்லப்படுவது) ஒடுக்கினாலும் சாமானிய மக்கள் கலங்காமல் ஒன்றுபட்டு இயங்கினால் அந்த ஒடுக்கலைச் சமாளிக்கலாம் என்ற மிகச் சாதாரணமான பஞ்ச தந்திரக் கதை. நான்கு மாடுகள் தனித்தனியே பிணக்குற்றுப் பிரிகையில் சிங்கம் அவற்றைக் கொன்று தின்கிறது. இணைந்து இருக்கையில் சிங்கத்தால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால் சிங்கம் அவற்றைப் பிரிக்கச் சதி செய்யவில்லை. நரி செய்கிறது. இன்றைய உலக முதலியத்தின் ஆர்ப்பாட்டத்தில் அந்த நரிகள் யாரென்று பார்த்தால் யாராக இருக்கும்?
கிரீஸ் தேசத்தில் சமீபத்தில், முதலியத்தின் தாக்குதல் முன், மக்கள் கோழைகளாக அச்சமுற்று ஸ்தம்பிக்காமல்  தமக்குள் உதவிக் கொள்ளும் உறவுப் பின்னல்களை உருவாக்கிக் கொண்டு உலக முதலியத்தை எதிர்த்தார்கள், அதனால் வெற்றி பெற்றார்கள் என்று இன்னொரு புனைகதையை இந்தக் கட்டுரை எழுதுகிறது. கிரீஸ் மக்கள் வென்றார்கள் என்றால் நாமும் சந்தோஷப்படலாம்.

ஆனால் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்ட ஏராளமான நிதியெல்லாம் எங்கே போயிற்று, யாரெல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை இந்தக் கட்டுரை பேசுவதில்லை. எது எதார்த்தமோ அதைப் பேசாது சும்மா உளுத்துப் போன கருத்தியலையே திரும்பத் திரும்ப அரைப்பதில் மக்களுக்கு என்ன பயன் கிட்டும் என்று  திறந்த ஜனநாயகத்தை வலியுறுத்தும் இந்தப் பத்திரிகை நினைக்கிறது?

திறந்த ஜனநாயகத்தின் பரம எதிரியான இஸ்லாமிசத்தை இந்தப் பத்திரிகை எப்போது கைவிடப் போகிறது? கெய்ரோவில் திரண்ட பெரும் மக்கள் இயக்கத்தைக் கடத்திக் கொண்டு போய்ச் சீரழித்தது யார்? உலக முதலியமா? இல்லை, இஸ்லாமியக் கொடுங்கோலாளர்களா? இன்று மறுபடி அதிகாரத்துக்கு முதலியத்தின் அடிவருடி ராணுவமே வந்திருக்கக் காரணம் கிட்டிய ஒரு இடைவெளியில் இந்த ஜனநாயகக் கருத்தியல் பேசும் மண்ணாந்தைகள் இஸ்லாம் என்ற சொல்லைப் பார்த்ததும் குழிக்குள் போய்ப் பதுங்கிக் கொண்ட தீரச்செயலால்தானே அழிவு நேர்ந்தது?
வெறும் சொற்களால் நிரப்பிய காகித ராக்கெட் விடுவதில் தீரர்கள் உலக இடது சாரிகள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு தெளிய உதாரணம்.

https://www.opendemocracy.net/transformation/fiona-jeffries/how-do-we-resist-in-world-that%E2%80%99s-awash-in-fear
[/stextbox]


[stextbox id=”info” caption=”தளவாடத்தை நம்பும் தண்டமான மனிதர்கள்”]

African_Union_US_Special_Forces_Military_Army_Training_Exercises_Peace_Navy_Seals

ஏன் இந்தக் குறிப்பு சுருக்கமாக இருக்க வேண்டும்? கட்டுரையைப் படிக்கையிலேயே நிராசை மனதில் மண்டுகிறது, அதனால். படிக்கையிலேயே இப்படி ஒரு நாட்டுக்கு உலகையே ஆளும் பேராசை பிடித்தாட்டுமா என்று தோன்றுகிறது.

இப்படி விபரீத நோக்கம் உள்ள தலைவர்களைக் கொண்ட இந்த நாடோ உலகப் பண்பாடுகளில் பெரும்பாலானவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத மக்களே பெருமளவு கொண்ட ஒரு நாடு. அபரிமித நுகர்வில் பெருவாரி மக்களும் காலத்தைக் கழிக்கிற நாடு. அபரிமிதம் என்றால் எல்லாரும் ஏதோ செல்வக் கொழிப்பில் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மிகச் சாதாரணப் பொருட்களைக் கூட அளவுக்கதிகமாக உண்டு, பயன்படுத்தி, நுகர்ந்து நாம் வாழ்வை வீணடிக்க முடியும். அதை அமெரிக்கர்கள் நிறையவே செய்கிறார்கள்.  பின் எதற்காக 135 நாடுகளுக்குத் தம் ராணுவத்தின் சிறந்த படைகளை அனுப்பி அங்கு பலவித ரகசிய இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும்? அத்தனை பண்பாடுகளை எந்த நாட்டால்தான் அறிந்து விட முடியும்? அறிந்தாலும் அதை ஒரு சராசரி படைவீரருக்கு எப்படிப் புகட்டி விட முடியும்? கல்லூரிகளில் பல ஆண்டுகள் படித்து, அங்கு போய்க் கள ஆய்வு செய்து வந்தாலே கூட பெரும்பாலான முதிர் கலாச்சாரங்களை அறிவது கடினம்.  அப்படி இருக்க இந்த ராணுவ ஊடுருவல் மூலம் ஒரு நாடு என்ன சாதிக்க முடியும்? துப்பாக்கிகளும், ஏவுகணைகளும், வெடி குண்டுகளும், இன்னும் அதி நவீனத் தளவாடங்களும் கொண்டு மட்டும் எந்த நாட்டையும் வென்று ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கா 60களிலிருந்தே மறுபடி மறுபடி கற்றுக் கொண்டு வந்தாலும் ஒரு அடி மக்கு மாணவன் போல அது எதையும் கற்க மறுத்து திரும்பத் திரும்ப ராணுவத்தை நம்பியே தன் பன்னாட்டுக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அது ஏனென்றால், அந்த நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எந்த ஒரு தடையும் வந்துவிடக் கூடாது என்பது அரசியல் கொள்கையாக இருக்கிறதால் வருவது. மக்களிடம் இதை விற்று விட்டு, மேல்தட்டுக் குறுமதி பெருஞ்செல்வர் அத்தனை நாடுகளிலும் உதவாக்கரைப் பொருட்களை விற்றுத் திரட்டும் மேருமலையொத்த செல்வத்தை பூதம் காத்த புதையல் போலப் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். பதுக்கி வைக்க இடம் கூட இல்லாது இப்போது கணினிகளில் அருவமான தகவலாக இந்தப் பெருஞ்செல்வம் பதுங்குகிறது. தமக்கும் பயனில்லாது, உலக மக்களுக்கும் பயன்படாத பெருமுதல் இது. இந்தச் செல்வத்தைக் காக்கும் சாதாரணக் காவல் மிருகங்களாக இந்த அசாதாரணமான படைவீரர்கள் குறுக்கப்பட்டு விட்டதுதான் என்னவொரு சோகமான விஷயம்?

http://www.salon.com/2015/09/27/the_militarys_secret_military_u_s_special_forces_deployed_in_135_nations_partner/
[/stextbox]


[stextbox id=”info” caption=”போர்ச்சுகலின் புதிய துவக்கம்”]

Monica and João the owners of Maria Limão

போர்ச்சுகல் நான்கு வருடங்களுக்கு முன், திவாலான நாடு. யூரோப்பிய ஒன்றியத்திடம் கப்பரை ஏந்தி நின்றது, தன்னைக் கடைத்தேற்ற நிதி உதவி செய்யும்படி வேண்டி. உதவி கிட்டியிருந்தது என்றாலும், அதுவரை ஆண்ட அரசு தோற்று, மரபுவாதிகளும், மத்திய/ வலது கூட்டணியும், மக்கள் கட்சி என்ற ஒரு உதிரிக் கட்சியுமாகச் சேர்ந்து அரசு அமைத்தன.
பிரதமர் பழைய அரசின் எச்ச சொச்சங்களை வாரி வெளியே வீசினார். நிறைய அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு முன்னதாகக் கொடுக்கப்பட்டது. பலர் வேலைகளை இழந்தனர். தொழிலாளர் சட்டங்கள் ‘தாராள’மாக்கப்பட்டன. லிஸ்பன் மாநகர அரசு புதிதாகத் தொழில் துவங்குவோருக்குக் கடனும், தொழில் நுட்ப ஆலோசனையும், இதர உதவிகளையும் கொடுத்தது. அரசு வலது சாரி அரசுகள் செய்யாத ஒன்றைச் செய்தது-வரிகளை உயர்த்தியது.
இப்படி வலது சாரியும் இடது சாரியுமாக பல கலந்து கட்டிய நடவடிக்கைகளால், நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்களின் கூட்டம் திரும்பியது. சுமார் 70% த்தினர் திரும்பி வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசுடைய வருமானம் உயர்ந்திருக்கிறது. புது தொழில்கள் நிறைய துவங்கப்பட்டிருக்கின்றன. வேலையில்லாதவர் எண்ணிக்கை 17% போல இருந்தது இப்போது 12% ஆகக் குறைந்திருக்கிறதாம்.
இப்படி ஜெர்மன் பத்திரிகை ஒரே கலர் கலரான கனவாக நமக்கு அறிக்கை தருகிறது. நிஜம் என்னவென்று இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால்தான் தெரியும். இந்தக் கொள்கைகள் ஜெர்மன் ஆட்சியாளர் ஆங்கெலா மெர்கெலின் கொள்கையை ஒத்தவை என்று ஜெர்மன் பத்திரிகைக்கு ஒரே புளகிதம்.
போர்ச்சுகலை வருமிதழ்களில் அவ்வப்போது கவனிப்போம். யூரோப்பின் விளிம்பு நாடுகளில் அதுவும் ஒன்று. கிரீஸ் அளவு மோசமில்லை என்றாலும் ஸ்லோவொகியா அளவு மோசமில்லை என்றாலும், மோசமான நிலையில்தான் உள்ளது. இதை விடச் சற்றே மேம்பட்ட நிலையில் ஸ்பெயின் இருக்கிறது. அதுவும் தள்ளாடும் நாடுதான். இவற்றைக் கவனித்தால் யூரோப் அடுத்த பத்தாண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாம் ஊகிக்கலாம்.

http://www.spiegel.de/international/europe/young-entrepreneurs-lead-portugal-out-of-crisis-a-1055954.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.