தெருக்கூத்து – பகுதி 2

Folk_Artists_Theru_Koothu_Kadhakkali_Kathakkali
(படம்: கார்த்திக் ஹெப்பார்)

இந்த கிராம மக்களும், அவர்களின் இத்தகைய கண்ணோட்டமுமே இத்தனை வருடங்களாய், நூற்றாண்டுகளாய் இன்றுவரை தெருக்கூத்தை வாழவைத்து வந்துள்ளன, அழகியல் ரசனை அளவுகோல்கள் அல்ல. நாடகமேடைக்கும் அப்பால், இந்த சடங்குமுறைதான் அதை நடத்தி வந்துள்ளது. சடங்குக்கப்பால், திரௌபதி அம்மன் இச்சடங்குக்கு அதன் ஜீவனைக் கொடுத்துள்ளார். இக்காவியத்தை (மகாபாரதம்) தமிழில் எழுதி இச்சடங்குக்கு அதன் கருப்பொருளைக் கொடுத்த காவிய கவிஞர் வில்லிப்புத்தூரார் 14ம் நூற்றாண்டில் தொண்டைமண்டலப் பகுதியில் பிறந்தவர் .இதற்கு முன்பு கிருத்துவ சகாப்தத்தின் ஆரம்ப வருடங்களில் பெருந்தேவனார் எழுதிய பாரதம் இன்று வழக்கில் இல்லை. வில்லிப்புத்தூரார் காலத்திலேயே அது காணாமல் போய்விட்டிருந்ததா, அந்த இடைவெளியை நிரப்பத்தான் இதை அவர் எழுதினாரா அல்லது வேறு காரணமா என்பது நமக்குத் தெரியாது. வில்லிப்புத்தூரார் அப்பகுதியில் பெரிதும் போற்றப்பட்டவர்.
பழங்குடியினர் தாய்த் தெய்வமாய் வழிபட்ட அம்மன் எப்பொழுது திரௌபதி அம்மனாகவும் மாறினார் என்பது நமக்குத் தெரியாது. காஞ்சிபுரத்தின் காமாட்சி (இங்கு ஆஸாமில் ஆரியர்களுக்கு முற்பட்ட காமாக்யா வழிபாடு நினைவுக்கு வருகிறது), மதுரை மீனாட்சி, கன்யாகுமாரியின் கன்யாகுமாரி போன்ற பல காவல்தெய்வங்கள் பிற்காலத்தில் சமஸ்கிருதப்படுத்தப்பட்டு, மேநிலைப் படுத்தப்பட்டு, அவர்களைச் சுற்றி பல தொன்மங்கள் பின்னப்பட்டன.  ஜைன மதத்தின் ஆதிக்கப் பரவலுக்கு எதிராய் உருவான இந்து எதிரெழுச்சியின் காரணமாய், பல்லவர்களின் காலத்திலிருந்து (கிபி 7ம் நூற்றாண்டு) இது ஒரு புத்தெழுச்சி இயக்கமாய் மாறியதில் திராவிட இறைவடிவங்களும், சம்பிரதாயங்களும் இந்துமதத்தினுள் சேர்ந்தன. சங்க நூல்களில் (கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகள்) இத்தகைய தாய் தெய்வங்கள், வளமை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. அப்பொழுது இவை இந்துமதக் கடவுள்களிடையே இடம்பெறவில்லை .உடனே அதன்பின் வந்த  நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலம் விஜயநகரை ஆண்ட நாயக்கர்களின் கீழ் வந்தது .நாயக்கர்கள் தீவிர வைஷ்ணவர்கள், தெருக்கூத்துக் கலையைப் பராமரித்த தொண்டை மண்டலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ வழிபாடு என வந்தால் பெரும்பாலும் சிவனை வழிபட்டவர்கள். திரௌபதி அம்மனுக்கு ஒரு சன்னதி கட்டவேண்டுமெனில், ஆந்திரா தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள செஞ்சிக்குச் சென்று, அங்கு ஒரு குறிப்பிட்ட புனிதமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, பின் கால்நடையாகவே வழியில் எங்கும் நிற்காமல் அந்த மண்ணை எடுத்து வரவேண்டும் என்று ஒரு நம்பிக்கை இன்றும் இருக்கிறது, முந்தையத் தலைமுறையினர் பலர் இதற்கு சான்றளிப்பார்கள். இந்தக் கதைக்குள் செஞ்சி எப்படி நுழைந்து கொண்டது என்பது தெரியவில்லை. இங்கு கவனிக்க வேண்டிய இரண்டு உண்மைகள், திராவிட ஆன்மாவில் ஆழமாய் புதைந்துள்ள தாய் தெய்வ வழிபாட்டுமுறை பின்பு சமஸ்கிருத பாதிப்பின்கீழ் வந்து, அதைச் சுற்றிக் கட்டுக்கதைகள் புனையப்பட்டு, ஒவ்வொரு தாய் தெய்வத்துக்கும் வெவ்வேறு கதைகள் பின்னப்பட்டு அவற்றின் நிலை அவ்வாறாய் உயர்த்தப்படுகிறது. பின்னால் அவர்கள் இந்துக் கடவுள்கள் வரிசையில் சேர்க்கப்படுகின்றனர். வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த தொன்மங்களைப் பற்றி எதுவும் தெரியாது. இரண்டாவதாய், விளங்காத காரணங்களால், தெற்கின் பிராம்மணரல்லாத சமூகங்களில் மகாபாரதக் காவியம் ராமாயணத்தை விட பிரபலமானதாக உள்ளது. கதகளி, யக்ஷகானா மற்றும் இதர நாட்டார் நாடக வடிவங்களின் பாடாந்திரத்தை மேலோட்டமாக பார்த்தாலே இதற்கு சான்று கிடைக்கும். இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் தெற்கின் இப்பகுதியில் திரௌபதி தெய்வமாக்கப்பட்டதன் உட்பொருளையும் அவளுடன் யுதிஷ்டிரரும் தர்மராஜா என அழைக்கப்பட்டு, அவருடன் அனைத்துப் பாண்டவரும் தர்மராஜர் கோவில் என்றும் அழைக்கப்படும் திரௌபதி அம்மன் சன்னதிகளில் வழிபடப்படுவதையும் சுட்டுவதற்காகத்தான்.
இவை அப்பகுதியின் சடங்குகளும், நாடகமும் மகாபாரதக் கதையைத் தம்  ஏற்பாடுகளினுள் ஒருங்கிணைத்ததன் காரணத்தை விளக்கக் கூடும். அவரவர் பகுதியின் தாய் தெய்வ வழிபாட்டு மரபை அடிப்படையாகக் கொண்ட அல்லது அத்தெய்வத்தின் மேலுள்ள பக்தியால் தூண்டப்பட்ட பல வித உள்ளூர் நாடக/ நடன நிகழ்ச்சிகள் உண்டு.  சடங்குமுறை சார்ந்த நாடகவகைகள் அல்லது முறைப்படுத்தப்பட்ட நாட்டார் நடன நிகழ்ச்சிகளில் உள்ளூர் தெய்வத்தைப் பற்றிய தொன்மக் கதைகள் இடம் பெறும் – உதாரணமாக கரகம், கணியன் ஆட்டம், காவடி என்பது போல. ஆவி பிடிப்பது, பேயோட்டுவது, நடிகர் அல்லது நடனமாடுபவரினூடே தெய்வம் காட்சி தருவது போன்றவை இத்தகைய நிகழ்ச்சிகளில், வடக்குக் கேரளப்பகுதியின் தெய்யம், முடியேற்று மற்றும் தெற்கு கர்நாடகம், துளுநாட்டின் பூதம் போன்றவற்றில், முக்கிய பகுதியாகும். இவை அனைத்திலும் உரத்த சுருதியில் தாள வாத்தியங்களின் ஒலி, ஆவிகளை சாந்தப்படுத்தும் பாடல்கள், நாட்டார் நடனங்கள், மந்திர சூனியம் சம்பந்தமான சடங்குகள் ஆகியவற்றை அடையாளம் காணலாம். இது பார்வையாளரின் கேளிக்கைக்கான நடிப்பு அல்ல, இது ஒரு பிராயச்சித்த கருமம். இவற்றிலிருந்துதான் தெருக்கூத்து உருவானது, இரண்டு வேறுபட்ட கலைகளிலிருந்து,வெகுவாய் சமஸ்கிருதத் தாக்கமுள்ள  செவ்வியல் கலையான கூடியாட்டத்திலிருந்தும், நாட்டார் கலை வகையான தெய்யத்திலிருந்தும், கதகளி உருவானது. கதகளியின் ஆஹார்ய முறைகளும், வன்முறையின் வெளிப்பாடும் தெய்யம் மற்றும் முடியேற்று கலைகளிலிருந்தும், நயநாகரிகமான நாடக வழக்கங்களும், வெகுவாய் முறைப்படுத்தப்பட்ட அபிநய சம்பிரதாயங்களும் கூடியாட்டத்திலிருந்தும் பெறப்பட்டவை. கர்நாடகத்தின் யக்ஷகானாவின் ஆஹார்யம், உரத்த சுருதி இசை மற்றும் வன்முறை வெளிப்பாடு இவை பூதம் கலையிலிருந்தும் அதன் நாட்டிய நடன கட்டமைப்பு திட்டம் ஆந்திரத்தின் யக்ஷகானாவிலிருந்தும் பெற்றவை, இப்பெயரையும் அது பின்னர் எடுத்துக்கொண்டது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மைச் செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக் கொண்டன. இந்தப் பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டு விட்டன. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது. இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.
இதன் 18/20 நாட்கள் தொடரும் வரிசைக்கிரமமான சடங்குகளையும், அதைத்தொடர்ந்து பாடியும், நடனமாடியும் காவியத்தை நடித்துக் காட்டுதலைப் பற்றியுமான ஒரு சுருக்கமான வர்ணனை, இது எத்தகைய பல்படிவச் சுவடி (palimpsest) அல்லது கோலாஜ் (collage) போன்றது என்பதைக் காட்டும். சில சடங்குகள் வரலாற்றுக்கு முற்பட்டகாலத்துக்கு இட்டுச்செல்பவை, அக்குடும்பத்தைச் சேர்ந்த கலைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – நம் அண்டை மாநிலங்களின் தெய்யம், முடியேற்று, மற்றும் பூதம்.  இது போன்ற சடங்கு சம்பந்தப்பட்ட வடிவங்களும், பேயோட்டுதல், ஆவியுலகு சம்பந்தப்பட்ட வடிவங்களும் கிருத்துவுக்குப் பிற்பட்ட ஆரம்ப நூற்றண்டுகளின் சங்க நூல்களில் பேசப்படுகின்றன, இத்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே இவற்றைப் பற்றிக் கிட்டும் ஆதாரங்கள்.
மிக முக்கியமான விஷயம், இந்த நூல்கள் எழுதப்பட்டபோது இவை அனைத்தும் கிளை மொழியில் வேறுபட்ட தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தன. இதையே மாற்றிச் சொன்னால், இக்கலைவடிவங்கள் அவற்றின் வேர்களைத் தேடிப் போனால் அவை தமிழ் இலக்கியத்திடம் போய்த் தான் தஞ்சம் அடைய வேண்டும்.

oOo

( 2 )

எப்பொழுதும் அறுவடை முடிந்தபின்பே, கிராமத்துப் பெரியவர்களும், அதிகாரிகளும் கூடி திரௌபதி அம்மன் விழாவை நடத்த முடிவெடுத்து அதற்கான சுபதினத்தை நிச்சயிப்பார்கள், இதை பாரத விழா என்றும் சொல்வார்கள். அவ்வாறு முடிவுசெய்த நாளில் மீண்டும் அவர்கள் கோவிலில் கூடி, கோவில் கொடிகள், வாள், திரிசூலம் போன்ற புனித ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டு பறையடித்துக்கொண்டு, நாதஸ்வரம் முகவீணை போன்ற வாத்தியஙகளின் இசையோடு கிராமத்துக் குளத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். குளத்தில் குளித்து பின் குளத்து நீரை குடங்களில் மொண்டு எடுத்துக்கொண்டு கோவிலுக்குத் திரும்ப, அங்கு தெய்வத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் தெய்வச்சிலையை ஊர்வலமாக எடுத்து, கிராமத்தைச் சுற்றிச்  செல்வார்கள். ஊர்வலம்  செல்லும் பாதைக்குட்பட்ட இடம் அனைத்துக்கும் அவளே காவல்தெய்வம் என்பதை அந்த ஊர்வலம் குறிப்பிடும்.  இறுதியில் கோவிலின் கொடிக்கம்பத்தில் வந்து ஊர்வலம் முடிந்து, கம்பத்தில் புனிதமான மஞ்சள் நிறக் கொடியேற்றப்படும். கொடியேற்றுவது, விழாவை நடத்த முடிவு செய்ததை அறிவிப்பதைக் குறிப்பது.
சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளின் காரணமாய் இந்த முடிவு எடுக்கவில்லையென்றாலும், இரவில் யாராவது யாருக்கும் தெரியாமல் கொடியை ஏற்றிவிட்டால், கண்டிப்பான சம்பிரதாயங்களால் பிணைக்கப்பட்ட கிராமத்தினர் விழாவைக் கட்டாயமாய் நடத்தியே ஆகவேண்டும். இதனால் இதை “திருட்டுக் கொடி” என அழைப்பார்கள். அடுத்த அமாவாசையன்று, இந்த அத்தனை சடங்குகளும் திரும்பவும் நடத்தப்பட்டு ’மெய்’ அல்லது ’உண்மை’க் கொடியை ஏற்றுவதில் முடியும். விழாவின் செலவுகளுக்கான நிதி பற்றிய முடிவுகளும் எடுக்கப்படும்; ஒவ்வொரு சாதியினரும் முன்வந்து ஒவ்வொரு நாளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள், இது அச்சாதியைச் சேர்ந்தவர்களிடையே அவரவர் தகுதிக்குத் தக்கபடி வசூலிக்கப்படும்.
அன்றே வில்லிப்புத்துராரின் பாரதத்தில் தேர்ச்சி பெற்றவர் ஒருவர் அதை தினமும் கதையாகச் சொல்வதற்காகவும், தெருக்கூத்துக் குழுவினரும் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களுக்கும் முத்திரை முன்பணமும் தாம்பூலமும் கொடுக்கப்படும். விழாவின் ஆரம்பம் பற்றி சுற்றுப்புறக் கிராமங்களுக்கு பறையடித்து அறிவிக்கப்படும். இப்போது பறைக்கு பதில் அச்சடித்த காகித அறிவிப்புகள் உபயோகிக்கப்படுகின்றன.
விழாவின் துவக்க நாளன்று, இரண்டு முக்கிய சடங்குகள் – கரகமும், காப்பும் நடைபெறும். கோவிலின் பொறுப்பாளரான தர்மகர்த்தா, கோவிலின் தலைவரான கண்ணாசாரி மற்றும் மூன்று முக்கிய தலைவர்கள் (குமார வர்க்கம்) ஆகியவர்கள் காப்புக்காரர்களாய் நியமிக்கப்படுவர். காப்பு என்பது காப்பதைக் குறிக்கும். இச்சந்தர்ப்பத்தில் அது மணிக்கட்டைச் சுற்றிக் கட்டப்படும் மஞ்சள் தடவிய கயிறைக் குறிக்கும். அவர்கள் மஞ்சள் நிற வேட்டியுடுத்தி, விழா முடியூம் வரை கோவிலுக்குள்ளேயே தங்கி இருக்கவேண்டும், இந்நாட்களில் அவர்கள்,உடலுறவு, மாமிசம், கள், மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும். அவர்கள்தான் கரகப்பானையை எடுக்கும் முதன்மையான ஐந்து நபர்கள்: தர்மகர்த்தா தூக்கிச்செல்லும் கரகப்பானையில் திரௌபதி அவளது சிறிய உருவத்தில் பிரத்யட்சமாவதாகக்  கருதப்படுகிறாள். ஆகையால் குளத்து நீரை நிரப்பி, மஞ்சள் நிறத் துணியைச் சுற்றியபின், இக்கரகப் பானைகள் கோவிலின் உட்பிராகாரத்தில் வைக்கப்பட்டு, விழா ஊர்வலங்களுக்கு மட்டுமே வெளியில் எடுக்கப்படும். தெய்வங்களை வாழ்த்திப் பாடும் தமிழ் பாடல்களுடன் காப்புச் சடங்கு முடிந்ததும் காப்புக்காரர்கள் (ஐந்து முக்கிய கரகப்பானை எடுப்பவர்கள்) செய்யக்கூடியவை,  செய்யக்கூடாதவை என வழங்கும்  விதிகளை அனுசரிக்கவேண்டும். கோவில் பூசாரியும், தெய்வீக சடங்குகளுக்கு பம்பை அடிப்பவரும் காப்புக்காரர் வரிசையில் சேர்ந்தவர்கள். கோவிலின் புனித வாளான அலகுக் கத்திக்கும், பம்பைக்கும் காப்பு கட்டப்படும்.
காப்புச் சடங்குக்குப் பின் கரகம் எடுப்பவர்களுடன் தாள (percussion) வாத்தியங்களுடனும் துளைக்கருவி(Wind instrument) வாத்தியங்களும் இசைக்க, ஊர்வலம் திரும்பவும் ஆரம்பித்து, கிராமத்தைச் சுற்றி வந்து, திரும்ப கோவிலுக்கு வந்து, கோவிலை மூன்று முறை சுற்றிய பின் கரகப்பானைகள் திரௌபதி அம்மன் சன்னதியின் உள்பிராகாரத்தில் வைக்கப்படும். பின்பு திரௌபதி அம்மனின் சிலை மீண்டும் கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதுவரை விளக்கப்பட்ட சடங்குகள்  அனைத்துமே மாரியம்மன், திரௌபதி அம்மன், காளி என பல பெயர்களில் அழைக்கப்படும் தாய் தெய்வங்களுக்கான அனைத்து திருவிழாக்களுக்கும் பொதுவானது. அவர்கள் கிராமத்துக் காவல் தெய்வங்களாகவும் பூஜிக்கப் படுபவர்கள் . இத்தகைய கோவில்கள் கிராமத்து எல்லைப்பகுதியில் இருப்பதன் முக்கியத்துவம் இதுதான்.
உச்சிவேளையில் கோவில் சடங்குகள் முடிந்தபின், கோவிலிலிருந்து அனைத்து இசைக்கருவிகளும் ஒலிக்க ஒரு சிறிய ஊர்வலம் கிளம்பி பிரசங்கியை அவர் வீட்டிலிருந்து கோவிலுக்கு முன்பாய் இதற்காகவே எழுப்பப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு அழைத்துப் போவார்கள். அவரது பிரசங்கம் வில்லிப்புத்தூராரின் பாரதத்திலிருந்து பாடல்களை ஆதிபர்வத்திலிருந்து ஆரம்பித்துப் பாடி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் அதன் நீதிவிளக்கம் போன்றவற்றை எளிமையான மொழியில் விளக்குவதாக இருக்கும். இதை அவர் படிப்படியாய் சீராய் கொண்டுபோய், பத்தாவது நாளன்று சரியாய் திரௌபதியின் திருமணத்தில் வந்து நிற்க வேண்டும். அன்று மாலையில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்து திரௌபதி திருமணமாக இருக்கும். இவ்வாறு, பிரசங்கி சொல்லும் பாரத கதையின் நிகழ்வு அன்று மாலை தெருக்கூத்தாக நிகழ்த்தப்படும். இதே தோரணையில், தெருக்கூத்தின் இறுதிநாளான 18-ம் நாளன்று பிரசங்கி துரியோதனவதம் பற்றி உரையாற்றியபின் தெருக்கூத்தில் அதே சம்பவம் நடிக்கப்படும்.
மாலை 5 மணி வாக்கில் பிரசங்கம் முடிவடைகையில், காப்புக்காரர்கள் குளத்துக்குப் போய், குளித்து, குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து, கோவிலுக்குப் போய் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். திருவிழா தினங்கள் அனைத்திலும், காலையிலிருந்து மாலை வரை இச் சடங்குகள் முறை தவறாமல் தினமும் அனுஷ்டிக்கப்படும்..
இங்கு கிராமத்தைக் காக்கும் அம்மன் (தாய் தெய்வம்) பத்தினித் தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் கூடிக்கலப்பதைக் காண்கிறோம், ஒரு மரபார்ந்த வழிபாட்டு முறையில் ஒரு காவியத்தின் கதாபாத்திரம் தெய்வமாக்கப்பட்டு, அந்தக் காவியமும் இவ்வழிபாட்டுமுறைக்குள் இணைந்து இரண்டு  தளங்களில் இந்த சேர்க்கை இடம் பெறுகிறது: ஒன்று, திரௌபதியின் பல வெளிப்பாடுகளிலும் அவளது ஊர்வலம் – காப்புக்காரரின் உருவில், கரகப்பானையின் உருவில், அத்தோடு  அவளது சிலை வடிவில் – அவள் ஒவ்வொரு தினமும் தன் இடப்பரப்பை திரும்பத் திரும்ப உணர்த்துவதாய், உறுதிப்படுத்துவதாய், சடங்கின் ஒவ்வொரு அம்சமும் அந்த உறுதிக்கான ஒரு சந்தர்ப்பமாய் அமைந்துள்ளது.
தெருக்கூத்து எப்படி கிராமத்துக்குள் நுழைந்து பின் முழுக்கிராமத்தையே தன் களமாக மாற்றி, ஒரு மாதிரியான நடிப்பை அது நிஜத்தில் நடப்பதுபோல் மாற்றுகிறது என்ற திருவிழாவின் முக்கியமான பகுதி, 10-வது நாளிலிருந்து படிப்படியாய் விரிய ஆரம்பிக்கிறது.

(தொடரும்)

 
மொழியாக்கம்: உஷா வை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.