புராணங்கள்

18 puranas
புராணங்கள் வேதக்கல்வியின் முக்கியமான பகுதியாய் இருக்கும் நூல்கள். கடந்த காலத்தில் மெய்யாகவே நிகழ்ந்தவை என்று நம்பப்படும் விஷயங்களை விவரிப்பதாலும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான கதைகளையும் சம்பவங்களையும் உயர்ந்த தத்துவ மெய்ப்பாடுகளுடன் இணைத்து அளிப்பதாலும் அவை நவீன காலகட்டத்தில் கதைகள், தொன்மங்கள், உவமைக்கதைகள் என்று பலவாறாக கருதப்படுகின்றன.
புராணம் என்ற சொல், கடந்த காலம் என்று பொருள்படும். கடந்தகாலத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகளைப் பேசுவதாலேயே இப்பெயர். பண்டைய மற்றும் இடைக்கால இந்து சமய வழக்கங்கள், தொன்மங்கள், வரலாறு, புவியியல், அரசவம்சங்கள், அண்டவியல் மற்றும் இலக்கியம் குறித்து அறிஞர்களுக்கும் பாமரர்களுக்கும் விரிவான தகவல்கள் கொண்ட கலைக்களஞ்சியங்களே புராணங்கள்.
புராணங்களின் நோக்கம் மற்றும் நிகழ்காலத் தேவை குறித்து இருவகை பார்வைகள் உள்ளன. வேதங்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களை கதைகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் விளக்குவதுதான் புராணங்களின் ஒரே நோக்கம் என்று சொல்பவர்கள் உண்டு. புராணங்கள் பாமரர்களுக்கே உரியன என்று இவர்கள் கருதுகின்றனர்.
இப்பார்வைக்கு மாறாய், பண்டிதர்கள் மற்றும் பாமரர்கள் என்று அனைவருக்கும் உரிய தனி நூல்களே புராணங்கள் என்று சொல்பவர்கள் உண்டு. அண்டத்தில் உள்ள வெவ்வேறு உலகங்கள் பற்றிய நுண்விவரங்கள் கொண்ட விளக்கங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் உள்ள செடியினங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தகவல்கள், பல நூறாண்டுகளாய் தொடரும் பல்வேறு அரசவம்சங்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் என்று பலவும் புராணங்களில் உண்டு. இந்திய அறிவுத்துறை ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் பலருக்கு புராணங்களில் உள்ள தகவல்கள் மிக முக்கியமான வழிகாட்டிகளாக இருக்கின்றன.
புராணங்கள், கடந்தகால சரித்திர நிகழ்வுகளை உள்ளபடியே விவரிக்கும் ஆவணங்கள் என்று நம்புபவர்களும் உள்ளனர்- கடந்தகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாக மத்ஸ்ய புராணத்தில் ஒரு ஸ்லோகம் இருந்தாலும்கூட இந்த நம்பிக்கை ஆதாரபூர்வமானது என்பதை நிறுவுவது மிகக் கடினம்.
மகாபுராணங்கள், உபபுராணங்கள் என்று இருவகையில் புராணங்கள் பகுக்கப்படுகின்றன. பதினெட்டு மகாபுராணங்களும் பதினெட்டு உபபுராணங்களும் உண்டு. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு தெய்வத்தைப் பிரதானப்படுத்துகிறது. பதினெட்டு மகாபுராணங்களையும் தொகுத்தால் மொத்தம் 4,00,000 கிரந்தங்கள் அல்லது செய்யுள்கள் இருக்கும்.
இந்த எண்ணிக்கை குறித்து சுவையான ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. பதினெட்டு புராணங்களும் வேத வியாசரால் தனியாய் எழுதப்படவில்லை. முதலில் ஒரு கோடி கிரந்தங்கள் கொண்ட ஒரே ஒரு புராணம்தான் இருந்தது. துவாபர யுக மக்கள் அது அத்தனையையும் அறிந்துகொள்ள சிரமப்படுவதைப் பார்த்த இறைவன் வேத வியாசரிடம் அவற்றை பதினெட்டு பகுதிகளாக நான்கு லட்சம் கிரந்தங்களில் சுருக்கச் சொன்னார். இந்த பதினெட்டு பகுதிகளும் பதினெட்டு புராணங்களாக அறியப்படுகின்றன..
இது தவிர பிற்காலத்தில் வேறொரு தனி பகுப்பும் செய்யப்பட்டது. அதன்படி பதினெட்டு மகாபுராணங்களும் ஆறு புராணங்களைக் கொண்ட மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன. இயற்கையில் உள்ள சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு ஏற்ப இந்த மூன்று தொகுதிகளும் அமைக்கப்பட்டன.
நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றை வலியுறுத்தினாலும் புராணங்கள் ஐந்து விஷயங்களை முதன்மையாய் பேசுகின்றன.

 1. சர்க்கம் அல்லது ஆதார சிருஷ்டி
 2. பிரதி- சர்க்கம் – இரண்டாம் நிலை சிருஷ்டியும் பிரளயமும்
 3. வம்சம் – தெய்வங்கள் மற்றும் அரசர்களின் வம்சாவளி
 4. மன்வந்தரம் – மனுவின் ஆட்சிக் காலங்கள்
 5. வம்சானுசரிதம் – அரச குடும்பங்களின் வரலாறு

வேதங்களில் மிகச் சுருக்கமாகவும் மறையீடாகவும் கூறப்பட்டுள்ள தத்துவங்களை விரிவாக எடுத்துரைப்பதுதான் புராணங்களின் மிக முக்கியமான நோக்கம். வேதம் பயில்பவர்கள் உயர்ந்த உண்மைகளை எளிதில் புரிந்து கொண்டு வாழ்நாள் முழுதும் நினைவில் கொள்ள புராணங்கள் உதவுகின்றன.
வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள தத்துவங்களின் உண்மையான உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோது புராணங்கள் அவற்றின் விளக்கமாய் இருக்கின்றன- வரலாற்று நிகழ்ச்சிகள் மற்றும் கதைகளைக் கொண்டு தத்துவ விளக்கத்தை புராணங்கள் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ‘சத்யம் வத’, உண்மையே பேசு என்கிறது வேதம். புராணங்களும் இதிகாசங்களும் அரிச்சந்திரன் கதை போன்றவற்றைக் கொண்டு ரத்தினச் சுருக்கமாய் உள்ள இந்த வேதவாக்கின் உட்பொருளை முழுமையாய் உணர்த்துகின்றன.
பதினெட்டு மகாபுராணங்கள் மற்றும் பதினெட்டு உபபுராணங்கள் தவிர, ஸ்தல புராணங்களும் உண்டு- ஒரு குறிப்பிட்ட தலத்தின் பெருமையை விவரிக்கும் வரலாறுகள் இவை. பல்வேறு தெய்வபக்தர்களின் கதையை விவரிக்கும் சிறு புராணங்களும் உண்டு. இவற்றில் சில நம்மிடையே பரவலாக அறியப்பட்டுள்ள ஸ்லோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களில் பயிலப்படுகின்றன. இந்த ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் மகாபுராணங்கள் மற்றும் உபபுராணங்களில் உள்ளன, இவை தவிர வேறு சில தனிநூல்களாகவும் உண்டு.
பதினெட்டு மகாபுராணங்கள் இவை-
1) பிரம்ம புராணம்
2) விஷ்ணு புராணம்
3) பத்ம புராணம்
4) சிவ புராணம்
5) ஸ்ரீமத் பாகவத மகாபுராணம்
6) நாரத புராணம்
7) மார்க்கண்டேய புராணம்
8) அக்னி புராணம்
9) பவிஷ்ய புராணம்
10) பிரம்ம வைவர்த்த புராணம்
11) லிங்க புராணம்
12) வராக புராணம்
13) ஸ்கந்த மகாபுராணம்
14) விமான புராணம்
15) கூர்ம புராணம்
16) மத்ஸ்ய புராணம்
17) கருட புராணம்
18) பிரம்மாண்ட புராணம்
பதினெட்டு உபபுராணங்கள் இவை. ஆனால் வெவ்வேறு நூல்களில், வெவ்வேறு பிராந்தியங்களில் இவை மாறுபடலாம்

 • 1) சனத்குமார புராணம்
 • 2) நரசிம்ம புராணம்
 • 3) நாரதீய புராணம்
 • 4) சிவதர்ம புராணம்
 • 5) துர்வாச புராணம்
 • 6) கபில புராணம்
 • 7) மானவ புராணம்
 • 8) உஷானஸ புராணம்
 • 9) வருண புராணம்
 • 10) காளிக புராணம்
 • 11) சாம்ப புராணம்
 • 12) சௌர புராணம்
 • 13) ஆதித்ய புராணம்
 • 14) மகேச்வர புராணம்
 • 15) தேவி பாகவதம்
 • 16) வசிஷ்ட புராணம்
 • 17) விஷ்ணு தர்மோத்தாரண புராணம்
 • 18) நிலாமத புராணம்

0 Replies to “புராணங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.