தெருக்கூத்து – பகுதி 3

therukoothu_3
10-வது நாளன்று பிரசங்கி தன் விளக்கவுரையை திரௌபதியின் திருமணத்துடன் முடிக்கிறார். இப்போதிலிருந்து தினமும் பிரசங்கி அன்றைய உரையை முடிக்கையில் “நான் இதுகாறும் இன்று கூறியதை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் தெருக்கூத்தில் நடிக்கப்பட்டு பார்க்கப் போகிறீர்கள்”” என்று சொல்லித் தான் முடிப்பது வழக்கம்.
முதலில் வருவது அரக்கு மாளிகையை எரிப்பது.. கோவிலுக்கு அருகில் வைக்கோலாலும் வண்ணக் காகிதத்தினாலும் ஒரு குடிசை இதற்காகவே கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். வில்லிபாரதத்திலிருந்து இந்தப்பகுதி பிரசங்கியால் சொல்லப்படும். .இக்குடிசை பாண்டவர்களின் அரக்கு மாளிகையை குறிப்பதாய் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். மாளிகை எரிவதைப் பார்க்க முழு கிராமமும் கூடியுள்ளது. ஒரு சிறிய சடங்கு பிரார்த்தனைக்குப் பின்., குடிசைக்கு நெருப்பு வைக்கப்படுகிறது .இதற்குப் பின் சற்று நேரத்தில் பகாசுரனை பீமன் கொல்வது நடிக்கப்படுகிறது. இது கிராமம் முழுவதிலும் விரிகிறது. பிராம்மண வேடத்திலுள்ள பீமனாக நடிப்பவரும், கோவிலின் சுடுமண்ணாலான பீமன் சிலையும் ஒரு மாட்டு வண்டியில் அமர்த்தப்பட்டு கிராமம் முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் .பகாசுர வேடம் போட்டிருப்பவர் நிலத்தில் கூடவே நடந்து செல்வார். வழியெங்கும் பீமனைச் சண்டைக்கு இழுக்கும் நோக்கத்தில் பொறி பறக்கும் வார்த்தைகளைக் கொட்டி பீமனைக் கோபப் படுத்திக்கொண்டே நடப்பார்.  கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் கிராமத்து மக்களின்  பங்களிப்பாய் அவர்கள் தரும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும் வண்டியில் ஏற்றப்படுகின்றன. இதன் பின் திரௌபதி அம்மனின் ஊர்வலம் பறை பம்பை ஆகிய வாத்தியங்கள் முழங்க (இந்த இசைக் கருவிகள் என்னவோ கூத்தில் உபயோகிக்கப் படுவதில்லை ) வருகிறது. பகாசுரனை வதம் செய்வதுடன் ஊர்வலம் முடிகிறது, உணவுப் பொருட்கள் கீழ்சாதி ஏழை மக்களுக்கும், கூத்தில் பங்கு பெறும் நடிகர்களுக்கும், விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்குப் பின் உடனே இரவு 9 மணி வாக்கில் அடுத்து வரும் காட்சி தெருக்கூத்து நடை பெறும் அரங்கத்துக்கு நகர்கிறது.
இதற்கெல்லாம் முன்பாய் நடிகர்கள் அனைவரும் முதலில் கோவிலுக்குப் போய் திரௌபதி அம்மனை வழிபட்டு அம்மனைப் புகழும் பாடல்களை பாடிக் கொண்டே ஒப்பனை அறைக்குப் போயிருப்பார்கள். ஒப்பனை அறை என்பது கோவிலுக்கு முன்னால் ஒரு திறந்தவெளியில் கூத்து நடக்கும் இடத்துக்குப் பின்புறம் ஓலை வேய்ந்த ஒரு மறைவிடம்தான். தென்னிந்தியா முழுவதும் கோவில் சார்ந்த நிகழ்வுகள் யாவும், செவ்வியல் கலைகளோ அல்லது நாட்டார் , எதுவானாலும் அவை கோவிலின் தெய்வத்துக்கு முன்பாக ஒரு திறந்த மைதானத்தில்தான் நடைபெறும். விதிவிலக்காய் கேரளத்தில் பாவைக்கூத்து கோவிலுக்கு வெளியே அதன் எதிரே உள்ள கூத்துமாடத்தில் நடக்கும், கூடியாட்டம் கோவிலுக்குள்ளே உள்ள கூத்து அம்பலத்தில் நடக்கும். இவை இரண்டும் மட்டுமே நிலையான கட்டிடங்கள்.
ஒப்பனை அறையிலும், கதகளி கலைஞர்கள் போலன்றி அவரவர் ஒப்பனையை அவர்களே செய்து கொள்வதற்கு முன்பு, குத்துவிளக்கை ஏற்றி அதை அம்மன் உருவாய் வழிபட்டு பிரார்த்தனை செலுத்துவார்கள். மிருதங்கமும் வழிபடப்படும். ஒவ்வொரு நாளும் ஒப்பனைக்கும் நிகழ்ச்சிக்கும் முன்பு ஒரு கட்டாய பூர்வாங்கமாக ரங்கபூஜை செய்யப்படும்.
ஒப்பனை முடிந்தவுடன், தாள வாத்தியங்கள் இசைக்கப்படும். எல்லா தென்னிந்திய நாட்டார் கலைகளையும் போல ஒரு நீண்ட நேரம் உரத்த சுருதியில் எல்லா தாளகதிகளிலும் மேளம் அடிக்கப்படும். இது வயல்கள் தாண்டி தூரத்தில் இருக்கும் அனைத்துச் சுற்றுப்புற கிராமங்களுக்கும் கூத்து ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கான அறிவிப்பு . கணேசருக்கும் இதர கடவுள்களுக்கும் தொடக்க வழிபாடு செய்தபின் தெருக்கூத்து ஆரம்பிக்கும். இருவர் ஆளுக்கொரு பக்கம்  கையில் தாங்கிப் பிடித்தவாறு திரை ஒன்று மேடைக்குக் கொண்டுவரப்படும். இதற்கு ’திரை வருதல்’ எனப் பெயர். திரைக்குப் பின் இருக்கும் கட்டியக்காரன் ’திரை விருத்தத்’தை பாடி அதன் மூலம் தன்னைப் பற்றியும் தான் மேடையில் தோன்றப் போவது பற்றியும் அறிவிப்பான். பண்டைய சமஸ்கிருத நாடகங்களின் சூத்திரதார் என்கிற பாத்திரமும் விதூஷக் என்கிற பாத்திரமும் ஒன்றாய் இணைந்த வடிவம் இந்த கட்டியக்காரன் .இப்படி இணைந்து உருவாக்கப்பட்ட பாத்திரத்தன்மையில் மட்டுமன்றி நாடகத்தில் அவன் ஆற்றும் பணியும் முற்றும் புதுமையான தமிழ் கற்பனை உருவாக்கம். முழு நாடகத்திலும் அவன் இருப்பான், நாடகத்தை அறிவிப்பதற்கு மட்டுமன்றி, கதைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே, கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு மொழிபெயர்ப்பாளனைப் போல் கடந்தகாலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருபவன் அவன். நடுவில் புகுந்து எந்த பாத்திரத்தின் வேலையையும் செய்யும் சுதந்திரமும் அவனுக்கு உண்டு. ஒரு துணியைத் தன் தோள் களுக்கிடையே தற்செயலாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆண் பாத்திரத்துக்கோ அல்லது பெண் பாத்திரத்துக்கோ தோழிபோல் நடித்து அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றும் சில வசனங்களைப் பேசுவான், பின் அந்தத் துணியை எறிந்துவிட்டு மீண்டும் கட்டியக்காரனாகி விடுவான். இவை அத்தனையும் மேடையில் ஒரேமூச்சில் செய்துவிட்டு, பின் கோமாளியைப் போல ஆகி, பண்டையகால தொன்மத்துக் கடந்தகாலத்தை இன்றைய 90-களுடன் இணைத்து, அடிக்கடி திடுமென உள்ளே வந்து இதற்கு முன் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவித்து என கட்டியக்காரனின் இத்தகைய தளைகளற்ற சுதந்திரம் கொண்ட கற்பனைப் பாத்திரம் தமிழ் மண்ணின் விசேஷமான   ஒரு கருத்துருவாக்கம் (கட்டியம் என்றால் அறிவிப்பது, கட்டியக்காரன் என்பது அறிவிப்பவன் அல்லது தூதுவன்).19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வழங்கிய மேடை நாடகங்களும் கட்டியக்காரனை தெருக்கூத்திலிருந்து அப்படியே முழுதுமாக எடுத்துக் கொண்டது.
திரைக்குப் பின்னிருந்து வெளிவரும் கட்டியக்காரன் அன்றைய மேடை நாடகத்தையும் அடுத்து வரும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவான். அதற்குப் பின் இன்னொரு கதாபாத்திரம் திரைக்குப் பின்னிருந்து வந்து திரை விருத்ததைப் பாடி படர்க்கையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வரவை அறிவிப்பார் .நாடகமேடையிலிருந்து திரை மேலெழுப்பப் பட்ட பின்பு, பார்வையாளர்களின் பார்வையில் முழுதுமாக தோன்றிய பின்பே அவர் தன்னைப் பற்றி தன்னிலையில் பேசுவார்.
நாடகர்களின் நடிப்பிடத்திற்குப் பின்னால், பாடகர் குழுவும், பின்பாட்டுக் காரர்களும் ஒரு மரப்பலகையில் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் பின்பற்றும் நாடகத்தின் மூலப்பிரதியில் விசேஷமாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களையும், வசனங்களையும் நடிகர்கள் பாடவும் பேசவும் செய்வார்கள் .இந்தக் கையெழுத்துப் பிரதி நாடகத்தின் குருவும் தலைவருமான, அதன் இயக்குனரின் தனி உடமையாக இருக்கும், பெரும்பாலும் இவர் அக்குடும்பத்தின் மூத்த பெரியவராக இருப்பார் .நாடகக்கதை தலைமுறை தலைமுறையாக கைமாறி வருவதால், குழுவில் அனைவரும் இதை மனப்பாடமாகவே அறிந்திருப்பர். ஆனாலும் மேடையிலேயே வசனங்களில் அவ்வப்போது மாற்றம் செய்யும் சுதந்திரத்தையும் அவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்வார்கள், மரபுப்படி இசையைக் கற்காததினால், அதன் நுணுக்கமான இலக்கணம் பற்றி அவ்வளவு தெரியாவிட்டாலும் பலவருட அனுபவத்தின் கேள்விஞானத்திலேயே அவர்களுக்கு ராகங்கள் தாளங்கள் பற்றியும் நிறையத் தெரிந்திருப்பதினால், மேடையிலேயே பாட்டுக்களை அவ்வப்போது தெருக்கூத்தின் நிகழ் தருணத்தின் தேவைக்கேற்ப தாமாகவே இட்டுக்கட்டி இசையில் மாற்றம் செய்யும் திறமையும் அவர்களுக்கு உண்டு. ஒரு நாடகப்பாத்திரம் பாடுகையில் பின்பாட்டுக்காரர்கள் அதைத் திரும்பப் பாடுவார்கள், இசைக்கருவிகளும் இசைக்கும். பின்பாட்டுக்காரர்கள் சில சமயம் நாடகப் பாத்திரங்களின் வசனங்களுக்கும் எதிர்வசனம் பேசுவார்கள் .இவை மூல நாடக வசனங்களில் இருப்பவை அல்ல அப்போதே நிலைமைக்குத் தகுந்தாற்போல் அதை விளக்கும் வகையில் சமயோசிதமாக. கற்பனை செய்து பேசப்படுபவை.
தெருக்கூத்து நடிகர்களின் நடிப்புப் பாணியும் தனித்தன்மையானது. அதில் சாதாரணமானதோ, இயல்பானதோ, அடங்கிய தொனியுடையதோ எதுவும் கிடையாது. அவர்களுடைய ஒப்பனை, உரத்த குரலில் பாடுவது, வசனம் பேசுவது என தெருக்கூத்தின் ஒவ்வொரு அம்சமும் எல்லாமே மிகைப்படுத்தப் பட்டதுதான். அவர்கள் மேடை அதிர பலத்த காலடி வைத்துத் தான் கோபமும் அகங்காரமும் தொனிக்க நடப்பாரகள், கைகளை வீசுவார்கள், அடிக்கடி தமக்குத் தோன்றிய போதெல்லாம் உடம்பை வேகமாகச் சுழற்றுவார்கள், கதக் நாட்டியத்தில் சக்கர் எனப் படுவது போல், தெருக்கூத்தில் இதை கிரிகை என்பார்கள். தெருக்கூத்தில் மிக இன்றியமையாத, அதை அடையாளப்படுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்று. இவை அனைத்தும் அவர்களுடைய கோபம், வீரம் போன்றவற்றின் மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகளைக் காட்டுவதற்காக, இந்த அலட்டலான வெளிப்பாடுகள் வெகுதூரம் பரந்தும் நீண்டுமுள்ள பார்வையாளர்களும் நன்றாகக் காண வேண்டும் என்ற உத்தேசத்தினால் செய்யப்பட்டு அந்தப் பலனையும் கொடுக்கும், மிகைப்படுத்தப்பட்ட பாவங்கள் உடனடியாகவும் தவறாமலும் புரிந்துகொள்ளக்கூடியவை. கண்ணாடி மணிகளும், துண்டுகளும் வைத்துத் தைக்கப்பட்ட உடைகள், அவர்களின் முகச் சாயப்பூச்சின் வர்ணக் கலவைகள், குடைபோல் விரியும் அவர்களின் குட்டை பாவாடைகள் இவை அனைத்தும் எண்ணை விளக்குகளின் ஒளியில் நிலாவொளியில் திறந்த வயல்வெளியில் கூடியுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு மயிர்க் கூச்செரியும்,மாயமான சூழலை உருவாக்கும். (திருவிழா அமாவாசையன்று ஆரம்பிக்கும், அடுத்தடுத்த நாட்களில் சந்திரன் வளர்பிறையில் இருக்கும்).இவையெல்லாமே ஒருமித்த ஒரு நோக்கத்துக்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு பிரும்மாண்ட ஒருங்கிணைப்புதான். நாடகத்தின் பாதிப்பு அதன் உச்சத்தை அடையும் வேளைகள், அல்லது உச்சத்தை அடைய வைக்கப்படும் வேளைகளில், விழிப்புணர்வு கொண்ட நிலைக்கும் தன்னுணர்விழந்த நிலைக்குமான ஒரு இடைவாயில், ஆவேசத்தின் ஆரம்பகட்டம் போன்ற ஒரு நிலை வரும். இது கலையின் செயல்பாட்டுக்கான அழகியல் சார்பான மனவெழுச்சி அல்ல, மாறாக இது ஒரு சடங்கு. பார்வையாளரை ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மன நிலைக்கு, பிரக்ஞா பூர்வமான மனநிலையிலிருந்து பிரக்ஞை இழந்த நிலைக்கு இது இட்டுச் சென்று விடுகிறது.
இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10-வது நாள். அன்றையச் சம்பவம் திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது. இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் ஆன, பூஜை செய்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும் பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F  போன்ற ஒரு மரச் சாதனமும் வருகிறது. அதன் ஒரு முடிவில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது. அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால் அருச்சுனன் அதைத் தூக்கி நாணேற்றுவதிலும் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான்.
அன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம்  (தெருக்கூத்து)   மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நிகழ்கிறது. ஒவ்வொன்றும் அதனதன் தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவதும் நிகழ்கிறது.
மற்றொரு நாள் நாடகத்தில் சுபத்திரையின் திருமண நிகழ்வு நடிக்கப்படும் போதும், திருமணம் மீண்டும் அத்தனை வைபவங்களுடனும் கொண்டாட்டத்துடனும் நடைபெறும்..
திருவிழாவின் மிக முக்கியமான நாள் திரௌபதி வஸ்திராபகரணம் நடிக்க எடுத்துக் கொள்ளப்படும் நாள். சம்பவங்களின் கோர்வையில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, திரௌபதி நாடகத்தில் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, அவள் கிராமத்தின் காவல்தெய்வம் .கூத்துக் களத்திலும், பார்வையாளர்களிடத்திலும் கவிந்து படிப்படியாக சுருதி ஏறிக்கொண்டு போவதற்கும்.உணர்ச்சிகளின் தீவிரம் அதிகரித்துக் கொண்டு போவதற்கும், பார்வையாளர்களின் சீற்றத்துக்கும் இதுவே காரணம்.
திரௌபதியின் துகிலுரிதல் நடக்கும் தருணம் வரும் சமயத்தில், கிட்டத்தட்ட பொழுது விடியும் நேரம், கூத்து முந்தைய இரவு 9.30 மணியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அது வரையான உரத்த கோபவெளிப்பாடுகள், தரை அதிரும் வகையில் மிதித்து நடத்தல், துரிதகதியிலான நீண்ட கிரிகைகள் ஆகியவற்றின் தாக்குதலால் படிப்படியாய் சூழலின் பதற்றம் அதிகரித்து வருகிறது. திரௌபதி மேடைக்கு அழைத்துவரப்பட்டு அவளது ஆடை  உரியப்படப் போகும் கட்டம் வந்ததும். நாடகம் நிறுத்தப்பட்டு விடும். கட்டியக்காரன் மேடைக்கு வந்து திரௌபதி அம்மனைப் புகழ்ந்து பாடி மன்னிப்புக் கேட்கிறான். கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறான் “அம்மா, நாங்கள் இங்கு செய்வதற்கெல்லாம் எங்களை மன்னித்துவிடு. பாண்டவர்களைப் பொறுத்தது போல் எங்களையும் பொறுத்துக்கொள். கருணைகாட்டு, ஏனென்றால் நாங்கள் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் இதைச் செய்கிறோம்” என்று சொல்லி புனித வீரகந்தத்தை  திரௌபதியாக நடிப்பவருக்கும் துச்சாசனனாக நடிப்பவருக்கும் கொடுக்கிறான். திரௌபதியின் வஸ்திராபகரணம் தொடங்குகிறது. திரௌபதி கிருஷ்ணனிடம் பாதுகாப்பு வேண்டிக் கதறுகிறாள். துச்சாசனன் அவளை மேடைக்கு இழுத்துக் கொண்டுவந்திருப்பதாகப் பொருள். ஆனால் அவள் துச்சாசனன் பிடித்திருக்கும் ஒரு கழியின்  மறுமுனையைப் பற்றிக் கொண்டு ஓடிவருகிறாள். நாடகத்தின் திரௌபதி ஒரு ஆண் நடிகர்தான் இருப்பினும் துச்சாசனன் அவளைத் தொடுவதுகூட இல்லை. துகிலுரியும்  பொது , பார்வையாளர்கள் ’கோவிந்தா’ ‘கிருஷ்ணா’ என அலறிக்கொண்டு திரௌபதியைப் பாதுகாக்க மேடைக்கு ஓடிவருகிறார்கள். பலருக்கும் சன்னதம் பிடிக்கிறது, பார்வையாளர்களில் நிதானமாக இருப்பவர்கள் அப்படி ஆவேசம் பிடித்தவர்களையும் மேடையை நோக்கி ஓடுபவர்களையும் இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார்கள். திரௌபதி மற்றும் துச்சாசனன் வேடமணிந்திருக்கும் நடிகர்களும் ஆவேசம் பிடித்து வெறிபிடித்தது போலக் காணப்படுகிறார்கள் அல்லது மயக்கமடைகிறார்கள். கிராமத்து நாடகவடிவில் திரௌபதி வஸ்திராபகரணத்தைக் கண்டவர்களுக்கு இந்தச் சூழலுக்கு வெளியே திரைக்கு முன் மாநகரப் பார்வையாளர்களுக்காக நடக்கும் ஒன்று அல்லது ஒன்றரை மணிநேர நாடகங்களில் நிகழ்த்தப்படுவது உயிரிழந்து காணப்படும். தென்னிந்திய நாட்டார் கலைவடிவங்கள் அனைத்தையும்விட தெருக்கூத்தின் பெண் கதாபாத்திரங்கள் காணச் சகிக்காதபடி இருந்தபோதிலுமே இப்படி (ஒரு தாக்கம்.)
இந்த நாடகப்பாத்திரம் அவளது வழக்கமான ஆடையின் மேல் இறுதி அடுக்காய் சுற்றிக்கொண்டு அவளது தூய்மையைக் காப்பாற்றும் இந்தப் புடவை கிராமத்தின் இடையர் சமூகத்தினரால் நன்கொடையாய் வழங்கப்படும், இது அவர்களது பரம்பரை உரிமை என்பது அவர்களுடைய கோரிக்கை, இது பொதுவாகவும் ஆமோதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைப்படி யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அல்லவா அவளைக் காப்பாற்றியது? இதைக் கொடுப்பதினால் திரௌபதி அம்மனின் விசேஷமான ஆசிகளைத் தாம் பெறுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
பதிமூன்றாம் நாளைய நிகழ்ச்சி அருச்சுனன் பாசுபதாஸ்திரத்துக்காக சிவனுக்குத் தவம் புரியும் சம்பவம் பற்றியது. இந்த சம்பவத்துக்கு முன்னேற்பாடாக, கிராமத்தினர் திருவிழாவின் துவக்கத்துக்கு முன்பே இதற்கென குறித்து வைத்துக்கப்பட்ட ஒரு 80 அடி பனைமரத்தை வீழ்த்தப் போவார்கள். அவ்விடத்துக்கு சடங்குகளுடன் ஊர்வலமாகப் போய், அந்த மரத்துக்குப் பூஜை செய்து பின் அதை வீழ்த்துவார்கள் .பின்பு அதை மேளதாளத்துடன் ஊர்வலமாக அரங்குக்கு எடுத்து வருவார்கள். அதை நேர்த்தியாக சீவி 2 அடி’ இடைவெளியில் மூங்கில்களைப் படிகளாக்கி  ஏணி ஒன்றை உருவாக்கி விடுவார்கள். மரத்தின் இலைகளை நீக்கிவிட்டு அதன் உச்சியில் ஒரு மேடை எழுப்பப்படும். தென்னிந்தியக் கோவில்களின் சுவர்களில் இருப்பதைப்போல சிவப்பும் வெள்ளையுமான வண்ணங்களில் அடுத்தடுத்து பட்டை அடிக்கப்படும். பின் ஒரு ஆழமான குழியில் அது இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டு, ஒரு உயரமான கம்பத்தின் மேலான மேடையும் அதன் உச்சியை அடைவதற்கான படிகளும் அமைக்கப் பட்டுவிடும். அந்நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று, கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தை பசுஞ்சாணம் பூசி சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு அலங்கரித்திருப்பார்கள். அந்தக் கம்பம் சிவனின் இருப்பிடமான கைலாய மலையைக் குறிக்கிறது: அருச்சுனன் அதன் மேலேறித் தவம் புரிவான். இது கோவிலுக்கு அருகில் கூத்து நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சியன்று இரவு 9.30 மணிக்கு அருச்சுனன், பூர்வாங்க சடங்கு பூஜை, ஒப்பனை எல்லாம் முடிந்ததும், பம்பை ஒலிக்க முழு வேடத்துடன் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபட்டு பின் தன் நடிப்பை ஆரம்பிக்க வருவான்.
தன் சகோதரர்களிடம் விடைபெற்று அந்தக் கம்பம், நோக்கி, அதாவது சிவனின் இருப்பிடமான கைலாய மலையை நோக்கி நடப்பான்.
கிராமத்தில் மணமாகிக் குழந்தைகளில்லாத பெண்கள் இப்போது அதைச் சுற்றிக் கூடியுள்ளனர். அவர்கள் மங்கள ஸ்நானம் செய்து, ஈரப்புடவை யுடனேயே, மணிக்கட்டுகளில் மலர்வளையங்களைக் கட்டிக்கொண்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய்கள், வாழைப்பழங்கள் போன்றவற்றை தாம்பாளங்களில் ஏந்திக்கொண்டு அந்த பனைமரக் கம்பத்தை வழிபாட்டுமுறைப்படி சுற்றிவந்திருப்பார்கள். இசைக்குழுவினர் கம்பத்துக்குச் சற்று தூரத்தில் ஒரு மரப்பலகையில் அமர்ந்து பாடிக்கொண்டும் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அருச்சுனன் விருத்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு மூன்று முறை கம்பத்தை சுற்றி வருகிறான். இந்த நிகழ்வுக்கான பாடல்கள் தேவாரப் பாடல்கள் தொடங்கி பல சைவ அருட்தொண்டர்களின் பாடல்களிலிருந்து அண்மைய கடந்த காலத்தில் சிவனைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்கள் வரை எடுக்கப்பட்டிருக்கும். அவனும் தன் கையில் ஒரு மஞ்சள் துணியில் தேங்காய், வெற்றிலை, வில்வ இலை, பூக்கள் இவற்றை எடுத்துச் சென்று, சிவனை பூஜிக்க மேடை மேலேறி சிவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறான். மேலே வரும்வரை பல மணி நேரங்களுக்கு அவன் நிதானமாக ஒவ்வொரு பாட்டாகப் பாடி, படிப்படியாய் மேலேறி உச்சியை அடைந்ததும், மரப்பலகையில் அமர்ந்துள்ள வாத்திய கோஷ்டியும் அவன் பாட்டுக்குத் துணையாக இசைத்துப் பாடுவார்கள். இறுதியில் சிவன் ஒரு வேடன் வேடத்தில் வெளிப்பட, 80 அடி உயரக் கம்பத்தின் மேலிருக்கும் அருச்சுனனுக்கும், நிலத்தில் நின்றிருக்கும் சிவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வேடன் வேடத்தில் வந்திருப்பது சிவன் என்பதை அறிந்ததும் அருச்சுனன் கற்பூரம் ஏற்றி மேலிருந்து பூஜை செய்கிறான். அர்ச்சிக்கும் மலர்களும், வில்வ இலைகளும், விபூதியும் விழ ஆரம்பிக்கையில், கீழே கம்பத்தைச் சுற்றி நின்றிருக்கும் பெண்கள் தங்கள் புடவை முந்தானைகளை விரித்து அவற்றைத் திரட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆசி கிடைத்துவிட்டது, இனி அவர்கள் குழந்தையின்றி இருக்கமாட்டார்கள் .அன்றைய நாடகம் தவம் முடிந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதுடன் முடிகிறது.
பதினைந்தாம் நாளின் கதை விராட பர்வத்தில் நடக்கும் சம்பவங்கள். அன்றைய தினம் நாடக அரங்கம் ஊருக்கு வெளியேயுள்ள ஒரு திறந்த வயல்வெளிக்கு நகர்கிறது. கிராமத்தின் ஆடுமாடுகள் வழிதவறிப் போய்விடாமல் இருப்பதற்காக அங்கேயே ஓட்டிச்செல்லப்பட்டு சூழப்பட்டுள்ளன. .அம்மனின் விழா ஊர்வலம் அங்கு செல்கிறது. பிரசங்கியும் அங்கே இடம்மாறி தன் விளக்கவுரையை அங்கே நடத்துகிறார். அலிவேடம் பூண்டுள்ள அருச்சுனனும், விராடத்தின் உத்தரகுமாரனுடன் பறை இசை ஒலிக்க அங்கே வந்து காளியின் பூஜைமாடத்தில் பிரார்த்தனை செய்து கோவிலின் புனித வாளால் அங்குள்ள ஒரு வாழை மரத்தை வெட்டியபின் ஆடுமாடுகளை கிராமத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறான். கைப்பற்றப்பட்ட ஆடுமாடுகளை விடுவிப்பதற்கு சம்பந்தமே இல்லாமல் உத்தரகுமாரன் அவ்விடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறான்.இங்கும் முழு கிராமமும் இச்சம்பவத்தைக் காண வந்திருக்கிறார்கள். மழை பொய்த்த இடங்களில் விராடபர்வ நாடகத்தை நடத்தினால் மழை வருவது நிச்சயம் என்றவொரு நம்பிக்கையினால் இந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக் கூத்து நடத்தத் தனியாக உபயம் செய்து நடத்தும் வழக்கம் உண்டு.
அடுத்தநாள் நிகழ்ச்சி கிருஷ்ணன் தூதுபோவது பற்றியது, தெருக்கூத்து நடக்கும் அனைத்து இடங்களிலும் இந்தநாளைய நிகழ்ச்சிக்கான செலவுகள் யாதவர் சமூகத்தினரின் உபயத்தில் நடக்கும். கிருஷ்ணன் ஒரு யாதவன். அதைத் தவிர, விதுரனின் விருந்தாளியான கிருஷ்ணனுக்குக் கொடுப்பதற்காக அனைத்து யாதவ வீடுகளிலிருந்தும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு எடுத்துவரப்படும்.
சண்டையிடும் இரு பிரிவினருக்கிடையில் சமாதானமுயற்சிகளில் கிருஷ்ணன் தோல்வியடைவதால் கதையின் இப்பகுதியை மட்டுமே தனியாக எடுத்துக்கொண்டு எந்தக் கூத்தும் நடைபெறுவதில்லை. இச்சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு கூத்து நடத்தினால் கிராமத்தில் சண்டை உண்டாகும் என நம்பப்படுகிறது. இது தப்பாமல் நடந்திருக்கிறது என சாட்சியளிக்கப் பலரும் உண்டு. அப்படி ஏதாவது கட்டாயக் காரணங்களுக்காக இந்தச் சம்பவத்தைத் தனியாக எடுத்து நடிக்க நேர்ந்தாலும், அந்தக் கூத்து கிருஷ்ணனின் முயற்சி தோல்வியடைவதில் முற்றுப்பெறாமல், “நான் திரும்ப வருகிறேன். இதைப் பற்றி யோசியுங்கள்” என கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொல்லிச் செல்வதாக முடிவடையச் செய்யப்படும்.

pilcb_226959

பாரதவிழாவின் 16-வது நாளன்று அரவானின் பலி நடிக்கப்படும். ஊரில் காளிக்குக் கோவில் இருந்தால் அதற்கு வெளியே ஒரு 25 அடி உயர உருவம் எழுப்பப்படும், இல்லையெனில் பலி கொடுக்கவேண்டிய வயல்வெளியில் ஒரு காளி உருவமும் உருவாக்கப்பட்டு வைக்கப்படும். கிரீடத்துடனான அரவானின் தலை கிராமத்துக் குயவர் ஒருவரால் தனியாக களிமண்ணால் செய்யப்பட்டு, மற்ற கூத்து நடிகர்களைப் போலவே சாயம் பூசப்பட்டு இருக்கும். கடைசியாக அந்தக் களிமண் உருவத்துக்குக் கண் வரைந்து ‘கண் திறப்பு’ என்ற ஒரு சடங்கு முடிந்த பிறகே சிலை முழுமை பெறும்.. அரவானின் தலையும் கிரீடமும்
ஊர்வலமாக காளியின் பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு ஏற்கனவே அரவானின் பிரும்மாண்டமான உடல் செங்கற்களால் கட்டப்பட்டுத் தயாராக இருக்கும். வலதுகாலை மடித்து இடது தொடையின் மேல் வைத்துக்கொண்டு, ஒருகையில் வில்லுடன் அமர்ந்த நிலையிலுள்ள உருவம் அது.சமைக்கப்பட்ட தலை கிரீடத்துடன் அதன் மேல் பொருத்தப்படும். இருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டபடி, கோவில்பூசாரி கையில் உயர்த்திய புனித வாளுடன் (பலிக்கத்தி) அங்கு வருகிறார்; அவர் ஒரு ஆவேசநிலையில் இருக்கிறார். காளியை வழிபட்டபின் அரவான் உருவத்தினருகே சென்று அதைச் சுற்றி வந்து, இரத்தம் வழியும் காட்சியை உருவாக்க  குங்குமம் பூசிய ஒரு பூசணிக்காயை வெட்டுகிறார். முற்காலத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப்படும், இப்போது அதற்கு பதிலாய் பூசணிக்காய் உபயோகிக்கப்படுகிறது. இந்த ‘இரத்தம்’ அரவானின் உடலில் தெளிக்கப்படும். நாககன்னி வேடம் தரித்த கூத்து நடிகர் விரைந்து வந்து அரவானின் இறப்புக்காக புலம்ப ஆரம்பிக்கிறார். அரவானின் பலி முற்காலத்தைய ஒரு திராவிட வழிபாட்டு வடிவத்தையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி, அதை பாரதவிழாவுடன் இணைத்துள்ளது என்பது தெளிவு. இதற்குப் பின் அன்றைய கூத்தில் அரவான் பலி நடிக்கப்படுகிறது. ஆனால் கூத்தில் அரவானின் பலியைக் குறிக்கும் வகையில் ஒரு சேவல் மேடையில் பலி கொடுக்கப்படும் வேளையில், அரவானுக்கு ஆவேசம் வர அவர் ஒப்பனை அறைக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்படுகிறார்.
அரவானின் பலி நடிக்கப்படலாம் அல்லது நடிக்கப்படாமலும் இருக்கலாம். அது தவிர்க்கப்பட்டால், அபிமன்யு வதம் நடிக்கப்படும். இது மேடையில் மட்டுமே நடிக்கப்படும், மேடைக்கு அப்பால் நீளும் மற்ற சடங்குகள் இருக்காது. சண்டைக் காட்சியோ, தெருக்கூத்து பாணியில், உரத்த கோப வெளிப்பாடுகளுடனும் மிகைப்படுத்தப்பட்ட வீரதீர கையசைவுகளுடனும் இருக்கும்.
அடுத்த நாள் ’கர்ண மோட்சம்’ என அழைக்கப்படும் கர்ணவதம் பற்றியது. அன்றைய தினத்தின் முற்பகுதியில் பிரசங்கி கர்ணனின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து அவன் வாழ்வு முழுவதையும் விரிவாக விளக்கியிருப்பார். தெருக்கூத்தில் வாளாலும் வார்த்தைகளாலும் இருவரிடையே சண்டையின் சிறப்பு வெளிப்படும். வாய்ச்சண்டையில் திறமையான வாக்குவாதம் உபயோகிக்கப்படும், வாள் சண்டையில் அத்தனைக் கழைக்கூத்தாடித்தனமும் உபயோகிக்கப்படும்.
18-ம் நாள் துரியோதன வதத்துடன் குருக்ஷேத்திரப்போர் முடிவதோடு பாரத விழாவும் முடிவடையும். பிரசங்கியும் கூத்தில் கதை விரியும் வரிசையிலேயே தன் உரையையும் நடத்திக்கொண்டு வருகிறார். திறந்த வெளி போர்க்களமாக மாறியுள்ளது (இதை ‘படுகளம்’ என்பார்கள்). பிரும்மாண்டமான 70 அடியிலிருந்து 80 அடி வரையிலான நீளத்துக்கு துரியோதனின் மண் உருவம் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் கட்டப்பட்டிருக்கிறது. முந்தைய வருடங்களில் அப்படிக் கட்டப்பட்ட துரியோதனின் உருவங்கள் இப்போது கலைந்துபோன மண்மேடாய் அங்கு காட்சி தருகின்றன. இரவு முழுவதும் 50 – 60 மாட்டுவண்டிகளில் மண்ணைக் கொண்டுவந்து அந்த மேட்டின் மேல் போட்டு புது துரியோதன உருவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூத்து துரியோதனனைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு அரவான் உருவம் வடிவாக்கப்பட்டதுபோல அதற்கும் சாயம் பூசப்படுகிறது. அதன் தொடையில் ஓரிடத்தில் சிவப்புச் சாயம் நிரப்பிய மண்குடம் (இரத்தத்தைக் குறிக்க) புதைக்கப்பட்டு அதனுள் ஒரு மரக்கத்தி சொருகப்பட்டிருக்கிறது. மதியத்துக்குள் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந் தெல்லாம் வந்த  மக்கள் கூட்டமாக அங்கு திரண்டிருக்கிறார்கள், பலவிதமான கடைகள் எழுப்பட்டுள்ளன, அது ஒரு கிராமத்துச் சந்தை போல ஆகிவிட்டிருக்கிறது. நிகழ்ச்சி காலையிலேயே ஆரம்பிக்கிறது. துரியோதனன், பீமன் வேடம் போடும் நடிகர்கள் முழு ஒப்பனையுடன், மேளதாளங்களுடன் விழாக்கால ஊர்வலமாய் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபடுகிறார்கள். திரும்பும் போது ஊர்வலம் அவர்களை கிராமத்தின் தெருக்களுடே அழைத்துச் செல்கிறது. துரியோதனும் பீமனும் ஒருவரை ஒருவர் வாய்ச்சண்டைக்கு இழுத்து, வம்பு செய்துகொண்டே, கழைக்கூத்தாடிகளைப் போல பலவித துணிச்சலான காரியங்கள் செய்து நடனமாடி, எகிறிக் குதித்து ஒருவரை ஒருவர்  மிரட்டிக்கொண்டு போகிறார்கள் ஆனால் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு பெரிய கயிறு,  இருபக்கமும் மக்கள் நின்று அவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.
இதற்குள் பிரசங்கி சல்லியன் மற்றும் கௌரவர் அணியில் மிஞ்சியோர் வதம் பற்றி தன் உரையில் பேசி முடித்திருக்கிறார். துரியோதனனின் மண் உருவுக்கு அருகே ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அக்குழிகளில் ஐந்து காப்பு காரர்களும் (திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டப்பட்டவர்கள்) சாய்ந்தவாக்கில் ஈர மஞ்சள் துணி சுற்றிக் கொண்டு, உடம்பெல்லாம் மஞ்சள் பூசி படுத்திருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஆண்கள் அவர்கள் மீது மஞ்சள் நீரை அடிக்கடித் தெளித்தபடி இருக்கிறார்கள், அவர்களை இறப்பினின்று காப்பது போல. அவர்கள் ஆவேசம் வந்தது போல ஒரு மயக்க  நிலையில் இருக்கிறார்கள். ஐவராக இருப்பதினால் அவர்கள் தூக்கத்தில் கொல்லப்பட்ட பாண்டவர்களின் மகன்களைக் குறிக்கலாம்.
துரியோதனனும் பீமனும் தெருக்கூத்து நடக்கும் இடத்துக்குள் நுழைகிறார்கள். பிரசங்கி துரியோதன் ஆழ்கடலுக்குள் மறைந்துகொண்டிருக்கிறான் எனப் பார்வையாளர்களிடம் சொல்கிறார். கூத்து துரியோதனன் திரை மறைவில் மேடைக்குள் நுழைகிறான். வயலில் பார்வையாளர்களிடையே காத்திருக்கும் பீமன் அவனை வெளியே வரச்சொல்லி அழைக்கிறான். அவர்கள் இருவரும் துரியோதனின் மண் உருவத்தைச் சுற்றி ஒருவர் பின் ஒருவர் துரத்தி ஓடிக்கொண்டு ஒருவரையொருவர் எதிர்கொள்கிறார்கள். இருவரின் பற்களிடையேயும் எலுமிச்சம்பழம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்., இது அவர்களின் ஆவேசத்தில், பற்களே ஆயுதமாகி ஏதும் அசம்பாவிதம் களத்தில் நிகழாமலிருக்கும் பொருட்டு. இருவரும் ஆவேச நிலையில், உக்கிரமான வெறியில் இருக்கிறார்கள். தெருக்கூத்துக்கே உரிய பாணியில் அவர்கள் ஒருவரை ஒருவர் சண்டையில் எதிர்கொள்வது அதன் உச்ச வெறிநிலைக்கு எடுத்துப்போகப்பட்டு இறுதிக் கணத்தில் பீமன் துரியோதனனின் மண் உருவத்தின் தொடைப்பாகத்தில் (சிவப்புச்சாயம் நிரம்பிய) மண்குடம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிக்க, மண்குடம் உடைந்து இரத்தம் சுற்றிலும் சிதறியடிக்கிறது. இன்னும் ஆவேச நிலையிலேயே இருக்கும் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்துள்ள நடிகர்களைக் கூத்து அரங்கத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்கள். துரியோதனன் கூத்து அரங்கிற்குத் திரும்பக் வரக்கூடாது, அவ்விரண்டு நடிகர்களும் ஒருவருக்கொருவர் சமீபமாக இருக்கக்கூடாது. ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் திரௌபதி அம்மன் சிலையும், கூத்தில் திரௌபதி வேடம் போட்டிருப்பவரும் துரியோதனனின் மண் உருவம் தொடையிலிருந்த இரத்தம் வழிய, அடிக்கப்பட்ட இடத்தில் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இரத்தத்தின் குறியீடான சிவப்புச் சாயம் அவ்விருவரின் அவிழ்ந்த கூந்தலிலும் பூசப்பட்டு, அதன் பின் கூந்தல் முடியப்படுகிறது. திரௌபதியின் சபதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கிராமத்திலிருந்து ஓர் ஏணியில் ஊர்வலமாக ஒரு பெண் துரியோதனனின் மண் உருவத்திடம் அழைத்து வரப்படுகிறாள். அவளிடம் ஒரு துடைப்பமும், தானியங்கள் புடைக்க உபயோகப்படும்  முறமும் இருக்கிறது. அவள் உரத்த குரலில் ஒப்பாரி வைத்தபடி வருகிறாள். அவளை துரியோதனின் அரண்மனைப் பெண்களின் பிரதிநிதிகளின் சின்னமாகக் கொள்ளவேண்டும். அவள் துரியோதனின் மண் உருவத்தின் மேல் அமர்ந்து ஒப்பாரி வைக்கிறாள். பார்வையாளர்கள் அவளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். திரௌபதியின் சிலை ஒரு பிரார்த்தனைக்குப் பின் கிராமத்தினூடே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பின் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது .இதற்குள் மதியமாகி விட்டிருக்கிறது.
இரண்டு மணியளவில் பாரதவிழாவின் கடைசிச் சடங்கான தீமிதிக்கும் சடங்குக்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. இது எல்லா அம்மன்  திருவிழாக்களுக்கும் (காளி, மாரியம்மன்) பொதுவான சடங்கு. திரௌபதி அம்மன் தாயாக வழிபடப்படும் தெய்வம், மேலும் வில்லிப்புத்தூராரின் தமிழ் பாரதக்கதையின் படி அவள் அக்னியில் பிறந்தவள். ஒரு நீள் சதுரமான தீக்குழியில் பெரிய மரக்கட்டைகள் எரிக்கப்பட்டு அக்குழி ஒரு எரியும் படுக்கையாய் மாறியுள்ளது. குழியிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு சிறிய தண்ணீர் குட்டை உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் தர்மகர்த்தா, கோவில் அலுவலர்கள் மற்றும் கரகம் எடுப்பதற்காக விரதம் மேற்கொண்டுள்ள ஐந்து காப்புக்காரர்கள் எல்லாம்  கோவில் குளத்துக்குக் குளிக்கச் செல்கிறார்கள். அவர்கள் மஞ்சள்நீரில் நனைக்கப்பட்ட துணிகளைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து, மணிக்கட்டுகளைச் சுற்றி மலர்களைச் சுற்றிக்கொண்டு, கிராமத்து மக்களுடன் ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று, அங்கு சடங்கால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கரகப்பானைகளை எடுத்துக் கொள்வார்கள். கோவிலில் பிரார்த்தனை செய்த பின், கரகம் எடுப்பவர்களும் அம்மனும் ஊர்வலமாக தீக்குழிக்கு வருவார்கள்.அம்மன் சிலையை அங்கே வைத்து, எரியும் கரித்துண்டுகளைத் தீக்குழி முழுவதும் சமமாகப் பரப்புவார்கள். அப்பொழுதுதான் வெட்டப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட ஒரு அக்கினியின் சிலையும் அங்கு வைக்கப்படுகிறது .பிரசங்கி தீக்குழியிலிருந்து ஒரு கையளவு தணல்கட்டிகளை எடுத்து அவற்றை மஞ்சள்நீரில் நனைத்த ஒரு துணியில் கட்டி அதை திரௌபதி அம்மன் சிலையின் மடியில் வைக்கிறார். அந்தத் தணல் துணியை எரித்து வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் அது கெட்ட சகுனமாகக் கருதப்படும். மாறாக அப்படி வரவில்லையானால், அது தீமிதிப்பை நடத்தலாம் என்பதற்கான அறிகுறி. எரியும் நெருப்புக் குழியினுள் மலர்கள் எறியப்படும். ஆவேச நிலையில் இருக்கும் கரகம் தூக்குபவர்கள் – அவர்களை நெருப்பில் எரிந்து மரிப்பதிலிருந்து காப்பாற்ற அவர்கள் உடலை அம்மன் ஆட்கொண்டிருக்கிறாள் – தீக்குழியின் முழு நீளமும் மூன்றுமுறை நடக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் குழியிலிருந்து வெளியேறும் கோடியில் இருக்கும் தண்ணீர்குட்டையை மிதித்துப் பின் திரும்பக் குழியின் ஆரம்ப இடத்துக்கு வந்து மீண்டும் தீமிதிப்பார்கள். ஒருமுறை தீமிதிப்புச் சடங்கு முடிந்ததும், குழியைச் சுற்றி நின்றிருக்கும் கிராமத்தினர் இதற்குள் சற்றுக் குளிர்ந்திருக்கும் நெருப்பிலிருந்து ஒரு கையளவு கரித்துண்டுகளை அம்மனின் பரிசாக எண்ணித் தம் வீட்டுக்கு எடுத்துப் போவார்கள்
மறுநாள் தர்மராஜாவின் பட்டாபிஷேகம் கோவிலில் நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கில் பிரசங்கி பாரதத்தில் இதுகுறித்த சம்பவத்தைப் பற்றிய விளக்கவுரையை நடத்தி அதன் பின் தர்மராஜாவின் சிலைக்கு மகுடம் அணிவிப்பார். இத்துடன் இருபது நாள் பாரத விழா முடிவடைகிறது.

(தொடரும்)

மொழியாக்கம்: உஷா வை

0 Replies to “தெருக்கூத்து – பகுதி 3”

 1. அன்புள்ள ஶ்ரீ வெங்கட் சாமிநாதன்,
  நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
  இந்தக் கடிதம் எழுத வந்ததற்கு முக்கிய காரணம் உங்கள் தெருக்கூத்து பற்றிய கட்டுரை. பிரசுரமாவதற்கு முந்தி இந்த இதழின் பகுதியைப் படிக்க எனக்கு நேரம் கிட்டவில்லை. இன்று காலை படித்தேன். முந்தைய இதழின் பகுதியைப் படித்த போதே சொல்லி இருக்க வேண்டியது இது. யாமினி பற்றிய கட்டுரையைப் போலவே, ஆனால் அதை விட சுலபமாக என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ள இந்தக் கட்டுரை, சிறப்பாக அமைந்திருக்கிறது.
  ஒரு மானுடவியலாளரின் அனுபவ விவரணை போலவும், ஆவணமாகவும் கூட இது அமைகிறது, அதே நேரம் தன் இலக்கியச் சுவையை இழக்காமலும் அமைகிறது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
  இதைப் படிக்கையில், நான் பார்த்திருக்கிற சில தெருக்கூத்து விழாக்களை எத்தனை தூரம் விலகிப் போய்ப் பார்த்திருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. அதை ஒரு தியேட்டர் என்று பார்ப்பதில் எத்தனையை நாம் இழக்கிறோம் என்றும் தோன்றியது.
  ஆனாலும் விரும்பி ஏற்கும் மாயம் என்பதன் அர்த்த புஷ்டி மாயத்தை வலிந்து விலக்கிய கருத்தியல் பாலையிலிருந்து பார்க்கையில் தெரிகிற அளவு, நேரடியாக களத்தில் இருந்து பார்க்கையில் கிட்ட மாட்டேனென்கிறது. அதற்கு ஒரு காரணம் பாலை வாழ்வில் மனதும் சிந்தனையும் நிரம்பவே உலர்ந்து விட்டதாலோ என்னவோ.
  தென்னிந்தியக் கோவில்கள் எத்தனையோ சிறப்பானவை. அவற்றூடே அனேகமாக வருடந்தோறும் உலவுகிறேன். வருடா வருடம் ஊர்களுக்குப் போய் புதுப் புது நிலப்பரப்பில் பல கோவில்களைப் பார்க்கிறேன். அவற்றின் கட்டுமானத் திறமை, கலை நேர்த்தி என்று எதையெல்லாமோ பார்த்து வியப்பு எழுந்தாலும், கர்ப்பக் கிரஹத்தின் முன் நின்று பூஜைகளைப் பார்க்கையில் மனதில் ஒரு கிளர்ச்சியும் எழாமல், அவற்றைத் தர்க்கத்தாலோ, தேவையற்ற விமர்சன நோக்காலோ பார்த்து எடை போடத்தான் புத்தி போகிறது.
  கருவறை எனப்படுவதிலிருந்து வீசும் பழம் வாடைகளும், வெப்பமும், அந்த அர்ச்சகரின் வியர்வைக் குளியலும், வேலையின் துன்பமும்தான் எனக்கு முதலில் வந்து உறுத்துகின்றன.
  தெருக்கூத்தை நேரில் இன்று பார்க்க முடிந்தால், ஏதாவது கிராமத்தின் சூழலில் பார்க்க முடிந்தால் நீங்கள் எழுதுவதில் இருக்கும் அர்த்தச் செழுமையைக் கண்டு உணர முடியுமா என்று யோசிக்கிறேன். அப்படி கட்டுக் கோப்பாக உள்ள கிராமங்கள் ஏதும் இருக்குமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் தொண்டை மண்டலத்தில் பல ஊர்கள் நடுவே சுற்றும் ஒரு வாய்ப்பு எனக்குத் தொடர்ந்து கிட்டுகிறது.
  இதை எழுதி வருவதற்கு உங்களுக்கு என் நன்றி. உஷாவின் கடும் உழைப்பில் மொழி பெயர்ப்பு ஆற்றொழுக்காக அமைந்திருக்கிறது என்பதும் ஒரு தனிச் சிறப்புதான். அவருடைய மொழியில் இன்றைய உலர்ந்த நடை ஊடுருவாமல் இருப்பது, கட்டுரை எழுதப்பட்ட காலத்தின் பாணியைக் கொணர்வதோடு, தெருக்கூத்து நிஜமாக நிறைய நடந்த வருடங்களின் பண்பாட்டையும் நமக்குக் கை மாற்றித் தருகிறது.
  அருமையான கூட்டணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.