எப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்

பின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்?
ஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் அதன் மேலேயே மடிக்கப்பட்டு, மேல்நோக்கி உயர்த்தப்பட்டு இருந்ததோடு, ஒரு வளைவான கொம்புச் சீப்பு அதை நடுத் தலைக்கு மேல் கர்வத்தோடு நிற்க வைத்திருந்தது. அந்தக் கொம்புச் சீப்பின் பற்கள் முடிக்குள் மறைந்திருந்தன, வளைவின் விளிம்பு மூலை மட்டுமே சிறிய, கூர்மையான காதுகள் போல எட்டிப் பார்த்தன. அந்தக் காதுகளும், தடித்த பின்னலுமாக அப்பெண்களின் பின்னந்தலைகள் நெட்ட நெடுங்குத்தாக நிமிர்ந்து உட்கார்ந்த பூனையைப் போலிருந்தன.
இப்படி ஒரு பொருளை மற்றொரு பொருளாக ஆக்கும் பஞ்சைக் குணாம்சங்கள் எதிர்பார்ப்பை மீறுகிறவையாக இருந்தன. கண் சிமிட்டும் நேரத்தில் நம் புலனுணர்வுகளைத் திரித்தன, தம் விருப்பத்துக்கு அவற்றை வளைத்தன. நீரில் நீந்திய ஒவ்வொரு மெல்லிய கிளையும் ஒரு நீர்ப் பாம்பைப் போலிருந்தது. பாம்புகள் மீது எனக்கிருந்த நிரந்தர பயத்தால் நான் தண்ணீரைக் கண்டும் பயந்திருந்தேன். மூழ்குவது பற்றிய பயத்தால் இல்லை, பாம்பு மரத்தால் பயம். குச்சியாய் நீந்தும் கிளைகளைப் பற்றிய பயத்தால் நான் நீந்தக் கற்கவேயில்லை. நிஜப் பாம்புகளை விட கற்பனைப் பாம்புகளுக்குக் கூடுதலான சக்தி உள்ள தாக்கம் இருந்தது, எப்போது ஆறு ஒன்றைப் பார்த்தாலும் அவை என் மனதில் தோன்றின.
எப்போதெல்லாம் சவ அடக்கங்கள் கல்லறைகளை நெருங்கினவோ அப்போதெல்லாம், அந்த மணி அடிக்கப்பட்டது. கயிற்றில் ஒரு நீண்ட இழுப்பு, அதைத் தொடர்ந்த ஒரு சிறு மணியின் வேகமான, அவசரமான ஒலிப்பு- எனக்கு அதுதான் மனிதரை சாவை நோக்கித் தன் அசட்டுத் தித்திப்பான பேச்சால் இழுத்ததும், கல்லறையின் வருடலை நோக்கி ஈர்த்ததுமான கல்லறைப் பாம்பு. அந்த வருடல்கள் மரித்தாரைச் சுகப்படுத்தின, கல்லறையிலிருந்து மூச்சுக் காற்று போலப் படர்ந்த காற்றில் அதை நீங்கள் உணர முடியும். இறந்தவரைச் சுகப்படுத்திய அது எனக்கு வெறுப்பூட்டியது.
எத்தனைக்கு அது எனக்கு வெறுப்பூட்டியதோ அத்தனைக்கு அதைப் பற்றி நான் யோசிக்க வேண்டி இருந்தது. ஏனெனில் எப்போதும் ஒரு மெல்லிய காற்று வீசியது, எப்போதும் கொஞ்சம் குளுமையாகவோ, அல்லது வெப்பமாகவோ, உலர்ந்தோ ஒரு காற்று.  நான் அதனால் துன்பப்பட்டேன். ஆனால் நான் அவசரமேற் கொள்ளவில்லை, என் மூச்சு மட்டும்தான் வேகமாக வெளிவந்தது, நான் நீரை மெதுவாகத்தான் சுமந்து சென்றேன், பூக்களுக்கு மெதுவாகத்தான் நீரூற்றினேன், தாமசித்து நின்றேன். என் தலைக்குள் இருந்த தத்தாரியான அந்தக் கற்பனைகள் ஒரு வேளை போதையடிமைத்தனமாயிருக்கலாம். நான் அவற்றிற்காக எப்போதும் தேடிக் கொண்டிருந்தேன் அதனால் அவை என்னை எப்போதும் தேடி அடைந்தன.
ஒரு கும்பலைப் போல அவை என் பின்னே ஓடி வந்தன, ஏதோ என் பீதி அவற்றுக்குத் தீனி போடுவது போல. ஆனால் அவை ஒரு வேளை எனக்குத் தீனி போட்டனவோ என்னவோ, என் பயத்துக்கு ஒரு உருவம் கொடுத்தனவோ. பிம்பங்களோ, அதுவும் அச்சுறுத்தலான பிம்பங்களோ, நமக்கு ஆறுதல் தரும் தேவையற்றவை, எனவே நம்மை அவை ஏமாற்றப் போவதுமில்லை, எனவே அவை ஒரு போதும் உடைந்து சிதறுவதும் இல்லை. ஒரு பிம்பத்தை நாம் மறுபடி மறுபடி நம் புத்தியில் ஜாலமாகத் தூண்டலாம்.  முழுதும் பழகிப் போய்விட்ட அது ஒரு துணையாகவே மாறி விடுகிறது. திரும்பத் திரும்பச் செய்வதால் ஒவ்வொரு முறையும் அது புதுப்பிக்கப்பட்டு, என்னைப் பராமரித்தது.
நான் அயல் நாட்டுக்குக் குடியேறப் பயணமேற்கொள்ளவிருந்த தினத்துக்கு முந்தைய தினம் எனக்கு விடை கொடுக்க என் உற்ற நண்பர் வந்தபோது, நாங்கள் தழுவிக் கொண்டோம், இனி மறுபடி ஒரு போதும் பார்க்கப் போவதில்லை என்ற நினைப்போடு, ஏனெனில் நான் மறுபடி அந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படப் போவதில்லை என்றும் அவளுக்கும் அந்நாட்டை விட்டு வெளியேற ஒருபோதும் அனுமதி தரப்படாது என்றும்  இருந்தது- அவர் எனக்கு விடை கொடுத்த போது எங்களால் பிய்த்து விலகிக் கொள்ளவே முடியவில்லை. அவள் வாசல் கதவு வரை மூன்று முறை சென்றாள், ஒவ்வொரு தடவையும் திரும்பி வந்தாள். மூன்றாம் தடவைதான் அவளால் போக முடிந்தது, முழுச் சாலை தூரமும்  மாறாது ஒரே தாளகதியில் போனாள். அது ஒரு நேர்கோட்டுச் சாலை, அதனால் என்னால் அவளுடைய பளிச்சிட்ட மேலங்கி வர வரச் சிறியதாக, சிறியதாக ஆவதைப் பார்க்க முடிந்தது, அவள் தூரத்தில் போகப் போக அது வினோதமான விதத்தில் பகட்டாக ஆகிக் கொண்டு போனது. எனக்குத் தெரியவில்லை, குளிர்கால சூரிய ஒளி வீசியதா,  அது ஃபிப்ரவரி மாதம், என் கண்களில் கண்ணீர் நிரம்பி ஒளிர்ந்தனவா, அல்லது அவருடைய மேலங்கியின் துணி மின்னியதா, எது காரணமோ- ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; என் கண்கள் என் தோழியைப் பின் தொடர்ந்தன, அவர் நடந்து விலகிப் போனபோது, அவருடைய முதுகு ஒரு வெள்ளிக் கரண்டி போல மினு மினுத்தது. அதனால் எங்கள் பிரிவை உள்ளுணர்வால் நான் இரு வார்த்தைகளில் முடிவாக வருணிக்க முடிந்தது. அதை நான் வெள்ளிக் கரண்டி என்று அழைத்தேன். அந்தச் சம்பவத்தை வர்ணிக்க, இருப்பதில் அதுதான் மிக எளிதானதும், மிகக் கருக்கானதுமான வழி.
மொழியை நான் நம்புவதில்லை. என் அனுபவத்தை வைத்துப் பார்த்தால், கருக்காக இருக்க மிகச் சிறந்த வழியாக, எப்போதுமே அது தன்னிடம் இல்லாத ஒன்றிலிருந்துதான் எதையோ எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது.  சொற்-சித்திரங்கள் ஏன் இத்தனை திருடும் விரல் கொண்டதாக இருக்கின்றன என்பதும், ஏன் ஆகச் சிறந்த ஒப்பீடுகள் அவற்றுக்கு உரிமையில்லாத குணங்களைத் திருடுவதாகவே ஏன் இருக்கின்றன என்பதும் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. புதிதாக உருவாக்குவதில்தான் வியப்பு கிட்டுகிறது, காலந்தோறும் இதுவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது- வாக்கியத்தில் வியப்பு ஒன்றை உருவாக்குவதால்தான் உண்மைக்கு அருகில் நாம் செல்ல முடிகிறது. ஒரு பட்டுணர்வு இன்னொன்றிடமிருந்து திருடும்போதுதான், ஒரு பொருள் இன்னொன்றின் உள்ளீட்டைக் கைப்பற்றுகிறது, அதைப் பயன்படுத்துகிறது- நிஜ வாழ்வில் எது நடக்க முடியாததோ அது ஒரு வாக்கியத்தில் சாத்தியமுள்ளதாகிறதாகத் தெரிய வரும்போதுதான், அந்த வாக்கியம் எதார்த்ததின் முன் நிற்கும் வலுப் பெறுகிறது.
என் அம்மா குளிர்காலத்தில்தான் விதி எங்கள் குடும்பத்தில் தலையிட்டது என்று நம்பினார். இருபது வருடங்களுக்கு முன்பு, என்னோடு அவர் ருமானியாவிலிருந்து வெளியேறிக் குடிபெயர்ந்த போது அது குளிர்காலம், ஃபிப்ரவரி மாதம்.
வெளியேற்ற தினத்துக்குச் சில நாட்கள் முன்பு, எல்லைப் பகுதிக்கு அருகில் இருந்த சுங்கச் சாவடி வழியே ஒரு நபருக்கு,  ஆளுக்கு எழுபது கிலோக்கள் வரை எடை கொண்ட பொருட்களைத் தாம் போகுமிடத்துக்கு முன் கூட்டி அனுப்பி வைக்க அனுமதி இருந்தது. முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட அளவுகளின்படி உருவாக்கப்பட்ட மரப் பெட்டியில் இந்தப் பொருட்கள் அடைக்கப்பட வேண்டும். கிராமத்தின் தச்சர் வெளுத்த கருவேல மரத்தால் இந்தப் பெட்டியை அமைத்துக் கொடுத்திருந்தார்.
நான் இந்த புலம் பெயர்வின் போது இருந்த மரப்பெட்டியைப் பற்றி முழுவதும் மறந்து போயிருந்தேன். 1987 இல் நான் பெர்லினுக்கு வந்தபின்னர் இந்தப் பெட்டி பற்றி ஒரு முறை கூட எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு நேரம் வந்தது, பல நாட்கள் இடைவிடாது அதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது, ஏனெனில் உலக நிகழ்ச்சிகளில் அது மையத்திற்கு வந்திருந்தது, அது புகழ் பெற்றதாக ஆகி இருந்தது, தொலைக்காட்சிகளில் பல நாட்கள் அது தோன்றி இருந்தது.
எதேதோ நடக்கையில், பொருட்கள் விடுதலை பெற்று உலவும்போது, ஒரு காரணமுமின்றி நம் தலைக்குள் அவை வேறு பொருட்களுக்குள் வழுக்கி நுழைந்து விடும்போது,  இன்னுமே பல பொருட்களுக்குள்ளும் தொடர்ந்து நுழையும்போது, நம் தலைக்கு அவற்றுக்கும் பிற பொருட்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவதுதான் மேல்: அதனால் நான் எங்கள் புலம் பெயர்தலுக்கான மரப்பெட்டியை டெலிவிஷனில் தொடர்ந்து காணக் காரணம் போப் இறந்து போனதுதான். அவருடைய சவ அடக்கப்பெட்டி எங்கள் மரப்பெட்டியைப் போலவே இருந்தது. அப்போது எங்களுடைய மொத்தப் புலம்பெயர்தலும் மறுபடி மேலெழுந்தது.
காலை நான்கு மணிக்கு நானும் என் அம்மாவும் அந்த புலம்பெயர்தலுக்கான மரப்பெட்டியோடு ஒரு சரக்கு வண்டியில் (லாரி) கிளம்பினோம். சுங்கச் சாவடிக்குப் பயணம் ஐந்து அல்லது ஆறு மணிகள் பிடித்தது. ஒரு பின்னிணைப்பு வண்டியில் (ட்ரெய்லர்) நாங்கள் தரையில் அமர்ந்தோம், மரப்பெட்டி எங்களுக்கு மறைப்பு கொடுத்துக் காத்தது. இரவு பனிக்கட்டி போலக் குளிர்ந்தது, நிலவு மேலும் கீழும் குதித்துக் கொண்டிருந்தது, நம் கண்விழிகள் மிகத் தடித்து இருப்பது போல இருந்தன, ஏதோ உறைந்த பழம் ஒன்று முன் தலையில் இருப்பது போல. கண் கொட்டுவது கூட வலித்தது, கண்ணில் ஏதோ உறைபனி இருந்தது போலப் பட்டது. முதலில் அந்த நிலவுடைய குதிப்பு மெதுவானதாகவும், இலேசாக வளைவாகவும் இருந்தது, பிற்பாடு அங்கு குளிர் அதிகரித்தது, கொடுக்கால் கொட்டியது போல இருந்தது, ஊசிக் கூர்மையாக ஆகி இருந்தது. இரவு அப்படி கருமையாக இல்லை, மாறாக தெளிந்து இருந்தது, பனி பகலொளியின் பிரதிபலிப்பு போலத் தெரிந்தது. இந்தப் பயணத்தில் பேசக் கூட முடியாத அளவு குளிர். வாயைத் திறந்து பேசினால் ஈறுகள் உறைந்து விடும் போல இருந்தது. நான் ஒரு வார்த்தை கூடப் பேசுவதாக இல்லை. ஆனால் நான் பேசும்படி ஆயிற்று, ஏனெனில் என் அம்மா, ஒரு வேளை தனக்குத்தானேதான் சொல்லிக் கொள்ள நினைத்தாரோ என்னவோ, உரக்கவே சொன்னார்:
‘இது எப்போதுமே அதே பனிப்பொழிவுதான்.’
அவர் சுட்டியது 1945 இல் ஜனவரி மாதத்தை, அவரை சோவியத் யூனியனில் இருந்த கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புவதற்காக நாடுகடத்தியதை. ரஷ்யர்களின் பட்டியலில் பதினாறு வயதே ஆனவர்கள் இருந்தனர். பலரும் தலைமறைவானார்கள். என் அம்மா அண்டை வீட்டாரின் தோட்டத்தில் இருந்த ஒரு குழிக்குள், மாட்டுத் தொழுவத்தின் பின்னே, நான்கு நாட்கள் பதுங்கி இருந்திருக்கிறார். அப்போது பனிப் பொழிவு நேர்ந்தது. அவர்களால் அம்மாவுக்கு ரகசியமாக உணவு கொண்டு வருவது இயலாமல் போயிற்று, வீட்டுக்கும் தொழுவத்துக்கும், அந்தக் குழிக்கும் இடையே இருந்த வெளியில் ஒவ்வொரு காலடியும் தெளிவாகத் தெரிந்தது. தோட்டத்தில் காலடிகளைக் கண்காணிக்க முடிந்தது. மக்கள் பனியால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். என் அம்மா மட்டுமில்லை, பலரும் தங்கள் ஒளிவிடங்களை விட்டுத் தாமாக வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், பனிப்பொழிவால் தாமாக வெளிவரும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதனால் என்ன என்றால், ஐந்து வருடங்கள் கட்டாய உழைப்பு முகாமில் தண்டனை கிட்டியது. என் அம்மா பனிப்பொழிவைப் பிறகு மன்னிக்கவே இல்லை.
பிற்பாடு என் பாட்டி என்னிடம் சொன்னார், ‘நம்மால் புதுப் பனியைப் போல எதையும் அமைக்க முடியாது, கலைக்கப்படாத பனி போல எதையும் உருவாக்கிக் காட்ட முடியாது. மண்ணை அப்படி மாற்றி அமைத்துக் காட்ட முடியும்,’ என்றார் அவர், ‘மணலை, ஏன் புல்லைக் கூட, அதற்கான முயற்சியை நாம் எடுத்துக் கொண்டால் திருத்திக் காட்ட முடியும். நீர் தானாகவே தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும், ஏனெனில் அது எல்லாவற்றையும் விழுங்கி விடுகிறது, தன்னையும் சேர்த்துத்தான். மேலும் விழுங்கியபின் அவற்றின் மீது மூடிக் கொள்கிறது. அப்புறம் காற்று,’ அவர் தொடர்ந்தார், ‘ எப்போதுமே ஒழுங்குபடுத்தப்பட்டு விடுகிறது, ஏனெனில் நாம் அதைப் பார்க்க முடிவதில்லை.’
எனவே பனிப்பொழிவைத் தவிர மற்றெல்லாப் பொருட்களும் மௌனமாக இருந்திருக்கும். என் அம்மா இன்று வரையும் அடர்ந்த பனிப்பொழிவுதான், தான் அப்படிக் கடத்தப்பட்டதற்குக் காரணம் என்று நம்புகிறார். பனி அந்தக் கிராமத்தின் மீது வீழ்ந்த போது, ஏதோ அந்தக் கிராமம் எங்கே இருக்கிறது என்பது தெரிந்தே வீழ்ந்தது போல, அதுதான் தன் வீடு என்பது போல வீழ்ந்தது என்று அவர் உணர்ந்திருக்கிறார். ஆனால் அது ஏதோ அன்னியனைப் போல நடந்து கொண்டிருந்தது, உடனடியாக ரஷ்யருக்குச் சேவகம் செய்யப் போயிருக்கிறது. பனி ஒரு வெள்ளைத் துரோகம். தான் சொன்ன வாக்கியத்தால் அதைத்தான் என் அம்மா சுட்டினார்: இது எப்போதுமே அதே பனிப்பொழிவுதான்.
அம்மா துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, அவருக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. துரோகம் என்ற அந்தச் சொல் அங்கே இருக்கக் காரணமே அவர் அதைச் சொல்லாததுதான். துரோகம் என்ற அந்த வார்த்தையைச் சொல்லாமல், அந்தச் சொல் தேவைப்படாத அதே வடிவுகளில், திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகளில் பல வருடங்களாகத் தன் கதையை அவர் சொல்லச் சொல்ல, துரோகம் என்ற அந்தச் சொல் வருடங்களில் மேன்மேலும் வளர்ந்தது. மிகவும் பிற்பாடு, கடத்தப்பட்டது பற்றிய கதைகளை நான் பல காலமாக நன்கு அறிந்த பின்னர்,  எனக்கு இது தோன்றியது, அந்தக் கதையைச் சொல்வதில் திட்டமிட்ட வகையில் அதைத் தவிர்த்ததால், துரோகம் என்ற சொல் பூதாகாரமாக வளர்ந்து விட்டது. அது எத்தனை அடிப்படையான விஷயமாகிப் போயிருந்ததென்றால், நாம் அந்த மொத்தக் கதையையுமே பனிப்பொழிவின் துரோகம் என்ற சொற்களில் அடக்கி இருக்க முடியும். அந்த அனுபவம் அத்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தது, பின் வரவிருந்த வருடங்களில்  மிகவுமே சாதாரணப் புழக்கத்தில் இருந்த சொற்களே அந்தக் கதையைச் சொல்லப் போதுமானதாகி இருந்தன, அரூபமாக்கிய பொதுப்படுத்தல்களோ, அதீதப்படுத்தல்களோ தேவைப்படவில்லை.
பனிப்பொழிவின் துரோகம் என்பது என் சொல்லாக்கம், அது வெள்ளிக் கரண்டி  என்பது போன்றதுதான். நீண்ட, சிக்கலான கதைகளில் ஒரு எளிய சொல் எத்தனையையோ உள்ளடக்கியது, அவை பேசப்படாதவையாக இருக்கும், ஏனெனில் அது எல்லா விவரங்களையும் தவிர்க்கிறது. கேட்பவரின் கற்பனையில் எண்ணற்ற சாத்தியப்பாடுகள் நீள்கின்றன, ஏனெனில் அத்தகைய சொற்கள் செயலின் போக்கை ஒரு புள்ளியில் தடை செய்து நிற்கின்றன. பனிப்பொழிவின் துரோகம் என்பதைப் போன்ற ஒரு சொற்றொடர் பல ஒப்பீடுகளை அனுமதிக்கிறது, ஏனெனில் எதுவுமே தரப்படவில்லை. அப்படி ஒரு சொற்றொடர் வாக்கியத்திலிருந்து எம்பி வெளியே குதிக்கிறது, ஏதோ வேறோர் பொருளால் ஆக்கப்பட்டதைப் போல. இந்தப் பொருளை நான் அழைப்பது இப்படி: மொழியால் செய்த செப்படி வித்தை. மொழியால் செய்யும் இந்த மாயத்தைக் கண்டு நான் எப்போதுமே அச்சம் கொள்கிறேன், ஆனால் இது போதைப் பழக்கம் போன்றது. இந்த செப்படி வித்தையில் நான் ஈடுபட்டிருக்கையில், இந்த வித்தை வெல்லுமானால், சொற்களுக்கு அப்பால் உள்ள ஏதோ ஒன்று மெய்யாகி விடும் என நான் உணர்வதால் நான் அச்சம் கொள்கிறேன். இத்தனை காலமாக நான் வெல்லுவது மீது முனைந்திருப்பதால், அது நடந்து விடக் கூடாது என்று நானே நினைப்பது போல இது உள்ளது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள இடைவெளி தாண்டுகயிறு விளையாட்டின் கயிறு போல ஊசலாடுவது என்பது எனக்குத் தெரிந்திருப்பதால், இந்த விஷயத்தில் தலைப் பொறிகள்தாம் குதிக்கும், கால்கள் அல்ல என்பதும் எனக்குத் தெரிந்திருக்கிறது. ஓரு செப்பிடு வித்தையால் உருவாக்கப்பட்டு, அதனால் முற்றிலும் செயற்கையானதாக ஆகி, பனிப்பொழிவின் துரோகம் என்ற சொற்றொடர் ஒத்து அதிர்கிறது. அதை உருவாக்கிய பொருள் மாறுகிறது, பின் இயற்கையான உடல் உணர்விலிருந்து சிறிதும் வேறுபடாததாக ஆகிறது.
என்னால் நினைவு கூர முடிந்த முதல் துரோகத்துக்குப் பொறுப்பு என்னுடையதாக இருந்தது: கன்றுக்குட்டிக்குத் துரோகம் அது. என் தலைக்குள்  இரண்டு கன்றுக்குட்டிகள் இருந்தன, அந்த இரண்டை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தேன், இல்லையானால் அங்கு எந்தத் துரோகமும் இருந்திராது. ஒரு கன்றுக்குட்டி அறைக்குள் கொண்டு வரப்பட்டது, இன்னொன்றின் கால் உடைக்கப்பட்டிருந்தது. ஒரு கன்றுக்குட்டி பிறந்தவுடன் அறைக்குள் தூக்கிச் செல்லப்பட்டு, என் தாத்தாவின் கட்டிலுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் கிடத்தப்பட்டது. என் தாத்தா பல வருடங்களாக பாரிசவாயுவால் செயலிழந்து படுத்த படுக்கையாகக் கிடந்தார். அரைமணி நேரம் பூராவும் முழு மௌனத்தில், நிறைந்த பேராசையுடன் துளைத்து நோக்கும் கண்களால் அந்தக் கன்றுக்குட்டியை அவர் பார்த்திருந்தார். நான் கட்டிலின் கால்புறத்தில் அந்த சோஃபாவில் அமர்ந்திருந்தேன். அதோடு என் தாத்தாவைக் கவனித்திருந்தேன்.  அவர் மீது எழுந்த பரிவு என் நெஞ்சை நிறைத்து, கிட்டத்தட்ட அதை உடைத்து விடும்போலிருந்தது, அதே நேரம் அவருடைய உற்று நோக்கும் பார்வை எனக்கு அருவருப்பூட்டியது. அது திருட்டு நோக்குள்ள பார்வை, அந்தக் கன்றின் மீது நேராகச் செலுத்தப்பட்ட பார்வை, அந்தப் படுக்கைக்கும் கன்றுக்குமிடையே காற்றில் நீளமாக இறுக்கி இழுக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிக் கம்பி போல அது இருந்தது. அந்தப் பார்வையில் அவர் கண் பாவைகள் புதிதாக உருக்கி வைக்கப்பட்ட உலோக ஒட்டுத் துளிகள் போல மின்னின. ஓரு ஆபாசமான, நம்பிக்கையிழந்த விம்மிதம் நிறைந்த அந்தப் பார்வை, அந்தக் கன்றை முழுதுமாக விழுங்குவது போல இருந்தது. என் தாத்தாவால் அந்தக் கன்றை மட்டும்தான் பார்க்க முடிந்தது, என்னையல்ல- கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  ஏனெனில் என்னால் அந்தப் பார்வை எப்படி எல்லாவற்றையும் விழுங்கும் ஆசை கொண்டதாக இருந்தது, எத்தனை வெட்கமற்றதாக இருந்தது என்பதை உணர முடிந்தது என்ன ஒரு பசி அந்தக் கண்களில், என்று நான் நினைத்தேன். அப்போது கண்களில் பசி என்ற இன்னொரு சொற்றொடர் என் தலைக்குள் திரும்பத் திரும்ப எழுந்தது.
அது ஒரு கன்று. இன்னொரு கன்று பிறந்தவுடன் அதன் கால் ஒரு கோடரியால் உடைக்கப்பட்டது, அப்போது அதை மாமிசத்துக்கு வெட்டலாம் என்பதற்காக. கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்பட்டிருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட எடையை அவை அடைந்தவுடன், அவை அரசிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றிருந்தது. ஏதாவது விபத்து நடந்தால்தான் மிருக வைத்தியர் கன்றை கட்டாயத்துக்குள்ளான கசாப்புக்கு அனுமதிப்பார், அப்போது நாம் மாமிசத்தை வைத்துக் கொள்ளவும், அதை உண்ணவும் அனுமதி கிட்டும். என் அப்பா மிருக வைத்தியரிடம் கன்றுக்கு எப்படி விபத்து நேர்ந்தது என்று விளக்குகையில், எப்படிப் பசு தன் கனமான காலை அந்தக் கன்றின் மேல் வைத்து மிதித்து விட்டது என்று சொன்ன போது, நான் கத்தினேன்,’நீங்க பொய் சொல்றீங்க, நீங்கதான் கோடரியால அதோட காலை உடைச்சீங்க!’
எனக்கு அப்போது ஏழு வயதாகி இருந்தது. என் பெற்றோரிடம் இருந்து எனக்குத் தெரிந்திருந்தது, ஒருவர் ஒருபோதும் பொய் சொல்லக் கூடாதென்பது. ஆனால் எனக்கு இன்னொன்றும் தெரிந்திருந்தது, அரசு கெட்டது, ஏனெனில் உண்மை சொன்னதற்காக அரசு பல மக்களைச் சிறையில் அடைத்திருந்தது என்பது அது.  அந்த மிருக வைத்தியர் ஊருக்குப் புதியவர், எங்களுக்கு எதிரானவர், அரசுக்கு ஆதரவானவர் என்பதும் தெரிந்திருந்தது. எந்தப் பொய்கள் வீட்டில் அனுமதிக்கப்படாதவை என்பதும், வெளியில் ஏராளமானவை தடை செய்யப்பட்டிருந்தன என்பதால் எந்த வகை ‘சப்பாணிப்’ பொய்களுக்கு இடம் உண்டு என்பது எனக்குத் தெரியும் என்று என் அப்பா உள்ளூர நம்பி இருந்திருக்கிறார் என்பதால்,  கிட்டத்தட்ட சிறைக்குப் போகும் நிலைக்கு அவரை நான் கொண்டு விட்டிருந்தேன். ஏகப்பட்ட லஞ்சம் கொடுக்கப்பட்ட பிறகு, அந்த மிருக வைத்தியர் சென்றபோது, அந்தச் சொல்லை நான் அதுவரை கேள்விப்பட்டிராத போதும், நான் செய்தது என்ன, துரோகம் என்பது எதுவென்று நான் தெரிந்து கொண்டேன். என்னை நெருப்பால் வாட்டியது போல இருந்தது. தலையிலிருந்து பாதம் வரை நோய் வந்தது போல இருந்தது.
வருடங்களாக உண்மையானவர்களாக அரசிடம் கன்றுகளை நாங்கள் கொடுத்து விட்டிருந்தோம். இந்த முறை நாங்கள் கன்றின் இறைச்சியை உண்ண விரும்பினோம். அவ்வளவுதான் நடந்தது. ஆனால்  அது பல நெறிமுறைகளைப் பற்றியதுமாக இருந்தது, அவை குழப்பப்பட்டு விட்டன. பொய்கள், உண்மை, மேலும் கண்ணியம். அரசிடம் முடிகிறபோது பொய்கள் சொல்லலாம், ஏனெனில் அதொன்றுதான் நமக்குக் கிட்ட வேண்டியதைப் பெற வழியாக இருந்தது, அது எனக்குத் தெரிந்திருந்தது. என் அப்பாவின் பொய் பொருத்தமானதாகவும், வசதியானதாகவும் இருந்ததோடு, அவசியமானதாகவும் இருந்தது. அப்படியானால், அந்த மிருக வைத்தியர் முன் என் அப்பாவைக் காட்டிக் கொடுக்க எது என்னை உந்தியது? நான் இன்னொரு கன்றை, என் அப்பாவழித் தாத்தாவின் வீட்டிலிருந்ததை, என் அதே அப்பா தொழுவத்திலிருந்து தன் கரங்களில் சுமந்து போய், அந்த வெல்வெட் சோஃபாவில் இருத்தினாரே, அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். வெல்வெட் சோஃபாவில் இருத்தப்பட்ட கன்றாகத் தான்  இருப்பது பற்றி அதால் ஏதும் செய்ய முடியாமலிருந்தாலும், அது அப்படிச் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டது என்பது கோரமாக இருந்தது. ஆனால், கோடரியால் கால் உடைக்கப்பட்ட கன்று மிக அழகாக இருந்தது.  ஏதோ அதன் மீது இரக்கம் எழுந்தது என்பதால் அல்ல, ஏனெனில் அதை வெட்டிக் கொல்லத்தான் நாங்கள் விரும்பினோம்- இல்லை, நாங்கள் அதை வெட்ட முடியாமல் இருந்ததால், அதை ஒரு காட்சிப்பொருளாக்கி, அதைச் சித்திரவதைக்கு உள்ளாக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என்பதால்தான் அது அழகாக ஆனது. என் விவசாயிக் கண்களுக்கு அது பாராட்டத்தக்க உயிரினமாக ஆகி விட்டிருந்தது. எண்ணற்ற முறை, அதுவும் ஒவ்வொரு நாளும், நான் எந்தப் பிரச்சினையுமின்றி பார்த்துக் கொண்டிருந்ததுதான் இதெல்லாம், கோழிகள், முயல்கள், அல்லது ஆடுகள் வெட்டப்பட்டன, பூனைக் குட்டிகள் எப்படி மூழ்கடிக்கப்பட்டன, நாய்கள் கொல்லப்பட்டன, எலிகளுக்கு விஷம் வைக்கப்பட்டது, என்பது எல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த முறிக்கப்பட்ட காலால் ஒரு வினோதமான உணர்வு என்னுள் எழுந்தது, அந்தக் கன்றின் இயற்கையான அழகால், திகட்டும்படியாக இருந்த அதன் கேடு கெட்ட களங்கமில்லாத்தனத்தால், ஆட்கொள்ளப்பட்ட நான் அந்தக் கன்றுக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் ஒரு வித வலியை உணர்ந்தேன். என் அப்பா சிறைக்கு போயிருக்கக் கூடும். சிறை- அந்த வார்த்தை ஒரு கத்தியைப் போல என்னைத் தாக்கியது, என் துரோகத்தின் வெறுமையால், என் இதயம் என் புருவம் வரை எகிறி அடித்தது.
பனியின் துரோகம் என்பதிலிருந்து மாறுபட்டது அந்தத் துரோகம்.
இந்தச் சமவெளியூடேயும், காலியாகக் கிடந்த வயல்களின் குறுக்காகவும் ஒரு சரக்கு வண்டியில் நிகழ்ந்த அந்த இரவு நேரப் பயணம், நீர்த்த பால் போல ஒளி ஊடுருவக் கூடியதாக இருந்தது என்பதால் ஒருவேளை, அந்தக் கன்றினால் , அந்த இரு கன்றுகளால் எழுந்த அந்தத் துரோகம் எனக்கு நினைவூட்டப்பட்டது போலும். ஏனெனில். அந்தப் புலம் பெயர உதவப் போகிற மரப்பெட்டியின் பின்னே ஒடுங்கியபடி அமர்ந்து என் அம்மா பேசியது என்னவோ பனியின் துரோகம் பற்றித்தான்.
அன்று, மூடிப் பூட்டப்பட்டிருந்த, கால்நடை மிருகங்களை ஏற்றுவதற்கான ஒரு வண்டியில் ஒரு முகாமுக்கு அவர் பயணம் போயிருந்தார். இன்று என்னோடு ஒரு லாரியில் சுங்கச் சாவடியை நோக்கிப் பயணம் போய்க் கொண்டிருந்தார். அன்று துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் அவருக்குக் காவலாக இருந்தனர். இன்றோ நிலவுதான் கண்காணித்தது. அன்று அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார், இன்று நாடு விட்டு வேறு நாட்டுக்குக் குடியேறுகிறார். அன்று அவருக்கு வயது பதினாறு, இன்று அவர் அறுபது வயதுக்கு மேலானவர்.
அறுபது ஆண்டுகளோடும், எழுபது கிலோக்களோடும், புலம் பெயர்வதற்கான ஒரு பெட்டியோடும் அந்தக் குளிர் நாளில் ஒரு திறந்த லாரியில் பயணம் போவது துன்பமாகத்தான் இருந்தது, ஆனால் 1945 இல் நடந்ததோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை. பல்லாண்டுகளாக அச்சுறுத்தப்பட்ட நான் இந்த நாட்டை விட்டுப் போனால் போதும் என்றிருந்தேன். என் நரம்புகள் செயலிழந்து போகக் கூடும் என்ற போதும், சௌஷெஸ்குவின் கொடுங்கோலாட்சியிலிருந்தும், அதன் ரகசியப் போலிஸிடமிருந்தும் தப்பிக்கவும், என் புத்தி சிதறாமல் இருக்கவும் நான் இதைச் செய்தாக வேண்டிய நிலையில் இருந்த போதும், என்னதான் இருந்தாலும், நான் இதைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தால் செய்யவில்லை, நான் செய்ய விரும்பித்தான் இதைச் செய்து கொண்டிருந்தேன். வெளியேற நான் விரும்பினேன், அவர் அதையே விரும்பினார் ஏனென்றால் அதைத்தான் நான் விரும்பினேன். என் ஈறுகள் நான் பேசும்போதே உறைந்து போனாலும் நான், ‘ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்க, இதில் பனியின் பிழை ஒன்றும் இல்லை,’ என்றும், மேலும் சொல்ல வேண்டியிருந்தது அவரிடம், ‘நம்மை ஒளிவிடத்திலிருந்து வெளியேறும்படி இப்போது பனி நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை.’
அந்த நேரத்தில் என் புத்தியை இழக்கும் நிலைக்கு அருகேதான் நான் இருந்தேன். நான் அவ்வளவு ஓய்ந்து போயிருந்ததால், என் உணர்வுகள் ஏதோ விபரீத நிலைகளை எனக்குக் காட்டிக் கொண்டிருந்தன, நான் உணர்ந்த அச்சம் என் தோலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் வடிந்தது, நான் கையாண்ட ஒவ்வொரு பொருள் வழியேயும் அது வெளிப்பட்டது. பின்னர் அவை என்னை ஆளத் துவங்கின. நாம் விளிம்புக்குச் சற்றே அப்பால் நோக்கினால், சாதாரணத்துக்கும், புரியக் கடினமாக உள்ளதற்கும் இடையே நம் தலைக்குள் இருக்கும் சிறு இடத்தில் கொஞ்சம் போல நாம் சாமர்த்தியமாகச் சுற்றி வந்தால், அப்படி வளைந்து நெளிவதை நாமே கவனிக்கவும் முடிந்தால், சாதாரண நிலையில் இருந்து எத்தனை எட்டி விலக முடியுமோ அந்தப் புள்ளிக்குப் போய் விட்டோம் என்று அர்த்தம். அதற்கு மேல் எதையும் சேர்க்க முடியாது. நாமே நம்மைக் கவனமாக உற்று நோக்கிக் கொண்டிருக்க வேண்டும், சிந்திப்பதையும், உணர்வதையும் பிரித்து வைக்க முயல வேண்டும். வழக்கம்போல நாம் அனைத்தையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ள விரும்புகிறோம், ஆனால் மனதுக்குள் / இதயத்துக்குள் அல்ல. நமக்குள் இரண்டு வடிவுகள் வேட்டையாடப் பதுங்குகின்றன: ஒன்று உருப்பெருகி ஆனால் முற்றிலும் அன்னியமானதாக, இன்னொன்று மிகப் பரிச்சயமானதாக ஆனால் பார்த்துணர முடியாத அளவுக்கு உருச் சுருங்கியதாகவும், மங்கலாகவும் இருந்தபடி. எத்தனை கூர்மையாக நாம் கவனித்த போதும், இது எப்போது குப்புற வீழும் என்பதைச் சொல்ல முடியாததால் இது ஆபத்தான நிலை. இந்த மலம் போன்ற வாழ்க்கை மாறவில்லை என்றால் அது நிச்சயம் குப்புறக் கவிழத்தான் செய்யும்.
பனியில் ஒளிய இடம் இல்லை என்றில்லை, நான் என் அம்மாவிடம் அப்போது சொன்னேன், என் தலையில்தான் இடம் இல்லை என்றேன்: நான் அங்கிருந்து தப்பி, தூரச் சென்று விட வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. நான் என் சக்தியின் கடைசிப் புள்ளிக்கு வந்திருந்தேன், பல மாதங்களாக சிரிப்புக்கும், அழுகைக்கும் வேறுபாடு என்னவென்று எனக்குப் புரியாமல் ஆகி இருந்தது. எனக்கு எப்போது அழக் கூடாதென்பதோ, எப்போது சிரிக்கக் கூடாது என்பதோ தெரிந்திருந்தது என்றாலும் அதால் ஒரு பயனும் இருக்கவில்லை. எனக்கு எது சரியாகச் செய்வது என்பது தெரிந்தும் நான் எல்லாவற்றையும் தவறாகவே செய்தேன். எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள எனக்கு முடியாமல் போய் விட்டிருந்தது. நான் ஒரே நேரம் அழவும் சிரிக்கவும் செய்தேன்.
இந்த நிலையில்தான் நான் நூர்ன்பர்க்கில் இருந்த, இடைவழிப் பயணிகளுக்கான லாங்வாஸர் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். ஹிட்லரின் பேரணிகள் நடந்த இடத்துக்கு எதிரில் இருந்த உயரமான கட்டடங்கள் அவை. அந்தக் கட்டடங்களில் உறங்குவதற்கான சிறு பெட்டி போன்ற அறைகள் இருந்தன. ஜன்னல்கள் இல்லாத நீண்ட நடைபாதைகள், நியான் விளக்குகள் மட்டும்தான், கணக்கற்ற அலுவலகங்கள். ஒரு நாள் ஜெர்மன் எதிர்-உளவு இலாக்காவால் நான் விசாரிக்கப்பட்டேன். இரண்டாம் நாள் மறுபடி, திரும்பத் திரும்ப, இடைவெளி இல்லாமல், அப்புறம் மூன்றாம் நாள், மேலும் நான்காவது நாளில். செக்யூரிடாட்காரர்கள் [1] நூர்ன்பர்க்கில் என்னோடு இருக்கவில்லை, ஆனால் ஜெர்மனியின் எதிர்-உளவு இலாக்காதான் இருந்தது என்பது எனக்குப் புரிந்திருந்தது. அவர் இருந்த இடத்தில் நான் இப்போது இருந்தேன், ஆனால் நான் இருந்ததுதான் எங்கே, இந்த நாசமாகப் போகிற இடத்துக்கு நான் எப்படி வந்தேன்? அந்தக் கதவுகளில் இருந்த பெயர்ப்பலகைகள் தணிக்கை அலுவலகம் ஏ என்றும் தணிக்கை அலுவலகம் பி என்றும் அறிவித்தன. தணிக்கை அதிகாரி ஏ எனக்கு ஏதும் ‘செயல்திட்டம்’ இருந்ததா என்று ஐயப்பட்டார். ‘உளவாளி’ என்ற சொல் முன் வைக்கப்படவில்லை, ஆனால் என்னிடம் கேட்டனர், ‘அங்கே ரகசிய சர்வீஸுடன் எனக்கு ஏதும் தொடர்பு இருந்ததா?’ ‘அதற்கு என்னிடம் தொடர்பு இருந்தது, அதற்குப் பொருள் வேறு வகைப்பட்டது.’ என்றேன். ‘அதை நான் தீர்மானிப்பேன், அதற்குத்தான் எனக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்.’ என்றார் அவர். அது அவலமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் ‘பி’ கேட்டார், ‘அந்த அரசைக் கவிழ்க்க விரும்பினீர்களா? அதை நீங்கள் இப்போது ஒத்துக் கொள்ளலாம். அதெல்லாம் நேற்றைய பனிதான்.”
அப்போது அது நடந்தது. ஒரு இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு பழமொழியை வைத்து என் மொத்த வாழ்க்கையைப் புறந்தள்ளியது எனக்குச் சற்றும் பொறுக்க முடியவில்லை. நான் நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன், மிகவுமே அதிக உரத்த குரலில் சொன்னேன், ‘அது எப்போதுமே ஒரே பனிப்பொழிவுதான்.’
நேற்றைய பனி என்று சொல்வது எனக்கு ஒருபோதும் பிடித்ததில்லை, ஏனெனில் அப்படிச் சொல்வதில் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறியும் ஆர்வம் சிறிதும் இல்லை. சென்றகாலங்களின் பனி என்ற சொல்வழக்கு எனக்குப் பிடிக்காமல் இருந்தது எது பற்றி என்பது எனக்கு இப்போது தெளிவாகப் புரிந்திருந்தது.  அதில் இருந்த இழிநோக்கும், ஏளனமும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த வெளிப்பாடு அவ்வளவு தூரம் தன்னை உப்ப வைத்துக் காட்டிக் கொள்ள, அவ்வளவு ஆணவத்துடன் தோற்றமளிக்கக் காரணம், அதற்குச் சிறிதும் சுயநம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிரயோகத்திலிருந்து நாம் ஊகிப்பது என்னவென்றால் ஏதோ ஒரு கட்டத்தில் முன்னாளில் இந்தப் பனிப்பொழிவு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிடில் அதைப் பற்றி இன்று நாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம், அதை ஒழித்து ஓரம் கட்ட இன்று முயன்று கொண்டிருக்க மாட்டோம். என் தலைக்குள் அதற்குப் பிறகு என்ன ஓடியது என்பதை அந்த இன்ஸ்பெக்டரிடம் நான் சொல்லவில்லை.
ரோமானிய மொழியில் பனிப்பொழிவிற்கு இரண்டு வார்த்தைகள் உண்டு. ஒன்று கவிதைக்கான சொல், ‘ந்யா’. ரோமானிய மொழியில் ‘ந்யா’ என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு- நமக்கு நன்கு தெரிந்திருப்பதால் ஒரு நபரை நாம் மிக மரியாதையோடு அழைக்கத் தேவை இல்லை என்றாலும், அவரை மிக நெருங்கியவர் போல அழைக்கவும் முடியாத நிலையில் இருப்பவரைச் சுட்டும் சொல் ‘ந்யா’ என்பது. அவரை ‘மாமா’ என்ற சொல்லால் நாம் அழைக்கக் கூடும். சில நேரம் சொற்கள் அவை  பயன்படும் விதத்தைத்  தாமே தீர்மானிக்கின்றன. அந்த இன்ஸ்பெக்டரிடமிருந்து என்னை நான் காத்துக் கொள்ள வேண்டி இருந்தது, மேலும் என்னிடம் அந்த ரொமானியச் சொல்லால் சுட்டப்பட்ட பொருளையும் எதிர்க்க வேண்டி இருந்தது, அதாவது அது எப்போதும் ஒரே பனிப்பொழிவுதான், மேலும் எப்போதும் ஒரே மாமாதான்.
ஒரு சர்வாதிகார அரசிலிருந்து விடுபட்டு நூர்ன்பர்க்கில் தற்காலிகப் பயணிகளுக்கான விடுதியில் நான் வந்து இருக்கையில் என்னை அந்த ஜெர்மன் ரகசியக் காவல் படையினர் விசாரணைக்கு உட்படுத்தும்போது வேறு ஒன்று நிகழ்ந்தது. நான் இப்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறேன், மேலும் இப்போது மேற்கில் அமர்ந்திருக்கிறேன் அந்த சோஃபாவில் இருந்த இளம் கன்றைப் போல என்று நான் நினைத்தேன். அந்த அதிகாரியின் கண்களில் இருந்த பசியைக் கவனித்த போதுதான் எனக்குப் புரிந்தது, அந்தக் காலுடைந்து வதைக்கப்பட்ட கன்று மட்டும் மோசமாக நடத்தப்படவில்லை, ஆனால், ஒவ்வொரு விதத்திலும் அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு- சொல்லப் போனால் இன்னுமே வஞ்சகமாக – சோஃபாவில் இருந்த இன்னொரு கன்றும் கூட நிந்திக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு குளிர் காலத்திலும் அந்த தையல்காரி எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் இரண்டு வாரம் தங்கினார், எங்களோடு உறங்கினார். அவரை நாங்கள் வெள்ளைச்சி என்று அழைத்தோம், ஏனெனில் அவர் வெள்ளைத் துணிகளை மட்டும்தான் தைத்தார்: சட்டைகள், உள் சட்டைகள், இரவுச் சட்டைகள், ப்ராக்கள், தூக்கி நிறுத்த உதவும் நாடாக்கள், மேலும் படுக்கைத் துணிகள் அவை. நான் தையல் எந்திரத்தினருகே ஏராளமான நேரத்தைச் செலவழித்தேன், தையல்கள் எப்படி ஓடின என்றும், அவை எப்படி ஒரு இணைப்புத் தையலாயின என்றும் பார்த்தேன். எங்கள் வீட்டில் அவருடைய கடைசி நாளன்று இரவுச் சாப்பாட்டின் போது அவரிடம் சொன்னேன், ‘விளையாட எனக்கு ஏதாவது தைத்துக் கொடுங்கள்.’
அவர் சொன்னார்,’நான் உனக்கு என்ன தைத்துத் தர வேண்டும்?’
நான் சொன்னேன், ‘ஒரு ரொட்டித் துண்டை எனக்குத் தைத்துக் கொடுங்கள்.’
அவர் சொன்னார், ‘அப்போ நீ வைத்து விளையாடுகிற ஒவ்வொன்றையும் நீ திங்க வேண்டி இருக்குமே.’
நீ வைத்து விளையாடுகிற ஒவ்வொன்றையும் நீ தின்ன வேண்டும். நாம் இதே போல எழுதுகிறதையும் வருணிக்கலாம். யாருக்குத் தெரியும்: நான் என்ன எழுதுகிறேனோ அதை நான் தின்ன வேண்டும், நான் என்ன எழுதுவதில்லையோ  அது- என்னைத் தின்று விடும். நான் அதைத் தின்கிறேன் என்பது அதைக் காணாமல் அடித்து விடாது. என்னை அது தின்கிறதென்பது என்னையும் மறையச் செய்யாது. நாம் எழுதும்போதே வார்த்தைகள் வேறொன்றாக மாறுகையில் இதேதான் நடக்கிறது, இன்னும் கருக்காகச் சொல்வதானால், பொருட்கள் தம் சுதந்திரத்தை பிரகடனம் செய்யும்போதும், சொல்படிமங்கள் தமக்குச் சொந்தமல்லாதவற்றைத் திருடிக் கொள்ளும்போதும் நடப்பது இதுதான். அதுவும் எழுதும்போது குறிப்பாக, வார்த்தைகள் வேறேதோவாக மாறும் போதும், இன்னும் கறாராகச் சொன்னால், அங்கு என்ன நேர்கிறதென்றால் ஒருவேளை எப்போதும் அதே பனிப்பொழிவும், அதே மாமனும்தானோ?

oOo

herta-muller

[1] செக்யூரிடாட் என்பது செசெஸ்குவின் ரொமானிய அரசாங்கத்துடைய ரகசியக் காவல் துறையின் பெயர்.  ஹெர்டா முல்லர் ரொமானியாவிலிருந்து வெளியேறி ஜெர்மனிக்குக் குடிபெயர அனுமதிக்கப்படுகிறார். இந்த உண்மைத் தகவலடிப்படைக் ‘கதை’ அந்தக் குடி பெயர்தலுக்குச் சற்று முன்பு நிகழ்ந்த சம்பவங்களை வருணிக்கிறது. ஜெர்மனியில் அவரைக் கேள்விக்குட்படுத்திய காவல் துறையினர் அவர் கம்யூனிஸ்டு அரசு என்று அறியப்பட்ட செசெஸ்குவின் அடக்கு முறை அரசு குடிமக்களை எப்படி சந்தேகத்துக்குரியவர்களாக நடத்தியதோ அதே போன்ற ஐயத்துக்கு அகதிகளாக வருபவர்களை ஜெர்மனி நடத்துவது ஏன் என்பது ஹெர்டா முல்லருக்குப் புரிந்தாலும், ஏற்கக்கூடியதாக இல்லை என்பது இந்தப் பத்தியில் புரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.