கொடும்பாலையில் மறுபடி துளிர்க்கும் ஜோராஸ்ட்ரியனியம்

Women_Fighters_Females_She_Army_Iraq_Kurdish_Army_Lady_Militayr

பல நூறாண்டுகள் முன்பு பர்சியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட சில ஆயிரம் பர்சியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள். அவர்களைத் துரத்தியது ஒரு செமிதிய மதத்தின் பரவல், வன்முறை.
உலகின் இரு பெரும் செமிதிய மதங்கள் சகிப்புத்தன்மை அற்றவை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றில் ஒன்று, இப்போது காருண்யம் என்பதே உலகுக்குத் தான் அளித்த கொடைதான் என்று பாவலா செய்து உலகரங்கில் தொடர்ந்து பெரும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய பிம்பம் நிலவத் தேவையான ஊடகப் பிரச்சாரங்கள், உலகைக் கொள்ளை அடித்துக் கொழுத்த செல்வந்த நாடுகளான யூரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் பாகனியத்தைப் பூண்டோடு அழிக்கத் தன் பிரச்சாரகர்கள் மூலம் பொய்களே நிறைந்த பிரச்சாரங்கள் என்று எல்லா வகை முயற்சிகளையும் செய்து வருகிறது.
இன்னொன்று துவக்கத்திலிருந்தே கத்தியை, பெருங்கொலைகளை, ஆக்கிரமிப்பை, போரை, வன்முறையை நம்பி உலகெங்கும் பரவி இருக்கிறது, இன்றும் அதே வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, வெற்றி பெற்ற போர்த்தந்திரத்தை எதற்காகக் கைவிட வேண்டும் இல்லையா?
இதன் யுத்தக் களம் நெடுநாட்களாக ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளாக இருந்தது, யூரோப்பில் இதன் பாச்சா பலிக்காமல் இருந்தது. சமீபத்தில் இதன் மைய நாடுகளில் ஏற்பட்டிருக்கிற கடும் குழப்பம், இதனுட் பிரிவுகளிடையே ஏற்பட்டிருக்கிற கடும் குரோதங்களின் விளைவாக நெடுக நடக்கும் போர்கள், பேரழிப்புகள், இனப்படுகொலைகள் இத்தனைக்கும் நடுவே இந்த மதம் தன்னை அமைதி மார்க்கம் என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்வது நகைப்பு சிறிதும் கொணராத முரண்.
இரு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் உலகெங்கும் தாமே மோசமாகத் தாக்கப்படுவதாகவும், தம் குழுவினரை அழிக்கவே எல்லா நாடுகளிலும் பெரும் சூழ்ச்சி நடப்பதாகவும் ஒரு பீதி, மனப்பிராந்தி நிலவுவதாகவும் நமக்குத் தெரிய வரும். அல்லது அப்படி தொடர்ந்து ஓலமிடுவது நல்லது என்ற அணுகல்- இவற்றில் எத்தனை மடங்கு போர்த்தந்திரம், எத்தனை நிஜமான குழப்பம் நிறைந்த மனப்பாங்கு என்பது புரியாத நிலையில் இதர மக்களை வைத்திருப்பது ஒரு சாதகமான விளைவு என்று இம்மதக்குழுக்களைச் சார்ந்தவருக்கு பன்னெடுங்காலமாகத் தெரிந்த விஷயம்தான்.
தொடர்ந்து தம்மைச் சாராத மாற்றுப் பண்பாட்டினரை பின் வாங்க வைக்கவும், தம் மீது பழி விழுமோ என்ற அச்சத்திலேயே அவர்களை வைத்திருப்பதும் அவசியமான நடைமுறைகள் என்பது தொட்டிலிலிருந்தே அம்மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் உத்திகள். இதற்கு இரு மதங்களிலும் அங்கீகாரம் கூட உண்டு- அவசியமானால் என்ன பொய்யும் சொல்லலாம் என்பது ஆமோதிக்கப்பட்ட நடவடிக்கை.
ஆனால் இரண்டு மதங்களிலும் மைய நாடுகள் என்று கருதப்பட்ட நிலங்களில் இன்று இம்மதங்கள் மீது அம்மதத்தினரிடமே அச்சம், நம்பிக்கையின்மை, வெறுப்பு, உதாசீனம், விலகல் தவிர அசூயை ஆகியன வேகமாக வளர்ந்து வருகின்றன.
எத்தனை காலம்தான் மக்கள் பொய்களையே நம்புவார் என்பதில் நம் யாருக்கும் தெளிவு கிடையாது. இந்தியர்கள் பொதுவாக பல நூறாண்டுகளாகப் பெரும் பொய்களையே சந்தித்து வந்திருக்கின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பாரதமெங்கும் அன்னிய ஆட்சியே அனேகமாக நடந்து இந்நாட்டு மக்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு, ஓட்டாண்டிகளாக ஆக்கப்பட்ட பின்னர், அதிசயமாக விடுதலை பெற்று விட்ட பின்னரும், இந்தியாவில் உயர் கல்வி பெற்ற சிறு சதவீதத்தினராக உள்ள சில இந்துக்கள் நடுவே இரண்டு செமிதிய மதங்கள் மீதும் பெரும் நம்பிக்கையும், தம் மதம் மீது வெறுப்பும் நிலவுவதைக் காணும் போது கல்விக்கும், அறிவுக்கும் அதிக சம்பந்தமில்லை என்று நாம் உடனடியாகக் கண்டு பிடித்து விடுவோம்.
அல்லது அடிமைகளாக இருப்பதை உலகில் பல நாட்டு மக்களும் தொடர்ந்து விரும்புவதைப் போலத் தம் பாரம்பரியத்திலிருந்து மனதாலும், புத்தியாலும், வாழ்முறையாலும், கல்வியாலும் விருப்பத்தாலும் முற்றிலும் அன்னியப்பட்டு விட்ட இந்த இந்தியரும் தாம் மறுபடி அடிமைகளாக ஆக மாட்டோமா என்று ஏங்குவதாகவே தெரியும். அத்தனை தூரம் கூறு கெட்ட இந்திய அறிவு சீவிகளைப் பார்த்தால், இந்த நாட்டுக்கு எப்படி விடுதலை கிட்டியது என்று கூட நமக்கு ஐயம் வந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
ஆனால் அமைதி மார்க்கமெனத் தொடர்ந்து தன்னை விளம்பரப்படுத்தும் செமிதிய மதம் மைய நாடுகளில் தம் குழுவினரிடையே நடக்கும் ரத்தக் களரியான போர்களால் தான் வலுப்பெறுவதாக நம்புகிறது. அதல்லவா பரிதாபம். அதில் போய்ச் சேர்ந்து தம் கைகளில் ரத்தக் கறை படிவதைப் புனிதச் செயல் என்று நம்பும் மூடர்கள் இந்தியாவின் படித்த கூட்டத்திலேயே கூட இருப்பதாகத் தெரிகிறது.
இநத ரத்தக் களரியில் சிக்கி அல்லலுற்று, பெரும் சேதங்களை அடைந்து தாம் மானுடராகப் பிறந்ததே தவறோ என்று துக்கிக்கும் நிலையில் வாழும் பல சமூகக் குழுவினருக்கோ இப்படி எல்லாம் மதிமயக்கம் இல்லை. அவர்கள் மாற்று வழி என்ன என்று தீவிரமாகவே தேடத் துவங்கி இருக்கிறார்கள்.
ஈராக்கைச் சார்ந்த குர்து இன மக்களிடையே இத்தகைய தேடல் துவங்கிக் கொஞ்ச காலம் ஆகிறது. அந்த மக்களின் நிலப்பரப்பைச் சுற்றி எங்கும், இனப்படுகொலை இயக்கம் ஒன்று ஈராக்கையும், சிரியாவையும், இதர மேற்காசிய நாடுகளையும் கபளீகரம் செய்யத் துவங்கவும் குர்துக்கள் ஏற்கனவே சத்தாம் ஹுசைனிடம் ஏராளமான தம் மக்கள் சிக்கி மடிந்ததும், துருக்கியரிடம் சிக்கி மடிந்ததும் எல்லாம் போதாதென்று இந்தப் புதுக் கொலைகாரக் கும்பலிடமும் சிக்கி மடிய வேண்டுமா என்று பதட்டத்தில் இருக்கிறார்கள்.
ஆயுதம் தாங்கித் தம்மைப் பாதுகாப்பது அவசியம் என்று தெரிந்து அதைச் செய்கிறார்கள், மேற்காசியாவின் நெடுநாளையப் பண்பாடான பெண்ணடிமைத்தனத்தை விலக்கி, குர்துப் பெண்களை ராணுவத்தில் சேரச் சொல்லி, அவர்களையே போர்முனையில் முதலணியில் இருந்து தாக்குதல் நடத்தவும் விட்டுத் தாம் ஏற்கனவே மேற்காசியாவின் மனப்பாங்கிலிருந்து விலகத் துவங்கி விட்டதை அறிவித்து விட்ட குர்துக்கள், இப்போது உலக வன்முறைகளில் மையசக்தியாகக் கடந்த பல நூறாண்டுகளாக இருந்த, சமீபத்தில் எரிமலையாக உலகெங்கும் வெடித்துப் பெரும் வன்முறையின் மையமாகவும் ஆகி இருக்கிற ஒரு மதத்திலிருந்து விலகத் துவங்கி இருக்கிறார்கள் என்று இந்தச் செய்தி சொல்கிறது.
இந்தப் பத்தியின் துவக்கத்தில் பார்த்தோம், ஈரானிலிருந்து இந்தியாவிற்கு உயிர் தப்ப ஓடி வந்த பாரசீகர்கள் பற்றி. அவர்கள் இன்னும் ஃபார்ஸிகள் என்று பெயரோடு பம்பாயில் அதிகமாகவும், இந்தியாவில் பல வேறு இடங்களிலும் பரவி இருக்கிற ஆனால் மிகச் சிறிய சமூகத்தினர்.
ஜம்ஷெட்ஜி டாட்டா என்பவரின் குடும்பம் இந்தியாவின் பெரும் தொழில்துறையில் பிரக்கியாதி பெற்ற ஒரு குடும்பம், அவர்கள் இந்த ஃபார்ஸி மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள்தாம். இந்துக்களின், இந்தியரின் சகிப்புத்தன்மையைத் தாண்டிய வந்தாரை வரவேற்கும் பரோபகாரச் சிந்தனைக்கு டாட்டா குடும்பத்தினரின் பெரும் செல்வமும் சமூக அந்தஸ்தும் ஒரு அழிக்கவொண்ணாச் சான்று. தாதாபாய் நவ்ரோஜி எனப்படும் முதியவரின் படத்தைப் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் பார்த்திராத, அவருடைய மகத்தான சாதனைகளை, இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து தம் விமர்சனம் மூலம் காலனியத்தின் பெருங்கொள்ளைகளையும், இந்தியாவை பிரிட்டிஷ் அரசு சுரண்டியதன் பயங்கர விளைவுகளையும் சுட்டிக் காட்டிய ஒரு உண்மையான இந்திய தேசியவாதி தாதாபாய் அவர்கள். [2]
ஃபார்ஸிகள் இந்தியாவில் பன்னெடுங்காலமாகத் தமது புராதன மார்க்கமான ஜோராஸ்ட்ரியனியத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். இன்னமும் அது தொடர்கிறது. ஆனால் இந்தியாவில் ஃபார்ஸிகளின் எண்ணிக்கை பெருகவில்லை, அவர்கள் தம் குழுவின் அடையாளத்தை இழக்காமல் காத்து வந்ததோடு, அதற்கு எதிராக எந்த சமூக அழுத்தத்தையும் வன்முறையையும் இந்துக்களிடம் இருந்து காணவில்லை என்பதும் இத்தகைய பாரம்பரியம் தொடர்வதற்கு ஒரு காரணம். எண்ணிக்கை வளராது குறைந்து வந்தாலும் அதற்கு மையக் காரணம், அவர்கள் பிறரோடு கலக்காமல் தம் திருமண உறவுகளைக் குழுவுக்குள் வைத்திருந்ததும், நாளாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பது குறைந்ததும் என்று சொல்லலாம். சிறு அளவே ஃபார்ஸியர்கள் இந்து/ இந்தியரோடு மணந்து இருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஸ்தாபகராகக் கருதப்படும் ஜின்னாவின் இரண்டாம் மனைவி கூட ஒரு ஃபார்ஸி என்று சொல்லப்பட்டு நாம் கேட்டிருக்கலாம். ரட்டன்பாய் என்றழைக்கப்பட்ட இவர் மதம் மாற்றப்பட்ட பின் மரியம் ஜின்னாவானார்.  பிற நாடுகளுக்குப் போன ஃபார்ஸியர்களாலும் ஓரளவு இந்த சமூகத்தின் எண்ணிக்கை இந்தியாவில் இன்று குறைந்திருக்கிறது.
பாரசீகம் (பெர்ஸியா) என்று இருந்த நாடு ஈரான் என்று மாற்றப்பட்ட பின் அங்கிருந்து இந்தியாவுக்குக் குடி பெயரத் தயாராக இருந்த பாரசீகர்கள் அதிகம் இல்லை. எண்ணெய் வளத்தைக் கண்டு பிடித்த பின் ஈரானின் வளம் இந்தியாவை விட அதிகமாகி விட்டிருந்ததும் இதற்கு இன்னொரு காரணம். ‘அமைதி’ மார்க்கத்தின் இரும்புப் பிடியும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
இந்த ஜோராஸ்ட்ரியனியம் உலகெங்கும் மெல்ல நலிந்து சிறு குழு மதமாகி பன்னெடுங்காலமாகி விட்டது. இதற்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து இப்போது மறுபடி நல்ல காலம் துவங்கி இருக்கலாம் என்பது செய்தி.
அமைதி மார்க்கம் கொணரும் அமைதி பெரும் அச்சுறுத்தலாகவே இருப்பதைத் தம் அனுபவத்தில் கண்ட குர்துக்கள் இப்போது ஜோராஸ்ட்ரியனியத்தை மறுபடி நாடத் துவங்கி இருக்கின்றனராம். ஒரு காரணம் ஜோராஸ்ட்ரியனியத்தை நிறுவியவர், இன்றைய ஈரானில் ஒரு பகுதியாக உள்ள குர்துக்களின் நிலப்பரப்பில் பிறந்தவர்தான் என்பதும், அவரும் ஒரு குர்துதான் என்பதும் இருக்கலாம். ஜோராஸ்டர் எனப்பட்ட அந்த நிறுவனர், சுமார் 3500 ஆண்டுகள் முன்பே இந்த மதத்தை நிறுவி இருக்கிறார். உலகின் மிகப்புராதன மதங்களில் இது ஒன்று. ஆக குர்துக்கள் கடைசியில் தம் வேர்களுக்குத் திரும்பத் துவங்கி இருக்கின்றனர்.
மெத்தப் படித்த இந்துக்களில் செமிதியச் சிந்தனையால் பாதிக்கப்பட்டு, வேரறுந்து, உதிரியாகிப் புத்தி சிதறியவர்கள்,  தம் பாரம்பரியத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று தீவிரமாக அலைகிற காலகட்டத்தில் குர்துக்களின் மாற்றுச் சிந்தனை வேகம் பெறுகிறது என்பதை நாம் காண்கிறோம். சூழலில் இன்னும் பெரும்பான்மையினர் சார்ந்திருக்கும் ‘அமைதி மார்க்கம்’ இந்தப் பாதை விலகும் குர்துக்களை அழிக்குமா என்றால், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு ஈராக்கின் அரசும், ஆட்சி செலுத்தும் செமிதிய மதக்குழுவினரும் ஜோராஸ்ட்ரியம் வளர்வதைத் தடை செய்யாமல் விட்டு வைத்திருக்கின்றனர். அதற்கு ஒரு காரணம் குர்துப் படையினரின் வல்லமை என்று நாம் கருத இடமிருக்கிறது. செய்தியைப் படிக்க இங்கே கொடுத்த லிங்கைத் தொடருங்கள்.
http://www.thedailybeast.com/articles/2015/05/31/fed-up-with-islam-and-sectarianism-some-iraqis-embrace-zoroastrianism.html
____________________
1. ஜம்ஷெட்ஜி டாட்டாவின் சாதனைகள் பற்றிய யுட்யூப் விடியோ:

[2] இதர முக்கியமான ஃபார்ஸிகள்: இந்தியர்களுக்கு நன்கு தெரிய வந்த ஜெனரல் சாம் மானெக்‌ஷா – ஆம் வங்கதேசப் போரை வென்று பாகிஸ்தானின் ராணுவத்தை முறியடித்தவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் நாரி காண்ட்ராக்டர், சிறப்பான விக்கெட் கீப்பர் எஃப். எம் . எஞ்சினீயர், இந்தியாவின் அணு சக்தி ஆய்வு நிலையத்தை நிறுவிய ஹோமி ஜஹாங்கிர் பாபா, உலகெங்கும் பிரசித்தி பெற்ற இசை இயக்குநரான ஜூபின் மேத்தா என்று பலரைச் சொல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.