அண்ட் ஸ்டில் தி எர்த் – ஒரு வாசிப்பனுபவம்

Author_Writers_Brazil_Portuguese_Ignácio de Loyola Brandão

காலையில் சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருப்பது உங்கள் வழக்கம். ஆனால் கிராமமாயிருந்த உங்கள் ஊர் பெருநகரமாகிவிட்டது. ஒரு சேவல் கூட இல்லை. தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்து சேவல் கூவும் ஒலியைப் பதிவு செய்து, அந்த ஒலிப்பதிவைக் கேட்டபிறகு எழுந்திருக்கிறீர்கள். கடந்த காலத்திலிருந்து உங்களால் மீள முடியவில்லை.
பல் தேய்க்கவேண்டும். தண்ணீர் பற்றாக்குறை. அரசாங்கம் தண்ணீருக்கு கூப்பன்கள் தந்திருக்கிறது. ஆனால் உங்களுக்குண்டான தண்ணீர் திருடு போய்விடுகிறது. சிந்தடிக் நெல்லிச்சாறில் வாய் கொப்பளிக்கிறீர்கள்.
புரட்சிக்காரர்களைப் பற்றிய தகவலை ராணுவத்துக்குக் கொடுத்தால் இன்னும் அதிக தண்ணீர் கூப்பன்களைப் பெறலாம். புரட்சிக்காரர்கள் நடுத்தெருவில் சுடப்படுவார்கள். தர்மசங்கடம் என்னவென்றால் அவர்கள் உண்மையில் புரட்சிக்காரர்களல்ல.
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு அரசுக்கெதிராக மறியல் செய்பவர்கள்.
உங்கள் வீடு ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். ராணுவம் சொல்கிறது. எல்லாருடைய வீடும் எங்கள் வீடுதான். எத்தனை நாட்களானாலும் ராணுவம் உங்கள் வீட்டைக் காலி செய்வதாக இல்லை. உங்களுக்குப் பசிக்கிறது. ரெப்ரிஜரேட்டரில் ருசிகரமான அசைவ உணவு ஏதுமில்லை. அசைவ உணவு சமைக்க நாட்டில் ஆடு மாடு கோழியென மிருகங்களே இல்லை. காலப் பிரவாகத்தில் அவை எப்போது காணாமல் போனதென்று தெரியவில்லை.
அதை விட வேடிக்கை, சமையலறையிலிருந்த உங்கள் மனைவி எப்போது காணாமல் போனாளென்றும் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் வீடு முழுதும் ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டருக்கிறது. உங்களுக்குப் பசிக்கிறது. ரெப்ரிஜரேட்டரில் எருமைப்பால் அல்லது பசும்பால் இருக்க வாய்ப்பில்லை. கடைகளில் தாய்ப்பால் மட்டுமே விற்கிறார்கள். சிந்தடிக் கோதுமை மாவு, செயற்கை வெண்ணெய் கலந்து சிந்தடிக் கேக் சாப்பிடலாம். ஆனால் சமையலறையில் பிணநாற்றம். உங்களுக்கு முடிவெட்டும் நாவிதரைச்சேர்த்து மொத்தம் நான்கு பிணங்களிருக்கின்றன. ராணுவ அதிகாரி மூன்று பிணங்கள்தானென்று வாதிடுகிறார்.
நீங்கள் ஒரு தோத்தாங்குளியென்று உங்களுக்குப் புரிகிறது.ராணுவ அதிகாரியுடன் வாதிடுவதற்குப் பதிலாக காணாமற்போன உங்கள் மனைவியைத் தேடலாமென்று நினைக்கிறீர்கள். முப்பது வருடம் நாள் தவறாமல் படுக்கச் செல்லுமுன் நீங்கள் முத்தமிட்ட, உங்களுக்கு முத்தம் தந்த மனைவி சொல்லாமல் கொள்ளாமல் காணாமல்போனால் நீங்கள் எங்கு போய் தேடுவீர்கள்? சா பாலோ மிகப் பெரிய நகரம். அதன் எல்லா இடங்களுக்கும் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை.
உங்கள் பெயர் சௌசா. சா பாலோ பல்கலைக்கழகத்தில் நீங்கள் வரலாற்றுப் பேராசிரியாயிருந்தீர்கள் ஆனால் அரசியல் படிக்கும் இடதுசாரி சார்புடைய மாணவர்கள் அரசுக்கு அசௌகரியமான கேள்விகளைக் கேட்க அனுமதித்தீர்கள். அதற்கு பதில்களும் சொன்னீர்கள். உங்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள அரசால் முடியும்.
ஏனென்றால் உங்கள் உள்ளங்கையில் ஒரு பெரும் ஓட்டை இருக்கிறது. (அது சம்பளங்கள் குறைக்கப்பட்டபோது உங்கள் கையில் ஏற்பட்டிருக்கலாம்) நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதால் (இன்பர்மேஷன் அண்ட் ஆபரேஷன்ஸ் இலாக்காவுக்கு கிடைத்த தகவலின்படி) கட்டாய ஓய்வு கொடுத்து உங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
உங்களைப்போலவே உயிரியல் பேராசிரியர் டேடோ பெரைராவுக்கும் சீட்டைக் கிழித்துவிட்டார்கள். டேடோ பெரைரா லிப்ட்மேனாக வேலைபார்த்து வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுமில்லை அல்லது மரணம்தான் வாழ்க்கையின் அர்த்தமென்று நினைத்து தற்கொலை செய்து கொண்டுவிடுகிறார். உங்களுக்கு அதற்கும் தைரியமில்லை.
தொலைக்காட்சி சலித்துப்போன ஒரு நாள் எப்போதோ காணாமல் போன உங்கள் அன்புக்குரிய மனைவியைத் தேடிப்போகிறீர்கள் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒருபுறம். போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வீதிகளில் நிற்க இடமில்லை. ஜனநெரிசல். மண்டை பிளக்கும் வெயில். குடலைத் தின்னும் பசி. குமட்டும் வியர்வை வாடை.
உங்களுக்கு முன்னால் நிற்கும் எலிசாவின் முலைகளைப் பிசைந்து நடுத்தெருவில் நின்றவாறே அவளைப் புணர்கிறீர்கள் எலிசாவை உங்களால் திருப்திப் படுத்த முடியவில்லை.
எலிசா வசைபாடுகிறாள்…
நடுத்தெருவில் செக்ஸ் அனுபவித்ததற்காக நீங்களும் எலிசாவும் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகிறீர்கள். எலிசா ராஜநடையுடன் நிர்வாணமாக சிறைக்குச் செல்கிறாள். பிறகு காணாமல் போனாளென்ற தகவல். நீங்கள் ஒரு பேராசிரியரென்பதால் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டு விடுதலையாகிறீர்கள்.
இப்போதுதான்உங்களுக்கு உங்கள் மனைவியின் ஞாபகம் வருகிறது. திங்கட்கிழமை நுகர்வோர் தினம். பொருளாதாரத் தேக்கம் வராதிருக்க மக்கள் அனைவரும் அரசு குறிப்பிடும் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்.அதற்கான சான்றிதழை மாதம் ஒரு முறை அரசு அலுவலகத்தில் பெறவேண்டும். இல்லையேல் உங்கள் பெயர் இறந்த்வர் கணக்கில் சேர்க்கப்படும். உங்கள் மனைவி அந்தச் சான்றிழுக்காக அரசு அலுவலகம் சென்றார்.. அவரைத் தேடி நீங்களும் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். 200 வருடங்களுக்குத் திறக்கவேண்டாமென்று குறிக்கப்பட்டு குப்பையாக்க கிடக்கும்அரசுக் கோப்புகளிலிருந்து உங்கள் மனைவி அடிலைய்ட் வெளியேவருகிறார்…
பிரேசிலில் மழையே இல்லை. ஆனால் சினிமாவில் மழை பெய்கிறது. மழை இல்லாததால் உணவுக்கு வழியில்லை. பயிர்கள் குளிர்பதனம் செய்யப்பட்ட பச்சைநிறவீடுகளின் மாடிகளில் மட்டுமே பயிர்செய்யப்படுகின்றன.
காடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. மரங்கள் அரசாங்கத்தால் விற்கப்பட்டு விட்டன. தாங்க முடியாத சூரிய வெப்பம். குடிக்கத் தண்ணீர், புசிக்கப் புல்லுமில்லாத சா பாலோ நகரில் உங்கள் நண்பர் டேடோ பெரைராவின் குதிரை சூரியசக்தியால் ஓடியதென்பது இப்போதுதான் உங்கள் மரமண்டைக்கு எட்டுகிறது.
சூரியவெப்பம் சா பாலோ நகரத்தையே ஓர் உலைக்களமாக மாற்றிவிடுகிறது. வெப்பம், தாகம் தாங்கமுடியாமல் பலரும் இறந்துபோகிறாரகள். நிழலை நோக்கி ஓடுகிறார்கள். உயிர் வாழும் ஆசை எந்தச் சூழலிலும் மனதனைவிட்டு நீங்காதல்லவா?
நீங்களும் வெப்பமயமாதலில் கருகிச் சாகாதிருக்க நிழலைத்தேடி ஓடுகிறீர்கள். வழிநெடுக பேனர்கள் கண்ணைப் பறிக்கின்றன.

’சிஸ்டம் பெருமையுடன் வழங்குகிறது. வெப்பமயமாதலிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு – மார்க்வீ—பிரம்மாண்ட நிழற்கூரை—சமூகநல அமைச்சகத்தின் மாபெரும் சாதனை…’

ஜனநெரிசலில் திக்குமுக்காடும் நீங்கள் நிழற்கூரையை அடையும் நம்பிக்கையை இழந்துவிடுகிறீர்கள்.. நரகத்தின் வாசற்படியில் நிற்கும்போதுகூட ஒரு மனிதனுக்கு விமோசனம் கிடைக்கலாம், நம்பிக்கையிழக்காதே.,
சிறு வயதில் உங்கள் தாய் உங்களுக்குச் சொன்னதை நம்ப விரும்புகிறீர்கள். ஆனால் உங்களால் நம்பமுடியவில்லை… நாவல் முழுதும் நிகழும் ஊசலாட்டத்தின் உச்சகட்டமாக…

And_Still_The_Earth_Ignacio_de_Loyola_Brandao_Translation_Tamil_Books_Fiction_Lit

oOo

பிரேசிலின் இக்னேஷியோ லயோலா ப்ராண்டோ போர்ச்சுகீசிய மொழியில் எழுதி 1981ல் பிரசுரமான அண்ட் ஸ்டில் தி எர்த் என்ற தலைப்பிட்ட ஒரு டிஸ்டோபியன் நாவலின் சுருக்கத்தைத்தான் மேலே படித்தீர்கள். எல்லன் வாட்சன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். (விரும்பத்தகாத ஒரு சூழலில் மக்கள் படும் அவலங்களை நிகழையும் எதிர்காலத்தையும், நிகழ்வையும் கற்பனையும் கலந்து புனையப்படுவதே டிஸ்டோபியன் நாவல். –ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 , அல்டஸ் ஹக்ஸ்லியின் ப்ரேவ் நியூ வொர்ல்டு போன்றவை)
1961-1985 வரை பிரேசிலில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தொலைக்காட்சிகளின் அரசியல் பிரச்சாரம், தொழிலாளர்களுக்குக்கு எதிரான ஊதியக்குறைப்பு, அடக்குமுறை, விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை அச்சுறுத்திய வதை முகாம்கள், நுகர்வுக் கலாச்சாரம், மனிதமிழந்த மனித உறவுகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடுகின்றன.
பேராசிரியர்கள் சௌசாவும் பெரைராவும் அவர்களில் இருவர். அவர்கள் எங்கேனும் தப்பித்துச் செல்ல விரும்புகிறார்கள். பெரைரா அவலமும் அவசங்களும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்க மரணத்தைத் தழுவுகிறார்.
சௌசாவால் தன்னைச் சுற்றி நிகழ்வது உண்மையா அல்லது தன்னுடைய பிரமையா என்பதையே தீர்மானிக்கமுடியாமல் திண்டாடுகிறார். – சா பாலோ நகரத்து எல்லா மக்களையும் போல.
மொத்தம் ஏழெட்டு கதாபாத்திரங்கள்தான். பல இடங்களில் அவர்களின் உரையாடலும் மன ஓட்டமும் அடுத்தடுத்து எழுதப்பட்டுள்ளன. உணவு, உறவு, தொடங்கி நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் செயற்கையாகிவிட்டதை, யந்திரமயமாகிவிட்டதை. நாம் வாழ்வின் வெப்பம் தாங்கமுடியாமல் தவிப்பதை, நாம் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதை மிகையதார்த்தம், நகைச்சுவை, அங்கதம், எள்ளலென்று பலவேறு விதமாகப் படம் பிடித்திருக்கிறார் பிராண்டோ —சுவாரசியமாகவும் — கூடுதல் விரிவாகவும். இந்தப் புத்தகம் நிச்சயம் தமிழ் இலக்கிய ஆர்வலர்களைக் கவரும்..
1981ல் பிரசுரமாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகும் ராணுவ ஆட்சியைத்தவிர நாவலின் பதிவுகள் முற்றிலும் இன்றைய இந்தியச் சூழலை ஒத்திருப்பதும் இந்த புத்தகம் என்னைக் கவர்ந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.