குளக்கரை


[stextbox id=”info” caption=”அமெரிக்க காவல்துறையினரின் கொலைப்பட்டியல் சிறியதா?”]

america-kulakkarai

இது ஒரு விஸ்தாரமான கட்டுரை, நல்லெண்ணம் இருந்தால் மட்டும் நல்லது நடந்து விடாது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். ஆனால் பொத்தாம் பொதுவாக அறிவது ஒன்று, குறிப்பிட்ட விஷயத்தில் அதைக் களத் தகவல்களோடு அறிவது என்பது வேறொன்று. பின்னது கடும்வாதங்களை முனை முறித்து, எதார்த்த தரிசனத்தைக் கொணரும். எதார்த்தமோ என்றும் போல சிக்கலானது மட்டுமல்ல, சுலப விடைகளைக் கொணர முனைவாரைத் தம் விடைகளின் போதாமைகளை மறுபரிசீலனை செய்யச் சொல்லும்.  உலகப் புரட்சியாளர்கள் தமது திடீர் அதிசய வெற்றிகளைத் தொடர்ந்து வரும் காலத்தில் அடுத்தடுத்துத் தோல்விகளைச் சந்திப்பது இதனால்தான். சமூக எதார்த்தம் வாருகல் கட்டையால் மாற்றி விடப்படுவதல்ல.  நிச்சயமாக, துப்பாக்கிக் கட்டையாலோ, அதன் சூட்டுக் குழலாலோ மாற்றப்படக் கூடியதல்ல. கத்திகளும், கொடுமைகளும் அதன் முன் மழுங்கியே நிற்கும்.

சலியா உழைப்பும், இலக்கு நோக்கிய முனைப்பும், தொடர்ந்த சீர்தூக்கலும், சான்றாதாரம் கொண்ட தீர்மானங்களுமே நிஜத்தைக் காட்டும், அருகில் அமர்த்தும். இத்தனையும் ஒரு சிறு விஷயத்தைப் பற்றியது என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்கக் காவல் துறையினரிடம் தப்பாமல் துப்பாக்கிகள் உண்டு. அவர்களும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயக்கமில்லாதவர்கள். கடந்த ஒரு வருடத்தில் காவல் துறை கொன்றவர்கள் நிறைய, அவர்களில் பலரும் ஆயுதம் ஏந்தாத கருப்பின மக்கள். சிறார் கூட இந்தக் கொலைகளிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவில் இனவெறி சூனாமியாக எழுகிறதா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. சூனாமியாக இல்லாவிடிலும், குறைந்தது ஒரு அச்ச அலையாக எழுகிறது என்று நாம் கருத முடியும். 50 மாநிலங்களில் சுமார் பாதிக்கும் மேலான மாநிலங்களில், ஐக்கிய நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாகலாம் என்று சொல்லும் இயக்கங்கள் துவக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றன. இந்த இயக்கங்கள் எல்லாம் இனவெறி கொண்டவெள்ளையரும், மத்திய அரசை வெறுக்கும் சிறு குழு, குறுந்தேசியவாதிகளும் கொண்டவை. இந்தியருக்கு இத்தகைய இயக்கங்களோடு நிறையவே அனுபவம் உண்டில்லையா?

 இந்தக் காவல்துறையினரில் பலரும் இத்தகைய இயக்கங்களோடு சம்பந்தப்பட்டிருப்பார்களா என்று ஐயம் இருக்கிறது. ஒரு ஆண்டில் காவல் துறையினர் எத்தனை அமெரிக்கர்களைக் கொன்றிருக்கிறார்கள் என்று கேள்வி எழவும் மைய அரசு இந்தப் புள்ளி விவரத்தைச் சேகரிக்க முற்பட்டது. அப்படி ஒரு தொகுத்த புள்ளி விவரம் என்பது எங்குமே இல்லை என்பதையும், அதைத் தொகுக்கப் பல்லாண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளை பல மாநிலத்துக் காவல் துறையினர் வெற்றிகரமாகத் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் மைய அரசின் துப்புத் துலக்கும் இலாகா (Federal Bureau of Investigation- FBI) கண்டு பிடித்தது. எஃப் பி ஐ என்ற இலாகாவே இனவெறியர்கள் நிரம்பியதுதான் என்று அமெரிக்க இடது சாரியினர் பல பத்தாண்டுகளாகப் பழி சொல்லி வருகின்றனர். ஆக பழியைத் தாங்க யார் இருக்கிறார்கள் என்றால் யாரையும் சுட்ட முடியாது அமெரிக்க அரசு தத்தளிப்பில் இருக்கிறது. பல்லாண்டு காலமாக விரிப்பின் கீழ் மறைத்த அழுக்கு வெளி வரும் தருணம் இது என்பது மட்டும் தெளிவு.

http://www.theguardian.com/us-news/2015/mar/21/police-killings-us-government-statistics
[/stextbox]


[stextbox id=”info” caption=”உண்மையை நாடும் எழுத்து”]

Three_Penny_Review_3p_Lit_Magz_Magazines_Journals

இதில் சுய பரிதாபம் இல்லை. ஆனால் விழிப்போடு கடப்பைத் திரும்பிப் பார்த்து, அறியாமை என்பது எத்தனை தூரம் வாழ்வில் நீடிக்கிறது என்று பார்க்கும் மனத்திறன் வெளிப்படுகிறது. ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. என்ன ஒரு விழிப்பும், நுட்ப நோக்கும், கடந்த காலத்தின் கரிப்புகளையோ, அமில அரிப்புகளையோ ஏதும் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு வருடமாக நாம் நம்மை ஒரு வார்ப்பில் ஊற்றிக் கொண்டு வருகிறோம்.

ஒரு புறம் நடப்பில் நாம் இன்னும் திரவ நிலையில் இருப்பதான பிரமையோடு உலவுகையில், நம் கடந்த காலத்தின் உறைவு நம் நிகழோடு இணைந்து, நிகழையும் நிறுத்துகிறது. வார்க்கப்பட்டதாக ஆக்கி விடாவிட்டாலும், குறைந்த பட்சம் ஜவ்வாகப் பிடித்து இயக்கத்தடையாக இருக்கிறது.
அதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். படிப்பதனைத்திலும் நம்மையே நாம் வெளி நிறுத்திப் பார்க்க முயல்கிறோம் என்று ஏதாவது ஜென் துறவியமாகச் சொல்லலாம். ஆனால் அது அப்படி ஒன்றும் உண்மையாக ஒலிக்காது. நாம் மாற்றுகளையே தேடுகிறோம் என்றும் இல்லை, ஆனால் மாற்றுகளைத் தேடவே செய்கிறோம். அவை கிட்டும் என்ற நம்பிக்கை சிறிது இருக்கிறது. திரௌபதியின் பாத்திரத்தில் மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒற்றைப் பருக்கை போல அந்த நம்பிக்கை. அதைப் பெருக்கி பட்டாளத்துக்கும் உணவளிக்க வகை செய்யும் வாசுதேவன்தான் அருகில் இல்லை.

http://www.threepennyreview.com/samples/thompson_sp15.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”கிராஃபைன் எனும் மாயம்”]

n-BOYD-IN-LAB-large

இன்னும் சில வருடங்களில் உங்கள் அலைபேசியைத் துணி போல மடித்து வைத்துக்கொள்ள முடியும், தொலைக்காட்சிப்பெட்டியைக் கூட மடித்து சுருட்டி எடுத்துச் செல்லலாம். அமெரிக்காவின் கேல் டெக் பல்கலையின் ஓர் ஆய்வுமையத்தில் டாக்டர் டேவிட் பாயிட் எனும் விஞ்ஞானி கிராபைன் எனும் தாதுப்பொருளைக்கொண்டு நம் தலைமுடியைவிட இருநூறு மடங்கு மெல்லிய தகடை உருவாக்கியுள்ளார். இத்தனை மெல்லிய தாளைப் போல இருந்தாலும் இந்த கனிமப்பொருள், இரும்பை விட இருநூறு மடங்கு உறுதியானது. கிராஃபைனைக் கொண்டு கணினித் தகடு செய்தால் பல மின்னணு இயந்திரங்கள் இப்போதிருக்கும் வடிவிலிருந்து சிறிய அளவிலானதாகும் சாத்தியங்கள் வருங்காலத்தில் இருக்கின்றன.

http://www.huffingtonpost.com/2015/03/19/better-graphene-making-process-breakthrough_n_6891226.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”சூரிய கிரணத்தினால் மின்சாரம் சேகரிக்கும் தகடுகளுக்குச் சிக்கலா?”]

Eclipse Photographer Milloslav Druckmuller

ஒவ்வொரு இரவிலும் சூரியன் மறைவதும் காலையில் எழுவதுமாக இருப்பதால் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் சேகரிக்கும் சோலார் பேனல்களுக்கு எந்தவொரு சிக்கலுமில்லை. அதுவும் வருடத்தில் பாதி நாட்களுக்கும் மேலாக சூரியன் மேகத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் மின்சாரம் சேகரிக்க பிற வழிகளைக் கையாள்கின்றன. என்றாலும் கிட்டத்தட்ட 7 சதவீத மின்சாரத் தேவையை சூரியனிலிருந்து பெற்று வரும் ஜெர்மனிக்கு ஒரு சிக்கல் வந்தது. மார்ச் மாதம் பதிமூன்றாம் தேதி நடந்த சூரிய கிரகணத்தின் போது  தகடுகளில் திடீரெனப் பாயும் காந்தங்களின் விளைவினால் நிரந்தரமாக மின்சாரம் சேகரிக்கும் சக்தி பாதிப்படையும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை தந்திருந்தனர். மெல்ல மெல்ல கருக்கலில் விடிந்து வரும் சூரிய வெப்பத்தை எதிர்பார்க்கும் இந்தத் தகடுகள், சட்டென மாறும் சூரிய வெப்ப ஒளியினால் பாதிப்படையாமல் எப்படிக் காத்துக்கொண்டன என இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

http://goo.gl/7umpTv

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஸ்பினோஸாவும், மார்க்ஸும்”]

Willing-Slaves-of_capital_Spinoza_Hegel_Marx_Communism_Fredric_Lordon_Books

தொழிலாளிகள் ஏன் தினம் வேலைக்குப் போகிறார்கள்? அவர்களைத்தான் யாரோ சுரண்டுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதே, பின் ஏன் வேலைக்குத் தினம் திரும்புகிறார்கள்? இப்படி ஒரு கேள்வி.

இது மார்க்ஸைக் குடைந்ததாம், ஸ்பினோஸாவையும். என்ன ஒரு புத்திசாலிகள் இரண்டு பேரும்! நம்ப முடிகிறதோ? இதில் மார்க்ஸ் சொன்ன பதில் தண்டம் என்றும், ஸ்பினோஸாவே இதற்குப் பதில் சொல்ல முடிந்தவர் என்றும் ஒரு எழுத்தாளர் புத்தகம் எழுத, அதற்கு ஒருத்தர் பாஷ்யம் எழுதி இருக்கிறார்.

இதை சிபாரிசு செய்யக் கொஞ்சம் தயக்கமாகவே இருக்கிறது. காரணம் இது தண்டம் என்பதால் அல்ல. நிறைய உருப்படியான விஷயங்களும், வாதங்களும், தகவல் தொடர்புகளும், சில தத்துவ விளக்கங்களும், வரலாற்று விளக்கங்களும் இருப்பதால் இது மதிப்புள்ள கட்டுரை. ஆனால் இதைப் படித்து விட்டு மார்க்ஸின் பக்தர்களாக மாறுவோம் என்று விபரீதமாக யாரும் யோசிக்க ஆரம்பிப்பார்களோ என்று தயக்கம். ஏனெனில் மார்க்ஸுக்கு உண்மையில் அவர் என்னத்தைப் பற்றி என்ன பேசுகிறார் என்பது தெளிவில்லை. அதற்குக் காரணங்களை இந்தப் புத்தகத்து ஆசிரியர் சொல்வதாகத் தெரிகிறது. அதை அப்படிப் புரிந்து கொள்ள விடாது இந்தக் கட்டுரை கொஞ்சம் மாய்மாலம் செய்கிறது. அதுதான் தயக்கத்துக்குக் காரணம்.

படித்துப் பாருங்கள், கண்ணில் கொஞ்சம் ஐ ட்ராப்ஸ் விட்டுக் கொண்டு சுத்தமான தெளிவு கிட்டியதும் படியுங்கள். 🙂 விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டாம். இருப்பதும் போய் விடப் போகிறது!

http://lareviewofbooks.org/review/labor-human-bondage-spinoza-marx-willing-slaves-capitalism
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.