எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2

msv

1964- பன்முகத்தன்மையின் ஆண்டு
1964. இந்த அளவுக்கு வித்தியாசமாக, பலவகைகளில் தம் திறமையை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளும் திரைப்பட வாய்ப்புகள் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் கிடைப்பதில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு 1964 அப்படிப்பட்ட ஒரு ஆண்டு.
இவர்கள் 1964ஆம் ஆண்டு இசையமைத்த அத்தனை படங்களையும் நான் பட்டியலிடப் போவதில்லை. இவர்களின் பன்முகத்திறமை வெளிப்பட்ட திரைப்படங்களில் சில பாடல்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
இதில் முதலில், அவர்களது சொந்த தயாரிப்பான கலைக்கோவில் என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம். ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம் படுதோல்வியடைந்தது. இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட இது காரணமாக இருந்திருக்கலாம் என்று விக்கிப்பீடியா குறிப்பு ஒன்று கூறுகிறது. அதை விட்டுவிட்டு இப்படத்தின் இசை பற்றி பேசுவோம்- இந்த இசை அக்கால ரசிகர்களை ஈர்க்கவில்லை.
பாலமுரளி, சுசீலா குரலில் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல். தங்க ரதம் வந்தது, இன்று திரையிசையில் ஒரு செவ்வியல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அந்த நாட்களில் இவ்வளவு பிரபலமடையவில்லை என்று நினைக்கிறேன். முதலில் கவனிக்கப்படாதபோதும், தரம் எப்போதும் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இது இன்னுமொரு சான்று.

பாலமுரளி குரலில் உள்ள கம்பீரமும் சுசீலாவின் குரலின் இனிமையும் இதில் அழகாக இணைகின்றன. முதல் இடையிசையில் உள்ள புதுமையை கவனித்திருப்பீர்கள். இசை சீராக இல்லை, தாளம் மாறுபட்டு ஒலிக்கிறது. ஆனால் சரணம் அவர்களுக்குரிய வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறது. முன்னரே, மாலையிட்ட மங்கை படத்தில் நானன்றி யார் வருவார் என்ற பாடலை ஆபோகி ராகத்தில் அமைத்திருந்தனர் இவ்விருவர். ஆனால் அது ஏறத்தாழ ஒரு கர்நாடக சங்கீத கிருதி போலவே அமைந்திருந்தது. இது நவீன ஆபோகி.
அடுத்து, ஸ்ரீராகத்தில் அமைந்த அருமையான பாடல். முன்னிசையில் வீணை இனிமையாக ஒலிக்கிறது, தபலா ஏறத்தாழ ஒரு ஜலதரங்கம் போலவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் சொந்தப் படத்தில் புதுமை செய்ய நினைத்தார்கள் போலிருக்கிறது. பிறர் தயாரிப்பில் இது சாத்தியமில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம். இந்தப் பாடலுக்கு வீணை வாசித்தவர் வீணை மேதை சிட்டிபாபு என்று விக்கிப்பீடியா குறிப்பு சொல்கிறது.

கலைக்கோவிலுக்கு நேர் எதிர் துருவம் புதிய பறவை. ஆங்கில திரைப்படம் ஒன்றன் தாக்கம் கொண்ட துப்பறியும் கதை, புதிய பறவை. நவீன சினிமா என்று சொல்லலாம், தனிப்பாணியில் அமைந்திருந்தது, இன்றைய திரை விமரிசனத்தில் ஸ்டைலிஷ் மேக்கிங் என்று எழுதுவார்கள். சிவாஜி கணேசன் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். திரைப்படம் படமாக்கப்பட்ட விதத்துக்கு ஏற்ப இசையும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் இருந்தாக வேண்டும் என்ற சவாலை விஸ்வநாதன் ராமமூர்த்தி எதிர்கொண்டதில் நமக்குச் சில அசாதாரணமான, மறக்க முடியாத பாடல்கள் கிடைத்தன.

மேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைந்த உன்னை ஒன்று கேட்பேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், சுசீலா இணைந்து சிறிதுகூட சிரமம் தெரியாமல் அமைக்கப்பட்ட, மற்றுமொரு ஸ்டைலிஷ் பாடல். சுசீலாவின் மிகச் சிறந்த பாடல்களில் இந்த இரண்டு பாடல்களுக்கும் மிக முக்கியமான இடமுண்டு.

அற்புதமான பியானோ இசையும், இடையிசையில் சாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதும் மேற்கத்திய பாணி அணுகல்கள். இந்திய பாணி ட்யூனில் இந்த இசை மிக வித்தியாசமான ஓசையுடன் அமைந்திருக்கிறது. நிலவிலா வானம் என்ற இடத்தில் எவ்வளவு நன்றாக மெட்டு போட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்தப் படத்தில்தான் மெல்ல நட மெல்ல நட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற இரு பாடல்களும் இருந்தன. ஆனால் எங்கே நிம்மதிதான் கற்பனையின் உச்சம் தொட்ட பாடல் என்று சொல்ல வேண்டும். இந்தப் பாடலில் எல்லா இசைக்கலைஞர்களும் உற்சாகமாக போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றிருக்கிறார்கள். நம்மால் என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. வயலின்கள் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வயலின் கலைஞர்கள் அனைவரும் இந்தப் பாடல் பதிவில் இசைக்கச் சென்று விட்டதால் அன்று சென்னையில் வேறெந்த பாடலும் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்வார்கள். போனால் போகட்டும் போடா பாடலை ஆங்காங்கே நினைவூட்டும் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் அமைந்த இடையிசையுடன் இனிய ட்யூன். டிஎம்எஸ்ஸின் அப்பழுக்கற்ற குரல், சிவாஜியின் முத்திரை நடிப்பு. அனைத்தும் இந்தப் பாடலில் கைகூடி வந்திருக்கின்றன. ஆனால் இதில் மிகப்பெரிய வெற்றி கண்ணதாசனுக்கே உரியது- இந்தப் பாடல் வரிகள் வேறு யாராலும் தொட முடியாத இடத்தைத் தொடுகின்றன- எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது.
புதிய பறவை படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் நவீன இசை வெளிப்பட்டால், தமிழ் திரைப்பட வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான காதலிக்க நேரமில்லையில் அவர்கள் இசையில் விளையாடிப் பார்த்தார்கள். கொண்டாட்டமாய் சில பாடல்களும் இனிய காதல் டூயட்களும் இந்தப் படத்தில் அமைந்திருந்தன.
மேற்கத்திய இசையின் தாக்கத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும்-

உந்தன் பொன்னான கைகளில் இந்த விளையாட்டு தொடர்கிறது. இதில் சிறிது இந்தி திரையிசை கலந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மைன் சலி மைன் சலி என்ற ப்ரொபசர் பாடலின் இடையிசை இதில் ஒலிப்பது போல் தெரிகிறது. ஆனால் ட்யூன் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒன்று. இது போன்ற பாடல்களுக்கு பிபிஎஸ் குரல் பொருத்தமானதுதானா என்பது குறித்து எனக்கு கேள்வி உண்டு.

தலைப்புப் பாடலுக்கு சீர்க்காழி கோவிந்தராஜனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதியவர் ஒருவர் பாடுவதாக படத்தில் வரும் பாடல் என்பதால், சீர்காழியின் குரல் நன்றாகப் பொருந்துகிறது.

ஆனால் ஏனோ எனக்கு இந்த இரு பாடல்களும் நிறைவு கொடுக்கவில்லை. இது போன்ற ஜாலியான பாடல்கள் எவ்வளவு லைட்டாக இருக்க வேண்டுமோ அது போன்ற இலகுத்தன்மை இந்த ட்யூன்களில் இல்லை. ஆனால், மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும், என்ற பாடல் பற்றி யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. ராக் அண்ட் ரோல் பாணி பாடல், இதில் வரும் யோடலிங் கிஷோர் குமாரை நினைவுபடுத்துகிறது.

அனுபவம் புதுமை மற்றுமொரு ராக் அண்ட் ரோல் பாடல். இனிய ட்யூன், பின்னணியில் மேற்கத்திய இசை.

இவை போதாதென்று என்ன பார்வை உந்தன் பார்வை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, மற்றும் இதயத்தைப் பிசையும், நாளாம் நாளாம் திருநாளாம்-

எவ்வளவு சந்தோஷமான பாடல்கள், ஒன்றில்கூட சோகத்தின் சாயல் இல்லை. இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிவாகை சூடின. காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியில் பாடல்களின் வெற்றிக்கு கணிசமான பங்கு உண்டு என்று நினைக்கிறேன்.
இதே ஆண்டுதான் எம்ஜிஆரின் படகோட்டியும் வந்தது. ஆனால் வழக்கமான எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் இதில் இல்லை.
ஒரு சோதனை முயற்சியாக, தொட்டால் பூ மலரும்- எம்ஜிஆர் பாடல் என்பதைவிட, இதில் இழையும் மென்சோகத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை பதிந்திருக்கிறது. இந்தப் பாடலில் வரும் கரவொலி இன்றும் கொண்டாடப்படுகிறது.

இதில்தான் பாட்டுக்குப் பாட்டெடுத்து, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல்களும். அனைத்தும் திரைக்கு வந்ததும் வெற்றி பெற்ற பாடல்கள்.
பொதுவாகவே படகோட்டி படப்பாடல்கள் எல்லாம் சோகமானவை என்றால், அதே ஆண்டு வந்த மற்றுமொரு எம்ஜிஆர் படமான தெய்வத்தாய் பாடல்கள் அனைத்தும் உற்சாகமானவை – ஒரு பெண்ணைப் பார்த்து என்ற இந்தப் பாடலை யார் மறக்க முடியும்?

இவற்றில் சிறந்ததை கடைசியில்தான் சொல்கிறேன். 1964தான் கர்ணன் வந்த ஆண்டு. இந்துஸ்தானி ராகங்களைச் சோதனை முயற்சியாக இதில் கையாண்டுள்ளனர். அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய படம். தமிழ் திரைவரலாற்றில் கிளாசிக் அந்தஸ்தைத் தொட்ட படம்.
கர்ணன் படத்தில் சுசிலா சில அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். கண்ணுக்கே குலம் ஏது, இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நினைக்கிறேன். நாம் வழக்கமாகக் காணும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இதிலும் உண்டு. சோகத்தின் சாயல், இனிமையான மெட்டு, எளிய இசைக்கோர்வை- அனைத்தும் இந்த இரட்டையருக்கே உரியவை. தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்தப் படத்தில் சுசிலா பாடிய வேறு இரு பாடல்கள் இருக்கின்றன. அவை விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மாறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகின்றன- இது கண்கள் எங்கே என்ற பாடல்

இதன் பல்லவி மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது- மெல்ல ஒலிக்கும் மெட்டு முடிவில் வேகம் பிடிக்கிறது, கோரஸ் மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வேகம் நிதானித்தும் விரைந்தும் மாறி மாறி பயணிக்கிறது. பெண்குரல் தனித்து பாடும் பாடல்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மிகவும் நேசித்த சர்வலகு தாளம் இதில் இல்லை. பாடல் முழுதும் நடை வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது. இது அத்தனையையும் மறைப்பதாக பாடலின் ட்யூனும் சுசிலாவின் குரலும் இருக்கின்றன.
இதில் உள்ள மற்றொரு பாடல், என் உயிர்த் தோழி. ஹிந்துஸ்தானி ராகமான ஹமீர் கல்யாணியில் அமைந்த பாடல். இதன் ட்யூன், ரிதம் என்று எதிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது. ஆனால்கூட இடையிசையில் வரும் ஷெனாய் மற்றும் இந்துஸ்தானி சாயல், இந்தப் பாடலைத் தனித்தன்மை கொண்டதாகச் செய்கிறது-

இந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம்? விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம். இதன் காணொளியை என் நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் இசை ஞானம் மிக்கவர். அவரோ, ஷ்யாம் கல்யாண் போலிருந்தாலும் இது உண்மையில் அதற்கு மிகவும் நெருக்கமான சுத்த சாரங்க் ராகத்தில் அமைந்த பாடல் என்றார். எனக்கு இந்த ராகங்கள் எதுவும் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தப் பாடலில் அழகாய் ஒலிக்கும் ஷெனாய், பிஸ்மில்லா கான் வாசித்தது. இதற்காகவே அவர் சென்னை வந்தார்.
மகராஜன் உலகை ஆளலாம் என்ற பாடல் கரகரப்பிரியா ராகம். திஸ்ர நடையில் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலில் அதன் சாயல் முழுமையாக மாறிவிட்டதை ஜி எஸ் மணி ஒருமுறை ஒலிப்பதிவு உரையாடலில் கூறியிருக்கிறார்.
ஒரு படத்துக்கும் அதன் இசைக்கும் சாகாவரமளிக்க இந்தப் பாடல்களே போதும் என்று நீங்கள் நினைத்தால், இன்னும் இருக்கிறது. இதுவரை சொன்னதெல்லாம் கர்ணன் படத்தின் அடையாளங்கள், அவை இடம்பெறும் கட்டங்களுக்கு உரியவை.
இந்தப் பாடல் பாருங்கள்- வழக்கமான கர்ப்பகால பாடல்- இதிலும் ஷெனாய் எவ்வளவு அழகாக ஒலிக்கிறது. இரண்டாம் சரணத்தின் மெட்டு நம் இதயத்தைத் தொடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், வார்த்தைகள். என்னவொரு அர்த்தம் பொதிந்த அழகிய, இனிய பாடல்.

பேறு காலத்தில் பிறந்த வீடு செல்லும் பெண்ணுக்குரிய பாடல் இது. ஆனந்த பைரவியில் அமைந்த பாடல். கண்னதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாததாகச் செய்கின்றன.
இந்தப் பாடலின் விசேஷம் பத்யம் போன்ற பகுதியில் பல்வேறு பாடகர்கள் பல்வேறு ராகங்களில் பாடுகின்றனர். எவ்வளவு சிறந்த இசைக்கலைஞர்களை இங்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்று சேர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். படத்தில் ஒவ்வொரு புலவராக அடுத்தடுத்து கர்ணனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலிலும் மெட்டும் சொற்களும் மிக அழகாகக் கூடிவருகின்றன. திருச்சி லோகநாதன் பாடுவது கானடா ராகத்தில் ஒரு முத்தாரம் என்று சொல்லலாம்- நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம் என்று எழுதிய கண்ணதாசன் கற்பனையை என்னவென்று சொல்ல!


இப்போது இந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் பாடல் சோகப் பாடல் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல். சக்ரவாகம் (அஹிர் பைரவ்) அடிப்படையில் அமைந்த பாடல், இது சீர்காழியின் குரலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் பாடல். பெருஞ்சோகத்தை இந்தப் பாடல் போல் கைப்பற்றிய வேறு பாடல்கள் அரிது, மிகச் சில பாடல்களே இதுபோல் உணர்வை இசையாய் வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. இங்கும் நாம் கண்ணதாசனுக்கு சிரம் தாழ்த்த வேண்டியதாகிறது, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற துவக்கம் முதல் முடிவு வரை கண்ணதாசன் பாணியில் மிக ஆழமான தத்துவ தேடல்.

கர்ணன் படப்பாடல்களை எத்தனை எத்தனை விதங்களில் மாறுபட்டு ஆனால் பொருத்தமான வகையில் இவர்கள் இசையமைதிருக்கின்றனர் என்பது தீராத ஆச்சரியமாகவே இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமையைக் காட்ட ஒரே ஒரு படம் போதும் என்றால் தயக்கமில்லாமல் நாம் கர்ணன் படப்பாடல்களைப் பரிந்துரைக்க முடியும். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழ் திரையிசை வரலாற்றின் மிகச் சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது என்று சொல்லலாம்.
(தொடரும்)

One Reply to “எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2”

  1. இரவும் நிலவும் பாடல் ஹம்சநாதம் ராகத்தில் அமைந்தது என்றும் சொல்பவர்கள் உண்டு. 1964ம் ஆண்டு கட்டுரையாளர் சொல்வது போல விசுவநாதன்-ராமமூர்த்தி இசையில் ஒரு மகோன்னத ஆண்டு. கட்டுரையில் சொல்லப்பட்ட படங்கள் தவிர அவர்களின் சிறந்த பாடல்கள் இடம்பெற்ற பச்சை விளக்கு, பணக்காரக் குடும்பம், கை கொடுத்த தெய்வம் ஆகிய படங்கள் வந்த ஆண்டும் 1964தான். அந்த ஆண்டுதான் ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ நாவல் எழுதப்பட்டது. அதில் தமிழ் சினிமா இசையை ஆபாசக் கூச்சல் என்கிறார். ஜேகே. ஒவ்வொருவர் பார்வைக்கும் இவ்வளவு வேறுபாடு இருக்குமா என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.