இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1

20 -ஆம் நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் மிகவும் சுவாரசியமான ஒரு காலகட்டம். பெளதிக கண்ணோட்டத்தில் பார்த்தால், குவாண்டம் அறிவியலின் பொற்காலத்தின் ஆரம்பம். ஐன்ஸ்டீன், போர், டிராக், ஷ்ரோடிங்கர் என்று உயர்தர விஞ்ஞானிகள் கொடி கட்டிப் பறந்தனர். உயிரியல் துறையில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றங்கள் தோன்றவில்லை என்று சொல்லலாம். அணு ஆராய்ச்சி ஆரம்ப கால எளிமையிலிருந்து மெதுவாக சிக்கலை நோக்கிப் பயணித்த காலமும் இதுவே.

image04

20 -ஆம் நூற்றாண்டின் கடைசி 50 வருடங்கள், உயிரியல் கண்ணோட்டத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு காலகட்டம். இரு சுருள் வளையம் (double helix) கண்டுபிடிப்பிலிருந்து, மனித மரபணு ப்ராஜக்ட் வரை, தூங்கிக் கொண்டிருந்த உயிரியல் துறை, அதிவேக முன்னேற்றம் கண்ட காலமும் இதுவே. இன்று, தமிழ் சினிமா பாடல்வரை இத்துறையின் தாக்கம் உள்ளது உண்மை. உதாரணத்திற்கு, 2012 -ல் வெளிவந்த ‘மந்திரப் புன்னகை’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கவிஞர் அறிவுமதி எழுதிய ‘சட்டச் சடசட’ என்ற பாடலின், சரணத்தில்,

சிறு சிறு உரசலில்

உயிரணு நெரிசலில்

கலவரம் எழுகையில்

கவிஞர் அறிவுமதியின் பின்னணியை நான் அறியேன். ’உயிரணு’ என்ற சொல், சாதாரண சினிமா ரசிகனுக்குப் புரியும் என்ற கவிஞரின் நம்பிக்கை, அசாதாரணமானது. ஏனென்றால், இன்னும் உயிரியல் விஞ்ஞானிகளுக்கே உயிரணு பற்றிய முழுப் புரிதல் இல்லை என்பதே உண்மை.

ஒரு பருந்து பார்வை பார்த்தால், இவ்விரண்டு துறைகளும் ஆரம்ப எளிமையிலிருந்து படிப்படியாக முன்னேறுகையில் சிக்கலானது. பெளதிகத் துறை, ஆரம்பத்தில் எளிமையான எலெக்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டான் என்ற நிலையிலிருந்து, இவை அடிப்படை துகள்கள் அல்ல (எலெக்ட்ரானைத் தவிர) என்று தெரிய வந்தது, இன்று, நம் அடிப்படை அணு வடிவமைப்பு பற்றிய புரிதல் சிக்கலானது என்பது உண்மை. இதைப் பற்றி ‘சொல்வனத்தில்’ – ’விஞ்ஞான முட்டி மோதல்’, என்ற கட்டுரைத் தொடரில் விரிவாக எழுதியிருந்தேன். இதே போல, உயிரியலிலும், ஆரம்பத்தில், இரு சுருள் வளையம் உலகின் உயிர்களின் ரகசியம் என்று சில காலம் நம்பப்பட்டது. கேள்விகள் எழ எழ, பலவற்றிற்கும் பதில் இல்லாமல் போகவே, இத்துறை இன்னும் சிக்கலானதும், மறுக்க முடியாத உண்மை. இரு துறைகளும், ஆரம்ப வெகுளித்தனம் மறைந்து, யதார்த்த பிரச்னைகளைத் தீர்த்து வருகின்றன, அதே போல, இரு துறைகளும், பயன்பாட்டு விஷயங்களிலும், முன்னேறி வந்துள்ளன, உயிரியல் தொழில்நுட்பம், இன்று விவசாயம், மருத்துவம், ஏன் குற்றவியல் என்று, எங்கும் பயனளித்து வருகிறது.

இரு துறைகளின் ஆரம்பங்களிலும் வேறுசில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்தன. ஆரம்பத்தில், வேதியலுக்கும் பெளதிகத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நினைக்கப்பட்டது. அதாவது, பெளதிக விஞ்ஞானிகள், தங்களை வேதியல் விஞ்ஞானிகளை விட உயர்ந்தவர்களாக நினைத்து வந்தனர். அணு அளவில், இவ்விரண்டு துறைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரு துறையினரின், அணுகுமுறைகளில் சில வேறுபாடுகள் உள்ளது உண்மை. இப்படி சிந்தித்தவர்களில், ரூதர்ஃபோர்டும் (Ernest Rutherford) ஒருவர். அணு பெளதிக ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவருக்கு, வேதியல் நோபல் பரிசு வழங்கிய பொழுது, சற்று தர்மசங்கடம் அடைந்ததை, அவரே ஒப்புக் கொண்டார்.

உயிரியலின் அணுகுமுறைகள் தனிப்பட்டவை. உயிரனங்களை கண்காணித்து (living organism, observation focused science) அவற்றின் குணாதியங்களை குறிப்பெடுத்தல், தாவரங்களின் வளர்ச்சியை ஆராய்ச்சி செய்தல் என்று வளர்ந்த ஒரு துறை அது, பெரிய அளவிலேயே தன் கண்ணோட்டத்தை வைத்துக் கொண்ட துறை, உயிரியல். பல நூறு ஆண்டுகளாக, இவ்வாரு நடந்த ஆராய்ச்சி முறைகள், இன்று தொன்மை உயிரியல் (classical biology) என்று அழைக்கப்படுகிறது. இம்முறைகளிலிருந்து மாறும் பொழுது ஏற்படும் டென்ஷன்கள் மிகவும் சுவாரசியமானவை. அதுவும் அம்மாற்றங்கள், வேறு துறை சார்ந்த ஒருவரால் கொண்டு வரப்பட்டால், கேட்கவே வேண்டாம். இக்கட்டுரைகளில், இவ்வகை சுவாரசியமான உரசல்களை ஆராய்வோம். பலரைப் போல, நானும், இன்றிருக்கும் அணு அளவு சிந்தனை, உயிர் தொழில்நுட்ப துறையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்ததாக நம்பி வந்தேன். சொல்லப் போனால், உலகின் முதல் பல்துறை விஞ்ஞானம் என்று உயிரியல் தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். இன்று, நாம் பாட புத்தகங்களில், எளிமையாக சொல்லி தரப்படும் அணு அளவு உயிரியலுக்குப் (microbiology) பின்னால் உள்ள ஆரம்ப கால போராட்டங்களை, அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை.

1910 -ல், டென்மார்க் நாட்டை சேர்ந்த வில்ஹெம் ஜொஹான்ஸன் (Wilhelm Johannsen) என்னும் விஞ்ஞானி, மரபுத்தொடர் (heredity) விஷயத்தில், ஏன் அணு பெளதிகத்தில் உள்ளது போல அடிப்படை பொருள் ஒன்று இருக்கக் கூடாது என்று gene என்ற ஒரு பெயரை அறிவித்தார். இதைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. இதற்கான துல்லிய விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. வில்ஹெம்மை யாரும் பெரிய புரட்சியாளராகப் போற்றவில்லை. மாறாக ஒரு பெளதிக துரோகியாக பாவிக்கப் பட்டார்.

johannason

ஜொஹான்ஸனின் இப்படிப்பட்ட சிந்தனைக்குக் காரணம், செக் நாட்டை சேர்ந்த கிரெகர் மென்டல் (Gregor Mendel) என்னும் 19-ஆம் நூற்றாண்டு விஞ்ஞானி, பல தாவரங்கள் மற்றும் விலங்குகளை, கலப்பினப்பெருக்கம் (cross breeding) செய்கையில், இனப்பெருக்கத்தின் அடிப்படையில், (குறிப்பாக, பட்டாணி செடிகளின் இனப்பெருக்கம்) ஏதோ ஒரு மிகச் சிறிய அணு அளவு சூட்சமம் இருப்பதாக நம்பினார். ஆனால், என்னவென்று அவரால் சரியாகச் சொல்ல இயலவில்லை. இப்படி, சில அணு அளவு சிந்தனைகள், உயிரியலில், ஒரு அனாவசிய இம்சையாகவே பாவிக்கப்பட்டு வந்தது.

1940 – களில், இந்த இம்சை, மிகப் பெரிதாக உருவாகத் தொடங்கியது. ஷ்ரோடிங்கர் (Erwin Schrodinger) மிகப் பிரபலமான அணு பெளதிக விஞ்ஞானி. இவர், 1944-ல் ‘உயிர் என்றால் என்ன?’ (What is Life?) என்ற கட்டுரையை எழுதி, பயங்கர உயிரியல் புழுதியைக் கிளப்பிவிட்டார்;

இந்த கேள்விக்குச் சரியான பதில் ஷ்ரோடிங்கருக்குக் கிடைக்கவில்லை. இவருடைய அணுகுமுறை, அணு பெளதிக முறைகளைப் போலவே இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. செடிகள், விலங்குகள் என்று ஆராய்ந்து வந்த ஒரு துறையில், இவர், உயிரினங்களின் அடிப்படை, அதனுள் ஒரு அணு அளவு குறியீடு (atomic level codes) சமாச்சாரம் என்ற கருத்தை முன் வைத்தார். இவரது பார்வையில், மிகச் சிக்கலான குறியீட்டு முறை ஒன்று, உயிரினங்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, மற்றும் இயல்புகளைக் கட்டுப்படுத்துவதாக நம்பினார். இவரது லாஜிக் என்னவென்றால், தந்தி தொடர்பியலில், எப்படியொரு கோடும், புள்ளியும் வைத்துக் கொண்டு, ஒரு ஆங்கில (லத்தீன மொழிகள்) மொழியையே வெளிப்படுத்த முடிகிறதோ, அவ்வாறே, உயிரினங்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, மற்றும் இயல்புகள் அனைத்தையும் ஒரு சிக்கலான குறியீடுக்குள் கொண்டு வர இயலும் என்பது.

ஆனால், ஒப்புக் கொள்வார்களா உயிரியல் விஞ்ஞானிகள்? உலகமே என்ன குவாண்டம் பெளதிக விளையாட்டு மைதானமா? உயிரியல் ஆராய்ச்சி வரலாறு பற்றி, பெளதிக விஞ்ஞானிகளுக்கு என்ன தெரியும் என்று பாய்ந்தார்கள். பாக்கியராஜ் இசையமைக்கிறேன் என்று இளையராஜாவுடன் போட்டி போடுவது போல இவர்களுக்குத் தோன்றியது. எந்திரங்களுக்கான குறியீடு, ஆணை (codes, instructions) போன்ற விஷயங்கள் உயிரினங்களுக்குப் பொருந்தாது என்பதும் இவர்களின் வாதம்.

ஷ்ரோடிங்கர்
ஷ்ரோடிங்கர்

பெரிதாக ஷ்ரோடிங்கர் உயிரியல் துறையில் சாதிக்கவில்லை என்று மேல்வாரியாகத் தோன்றினாலும், பலரிடம், இவர், ஒரு புதிய அணுகுமுறையை முன் வைத்து, புதிய உயிரியல் புரட்சியை துவக்கி வைத்தார் என்பது உண்மை. பல இளம் பெளதிக விஞ்ஞானிகள், ஏன் உயிரியல் ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று யோசிக்க தொடங்கினர். இவர்கள், பெளதிகம் மற்றும், அந்த காலகட்டத்தில் அதிவேகமாக வளர்ந்து வந்த தகவல் கோட்பாடுகளை நன்றாக புரிந்து வைத்திருந்தனர். இப்படி, பெளதிக கொள்கைகளை உயிரியலில் பொருத்தி பார்த்தவர்களில் ஒருவர், ஹென்ரி குவாஸ்லர் (Henry Quastler). அமினோ அமிலம் (amino acids) , நிறவுறு (chromosome) மற்றும் புரத மூலக்கூறு (protein molecule) பற்றி ஓரளவு புரிந்திருந்த காலம் அது. குவாஸ்லர், உயிரனங்களின் கட்டுமான குறியீடுகள் , வார்த்தைகளாக அமினோ அமிலத்திலும், பெரிய வாக்கியங்களாக புரத மூலக்கூறுக்குள் இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார். குவாஸ்லரின் சக விஞ்ஞானியான சிட்னி டான்கோஃப் (Sydney Dancoff) இக்கருத்தை மேலும், ஒரு கணினி நாடாவில் பதிவு செய்யப்பட்ட தகவலைப் போல, நிறவுறுவில் அவ்வுயிரின் கட்டமைப்பு, வளர்ச்சி, மற்றும் இயல்புகள் சிக்கலான குறியீடாக இயற்கையால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று விரிவாக்கினார். தொன்மை உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு பைத்தியக்கார செயலாகவே பட்டது. இப்படியே விட்டால், இந்த பெளதிக கோஷ்டி, உயிர் அணுகுண்டு என்ற ஒன்று உண்டு என்று உலகையே நம்ப வைத்து விடுவார்கள் என்று கிண்டலடித்தனர்.

1952 -ல் குவாஸ்லர் இப்படிப்பட்ட சிந்தனையுள்ள, பெளதிக/உயிரியல் விஞ்ஞானிகளை ஒரு மாநாட்டில் திரட்டினார். இவர்கள், நூண்ணுயிரை வைத்துக் கொண்டு, அவற்றில் இத்தனை தகவல் பிட்களை (bits) தாங்கியது என்று ஒரு ஆரம்ப கணிப்பை முன் வைத்து, ஒரு உயிரினம் என்றால், இத்தனை தகவல் பிட்கள் என்று கணக்கு செய்யத் தொடங்கினார்கள். அத்துடன், இந்த தகவல் மையங்கள் ஒவ்வொன்றொடு எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்று புதிய புதிய பொறியியல் சொற்களோடு குழப்பித் தள்ளினார்கள். இவர்களின் மொழியை மற்ற விஞ்ஞானிகள் புரிந்து கொள்வது, மிகவும் கடினமாக இருந்தது. ‘உயிரை எடுக்கிறார்கள்’ என்றும் சொல்ல முடியாது 😉

இந்த குழப்பமான வளர்ச்சியை கண்டித்து பல யூரோப்பிய விஞ்ஞானிகள், ஒரு கண்டன அறிக்கை (என்ன, நம்மூர் அரசியல் போலப் போகிறதே!) வெளியிட்டார்கள். கையெழுத்திட்டவர்களில் ஒருவர் ஜேம்ஸ் வாட்ஸன் (James Watson) என்ற 25 வயது அமெரிக்க இளைஞர். இவருடைய சக ஆராய்ச்சியாளர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரான்ஸிஸ் க்ரிக் (Francis Crick). க்ரிக்கின், படிப்பெல்லாம் பெளதிகம்தான், இவரும் ஷ்ரோடிங்கரின் கட்டுரையால் கவர்ந்திழுக்கப்பட்டு, தானும் உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தவர்.

சரி, எதற்காக வாட்ஸனையும் க்ரிக்கையும் தனியாக சொல்லி இருக்கிறேன்? அடுத்த ஆண்டிலேயே இவர்கள் அடித்த அந்தர் பல்டி தான் காரணம். சாதாரண நுண்ணுயிர்களையே ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் பாதை பெரிதாக பலனளிக்கவில்லை என்ற ஒரு ஆதங்கம் பல விஞ்ஞானிகளுக்கு இருந்தது. அதே சமயம், எல்லா உயிரிங்களுக்குள்ளும் இந்த மரபணு (gene) ஒவ்வொரு உயிரனத்தின் உயிரணுவில் (cell) உள்ள உட்கரு அமிலத்தில் (DNA – டி.என்.ஏ.) இருக்கக்கூடுமோ என்ற ஒரு கருத்தும் இருந்தது. இதற்கான எந்த ஒரு அடிப்படையும் இல்லை. ஒரு குருட்டுத் தேடல்தான். உட்கரு அமிலத்தில் ஆராய்ச்சி செய்தவர்கள் பெரும்பாலும் வேதியல் விஞ்ஞானிகள். இதில் ஏதோ ரகசியம் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. க்ரிக் மற்றும் வாட்ஸன் இந்த ரகசிய விஷயத்தில் ஆராய்ச்சி செய்யலாம் என்று முடிவெடுத்தனர். இருவரிடமும் வேதியல் மற்றும் பெளதிக ஆராய்ச்சி முறைகளின் பயிற்சி இருந்தது. சரி, இந்த உட்கரு அமிலத்தின் கட்டமைப்பை முதலில் ஆராயலாம் – பிறகு, அதனுள் உள்ள விஷயங்களைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு பயணிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

க்ரிக் மற்றும் வாட்ஸனின் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளில் பெரிதாக மூலக்கருவின் வடிவமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே, இவர்கள் பெளதிக முறையான எக்ஸ் கதிர் அலைவளைவு (x-ray diffraction) முறையை பயன்படுத்தி மூலக்கருவின் வடிவத்தை அறிய முற்பட்டனர். இவர்கள் ஆராய்ந்தது உட்கரு அமிலமூலத்தை (nucleotide). எக்ஸ் கதிர் அலைவளைவு மூலம் இவர்களுக்குச் சில நிழல்கள் தெரிந்தன. இந்த நிழல்கள் நான்கு வடிவங்களில் தோன்றியது, இவற்றை A, C, G ,T என்று அவற்றின் வேதியல் பெயர்களை சுறுக்கி அழைத்தனர். இவ்வடிவங்கள் ஒரு பாங்கிலேயே (pattern) திருப்பி திருப்பி உட்கரு அமிலமூலத்தில் காட்சியளித்தது. அட, நாம் எதிர்பார்த்த ரகசிய குறியீடு இதுதானோ என்று இருவரும் வியந்தனர்.

cric_watson

(க்ரிக் மற்றும் வாட்ஸன்)

இந்த பாங்கை க்ரிக் மற்றும் வாட்ஸனின் ஆய்வில், ஒரு இரட்டை சுருள் வளைய வடிவமைப்பில் உள்ளது என்று முடிவுக்கு வந்து, அதை ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியிட்டனர். அத்துடன், இவர்களது கண்டுபிடிப்பு பிரபலமாகி, பல விஞ்ஞானமற்ற பத்திரிகைகளும் இவர்களை அட்டை படங்களில் போட்டு , மேலும் தொண்மை உயிரியல் விஞ்ஞானிகளுக்கு எரிச்சலூட்டின. இன்னொரு பெளதிக மோசடி வேலை தொடங்கி விட்டதாகவே நினைத்தனர்.

1953 -ல் வெளிவந்த இந்த விஞ்ஞான பதிவிற்கு பிறகு, இரண்டு வாரங்களில், மீண்டும் க்ரிக் மற்றும் வாட்ஸன், இன்னொரு பதிவையும் வெளியிட்டனர். இம்முறை அடக்கி வாசிப்பதை முற்றிலும் தவிர்த்தனர். முன்னே சொன்னதுபோல பாங்கு ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த நான்கு பேஸ்கள் (அதாவது A, C, G, T) பல சேர்மானத்திலும் தோன்றலாம். இந்த முறை, பாங்கில் உயிரின மரபு தகவல்களின் குறியீடுகள் அடங்கியுள்ளன என்றும் கூறினர். இந்த மரபு தகவல்கள் படிமலர்ச்சி (evolution) மூலம் உயிரினங்களுக்குக் காலகாலமாக பெயர்ச்சியாகி வருகின்றது என்றனர்.

ஜார்ஜ் கேமாவ் (George Gamov) என்ற பிரபல அமெரிக்க அண்ட ஆராய்ச்சியாளர், இக்கட்டுரைகளைப் படித்துவிட்டு க்ரிக் மற்றும் வாட்ஸனுக்கு ஒரு பிரபல கடிதம் எழுதினார். ‘அட, கடைசியில் உயிரியலும் ஒரு துல்லிய விஞ்ஞானமாக்கி விட்டீர்கள்!’ அடடா, இது ஒரு சிக்கலான கணக்கு பிரச்னை. இதில் மறையீட்டியல் (cryptographers) வல்லுனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் படைப்பு ரகசியத்தை முழுவதும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த காலகட்டத்தில், படைப்பின் ரகசியத்தை உலகிற்கு க்ரிக் மற்றும் வாட்ஸனின் கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டு காட்டியது போல பல பத்திரிகைகளும் எழுதத் தொடங்கின. ஒரு முறை, வாட்ஸன், வெகுளித்தனமாக, தான் படைப்பின் ரகசியத்தை கண்டுபிடித்து விட்டதாக நண்பர்களுடன் கொண்டாடவும் செய்தார்.

இப்படித் தொடங்கிய உயிர் தொழில்நுட்பம், இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் பழைய உயிரியல் விஞ்ஞானிகள். தங்களுடையை துறையை பெளதிக விஞ்ஞானிகள், கணினி விஞ்ஞானிகள், மற்றும் கணக்கு நிபுணர்கள் கடத்திச் சென்று விட்டதாகக் குறை பட்டனர். இன்று, இத்துறை, ஒரு அருமையான பல்துறை விருட்சமாக வளர்ந்து, உயிர் தகவல்துறை, (bio informatics) உயிர் புள்ளியியல், (bio statistics) என்று விடிவடைந்து வருவதோடு, மனித குலத்திற்கு பயனளித்தும் வருகிறது.

ஏன் இந்த இரட்டை சுருள் வளைய கண்டுபிடிப்பை பெரிதாக இன்று நாம் நினைக்கிறோம்? முக்கியமாக, உயிரியலின் சிந்தனையை, ஆற்றல், சிந்தனையிலிருந்து, தகவல் சிந்தனைக்கு மாற்றியது முக்கிய ஒரு மைல்கல். இன்று உயிரியலில், எந்த ஒரு நுண் அணுகுமுறையும் தகவல் சிந்தனையாக மாறியுள்ளது. எந்த மரபணு ஆகட்டும், எந்த புரத மூலக்கூறாகட்டும், அதன் துல்லிய விளக்கம் தகவல் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

ஆரம்ப வெகுளித்தனம் நீங்கி, படைப்பின் தன்மை எவ்வளவு சிக்கலானது, இன்னும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனை உள்ளது என்று மெதுவாக நமக்குப் புரியத் தொடங்கியுள்ளது, அடுத்த பகுதியில், நம் அன்றாட வாழ்க்கையில் சில அனுபவங்களை கொண்டு, இன்றைய உயிர் தொழில்நுட்ப புரிதலுக்கு மெதுவாக வருவோம்.

இச்சமயம் ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும். தமிழில் மூலக்கூறு உயிரியல், ஒரு தலை சுற்றும் விஷயம். தொல்காப்பியம் முதல் ரஜினிகாந்த் வரை வளர்ந்த தமிழ், பல விஞ்ஞானச் சொற்களை, அதிகம் கண்டு கொள்ளவில்லை. ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவிற்கும் புதிய வார்த்தைகளை உருவாக்கும் மொழி, ஏனோ விஞ்ஞானத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. செல் மற்றும் டி.என்.ஏ. -வுக்குகூட சரியான வார்த்தைகள் இல்லை. இதைப் பற்றி விசாரித்ததில், இச்சொற்கள், அப்படியே ஆங்கிலச் சொற்களாக, தமிழ் பாடப் புத்தகங்களில் வலம் வருகிறதாம். என்னுடைய பின்னணி, பெளதிகம், மின்னணுவியல், கணினி விஞ்ஞானம். நடைமுறை உயிர் தொழில்நுட்ப வல்லுனர் அல்ல. இக்கட்டுரையின் மூலம், சில புதிய சொற்களை உருவாக்க வேண்டியிருக்கலாம். இங்கு வழக்கம் போல கட்டுரையின் கடைசியில், தமிழ் பரிந்துரைகளை முன் வைக்கிறேன். இத்துறை வல்லுனர்கள், தவறிருந்தால் மன்னிக்கவும் – மேலும், புதிய உயிரியல் தமிழ் வார்த்தைகளை, தாராளமாக முன் வைக்கலாம்.

oOo

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

 

ஆங்கிலச் சொல்

தமிழ் பரிந்துரை

classical biology

தொன்மை உயிரியல்

heredity

மரபுத்தொடர்

cross breeding

கலப்பினப்பெருக்கம்

atomic level code

அணு அளவு குறியீடு

chromosome

நிறவுறு

protein molecule

புரத மூலக்கூறு

gene

மரபணு

cell

உயிரணு

DNA

உட்கரு அமிலம்

x-ray diffraction

எக்ஸ் கதிர் அலைவளைவு

cryptographer

மறையீட்டியல் வல்லுனர்

bio informatics

உயிர் தகவல்துறை

bio statistics

உயிர் புள்ளியியல்

nucleotide

உட்கரு அமிலமூலம்

Double helix

இரு சுருள் வளையம்

0 Replies to “இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1”

  1. இரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை விஞ்ஞான உலகில் உண்டு. இந்த பெண் விஞ்ஞானி, ரோஸலின் ஃப்ராங்க்லின் (Rosalind Franklin), இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 1962 –ல் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இளவயதில், காலமாகியிருந்தார். நோபல் பரிசு பாரம்பரியப்படி, காலமானவருக்கு பரிசளிக்கப் படாது. இவருடைய பெயரை முன்மொழிந்திருப்பார்கள் – ஆனால், இவர் காலமாகியதால்,(1958) பரிசளிக்கப்படவில்லை என்று பரவலாக நம்பப்பட்டு வந்தது. நோபல் பரிசுப் பரிந்துரைகள், 50 வருடங்களுக்கு வெளியிடாமல் ரகசியமாகப் பாதுகாப்பதும் அந்தப் பரிசின் இன்னொரு பாரம்பரியம். 2008 –ல், இவர் காலமாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நோபல் பரிசு பரிந்துரைகளை ஆராய்ந்ததில், இவரது பெயரை யாருமே முன்மொழியவில்லை என்று தெரிய வந்தது.
    வாட்ஸன் எழுதிய Double Helix என்ற வெற்றிப் புத்தகத்தில் ரோஸலின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படி என்ன செய்தார் ரோஸலின்? இந்தச் சர்ச்சைக்கு விஞ்ஞான உலகில், ’51 புகைப்படம்’, (Photo 51) என்ற பெயருண்டு. உட்கரு அமில கட்டுமானத்தை ஆராய்ச்சி செய்தவர்களில் மிக முக்கியமானவர் ரோஸலின். இவரது மேற்பார்வையில் வேலை செய்த ரேமண்ட் காஸ்லிங் (Raymond Gosling) என்பவர் உட்கரு அமில கட்டுமான எக்ஸ் கதிர் அலைவளைவு புகைப்படத்தை முதன் முறையாக 1952- ல் எடுத்தார். இதை ’51 புகைப்படம்’ என்று ஒரு கோப்பாக வைக்கப்பட்டது. ரோஸலினின் ஒப்புதலின்றி, இந்தப் புகைப்படத்தை, வில்கின்ஸ் (ரேமண்ட் காஸ்லிங் இவர் கீழே ஆராய்ச்சியாளராகச் சேர்ந்திருந்தார்) வாட்ஸனுக்கு காட்டி இருக்கிறார். மிக முக்கிய விஞ்ஞான தடயம் இந்த ’51 புகைப்படம்’ தாங்கியிருந்தது. இந்தத் தடயத்தை வாட்ஸனும், க்ரிக்கும் தானே கண்டு பிடித்ததாக உலகிற்கு அறிவித்து ரோஸலினுக்கு அநீதி இழைத்தனர் என்ற குற்றச்சாட்டு இன்று வரை தொடர்கிறது. இந்த விஷயத்தை நான் எழுதாமல் விட்டதை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
    இதைப்பற்றிய யுடியூப் விடியோ இங்கே:

    இது சம்மந்தமான இரு முக்கிய கட்டுரைகளையையும் இங்கு படிக்கலாம:
    http://en.wikipedia.org/wiki/Photo_51
    http://www.nobelprize.org/educational/medicine/dna_double_helix/readmore.html

  2. தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.
    Polymorphism இதற்கான தமிழ் சொல் பரிந்துரைக்க வேண்டுகிறேன். கணினி விஞ்ஞானம், உயிரியல் இரண்டிலுமே இச்சொல் பயனில் உள்ளது. ஆயினும் தமிழில் செறிவான சொல்லை உருவாகுவது சிரமாமாக உள்ளது.
    நன்றிகள்,
    அருண்.

  3. நன்றி அருண்.
    Polymorphism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘பல்லுருத்தோற்றம்’ சரிவரும் என்று தோன்றுகிறது. இந்தச் சொல், கணினி விஞ்ஞானத்தில் அவ்வளவு சரிவரும் என்று தோன்றவில்லை. ஆங்கிலத்திலும், அந்தச் சொல் உடனே படிக்கும் ஒருவருக்கு சரியான பொருள் வழங்குமா என்பது சந்தேகம்தான்.
    இச்சொல், கணினி விஞ்ஞானத்தில் எப்படி ஒரே நிரல், தரவைப் (data) பொருத்து வெவ்வேறு செயல்பாடுகளைத் (பொருட்கள் மூலம் – object) துவக்கும் வல்லமையைக் குறிப்பது.
    உயிரியலில், இச்சொல்லிற்கு வேறு அர்த்தம் உள்ளது. சில உயிரினங்களில், எப்படி சிறு வேறுபாடுகளுடன் இயற்கை உருவாக்குகிறது என்பதைக் குறிக்கும். சில மாற்றங்களுடன் இயற்கையில் தோன்றும் புலி, மான்கள் இதற்கு உதாரணம்.
    மூலக்கூற்றியலில் இதற்கான அர்த்தத்தை விளக்க, என் பார்வையில், இன்னும் சில சிக்கலான தமிழ் சொற்கள் உருவாக்க வேண்டும்1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.