ஷ்யாம லீலா

Chess-Men

 1999.
தில்லியில், ஒரு பெரும் இந்தியக் குடும்ப நடத்தும் நிறுவனத்தில் முதல் முறையாக, தொழில்முறை விற்பன்னர்களை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளில் அமர்த்த முடிவெடுத்தார்கள். எனக்கு கொள்முதல் டிபார்ட்மெண்டில் வேலை கிடைத்தது.
என்னோடு சேர்ந்த புதிய தலைவர் – செம்பூரில் பிறந்த பாலக்காட்டு அய்யர். கொம்பன். சேர்ந்தவுடனேயே, துப்பறியும் வேலை கொடுத்தார். லிக்விட் பேரஃபின் என்னும் மெழுகெண்ணெய் வாங்குவதை நோண்டச் சொன்னார்.
மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்க, நாங்கள் சேர்வதற்கு ஒரு மாதம் முன்பு, வருடாந்திர ஒப்பந்தம் நடந்திருந்தது. விலை: லிட்டருக்கு 23 ருபாய். மார்க்கெட் விலை – 18 ரூபாய். வாங்கும் அளவு மாதம் 5 லட்சம் லிட்டர். நிறுவனத்துக்கு நஷ்டம் வருடம் : 3 கோடி. (அன்று சென்னை கோட்டூர்புரத்தில், ஒரு கிரவுண்ட் 15 லட்சம் விலை) லாபம் யாருக்கெல்லாம் என அனுமானிக்க முடிந்தது. தீர்மானிக்க முடியவில்லை.
மும்பை நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, உங்களிடம் இருந்து வாங்கும் மெழுகெண்ணெயின் கொள்முதல் விலை ரூ.18 என நிர்ணயிக்கப் படுகிறது. இருக்கையில் இருந்து குதித்தே விட்டேன்.
“சார், ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது”, என்று பதறினேன்.
“மெயில நீ அனுப்பறியா.. இல்ல நான் அனுப்பட்டுமா?” இந்தக் கேள்விக்கு ஒரு அடிமையின் பதில் என்னவாக இருக்க முடியும்?
அடுத்த வாரம், மும்பை சப்ளையரிடம் இருந்து வக்கீல் நோட்டிஸ் வந்து விட்டது. இப்போது, லீகல் டிபார்ட்மெண்டும் பதறத் துவங்கியது. எங்களது, தில்லியில் இருக்கும் பெரும் நிறுவனமாக இருந்தும், ஒப்பந்தத்தில் கோர்ட் ஜூரிஸ்டிக்‌ஷன் மும்பை என கையெழுத்தாகியிருந்தது.
எந்தக் கோர்ட்டில் இருந்து நோட்டிஸ் வந்தாலும், செட்டில்மெண்டுக்குப் பெட்டி தூக்கும் பிஹாரி விகாஸ் ஜா நேரே போய் எம்.டி யிடம் பற்ற வைக்க, எனது இண்டர்காமில் அழைப்பு. “ஆப், ஜரா ஊப்பர் ஆயியே” (கொஞ்சம் மேலே வாருங்கள்) – இது ஷோலேயின் கப்பர் சிங்கின், புகழ் பெற்ற வசனமான, ”கித்னே ஆத்மி தே?” வுக்கு இணையானது என்று induction ப்ரோகிராமில் சொல்லியிருந்தார்கள்.
“தெய்வமே,” எனறு பதறிக்கொண்டு, தலைவரின் அறையை நோக்கி ஓடினேன். நிதானமாகத் தலையை உயர்த்தி, “என்ன?” என்று பார்த்தார். சொன்னேன். “போ. அவர் எது கேட்டாலும், நான் தான் சொன்னென் என்று சொல்,” என்றார்.
எம்.டியின் அறைக் கதவை, நடுங்கும் விரல்களால் தடவினேன் ‘எஸ்” என்று குரல். “சுப்ரமணியம் ஜி. நீங்கள் தான் புதிதாகச் சேர்ந்த மேனேஜரா?” அடுத்த கேள்வி, உங்களுக்கு எத்தனை மாதம் நோட்டிஸ் பீரியட் என்று இருக்கும் என்னும் சர்வ நிச்சயத்துடன். “ ஹா ந் ஸார்” என்றேன். ”
“உங்களை, பொருட்களை வாங்க நியமித்திருக்கிறோமா இல்லை, கோர்ட் சண்டை போடவா?”
“சார் , அது ஷ்யாம் சொன்னதனாலே அனுப்பினேன்.” இப்போது தலைவருக்கு, “ஜரா ஊப்பர் ஆயியே” கால்.
வந்தார். எம்.டி யின் குரலில் கனிவு. “ஷ்யாம். இந்த ஜா என்னமோ சொல்றாரே. என்ன விஷயம்?”
“சார், இந்த அக்ரிமெண்டில் நாம் ஒத்துக் கொண்ட விலை மிக அதிகம். வருஷத்துக்கு 3 கோடி நஷ்டம். அத விட, இந்த அக்ரிமெண்ட் ஜூரிஸ்டிக்‌ஷன் மும்பைன்னு கையெழுத்துப் போட்டிருக்கிறோம்?”
இப்போ, எம்.டி , ஜா வின் பக்கம் திரும்பினார். “அக்ரிமெண்ட் ட்ராஃப்ட் நீங்க க்ளியர் பண்ணினீங்களா?” ஜா, ஆமாமெனத் தலையாட்டினார். “சரி நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்.”
அவர் ரூமை விட்டு விலகும் வரை அமைதியாக இருந்தார். திரும்பி, “ஷ்யாம், இத நீங்களே ஹேண்டில் பண்ணுங்க. keep me updated,” என்று சொல்லியதும், நாங்கள் எழுந்து வந்தோம்.
“சார் என்ன பண்றது” எனப் பதறினேன். போய் லஞ்ச் சாப்பிட்டு வா என அனுப்பி வைத்தார். லன்ச் டேபிளில், லீகல் ஜா முறைத்தார்.
லஞ்ச் முடித்ததும் ஓடினேன். “ஜா வக் கூப்பிட்டு, இதை நாம லீகலா ஹேண்டில் பண்ணலாம்னு சொல்லிடு,” இதில் இனிப் பதறிப் பிரயோஜனமில்லை என முடிவு செய்து அவரை அழைத்தேன்.
போனிலேயே ஜா கொதித்தார். “நீங்க ரெண்டு பேரும் மட மதறாஸிகள். மூளையே கிடையாது. தோக்கற கேஸ எடுத்து என் தலைல போடறீங்க. சீக்கிரம் வேற வேல பாத்துக்கோ!”
மீண்டும் தலைவர் அறைக்குச் சென்று அப்டேட் செய்தேன். ‘சரி. இனிமே மெழுகெண்ணெய்க்கு என்ன பண்ணப் போறே? “
‘வேற ஆட்களிடம் இருந்து வாங்க வேண்டியதுதான்,” என்றேன்.
”வாங்கு” என்றார். “சார் இந்தக் கேஸ். “
“போய் வேலயப் பாரு.”

oOo

டுத்த வாரம், புதிதாய் வாங்கிய மெழுகெண்ணெய் வண்டி ஒன்று, கலப்படம் என்று சொல்லி நிராகரிக்கப் பட்டது. தரக் கட்டுப்பாட்டுத் தலைவர், புதிதாய் வாங்கும் நிறுவனத்தின் தரம் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது என்றும், வரும் ஒவ்வொரு வண்டியின் சாம்பிளும், தலைமை அலுவலகம் வந்து க்ளியர் செய்யப் படவேண்டும் என்று செய்தி அனுப்பினார்.
சப்ளை செயின் தலைவர், இதனால், இம்மாதம் 2 கோடி சேல்ஸ் பாதிக்கும் என ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க, சேல்ஸ் தலைவர் இந்தோ-பாக் சண்டை ரேஞ்சுக்கு உணர்ச்சி வசப்பட்டார். நமது கொள்முதல் டிபார்ட்மெண்ட் தான் நமது வளர்ச்சிக்கே முதல் பெரும் தடை எனத் தனிப்பட்ட உரையாடல்களில் சொன்னதாக மந்த மணம் எங்கும் பரவியிருந்தது. எல்லோரும், குறிப்பாக, கொள்முதல் டிபார்ட்மெண்ட்டின் பழைய ஊழியர்கள் உச் கொட்டினார்கள்.
இரண்டாவது வாரம், மும்பை சப்ளையரின் தில்லிப் பிரதிநிதி ஆனந்த் அழைத்தார்.
“இங்க பாருங்க சுப்ரமணியம் ஜி, ஏன் வீணா தோக்கப் போற கேஸை எடுத்துச் சண்டை போடறீங்க. நாம வேணா தனியாப் பேசி முடிவு பண்ணலாமே!”
“ஐயா, மார்க்கெட்டில் 18 ரூபாய்க்கு இருக்கும் மெழுகெண்ணெய்க்கு, 23 ரூபாய் கொடுப்பது அநியாயமில்லையா?” என்றேன்.
“சுப்ரமணியம் ஜி, நீங்கள் வாங்கும் மெழுகெண்ணெய்க்கும், மார்க்கெட்டில் கிடைக்கும் மெழுகெண்ணெய்க்கும் தர வேறுபாடுகள் உள்ளன.”
“இந்தக் கதையே வேணாம் ஆனந்த். இப்பொதைக்கு இதுதான் உலகின் மிக மலிவான கச்சாப் பொருள். பெட்ரோலிய சுத்திகரிப்பில் மிஞ்சும் கசடு. இதிலென்ன பிரமாதமான தர வேறுபாடு? எல்லோரும் ஒரே தரம் தான். நான் வெளியே பரிசோதனை கூடச் செய்து விட்டேன்.”
“அப்புறம், சப்ளைக்கு உங்கள் பேமேண்ட் – ரொம்ப லேட். 60 நாளாகுது. அதத் தொரத்தறதுக்கென்னே நான் உங்கள் அலுவலகத்தில் முக்கால்வாசி நாள் உட்காந்து இருக்க வேண்டியிருக்குது”
“பேமெண்ட் என் பொறுப்பு. தாமதமானால் என்னக் கேளுங்க. ஆனா அதுக்காக 5 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டுமா?”
“சுப்ரமணியம் ஜி, நீங்க இந்த நிறுவனத்துக்குப் புதுசு. அதனால, விஷயம் தெரியாம பேசறீங்க. இங்க இருக்கற சிஸ்டம்ஸ் அப்பறம் மக்கள் எல்லாமே வேறே. மத்ராஸ் மாதிரி இல்லே. உங்கள்ட்ட கொஞ்சம் தனியா பேச முடிஞ்சா நான் நேரில் எல்லாமெ சொல்றேன்.”
“நீங்க எப்ப வேணா வரலாம். ஆனந்த்ஜி!”
“இல்ல. உங்க அலுவலகத்தில வேணாம். வெளியில் எங்கேனும் சந்திக்கலாமா?”
அந்த அளவுக்கு நான் முட்டாளில்லை. “இல்லை ஆனந்த்ஜி, எனது தொழில் தொடர்புகள் யாரையும் நான் வெளியில் சந்திப்பதில்லை.”
”சரி சார். நான் மறுபடி பேசுகிறேன்”
தலைவரிடம் சென்று சொன்னேன். ஒரு எதிர்வினையும் இல்லாமல், “சரி” என்று மட்டும் பதில் வந்தது. பிரச்சினை அதிகமானால், இந்த ஆள் நம்மக் கடா வெட்டிருவானோன்னு ஒரு பயம் எழுந்தது.
அடுத்த வாரம் நகர்வது பெரும்பாடாக இருந்தது. கல்கத்தா தொழிற்சாலையில் இன்னுமொரு மெழுகெண்ணெய் லோடு தரக் கட்டுப்பாடு குறைவின் காரணமாக நிராகரிக்கப்பட்டது. “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு,” என்று பாடிக் கொண்டேன். வேறு ஒரு ரோமமும் களைய முடியாது.
வார இறுதியில், ஆனந்திடம் இருந்து மீண்டும் ஃபோன்.
”என்ன ஜீ. சண்டை போடறதுன்னே முடிவு பண்ணீட்டீங்களா?”
“ சொல்லுங்க ஆனந்த். என்னால வேற என்ன பண்ண முடியும்?”
“நான் வேணா, எங்க முதலாளியிடம் பேசி, ஷ்யாம் சார் கூட ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யட்டுமா?”
”நான் அவர்ட்ட கேட்கணும்.”
“கேட்டுச் சொல்லுங்க”
சரி என்று சென்றேன். “ஒகே! “ என்றார் தலைவர்.
அதற்கடுத்த வார மத்தியில் காலையில் 11 மணிக்கு நேரம் குறிக்கப் பட்டது.
மும்பை நிறுவனத்தின் முதலாளி, அஷோக் தேசாய் அன்று காலை 9:30 மணிக்கே வந்து விட்டான். ஆனந்த், எனக்கு ஃபோன் செய்து, “நாங்க முதல்ல உங்க முதலாளியப் பாத்துட்டு, வர்றோம். ஷ்யாம் சார்கிட்ட சொல்லிருங்க.” என்றான்.
போய்ச் சொன்னால், கடுவன் பூனை தலையைக் கடித்து விழுங்கி விடும். பயந்து சொல்லாமல் விட்டு விட்டேன்.
10:55 க்கு அவர்கள் வந்தார்கள். ஷ்யாமின் காரியதரிசி ரித்து சிங் ஒரு உருண்டு திரண்ட உத்தரப்பிரதேசி. அவர்களைத் தன் அறையில் இருத்திவிட்டு, ஷ்யாமின் அறைக்குச் சென்றாள். அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, என்னையும் அழைக்கிறார்கள் என்றாள்.
உள்ளே பலத்த சிரிப்பு.
“ஷ்யாம், உனக்குத் தெரியுமா? என் அப்பாவும், நமது முதலாளியின் தந்தையும் கோல்ஃப் தோழர்கள்.”
“அப்படியா. அந்தக் காலத்தில் இங்கே கோல்ஃப் கோர்ஸ் இருந்ததா?”
“சொல்லும்படி இல்லை. அதற்காகவே அடிக்கடி, சிங்கப்பூர், ஹாங்காங் செல்வார்கள். கோல்ஃபோடு இன்னும் பல விளையாட்டுக்கள் விளையாடலாம்.”
ஒரு கடுவன் பூனை பலமாகச் சிரித்து இப்போது தான் பார்க்கிறேன். எனக்கு சங்கர் பட ஹீரோ போல எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. கம்பெனிக்கு 3 கோடி நஷ்டம் வைத்த துஷ்டனிடம் இளிப்பென்ன வேண்டிக் கிடக்கு என்று. அஷோக் தேசாயையே முறைத்தேன். உங்களைப் போன்ற குஜராத்திகள் ஊரையே விற்று விடுவீர்கள்.
சிரித்த வேகத்தில், நாற்காலி சற்றுப் பின்னகர. அஷோக்கின் கை வழுக்கியது. நிதானம் தவறிய ஒரு நிமிடம் அவன் கண்களில் ஒரு பதற்றம். நான் அவனையே முறைத்துக் கொண்டிருந்தேன். சற்று அவஸ்தையாக என் விழிகளை அவன் விழிகள் சந்தித்து மீண்டன. சற்று நேரம் கழித்து அவன் கண்கள் மீண்டும் என்னை நோக்கி, பதறி வேறு பக்கம் நோக்கின.
ஷ்யாம் கவனித்துவிட்டார்.
“அஷோக் என்ன சாப்பிடுகிறாய்?”
“மாலை ஆறுமணிக்கு முன்பாகச் சாப்பிடும் எந்த பானமும்”
“டீ?”
“டீ.”
”ரித்துவிடம் டீயும் பிஸ்கெட்டும் சொல்!” என்னைப் பார்த்துச் சொன்னர் ஷ்யாம்.
இண்டர் காமில் சொல்வதற்கென்ன என்று நினைத்துக் கொண்டே ரித்துவிடம் சென்று, டீயும் பிஸ்கட்களும் சொன்னேன்.
பாஸ் நல்ல மூடில் இருக்கார் போல, எனச் சொல்லி அவள் மேலும் வெறுப்பேற்றினாள்.
சற்று நேரம் ஊர் உலக விவகாரம். ஜெயலலிதா. வாஜ்பேயி ஜோக்குகள் அறையை நிறைத்தன. அவனை, கண்களால் எரிக்க முடியுமா என யோசித்துக் கொண்டு முறைத்துக் கொண்டே இருந்தேன். டீ முடிந்ததும், அஷோக் உடனே பேசினான்.
“ஷ்யாம். என்னய்யா இது. கையெழுத்தான ஒப்பந்தத்தை மாத்தச் சொல்றே.”
“யாரோ ஒப்பந்தம் போட்டாங்க அப்படீங்கறதுக்காக கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படுத்த முடியுமா?”
“அது அன்னிக்கு விலை நிலவரத்தைப் பொறுத்து, செய்யப் பட்ட காண்ட்ராக்ட். இன்னிக்கு வேற மாதிரித் தெரிகிறது.”
“அஷோக். டோண்ட் ப்ளஃப். கையெழுத்து ஆன நாள் முதலாகப் பெரிதாக விலையொன்றும் குறைந்து விடவில்லை.”
“அப்ப உனக்கு முன்னால் இருந்தவரின் கையெழுத்துக்கு என்ன மதிப்பு.”
ஷ்யாம் பேசவில்லை.
“இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனம் ஷ்யாம். கோர்ட் கேஸ்கள் கம்பெனியின் மதிப்பைக் குறைக்கும். bad press. ”
“அது P.R டிபார்ட்மெண்டின் வேலை. எனதல்ல.”
“கோர்ட்டில் இந்தக் கேஸ் நிற்காது. மிகத் தெளிவான ஒப்பந்த மீறல்.”
“அதைக் கோர்ட் முடிவு செய்யட்டும்.”
“இது தான் உனது இறுதியான முடிவா?” எனக்கு திருவிளையாடல் வசனம் நினைவுக்கு வந்தது.
ஷ்யாம் பேசவில்லை.
“உனது பிடிவாதத்தால், இந்நிறுவனத்தைக் கோர்ட்டுக்கு இழுக்கிறாய்.”
“இழுப்பது நீதான் அஷோக்.”
“ok. so be it.”
நாற்காலிகள் பின்னால் இழுக்கப்பட்டன.
“பை,” என அழுத்தமான கை குலுக்கல். அஷோக் என்னைப் பார்க்காமலேயே வெளியேறினான்.
“என்ன திமிரு சார். கையில கத்தி இருந்துச்சுன்னா சொருகியிருப்பேன்.” என்றேன்.
”ஃபூல். எதுக்குடா அவன மொறச்சிகிட்டே இருந்தே?” ன்னார்.
”இப்ப என்ன பண்றது?”
”போயி வேலயப் பார்!”
எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.
வெள்ளி மாலை போன் வந்தது. ஆனந்த்.
“சுப்ரமணியம் ஜி, அன்னிக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு”
“யோவ். நீங்கதான்யா பிரச்சினை பண்ணிணீங்க.”
“அஷோக் கொஞ்சம் முன்கோபி.”
”அதையெல்லாம், உங்க ஃபேக்டரியில வச்சிக்கணும்.”
“இல்ல. அதையெல்லாம் மனசில வச்சிக்க வேண்டாம். நாங்க இந்தக் கம்பெனிக்கு 20 வருஷமா சப்ளை பண்ணிட்டிருக்கோம்.” நான் 20 ஐ 3 ஆல் மனதில் பெருக்கினேன். சென்னையில் பாதியை விலைக்கு வாங்கியிருக்கலாம்.
“அதுக்கென்ன இப்போ?”
“நான் அஷோக்கோட அப்பாகிட்டயே பேசினேன். அவரும் அஷோக் செஞ்சது தப்புன்னு சொல்றாரு.”
நான் அமைதியாக இருந்தேன். கோபம் கொ ந்தளித்தது.
“20 வருஷம் உறவை ஒரு வருசத்தில ஒடச்சிக்க முடியாது.”
”அதனால?”
“நீங்க சொல்ற விலைக்கே சப்ளை பண்ணலாம்னு என்னோட ஐடியா. ஆனா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணு. 18ம் வேணாம், 23 ம் வேணாம் 20 ரூபாய்க்கு, ஒரு செட்டில் மெண்ட் போட்டுக்கலாம். உங்களுக்கும் கோர்ட் செலவு மிச்சம். ஷ்யாம் சார் கிட்டே கேட்டுச் சொல்லு.”
ஷ்யாம் அறையைத் திறந்தேன். அவன் சொன்னதை அப்படியே ஒப்பித்தேன்.
“நீ என்ன சொன்னே?”
“உங்களக் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்”
“பரவால்ல. நீ முட்டாள். ஆனால், அடி முட்டாள் இல்லை. 18 ரூபாய்க்கு ஒரு நயா பைசா அதிகம் தரமுடியாதுன்னு சொல்லிடு.”
போன் செய்து சொன்னேன். ஆனந்த் குதித்தான். நான் மூன்று படிகள் இறங்கி வந்திருக்கிறேன். நீ ஒரு படி கூட மேலே வர மாட்டாயா. அராஜகம். தினமும் ஒரு புது அதிகாரி வந்து புதுப் புது ரூல்ஸ் போடறீங்க. இந்தக் கம்பெனியை கடவுள்தான் காப்பத்தனும். ப்ளா. ப்ளா, என்று பாடிவிட்டு போனை வைத்து விட்டான்.
எனக்கு இந்த பஞ்சாபிகளின் சட்டாம்பிள்ளை அடாவடித்தனம் குமட்டிக் கொண்டு வந்தது.
அரை மணி கழித்து மீண்டும் ஃபோன். இப்போது குழைந்தது.
“சுப்ரமணியம் ஜி. 20 வருஷ உறவ ஒரு வருஷத்துக்காக ஒடச்சிக்க வேண்டாம். என்ன வெலையோ நீயே சொல்லி ஆர்டர் போட்டுரு. இந்த வருஷம் எனக்கு போனஸ் கிடையாது. 2000 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருந்து வந்து உள்ளூர்க்காரன் வயத்துல அடிக்கிறீங்க. “
ஷ்யாம் அறையைத் திறந்து சொன்னேன்.
என்ன செய்வது என்று கேட்டேன்.
“என்ன கேள்வி? 18 ரூபாய்க்கு ஆர்டர் போடு!”
கதவை மூடுமுன் கேட்டேன்., “என்ன சார். கோர்ட்டுக்குப் போறேன்னு வீர வசனம் பேசினான். இப்ப எப்படி நம்ம வெலைக்கு ஒத்துகிட்டான்?”
“ம்ம். அவனுக்கு ஆர்டர் போட்டுட்டு, வீட்டுக்குப் போய் மூக்குப் பிடிக்க தயிர் சாதம் சாப்பிட்டுட்டு யோசி. புரியும்.”
கடுவன். கடுவன். என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே கதவைச் சாத்தினேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.