வேதாங்கங்களும் உபவேதங்களும்

சென்ற அத்தியாயத்தில் வேதங்களின் இயல்பையும் நோக்கத்தையும் கண்டோம். வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு அப்படி என்ன முக்கியமான இடம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவை யாருக்குரியவை? அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா? அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா? இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன? இந்தக் கேள்விகளுக்கு இப்படி ஒரு சுருக்கமான பதில் சொல்லலாம்- வேத மந்திரங்கள் அனவைருக்கும் உரியவை. ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாங்கங்களும் உபவேதங்களும் வகுத்திருக்கின்றன. வேதங்களைப் பயன்படுத்தி மேன்மையடைவதற்கான வழிகாட்டிகளாகவும் கருவிகளாகவும் இவ்விரண்டும்  இயங்குகின்றன.

வேதாங்கங்கள்

வேதாங்கங்கள் – வேத அங்கங்கள்- வேதங்களின் உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.
வேதாங்கங்கள் எண்ணிக்கையில் அறுவகைப்படும்
அவை,
 சீக்ஷா – உச்சரிப்பு
வியாகரணம் – இலக்கணம்
சந்தஸ் – செய்யுள் இலக்கணம்
நிருக்தம்- சொல் இலக்கணம் 
ஜோதிடம் – வானசாஸ்திரம்
கல்பம் – செயல்முறை
இவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான vedangaவிதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவை என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷாவே நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது- வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.
வேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவி நமக்கு நன்மை பயக்கின்றன. பிற இலக்கண விதிகள் போலல்லாது வியாகரணம் மிக விரிவான பார்வை கொண்டிருக்கிறது. வியாகரணம் வகுத்துக் கொடுக்கும் மோட்ச சாதனங்களில் ஒன்று சப்த பிரம்ம வாதம் –  ஒலியும் பரம்பொருளும் அடிப்படையில் ஒன்றே என்பது இதன் தாத்பர்யம். இதிலிருந்து கிளைத்த பல்வகை சாதனைகளில் ஒன்றான நாத பிரம்ம உபாசனையின் அடிப்படை தத்துவத்தை நாம் இங்கு காணலாம்- நாதமே பரம்பொருளுக்கு இட்டுச் செல்கிறது. வியாகரணங்களில் பாணினியின் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.
சந்தஸ் அல்லது யாப்பு, வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. யாப்பிலக்கணம் என்று சந்தஸ் குறித்து சொல்லலாம். சீக்ஷை சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத, எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே அக்ஷரங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் பிழைபலன் தருவதாக அமையும். எனவே, வேதக்கல்வியில் சந்தஸ் மிக முக்கியமான இடம் கொண்டதாய் இருக்கிறது. சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே மிகவும் புகழ் பெற்றதாகும்.
நிருக்தம் அல்லது சொல் இலக்கணம் நான்காம் வேதாங்கமாகும். அது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச்சொல்லகராதி. வேறெந்த வேர்ச்சொல் அகராதியையும் போலவே நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. ஆனால் பிற மொழிகள் போல் அல்லாமல் வேத மொழியில் பல அசாதாரணமான, கடினமான சொற்கள் உள்ளன. நிருக்தம் அவற்றின் மூலம் மற்றும் பொருள் தருவதோடல்லாமல், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மந்திரங்களின் ஆழ்பொருளை அறிய நிருக்தங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றன, வெகு சில சொற்கள் அல்லது மிகச் சிறிய வாக்கியத்தின் மீபொருண்ம உள்ளடக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் நிருக்தம் பயன்படுகிறது.
ஜோதிடம் அல்லது வான சாஸ்திரம் ஐந்தாம் வேதாங்கம். அது வேதங்களின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தை நயனம் என்று அழைப்பதுண்டு, அதற்கும் கண் என்றுதான் பொருள். குறிப்பிட்ட சில கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கும் எண்ணற்ற நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே வேதங்களைக் கற்பதில் ஜோதிடம் ஒரு பயனுள்ள துறையாய் இருக்கிறது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிப்பது என்பது சிக்கலான நடைமுறை கொண்டிருப்பதால், கணிதம் ஜோதிட சாஸ்திரத்தின் தவிர்க்க இயலாத அங்கமாக இருக்கிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று பிரிவுகள் அல்லது ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது- சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
கல்பம் அல்லது நடைமுறை, வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கரமாகக் கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் பங்கேற்பதற்கான துவக்கம் என்று கல்பம் அறியப்பட்டாலும் நாம்  மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும், வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்கள் சமூக அமைப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவன் தன் இல்லத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வைதீக கர்மாக்களில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்றும் பல நெறிமுறைகள் உள்ளன. இது மிகப் பெரிய பேசுபொருள் என்பதால் ரிஷிகள் கல்பம் சார்ந்த சாஸ்திரங்களை மூன்று வகைகளாக தொகுத்துள்ளனர்- அவை, தர்ம சாஸ்திரம், க்ருஹ்ய சாஸ்திரம், ஸ்ரௌத சாஸ்திரம்  என்று அறியப்படுகின்றன.

உபவேதங்கள்

உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு என்று சொல்லலாம். வெவ்வேறு துறைசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வேத ரிஷிகள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே உப வேதங்களாக அறியப்படுகின்றன.
வித்யாஸ்தானங்கள் அல்லது அறிவகங்களின் ஒரு பகுதியே உபவேதங்கள். இந்து தத்துவங்களில் பதினெட்டு வித்யாஸ்தானங்கள் குறிப்பிடப்படுகின்றன.
நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
இவையே நான்கு உபவேதங்கள்-
ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
காந்தர்வ வேதம்– நுண்கலைகள்

அர்த்தசாஸ்திரம்

அர்த்தம் என்றால் செல்வம் என்று பொருள்படும். எனவே, அர்த்த சாஸ்திரம் என்பது செல்வம் அல்லது பொருளாதார அறிவியல்.arthasasthra
நவீன காலத்தில் அர்த்த சாஸ்திரம் என்றால் ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் அல்லது கௌடில்யன் என்ற பண்டிதரால் ஆட்சி முறை மற்றும் அரசனின் கடமைகளையும் உரிமைகளையும் குறித்து எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலே நினைவுக்கு வருகிறது.
சம்ஸ்கிருத இலக்கியத்தில் அர்த்த சாஸ்திரம், ராஜ சாஸ்திரம், தண்ட நீதி, நீதி சாஸ்திரம் என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  எனினும் சரியாக பொருள் கொள்வதானால், அர்த்த சாஸ்திரம் என்ற பதத்தின் பொருள் விரிவானது- அது அரசியல், ஆட்சிமுறை, பொருளாதாரம், சட்டம், நீதிமுறை என்று பல துறைகளையும் பேசுகிறது. காமசூத்திரமும் பிற நூல்களும் தர்மத்தையே உயர்ந்த இலட்சியமாகப் பேசுவதுபோல் அர்த்த சாஸ்திரம் தர்மத்துக்கே உயர்ந்த மதிப்பளிக்கிறது.
இவ்வாறு பரவலான விஷயங்களைப் பேசுவதால் அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரங்களில் பேசப்பட்டுள்ளவற்றையும் விவாதிக்கின்றது. ஆனால் தர்ம சாஸ்திரங்களுக்கு உரிய விரிவான களம் அர்த்த சாஸ்திரத்துக்கு உரியதல்ல. எனவே, தர்ம சாஸ்திரத்துக்கும் அர்த்த சாஸ்திரத்துக்கும் எந்த ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டாலும், அங்கு தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதே கணக்கில் கொள்ளப்படும், அதன் விதிகளே நடைமுறைப்படுத்தப்படும். சிலர் அர்த்த சாஸ்திரம் என்பது அதர்வ வேதத்தின் உபவேதம் என்று கூறுவதுண்டு.
மானுட வாழ்விலும் சமூக உறவுகளிலும் செல்வத்தின் முக்கியத்துவம் குறித்து பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. செல்வ வளமிக்க சமூகங்களும் தேசங்களும் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் செல்வத்தால் கிட்டக்கூடிய சாதக நிலைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவே செய்தனர். சமூக அமைப்புகள், சமூகச் சூழலில் தனிமனித செயல்பாடு, செல்வம் ஈட்டி அவற்றைக் காக்கும் வழிகள், நல்லாட்சி, அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகம் குறித்து உலக அளவில் முதற்சிந்தனைகள் வெளிப்படக் அர்த்த சாஸ்திரம் குறித்த சிந்தனையே காரணமாயிற்று. இவற்றில் அரசனின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு காரணம், செல்வ வளமிக்க ஒரு தேசத்தை வலுவான, நேர்மையான அரசன் ஆண்டு நிர்வாகம் செய்யாவிடில், அத்தகையச் சமூகம் சிதறிவிடும் என்பதே.
ஆனால் அர்த்த சாஸ்திரம் செல்வத்துக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த காரணத்தால் செல்வ வளம் ஓயாது ஈட்டப்பட வேண்டிய வாழ்வுமுறை உருவானது. இது தர்ம சாஸ்திரங்களின் நெறிமுறைகளுக்கும், சமூக நீதிக்கும் முரணான நிலை உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிற்கால சாஸ்திரக்காரர்கள் மோதல்களைத் தவிர்க்க விலக்குகள் அளிக்கவும், பல்வேறு தரப்பினரை சமநிலையில் இருத்தும் நிலை உருவாகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்க  வேண்டியதாயிற்று.
மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு பெருங்காப்பியங்களில் அர்த்த சாஸ்திரத்தில் பேசப்படும் விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. புராணங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், ஆங்கிரசின் மகனான பிருகஸ்பதியின் அர்த்தசாஸ்திர உரை, பிருகு மகனான சுக்கிரனின் ராஜ சாஸ்திரம், உசனஸின் நீதி நூல் மற்றும் பலநூறு சிறு நூல்கள் கிறித்தவ சகாப்தத்துக்கு முன்னரே இங்கு இருந்திருக்கின்றன.
அர்த்தசாஸ்திர நூல்களில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, சீர்மையான நூல் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொல்லப்பட முடியும் எனினும் அது பலராலும் விமரிசிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பாணரின் காதம்பரி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. மிகவும் தீய அறிவுரைகள் பல இருப்பதால் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் மிகவும் குரூரமான நூல் என்று காதம்பரியில் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பலரும் கௌடில்யரின் நூல்களை நிராகரித்துள்ளனர்- நாம் விரும்பும் முடிவுகளை அடைய உதவும் எதுவும் அதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற கோட்பாடு இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.

ஆயுர் வேதம்

ayurvedaஆயுர் வேதம் என்ற பதத்தின் நேரடி பொருள், உயிர் அறிவியல் என்று சொல்லலாம். இந்தியாவின் புராதன, இந்தியாவுக்குரிய மருத்துவ முறையான ஆயுர் வேதம் இன்று உலகெங்கும் பயிலப்படுகிறது. இதன் துவக்க காலம் எப்போது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இன்று மிகக் கடினம். ஆனால் நம்மிடமுள்ள இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, உலகின் மிகத் தொன்மையான மருத்துவ முறை இதுவே என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆயுஷ், ஆரோக்கியம், ஔஷதி போன்ற பதங்கள் வேதங்கள் துவங்கி ஏறத்தாழ அனைத்து நூல்களிலும் இருப்பதைக் காண்கிறோம். ஆயுர் வேதம் என்பது முழுமையான ஒரு மருத்துவ முறையாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் தன்வந்திரி மருந்துகளுக்கும், தேகம் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தெய்வங்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.
சாங்கிய தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளையொட்டியே ஆயுர் வேத மருத்துவ முறை இயங்குகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் இணையாகக் கூறப்படுகின்றன. வாதம்  ஆரோக்கியத்தை சமன்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் என்பது வெம்மையுடன் தொடர்புடையது, பித்தமே உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.
செயல்வடிவமுள்ள இந்த மூன்று தத்துவங்களுடன் கூடுதலாக ஆயுர்வேதம் சப்த தாதுக்கள் என்ற கருத்துருவாக்கமும் கொண்டுள்ளது. எலும்பின் மஜ்ஜை, கொழுப்பு, இரத்தம் முதலான ஏழு அடிப்படை வஸ்துக்களின் கூட்டு வடிவமாக உடல் இருக்கிறது. இவையன்றி ஐந்து பிராணன்கள், ஐந்து உப பிராணன்கள் என்ற தத்துவமும் ஆயுர்வேதத்தில் உண்டு (பிராணனே மனிதன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் ஆற்றல் அளித்து அவனைச் செலுத்தும் ஜீவசக்தியாக இருக்கிறது).
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, சமநிலை கொண்ட மன அமைப்பு ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வியாதி என்ற பதத்தின் பொருளே அமைதியற்ற மனம் என்பதுதான், இதுவே உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை ஏற்படக் காரணமாகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் நீக்குவது என்பது நச்சுக்களாக உடலில் தங்கிவிட்ட தடைகளை நீக்குவதுதான். இதைச் செய்ய இரண்டாயிரம் ஆண்டுகால நடைமுறையில் பல்வேறு உத்திகள் கண்டறியப்பட்டுள்ளன.
பண்டைய இந்திய மருத்துவமுறை மனிதனின் நோய்களை நீக்குவதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒன்றல்ல. விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று அனைத்துக்கும் மருத்துவ சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்தில் இடமுண்டு.
பொதுவாகச் சொன்னால் ஆயுர்வேதத்தின் அங்கங்கள் ஏழு-

  1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
  2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை- மன நலம் பேணுதல்
  5. குமார ப்ரியா- குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
  7. ரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்

சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர், வ்ரத ஜீவகர், பதஞ்சலி, நாகார்ஜுனர் முதலியானோர் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலையாய ஆசான்களாவர்.

தனுர் வேதம்

dhanur1
தனுர் வேதம் என்ற பதம் இரு சொற்களைக் கொண்டது- தனுஷ் என்றால் வில் என்றும் வேதம் என்றால் ஞானம் என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இந்தப் பதம் வில்வித்தையையே குறிக்கிறது. புராணங்களில் முழுக்க முழுக்க இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் தனுர் வேதம் என்ற பதம் அனைத்து போர்க்கலைகளையும் பேச பயன்படுத்தப்பட்டது.
தனுர் வேதம் தவிர சஸ்திர வித்யா என்றும் உண்டு- சஸ்திரம் என்றால் கத்தி, அல்லது ஆயுதம், வித்யா என்பது வித்தை. எனவே, சஸ்திர வித்யா என்பதன் நேரடிப் பொருள் வாள்வித்தை என்றாகும். தனுர் வேதம், சஸ்திர வித்தை ஆகிய இவ்விரண்டும் பண்டைய இந்திய போர்க்கலை மற்றும் ஆயுதப் பயன்பட்டு முறைமைகளை விளக்கும் அறிவுத் துறைகளாகும்.
வேதங்கள் அனைத்தும் அமைதியையும் மேன்மையான விஷயங்களையும் பேசும்போது உபவேதங்கள் தனுர் வேதத்தை வித்யாஸ்தானத்தின் உறுப்பாகக் கொண்டிருப்பது நவீன மனதுக்கு வியப்பாய் இருக்கலாம். ஆனால் போர்க்கலையும் ஆயுதங்களும் பயில்வது வேற்று தேசங்களின்மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். எதிரிகள் மற்றும் பகை தேசங்களிடமிருந்து தன்னையும் தன் மக்களையும் பாதுகாப்பது அரசனின் கடமையாகிறது. போர்க்கலையும் ஆயுதப்பயிற்சியும் தொடர்ந்த பயிற்சி கோருவன. மேலும், பண்டைக்காலம் முதல் இந்தியாவில் வில், வாள் மற்றும் பல ஆயுதங்கள் எப்போதும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன- ஆயுதப்பயிற்சி ஒரு மனிதனின் கல்வியில் இடம்பெறுவது தவிர்க்க முடியாத தேவையாக இருந்து வந்திருக்கிறது.
கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்னரே பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் முறை குறித்து விவரிக்கும் ஏராளமான  நூல்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரம் நம்மிடம் எஞ்சியிருக்கும் நூல்களைக் கொண்டே தெளிவாகிறது. ஆனால், மூல நூல்கள் எதுவும் நம்மிடையே இல்லை.
போர்க்கலைகள் இருவகைப்படும்- ஆயுதங்கள் கொண்டது ஒன்று, ஆயுதங்களற்ற போர் முறை மற்றொன்று. இந்தியாவில் எண்ணற்ற போர்முறைகள் இருக்கின்றன, அவற்றை வட இந்திய முறைகள் என்றும் தென்னிந்திய முறைகள் என்றும் பகுக்கலாம். இவற்றைத் தவிர இந்தியாவெங்கும் மல்யுத்த பாரம்பர்யம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.
தனுர்வேதம் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி தவிர, ஆயுதங்கள் செய்யும் முறையும் கற்றுத் தருகிறது. அது தவிர, போருக்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கான தியான முறைகள் மற்றும் ஆன்ம வித்தையும் தனுர்வேதத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. சஞ்சலமற்ற, அமைதியான மனமே ஆயுதங்களை அமைதிக்கான பணியில் பயன்படுத்த உதவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் வீரர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அமைதியான மனநிலையில் உள்ள அதிகாரிகளுக்கே வயப்படுகிறது.

கந்தர்வ வேதம்

கந்தர்வ வேதம் என்ற  கருத்துருவாக்கம் எப்போது எங்கு தோன்றிற்று என்பது குறித்த தெளிவான விபரங்கள் நம்மிடமில்லை.
இந்து தொன்மங்களில் சில தேவகணங்கள் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், வித்யாதரர்கள், கிண்ணரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கந்தர்வர்கள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் வித்யாதரர்கள் வித்தையில் முதன்மையானவர்கள் என்றும் நம்பப்படுகிறது.;
கந்தர்வ வேதத்தின் துவக்கம் இத்தகைய நம்பிக்கையாய் இருக்கலாம். இந்திய நாட்டிய முறைகள் குறித்து நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத ரிஷியை கந்தர்வ வேதம் எழுதியவராய் சிலர் நம்புகின்றனர். முதலில் அது இசையின் அறிவியலாகத் துவங்கியிருக்கலாம். அப்போது அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்றும் இருந்தன- இவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இவற்றை இணைத்தே பேச முடியும்.
பிற்காலத்த்ல் இந்த மூன்று இயல்களும் பிற அறிவுத்துறைகளில் தாக்கம் செலுத்தத் துவங்கியபோது, இசை மற்றும் நடனத்தின் சில கூறுகள் ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதே போல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெவ்வேறு துறைகளில் சில போர்க்கலைகளும், கவிதை அல்லது காவியம், காம சாஸ்திரம் போன்றவையும் இடம்பெறத் துவங்கியபோது கந்தர்வ வேதம் என்ற தனித்துறை பிறந்திருக்கலாம். அல்லது வேறெந்த சிறு வடிவிலாவது துவக்க காலம் முதல் தொடர்ந்திருக்கலாம்.
இன்றுள்ள கந்தர்வ வேதத்தின் கூறுகளாக சங்கீதம், நாட்டியம், நாடகம், காவியம் (கவிதை) மற்றும் காம சாஸ்திரம் ஆகியவை உள்ளன.
 

ஆதார நூல்கள்:
1.Kutumbian. Ancient Indian Medicine. 2005, Orient Longman
R.P. Kangle. Arthashastra, 3 vols. 1965, Bombay: University of Bombay.
Swami Prajnanananda. Cultural heritage of Indian fine arts: a comparative study of music, sculpture, painting, and architecture: a new approach, Calcutta: Nababharat Publishers, 1985.
Arthur A. Macdonell. History of Sanskrit Literature, 2006, New Delhi: Motilal Banarsidas.
T.K. Ramachandra Iyer. A Short History of Sanskrit Literature, 2006, Kalpathy: R.S. Vadhyar and Sons.

0 Replies to “வேதாங்கங்களும் உபவேதங்களும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.