வாசகர் மறுவினை

கெட்ட வார்த்தை பேசாதீர்

KVP

தமிழ்நாட்டு இலக்கியங்களில் காணப்படும் மைதுன உறுப்புகளை இந்தப் பதிவு பட்டியலிடுகிறது. ஆனால், மைதுன உறுப்புகளின் பெயர் ஏன் “கெட்ட” வார்த்தையானது என்பது பற்றி பெருமாள் முருகனோ, இப்பதிவின் ஆசிரியரோ யோசிக்கவில்லை.
கிராமங்களில் நடைமுறையில் சகஜமாகப் பேசப்படும் பாலியல் சொலவடைகள் பற்றி கி. ராஜநாராயணன் உட்படப் பல உண்மையான இலக்கியவாதிகள் பேசி இருக்கிறார்கள். அவற்றை கெட்ட வார்த்தைகளாக இந்தக் கிராமத்து மக்கள் உணர்வதில்லை.
அதனால்தான் 15ம் நூற்றாண்டு காளமேகப் புலவன் பல இரட்டுற மொழிதல் கவிதைகளை இயற்ற முடிந்திருக்கிறது. பாலியல் வார்த்தைகள் கொண்டு சிவனைப் பற்றிப் பாட்டெழுத முடிந்திருக்கிறது. புரவலராக இருந்த சிறு சிறு ஜமீந்தார்கள் பற்றியும் இப்படிப் பாலியல் சிலேடைகளுடன் காளமேகப் புலவர் கவிதைகள் வடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த எவருக்காவது அவர்களது ஆண்டவர்களான மார்க்ஸ், மாவோ, லெனின் போன்றோர் பற்றி “கெட்ட வார்த்தை” பேசும் பாலியல் சுதந்திரம் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. அல்லது, சக முற்போக்கு ஆண்-பெண் எழுத்தாளர் பற்றிக் “கெட்ட” வார்த்தைக் கதைகள் பேசுவார்களா?
இதே தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், மதுரையில் சாருநிவேதிதா நடத்திய நாடகம் ஒன்றின் சுயமைதுனக் காட்சி ஒன்றைக் கண்டு பொறுக்காமல் அவரை அடித்து உதைத்தார்கள். உதைத்து முடித்துவிட்டு, பாலியல் சுதந்திரம் பற்றிக் கதைகள் எழுதி புரட்சி செய்வார்கள்.
காளமேகப் புலவரின் இப்பாட்டைக் குறிப்பிடும் இப்பதிவின் ஆசிரியருக்கு இந்த மைதுன உறுப்புகள் எப்படிக் கெட்ட வார்த்தை ஆயிற்று என்கிற கேள்வி எழுந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
எந்தவொரு வார்த்தையும் வெறுப்பின் குறியீடாக ஆகும்போது மட்டுமே கெட்ட வார்த்தையாகிறது.
காமத்தை வெறுக்காத இந்திய, இந்து சமூகம் காமத்தை முதல் பாவமாகக் கருதியவர்களிடம் அடிமையானபோது, காமத்தைத் தீயதாக சொல்லும் கருத்துகள் திணிக்கப்பட்டன.
இந்த உண்மையை வெளிப்படையாக இந்த எழுத்தாளர்களால் முன்வைக்க முடியாது. பிழைக்க முடியாது. இவர்களது கட்டற்ற புனைவுச் சுதந்திரம், புஸ்வாணமாகிப் போய்விடும் தந்திரம்தான் எஞ்சுகிறது.
ஆபிரகாமிய எல்லைக் கோட்டை ஏற்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் முருகன் உட்பட எவருக்கும் இலக்கியவாதியின் எல்லையற்ற புனைவு சுதந்திரம் எழுந்திருக்காமல் சுருங்கித் தொங்கும் நிலையில்தான் இருக்கிறது.
அதனால்தான் பெருமாள் முருகனின் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது: “இந்து மதம் என்ன சொல்கிறது – உடல் தூய்மையற்றது; அழியக் கூடியது என்று.”
சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து நடத்திய, காமத்தை புனிதமாக்கும் உரையாடல்தான் விஞ்ஞான பைரவ தந்திர சாத்திரமாக இருக்கிறது.
புராணங்களும், காமசூத்திரமும் காமத்தைப் புனிதமானவையாகக் காட்டுகின்றன. உடல்சார்ந்த காமம் அன்றி வேறு இன்பங்களை அறியமுடியாதவர்களைத்தான் பட்டினத்தாரும் பழிக்கிறார்.
எதைப் பற்றியும் துளிக்கூட புரிதல் இன்றி, வறண்ட கற்பனையில் வார்த்தைகளை அள்ளி இறைப்பவர்கள் இலக்கியவாதிகள் என்று அழைக்கப்படுவது தமிழ்நாட்டின் தலைவிதி போல.
பெருமாள் முருகனின் இப்புத்தகம், கிராமங்களில், இந்து சமூகங்களில் இயல்பாக இருக்கும் பாலியல் சுதந்திரம் பற்றியது அல்ல என்பதை இப்பதிவின் ஆசிரியர் கவனித்திருக்க வேண்டும்.
இந்தப் புத்தகம் மட்டுமல்ல. பெருமாள் முருகனின் எந்தப் புத்தகமும் அப்படிப்பட்டதல்ல. அவை அனைத்தும் நடைமுறையில் இல்லாத கற்பனை சார்ந்த பிறழ்காமப் பிதற்றல்கள்.
தமிழின் முதல் லெஸ்பியன் கதை என்று இப்பதிவின் ஆசிரியர் குறிப்பிடும் கதையானது, ஒரு ஆண் மையப் பார்வையாக இருப்பது அயர்ச்சியையே உருவாக்குகிறது.
பெருமாள் முருகனுக்கு முன்பே இதைப் போன்ற ஆண்களால் கற்பனை செய்து, ஆண்களின் பார்வையில் எழுதப்படும் பல லெஸ்பியன் கதைகள் தமிழ்நாட்டில் உலா வந்திருக்கின்றன. அவற்றில் பலவற்றிற்கு ஆசிரியரின் பெயர் ‘சரோஜா தேவி’. அந்தக் கதைகளில்கூட பல சமயங்களில் இருக்கும் இலக்கிய நயம், பெருமாள் முருகனின் கதைகளில் கிடையாது என்பது இவ்விரண்டுவகை புரட்ச்ச்ச்ச்ச்சி இலக்கியங்களையும் படித்த நண்பர் சிலரின் கருத்தாக இருக்கிறது.
பெருமாள் முருகனின் கதைகளில் இருப்பவை கோஷம் போடுகிற வக்கிரக் கற்பனைகள். நடைமுறையில் எந்த லெஸ்பியனும் இங்கனம் காமத்தை வெறும் அரசியல் கோஷமாகச் சுருக்கிக்கொண்டு ஒருவித வன்முறையுடன் கொண்டாடுவார்களா? எனக்குத் தெரியாது. வன்முறையுடன், வெறுப்புடன் நட்த்தும் இந்தக் கோஷங்களின் தொகுப்பை கதை என்று இப்பதிவின் ஆசிரியர் நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது.
மார்க்ஸியர்களால் நடத்தப்படும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் முருகனுக்கு லெனின், மாவோ, ட்ராட்ஸிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட லிபர்ட்டேரியன் மார்க்ஸியத்தின் தோல்வி தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. அங்கே லிபர்ட்டேரியன் மார்க்ஸிஸம் ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின், வலிமை மிக்க அதிகார வர்க்கமாகிப் போன கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக உருவானது.
ஆனால், பெருமாள் முருகன் போன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, வலிமை மிக்க அதிகார வர்க்கத்தின் காலனியப் பார்வையின்படி, இந்து சமூகங்களை, முக்கியமாகக் கிராமத்து சமூக அமைப்புகளை வக்கிரமான அமைப்புகளாகத் திரித்துப் பொய் சொல்வதற்கு மட்டுமே எழுத்துக்கள் பயன்படுகின்றன.
அதிகாரவர்க்கத்துக்கு ஆதரவாக, அதிகாரங்கள் இல்லாத, கையறு நிலையில் இருக்கிற, வலிமையற்ற, வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே இருக்கிற சாதிகளை அசிங்கப்படுத்துவதுதான் இந்தப் புரட்ச்ச்சியாளர்களின் கோழைத்தன வெளிப்பாடாக இருந்து வருகிறது.
உலகெங்கும் புரட்சியாளர்கள் வலிமையற்ற சமூக அமைப்புகளுக்கு ஆதரவாக, அதிகார வர்க்கங்களை எதிர்த்துக் குரல் எழுப்பி செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தத் திருநாட்டில்தான் அதிகாரவர்க்கங்களுக்கு ஆதரவாக, அடித்தள மக்களை அசிங்கப்படுத்தி, பரபரப்பு உருவாக்கி சொத்துபத்துக்களை வாங்கிப் போடுவதுதான் புரட்சியாகத் தெரிகிறது. பரபரப்பு உருவாக்கி விற்காத புத்தகங்கள் விற்கும் வெற்று குயுக்திதான் இங்கே புரட்சி !
கற்பனைகளும் உண்மைகளும் வறண்டுபோன வக்கிரப் பார்வையின் பிறழ்தல் மொழிகளும் ஒருவகை இலக்கியம்தான். உளவியல் ஆய்வுக்குப் பயன்படும்.
பாலியல் மொழிகள் கெட்ட வார்த்தைகள் இல்லை. காமத்தை குட்டையாய் தேக்கி, சாக்கடையாக்கி, அதைத் தாண்டி வெளிவர முடியாதவரின் எழுத்துக்களும் பாலியல் மொழிகள் இல்லை. வாழ்வின்மேல் வெறுப்பில்லாத இந்து சமூகங்களின் இயல்பான, வெள்ளந்தியான வெளிப்பாடுகள் அவை.
இந்து சமூகங்களை அழித்துவிட்டு, கோஷத்தை பாலியலாகப் புரிந்துகொள்வது பரிதாபத்துக்கு உரியது.
கெட்ட வார்த்தைகள் பேசாதீர். பாலியல் வார்த்தைகளை இயல்பாகப் பேசுங்கள்.
ஆனந்த்ஜி

oOo

நேற்று ஒரு நண்பருடன் உள் டப்பியில் உரையாடிய பொழுது சொன்னது. ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு சுய இன்பம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் நீண்ட தூரப் பேருந்து, ரயிலில் ஏறும் முன் கண்டிப்பாக அனைத்து பயணிகளும் சுய இன்பம் செய்து விட்டே ஏற வேண்டும் என்ற முறைகளைக் கொண்டு வர வேண்டும் என்றார். பல கிறித்துவ தேவாலய பள்ளிகளில் கட்டாய சுய இன்பப பாடங்கள் உண்டு என்றார்.
அது போலவே , பெருமாள்முருகனின் “கெட்ட வார்த்தை பேசுவோம்” – அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு. தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி தீனி போடக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு இது
ராம்ஜியாஹூ

0 Replies to “வாசகர் மறுவினை”

  1. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெருமாள் முருகனின் //கெட்ட வார்த்தை பேசுவோம்// என்ற நூலின் விமர்சனமாகத் தெரியவில்லை. ஒரே போடாகவும் போடவும் விரும்பவில்லை போலும். சுற்றி வளைக்கிறார். தனிநபர் தாக்கத்தில் இறங்காமல், ஆசிரியரைத்தவிர்த்து நூலை மட்டுமே பார்க்கும் சக்தி விமர்சகனுக்கு முதலில் இருக்க வேண்டும். இவருக்கில்லை என்று தெரிகிறது.
    புராண்ஙகள், தந்திர சாத்திரம், இந்து சமூகங்களை அழித்தல், காலனியப்பார்வை, இந்து ச்மூகங்களை வக்கிர சமூகங்களாக ஆக்க முனைதல், முற்போக்கு, பிற்போக்கு, மார்க்சியர்கள் – இப்படி ஒரே வார்த்தைப்பிரவாகத்தில், எந்த நூலைப்பற்றிப்பேசுகிறார் எனபதே மறந்து போய்விடுகிறது.
    முகப்பு படத்தின் உதவியினால், பெருமாள் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலைப்பற்றித்தான் பேசுகிறார் என்று புரிகிறது. நான் நூலைப் படிக்கவில்லை. தலைப்பை வைத்துப்பார்த்தால், பெருமாள் முருகன், சமூகத்தில் உலாவும் கெட்ட வார்த்தைகளைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார் போலும்.
    கெட்ட சொற்களா, நற்சொற்களா எனபது, எங்கு பேசப்படுகின்றன? எவரால்? ஏன்? எப்போது? எவரிடம்? – இவைகளை வைத்தே தீர்மானிக்கப்படும். ஒரு சொல் ஓரிடத்தில் சரி; ஒரு சமயத்தில் சரி; பேசுபவரைப்பொறுத்து சரி, உருவாக்கும் நிகழ்வுகளை வைத்துச் சரி; அதே சொல், அவ்வாறே, மறுவிடத்தில, மறு சமயத்தில், வேறுபட்ட பேச்சாளரால், அவ்விடத்தில் உருவாக்கும் நிகழ்வுகளால், சரியில்லாமல் போகிறது. எனவே, கெட்ட சொல், நற்சொல் என்பது ஒரு நிரந்தரப் பிரிவில்லை.
    கெட்ட சொற்கள் இல்லாமல் மொழி வாழமுடியாது. மக்கள் பேசுவதற்குத்தான் மொழி முதலில் வேண்டும். அவர்கள் நற்சொற்களை வைத்துமட்டும் தங்கள் உணர்வுகளைக்காட்ட முடியாது என்ற உண்மை உலகிலுள்ள எல்லாமொழிகளுக்கும் பொதுவான எதார்த்தம். கெட்ட சொற்களின் அவசியம் உணரப்படுகிறது; பின்னர் பேசப்படுகிறது. உணர்ச்சிகளின் ஆவேச வெளிப்பாடுகளில் கெட்ட சொற்கள் முதன்மை தெரியும். மக்கள் எப்போதும் ஈசி சேர்களின் படுத்துக்கொண்டு தி ஹிந்துவோ, சொல்வனத்தையோ படித்துக்கொண்டிருக்க வாழ்க்கை விடாது. வாழ்க்கை வாழப்படுகிறது எல்லா தளங்களிலும். நமக்குப் பிடிக்கா தளங்களிலும் நாம் வாழ்ந்தே தீரவேண்டும்!
    இந்த வாழ்க்கை உண்மைகளில் வழியாக வெளியேறியதுதான் மொழி. எனவே அங்கு கெட்ட சொற்களும் இல்லாமல் போகாது. அவசியமும் கூட.
    இப்படி நாம் உணரும்போது மட்டுமே பெருமாள் முருகனைப்போன்ற ஒரு தமிழாசிரியர் இப்படிப்பட்ட நூலையும் யாக்க வேண்டியது அவரது கடமை என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.