விதியின் பிழை காண் – ஆறு

Vaigai_River_Ancient_India_Tamil_Nadu_Mandapam

 

வெளிப்புறம் – தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு கல் மண்டபம் – பகல்

 

“சல்” என்று ஒரு கல் தண்ணீரில் விழுகிறது. மண்டபத்தின் ஓரத்தில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு தென்னதரையன் அமர்ந்திருக்கிறான். மண்டபத்தின் ஒரு கல் தூணில் சாய்ந்தபடி வழுதி நிற்கிறான். தருமன் இன்னொரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறான். நாகை அவன் பக்கத்தில் இருக்கிறாள்.

 

தென்னதரையன்

 

என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சண்டைக்குப் பயந்து ஓடியிருக்கிறேன்.

 

எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள்.

 

தென்னதரையன்

 

அச்சுதன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். ஒரு காலத்தில், என் முன்னால் வர நடுங்குவான். இன்று அவன் எங்கே, நான் எங்கே?

 

வழுதி

 

அரையரே, ஏன் வீணாய் கவலைப்படுகிறீர்கள்? இந்த அச்சுதன் நம்மைப் பார்த்து ஓடும் நாள் வரும்.

 

தருமன்

 

அரையரே, இளவரசனைக் கண்டுபிடித்து அரசர் கையில் கொடுத்து விட்டால் உங்களுக்கு மேல் யார் இருப்பார்கள்?

 

தென்னதரையன்

 

சரி. என் கதை இருக்கட்டும். சித்தர்கள் என்ன சொன்னார்கள்?

 

தருமன்

 

அவர்கள் எதுவும் பிடி கொடுத்துப் பேசவில்லை.

 

நாகை

 

ஆனால் அந்த சித்தர் கண்களில் ஏதோ தெரிந்தது.

 

தருமன்

 

நாகை சொல்வது சரி தான். இளவரசனின் அரை ஞானை பார்த்து அவர் ஆச்சரியப் படவே இல்லை. அதில் தெளிவாக அரச குலச் சின்னங்கள் இருக்கின்றன.

 

வழுதி

 

எனக்கு இப்படி யோசித்து யோசித்து போவதே பிடிக்கவில்லை.சித்தர் எப்படியும் மடத்தில் இருந்து வெளியே வருவார். இந்த ஆற்றில் நாலு முறை முக்கி எடுத்தால் தானாக உண்மை வரும்.

 

தென்னதரையன்

 

எனக்கென்னவோ இந்த வேலை நம்மால் ஆகாது என்று தோன்றுகிறது. தருமா, உன்னுடைய முயற்சி எல்லாம் வீண் தான். சீக்கிரத்தில் என்னைப் பிடித்து கழுவில் ஏற்றி விடுவார்கள். நீங்கள் ஊருக்கு போவதே மேல்.

 

தருமன்

 

அரையரே, மனம் தளர வேண்டாம். இன்னும் நமக்கு மொத்த விவரமும் தெரியவில்லை.

 

தென்னதரையன் மெளனமாக இருக்கிறான்.

 

தென்னதரையன்

 

இளவரசனைத் தூக்கிச் சென்ற அன்று இரவு, நான் அரசரின் அறை வாசலில் தான் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே ராணியின் அறை. இளவரசன் அங்கே தான் இருந்தான். அந்த அறைக்குள் யாரும் போகவும் இல்லை. வரவும் இல்லை.

 

(beat)

 

அதற்கு முன் மூன்று நாட்கள் நான் விழித்திருந்தேன். அந்தக் களைப்பா, இல்லை ஏதாவது மந்திரமா தெரியாது. சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு.

 

(beat)

 

அந்த நேரத்தில் தான் குழந்தையை யாரோ தூக்கி சென்றிருக்கிறார்கள். நாளை நானே அரசரிடம் போய்ச் சரணடைவதே நல்லது. அவர் கையாலே என்னை கொன்றாலும் சரி தான்

 

தருமன்

 

அரையரே, இரும். இது உங்கள் தவறு இல்லை. வேறு ஏதோ சூது இருக்கிறது.

 

(beat)

 

சற்று யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் கண்ணயர்ந்தது எந்த நேரம்?

 

தென்னதரையன்

 

தெரியாது. ராணியின் அலறல் கேட்டு விழித்தேன். மூன்றாம் சாமம் இருக்கும்.

 

தருமன்

 

ஆமாம். சிறிது நேரத்தில் என்னைக் கூட்டி வந்தார்கள். நான் வந்தவுடன் ராணியை ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கேட்கவே முடியவில்லை.

 

வழுதி

 

அந்த நேரத்தில் நீ ராணியிடம் பேசியிருந்தால் உன்னை வெட்டிப் போட்டிருப்பார்கள்.

 

தருமன்

 

ஆனால் உங்களுக்குப் பதில் தெரிந்திருக்கும். ராணி இளவரசனைக் கடைசியாக எப்போது பார்த்தாள் என்று தெரியுமா?

 

தென்னதரையன் யோசிக்கிறான்.

 

தென்னதரையன்

 

அதற்கு ஒரு நாழிகை முன்னால் கூட குழந்தையைப் பார்த்தேன் என்றார்கள். பிறகு தூங்கியிருக்கிறாள். திடீரென்று விழித்துப் பார்த்தால் குழந்தையை காணோம்.

 

நாகை

 

நீங்கள் சொல்வது போல நடக்கச் சாத்தியம் இல்லை.

 

தென்னதரையன்

 

ஏன்?

 

நாகை

 

அன்று இரவு நாலாம் சாமத்திற்கு உள்ளே குழந்தையைச் சத்திரத்தில் பார்த்தவர்கள் உண்டு. இரவு குழந்தை சத்திரத்தில் இருந்ததாகக் கேட்டவர்களும் உண்டு. சாத்தூரில் இருந்து குழந்தையை தூக்கிச் சென்றால் முதல் சாமத்தின் முடிவில் கிளம்பி இருக்க வேண்டும்.

 

தென்னதரையன்

 

எனக்கு இன்னும் புரியவில்லை

 

தருமன்

 

அரையரே, எனக்குப் புரிகிறது. நம்பத் தான் முடியவில்லை

 

வழுதி

 

என்ன புரிந்தது என்று சொல்லித் தொலைத்தால் நன்றாக இருக்கும்.

 

நாகை

 

ராணி பொய் சொல்கிறாள்

 

தருமன்
(தலையை ஆட்டியவாறே)

 

அரையரே, உங்கள் மேல் தவறு இல்லை. நீங்கள் அரசர் அறை வாசலில் காவல் காத்த நேரம், குழந்தை அந்த வீட்டிலேயே இல்லை. ராணி முதல் சாமத்திக்கு முன்னால், அதாவது நாம் எல்லோரும் கூத்துப் பார்க்கும் நேரத்தில் இளவரசனை அனுப்பி இருக்க வேண்டும்.

 

வழுதி

 

தருமா, என்ன உளறுகிறாய்.

 

தென்னதரையன்

 

தருமா, நீ சொல்வது தான் நம்ப முடியவில்லை. எங்காவது தன் மகனையே ஒரு தாய் கொடுத்து விடுவாளா?

 

தருமன்

 

இளவரசனை அன்று இரவு, கூத்து முடிந்த பின்னால் யாராவது பார்த்தார்களா?

 

தென்னதரையன் மெளனமாக இல்லை என்று தலையாட்டுகிறான்.
தூரத்தில் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது.

 

தென்னதரையன்

 

நீ சொல்வது உண்மையாகவே இருந்தாலும், இப்போது என்ன செய்வது? இளவரசன் எங்கே?

 

தருமன்

 

அதை ராணியிடம் தான் கேட்க வேண்டும்.
வெளிப்புறம் – அரண்மனை வாசல் – பகல்

 

ராணி அரண்மனையின் வாசலில் நிற்கிறாள். கையில் ஒரு ஓலை. சற்றுத் தள்ளிப் பல்லாக்கு நிற்கிறது. அதன் அருகில் பல்லக்கு தூக்கிகள் குனிந்து அமர்ந்திருக்கிறார்கள். ராணியின் அருகில் ஒன்றிரண்டு பணிப்பெண்கள் நிற்கிறார்கள்.

ஓலையைப் படித்து முடித்து விட்டு ராணி நிமிர்கிறாள். பல்லக்கை நோக்கி சென்று அமர்ந்து கொள்கிறாள். பல்லக்கின் திரை மூடுகிறது.

 

வெளிப்புறம் – நெல்லையப்பர் கோவில் வாசல் = பகல்

 

வாசலில் பல்லக்கு நிற்கிறது. ராணி இறங்கி உள்ளே செல்கிறாள். உடன் பணிப்பெண்களும் செல்கிறார்கள்.

 

(CONTINUOUS)
உள்புறம் – அம்மன் சந்நிதி – பகல்

 

கோவிலின் உள்ளே ராணி அம்மன் சந்நிதியில் நிற்கிறாள். நெற்றியில் குங்குமம் இட்ட படி வெளியே வருகிறாள்.

 

(CONTINUOUS)
உள்புறம் – கோவில் பிராகாரம் – பகல்

 

சந்நிதியைச் சுற்றி வரும் போது, வெளி பிராகாரத்தில், விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. ராணியும் ஒரு பணிப்பெண்ணும் மெதுவாக நடந்து வருகிறார்கள். சுற்றித் தூண்கள்.

சற்றுத் தள்ளி, தரையில் ஒரு சிறு துணி மூட்டை கிடக்கிறது. ராணி அதைப் பார்த்தபடி நடந்து வருகிறாள். அதன் அருகே வந்து குனிந்து மூட்டையை எடுக்கிறாள்.

 

ராணி
(பணிப்பெண்ணிடம்)

 

நீ சற்று முன்னால் போ. வாசலில் காத்திரு.

 

பணிப்பெண் போகிறாள். ராணி அந்தத் துணியை மெதுவாகப் பிரிக்கிறாள்.

உள்ளே ஒரு வெள்ளி அரைஞாண் இருக்கிறது. ராணி அதை எடுத்துத் தூக்கிப் பிடிக்கிறாள். விளக்கின் வெளிச்சத்தில் அவள் கண்கள் கலங்குகின்றன.

ராணி மூட்டைக்குள் அந்த அரைஞாணை வைத்து விட்டு நிமிர்கிறாள்.

 

ராணி

 

தருமா, அரையரே, நீங்கள் வெளியே வரலாம்.

 

அவள் குரல் பிராகாரத்தில் எதிரொலிக்கிறது.

சற்று முன்னால் இருக்கும் ஒரு தூணுக்குப் பின்னால் இருந்து தென்னதரையன் பிராகாரத்தில் காலடி எடுத்து வைக்கிறான். அவனுக்குப் பின்னால் தருமனும், நாகையும் வெளியே வந்து நிற்கிறார்கள். அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

ராணி அவர்களை நோக்கி மெதுவாக நடக்கிறாள்.

 

ராணி

 

வாழ்த்துக்கள். குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
உள்புறம் – அரண்மனையில் ராணியின் அறை – பகல்

 

ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள் ராணி. அவள் எதிரே தருமன், நாகை, தென்னதரையன் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். அந்த அறைக் கதவு சாத்தியிருக்கிறது. தாழ் போட்டிருக்கிறது. திறந்த சன்னல்கள் சில அறையெங்கும் இருக்கின்றன. அவற்றின் வழியே சற்றுத் தள்ளி நதி தெரிகிறது.

 

ராணி

 

மதிவாணச் சித்தர் இன்று காலை செய்தி அனுப்பியிருந்தார். மிகவும் புத்திசாலிகளான ஒரு கணவனும் மனைவியும் என்னைத் தேடி வருவதாகச் சொன்னார். சாத்தூரில் இருந்து நீங்கள் கிளம்பிப் பல நாட்கள் ஆகிறது இல்லையா?

 

தருமன்

 

ஆமாம் அரசி. அங்கே இப்பொழுது போவதும் நல்லதில்லை என்கிறார்கள்.

 

ராணி
(பெருமூச்சுடன்)

 

இந்தப் போரைத் தான் நிறுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.

 

தென்னதரையன்

 

மன்னிக்க வேண்டும் அம்மா. ஆனால் உங்களால் அல்லவா இந்தப் போர் துவங்கி இருக்கிறது. இளவரசன் மட்டும் இப்போது இருந்தால்..

 

ராணி
(குறுக்கிட்டு)

 

இளவரசன் இப்போது இருந்தால் அவனும் போர்க்களம் போயிருப்பான். பாண்டியர் போரிட முடிவெடுத்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

 

தருமன்

 

அம்மா, எங்களுக்கு இது ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் சாதாரண கிராமத்து மக்கள். சொந்த மகனை சாமியார்களுடன் கொடுத்து அனுப்பும் உங்கள் நாகரிகம் எனக்குப் புரியவில்லை.

 

தென்னதரையன்

 

தருமா, சாக்கிரதை. நீ பேசுவது பாண்டியர் மனைவியிடம்.

 

ராணி
(சிரித்தவாறே)

 

அரையரே, தருமன் சொல்வது உண்மை தான். என்னைப் போன்ற தாயை இந்த உலகம் பார்த்திருக்காது.

 

(தருமனைப் பார்த்து)

 

தருமா, நீயும் உன் மனைவியும் பல நாட்கள் என் மகனைத் தேடி இருக்கிறீர்கள். ஏன், பாண்டியரே மகனை மறந்து விட்டார். அவர் மனதில் மதுரையின் சிம்மாசனம் தான் இருக்கிறது. ஆனால் நீ மறக்கவில்லை. குற்றாலத்திற்கு நீ சென்றதில் இருந்து உன்னைப் பற்றி நான் கேட்டு வருகிறேன்.

 

தருமன்
(திகைத்து)

 

அது எப்படி உங்களுக்கு..?

 

ராணி
(குறுக்கிட்டு)

 

அது இப்போது முக்கியமல்ல. ஆனால் உங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது

 

தென்னதரையன்

 

அம்மா, இளவரசர் இப்போது எங்கே இருக்கிறார்?

 

ராணி

 

அதுவும் இப்போது முக்கியமல்ல. நாம் சற்று நேரத்தில் அவனைப் பார்க்கப் போகலாம்.

 

வெளியே குதிரைகள் விரையும் சத்தம் கேட்கிறது. ராணி உற்றுக் கேட்கிறாள். சற்று நேரம் மௌனம் நிலவுகிறது. ராணி எழுந்து போய் ஒரு ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறாள். பிறகு திரும்பி வந்து அவர்கள் எதிரே நிற்கிறாள்.

 

ராணி

 

எவ்வளவோ திட்டம் போட்டோம். எல்லாம் உன்னால் கெட்டது, தருமா.

 

(beat)

 

மூன்று வருடங்களுக்கு முன்னால் உன் போன்ற ஒரு சோதிடனால் தான் இந்த பிரச்சினையே தொடங்கியது.
BEGIN FLASHBACK:

 

உள்புறம் – அரண்மனையில் ஒரு பெரிய அறை – இரவு

 

அரசன் தரையில் அமர்ந்திருக்கிறான். சுற்றி நல்ல விளக்கு வெளிச்சம். அவன் எதிரே பல ஓலைச சுவடிகள் இருக்கின்றன. மறுபக்கம் முன்குடுமி வைத்த மலையாளத்து நம்பூதிரி ஒருவன் அமர்ந்து இருக்கிறான். அவனும் பாண்டியனும் ஏதோ பேசுகிறார்கள். பாண்டியன் கை கூப்பியபடி இருக்கிறான்.

 

(ராணி VOICE OVER)

 

எனக்கும் பாண்டியருக்கும் பல நாட்களாகக் குழந்தை இல்லை. போகாத ஊரில்லை. வேண்டாத தெய்வமில்லை. கடைசியில் சேர நாட்டில் இருந்து ஒரு சோதிடனைக் கூட்டி வந்தார்கள். எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன்.

இருந்தாலும் சோதிடன் வந்தான். சில நாட்கள் எங்கள் விருந்தாளியாக இருந்தான். கடைசி நாள், மன்னரிடம் நல்ல செய்தி சொன்னான்.
ஒரு வருடத்தில் எனக்கு மகன் பிறப்பான் என்றான். அத்தோடு நிறுத்தவில்லை. அவன் பாண்டியர் மனதை நன்றாக அறிந்து வைத்திருந்தான். என்னுடைய மகன் பெரும் ராசிக்காரனாம். அவன் பிறந்த வேளையில் மதுரை, மறுபடி நம் கைக்கு வரும் என்றான்.

மதுரையைப் பற்றி அவன் சொன்னது பாண்டியருக்கு பெரும் பித்தாகப் பிடித்து விட்டது. அதுவும், அவன் சொன்னது போலவே, இளவரசனும் பிறந்தான்.

வெளிப்புறம் – குற்றால மலைச் சாரல் – பகல்

 

நெடுங்கோன் குதிரையில் அமர்ந்து மலைக்குக் கீழே உள்ள பள்ளத்தாக்கைப் பார்க்கிறான். அங்கே பேரும் மரங்கள் வெட்டப்பட்டு விழுகின்றன. இடையே கூடாரங்கள் தெரிகின்றன. குள்ளர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு புகை கிளம்புகிறது.

 

(ராணி VOICE OVER)

 

பாண்டியர் படை சேர்க்கத் தொடங்கினார். களப்பிரனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று குற்றால மலையில் இடம் பார்த்தார். அங்கே இருந்தவர்களை விரட்டி அடித்தார்.
எனக்கு பெரும் பயம் பிடித்துக் கொண்டது. என் மகனை பாண்டியர் மகனாகவே நினைக்கவில்லை. மதுரையைப் பிடிக்க ஒரு ஆயுதம், அவ்வளவு தான். போரில் முன் வரிசையில் அந்தக் குழந்தையைத் தூக்கிப் போவதாகச் சொன்னார். அவன் முன்னால் இருந்தால் நமக்குத் தான் வெற்றியாம்.
வெளிப்புறம் – ஒரு கோவிலின் வாசல் – பகல்

 

வெளுத்த நீண்ட தாடியுடன், வெள்ளை உடைகளுடன் ஒரு சித்தர் அமர்ந்திருக்கிறார். அவர் எதிரே தரையில் ராணி அமர்ந்திருக்கிறாள். ராணி குழந்தையைக் கையில் வைத்திருக்கிறாள். சித்தரும் அவளும் ஏதோ பேசுகிறார்கள்.

 

(ராணி VOICE OVER)

 

நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். நூறு வருடமாக யுத்தத்தைப் பார்க்காத நாடு இது. என்னுடைய குருநாதர், பொதிகை மலையில் இருக்கிறார். பெரும் சித்தர். அவரிடம் என் யோசனையைச் சொன்னேன்.
இளவரசனின் முதல் பிறந்த நாள் முடிந்தவுடன், அவனைச் சித்தர்களிடம் கொடுத்து விட்டால், இந்தப் போரை நிறுத்தி விடலாம் என்று நான் நினைத்தேன். சித்தர்கள் முதலில் பயந்தார்கள். ஆனால் எனக்கும் சில சக்திகள் இருக்கின்றன. அவர்களுக்கு வேறு வழியில்லை.
சாத்தூரில், வனதுர்கைக் கோவிலுக்கு போகும் பொழுது, யாருக்குமே தெரியாமல், இளவரசனை அனுப்பி விட முடிவு செய்தேன். எல்லாத் திட்டமும் அருமையாகத் தீட்டினேன்.
உள்புறம் – சாத்தூரில் நாட்டார் வீடு – இரவு

 

சாத்தூர் நாட்டார் வீட்டின் மாடி அறைக்கு எதிரே உள்ள படிக்கட்டு.. மெலிதான விளக்கு வெளிச்சம். ராணி, இளவரசனை மெதுவாக தூக்கி வருகிறாள். ஒரு துணியைச் சுற்றி அங்கே காத்து நிற்கும் மதிவாணச் சித்தரிடம் இளவரசனைக் கொடுக்கிறாள். அவர் படியில் இறங்கிப் போவதைப் பார்த்தபடி நிற்கிறாள்.

 

END FLASHBACK.

 

உள்புறம் – அரண்மனையில் ராணியின் அறை – பகல்

 

மாலை நேரம். ராணி சற்றுத் தள்ளி நிற்கிறாள்.

 

ராணி

 

போரை நிறுத்தி விட்டோம் என்று நினைத்து அழுது கொண்டே தூங்கிப் போனேன். அன்று இரவு வெகு நேரம் கழித்து குழந்தையைக் காணோம் என்று கூப்பாடு போட்டேன். எல்லாம் நான் நினைத்தது போல் நடந்தது. யாரும் என்னைச் சந்தேகப் படவில்லை.

 

(தருமனைப் பார்த்து)

 

ஆனால் நீ வந்து காரியத்தை கெடுத்து விட்டாய்.

 

எல்லோரும் மெளனமாக இருக்கிறார்கள்.

 

ராணி

 

நீ சரியான சோதிடன் அல்ல என்று எனக்குத் தெரிந்தது. எனக்குச் சோதிடத்திலும் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் என்ன செய்ய? குழந்தையை யாரோ வடக்கில் எடுத்துச் சென்றார்கள் என்று நீ சொன்னதைப் பாண்டியர் நம்பி விட்டார்.

 

(beat)

 

எந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று நான் நினைத்தேனோ, அதுவே இப்பொழுது என் கையை மீறிப் போய் விட்டது.

 

ராணி மறுபடிப் போய் சன்னல் அருகே நிற்கிறாள். வெளியே குதிரைகள் பாய்ந்து வரும் சத்தம் மறுபடி கேட்கிறது.

 

ராணி

 

நாம் கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

 

(திரும்பி அவர்களைப் பார்க்கிறாள்)

 

என்னுடன் வருகிறீர்களா?

 

தென்னதரையன்

 

எங்கே வர வேண்டும், அரசி?

 

தருமன்

 

இளவரசர் எங்கே இருக்கிறார்?

 

ராணி
(புன்னகையுடன்)

 

பொதிகை மலையில் சந்தோஷமாக இருக்கிறான். இந்த அரண்மனையில் இருந்ததை விட அங்கே நன்றாக இருக்கிறான்.

 

கதவை யாரோ தட்டுகிறார்கள்.
தென்னதரையன், தருமன், நாகை மூவரும் எழுந்து நிற்கிறார்கள்.

 

ராணி

 

அவர் வந்து விட்டார்.

 

கதவை யாரோ இடிக்கிறார்கள்.
தருமனும் நாகையும் அரையனும் கதவைப் பீதியுடன் பார்க்கிறார்கள்.

 

நாகை

 

மன்னரா?

 

ராணி வேகமாக அந்த அறையின் பின்புறம் நோக்கிச் செல்கிறாள்.

 

ராணி

 

ஆமாம். என்னுடன் வாருங்கள்.

 

நால்வரும் பின்னால் ஓடுகிறார்கள். கதவு இப்பொழுது வேகமாக இடிக்கப்படுகிறது.
ராணி சுவற்றில் ஒரு இடத்தைத் தள்ளுகிறாள். அது உண்மையில் ஒரு மரக் கதவு. பின்னால் தோட்டம் தெரிகிறது. அதன் வழியே நால்வரும் ஓடுகிறார்கள். தாமிரபரணி ஆறு தூரத்தில் தெரிகிறது.
வெளிப்புறம் – தாமிரபரணி ஆற்றுப் படகுத் துறை – பகல்

 

ஆற்றுக் கரையில் இரண்டு, மூன்று படகுகள் நிற்கின்றன. ஒரு சிறு படகுத் துறை. படகுத்துறைக்கு முன்னால் ஆற்று மணல்.
ராணியும் பிறரும் தோட்டத்தைத் தாண்டி அங்கே வந்து நிற்கிறார்கள்.

 

ராணி

 

பழனி?

 

பதில் இல்லை.
ராணி சுற்றிப் பார்க்கிறாள்.

 

வழுதியின் குரல்

 

பழனி ஒரு வேலையாகப் போயிருக்கிறான்.

 

ராணியும் தென்னதரையனும் திடுக்கிட்டுத் திரும்புகிறார்கள்.
ஒரு மரத்திற்குப் பின்னாலிருந்து வழுதி வெளியே வருகிறான். அவன் கையில் வாள் ஒன்று இருக்கிறது. மெதுவாக அவர்களைப் பார்த்து நடந்து வருகிறான். அவன் முகத்தில் புன்சிரிப்பு.

 

வழுதி

 

அவசரமாகப் போகிறீர்களா? சற்றுப் பொறுங்கள்.

 

தருமன், நாகை, தென்னதரையன் மூவரும் அவனையே பார்க்கிறார்கள்.

 

ராணி

 

அரையரே, வழுதி அச்சுதனின் ஆள்.

 

தென்னதரையன் மெளனமாக இருக்கிறான். வழுதி அவனுக்கு எதிரே வந்து கத்தியைத் தரையில் குத்தி நிறுத்துகிறான்.

 

தென்னதரையன்

 

துரோகி.

 

வழுதி

 

நானா?

 

உள்புறம் – அரண்மனையில், ராணியின் அறைக்கு வெளியே – பகல்

 

பாண்டியன் நெடுங்கோன் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு நிற்கிறான். அவன் அருகே அச்சுதன். ராணியின் அறைக் கதவை நாலு வீரர்களாகச் சேர்ந்து இடிக்கிறார்கள்.

 

நெடுங்கோன்

 

படகுத் துறையில் யார் இருக்கிறார்கள்?

 

அச்சுதன்

 

அரசே, வழுதியை அனுப்பி விட்டேன்.

 

நெடுங்கோன்

 

படகுத் துறையில் யார் இருக்கிறார்கள்?

 

அச்சுதன்

 

தென்னதரையனைச் சமாளிக்க அவன் ஒருவன் போதும்

 

நெடுங்கோன்
(திரும்பிப் பார்த்து)

 

என்னுடைய கவலை அரையனைப் பற்றி இல்லை.

 

நெடுங்கோன் திரும்பி நடக்கிறான். அவனுக்கு முன்னால் வீரர்கள் ஓடுகிறார்கள்.
வெளிப்புறம் – தாமிரபரணி ஆற்றுப் படகுத் துறை – பகல்

 

வழுதி தென்னதரையனைப் பார்த்துப் புன்னகைத்தவாறு நிற்கிறான்.

 

வழுதி

 

குற்றங்களில் மிக மோசமானது ராசத்துரோகம், அரையரே. அச்சுதர் உங்களைப் பற்றிச் சந்தேகப்பட்டது வீண் போகவில்லை.

 

தென்னதரையன் தலை குனிந்தவாறு நிற்கிறான்.
வழுதி ராணியையும் மற்றவர்களையும் கவனிக்கவில்லை. அவன் கைகள் வாளுக்கு அருகே இருக்கின்றன.
ராணி சற்றே நகர்கிறாள். அவள் கால்கள் தரையில் ஊன்றி நிற்பது நமக்குத் தெரிகிறது.
மின்னல் வேகத்தில் அவள் பாய்கிறாள். அவள் கால்கள் தரையில் இருந்து பறந்து வழுதியின் நெஞ்சில் போய்த் தாக்குகின்றன. வழுதி தடுமாறி விழுகிறான்.
ராணி, கீழே விழுந்து புரண்டு எழும் போது வாள் அவள் கையில் இருக்கிறது.

 

ராணி
(புன்னகைத்தவாறே)

 

உனக்குப் பயிற்சி போதவில்லை.

 

அவள் கையில் வாளை அநாயாசமாக இரு முறை சுற்றுகிறாள். தூரத்தில் ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்கிறது.
வெளிப்புறம் – தாமிரபரணி ஆற்றுப் படகுத் துறை – பகல்

 

நெடுங்கோன் குறுக்கே வரும் புதர்களைத் தள்ளி விட்டு படகுத் துறைக்கு வந்து சேர்கிறான். அவனுக்கு முன்னால் இரண்டு மூன்று வீரர்கள் அங்கே நிற்கிறார்கள். அச்சுதனும் அரசனுடன் வந்து நிற்கிறான்.
படகுத் துறையில் ராணியோ அவளுடன் வந்தவர்களோ இல்லை. சற்றுத் தள்ளி, வழுதி தரையில் அமர்ந்திருக்கிறான். காலை மடக்கிச் சுற்றிக் கைகளைக் கட்டி குனிந்தபடி இருக்கிறான். அவன் தலையில் ரத்தம் வழிகிறது.
அச்சுதன் அவனிடம் ஓடுகிறான்.

 

அச்சுதன்

 

வழுதி, என்ன ஆயிற்று? அவர்கள் எங்கே?

 

வழுதி நிமிர்ந்து பார்க்கிறான். அவன் கண்களில் அவமானம் தெரிகிறது.

 

வழுதி

 

என்னை அடித்துப் போட்டு ஓடி விட்டார்கள், அச்சுதரே.

 

நெடுங்கோன் சுற்றிப் பார்க்கிறான். படகுகளைப் பார்க்கிறான்.

 

நெடுங்கோன்

 

ஏன் படகில் போகவில்லை?

 

வழுதி

 

நான் அவற்றை உடைத்து விட்டேன். ஏறிப் போனால் பாதியில் முழுகி விடும்.

 

நெடுங்கோன் அவனைப் பார்த்து வருகிறான்

 

நெடுங்கோன்

 

இதோ பார், ராணி சேர நாட்டு இளவரசி. வாள் சண்டையில் எனக்கு நிகரானவள். அவளிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

சற்றுத் தள்ளித் தெரியும் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைப் பார்க்கிறான்

 

நெடுங்கோன்

 

அச்சுதா, உன் ஆட்களை ஆற்றுப் பாலத்திற்கு அனுப்பு.
உள்புறம் – குதிரை லாயம் – பகல்

 

மங்கிய இருட்டு. குதிரைகள் பெருமூச்சு விடும் சத்தம். நம் கண் முன்னே ஒரு குதிரையின் தலை மங்கலாகத் தெரிகிறது. சற்றுத் தள்ளிச் சிறிது வெளிச்சம்.
யாரோ முணுமுணுக்கும் சத்தம். திடீரென்று “யா” என்று ஒரு குரல் கத்துகிறது. நம் முன்னால் குதிரை ஓட்டம் எடுக்கிறது. கதவு “பளார்” என்று திறக்கிறது.

 

CONTINUOUS ACTION:

 
 

வெளிப்புறம் – அரண்மனைக்கு எதிரே உள்ள சதுக்கம் – பகல்

 

பெரும் போர்க்குதிரைகள் இரண்டு அரண்மனைக்கு வெளியே உள்ள தெருவில் வலது பக்கத்தில் இருந்து பாய்ந்து வருகின்றன. ஒன்றின் மேல் ராணியும் நாகையும் அமர்ந்திருக்கிறார்கள். ராணி தன் முகத்தை ஒரு துணியால் மறைத்திருக்கிறாள். அவள் கண்கள் மட்டும் தெரிகின்றன. மற்றொன்றின் மேல் தென்னதரையனும் தருமனும் வருகிறார்கள். அரண்மனையின் மறுபக்கத்தில் இருந்து சில வீரர்கள் ஓடி வருகிறார்கள். குதிரை மேல் பெண்களைப் பார்த்துக் குழம்பி நிற்கிறார்கள்.
குதிரைகள் பாய்ந்து ஓடுகின்றன. அரண்மனையின் வெளி மாளிகைப் படிகளில் அச்சுதன் இறங்கி வருகிறான். அவனுடைய வீரர்களைப் பார்த்து ஏதோ கத்துகிறான்.
ராணியும், தென்னதரையனும் அரண்மனையின் இடது பக்கம் போகும் சாலையில் போகிறார்கள்.

 

CONTINUOUS ACTION:

 

சாலையில் போகும் மக்கள் இரு குதிரைகள் வரும் வேகத்தைப் பார்த்துச் சிதறி ஓடுகிறார்கள். ராணி முகத்தில் முடி பறக்கிறது. பின்னால் நாகை பயத்துடன் அவளைக் கட்டியவாறு அமர்ந்திருக்கிறாள்.
சற்றுத் தூரத்தில், அவர்களுக்குப் பின்னால் துரத்தி வரும் குதிரைகள் தெரிகின்றன.
சந்தை சாலை (சித்தர்களின் மடம் உள்ள சாலை) வந்தவுடன் ராணி அதில் குதிரையைத் திருப்புகிறாள். தென்னதரையனும் திரும்புகிறான்.
இரு குதிரைகளும் சரேலென்று நிற்கின்றன.
மடத்தின் உள்ளிருந்து புகை குபுகுபுவென்று கிளம்புகிறது. வெளியே பெரும் கூட்டம் கூடி நின்று பார்க்கிறார்கள். மடம் எரிவது நன்றாகத் தெரிகிறது.
அந்தக் கூட்டம் சாலையை அடைத்திருக்கிறது. அவர்கள் மடத்தைத் தாண்டி, ஆற்றுப் பாலத்தை நோக்கிப் போக முடியாது.
ராணி குதிரையைத் திருப்புகிறாள். பழைய அரண்மனைச் சாலையில் மறுபடிக் கிளம்புகிறார்கள். ஆனால் பின்னால் வரும் வீரர்கள் இப்போது
மிக அருகில்.
போர்க் குதிரைகள் தடதடவென்று சப்தமிட்டு பறக்கின்றன. சாலையில் பலரின் கூக்குரல்கள்.
மேலிருந்து அவர்கள் போகும் பாதையைப் பார்க்கிறோம். இடது பக்கம் தாமிரபரணி ஆற்றுப் பாலம். ராணி குதிரையை சரேலென்று ஒரு பக்கச் சந்தில், இடது பக்கம் திருப்புகிறாள். தென்னதரையன் தொடர்கிறான்.
குறுகலான சந்தின் வழியாக இரு குதிரைகள் பறக்கின்றன. அதன் முடிவில் இடது பக்கம் திரும்புகிறார்கள்.
பாய்ந்து சென்ற குதிரைகள் நிற்கின்றன. அது ஒரு முட்டுத் தெரு. எதிரே ஒரு வீட்டின் பெரும் சுவர் எழும்பி நிற்கிறது.
ராணியும் அரையனும் குதிரைகளை விரைவாகத் திருப்புகிறார்கள். ஆனால் அதற்குள் இரு குதிரை வீரர்கள் எதிரே நிற்கிறார்கள். அந்த வீரர்களுக்குப் பின்னால் சந்தில் இருந்து இன்னும் வீரர்கள் வெளியே வந்தவாறு இருக்கிறார்கள்.

 

வீரன்

 

அம்மா, சரணடைந்து விடுங்கள். தப்பிச் செல்ல வழியில்லை.

 

ராணி குதிரையில் நிமிர்ந்து அமர்கிறாள்.

 

ராணி

 

என்னைப் பிடிக்க இன்னும் சிறிது முயற்சி செய்ய வேண்டும்.

 

குதிரை கால்களை எழுப்பிக் கனைக்கிறது. அப்படியே பக்கவாட்டில் திரும்புகிறாள் ராணி. அங்கே ஒரு பெரும் வீட்டுப் படிகளும் தாழ்வாரமும் தெரிகின்றன. குதிரை படிகளில் தாவி ஏறி திறந்திருக்கும் கதவுகள் வழியாக வீட்டுக்குள் செல்கிறது.
தென்னதரையன் தொடர்கிறான். வீட்டுக்குள் குனிந்தவாறே அவர்கள் குதிரைகள் மேல் செல்கிறார்கள்.
வீட்டுக்குள் ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருக்கும் ஒருவர் நிமிர்ந்து பார்க்கிறார். அவர் கண் முன்னே குதிரைகள் வரிசையாகச் செல்கின்றன. கடைசியாகச் செல்லும் குதிரை நின்று வாலைத் தூக்குகிறது.
வீட்டுக்கு வெளியே வந்து ராணி எதிரே பார்க்கிறாள். அந்தச் சாலை ஆற்றுக்கு மிக அருகே போகிறது. சற்றுத் தூரத்தில் அவர்களின் எதிரே ஆற்றுப் பாலம் தெரிகிறது.
தென்னதரையன் குதிரையில் தாவி அந்த வீட்டில் இருந்து வெளியே வருகிறான். பின்னால் வீட்டுக் கதவுகள் டமார் என்று சாத்துகின்றன.

 

ராணி

 

போகலாமா?

 

குதிரைகள் மறுபடி ஓடுகின்றன.
பாலம் நெருங்குகிறது. வலது பக்கம் ஒரு சிறு பாதையில் அரண்மனை யானைகள் மூன்று ஆற்றில் இருந்து திரும்பி வருகின்றன. குதிரைகள் மேலே பாய்ந்து செல்கின்றன.
சடாரென்று அந்த வீதியில் இருந்து வெளியே வந்து ஆற்றுப் பாலத்திற்குப் போகும் நேர் சாலையில் நிற்கிறார்கள்.
வலது பக்கம் பாலம். மெதுவாக குதிரைகளைத் திருப்புகிறார்கள். பாலத்தின் குறுக்கே மூன்று வீரர்கள் நிற்கிறார்கள். வேல்களைக் குறுக்கே பிடித்து இருக்கிறார்கள்.

 

ராணி

 

அரையரே, தயாரா?

 

தென்னதரையன் மெளனமாக இருக்கிறான். ராணி அவனைத் திரும்பிப் பார்க்கிறாள். அவன் அவர்களுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கிறான். ராணி அவன் கண் போகும் திசையைப் பார்க்கிறாள்.

வில்லை வளைத்து இரு வீரர்கள். அவர்களுக்கு நடுவே, அச்சுதனும், பாண்டியன் நெடுங்கோனும் குதிரைகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.
நெடுங்கோன் புன்னகைத்தவாறு இருக்கிறான்.

பாலத்தில் தூரத்தில் சில வண்டிகள் வருகின்றன. வருவோர் போவோர் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று பார்க்கிறார்கள். அரசருக்குப் பின்னால் இன்னும் சில வீரர்கள் தெரிகிறார்கள்.

 

நெடுங்கோன்

 

தேவி, எங்கே சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டாய்?

 

ராணி மெளனமாக இருக்கிறாள்.

 

நெடுங்கோன்

 

தென்னதரையா, இறங்கி வா.

 

தென்னதரையன் முகம் இறுகுகிறது. ஆனால் வாள் பிடித்த அவன் கை நடுங்குகிறது.

 

நெடுங்கோன்

 

அரையா, நீ எடுத்த சபதத்தை மறந்து விட்டாயா என்ன?

 

தென்னதரையன் அசையாமல் நிற்கிறான்.

 

நெடுங்கோன்

 

இறங்கி வா.

 

தென்னதரையன் கையில் இருந்து வாள் நழுவிக் கீழே விழுகிறது. டனார் என்று சத்தம் கேட்கிறது.
அச்சுதன் குதிரையை முன்னால் நகர்த்துகிறான்.

திடீரென்று அவர்களுக்கு மிக அருகில் சில மணி ஓசைகள் கேட்கின்றன. பாண்டியன் திரும்பிப் பார்க்கிறான்.

கரிய மேகங்களைப் போல, குளித்து விட்டு வரும் யானைகள் சாலையில் வருகின்றன. பாண்டியனுக்கும் ராணிக்கும் இடையே சாலையில் நேராக நடந்து போகின்றன. வில் பிடித்த வீரர்கள் பின்னால் நகர்கிறார்கள். பாண்டியன் “அடேய்” என்று கத்துகிறான். யானைகள் ராணியை மறைக்கின்றன.

 

ராணி
(கத்துகிறாள்)

 

அரையரே, வாருங்கள்

 

குதிரைகள் சரேலென்று பாலத்தை நோக்கித் திரும்புகின்றன. பாண்டியன் “நிறுத்துங்கள்” என்று அலறும் சத்தம் கேட்கிறது. பாலத்திற்குக் குறுக்கே நின்ற வீரர்கள் மறுபடி வேலைச் சேர்க்க முயல்கிறார்கள்.

ராணி கத்தியைச் சுற்றியவாறு புயல் போல பாய்கிறாள். இரண்டு வீரர்கள் சுழன்று குதிரை மேலிருந்து விழுகிறார்கள். மற்றொரு வீரன் வேலை எறிகிறான். அது ஆற்றில் போய் விழுகிறது.

குளம்படிச் சத்தம் மட்டும் கேட்கிறது. குதிரைகள் இரண்டும் அந்த விரிந்த மரப் பாலத்தின் மேல் பறக்கின்றன. பாலத்தில் வரும் வண்டிகள் விலகுகின்றன. பாலத்தின் இருபுறமும் அங்கங்கே தீப்பந்தங்கள், அவற்றுக்கான பிடிகளில் எரிகின்றன. ராணி, கையில் உள்ள கத்தியைத் தூக்கி எறிகிறாள். பிறகு ஒரு கையால் அந்தத் தீப்பந்தங்களில் ஒன்றைப் பிடுங்கிக் கொள்கிறாள். பின்னால் வரும் தென்னதரையனும் அது போலவே செய்கிறான்.

அம்புகள் சில அவர்கள் பின்னால் இருந்து பாய்கின்றன.

பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரும் வைக்கோல் வண்டி வருகிறது. அது பாலத்தில் ஏறி வரும் பொழுது எதிரே குதிரைகள் பாய்ந்து வருகின்றன. வண்டிக்காரன் மிரள்கிறான். வண்டி பக்கவாட்டில் திரும்புகிறது. அது இன்னும் சற்றுத் திரும்பினால் பாதை அடைத்து விடும்.
ராணி குதிரையில் வேகமாக வந்து கையில் உள்ள தீப்பந்தத்தை எட்டிப் பிடிக்கிறாள். வைக்கோல் வண்டிக்கும் பாலத்தின் கைப்பிடிக்கும் இடையே உள்ள சந்தில் குதிரை போகிறது. வைக்கோல் தீப்பந்தத்தில் பட்டுப் பற்றிக் கொள்கிறது.

தென்னதரையனின் குதிரையும் தாண்டிப் போகிறது. வைக்கோல் வண்டி இப்பொழுது பாதையை அடைக்கிறது.

வைக்கோல் குபுகுபுவென்று பற்றி எரிகிறது. வண்டிக்காரன் திரும்பிப் பார்த்து விட்டு இறங்குகிறான். வண்டி பாலத்தின் குறுக்கே நிற்கிறது. பின்னால் வரும் வீரர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

தூரத்தில் இரு குதிரைகள் சென்று மறைகின்றன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.