கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை

2015 –ன் ஆரம்பத்தில் நடந்த நுகர்வோர் கருத்தரங்கில், சாம்சுங்கின் தலைவர், ஒரு பி.எம்.டபிள்யு. காரை நுண்ணறிப்பேசியில் அழைக்க, அவரை நோக்கி விரைந்த, அந்தக் கார், அவர் முன் வந்து நின்றது. காரில் ஏறியவுடன், அவருடைய நுண்ணறிப்பேசி மூலம், சென்றடைய வேண்டிய இடத்தைச் சொல்ல, காரும் அங்கே செல்லத் தொடங்கியது. காரில் ஓட்டுனர் எவரும் இல்லை.
2015, ஜூலை மாதம் க்ரைஸ்லரின் ஜீப் வண்டிகளை இணையம் மூலம் ஓட்டுனரிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஓடும் காரை இன்னொருவர், இணையம் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

மேலே சொன்ன இரு விஷயங்களும், எப்படி இணையத்துடன் இணைக்கப்பட்ட கருவிகள் நம்முடைய வாழ்க்கையை மாற்ற போகின்றன என்பதற்கு உதாரணம். கருவிகள், (devices) அல்லது உணர்விகள் (sensors) என்பது நமக்கெல்லாம் ஓரளவு பரிச்சயமான சொற்கள். ஆனால், இதற்கும் இணையத்திற்கும் (internet) என்ன சம்பந்தம்?
இன்றைய நோக்கில் அதிக சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றினாலும், நாம் இங்கு பார்த்த இரு உதாரணங்கள் இந்த சம்பந்தத்தின் நல் முகம் மற்றும் தீய முகத்தையும் காட்டுகின்றன. இன்று, நம்முடைய நுண்ணறிப்பேசியை (smart phone) ஒரு கருவியாக நாம் பார்க்கிறோம். அதில், இணையம் மூலம் விடியோக்களைப் பார்க்கிறோம், பண்பலை வானொலிகளைக் கேட்கிறோம். கருவி இணையத்தின் ஆரம்ப நிலை, நமது இன்றைய நுண்ணறிப்பேசி.
கணினி, மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் எதிர்காலத்தில் (அதாவது, இன்னும் 5 முதல் 10 வருடத்திற்குள்) இவை ஒருங்கிணைந்து விடும் என்று சொல்லி வருகிறார்கள். வழக்கம் போல, இது ஒரு குத்து மதிப்பான மதிப்பீடு. இதில், பல பிரச்னைகள் தீர்க்கப் பட வேண்டும். மேலும் பல வகை பயன்பாடுகள், மக்களால் அரவணைக்கப்பட வேண்டும். இவற்றையும் தாண்டி, கருவிகளின் இணையச் செயல்பாடுகள், என்றும் இல்லாத அளவு, இன்று ஒரு பெரும் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்தது என்று பல தொழில்நுட்பப் போட்டியாளர்களால் பொதுவாக ஒப்புக் கொள்ளப் படுகிறது. இந்தக் கட்டுரைத் தொடர், இவ்வகையான கருவிகளின் இணையம் (internet of things) பற்றிய அறிமுகம். இவ்வகைக் கருவிகளினால், வரப்போகும் பயன்கள், பிரச்னைகள், சமூக மாற்றங்கள் பற்றிய அலசலே இக்கட்டுரைகள்.

IOT part1-pic1

ஆரம்பத்தில், 1990 -களில் இணையம் என்பது பொது மக்களை, மின்னஞ்சல் எனும் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வைத்தது. பொதுவாக, இந்த காலகட்டத்தில், மனிதர்களைவிட, கணினிகளின் இணையம் உருவாகியது. இன்று, சில முதியவர்கள் மின்னஞ்சல் அனுப்பத் தயங்குவதைக் கிண்டல் செய்யும் நாமும் தடுமாறிய காலம் 1990 –கள். நாம் இணையத்துடன் தொடர்பு கொண்ட ஆரம்ப காலம் அது. 2000 –களில் செல்பேசிகள் ஒரு புறமும், சமூக வலையமைப்பு பயன்பாடுகள் (முகநூல், டிவிட்டர்) பெரிதாக அங்கீகாரம் பெற்றன. செல்பேசிகள் மனிதர்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். மனித வரலாற்றில் என்றும் இல்லாத அளவு, தூரத்தை வென்ற மனிதத் தொடர்பு உருவாகியதும் செல்பேசிகளால் என்றால் மிகையாகாது. துவையல் சரியாக வரவில்லை என்றால், நன்றாக சமைக்கத் தெரிந்த 1,000 கி.மீ. தொலைவில் உள்ள அக்காவை இரவு 9 மணிக்கு அழைக்கும் பழக்கம் உருவாகியது இந்த காலத்தில் தான்.சமூக வலையமைப்பு பயன்பாடுகள் அடுத்த கட்டமாய், சமூகங்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். ஒரு இசை/விளையாட்டு நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கு நடப்பதை உடனடியே உலகிற்கு (அதாவது, தொடர்புடைய சமூகத்திற்கு) அறிவிக்கும் வழக்கம் வலையமைப்பு பயன்பாடுகள் உருவாக்கிய சமீபத்திய நிகழ்வு.
இவ்வாறு, நாம் கடந்த 25 ஆண்டுகளில், முதலில், கணனிகளுடன் உடன் தொடர்பு, பிறகு, தொலைவில் உள்ள மனிதர்களுடன் உடன் தொடர்பு , பிறகு, உலகின் வெகு தொலைவில் உள்ள மனித சமூகங்களுடன் உடன் தொடர்பு என்று வளர்ந்து வந்துள்ளோம்.
சில நூறு கணினிகள் இணைந்த அமைப்பு இணையம் என்று ஆரம்பித்து, அது பல்லாயிரம் கணினியாகி, அத்துடன் பல லட்சம் செல்பேசிகள்/நுண்ணறிப்பேசிகள் (cell phones/smart phones) இணையத்தில் இணைந்தன. இது, இணையம் நம்மைத் தேடி கையளவில் வந்த காலம் எனலாம். செல்பேசிகளுக்கும் கணினிகளுக்கும் (வில்லை, மடி, கை, காது என்று எல்லா வகையும் இதில் அடங்கும்) அதிக வித்தியாசமில்லாமல் போகவே, இணையம் என்பது பல நூறு கோடி கணினிகளின் அரட்டை அரங்கமாக இன்று மாறியுள்ளது. செல்பேசி மற்றும் கணினி அரட்டைகள் போதாதென்று இன்னும் பல நூறு கோடி கருவிகள் இணையத்தில் அரட்டை நிகழ்த்தப் போகின்றன என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பு. இன்றைய இணையம் நாம் திரும்பி நகைக்கும் 1990 –களில் உருவான இணையம் போல இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் தோன்றும்! சில மதிப்பீடுகளின்படி, 2020 –களில் 2,600 கோடி கருவிகள் இணையத்தில் விளையாடும் என்கிறார்கள். 850 கோடி மனிதர்களுக்கு எப்படி 2,600 கோடிக் கருவிகள் இருக்கும்? ஏதோ உதைப்பது போல இருக்கிறதா? இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்ப்பதைப் போல வளர்ந்தால், இதில் வியக்க ஏதுமில்லை. ஒவ்வொரு தொழிற்சாலையும், ஒவ்வொரு வீடும், மருத்துவ மனையும், பள்ளியும், வாகனமும், இத்தகைய இணைய அரட்டைக் கருவிகளை (ஓவ்வொன்றுக்கும் தலா பல கருவிகள்) கொண்டு வேலை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.
கீழே உள்ள யுடியூப் விடியோவில், இவ்வகை கருவிகளின் இணையத்தின் வீச்சை அழகாக சொல்லியுள்ளார்கள். இவை யாவும் என்னவோ இன்னும் 30 வருடங்கள் கழித்து நிகழும் போலத் தோன்றினாலும், முன்னமே சொன்னது போல, இவற்றின் சாத்தியம் 5 முதல் 10 ஆண்டுகளில் என்று நம்ப பல சாட்சியங்கள் இன்றே இருக்கிறது. பல புதிய பொருட்கள் இந்த எதிர்காலத்தை நோக்கி இன்றே பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தொடரில், இவ்வகை பொருட்கள் பலவற்றின் அறிமுகம் தரவுள்ளேன்.
இன்று, பல புதிய டிவி –க்கள் இணைய வசதியுடன் வருகின்றன. காரின் ரேடியோ நம் செல்பேசியுடன் புளூடூத்தில் (Bluetooth) இணைகிறது. இது கருவிகளின் இணையம் ஆகுமா? இன்றைய சூழலில், இது உண்மை என்றாலும், இவை மிகவும் எளிமையான ஒருங்கிணைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும், ஒருங்கிணைப்பு, இணையத்துடன் அல்லாமல், சூழலில் உள்ள மற்ற அமைப்புகளோடு (கார் ரேடியோ, டிவி மற்றும் ரெளடர்) தொடர்பு நடக்கிறது. கருவிகள் இணையத்துடன் தொடர்பு கொண்டால் மட்டும் போதாது. முடிவுகளை அந்தந்த சூழலுக்கேற்ப தானே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நமக்கு இக்கருவிகளால் பயன், பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வல்லுனர்களின் எண்ணம்.

இந்த விதக் கருவிகள் எப்படி நம் அன்றாட வாழ்வை பாதிக்கலாம் என்று ஓரளவிற்கு புரிந்து கொள்ள, இன்றைய அன்றாட நிகழ்வு ஒன்றை, முதலில் பார்க்கலாம் (சாதாரண நிகழ்வு என்பதால், சரியான அறுவை என்று இதைத் தாண்டிச் சொல்ல தயவு செய்து முயற்சிக்காதீர்கள்). அதே நிகழ்வுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு (5 முதல் 10 ஆண்டுகளுக்குள்) எப்படி நிகழலாம் என்றும் பார்க்கலாம். கருவிகள் இணையத்துடன் இணைந்து உருவாக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள, இவ்வகை கற்பனை நிகழ்வுகள் உதவலாம்.
முதலில் ஒரு சின்ன பின்னணி. மனோகர், சென்னையில் பெஸண்ட் நகரில் தன்னுடைய மனைவி அகிலா மற்றும் 11 வயது மகள் செல்வியுடன் வசிக்கிறார். அவருக்கு அம்பத்தூரில் ஒரு கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளர் வேலை. அகிலா கிண்டியில் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். செல்விக்கு அடையாரில் பள்ளி.

  1. காலை ஏனோ அலாரம் சரியான நேரத்திற்கு ஒலித்தும் நாங்கள் எழவில்லை. மீண்டும் அலாரம் அலரவே (இதனாலே, தமிழில் அலார்ம் என்பது அலாரம் ஆகியதோ?) அடித்துப் பிடித்து, எழுந்து கொண்டோம். மணி 6:45 –ஐத் தொட்டு விட்டது. செல்வியை எழுப்புவதற்குள், மணி 7:00 ஆகிவிட்டது
  2. வழக்கமான காலை அவசரக் குளியல், செல்வியை தயார் செய்தல் எல்லாம் முடிந்து, டோஸ்டரில் கரிந்த ரொட்டியுடன் போராடி, எப்படியோ அகிலா காலை உணவை காப்பியுடன் 7:45 -க்குள் தயார் செய்து விட்டாள். செல்வியை தயார் செய்து, வெளியே கிளம்பும் பொழுது மணி 8:15 ஆகிவிட்டது
  3. காரில், யார் அந்த உதவாக்கரைப் பண்பலை ரேடியோவை அலரவிட்டது? காலை பயணத்தின் பொழுது, மனோகருக்கு கணேஷ் குமரேஷின் வயலின்தான் பிடிக்கும். சி.டி,-க்கு மாற்ற, இன்னும் சில நிமிடங்கள் விரயம்
  4. ஒரு வழியாக, காரை விரட்டி, செல்வியின் பள்ளிக்கு 9:00 மணிக்குள் சென்றடைய வேண்டும். இரண்டு சிக்னல்களைத் தாண்டியவுடன், வழக்கமான வழியில், பிரச்னை. கார்பரேஷன்காரர்கள் ரோட்டை வெட்டிப் பழி வாங்கினார்கள்.
  5. சில குறுக்குச் சாலைகளில் சென்று, பள்ளியை அடைகையில் மணி 8:55 ஆகிவிட்டது, வகுப்பிற்கு ஓடினாள் செல்வி
  6. காரை ஒரு வழியாக அம்பத்தூருக்கு விரட்டி தொழிற்சாலையை அடைகையில் மணி 9:40 ஆகியிருந்த்து. எத்தனை வேக எல்லைமீறல் டிக்கட் கிடைக்குமோ தெரியவில்லை
  7. அலுவலகம் சென்றடைந்தவுடன் அகிலா அழைத்தாள். அவசரமாக கிளம்பியதால், வீட்டைப் பூட்ட மறந்து, மீண்டும் வீடு திரும்பி, பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு அரை மணி நேரம் தாமதம் என்றாள். மாலை செல்வியை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லி வைத்தாள்
  8. வழக்கமான சில மின்னஞ்சல்களைப் பார்த்து முடித்து, 10:00 மணிக்கு, அன்றாட உற்பத்தி மீட்டிங். எங்கள் நிறுவனத்துக்கு, பூனே அருகில் இன்னொரு தொழிற்சாலையும் உண்டு, அன்று, பூனேயின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிடக் குறைவு. 1:00 மணிக்கு பூனேயில் என்ன பிரச்னை என்று அலசி, மேலிடத்திற்கு விளக்க வேண்டும்.
    சென்னையின் உற்பத்தி விவரங்களை ஆராய்ந்ததில், சரியாக இருந்தது போலதான் தோன்றியது, சென்னையிலும் பிரச்னை இருந்தால் என்னவாகியிருக்கும் என்று சில நொடிகள் ஒரு கவலை வந்து மறைந்தது
  9. மதியம் 1:00 மணி மீட்டிங்கில், ஒரு அழுத்தும் எந்திரம் (pneumatic press) சில நாட்களாகவே சரியாக வேலை செய்யாமல், பழுதாகியிருப்பது தெரியவந்தது. அதை சரி செய்ய 1 வாரம் ஆகும் என்றும், அதற்கான உதிரி பாகம் ஜப்பானிலிருந்து வர வேண்டும் என்றும் சொன்னார்கள். இன்னும் 1 மாதத்திற்கு அனைவரும் தாளிக்கப் படுவது நிச்சயம். விட்டு போன உற்பத்தியை வேறு சரி கட்ட வேண்டும்
  10. மாலை 4:45 –க்கு, காரை என்னுடைய அம்மா தங்கியிருக்கும் மாம்பலத்திற்கு செலுத்தினேன். அம்மாவுக்கு ரத்த அழுத்த நோய். ஓரளவு பார்த்துக் கொண்டாலும், அவ்வப்பொழுது மருந்து சாப்பிடுவதைச் சரியாகச் செய்வதில்லை. அன்று அம்மாவிடம் விசாரித்ததில், மருந்து சரியாக வேலையே செய்வதில்லை என்று குறை பட்டுக் கொண்டிருந்தார். மேலும், மாலை 4:00 மணி முதல், சற்று தலை சுற்றுவதாகவும் சொன்னார்.
  11. மாலை 7:00 மணி வரை அம்மாவுடன் இருந்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பி அடையாறு அருகில் வருகையில், டி.நகரில் எப்பொழுதும் வாங்கும் காப்பி பொடி, மற்றும் சில திண்பண்டங்கள் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டை அடைந்தார் மனோகர்
  12. செல்வியின் நாள் எப்படி இருந்தது என்று அம்மா வீட்டில் இருந்த பொழுதே அவள் செல்பேசியில் சொன்னாள். இரவு உணவின் பொழுது, அவளது பள்ளி நாளின் விவரங்கள் மேலும் சொன்னாள். அவளுடைய டீச்சர் அவள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை என்றும் சொன்னாள்

அடுத்த பகுதியில், இதே நிகழ்வுகள், எப்படி கருவி இணைய மயமான உலகில் நடக்கும் என்று பார்ப்போம்.

One Reply to “கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை”

Leave a Reply to dhinakarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.