சித்தன் போக்கு

Saints_Temples_Disciples_Worship_Godman_Woman_Lady_Siddha_Ascetics_Ponds_Holy

சென்னையின் பிரபலமான அந்த மருத்துவமனை கனத்த கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எந்த ஆஸ்பத்திரியில் தான் இன்று கூட்டமில்லை? “அடுத்து நீங்க உள்ள போகலாம்” என்று நர்ஸ் சொல்லிவிட்டு போனவுடன், எப்படியேனும் தன் பிரச்சனை தீராதா என்ற ஆதங்கத்தில், “டாக்டர்கிட்ட எதைகும் மறைக்காம தெளிவா எல்லாத்தையும் சொல்லுங்க” என்று தன் கணவனிடம் சொல்லியபடியே இருக்கை விட்டு எழுந்து டாக்டர் அறை நோக்கி நடக்கத் துவங்கினாள் உமா…
முற்றிலும் வெண்மையாகிப்போன சீராக சமன் செய்யப்பட்ட தாடியின் இடையே தெரிந்த இதழ் வழியே, தான் ஒரு மனோதத்துவ நிபுணர் என்று பார்த்தவுடன் நம்பக்கூடிய முகவெட்டில், கனிவு ததும்பும் புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் டாக்டர். “சொல்லுங்க…என்ன பிராப்ளம்” என்றவரிடம், “நான் நார்மலாத்தான் டாக்டர் இருக்கேன். இவங்க தான் கூட்டிட்டு வந்திருக்காங்க” என்றார் சிவகுமார். அதற்காகவே காத்திருந்தது போல பொலபொலவென தனக்குள் இருந்ததை கொட்டத் துவங்கினாள் உமா.
“ஒரு வருஷமா இவர் நடவடிக்கையெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு டாக்டர். இதெல்லாத்துக்கும் மேல இருபத்தஞ்சு வருஷமா பார்த்துக்கிட்டுருந்த கவர்மெண்ட் வேலையை போன மாசம் சட்டுனு விட்டுட்டு வந்துட்டார். கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கு. இப்படி யாராவது பண்ணுவாங்களா? இவருக்கு என்ன பிராப்ளம்னே தெரியலை என்று முடிக்கும் பொழுது கண்ணீர் தொண்டையில் அடைத்து குரல் கரகரப்படைந்திருந்தது.
“மிஸ்டர் சிவகுமார், உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…” என்று அவரை உரையாடலுக்குள் நுழைத்தார் டாக்டர். “நான் எஞ்சினியிரிங் படிச்சு முடிச்சவுடனே கல்பாக்கத்திலே வேலை கிடைச்சுடுச்சு. டிரெயெனிங் முடிஞ்சு ரிசர்ச் அசிச்டெண்டா சேர்ந்து படிப்படியா பிரமோஷன் ஆகி ப்ராஜக்ட் மானேஜரா இருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தேனி பக்கம் நியூட்ரினோ பிராஜக்ட் சம்பந்தமா பூர்வாங்க பணிகளுக்காக ஒரு டீம் ஃபார்ம் பண்ணினாங்க. அதுல நானும் ஒருத்தன்.
தினமும் காலையில எங்க டீம் கள ஆய்வுக்கு கிளம்பி போவோம். மண் சாம்பிள், பாறைகளோட பண்பு, எந்த மாதிரி வெடி வைக்கலாம் இந்த மாதிரியான வேலைகளுக்கான கள ஆய்வு அது. ஜூன் மாசம், தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்கற நேரம். ஒரு நாள் மத்தியானம் அம்பரப்பர் மலை அடிவாரத்துல “டெஸ்ட்” எடுத்துகிட்டு இருந்தோம்…சட்டுன்னு உச்சி கருத்து சில்லுன்னு காத்து அடிக்க ஆரம்பிச்சது. மழை கொட்டப்போகுதுன்னு தெரிஞ்சுருச்சு. சுத்துவட்டாரத்துல ஒதுங்கற இடம் ரொம்ப கம்மி. கொஞ்சம் தள்ளி பெருசா ஒரு மரம் தெரிஞ்சது. அங்க வேகமா போறதுக்குள்ள மழை கொட்ட ஆரம்பிச்சது. மரத்தடில ஒதுங்கி கொஞ்ச நேரத்துக்கப்புறம் தான் அங்க ஒரு கிழவரும் இருக்கறத கவனிச்சோம். கஞ்சிக் கலயமும் ஒரு கம்பும் ஒழுங்கில்லாம கட்டிய வேட்டியும் வெற்றுடம்புமா இருந்தார் அவர். எங்களுக்கு முன்னாடி அவர் அங்க வந்துட்டாரா இல்லை எங்களுக்கப்புறம் அவர் வந்து நாங்க அவரை கவனிக்கலையான்னு தெரியலை. ஆனா அந்த வெட்டவெளி பிரதேசத்துல அத்தனை நேரம் அவரை பார்க்கவேயில்லையேன்னு ஆச்சரியமா இருந்தது…”இங்கன எங்கிட்டு போயிட்டுருக்கீக” என்று அவர்தான் பேச்சை ஆரம்பித்தார்… அவருக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் “கவர்மெண்டு இந்த மலையைத் தோண்டி ஒரு ஆராய்ச்சி பண்ணப் போகுது. அதுக்கு இடம் சர்வே பார்க்க வந்திருக்கோம்” அப்படின்னேன். “மலையத் தோண்டியா…அதுவும் இந்த மலையையா…” என்று சத்தமா சிரிக்க ஆரம்பிச்சார் அவர். எங்களுக்கெல்லாம் ஒரே எரிச்சலாப் போச்சு. “எதுக்குய்யா இப்படி சிரிக்கிறீங்க” அப்படின்னு என்னோட அசிஸ்டெண்ட் கேட்டான். சிரிப்பை நிறுத்தி எங்களை கூர்ந்து பார்த்த அவர், “கோரக்கர் மச்சமுனின்னு அம்புட்டு பேரு வந்து போற மலையை நீங்க தோண்டி ஆராய்ச்சி பண்ணப் போறீகளோ” என்று ஒருவித கேலியுடன் எங்களை பார்த்து சொன்னபடி
பெருங்குரலில் பாட ஆரம்பிச்சார். அந்த அத்துவான பிரதேசத்துல, கொட்டுற மழையில, அந்த பூமிலேந்து குப்புன்னு கிளம்புற வாசத்துல, அவரோட குரலும் சேர்ந்து அப்படியே என்னமோ மயக்கமா கிறங்கடிச்சுச்சு…

“நிறையான தென்பொதிகை கிழக்கேயப்பா
திறையான பூமிவளஞ் சொல்வேன்பாரு
திகழான சவுட்டுமண் பூமியப்பா
பறையான பூமிதனிற் கல்லுமுண்டு
பாங்கான அண்டக்கல் என்னலாமே
சொன்னபடி மலையடிவாரந்தன்னில்
சடரான குகையுண்டு வழிதானுண்டு
தீரமுடன் குகைவழியே செல்லும்போது
நன்மையுடன் காயகற்பந்தான் கொடுத்து
நாதாக்கள் தன்வசமாய் கொள்ளுவாரே…”

அப்படின்னு பாடிக்கொண்டே மழைக்குள்ள நடந்து போயி மறைஞ்சுட்டார் அந்த பெரியவர். அந்த மத்தியான மழை பொழுதும் அந்தப் பாட்டும் அப்படியே மனசுல கெட்டித் தட்டிப்போயி ஒட்டுகிருச்சு..அதுக்கப்புறம் அந்தத் தாத்தாவை நாங்க பார்க்கவேயில்லை…ஒரு மாசம் கழிச்சு லீவுல ஒரு வாரம் மெட்ராஸ் வந்திருந்தேன். சொந்தகாரங்களை பார்க்க ஒரு சாயங்காலம் திருவொற்றியூர்  போயிருந்தோம். போற வழியில ஒரு இடத்துல கோயில் முன்னாடி மைக் செட் வச்சு சத்தமா பாட்டு போட்டுகிட்டுருந்தாங்க…சட்டுன்னு ரோட்டோரமா காரை நிப்பாட்டி, வாங்க எல்லாரும் போயிட்டு வந்துடலாம்னு உமாவையும் பொண்ணையும் கூட்டிட்டு போனேன்…” என்ற சிவகுமாரை இடைமறித்து “இவருக்கு கோயில் குளம் போற பழக்கமே கிடையாது டாக்டர். அன்னிக்கு எங்களுக்கு ஒரே ஷாக்கிங்கா இருந்தது” என்றாள்.
சிவகுமார் தொடர்ந்து ” அந்த கோயில் ஸ்பீக்கர்ல கேட்ட பாட்டு நான் தேனியில கேட்ட பாட்டு மாதிரியே இருந்தது. வாசலுக்கு போன பிறகு தான் அது “பட்டினத்தார் கோயில்” அப்படின்னு தெரிஞ்சது. அங்க கோயிலை பராமரிச்சுகிட்டு இருந்த வயசானவர் ஒருத்தர் கிட்ட போய் இதென்ன கோயில்னு கேட்டேன். சித்தர்கள் வரலாறு பத்தியெல்லாம் விளக்கினார். ஸ்பீக்கர்ல ஓடின பாட்டு பத்தி கேட்டேன்…அவர், “இது அகத்தியர் பாட்டு சார். எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாடினாரோ தெரியாது சித்தர்ல மூத்தவர். இங்க ஜீவசமாதி ஆகியிருக்காரே பட்டினத்தார்…அவருக்கெல்லாம் ரொம்ப காலம் முன்னாடி…” என்றவர் சற்று இடைவெளி விட்டு, “முன்னாடி பின்னாடின்னு கூட சொல்ல முடியுமான்னு தெரியலை ஏன்னா இவங்களுக்கு காலமே கிடையாது. அதைத் தாண்டி போனவங்க… எந்த காலத்துலயும் எந்த ரூபத்திலயும் இருப்பாங்க. அவங்க சித்தி அப்படி உங்க மேல கூட எங்கேயாவது சித்த வாசனை பட்டிருக்கும் அதான் திடீன்னு இங்க வந்து நிக்கறீங்க” என்றபடி நெஞ்சில் கை வைத்துக்கொண்டார். ஏன் அன்னிக்கு அந்த பட்டினத்தார் கோயிலை பார்த்தவுடனே போகணும்னு தோணிச்சுன்னு தெரியலை” என்றார் சிவகுமார்.
“அப்புறம் என்னாச்சு” என்று ஆர்வமுடன் கேட்டார் டாக்டர். சிவகுமார் தொடர்ந்தார்…”லீவு முடிஞ்சு திரும்பி கேம்புக்கு போனப் பிறகு சாம்பிள் டெஸ்டுக்கு சில பாறைகளை வெடி வைச்சு தகர்க்கற வேலை ஆரம்பிச்சோம். அம்பரப்பர் மலை அடிவாரம் முழுக்க ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்துக்குப் போவோம். சீனியர்களான நாங்க இடங்களை குறிச்சிட்டு தள்ளிப் போய் ஜீப்புல உட்கார்ந்துருவோம். அப்பத்தான் எனக்கு அது நடக்க ஆரம்பிச்சது…எங்கேயோ ரொம்ப தூரத்திலிருந்து ஒரு பாட்டு கேக்கும். அது அந்தத் தாத்தா குரல் மாதிரி தோணும். மொத நாள் மத்தவங்ககிட்ட சொன்னப்ப அப்படி ஏதும் கேக்கலைன்னு சொன்ன போது நானும் பெரிசா எடுத்துக்கலை. ஆனா தினமும் அந்த அடிவாரத்துக்கு போகும் போதெல்லாம் பாட்டு கேக்க ஆரம்பிச்சது…அதெல்லாமே அதுக்கு முன்னாடி கேட்டிராத பாட்டுக்கள் வார்த்தைகள்…எனக்கு இது தொடர்ச்சியா நடக்க ஆரம்பிச்சப்புறம் ஒவ்வொரு நாளும், பாட்டு காதில் கேட்கும் பொழுது, வெடி வைக்க அனைவரும் ரெடியாகும் போது எனக்கு இருப்புக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விடுவேன். அலுவல் நேரத்தில் சைட்டில் இல்லாமல் ஏன் பணி ஒழுங்கீனம் என்று மெமோ கொடுத்தார்கள். “சிவகுமாருக்கு காதுல ஏதோ சத்தம் கேட்டுகிட்டே இருக்காம்” “டிப்ரஷன் வந்தாத்தான் காதுல சத்தமெல்லாம் கேட்கும்” என்று ஏதேதோ தகவல்கள் புராஜக்டில் உள்ள எல்லோருக்கும் பரவிச்சு.என்னைய பத்தி பல பேர் பலவிதமா என் காதுபடவே பேச ஆரம்பிச்சாங்க…
அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. காலையில‌ குவார்ட‌ர்ஸிலிருந்து கிளம்பி அடிவாரம் பக்கமாய் போய் ஒரு மரத்தை தேடிப்பிடிச்சு உட்கார்ந்தேன். ரொம்ப நேரம் மலையைப் பார்த்துகிட்டே இருந்திருக்கேன் போல…ஆனா எந்த பாட்டுச்சத்தமும் கேக்கலை. நமக்கு ரொம்ப பிடிச்சவங்களோட, ரொம்ப காலம் பழகினவங்க கூட‌ இருக்கும்போது மனசுல ஒருவிதமான சந்தோஷம் இருக்குமே அந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. எத்தனை நேரம் அப்படி இருந்தேன்னு தெரியல. இந்த‌ மலையை சிதைக்கிறதா நம்ம வேலைன்னு நினைச்சேன்…வேலையை விட்டுட்டேன்” என்று முடித்தார் சிவகுமார்.
“இப்பவும் காதுல பாட்டுச் சத்தம் கேக்குதா” என்றார் டாக்டர்.”
“இல்லை டாக்டர். எனக்கு தொடர்ந்து ஏற்பட்டுகிட்டு வர அனுபவங்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஆனா யோசிச்சு பார்த்தா அது ஒவ்வொண்ணுகுள்ளேயும் அடுத்ததோட முடிச்சு இருந்திருக்குன்னு தோணுது. வசதிதான் வாழ்க்கைன்னு  ஆரம்பிச்ச நான் எங்கேயோ வந்து நிக்கிறேன்!  அன்னிக்கு மலைக்கு நம்மால எதுவும் ஆயிடக்கூடாதுன்னு நினைச்சு விட்ட போது என் மனசுல குப்புன்னு பரவின பேரமைதியையும் நிம்மதியையும் என்னால விளக்க முடியலை. ஆனா அது போல ஒன்ன நான் அனுபவச்சிதேயில்லை…எனக்கு சித்தர்கள் மேல சமீப காலமா ரொம்ப இன்ட்ரஸ்ட் ஜாஸ்தியாயிருக்கு. ஆனா எங்கிட்ட ஏதோ பிராப்ளம் இருக்குன்னு இவங்க நினைக்கிறாங்க” என்று மனைவியை கைகாட்டினார். “பின்ன என்ன டாக்டர், கவர்மெண்ட் வேலை கை நிறைய சம்பளம். அதை விட்டுட்டு இப்போ ஒரு பிரைவேட் கம்பெனில கம்மி சம்பளத்துக்கு சேர்ந்துருக்கார். அந்த வேலை கூட சட்டுன்னு கிடைக்கலை. எதுக்கு நல்ல வேலையை விட்டீங்கன்னு எங்க போனாலும் கேள்வி…யார் செஞ்ச புண்ணியமோ இப்போ வேலைன்னு ஒண்ணாவது கிடைச்சுருக்கு. ஆனா அவர் அடுத்து என்ன செய்வார்ன்னு பயமா இருக்கு டாக்டர்” என்று கண் கலங்கினாள் உமா. “உங்க மனைவியோட கவலை புரியுதா மிஸ்டர் சிவகுமார்?” என்றார் டாக்டர். “புரியுது. ஆனா என்னோட இருபந்தஞ்சு வருஷ சர்வீஸ்ல தேவையான அளவு பணமும் வசதியும் சேர்த்து வச்சுருக்கேன். பொண்ணு கல்யாண செலவு போக மீத காலத்துக்கு போதுமான அளவு இருக்கு டாக்டர். அளவுக்கு அதிகமான பணம் வெறும் காகிதம் தானே டாக்டர்? என்றார் சிவகுமார்.
அவரை கூர்ந்து பார்த்தபடி இன்டர்காமில் நர்ஸை அழைத்தார் டாக்டர். “மிஸ்டர் சிவகுமார், உங்களை ஒரு வாரம் அப்சர்வேஷன்ல வைக்கணும். ஒண்ணுமில்லை, எந்த பிராப்ளமும் உங்களுக்கு இல்லைனு உறுதி செஞ்சுக்கத்தான்…கவலைப்பட வேண்டாம்” என்றார் உமாவை நோக்கியபடி.
“ஃபார்ம் பூர்த்தி பண்ணி அட்வான்ஸ் கட்டிட்டு அட்மிட் ஆயிடுங்க. நான் காலையில உங்களை ரவுண்ட்ஸ் வர போது பார்க்கிறேன். என்ன டெஸ்ட் எடுக்கணும் அப்படிங்கறத டூட்டி டாக்டர்ஸ் சொல்லுவாங்க…பெஸ்ட் ஆப் லக்” என்று சிவகுமாரிடம் கைகுலுக்க கைநீட்டிய டாக்டரிடம், “கொஞ்ச நாளா எனக்கு ஒரு யோசனை வந்திட்டிருக்கு டாக்டர்…இந்த அண்டக்கல் அண்டக்கல் அப்படின்னு சித்தர்கள் பாடிட்டு போயிருக்காங்களே…அண்டக்கல் அப்படிங்கறது நியூட்ரினோ தானோன்னு எனக்கு யோசனை டாக்டர்!” என்றார். காது கொடுத்து கேட்டாரா என்று தெரியாத வண்ணம் ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார் டாக்டர். உமாவின் கண்களில் தேங்கியிருந்த நீர் இப்போது கன்னம் தாண்டி வேகமாக நகர்ந்து தரையில் விழத் தயாராகிக் கொண்டிருந்தது.

One Reply to “சித்தன் போக்கு”

Leave a Reply to agvenkjatasubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.