இந்தியச் சிறுகதைகளை இங்கிலீஷ் மூலம் படிப்பது சாத்தியம். ஓரளவு இந்திய இலக்கியம் தமிழரிடையே இன்று பரவி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அது அனேகமாக இங்கிலிஷ் மொழி பெயர்ப்புகள் மூலம்தான் என்று தோன்றுகிறது. தமிழர்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் அத்தனை பரவவில்லை என்று ஒரு குறை அடிக்கடி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் நடுவே பேசப்படுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இங்கிலிஷ் நாவல்கள்- சிறுகதைகளின் தொகுப்புகள், குறிப்பாக துப்பறியும் கதைகள், உளவாளிகள் பற்றிய கதைப் புத்தகங்கள், சாகசக் கதைகள் ஆகியன- தமிழர் நடுவே நிறையவே புழங்குகின்றன. தமிழ் இலக்கியப் புத்தகங்கள் இந்த வகைப் புத்தகங்களின் விற்பனையில் பாதி கூட இராதவை என நாம் கருத இடமுண்டு. இப்படி இருக்கையில் இந்திய மொழி இலக்கியத்தை அந்த மொழிகளிலிருந்தே தமிழுக்கு மாற்றிக் கொணர முயல்வோர் மிகச் சிறு எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அதுவும் அத்தகைய புத்தகங்களைப் பிரசுரிக்க இருக்கும் பிரசுரகர்த்தர்களை ஒரு கை விரல்களில் எண்ணி விடலாமோ என்னவோ.
தமிழர் பொதுவாக ஓரிரு தென்னிந்திய மொழிகளைத் தவிர பெரும்பாலான இந்திய மொழிகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு சாதாரணமான தகவல். மெட்ரோ ரயில் சென்னையில் ஓடத் துவங்கியது பற்றிச் சென்னையில் வெளியான சில செய்தி அறிக்கைகளில் ஒரு பக்கம் கிட்டியது. அதில் பார்த்தால் மெட்ரோ ரயிலில் அறிவிப்புப் பலகைகளில் இங்கிலீஷும், தமிழும் மட்டும் இருந்ததைச் சிலர் கொண்டாடி இருந்தனர். இந்தி இல்லை என்பது இவர்களுக்கு மிகவும் உவப்பளித்திருக்கிறது. ஆனால் 15,000 கோடி ரூபாய்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தான் இந்த ரயில் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்தச் செய்தி அறிக்கை தகவலாக அளித்தது, அது மனதில் சிறிதும் இறங்கவில்லை. வெள்ளைக்காரர்கள் இந்த முதலீட்டை அளித்தனரா என்று கேட்டுப் பார்க்கலாம். அப்போது கூட கேள்வி அவர்களுக்குப் புரியுமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்த இனவெறிப் பாடம் மட்டும் மனதில் தலைமுறை தலைமுறையாக ஊறியிருக்கிறது. அதையே கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பத் தாம் சொல்லுவதைத் தாண்டி, தமிழ்நாடெங்கும் கல்விக் கூடங்களில் கூட, பாடங்களோடு அமுது போல நஞ்சை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த இனவெறிக் கருத்தியலாளர்கள்.
இன்று இந்தியா முழுதும் போய் தொழில் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதோடு, தம் பொருட்களை விற்று லாபம் ஈட்டக் கூடிய தொழில் திறமையோடும் இருக்கிறவர்கள் இந்த நபர்கள். வளங்களை எல்லாம் யாரிடம் இருந்து பெறுகிறோமோ அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள். என்று குறுகிய அரசியல் லாபத்துக்காக, மக்களை மூளை சலவை செய்கின்றனர். ஆனால் யார் வளங்களை எல்லாம் பல நூறாண்டுகள் சுரண்டிச் சென்று வளமான பாரதத்தை ஓட்டாண்டி நாடாக ஆக்கினார்களோ அவர்களே தமிழருக்கு மிக நன்மையானவர்கள், அண்மையானவர்கள். இப்படி ஒரு அருமையான அரசியல் கருத்தியல் தமிழகத்தில் படித்து ஆங்கிலத்தில் உரையாடக் கூடிய அளவு திறமையுள்ள இளைஞர்களிடம் பரவி இருக்கிறது.
இந்தக் கருத்தியலைப் பிரச்சாரம் செய்யும் பெருச்சாளிகளிடம், இந்தியா பூராவும் தொழில் செய்தும், முதலீடு செய்தும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் அளவில் நிதி குவிந்திருக்கிறது. ஊடகங்களிலும் ஏராளமான இடங்களில் இவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டு தகவல் பரப்பையே ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் தமிழகத்தினுள் இவர்கள் பரப்புவது தொடர்ந்து பிரிவினை வாத நச்சும், இனவெறி அரசியலும்.
வெள்ளையரின் இனவெறி வாதப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தாம் பலியானதோடு, அந்தப் பொய்மையை, சூழ்ச்சியைத் தொடர்ந்து கையாண்டு தமிழரைத் தாம் இந்தியாவோடு தொடர்பற்றவர் என்று எண்ணும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். இந்தக் கருத்தியலைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள். உண்மையில் தலைவர்கள் குருடர்களே அல்ல, தமிழ் மக்களைத்தான் குருடர்களாகவே வைத்திருக்கக் கடும் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனாலும் கணிசமான எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் பல மொழிகளில் பேசிப் பழகி வரும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, உர்து, பஞ்சாபி ஆகிய வட அல்லது இதர திசைப் பகுதி மொழிகள் நிறைய தமிழருக்குப் புழக்கம் உள்ள மொழிகளாக இருக்கும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியனவற்றைப் பேசிப் படித்து எழுதக் கூடியவர்கள் ஏராளமானவர் தமிழகத்திலேயே இல்லை என்றாலும் தென்னிந்தியாவில் பரவி இருப்பார்கள்.
இத்தனை லட்சக்கணக்கான தமிழர்கள் நடுவில் பல மொழிப் பழக்கம் இருந்தாலும், அவர்கள் மூலமாக அந்த மொழிகளில் இருந்து தமிழுக்கு மாறி வரும் இலக்கியம் என்பது குறைவாகத்தான் உள்ளது. ஒரு காரணம் தொழில் நிமித்தமோ, பயணங்கள் மேற்கொள்வதாலோ பல மொழிகளை அறியும் தமிழர்கள் அந்த மொழிகளில் சரளமாகப் படித்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. பிறகு எப்படி அவர்கள் அந்த மொழி இலக்கியத்தைப் படித்து அதிலிருந்து சிறந்தவற்றைப் பொறுக்கி எடுத்து மொழி பெயர்த்துத் தமிழில் கொடுக்கப் போகிறார்கள்?
சாஹித்ய அகதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற இந்திய அரசின் அமைப்புகள் மூலம் நமக்குப் பல இந்திய மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட பல நூறு புத்தகங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் கிட்டி வந்திருக்கின்றன என்றாலும் விற்பனை என்று பார்த்தால் அவற்றின் அளவு மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி இதைச் சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்புவோருக்கு, நேஷனல் புக் ட்ரஸ்டின் கடையொன்று சென்னையில் காலேஜ் ரோட் எனப்படும் ஒரு சாலையில் பல மாநில அரசு அலுவலகங்கள் உள்ள கட்டிடங்களிடையே இப்போது இயங்குகிறது, அந்தக் கடைக்குச் சென்று பார்த்தீர்களா என்றுதான் நான் கேட்பேன். அப்படிப் போனீர்களானால், அங்கு கிட்டும் பல புத்தகங்கள் எத்தனை பத்தாண்டுகளாக விற்பனை ஆகாமல் இருக்கின்றன என்பது உடனே தெரியும். பெரும்பாலானவை முதல் பதிப்பையே இன்னும் விற்று முடிக்காத நிலையில் உள்ளவை.
இந்த வருடத் துவக்க மாதமொன்றில் நான் அங்கு சென்ற போது புதையல் ஒன்றைக் கண்ட கிளர்ச்சி எனக்கு எழுந்தது. அத்தனை அருமையான எழுத்தாளர்களின் புத்தகங்கள் அங்கு கிடைத்தன. இப்படி மொழி பெயர்ப்பு இலக்கியம் என்பது இந்த அமைப்பில் கிட்டும் என்பது எனக்கு சுமாராக முன்பே தெரிந்திருந்தது, ஆனால் கண்காட்சிகளில்தான் இந்த அமைப்பின் கடைகளைப் பார்த்து அங்கு சில புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். ஆனால் இந்த அமைப்பின் கடையைத் தேடிச் செல்ல அதிகம் உந்துதல் இருந்ததில்லை. இந்த முறை அப்படி ஒரு உந்துதல் வந்து தேடிப் போனதில் மிக நல்ல பலன் கிட்டியது. அங்கு இருந்த பல மொழிகளின் எழுத்தாளர்களைப் பற்றி நான் அதிகம் அறியாதிருந்தேன் என்றாலும், பெயர்களை அங்கும் இங்கும் கேட்ட நினைவிருந்தது.
பல மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் ஆகியன 80கள், 90கள், ’00 கள் ஆகிய வருடங்களில் முதலில் வெளியானவை இன்னும் விற்றுத் தீராமல் இந்தக் கடையில் காணக் கிட்டின. நேஷனல் புக் ட்ரஸ்ட் ஒரு அரசு அமைப்பு என்பதால், இந்தப் புத்தகங்கள் வெளியான வருடம் என்ன விலையில் விற்க முன் வைக்கப்பட்டனவோ அதே விலைக்கு இன்று கிட்டுகின்றன. 80, 90களில் பிரசுரமான புத்தகங்கள், பல நூறு பக்கங்கள் கொண்டவை, 100 ரூபாய்க்கும் கீழான விலையில் கிட்டுகின்றன. ஒரு வாரப் பத்திரிகை 30 ரூபாய், 45 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலையில் இன்று இருக்கும் நாம், இந்தப் புத்தகங்களை அப்படியே அள்ளிக் கொண்டு வந்தால் கூட நமக்கு மொத்தமும் லாபம் போலத் தெரியும். அப்படித்தான் நான் பல புத்தகங்களை வாங்கி வந்தேன். ஆனால் இவற்றை வாங்கத்தான் ஆட்கள் இல்லை.
அனேகமாக எல்லா மொழிகளிலிருந்தும் புத்தகங்கள் விற்காமல் இருந்ததைப் பார்க்கையில் தமிழர் பிற மொழி இலக்கியத்தை அலட்சியம் செய்வதில் மொழிகளிடையே பார பட்சம் பார்க்காமல் அலட்சியம் செய்கிறார்கள் என்று தெரிந்தது. சில தமிழ் எழுத்தாளர்களைக் கேட்டால், சென்னையில் புத்தகக் கடைகளில் பார்வையிட்டால், அவர்கள் தமிழ் இலக்கியத்தையுமே அப்படித்தான் அலட்சியம் செய்கிறார்கள், பரபரப்பாக எழுதும் சில எழுத்தாளர்கள், அல்லது காட்சி ஊடகங்களில் அடிக்கடி தென்பட்டு அவர்களுக்குப் பரிச்சயமானவர்களைத் தவிர பிறரை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மைதான் என்பது சென்னையில் இருக்கும் சில புத்தகக் கடைகளைப் பார்வையிட்டால் தெரியும். இத்தனைக்கும் இந்தப் புத்தகக் கடைகள் அப்படி ஒன்றும் முகவரி தெரியாத இண்டு இடுக்குத் தெருக்களில் இல்லை. பெரும் சாலைகளில் இருப்பவைதான். ஒன்று தியாகராய நகரிலேயே மையச் சாலையொன்றில் உள்ள கடை. அதிலும் பிற புத்தகக் கடைகளிலும், பழுப்பேறும் பல நூறு புத்தகங்களை- கதை, கவிதைத்தொகுப்புகள், நாவல்கள் ஆகியனவற்றைப் பார்க்கலாம்.
இந்தக் கருத்தும் ஏதோ புதிய கருத்து அல்ல. இதைப் பல எழுத்தாளர்கள் பல கூட்டங்களில் பேசித்தான் வருகிறார்கள். சமீபத்தில் பாஸ்டன் நகர்ப்பகுதிக்கு வருகை தந்த திரு.ஜெயமோகன், அவர் பேசிய கூட்டமொன்றில் இந்தக் கருத்தை வெளியிட்டதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதையும், ஆனால் அவர்களுக்கு உண்மையில் பல திறமையான எழுத்தாளர்களின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை என்பதையும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்த சிலர் பதிவு செய்த ஒரு கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். இந்தக் கருத்தைத் திரு.ஜெயமோகன் பல வருடங்களாகப் பல இடங்களில் பேசி வருகிறார் என்று நமக்குத் தெரியும்.
ஆனால் வருடாவருடம் சென்னையில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பதாகவும் செய்தி நமக்குக் கிட்டுகிறது. அவை அனேகமாக இலக்கியப் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நமக்கு எளிதில் புரியாத ஒரு விஷயம். இத்தனைக்கும் தமிழில் இன்றும், நேற்றும் எழுதிய இலக்கியாளர்கள் அப்படி ஒன்றும் புத்தியைக் கலக்கும் தீவிரம் கொண்ட எழுத்தை எழுதி வாசகர்களை அயர்த்துபவர்கள் இல்லை. ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவெல் பெக்கெட், யூஜீன் இயானெஸ்கோ, ஃப்லோபேர் அல்லது கார்ல் ஓவெ க்னௌஸ்கார்ட் போல இயல்பான வாசிப்பைச் சவாலாக ஆக்கித் தருபவர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையே மிக மிகக் குறைவு.
அவர்களில் 90% போல மிகவும் சுலபமாக அணுகக் கூடிய நடையும், வாசகர்களுக்குப் பரிச்சயமான எதார்த்த உலகின் பல பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டும், கதை மாந்தரைக் கொண்டும்தான் இந்த இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இப்படி அன்னியப்பட்டு நிற்க தமிழ் வாசகர்களுக்கு புறக் காரணங்கள் என்று என்ன இருக்கின்றன எனப் பார்க்கலாம். தமிழ் சினிமா, மது, இதர போதைப்பழக்கங்களுக்குத் தமிழர் செலவழிக்கும் தொகைகளோடு ஒப்பிட்டால் புத்தகங்களுக்கு ஆகக் கூடிய செலவு மிகக் குறைவானது. இந்த வகை நுகர்வுக்குப் பின்னால் கையில் எதுவும் எஞ்சாது, ஆனால் புத்தகங்களோ பல பத்தாண்டுகளுக்கு ஒரு சொத்தாக வீட்டில் இருக்கக் கூடியவை. தலைமுறைகளுக்குக் கை மாற்றிக் கொடுக்கப்படக் கூடியவை. தவிர திரும்பத் திரும்ப வாசிக்கவும், நம் உளநிலைகளை மாற்றவும் பெரும் வாய்ப்புகளாக வீட்டிலேயே, கண்ணெதிரிலேயே இருந்து வளம் கொடுக்கக் கூடியவை. ஆனால் அவை அப்படி அங்கீகரிக்கப்படாமல் பெருவாரி மக்களால் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பது ஒரு விசித்திரம்தான்.
இப்புத்தகங்கள் கிட்டாத இடங்களில் இருக்கின்றனவா என்று பார்த்தால் அப்படியும் இராது. அனேக ஊர்களில் ஒரு நல்ல புத்தகக் கடையையாவது கண்டு பிடித்து விட முடியும். அப்படியே இல்லை என்றாலும் இன்று வலையில் புத்தகங்களை அடைய முடிகிறது. ஏன் எலெக்ட்ரானிக் சாதனங்களில் தரவிறக்கிக் கூடப் புத்தகங்களைச் சேமித்து வைத்துப் படிக்கவும் வசதி பெருகி வருகிறது. இவை எல்லாமும் கூட, பெருகி விட்ட மக்கள் திரளின் எண்ணிக்கை, மக்கள் நடுவே பெருகி இருக்கிற கல்வியின் அளவு, தரம் ஆகியனவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால் வாசிப்பவர்களின் பங்கு மிகக் குறைவாகத்தான் உள்ளதாகத் தோன்றுகிறது. இன்னும் நல்ல இலக்கியப் புத்தகங்கள் ஒரு ஆயிரம் பிரதி கூட விற்பதில்லை.
புத்தகக் கண்காட்சிகளில் லட்சக்கணக்கானோர் வந்து போகிறார்கள்- அதுவும் ஒரு நகரத்தில் மட்டுமே. 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு சுமார் 25 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். வந்தவர்களில் ஒரே ஒரு சதவீதத்தினர் தமிழில் நவீன இலக்கியப் புத்தக வாசகர்களாக இருந்தால் கூட, ஏதாவது ஒரு இலக்கியப் புத்தகமாவது 10,000 அல்லது 20,000 பிரதிகள் அங்கு விற்றிருக்கக் கூடும். [பொன்னியின் செல்வன் 20,000 பிரதிகள் விற்றதே என்று யாராவது சொல்லத் துவங்காமல் இருந்தால் நல்லது.] ஆனால் இலக்கியப் புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் கூட விற்பதில்லை என்று பிரசுரகர்த்தர்கள் சொல்கிறார்கள். இதை எப்படிப் பார்ப்பது? எது வாசகர்களை இந்த வகை எழுத்தை, இலக்கியத்தைப் படிக்கத் தேவை இல்லை என்று விலக்கி நிறுத்துகிறது?
இலக்கியப் புத்தகங்களைத் தவிர்க்க ஏதும் அகக் காரணங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். இக்கட்டுரையைப் படிப்பவர்களிடம் இருந்து ஏதும் மறுவினை கிட்டுகிறதா என்று பார்க்கிறேன்.