காத்திருக்கும் தனியறை

பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்
கதவின் தொப்புல் முடிச்சில்
வெறித்தபடி தொங்கும்
பூட்டின் கண்வழி
சொட்டுச்சொட்டாய்
ஊறி வடிகிறது
உள்ளிருக்கும் திரவம்
சாவித்துவாரத்தில்
கைகள் தழுவி
நடுங்கும் பொழுதில்
கதவைத் துளைத்துகொண்டு
கட்டிலில்போய் விழுகிறது
எனக்கு முன்பே மனது
நீந்திக்கடந்திட முடியா
நெடுந்தொலைவில் நிற்கின்றன
இந்த அறையின் சுவர்கள்
நினைவில் இருக்கும் வீடோ
நனைந்த அப்பளமாய்
எங்கோ கரை ஒதுங்கியிருக்க வேண்டும்
அலையும் நுரையும்
கலைத்துவிடாத
ஆழத்தில் நிற்கும்
இமைகள் இல்லாத
என் அறையின் சுவர்கள்
உறங்குவதுமில்லை
உறங்க அனுமதிப்பதுமில்லை
திறந்த ஜன்னல்கள் எதிலும்
துளியும் வெளிச்சிந்தாத
இந்த பழந்திரவத்தில்
மதுவின் நெடி வீசுகிறது
இருள்கவிழும் நேரமெல்லாம்
ஏறியபடியே இருக்கும்
இந்த திரவமட்டத்தை
பருகிப் பருகியே
பத்திரப்படுத்துகிறது மனது
ஈரம் கனக்கும்
இந்த மதுவின் சிறையை
அறைந்து சாத்திவிட்டு
வெளியேறக்கூடும் என்றாலும்
நிச்சயம் திரும்புவேன்
காத்திருக்கும்
என் தனியறைக்கு.
– சோழகக்கொண்டல்
oOo
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
