பீமாயணம் – தீண்டாமையின் அனுபவங்கள்

மொழியை மீறி படைப்புடன் நெருக்கமாக உணரக்கூடிய காட்சி ஊடகங்களின் காலம் இது. காட்சி ஊடகங்களுக்கு இணையாகவோ, சில சமயம் அதைவிட ஆழமாகவோ மனித உணர்வுகளைக் காட்டும் சித்திரப்புத்தகங்கள் வெளியாகின்றன. ‘குற்றமும் தண்டனையும்’, ‘மோபி டிக்’ போன்ற பல பிரபல செவ்வியலாக்கங்கள் சித்திரப் புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ‘மாங்கா’ வகை புத்தகங்களும் தனித்துவமான அடையாளத்தோடு பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்டிருக்கிறது. காமிக்ஸ் வகைப் படக்கதைகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்படும் சித்திரக்கதையின் அமைப்புகள் சமீப காலங்களில் பலவித பரிமாணங்களை எடுத்துள்ளன. காவியங்களும், செவ்வியல்களும் பண்பாட்டின் சாராம்சமான விழுமியங்களிலிருந்து எழுவதைப் போல இதுகாறும் குரலற்றவர்களுக்கு நவீனயியல் பிரத்யேகமான அடையாளத்தைத் தந்திருக்கிறது. ஜனத்திரளில் உள்ள ஒவ்வொரு அடையாளத்திலிருந்தும் தனித்தனி விழுமியங்களின் தொகுப்பை பிரதிநிதித்துவம் செய்யும்போக்கு தற்சமயம் பரவலாகிறது. தலித் இலக்கியம், பெண்ணியப் படைப்புகள் என பலவித நுண்கலை வகைமாதிரிகள் சமூகத்திரளிலிருந்து உருவாகுகின்றன. இந்த முத்திரைகளை சம்பந்தப்பட்ட கலைஞர்களும் விமர்சகர்களும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் கூட இவற்றின் தாக்கத்தை ஒதுக்க முடியாது.

beemayanam

அம்பேத்கரின் தீண்டாமை அனுபவங்களைப் பற்றிய பீமாயணம் எனும் சித்திரப் புத்தகம் மத்திய இந்தியாவின் பிரதான் கோண்ட் கலை எனும் வகைமாதிரியின் அடிப்படையில் உருவானது. ஒரு விழுமியத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஆளுமையை உணர்த்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியும் அதே விழுமியத்தைக் கொண்டிருப்பது இந்த புத்தகத்தின் முதல் ஆச்சரியம். மேற்சொன்னதை முழுவதுமாக விளக்கிக்கொள்ள பிரதான் கோண்ட் கலை பற்றிய அறிதல் அவசியமாகிறது.

பிரதான் கோண்ட் என்பவர்கள் மத்திய இந்தியாவின் கோண்ட் ஆதிவாசி இனக் குழுவின் ஒரு வம்சத்தினர். இவர்கள் குடும்ப வரலாறுகளை நினைவில் வைத்துக்கொண்டு, புராணக்கதைகள், புனிதக் கதைகள், வாய்மொழி வரலாறு ஆகியவற்றைப் பாடல்கள் மூலமும் கதைகள் மூலமும் கற்பிப்பவர்கள். ஒரு காலத்தில் கற்பித்து வந்தவர்கள். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களாக இருக்கும் குழுவினர் சமூகத்தில் பல வேலைகளைச் செய்து வந்தார்கள். தச்சு வேலைக்காரர்கள், நாட்டுப்புற பூசாரிகள் எனச் சமூகத்தின் அடிமட்ட வேலைகளில் பரவியிருந்தனர். காலப்போக்கில் அவர்களது கலைவெளிப்பாட்டு வெளி முழுவதும் வாழ்வாதாரத்துக்காகத் துறக்கப்பட்டது. 1980களின் தொடக்கத்தில் ஓவியர் ஜகதீஷ் சுவாமிநாதன் (புதிதாகத் தொடங்கப்பட்ட சார்லஸ் கொர்ரியா வடிவமைத்த பாரத் பவனின் அப்போதைய இயக்குநர்) மத்தியப் பிரதேச கிராமங்களுக்குக் கலைகளை இனங்காண்போரை அனுப்பினார். அவர்களில் ஒருவர் கடைகோடிப் பட்டன்கரில் ஜங்கர் சிங் ஷ்யாமின் திறனை அடையாளம் கண்டார். ஜங்கரின் மேதைமையை அடையாளம் கண்ட சுவாமிநாதன் தொழில்முறை ஓவியராக ஆவதற்கு அவர்க்கு ஊக்கமளித்தார். அதிலிருந்து பர்தான் கோண்ட்கள் பலரும் அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றினார்கள்.

சித்திர புத்தகத்தின் பின்னுரையில் கொடுக்கப்பட்டது போல, ‘இவ்வாறாகப் பர்த்தான் பாடல்களும் வாய்மொழி மரபுகளும், பல நூற்றாண்டுகளாகப் பானாவுடன் (ஒரு புனிதமான ஃபிடில் வாத்தியம்) சேர்ந்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளும் காகிதத்திலும் படுதாவிலும், முக்கியமான சுவர்ச் சித்திரங்களிலும் நுட்பமாக விளக்கிக் காட்டப்பட்டன. மத்தியப் பிரதேச சட்டமன்றக் கட்டிடத்தின்  முகப்பிலும், பாரத் பவனின் கவிகை மாடத்திலும் உள்ளவை போன்று’.

IMG_8417பர்தான் கோண்ட் ஓவிய மரபைக் கொண்டு அம்பேத்கர் சரித்திரத்தை வரையத் தொடங்கும்போது ஒரு கதைப் படச் சாயலில் இருந்ததோடு விலை கொடுத்து வாங்க முடியாத 400 பக்கங்களில் இருந்ததாம். மரபான சட்டகங்களை உடைக்கப் பார்த்த அம்பேத்கரின் சிந்தனைகளை சித்திரச் சட்டகங்களில் அடைக்கக்கூடாது என முடிவு செய்ததும் ‘டிக்னா’ வகை வடிவங்களைப் பயன்படுத்தலாம் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். கோண்ட் வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் உபயோகிக்கப்படும் மங்களமான பாரம்பரியச் சித்திர வடிவங்கள் அவை. இதுதான் பீமாயணம் கதையில் உபயோகிக்கப்பட்டுள்ள வடிவம்.

பர்தான் கோண்ட் கலையில் நகர்புற விஷயங்களைக் கொண்டிவரும்போதுகூட விலங்குகளும், பறவைகளும், மரங்களும் வான் விளிம்பற்ற காட்சிகளில் அந்தரத்தில் இருந்தன. ரயில் பாம்பாகிறது. அச்சுறுத்தும் கோட்டை சிங்கமாகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை வரவேற்கும் மக்களுடைய மகிழ்ச்சியானது சிரிக்கும் முகங்களாக அல்லாமல் நடனமாடும் மயிலாக இருக்கின்றன. ஒரு தலித், ஒரு கிணற்றைத் தோண்டியதற்காக கொலை செய்யப்பட்டதும், இரண்டு பசுக்கள் சாட்சியாக இருக்க அவன் பயன்படுத்திய புல்டோசர் அழுகிறது. வீடு வாசலற்ற அம்பேத்கர் பரோடாவின் தோட்டத்தில் தன் தலைவிதியை ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் தோட்டமாக ஆகிவிடுகிறார்.

IMG_8416அம்பேத்கர் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இங்கு குறியீடுகளாக மாறிவிடுகின்றன. தண்ணீர், உறைவிடம், பயணம் என மூன்று தலைப்புகளில் அம்பேத்கர் தீண்டாமையை சந்தித்த அனுபவங்கள் பதிவாகின்றன. சித்திரங்கள் எதுவும் சதுரச் சட்டகங்களில் அடைபடவில்லை. கதையின் போக்குப்படி சில படங்கள் முழு பக்கங்களைக் கூட ஆக்கிரமிக்கின்றன. பேசுவது, சிந்திப்பது போன்ற சித்திரங்கள் வழக்கமான பாணியில் அல்லாது கருத்தின் தன்மையைப் பொருத்து அமைந்திருக்கிறது. பலவந்தமாக மனித விரோதக் கருத்தைப் பேசுபவர்களது பேச்சு தேள் கொடுக்கைப் போலவும், பிறரது சிந்தனைகளை அன்னத்தின் வடிவிலும் சித்தரித்துள்ளனர். மனித உருவங்களுள் விலங்குகளும், மரங்களும், நிலங்களும் அரூபமாகக் காட்சியின் இயல்பைத் தக்கவைக்கின்றன. குடிக்கக் தண்ணீர் கொடுக்க மறுக்கும் சதாரா நகரப் பள்ளிக்கூடம் சிறுவன் அம்பேத்கருக்குப் பாலைவனம் போலக் காட்சியளிக்கிறது. கோரேகான் பகுதியில் அணை கட்டும் அவரது அப்பாவின் காட்சிகள் முரண்நகை போலத் துருத்திக் காட்டப்பட்டுள்ளன. பாரிஸ்டர் படிப்பு முடித்த பின்னால், தண்ணீர் கொடுக்க மறுத்த சதாரா கிராமத்தில் பேசத் தொடங்கியதும் தீண்டத்தகாத மக்கள் கூட்டம் கூடியதை மீன்களின் அணிவகுப்பு போல அமைத்தது அந்தக் காட்சியின் தீவிரத்தைக் காட்டியது. அவரது ஒவ்வொரு சொல்லும் நீர்த் துளிகளாக மக்கள் மீது விழுகிறது. தீண்டத்தகாதவரின் குதிரை வண்டிக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அம்பேத்கரை சுற்றி முட்களற்ற கடிகாரம் சுழல்வதைப் போலக் காட்டியிருப்பதும், பயணம் செய்வதைத் தடுக்கும் முஸல்மான்களைச் சுற்றித்திரியும் கொடூர விலங்குகளின் சித்திரமும் சொல்லவேண்டிய கருத்தை நுண்மையாகச் சுட்டிவிடுகின்றன. அவுரங்காபாத்தில் முஸல்மான்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் மாறும் தலித்துகளும் தீண்டாமையைக் கடைபிடிப்பதைக் காட்டும்போது மானுட மனதின் வக்கிரங்களை கொடூர விலங்குகளாகச் சித்தரித்து ஒரு சக்கரத்தின் பின்புலத்தைக் காட்டியிருப்பது செயலின் ஆழத்தை உணர்த்துகிறது.

அம்பேத்கரின் வாழ்க்கையும் அவரது கருத்துகளை மட்டுமே சித்திரமாக்கியிருந்தால் இக்கால இளையதலைமுறையினரிடன் சென்று சேர்க்க முடியாது என கதையாசிரியர்கள் ஶ்ரீவித்யா நடராஜன், எஸ்.ஆனந்த் இருவருக்கும் தெரிந்திருந்தது. தீண்டாமை அறவே ஒழிந்துவிட்டது எனும் நினைத்திருக்கும் ஒரு இளைய தலைமுறையினர் உரையாடுவது போலக் கதை தொடங்குகிறது. கதை நெடுக ஆங்காங்கே அம்பேத்கரின் சமூக அக்கறைகளைச் சாடியும் ஆதரித்தும் இவர்கள் பேசுகிறார்கள். அண்மைய காலத்தில் தீண்டாமையால் நடக்கும் கொடுமைகளின் செய்திகள் ஆங்காங்கே கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் அம்பேத்கரின் வாழ்க்கைப்பார்வை இன்றும் முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை என்பதை உணர்த்துகிறார்கள். சதாரா, மசூர், பம்பாய், அவுரங்காபாத், மஹாட் சத்தியாகிரகம் என அம்பேத்கரின் வாழ்க்கையில் அவர் போராடிய இடங்களை கதை தொடர்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் எப்படி ஜாதி மேன்மையைக் கடைபிடித்து தீண்டாமையைத் தக்கவைக்கிறார்கள் என்பதற்கு அவரது வாழ்விலிருந்து பல சம்பவங்கள் வருகின்றன. மஹாட் சத்தியாகிரகம் வரை தீண்டாமை விஷயத்தில் இந்து ஜாதியில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் எனப்போராடிய அம்பேத்கர் மெல்ல புத்த மதத்தை நோக்கி நகரும் சித்திரம் மிக உயிர்ப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. சித்திரங்களின் அமைப்புகளும், இளைஞர்களின் விவாதமும், காந்தி-அம்பேத்கர் இருவருக்குமான வாதங்களும் இப்பிரச்சனையின் ஆழத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

வெறுப்பெனும் ஆயுதத்தைக் கைகொள்ளாது மதங்களைப் பகுத்தறிந்து கண்ட விவேகியாக அம்பேத்கர் உருவகப்படுத்தப்படுகிறார். மஹாட் போராட்டம் முடிந்தபின்னும் அவர் மதங்களின் தத்துவத்தேவையை உணர்ந்தவராக இருக்கிறார். நான்கு வர்ணப்பிரிவினையையும், தீண்டப்படாதவர்களை ஒருங்கிணைக்கத் தவறும் குழுக்களின் கருத்துகள் மீது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறார். காலத்தால் முன்னோக்கிய சிந்தனை கொண்டவராக மட்டுமல்லாது, தனி மனித சுதந்திரத்தை நிலைநாட்டவேண்டிய சட்டத்திருத்தங்களைத் தொடர்ந்து வரையறுப்பவராகச் செயல்படுகிறார். சொத்து உரிமை, பெண்களுக்கான சமத்துவம், விவாகரத்து உரிமை போன்ற சட்டத் திருத்தங்களை பிரதிநிதிகளின் குழு ஏற்றுக்கொள்ளாதபோது ராஜினாமா செய்து தீண்டத்தகாத மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடத்தொடங்குவதோடு கதை முடிகிறது.

IMG_8418ஆதிவாசிகளின் பாரம்பரிய வடிவங்களும், சித்திரங்களும் இயற்கைக்கு மிக நெருக்கமானத் தொடர்பு கொண்டவை. இயற்கையில் தெரியும் எல்லையில்லா கருணையும், சீற்றமும், சகிப்புத்தன்மையும் கூடி வரும் சித்திரங்களில் தனிமனித சுதந்திரத்தைப் பற்றிப் பேசியிருப்பது சொல்லப்பட்ட கருத்துகளின் தீவிரத்தை நமக்குக் காட்டுகிறது. யாருடைய அடையாளத்துக்காக, ஒருங்கிணைப்புக்காக வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் பாடுபட்டாரோ அவர்களது பிரதிநிதிகள் கலை வடிவில் அவருக்கு நன்றி தெரிவித்திருப்பது போலத் தோன்றியது. குறியீடுகளால் நிரம்பியுள்ள பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கை சித்திரக்கதை மானுட விசித்திரங்களின் தொகையாக இருப்பதாலேயே அடையாளமற்றவர்களுக்காகக் காலத்தைத் தாண்டி நின்றிருக்கும் எனத் தோன்றுகிறது. தவிர்க்கவியலாது என்றாலும், வாழ்வின் அகண்டாகாரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, காலத்தைத் தாண்டிய சமநிலையின்மை என்பது வரமா சாபமா எனத் தெரியாது கொடுங்கனவு போல நம்மைத் துரத்துகிறது.

தண்ணீரின் இதயம் விசாலமானது. மூலை முடுக்குகளையெல்லாம் அது தொடுகிறது. அதன் தொடுதல் நமது துன்ப வடுக்களை குணமாக்கி மறையச் செய்கிறது. தண்ணீரைச் சுற்றி எத்தகைய சுவர்களை நீங்கள் கட்டினாலும் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை உங்களால் எவ்வாறு சங்கிலி போட்டுத் தடுக்க இயலும்?

– நாம்தேவ் தாஸின் ‘தண்ணீர்’ கவிதை. திலீப் சித்ரேயால் மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. (சித்திரக்கதையில் ஒருவர் கூறுவது போல வரும் கவிதை.

பீம் – அம்பேத்கரின் சிறு வயதுப் பெயர்.

நூல் – பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

காலச்சுவடு வெளியீடு

கலை – துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம்.

கதை ஶ்ரீவித்யா நடராஜன், எஸ்.ஆனந்த்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.